May 31, 2010

எஸ் எம் எஸ் - பகுதி 4

"இன்னிக்கு டிபன் வேணாம். நான் ஆபீஸ் போகலே" என்றேன் புனிதாவிடம்.

ஏன் லீவு என்று அவள் கேட்பாள் என்றுநினைத்தேன். கேட்கவில்லை. பேசாமல் போய்விட்டாள்.

கண்களை மூடி படுத்திருந்தேன். என்ன செய்யலாம். டெலிபோன்ஸ் நண்பர் சொன்னது போல போலீஸ் உதவியை நாடலாமா. இப்போது போய் அவர்களிடம் சொன்னால் என்ன கேட்பார்கள்?

ஏன் ஸார்.. அதுதான் வேண்டாத எஸ் எம் எஸ் என்று தெரிந்து விட்டதே. பிறகு ஏன் அவனோடு பெண் குரலில் பேசினீர்கள்? என்று கேட்டு விட்டால். உங்க ஸைடுலயும் தப்பு இருக்கு.. என்று சொன்னால்?

எனக்கு தலை சுற்றியது. சைபர் கிரைம் என்று கண்ட நியூஸ் படித்திருந்ததில்.. இதை எந்த ரகத்தில் சேர்ப்பது என்று புரிபடவில்லை.

எனக்கு மணி என்று ஒரு நண்பன். பால் வியாபாரம். பொழுது போகவில்லை என்றால் அடிதடியில் இறங்கி விடுவான். யாரையாவது பிடிக்கவில்லை என்றால் முதல் அடி அவனுடையது. மவனே.. நாளைக்கு பால் உனக்கு எங்கையாலதான்.. இது அவனுடைய பஞ்ச் டயலாக்!

என்னோடு ஹைஸ்கூல் வரை படித்தவன். நல்ல மோட்டாவான ஆள். கிளாஸுக்கே தண்ணி அடித்து விட்டுத்தான் வருவான். காலையில் மூன்று மணிக்கே எழுந்து பால் ஊற்றி விட்டு வருவதாலும் 'தண்ணி' மேட்டராலும் கடைசி பெஞ்சில் படுத்துத் தூங்கி விடுவான்.

என்னுடைய கணக்கு நோட்டை கடைசி தினங்களில் வாங்கிப் பார்த்து பாஸ் மார்க் வாங்கி விடுவான். அல்லது வாத்தியாருக்கே பால் ஊற்றுவானோ என்னவோ.

அவனுக்கு பேங்க் அக்கவுண்ட் ஆரம்பிக்க உதவி செய்யப் போய் என்னையே வம்பில் மாட்டி விட்டான். பசுமாடு வாங்க லோன் வாங்கிவிட்டு திருப்பிக் கட்டவில்லை. பேங்க் மேனேஜர் என் நண்பர்தான். அவர் டிரான்ஸ்பரில் இந்த பிராஞ்சுக்கு வந்ததும் நிலுவையில் இருந்த கடன்களை வசூலிக்கக் கிளம்பினார். இவன் கேஸும் அதில் இருந்தது. எனக்கு ஃபோன் செய்தார். "என்ன ஸார், ரெபரென்ஸுல உங்க பேர் இருக்கு.."

"அப்படியா"

பாவி என்னிடம் சொல்லவே இல்லை. அதை விட மோசம்.. அவன் ஃபோட்டோவிற்கு பதில் யாருடைய புகைப்படமோ ஒட்டியிருந்தது. எப்படி அதைச் சாதித்தான் என்று புரியவே இல்லை.

நானும் பேங்க் மேனேஜரும் பேச்சு வார்த்தை நடத்தியதில் எங்கள் பழைய சிநேகத்தை நினைவு கூர்ந்து மேனேஜருக்கு பால் ஊற்றி (வீட்டுக்குத்தான்) கடனைக் கழிப்பதாய் ஒப்பந்தம் ஆனது.

