August 31, 2012

நாளை வரும்

இருண்டிருந்த முகத்தைப் பார்த்ததுமே பூரணிக்குத் தகவல் புரிந்திருக்க வேண்டும். என்னை எதுவும் கேட்காமல் நகர்ந்து போனாள். ஹாலின் மூலையில் கட்டிலில் படுத்திருந்த அப்பா என்னைப் பார்த்தார்.


"என்னடா"

"இந்த வாரமும் கிடைக்காது"

"எதனால"

"கேட்டா என்னவோ சொல்றான்.. ஹெட் ஆபீஸ் போயிருக்கு.. அனுமதி வரல.. அப்படி இப்படின்னு"

"இப்ப என்ன செய்யப் போறே"

"பணம் வராமல் மேற்கொண்டு ஒரு வேலையும் நடக்காதுன்னு காண்டிராக்டர் சொல்லிட்டார்"

பெருமூச்சு விட்டேன். இத்தனைக்கும் எதற்கு எடுத்தாலும் லஞ்சம். ஒரு லட்சம் கடனுக்கு 5000 முதலிலேயே எண்ணி வைத்தாகி விட்டது.

"வந்திரும் ஸார்.. போங்க" என்றவன் இரு வாரங்களாய் இழுத்தடிக்கிறான்.

அப்பாவுக்கு நான் 5000 கொடுத்தது தெரியாது. தெரிந்தால் சத்தம் போடுவார்.

'அப்பவே சொன்னேன். சொந்த வீடெல்லாம் நமக்கு கொடுப்பினை இல்லேன்னு'

பூரணிக்கும் அதிருப்திதான். முதலில் சொந்த வீடு என்ற மயக்கத்தில் இருந்தவள் இன்று தன் நகைகளை எல்லாம் அடகு வைக்க நேர்ந்ததில் துவண்டு போய்விட்டாள்.

பூரணி கொண்டு வந்த காபியில் டிகாஷன் தான் அதிகம். பால்காரனுக்கு போன மாசமே பாக்கி.

பாபு ஓடி வந்தான்.

"அப்பா.. வீடு பார்க்க போகலாமா"

"இன்னிக்கு வேலை எதுவும் இல்லைடா"

"தண்ணீ விடணூமே"

"வேணாம்.. நாளைக்கு போகலாம்" என்றேன் அலுப்பாய்.

"பிளீஸ்ப்பா.."

அருகில் வந்து கழுத்தைக் கட்டிக் கொண்டான். சரி.. வீட்டோடு இருந்து என்ன செய்யப் போகிறேன்.. வெளியில் போனாலாவது மன இறுக்கம் தளரலாம். போனோம்.

போகிற வழியிலேயே கணேசன் எதிர்ப்பட்டார்.

"என்னடா வீடு எந்த அளவுல இருக்கு"

'இன்னமும் கடன் தேவைப்படுகிற அளவில்' என்று நினைத்தபடி சிரித்தேன்.

"உன் கிட்டே சொன்னேனா.. என் வீட்டை வித்துரலாம்னு.. யாரும் பார்ட்டி தெரிஞ்சா சொல்லேன்"

"என்ன" என்றேன் திகைப்புடன்.

"ஆமா.. ஆச்சு.. அவளும் போயிட்டா. நான் மட்டும் ஒண்டியா இங்கே இருந்து என்ன செய்யிறது.. நல்ல விலை கிடைச்சா தள்ளிட்டு பையனோட போய் செட்டில் ஆயிரலாம்னு"

பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு. பத்து பதினைந்து வருடங்கள் இருந்திருப்பாரா.. இதோ இன்று விலை பேசுகிறார்.

"சொல்றேன்" என்றேன் நகர்ந்து வரும்போது.

கூரை அளவில் வளர்ந்த என் வீட்டின் எதிரே நின்றேன். இந்த வீட்டையும் ஒரு நாள் நான் விலை பேசப் போகிறேனா.. பாபு வேறெங்காவது வேலை கிடைத்துப் போனால் நானும் கூடவே போக வேண்டியிருக்குமா.. பிறகு ஏன் இன்று இத்தனை ஆலாடுகிறேன்.. இப்போதே விலை பேசினால் என்ன..

விரக்தியில் எண்ணங்கள் தறிகெட்டு ஓட ஆரம்பித்தன.

"அப்பா"

பாபு என் கையைப் பிடித்து இழுத்தான். நாலரை வயதுக்கு முரட்டு பலம்.

"என்னடா"

"இதுதானேப்பா என் ரூம்"

வீட்டு பிளான் போடும் போதே அவனுக்கென்று ஒரு அறையை நிச்சயித்து விட்டான். வருகிற அவன் நண்பர்கள், என் உறவுகள் எல்லோரிடமும் சந்தோஷமாய் சொல்லிக் கொள்வான்.

"இங்கேதான் டேபிள் போட்டு.. சேர் போட்டு.. பாடம் படிப்பேன்.. எழுதுவேன்"

ஜன்னலோர இடத்தில் மானசீக மேஜை வைத்து போஸ் கொடுத்தபோது அவன் முகத்தில் ஏகப்பட்ட மலர்ச்சி

ஏன் பூரணி மட்டுமென்ன.. சமையலறை வடிவமைத்தது. அட்டாச்டு பாத் ரூம். படுக்கையறை அமிப்பு என்று பேசியது.. அப்பாவும் தான். இப்பதான் நமக்கு வேளை வந்திருக்கு என்று குதூகலப்பட்டது.. எத்தனை நாட்கள் விவாதம். மனைப் பூஜை முதல் அனுபவித்த சந்தோஷம்.. எப்படி இதையெல்லாம் மறந்து போனேன்..

