June 30, 2012

பயணம்

ஏர்போர்ட் வரை போக வேண்டி இருந்தது. அட.. அந்த ஏரியால குடி இருக்கிற நண்பரைப் பார்க்கத்தான்.
பஸ்ஸுல ஏறி கொஞ்ச தூரம் போயாச்சு. என் பக்கத்துல இருந்தவர் ஏதோ ஒரு ஸ்டாப் பேரைச் சொல்லி டிக்கட் கேட்டார். கண்டக்டர் முரட்டு உருவம்.. முகத்தில் பாதி மீசை.
‘இந்த வண்டி அங்கே போகாது’ என்றார்.
பயணி உடனே “கூட்டு ரோட்டுல இறங்கிக்கறேன்.. அதுக்கு டிக்கட் கொடுங்க’என்றார்.
அங்கே இறங்கி ஒரு கிமீ நடக்க வேண்டும் !
நடத்துனர் டிக்கட் தராமல்.. நோட்டையும் திருப்பித் தராமல் பஸ்ஸின் பின்பக்க கண்ணாடி வழியே சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார் கொஞ்ச நேரம்.
“கூட்டு ரோட்டுக்கு டிக்கட் கொடுங்க” என்றார் பயணி பொறுமை இழந்து.
நடத்துனர் நிதானமாய் “இறங்கி பின்னால ரெண்டு பஸ்ஸு வருது.. அதுல ரெண்டாவதா வர பஸ்ஸுல போய் ஏறிக்குங்க.. அதுதான் நீங்க போக வேண்டியது”
ரூபாயையையும் திருப்பிக் கொடுத்தார் !
“பாவம் எதுக்கு நடக்கணும்” என்றார் அவர் இறங்கிப் போனதும்.
கையைப் பற்றி குலுக்கினேன்!


அதே பஸ்ஸில் ஜன்னல் வழியே சாலையைப் பார்த்தபோது..
ஒரு அம்மா.. அவங்களோட (முப்பதுக்குள் இருக்கும்) மகள்.. மகள் கையில் குழந்தை.. அவர்கள் தலையில் பாதி பின்னிய ஒயர் கூடை.. அதற்கான பொருட்கள்..
அவர்கள் வாழ்க்கை அதன் விற்பனையில்தான்,, ஆனால்.. என்னவொரு ஆனந்தம்.. அவர்கள் முகத்தில்.
கோடி கோடியாய் வைத்திருக்கிறவர்களிடம் இல்லாத மலர்ச்சி..

மனிதர்களைத் த்ரிசிக்கும்போது நமக்கே ஒரு உற்சாகம்..


June 29, 2012

முன் ஜென்ம நினைவுஒற்றை ஆளாய்


என் பயணம்..

காலடித் தடங்களில்

புலனாகாது என் எண்ணங்கள்..

நீரில் நனைந்து

உலரும் பாதங்கள்..

என் விம்மல்கள்

நீர்ப்பரப்பில் உண்டாக்கும்

சுழல்கள்..

முன் ஜென்ம நினைவுகளில்

அவ்வப்போது

உன்னையும் இணைத்து வரும்

புன் சிரிப்பில்

பூத்து விடுகின்றன

அதோ..

கண்ணுக்கெட்டிய தூரத்தில்

சில மஞ்சள் கொன்றைகளும்..

பவழ மல்லிகளும்.

June 18, 2012

நிஜம்

மிக அழகான கனவு.
கண் விழித்து விடக் கூடாதென்று
கனவிலும் நினைத்துக்
கொண்டிருந்தேன்.
ஐந்து வயதுக்குட்பட்ட
குழந்தைகள் 
என்னைச் சூழ்ந்து
கொண்டிருந்தார்கள்.
அவர்களின் ஸ்பரிசம்
என்னை ஒரு விதமாய் 
மிரட்டியது..
என்னிடம் அவர்கள்
எதையுமே 
எதிர்பார்க்கவில்லை..
என்னை விட்டு 
போய் விடுவார்களோ
என்று
பயத்தில் கண்ணை இறுக்க மூடினேன்..
கனவு கலைந்து 
விழித்துத் தொலைத்தேன்..

June 10, 2012

இப்படியும் ஒரு அசடு இருக்குமா?

பானு ஓடி வந்து கால்களைக் கட்டிக் கொண்டாள். 

வாசல் வராண்டாவில் செருப்புகளை உதறிவிட்டுக் குழந்தையைத் தூக்கிக் கொண்டான். 
சௌஜன்யா பாத்ரூமில் துணிகளை அலசிக் கொண்டிருந்தாள்.

"ஹாய்... டார்லிங்...." என்றான். 

அவள் நிமிரவில்லை. வேகமாகப் புடவையை உதறினாள். தோளில் போட்டுக் கொண்டிருந்த பானுவின் கவுனை எடுத்து அலசினாள். 