"ஒரே தண்ணி" என்றார் மேனேஜர் பின்னொரு நாள்.

அவனுக்கும் செல் (இப்போது யாரிடம்தான் இல்லை!) இருந்தது.

"டேய்.. மணி" என்றேன்.

"சொல்லுப்பா"

"ஒரு உதவி வேணும்"

"யாரைப் போட்டுத் தள்ளணும்"

"என்கூட வா. என்ன செய்யலாம்னு அப்புறம் சொல்றேன்"

"சரிப்பா"

இப்போது அடுத்த அழைப்பு என் இனிய எதிரிக்கு! அழைத்த உடன் எடுத்துவிட்டான்.

"மெசேஜ் அனுப்பலேன்னு கோபமா" என்றான்.

"பார்க்கணுமே"

"நீல்கிரிஸ் தெரியுமா"

"ம்"

"ஷார்ப்பா பத்து மணிக்கு வந்துரு. ப்ளூ டிரெஸ் மறக்காதே"

மணிக்கு தகவல் கொடுத்து விட்டேன். வந்து பிக்கப் பண்ணிக் கொள்வதாக. இருவருமாய் போனோம். பத்தரை வரை காத்திருந்ததுதான் மிச்சம். எவனையும் சந்தேகப்பட முடியவில்லை. அவன் குறிப்பிட்ட இடத்திற்கு அருகிலேயே நின்றும்.

செல் ஒலித்தது.

"ஸாரிடா.. வெயிட் பண்றியா"

"ம்"

"கோவிச்சுக்காம ஸோனா தியேட்டர் வரியா.. வாசல்லியே பைக் வச்சுகிட்டு கூலிங்கிளாஸ் போட்டுகிட்டு நிக்கறேன்"

வேறுவழி. போனோம். மறுபடி அரை மணி காத்திருந்ததுதான் மிச்சம். அவன் அழைப்பு மீண்டும்.

"என்னை அடிக்கணும் போல இருக்கா"

நான் பேசவில்லை.

"நிஜமாவே நீ என்னைப் பார்க்க விரும்பறியா.. இல்லே வேறு நோக்கமான்னு எனக்குப் புரியலே. அதனாலதான் இப்படி செஞ்சேன்.."

"என் மேல சந்தேகமா"

"சேச்சே. இப்பதான் புரிஞ்சு போச்சே.. இப்ப உனக்கு ஒரு சர்ப்ரைஸ்.."

எனக்குப் புரியவில்லை. எங்காவது நின்று கொண்டு பேசுகிறானா.. சுற்றுமுற்றும் பார்த்ததில் அப்படி யாரும் கவனத்தை ஈர்க்கும்படி நிற்கவில்லை.

"நோட் பண்ணிக்க.. என் அட்ரஸ். நேரா எங்க வீட்டுக்கு வா. நான் இப்ப தனியாத்தான் இருக்கேன்"

விலாசம் சொன்னான். என்னை முழுவதுமாய் நம்பி இருக்க வேண்டும். அவனிடம் இப்போது பரபரப்பு தெரிந்தது. என்னை நேரில் பார்க்கப்போகிற படபடப்பு. குறித்துக் கொண்டேன்.

"எப்படி வருவே.. டூ வீலரா.. ஓட்டுவியா"

"ஓ.. இன்னும் அரை மணில அங்கே இருப்பேன்.."

"வாடா செல்லம்"

மணிக்கு இன்னும் எதுவும் நான் சொல்லவில்லை. இப்போது எடிட் செய்து சொன்னேன். ஆள் யாருன்னு தெரியலே. டார்ச்சர். என் பொம்பளைக் குரலைக் கேட்டு நிஜம் லேடின்னு நினைச்சுகிட்டு மெசேஜ் அனுப்பறான்.. ஃபோன் பேசறான்..

மணிக்கு சுவாரசியம் போய் விட்டது.