போராடாமல் எது வாழ்வில் சுலபமாய் கிடைக்கிறது.. துவண்டு விடாமல் நம்பிக்கையுடன் நாளை எதிர்கொள்ள வேண்டிய நானே ஏன் விரக்தி கூண்டில் வலிய சிக்குகிறேன்..

பாபு வீட்டை சுற்றி ஓடி வந்தான். உடலெங்கும் பரவசம். உல்லாசம்

"எப்பப்பா குடி வரப் போறோம்.."

"ரொம்ப சீக்கிரத்துல" என்றேன் புன்னகையுடன்.

August 23, 2012

ரயிலில்..

சென்னை எக்மோர்.

பல்லவனுக்காகக் காத்திருந்தோம். பெஞ்சில் இரண்டு பேர். சூழ்நிலை மறந்து.. அவள், அவன் இடுப்பைக் கட்டிக் கொண்டு.. இருவருமே அப்படி ஒரு அழுகை. என்ன காரணம் என்றே புரியவில்லை. இயல்பான அழுகை. 
அப்புறம் அவர்களாகவே சமாதானமானார்கள். 

ஏன் அழுதார்கள்.. புரியவில்லை.

ரயிலில் ஏறியதும் எங்கள் இருக்கையில் அமர்ந்தோம்.  எனக்கு அருகில் ஒரு இருக்கை காலியாய். அதற்குரியவர் வந்ததும் சொல்லி விட்டு மாற்றிக் கொள்ளலாம் என்கிற நினைப்புடன் நான்.

தாம்பரத்தில் ஒரு பெண்மணி வந்தார். எழுந்து நின்றேன். ஜன்னல் பக்கம் அவர் அமர.. நான் என்னிடத்தில் உடகார்வதற்குள் இன்னொரு பெண்மணி வந்து ஜம்மென்று என்னிடத்தில் அமர்ந்தார்.

“இது என் சீட்” என்றேன்.

“இல்ல.. என் சீட்”

“சி2  58 என்னோடது..”

”59 என்னோடது..”

“அது அடுத்த சீட்..”

“அங்கே அவங்க உட்கார்ந்திருக்காங்களே”

“ அதை அவங்ககிட்ட கேளுங்க” இது நான்.

உடனே அந்தப் பெண்மணி “இது என் சீட்” என்றார்.

எனக்கு வாழைப்பழ காமெடி ஞாபகம் வந்தது.  அலுத்துப் போய் எதிரில் காலியாய் இருந்த சீட்டில் அமர்ந்து விட்டேன். சற்று தள்ளி டிடிஆர்..

மெல்ல எங்கள் பகுதிக்கும் வந்தார்.  இரு பெண்மணிகளுக்கும் டிக் அடித்து கொடுத்தார்.  அப்புறம் என் டிக்கட்டை வாங்கிப் பார்த்தார்.

இப்போதுதான் அவருக்குக் குழப்பம்..

மறுபடி அந்தப் பெண்மணியிடம் டிக்கட்டை வாங்கிப் பார்த்தார்.

“இதுல டிராவல் பண்ணமுடியாதுங்க”

“ஏன்”

“இது வைகைக்கு வாங்கினது.. நீங்க பைன் கட்டணும்.. 340 ரூபா கொடுத்தா அடுத்த கம்பார்ட்மெண்ட்ல வரலாம்..  ஏசில வரமுடியாது”

என்னோடு மல்லுக்கட்டி விவாதித்த பெண்மணி மொபைலில் யாரையோ திட்டினார். அப்புறம் எழுந்து போனார்.

இன்னொரு சம்பவம்..

கணவன்.. மனைவி.. குழந்தை. வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவை குழந்தைக்கு ஊட்ட முயல அது பிடிவாதமாய் டிரெயினில் வாங்கிய ஏதோ டிபனுக்கு ரகளை செய்தது.  வீட்டு உணவை தள்ளிவிட பார்த்தது.

அப்பா கோபமாகி ஒரு அடி வைத்து விட்டார். அழுகை. அப்புறம் அரைகுறையாய் சாப்பிட்டது.  நான் அவர்களைப் பார்ப்பதைத் தவிர்த்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால்.. அப்பா மடியில் குழந்தை.. அவர் மார்போடு சாய்ந்து தூங்கிக் கொண்டிருக்க.. அவர் ஒரு கை அணைத்துக் கொண்டு.. இன்னொரு கை தலையை வருடிக் கொண்டு.. அவர் முகத்தில் ததும்பிக் கொண்டிருந்த இனம் புரியாத உணர்வுகள்.. சங்கடம்.. லேசான வருத்தம்..

அப்புறம் குழந்தை விழித்துக் கொண்டு.. முழுப் பயணமும் அப்பாவின் கொஞ்சலை அனுபவித்துக் கொண்டு.. ரசனையாய் இருந்தது.

எல்லோரும் அம்மாவைக் கொண்டாடுகிறார்கள். அப்பாவின் பாசம் அழகான கவிதை. 

August 19, 2012

சதுரகிரி - சில அனுபவங்கள்


கோரக்கர் குகை இது. அவர் தவம் செய்த இடம். அங்கே இப்போது ஒரு பெண்மணி இருக்கிறார். அருள் வாக்கும் சொல்கிறார். 18 சித்தர்களையும் தரிசித்ததாகவும் சொல்கிறார்.

மேலே படத்தில் ஷானும்.. மஹேஸ்வரனும்.

அவர் தீபாரத்தி காட்டும்போது கண்ணாடி அணிந்து தரிசித்ததும் சிரித்தார் கேலியாக.

“இது என்ன வழக்கம்.. கண் நல்லாத் தெரியணுமா வேண்டாமா..  போட்டுகிட்டே தரிசனம் பண்ணா அப்புறம் எப்படி பார்வை சரியாகும்”

அவர் சொன்ன அர்த்தம் இது. அவர் சொன்ன வார்த்தைகளை அப்படியே எழுதவில்லை. 