"லெட்டர் வந்திருக்கா... ஏதாவது..." என்றான்.

பதிலை எதிர்பாராமல் ஹாலில் வழக்கமாகக் கடிதங்கள் வைக்கும் ஷெல்பைப் பார்த்தான். பிரித்த இன்லண்டு. 

யார் எழுதியிருக்கிறார்கள்.

'அன்புள்ள மாது...' 

அவன் தங்கை மீனாட்சிதான் எழுதியிருந்தாள். ஏதோ மைனர் ஆப்ரேஷனாம். பத்து நாட்கள் பெட் ரெஸ்ட்டாக இருக்க வேண்டுமாம். அண்ணி உதவிக்கு வந்தால் நன்றாக இருக்குமாம். 'இக்கடிதம் கண்டதும் உடனே அனுப்பி வைப்பாய் என்று நம்புகிறேன்...' என்று முடித்திருந்தாள்.

மீனாட்சியும் வேலைக்குப் போகிறாள். ஒரு பையன். அண்ணி வருவதைப் பொறுத்துதான் ஆபரேஷனுக்குத் தேதி சொல்ல வேண்டுமாம்.

இன்லண்டை மறுபடி எடுத்த இடத்திலேயே வைத்தான். உடை மாற்றிக்கொண்டு பாத்ரூம் போனான். சௌஜன்யா வெளியே துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள். 

"என்ன இன்னிக்கு ஏன் லேட்டு? இப்ப தான் துணி தோய்க்கிறே?"

"எனக்கு யாரு இருக்காங்க உதவிக்கு?" என்றாள். மௌனமானான். 

"சரி, வா...பிள்ளையார் கோவில் வரைக்கும் போயிட்டு வரலாம்..." என்றான்.

சௌஜன்யா தீவிர பிள்ளையார் பக்தை. பானுவுக்கு உடம்பு சரியில்லை என்றாலோ, இவன் ஒருநாள் ஆபிசிலிருந்து வர லேட் ஆனாலோ உடனே பிள்ளையார்தான். 'கற்பூரம் ஏத்தறேன்... செதிர் காய் போடறேன்' என்று நிலைமைக்குத் தக்கபடி வேண்டுதல்.

வேறு உடை மாற்றிக் கொண்டு கோவிலுக்குக் கிளம்பினாள். 

"என்னம்மா கோபம்... ஏன் உம்முனு என்னவோ போல் இருக்கே...!" என்றான் குழைவான குரலில். 

"ப்ச்..." 

"பார்த்தியா... சொன்னாத்தானே புரியும்... நீயா மனசுக்குள்ள பொருமிக்கிட்டு இருந்தா நான் என்ன செய்ய முடியும்... சொல்லு..."

"எல்லாம் சொல்லிச் சொல்லி... அலுத்ததுதான்..." என்றாள் பளிச்சென்று. 

அவள் கோபம் புதிதல்ல. மாதுவுக்குக் கூடப் பிறந்த நால்வரும் பெண்கள். நாலு பேருமே வேலைக்குப் போகிறவர்கள். ஒவ்வொரு ஊர்களில் இருக்கிறார்கள். சௌஜன்யா வேலைக்குப் போகக் கூடாது என்று சொல்லித்தான் திருமணமே செய்து கொண்டான். அதே போல அவள் பார்த்த வேலையையும் ராஜினாமா செய்து விட்டாள்.

பிரச்சனை அங்குதான் ஆரம்பித்தது. எந்த நாத்தனார் வீட்டில் பிரச்சனை, உதவி தேவை என்றாலும் கூசாமல் கடிதம் எழுதி விடுவார்கள். கேட்டால், 'இவள் தான் ஃபிரியாக இருக்கிறாளே...வந்து உதவக் கூடாதா...?' என்பார்கள்.

மாற்றி மாற்றி ஒவ்வொரு வீட்டுக்காய் உதவிக்கு அலைந்ததில் சௌஜன்யாவுக்கு வெறுப்பே வந்துவிட்டது. காரணம், உதவியது இல்லை, பதிலுக்கு அவர்கள் உதவ மறுத்தது.

ஒருமுறை பானுவுக்கு ரொம்பவும் உடம்பு முடியாமல் போய் ஹாஸ்பிடலில் பத்து நாட்கள் வைத்திருந்தார்கள். எந்தச் சகோதரியுமே உதவிக்கு வரவில்லை. 'லீவு போட முடியாது. கணவர் சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுவார். பையனுக்குப் பரிட்சை...' என்று ஆளுக்கொரு பதில் எழுதி விட்டார்கள். 

மாதுதான் சமாதானம் சொன்னான். "பாவம்... நிஜம்மாவே அவங்களால வர முடியாம இருந்திருக்கலாம். அதனால என்ன... நான் லீவு போட்டுட்டுக்கூட இருக்கேன்..."என்றான்.