"ப்பூ.. இவ்வளவுதானா.. இதுக்கு போயி ஏன் இத்தனை பிளானு.. வூடு பூந்து நாலு தட்டு தட்டி விட்டா சரியாப் போச்சு"

"சரி. வா" என்றேன்.

விலாசம் ஒரு சந்துக்குள் இருந்தது. அழைப்பு மணியை அடித்தேன். மணியை நான்கு வீடுகள் தள்ளி நிற்கச் சொன்னேன். சூழ்நிலை பார்த்து அழைப்பதாய் சொன்னேன்.

"யாரு"

"நான் தான்"

என் பெண்குரலின் கடைசி பிரயோகம்!

"கதவு திறந்துதான் இருக்கு செல்லம்.. உள்ளே வா"

கதவைத் திறந்தேன்.

"உள்ளே வா"

ஹாலில் யாரும் இல்லை.

"இங்கே.. பெட் ரூமில்"

ராஸ்கல்! போனேன். சின்ன அறை. மூலையாக ஒரு கட்டில். பக்கத்தில் ஒரு வீல் சேர். என்னைப் பார்த்ததும் அவன் திகைத்ததை விட என் திடுக்கிடல்தான் அதிகம்.

"நீ.."

"நீங்க"

"மெசேஜ் கொடுத்தது.. பேசினது?"

"லேடி வாய்ஸ்?"

கட்டிலில் அமர்ந்து விட்டேன். இதற்குள் மணிக்குப் பொறுக்க முடியாமல் அவனும் உள்ளே வந்து விட்டான்.

"என்ன தட்டிரலாமா"

அவனுக்கும் ஷாக். "அட.. நாக்காலிப் பய.. இவனா?"

"ஸ்ஸ்.. மணி. கொஞ்சம் பேசாம இரு."

எனக்கு திடீரென ஏனோ ஒரு பொறுமை. விவரித்தேன். என் மனைவி எனக்குக் கொடுத்த மெசேஜ் தவறுதலாய் அவனுக்கு வந்து விட்டதை. என் இரு குரல் திறமையை.

"உங்களால ரெண்டு வாய்ஸ்ல பேச முடியுமா"

"பாடவும் முடியும்"

செருமிக் கொண்டான்.

"எ..னக்கு என்ன சொல்றதுன்னு புரியலே. கடவுள் என்னை இப்படி படைச்சிட்டாரேன்னு நொந்து போயிருந்தப்ப.. அந்த மெசேஜ்.. எனக்கு யார் அன்பாச்சும் கிடைச்சா தேவலை மாதிரி. எனக்கு ஒரு அக்கா இருக்காங்க. டிவோர்ஸி. ஆபீஸ் போயிருக்காங்க. என்னைக் கவனிக்க ஒரு அம்மா வருவாங்க. இப்ப அவங்களை நாதான் நீங்க வரதுனால வெளியே அனுப்பிட்டேன். புக்ல படிச்சிருக்கேன். இப்பல்லாம் மெசேஜ் அனுப்பி அதனால வர வம்பு பத்தி எல்லாம். இருந்தும் எனக்குள்ளே ஒரு தைரியம்.. நான் மாட்டிக்க மாட்டேன்னு.. என்னால எதுவும் முடியாது.."

அழுதான்.

"அதனால பைக் ஓட்டுவேன்.. அதைப் பண்ணுவேன்னு பீலா விட்டேன்..என்னை மன்னிச்சுருங்கன்னு சொல்ல மாட்டேன். நான் செஞ்சது தப்புதான். இந்த கொஞ்ச நாள் நிச்சயமா எனக்கு ஒரு சந்தோஷம் கிடைச்சுது.. நான் ஒரு முழு மனுஷன் போல.."

மணி அதட்டினான்.

"ஏண்டா.. மாட்டிகிட்ட உடனே ஏதாச்சும் மழுப்பறியா.."