அப்புறம் கண்ணாடியைக் கழற்றிவிட்டுத்தான் தரிசித்தோம். அதன்பின் இப்போது எந்த கோவில் போனாலும் கண்ணாடியைக் கழற்றிவிட்டு கிடைக்கிற காட்சியைத்தான் தரிசிக்கிறேன் !

எங்களுடன் மலை ஏறி .. இறங்கிய இன்னொரு நட்பு ஜோடி.

“நீ 96 ஜூன்ல ரிடையர் ஆன..  நான் டிசம்பர்ல..”

அவ்வப்போது மூச்சிரைக்கையில் பாறை மீது உட்கார்ந்து பேசிக் கொண்டே போன நண்பர்கள்.  74 வயதுக்காரர்கள்.

ஒருவருகொருவர் துணையாய் முழுப் பயணமும் அவர்கள் இணைந்து வந்த விதம் மனதைத் தொட்டது.

இன்னொரு குடும்பம்..  பாலிதீன் பையில் பர்சும் வேறு ஏதோ தின்பணடமும் வைத்திருந்த பெண்மணி.. குரங்கு பாய்ந்து பறித்துக் கொண்டு மரமேறி விட்டது. மரமோ மலைச் சரிவில்.

‘பர்ஸு போச்சு” என்று அவர் அலறினார்.

எங்களுடன் வந்தவர்களில் ஒருவர் என்ன சாமர்த்தியமாய் அதை மீட்டார் 
சரிவில் இருந்த மரத்தில் குரங்கு.. பையை ஆராய்ந்து தனக்கு பர்ஸ் உதவாது என்கிற முடிவுக்கு வருவதற்குள் .. இந்த நண்பர் நடக்க உதவியாய் கொண்டு வந்த கொம்பை குரங்கின் முகத்திற்கு எதிரே ஆட்டினார். கடுப்பான குரங்கு பர்ஸை வெளியில் எடுத்து கீழே போட்டது.

சரியான சறுக்குப் பாறை. எங்கும் பிடிமானம் இல்லை. நண்பர் சளைக்கவில்லை. கொம்பை வைத்தே மெல்ல பர்ஸை நகர்த்தி ஒரு லெவல் வரை மேலே கொண்டு வந்தார்.  அதன்பின் ஒருவர் கையைப் பிடித்து இன்னொருவர் என்று அந்த சறுக்கில் தவழ்ந்து பர்ஸைக் கைப்பற்றி மேலே கொண்டு வந்தார்கள்.

உள்ளே எவ்வளவு பணம் இருந்தது என்று தெரியவில்லை. 
பர்ஸ் திரும்பிக் கிடைத்ததும் பெண்மணி முகத்தில் நிம்மதி..

அந்த இரவில்.. பௌர்ணமி வெளிச்சத்தில் எவ்வித பயமும் இல்லாமல் எல்லாப் பெண்களும் (வயது வித்தியாசமின்றி) மலையில் போய் வந்ததைப் பார்த்தபோது ஆச்சர்யமாய் இருந்தது. 

குட்டி குட்டியாய் சுவையான சம்பவங்கள்..  சதுரகிரி பயணம் மனதை விட்டு அகல வெகு நாட்களாகும் போல..


August 16, 2012

சதுரகிரி - 3

விடியலில் நான்கு மணிக்கே அபிஷேகம் இருக்கும் என்று சொல்ல.. 12 மணிக்கு படுத்தவர்கள் 3 மணிக்கே விழித்து விட்டோம்.
தூங்கினோம் என்று சொல்ல முடியாது.  பத்து நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு குளிர் காற்று ஜிவ்வென்று அடித்து உடம்பை உலுக்கி விட அரைகுறைத் தூக்கம்.

எழுந்தோம். மறுபடி டார்ச் லைட். சந்தன மஹாலிங்கம் தரிசிக்க நடந்தோம். 
5 மணி வரை காத்திருந்து.. அபிஷேகம் ஆரம்பிக்கிற வழியாய் இல்லை.
அவ்வளவு நேரம் இருந்த மின்சாரம் போனது. 

ஒரு வழியாய் குருக்கள் வந்து கதவைத் திறக்க ஆனந்த தரிசனம்.

பிறகுதான் அபிஷேகம். மணி மெல்ல ஆறரையைத் தொட்டது.. இப்போது இறங்க ஆரம்பித்தால்தான் என்று ஷான் சொல்ல.. சந்தன .. சுந்தர மஹாலிங்க தரிசனம் பார்த்து நடக்க ஆரம்பித்தோம்.

அகத்தியர் உருவாக்கிய தீர்த்தம் என்று மலை மேல் ஒரு ஊற்றுக் கிணறு.  பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு வாளியில் இறைத்து ஊற்றினார்கள். எங்களுக்கும் ஆசை வர குளித்தோம். அற்புதக் குளியல். ஜில்லென்று  நீர் பட்டதும் உடம்பு வலியெல்லாம் ஓடிப் போனது.

11 மணி .. மீண்டும் அடிவாரம் வர.  எதுவும் சாப்பிடாத எனக்கு பாதி வழி இறங்கும்போது அயர்ச்சி. ஆனால் கீழ் வரை பத்திரமாய் வந்து சேர்ந்தாகி விட்டது.

மீண்டும் ஆட்டோவில் வத்ராப் எனப்படும் வத்திராயிருப்பு.. அப்புறம் ஸ்ரீவில்லிப்புத்தூர்.. ஆண்டாள் தரிசனம்.. (அன்றுதான் ரெங்கமன்னார் பிறந்த நாள்) மதுரை.. இரவு 7 மணிக்கு திருச்சி..