சௌஜன்யாவுக்கு அவ்வளவு எளிதாக அதை எடுத்துக் கொள்ள முடியவில்லை. மாதுவுக்கு இந்த விஷயத்தில் அவ்வளவு போதாது என்று சொல்லி விட்டாள். 

"உங்க தலையில எல்லாரும் மொளகா அரைக்கறாங்க. பிழைக்கத் தெரியாதவர் நீங்க... உங்களால நானும் சிரமப்பட வேண்டியிருக்கு. நமக்கு உதவாத மனுஷாளுக்கு நாம எதுக்கு கஷ்டப்படோணும்கிறேன்?" என்பாள்.

மாது மறுத்து விட்டான். "நம்ம கடமை இது... கூடப் பிறந்தவன்கிற முறையில என்னோட கடமை... நீயும் அதே போல உணரனும்னு நினைக்கிறேன்..." என்பான். 

இன்று மறுபடி ஒரு கடிதம் வந்து சௌஜன்யாவின் கோபத்தைத் தூண்டியிருக்கிறது. நிச்சயம் போக மறுப்பாள்.

கை கூப்பிக் கண் மூடித் தொழுததில் மனசு கொஞ்சம் அமைதியாயிற்று. பானு இரு காதுகளையும் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போட்டது அழகாக இருந்தது.
 
மூவரும் பிரகாரம் வலம் வந்து வெளி நடையில் அமர்ந்தார்கள்.

"...அப்பா... நாம மட்டும் அடிக்கடி இங்கே வரோம்... ஆனா... வித்யா வீட்டுல வரதே இல்லையே..." என்றாள் குழந்தை பானு திடீரென. 

"அப்படியா...!" என்றேன்.

சௌஜன்யா பேசாமல் கோவிலுக்கு வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். 

"ஆமாப்பா... யாருக்காவது உடம்பு சரியில்லைன்னாத்தான் கோவிலுக்கு வருவாங்களாம்..."

"நாமும் அதே மாதிரிப் பண்ணலாமா?" என்றான் குழந்தையை ஆராய்கிற தொனியில். 

"உஹும். நாம எப்பவும் வரணும்." 

"ஹும்...இது உனக்குப் புரியுது... உங்கம்மாவுக்குப் புரியலியே? மத்தவங்க எப்படி இருந்தா என்ன... நம்ம கடமை... நம்மை உதவி கேட்டு வர்ர சொந்தக்காரங்களுக்கு நம்மால முடிஞ்ச உதவியைச் செய்யணும்னு தோணலையே!" என்றான் பொதுவான குரலில். 

சௌஜன்யா நேராக அவனைப் பார்த்தாள்.

"நான் ஏமாளி, அசடுன்னு, அவங்க நினைச்சா, நினைச்சுட்டுப் போகட்டுமே! நமக்கு அதனால என்ன கஷ்டம்? ஆனா, நான் மனப்பூர்வமா - அவங்களுக்கு உதவணும்னு ஆசைப்படறேன்... கூடப் பொறந்துட்டேனே, அதுக்காக! உன்னை வற்புறுத்தல.. உனக்கு நிஜம்மாவே முடியலேன்னா, நீ போக வேண்டாம்... ஆனா அதைக் கஷ்டமா நினைச்சுப் போகாமா இருக்காதே, இது என்னோட ரெக்வஸ்ட். நாம நல்லது செஞ்சா நம்ம குழந்தை நல்லா இருப்பாள்னு ஒரு நம்பிக்கை. அப்படி வேணா நினைச்சுக்கயேன்... எப்படியோ... செய்தா சந்தோஷமா செய், முழுமனசோட செய்... அதுதான் வேணும்..."

கஷ்டமாகத்தான் இருந்தது. விருப்பம் முழுமையாக வரவில்லைதான். ஆனால், இவன் மனசு... இந்தக் குணம்தான் ஆரம்பத்திலிருந்து பிடித்தது. இதில் மயங்கித்தானே அவனை அவளால் இன்னும் நேசிக்க முடிகிறது? இதை அவர்களுக்காகச் செய்யவில்லை. 

இவனுக்காகத்தான் செய்கிறேன் என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டாள். உறுத்தல் தீர்ந்த மாதிரி இருந்தது. புன்முறுவலித்தாள். 

"ஊருக்குப் போறேன்..." என்றாள்.

June 04, 2012

பொழிகிறது..


கொட்டித் தீர்த்து விட்டது மழை.

இல்லை.. இன்னும் இருக்கிறது

என்கிறது வானிலை ..

ஒரு குடைக்குள்

அடங்காது

திமிரும் மனசு.

அப்படியே வானம்

கீழிறங்கும் அதிசயம்.

சள சளவென்று

நீரை உதைத்துப் போகையில்

உண்டாகும் குதூகலம் ..

இன்னொரு மழைக்காய்

காத்திருக்க  சொல்லும் !