"மணி பேசாம இரேன்"

"அவரு சொல்றது கரெக்ட் தான். எம்மேல தப்புதான்."

நான் எழுந்தேன்.

"தம்பி.. உன்னை என்ன செய்யறதுன்னு எனக்குப் புரியலை. நீ செஞ்சது விளையாட்டுத்தனமா இருக்கலாம். பட் இதைக் கண்டின்யூ பண்ணா நிச்சயம் பிரச்னையில மாட்டிப்பே. பீ கேர்ஃபுல்"

வெளியே வந்து விட்டோம். எதிரில் ஒரு வயதான அம்மா வந்தார். எங்களைப் பார்த்துக் கொண்டே வீட்டுக்குள் போனார்.

மணி கேட்டான்.

"என்ன சும்மா வுட்டுட்டே"

"ஏற்கெனவே அவனை இயற்கையே தண்டிச்சு வச்சிருக்கு. அதுவே போதும்" மணியை விட்டு விட்டு வீட்டுக்குத் திரும்பினேன். செல் சிணுங்கியது. அவன் தான்.

"ஸாரி ஸார்.. இனிமேல் நான் மெசேஜ் எதுவும் அனுப்பமாட்டேன். உங்க நம்பரை இப்பவே டிலீட் செஞ்சிருவேன்"

"சரிப்பா"

"ஸார்.."

"என்ன"

"எனக்காக.. உங்க லேடி வாய்ஸ்ல ஒரே ஒரு பாட்டு பிளீஸ்"

'ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே.. வாழ்வென்றால் போராடும் போர்க்களமே'

"தேங்க்ஸ் ஸார்"

புனிதா ஹாலில் அமர்ந்திருந்தாள். டிவி திரையில் அவள் கவனம் முழுமையாய் இல்லை என்று புரிந்தது.

அருகில் போய் அமர்ந்தேன். நானும் தப்புதான் செய்து விட்டேன். என்னை அவள் மன்னிப்பாளா..

"புனி.. ஸாரிடா செல்லம்"

செல் ஸ்விட்ச்டு ஆஃப் !



(முற்றும்)

எஸ் எம் எஸ் பகுதி 3

நண்பருக்கு - டெலிபோன்ஸ் - என்னை மிகவும் பிடிக்கும். காரணம் என் இரு குரல் திறமை!

சில நேரங்களில் அலுவலகத்திற்கே ஃபோன் செய்து விடுவார்

"ஏதாச்சும் பாடுங்களேன்"

"என்ன பாட்டு?"

"சலங்கை ஒலில வந்தே பார்வதி பரமேச்வரம்.."

ராக வினோதங்கள் நடன சந்தோஷங்கள்.. பாட்டு அவருக்குப் பிடித்த பாட்டு. இரு குரல்களிலும் பாடியதும் அவருக்கு ஒரே குஷி.

"உங்களுக்கு ஏதாச்சும் செய்யணுமே" என்றார்.

விடுவேனா. என் பிரச்னையை சொன்னேன்.

"ம்ம்" யோசித்தார்.

"என்ன ஃப்ரெண்ட்.. ஏன் அவனோட பேசினீங்க"

எனக்குள் தடுமாற்றம். புனிதாவுக்கு இதில் எந்த அளவுக்கு சம்பந்தம் இருக்கிறது என்று எனக்குத் தெரியாதே.

"உங்க மிஸசை நீங்க டெளட் பண்றீங்களா" என்றார் பாலிஷாக.

"என் நிலைமையையும் நீங்க யோசிக்கணும். அவன் ரொம்ப நாளா மெசேஜ் அனுப்பறானாம். ஆனா இவ எங்கிட்டே ஒரு தரம் கூட சொன்னதில்லே." நண்பர் சிரித்தார்.

"உங்க மிஸஸை உங்களுக்குத் தெரியாதா.. சரி ஓக்கெ.. இப்ப என்ன வேணும். அவனோட அட்ரஸ்.. டிரை பண்றேன். நம்பர் சொல்லுங்க" சொன்னேன்.