ஆத்மார்த்தமாய் பக்தி.. பரஸ்பர மனித நேயம்.. (குரங்கு தள்ளிக் கொண்டு போன பர்ஸை - ஒரு பெண்மணியுடையது - லாவகமாய் மீட்டுத் தந்த யாரோ). நடக்க நடக்க மனசுக்குள் பீரிட்ட உற்சாகம்.. இயற்கையுடன் ஒன்றி இருந்த அனுபவம்.. மலை உச்சியிலும் சுவையான உணவு.. 

சதுரகிரி - வாய்ப்பு கிடைத்தால் அவசியம் போய் வாருங்கள்.  August 15, 2012

சதுரகிரி - தொடர்ச்சி 2

பயணங்களில் ஒரு தனி சுவாரசியம் இருக்கிறது. அதிலும் குறிப்பாய் மலை மேல் போகும்போது.
இயற்கை அதன் எழிலைக் கொட்டி வைத்திருக்கிறது.
ரசிக்கிற சாக்கில் ஆங்காங்கே பாறை மீது அமர்ந்து தான் போனோம்.

குழந்தைகள் பயமே இல்லாமல் ஏறி வருவதைப் பார்த்தால் கூச்சமாய் இருக்கிறது. அதிலும் சிலர் ஏகத்துக்கு குண்டு.. அவர்கள் உடம்பை  தூக்கிக் கொண்டு மலை மேல் ஏறி வந்ததைப் பார்த்தால் நமக்கே உற்சாகம் வருகிறது.

ஒரு தாத்தா.. பாட்டி.. அவர்கள் குடும்பம்.. என்று ஏழெட்டு பேர்.  தாத்தா வருவது நான்காவது தடவையாம்.
பரஸ்பரம் விசாரித்துக் கொண்டோம்.
"நீங்க எந்த ஊர் ?"
"திருச்சி.. நீங்க..”
“மாம்பழச்சாலை”
அட.. அவரகளும் திருச்சி.. அப்புறம் என்ன.. ஒரே ஊர்க்காரர்கள் என்கிற பாசம் பீரிட திராட்சைப் பழங்களைப் பகிர்ந்தோம்.

முதல் தடவை என்பதால் எங்களுக்கு ரூட் பற்றிய பயம். ஷான் எங்கே என்று பார்த்துக் கொண்டுதான் நடந்தோம்.  அவர் பழகின பாதை என்பதால் சற்று முன்னே வேகமாய் போய்விட்டு எங்களுக்காகக் காத்திருப்பார்.

புதிதாய் போகிறவர்கள் நிச்சயம் பயமே இல்லாமல் போகலாம். அதாவது இம்மாதிரி விசேஷ தினங்களில். யாராவது கூட்டமாய் போய்க் கொண்டே தான் இருக்கிறார்கள். எங்காவது வழிதப்பிப் போவோமோ என்கிற கவலை வேண்டாம். நூல் பிடித்தமாதிரி வழி. 

வழி தப்பினாலும் நாய் உருவத்தில் பைரவர் வந்து வழிகாட்டுவதாய் ஒரு நம்பிக்கை. நாங்கள் போனபோதும் இம்மாதிரி வழி காட்டிப் போன பைரவர்களைப் பார்த்தோம். எங்களுக்கு முன் மலையேறி உச்சியில் நின்றிருந்தன.

இந்த பதிவுகளில் நான் சதுரகிரி புராணம் சொல்லப் போவதில்லை. என பார்வையில் பயண அனுபவம் மட்டுமே. சதுரகிரி பற்றி நிறைய பேர் அழகாக, சுவாரசியமாக பதிவிட்டிருக்கிறார்கள். 

ஆங்..  எங்கே விட்டேன்.. மெல்ல இருட்ட ஆரம்பித்தது. டார்ச் லைட்டை ஒளிர விட்டோம். அதன் வெளிச்சம் பரவிய இடம் மட்டும் பாதை தெரிந்தது. அதற்கு மேல் கும்மிருட்டு.

முன்னால் போனவர்களின் அடியொற்றி   
போக வேண்டி இருந்தது.
வெளிச்சத்தில் எடுத்த புகைப்படம் இது. இதை விட மோசமாய் சில இடங்கள். இருட்டில் எங்கே கால் வைக்கிறோம் என்று புரிபடாத நிலையில் ஏறக்குறைய தவழ்ந்து போகிற மாதிரி. 
ஆனால் எங்களுடன் வந்தவர்கள் அனாயசமாய் போனார்கள்.  வலது கைப்புறம் மலை. இடது கைப்புறம் அதல பாதாளம் !
நடுவில் ஒரு இடத்தில் என்னுடன் வந்தவர்கள் மலையை ஒட்டி மேலே நடக்க நான், எனக்கு முன் போன இருவரைப் பின்பற்றி இடது கைப்பக்கம் இறங்கி... அவ்வளவுதான்.. அதற்கு மேல் இருட்டு.

“அங்கே எங்கே போறீங்க.. வழி கிடையாது..”
“இவங்க போனாங்களே”
“வனதேவதை சிலை இருக்கு பாருங்க.. அதைக் கும்பிட போனாங்க”

வனதேவதையை படம் பிடிக்காதீர்கள் என்று சொல்லி விட்டார்கள்.

அது ஏன் மாலை/இரவில் தான் போகணுமா என்றால்.. பகலிலும் போகிறார்கள். ஆனால் சூடு தாங்காது. கால் வைத்தால் கொப்பளித்து விடும்.  இதனால் விடியல் அல்லது இரவு நேரத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

பிலாவடிக் கருப்புசாமி கோவில் .. வழியில் வருகிறது.
இது ஒரு லேண்ட் மார்க். எப்படியோ  இரவு ஒன்பதரை மணிக்கு மலை உச்சிக்கு போய்விட்டோம்.
கடைகளும் ஸ்பீக்கர் அலறலும்  சுடச்சுட இட்லி தோசை போண்டா சுக்கு காபி என சாப்பிட எந்தக் குறையும் இல்லாத பிக்னிக் ஸ்பாட் போல மலை உச்சி.

ஆனந்தமாய் சுந்தர மஹாலிங்க தரிசனம்.. இதற்குத்தானே அவ்வளவு முயற்சிகள்.  சின்ன கோவில் தான்.  ஆனால் சற்றே சாய்ந்த சிவலிங்க தரிசனம் பார்த்து மனசுக்குள் ஒருவித பரவசம். 

அன்னதானம் அழைத்து அழைத்து தருகிறார்கள். நண்பர்கள் கடையில் டிபன் சாப்பிட எனக்கு சாப்பிடத் தோன்றவில்லை. வீட்டை விட்டு கிளம்பியது முதல் குளுகோஸ் நீரும். திராட்சையும்தான்.

எனக்கு இருந்த ஒரே ஒரு சந்தேகம்.. இயற்கை உபாதைகளுக்கு என்ன வழி..  சிறுநீர் கழிக்க சிக்கலில்லை.. அடுததது.. என்ன செய்வது.. என்கிற கவலை.. நல்லவேளையாய்  மலை விட்டு இறங்கும் வரை அந்தத் தொல்லை வரவில்லை.

ஆங்காங்கே இருட்டில் ஒதுங்கி விடுகிறார்கள்.  அங்கிருக்கும் அருவியில் அவ்வளவாய் இப்போது நீர் வரத்து இல்லையாம். ஒரு தொட்டியில் நீர் பிடித்து வைத்திருக்கிறார்கள். 

பிறகு பௌர்ணமி வெளிச்சத்தில்  இதோ கீழே இருக்கிற வெட்டவெளியில் தான் நியூஸ்பேப்பரைப் போட்டு படுத்திருந்தோம்.
இங்குதான் இரவு படுத்தோம். குளிர் நடுக்கி விட்டது.

போர்வை கொண்டு போகாதது தப்பாகி விட்டது. ஆனால் அந்தக் குளிரும் படுசுகம்.

(முடிச்சிரலாம்)

August 12, 2012

சதுரகிரிவெகு நாட்களாய் எதிர்பார்த்த ஆன்மீகப் பயணம். இந்த பௌர்ணமிக்கு வாய்த்தது.
அலுவலக நண்பர்களிடம் சொல்லிக் கொண்டே இருந்தேன். 
‘சதுரகிரி போனால் சொல்லுங்க’ என்று.
ஆவணி அவிட்டம் அன்று காலை கிளம்பினோம். இரு நண்பர்களும் நானும்.
சண்முகசுந்தரம் முன்பு போய் வந்தவர். நானும் மஹேஷ்வரனும் புதுசு.
‘தங்க இடம் இருக்குமா.. என்னென்ன எடுத்து வரணும்.. கஷ்டமா இருக்குமா’
எஙகள் கேள்விகளுக்கெல்லாம் ”ஷான்” (அப்படித்தான் செல்லமாய் சண்முகசுந்தரத்தை அழைப்போம்) மையமாய் புன்னகைத்தார்.
டார்ச் லைட்.. குளுகோஸ்.. தண்ணீர் பாட்டில்.. ஜோல்னா பை சகிதம் கிளம்பியாச்சு.
திருச்சி டூ மதுரை..  அப்புறம் மதுரை டூ ஸ்ரீவில்லிப்புத்தூர்.. வத்திராயிருப்பு.. அங்கிருந்து ஆட்டோவில் தாணிப்பாறை. இதுதான் சதுரகிரி மலை அடிவாரம்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிஸ்கட் பாக்கட், ப்ரெட் என்று ஷான் வாங்கிக் குவிக்க.. ‘மலை மேல நாம சாப்பிடவா’ என்று ஆர்வமாய்க் கேட்டோம்.
ஷானின் மர்மப் புன்னகை இப்போதும்.
கீழேயும் கடைகள். ஆட்டோ கார் வேன் என்று சகலமும் மலை அடிவாரத்தில்.
‘செருப்பை எங்கே விடலாம்’
பாதிப் பேர் செருப்புடன் தான் நடந்தனர். நாங்கள் ஒரு புதருக்குள் அடையாளம் தெரிகிற மாதிரி போட்டு விட்டு நடந்தோம்.
பக்கா ரோடு இல்லை.. திருப்பதி போல. மலை.. அதன் இயல்பில். பாறை.. கற்கள்.. கால் அழுத்தி வைக்க முடியாமல் குத்தியது பாதை. 
நாங்கள் கிளம்பிய நேரம் மாலை. இன்னும் இருட்டவில்லை. 
ஒரு பக்கம் மலை.. மறுபக்கம் அதல பாதாளம். சறுக்கினால் யாராவது வந்து கண்டு பிடிக்கணும்.
தண்ணீருடன் குளுகோசை கலந்து வைத்துக் கொள்ளச் சொன்னார் ஷான்.
ஆச்சு.. நடக்க நடக்க ஒரு பக்கம் ஆர்வம்.. கூடவே எத்தனை மனிதர்கள்.. எல்லா வயதிலும்.  குழந்தை முதல் தொண்டு கிழம் வரை..
அதிலும் சிலர் தூக்கிக் கொண்டு போன மூட்டைகள்.. ஏயப்பா..
அடிவாரத்தில் ஏறும் போதே எச்சரிக்கை.. பிளாஸ்டிக்.. பாலிதீன் கவர்களை மேலே போடாதீர்கள் என்று. ஆனால் யாரும் கேட்பதாயில்லை.. ஆங்காங்கே இறைந்து கிடந்தன.  200 வாலண்டியர்களை அடுத்த மாதம் வரவழைக்கப் போகிறார்களாம்.. மலை முழுக்க இப்படி கிடக்கும் குப்பைகளை திரட்டி கொண்டு வர. இப்படி அடிக்கடி செய்து மலையை காப்பாற்றுகிறார்கள்..
புனிதமான மலை என்கிற உணர்வில் பலர்.. சினிமாப்பாட்டு அதிர சிலர்.. சிகரெட் குடித்து அப்படியே வீசி விட்டு போன சிலர்.. மதுபாட்டில் கூட..
’நமக்கு பயந்து சாமி மலை மேல வந்து உக்கார்ந்தா.. நாம விடாம துரத்தி வரோம்..’ என்று ஒருவர் கிண்டலடித்தார்.
நாய்களும் குரங்குகளும் தென்பட்டன. உடனே ஷான் உற்சாகமாகி விட்டார்.
பிஸ்கட் பாக்கட்டை பிரித்து கையில் வைத்து நீட்ட அவை அருகில் வந்து எடுத்துக் கொண்டது கண்கொள்ளா காட்சி..
இறங்கியவர்களில் இருவர் எங்களிடம் அவர்கள் கையில் இருந்த கொம்பை கொடுத்தார்கள். 
‘வச்சுக்குங்க.. இப்ப இல்லாட்டியும் இறங்கறப்ப பயன்படும்’
சுந்தர மஹாலிங்கம் தான் அவர்கள் வடிவில் வந்திருக்க வேண்டும். ஏறும்போதே அது மிகவும் பயன்பட்டது. அனாயசமாய் ஏறிப்போன.. இல்லை;.. இல்லை.. தாவித் தாவிப் போனவர்களை பார்த்து எங்களுக்கு ஆச்சர்யம்.
கொஞ்சம் ‘ஸ்லிப்’பினால் சர்ரென்று போய் விடக்கூடிய இடம்.  கால் ஜதி சொல்லாமலேயே ஆட ஆரம்பித்து விட்டது.
‘லிப்ட்ல போனா இப்படித்தான்.. நடக்கணும்’ என்றார் ஷான்.
ஆங்காங்கே இருந்த குட்டி குட்டி கோவில்களை தரிசித்துக் கொண்டு சூழலின் இயற்கை அழகை ரசித்துக் கொண்டு மலை ஏறிக் கொண்டிருந்தோம்.
இருட்ட ஆரம்பித்தது..  இத்தனைக்கும் பௌர்ணமி.. நிலா வெளிச்சம் தெரியவில்லை.  கும்மிருட்டு.. முன்னே பின்னே நடப்பவர்களின் பேச்சு சத்தம்.. சிலர் கையில் டார்ச்..
பத்தடிக்கு மேல் பாதை புலப்படவில்லை.. எங்கே கால் வைப்பது என்று புரியாமல்..
“போன தடவை அமாவாசைக்கு வந்தோம்..”என்றார் ஷான். 
அந்த இருட்டிலா..

(தொடரும்)

(படம் கூகுள் உதவி)
August 10, 2012

எழுதாத கவிதை

எழுதப்பட்ட
எல்லாக் கவிதைகளிலும்
ஒரு சில
வாசிக்கும் நிமிடம் உயிர்த்து..


மறு சில
மீள் வாசிப்பில்
அடையாளம் காட்டி..
சிலவே
ஞாபகத்தில் உறைந்து..

எப்போதும் ஜீவனுடன்
எழுதப்படாத
கவிதைகள் மட்டுமே.

August 01, 2012

ஊர்மிளா


அயோத்தி மாநகரே கொண்டாட்டமாய் இருந்தது. வனவாசம் முடிந்து,ராவண வதம் முடிந்து, இன்றுதான் ராமனும் சீதையும் அயோத்தி திரும்பி இருக்கிறார்கள். அரண்மனையிலும் அதே உல்லாசம்.

பரதனின் மனைவி  மாண்டவி, சத்ருக்கனின் மனைவி   ஸ்ருதகீர்த்தி இருவரும்கொஞ்சம் அவசரமாகவே அருகில் ஓடிப் போய் «ì¸¡¨Åì கட்டிக் கொண்டார்கள். ஸீதாமெலிந்திருந்தாள். கண்களில் முன்பிருந்த பிரகாசம் மங்கி இருந்தது. எத்தனைவருடங்களுக்குப் பின் இன்று பார்த்துக் கொள்கிறார்கள்.. "அக்கா.." இருவருக்குமேஅழுகை பீரிட்டது.

"ஏய்.. அசடு.. அதான் திரும்ப வந்துட்டேனே"
"உனக்கு மட்டும்ஏன் இப்படி சோதனைக்கா"
ஸீதா சிரித்தாள்.
"எல்லோரும்தான் கஷ்டப் படறாங்க..உங்களுக்கு என் கஷ்டம் மட்டும் தெரியுது.."
"தலைமுடி எல்லாம் கொட்டிப்போச்சு.."
மாண்டவி அக்காவின் தலையைக் கோதி வருத்தப்பட்டாள்.
"உன் கண்ணுபளீர்னு மின்னும்.. இப்ப அதுல ஒரு நிழல் படிஞ்சிருக்கு"
ஸீதைக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை.
"என் செல்லங்களா. எனக்கு ஒண்ணும் இல்லை.."
அதுவரை ஒதுங்கி நின்றஊர்மிளாவை பார்வையால் அருகில் அழைத்தாள்.
"எப்படி இருக்கே"
தபஸ்வினி போல்தோற்றம். தீர்க்கமாய் பார்வை. மற்ற இரு சகோதரிகளுடன் ஒப்பிடும் போது கூடுதலாகவே  திடம் ஊர்மிளாவுக்கு.
"உன் கண்கள் அப்படியேதான் இருக்கு ஊர்மிளா.."
ஸீதையின் குரலில் லேசாய்ஒரு தடுமாற்றமும் இருந்தது.
"அவர்கள் சொன்னதற்கு பதிலாய் என்னிடமா" ஊர்மிளாசிரித்தாள்.
"உங்களோடு பேசி வெகு காலமாச்சு"
"உனக்கு ஓய்வு தேவைப்படுமே "
"நான் நல்லாத்தான் இருக்கேன்"
"சொல்லுக்கா.. எதையும் விடாத.. பூர்ணமாசொல்லு"
"என்ன சொல்லணும்"
"இங்கேர்ந்து நீ கிளம்பிப் போனதுல இருந்து இந்தநிமிஷம் வரைக்கும்"
ஸீதா அவளையும் அறியாமல் ஊர்மிளாவைப் பார்த்தாள்.
"என்ன..கிளம்பினோம்.. எங்கெங்கோ சுத்தினோம்.. என்னென்னவோ ஆச்சு..'
"ஏய்.. இப்படிஒரு வரி விவரணம் வேண்டாம்.. முழுசா சொல்லுக்கா"
"ராட்சசர்களை எல்லாம் வதம்பண்ணி.. எவ்வளவு நடந்திருக்கு.."
"சொல்லுக்கா.. ரொம்ப ஆசையா இருக்கு.. கதைகேட்க"
ஊர்மிளா முகம் மாறாமல் அமர்ந்து அவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். மற்ற இருவரும் கதை கேட்கிற சுவாரசியத்தில் ஸீதையின் முகத்தையேபார்த்துக் கொண்டிருந்தனர்.
ஸீதைக்கு வேறு வழி இல்லை. சொல்ல ஆரம்பித்தாள்.பாதி சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஸ்ருதகீர்த்தி அவள் மடியில் படுத்துக் கொண்டுவிட்டாள். அவள் தலையை வருடியபடி சொல்லிக் கொண்டிருந்தாள்.
"என்னக்கா.. உனக்குதெரியலியா.. அது ராட்சசர்கள் மாயா வித்தைன்னு"
பொன்மானைப் பார்த்த சம்பவத்தைசொன்னபோது மாண்டவி கேட்டாள்.
"என்னவோ ஒரு ஆசை.. அதைப் பார்த்ததும்..புத்திக்கு எட்டலை"
"ம்ம். அப்புறம் என்ன ஆச்சு"
ஊர்மிளாவின் முகத்தில்இப்போது லேசாய் ஒரு பதற்றம்.
"ராவணன் என்னைத் தூக்கிக் கொண்டு போக செய்தசதி.. அது அப்புறம் புரிந்தது.. என்னை அசோகவனத்தில் கொண்டு போய் வைத்தான்..பாவம்.. ஜடாயுப்பா.. என்னால் அவரும் உயிரிழந்தார்"
திரிஜடை துணைக்கு இருந்தது..விபீஷணன் உதவியது..சுக்ரீவன்.. ஆஞ்சநேயர்.. பாலம் கட்டி.. யுத்தம் நடந்தது..
"மண்டோதரியை நினைச்சா எனக்கு சிலிர்க்குது.. என்ன ஒருபதிபக்தி.."
"எப்படிக்கா அவ்வளவு நாள் அசோகவனத்துல தனியா.. அந்த ராட்சசிகள்மத்தியில இருந்தே.."
"பாவம்க்கா நீ"
"ஊர்மிளாவும்தான்.. பாவம்" என்றாள்ஸீதா.
"ஆமாக்கா"
இருவரும் ஊர்மிளாவைக் கட்டிக் கொண்டார்கள். ஸீதா பெருமூச்சுவிட்டாள்.
"ஆனால் ஊர்மிளா அக்காவுக்கு எப்போதும் தூக்கம்தான் .."
லட்சுமணன் சொல்லிப் போயிருந்தான்.
'ஊர்மிளா.. வனத்தில் எனக்கு தூக்கம் இராது.. என் தூக்கத்தையும் உனக்குத் தந்து விட்டுப் போகிறேன். தூக்கம் ஒரு நல்ல மருந்து ஊர்மிளா..நம் துக்கம் மறக்க..பிரிவை மறக்க.. அதை  தினம் எடுத்துக் கொள்..நான் திரும்பி வரும் வரைக்கும்..'
ஸீதா சொல்லிக் கொண்டிருந்தாள்.

"திரும்ப வந்து உங்களை எல்லாம் எப்போது பார்ப்பேன் என்றிருந்ததுஎனக்கு.."

"காட்டுல எப்படித்தான் இருந்தியோ.."

"மரவுரி.. கல்லும் முள்ளுமா பாதை.. அக்கா.. எனக்கு அழுகை வருதுக்கா"
ஸ்ருதகீர்த்தி அழுதே விட்டாள்.மாண்டவியின் கண்களிலும் நீர்.
"ச்சீ.. பைத்தியங்களா.. நான் தான் பத்திரமாய்  வந்துவிட்டேனே"
"இருந்தாலும் இத்தனை வருஷமாய் நீ பட்ட சிரமங்கள்.. உனக்கு  மட்டும் ஏனக்கா இப்படி"
"நடந்ததைத் திருப்பிப் பார்க்கக் கூடாதென்றுதான் நம் தலை  பின் பக்கம் திருப்ப முடிவதில்லை.. "
"தத்துவம் பேசாதக்கா.. அனுபவித்த வலிமாறுமா"
ஸீதையின் உடல் அவளையும் மீறி ஒரு முறை சிலிர்த்து அடங்கியது.அசோகவனத்தில் தனிமையில் அந்த நாட்கள்.. இரவில் வினோதமான பறவைகளின் அலறல்கள்..பயங்கர தோற்றத்தில் ராட்சசிகள்.. வருபவர்கள் நிஜமா.. மாயாவிகளா என்கிற  குழப்பங்கள்.. மீண்டும் ஒரு முறை உடல் சிலிர்த்து அடங்கியது.
"அக்கா.. என்னஆச்சு"
"ஒண்ணுமில்ல"
"சரிக்கா.. நீ கொஞ்சம் ஓய்வெடு.. நாங்கள் அப்புறம்  வருகிறோம்.."
ஊர்மிளா தங்களுடன் வருகிறாளா என்று கூடப் பார்க்காமல்  போய்விட்டார்கள்.
கண்களை மூடியமர்ந்திருந்த ஸீதா கண்ணைத் திறந்து பார்த்தாள்.  எதிரில் ஊர்மிளா.
"என்ன ஊர்மிளா.. "
அவளிடம் பதிலேதுமில்லை. ஸீதாவைப்  புதிதாகப் பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருந்தாள்.
"என்னம்மா"
ஸீதாஎழுந்து வந்து அவளருகில் அமர்ந்தாள்.
"நமக்குக் கல்யாணம் ஆகிறவரை சேர்ந்திருந்த நாட்களை

நினைத்துப் பார்த்தேன்.. "

"ஆமாம். நம் அன்னை.. தந்தையின் பாசத்தில்..நமக்கான சொர்க்கத்தில் திளைத்திருந்தோம்.."

"நமக்குள் எந்த பேதமும் இல்லை.."
"எந்த ஒளிவு மறைவும் இல்லை.. வித்தியாசமும் இல்லை.. "
"நம் கல்யாணம் எல்லாவற்றையும் மாற்றி விட்டது.. இல்லையா ஸீதா"
ஸீதையிம் முகம் வாடியது.
"நம் புகுந்த இடத்தைக் குறை சொல்லவில்லை ஸீதா"
"என்ன செய்ய ஊர்மிளா.. ஏதோ போதாத காலம்..ஆனால் நீ நம் குல மானத்தைக் காப்பாற்றி விட்டாய்.. என் செல்லமே.. மூன்று அன்னையர்களையும் இத்தனை காலம் உன் அன்பால் காத்து வந்திருக்கிறாய். இங்கு வந்ததும் உன் புகழ்தான் ஊர்மிளா.. அவர் இல்லாத குறை கூட மறந்து போச்சாம். உன் கவனிப்பில்"
"நீ எப்போதும் இப்படி பேசியதில்லையே ஸீதா"
ஸீதா திணறித்தான்போனாள்.
"அக்கா.. நாம் மணமாகி இங்கு வந்தபின் உன்னைத்தான் எங்கள் அம்மாவாய் நினைத்தோம்"
"நானும் அப்படித்தான் ஊர்மிளா. உங்களை என் குழந்தைகளாய்த்தான் பார்க்கிறேன்.."
சொல்லிவிட்டதும் நாக்கைக் கடித்துக் கொண்டாள். ஊர்மிளா எதுவும் பேசவில்லை.
"வனவாசம் பிடித்ததாக்கா"
"ஏன் கேட்கிறாய்.."
"மறுபடி வாய்ப்பு கிடைத்தால் போகலாமென்று பார்க்கிறேன்.."
ஸீதா அவள் வாயைப்  பொத்தினாள்.
"வேண்டாம் ஊர்மிளா.. விளையாட்டுக்குக் கூட அப்படி சொல்லாதே.. நான் திரும்பி வந்து விட்டேன் தான்.. ஆனால் இன்னமும் அந்த மிரட்சி போகவில்லை..சட்டென்று மனம் பின்னோக்கி பாய்கிறது.. இந்த கணம் மறந்து அந்த வனம் நினைவில் வந்து மிரட்டுகிறது.. இன்னும் எத்தனை காலம் ஆகுமோ.. மறதி என்னும் மருந்தைத்தான் நம்பிக்கொண்டிருக்கிறேன் ஊர்மிளா.. என்னை மீட்டெடுக்க"
"ஆமாம் அக்கா.. அந்த மருந்துதான் இப்போது உனக்கு.. எனக்கு.. என் பர்த்தாவிற்கு வேண்டும்.."
தனுசிலிருந்து அம்பு விடுபட்டு விட்டது. அதன் இலக்கில் போய் குறி மாறாமல் தைத்தது. உயிர் போகும் வேதனை கனத்தது.
"ஊர்மிளா.."
"நீ என் அம்மா ஸீதா..எனக்கு மட்டுமில்லை.. எங்கள் எல்லோருக்கும்.. உன்னை வேறு மாதிரி இதுவரை நினைத்ததேஇல்லை.."
"நான் மறுக்கவில்லை ஊர்மிளா.. "
ஸீதையின் கால்கள் துவண்டன.எழுந்தவள் மீண்டும் அமர்ந்து விட்டாள்.
"வருகிறேன் அக்கா.. நீ கொஞ்சம்ஓய்வெடு.. மறதியின் முதல் துளியை ஸ்பரிசித்து.. காலம் தூக்கத்தினால்தான் ஓடுகிறது  வேகமாய்"
சற்றும் தொய்வில்லாத நடையுடன் ஊர்மிளா திரும்பிப் போனாள். மானசீகமாய் ஒரு தணடனையை நிறைவேற்றிய அமைதி அங்கு நிலவியது. லட்சுமணன் எதுவும் பேசியதில்லை இதுவரை. ஸீதையை நிமிர்ந்தும் பார்த்ததில்லை. அவனுக்கும் சேர்த்து வைத்து ஊர்மிளா பேசிவிட்டு போய்விட்டாள்.

ஸீதையின் மூடிய கண்களுக்குள்  இன்னொரு வனவாசம் தெரிய ஆரம்பித்தது.(நன்றி : கல்கி )