"அட்ரஸ் கிடைச்சதும் என்ன செய்யப் போறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா"

பிராமிசாய் எனக்கும் அப்போது ஐடியா எதுவும் இல்லை. முதலில் அவன் யார்.. எப்படி இருப்பான் என்கிற க்யூரியாசிட்டிதான்.

"சும்மா அவனைப் பார்க்கணும். ஏன் இப்படி செய்யறான்னு தெரிஞ்சுக்க முடிஞ்சா நல்லது.."

"என்னால உங்க பதிலை ஏத்துக்க முடியலே. எதுவும் வம்புல மாட்டிக்காதீங்க. எனக்கு போலீஸ்லயும் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. ட்ரேஸ் பண்ணச் சொல்லலாமா"

"வே..ணாம்"

நண்பர் விட்டு விட்டார்.

"ஓக்கே. டேக் கேர்"

அன்று முழுவதும் எனக்கு எந்த அழைப்பும் அல்லது குறுஞ்செய்தியும் வரவில்லை. என்ன ஆச்சு அவனுக்கு. ஒரு வேளை சந்தேகப்படுகிறானோ. வீட்டிற்குத் திரும்பியதும் அன்று இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது.

புனிதாவிடம் பயங்கர இறுக்கம் தெரிந்தது.

"ஏன் என்னோட செல்லையும் எடுத்துகிட்டு போயிடறீங்க."

"அது வந்து.."

"ஏங்க எவனோ ஒரு முட்டாள் பைத்தியக்காரத்தனமா மெசேஜ் அனுப்பறான்னா.. அதுக்காக இப்படி உங்க நிம்மதியைத் தொலைச்சிட்டு அலையணுமா"

"அவன் முட்டாளா.. இல்லே நான் முட்டாளான்னு தெரியலையே" என்றேன் மெதுவாக ஆனால் கேட்கும் ஒலியில்.

புனிதா எதிரில் வந்தாள்.

"என்ன சொன்னீங்க"

"புனிதா.. ஒரு விஷயம் எனக்கு கிளியர் ஆகலே. அவன் சொல்றான்.. இதுவரைக்கும் நிறைய மெசேஜ் அனுப்பினதா. ஆனா நீ ஒரு தரம் கூட என்கிட்டே அதைப் பத்தி சொல்லவே இல்லை."

என் குரலில் பரிபூர்ண கசப்பு வழிந்தது.

"ஓ"

அவ்வளவுதான். அதன் பிறகு புனிதா எதுவும் பேசவில்லை. இரவுச் சாப்பாடு கூட மெளனமாய்.

கட்டிலுக்கு வந்ததும் "ஒரு நிமிஷம்" என்றாள்.

'என்ன' என்பது போலப் பார்த்தேன்.

"நீங்க என்னை சந்தேகப்படறதா நான் நினைக்கலே. ஆனா குழம்பிப் போயிருக்கீங்க. இப்ப நான் என்ன சொன்னாலும் நீங்க வேற மாதிரி ஏதாச்சும் யோசிப்பீங்க. இதை ஏன் சொல்றேன்னா.. முதலிலேயே நீங்க என்கிட்டே மனசு விட்டு பேசியிருந்தா.. இந்த அளவு குழப்பத்தை வளர விட்டிருக்க மாட்டீங்க. இப்ப நீங்களா விடை கண்டு பிடிச்சு என்மேல தப்பு எதுவும் இல்லேன்னு தெரிஞ்சுகிட்டு வாங்க. அதுவரைக்கும் காத்திருக்கேன்"

படுத்துத் தூங்கி விட்டாள். எனக்கு என்னை சபித்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. ஏன் இப்படி அடிமடையனாய் நடந்து கொண்டேன்.

உள்ளூர ஒவ்வொரு மனதிலும் ஏதோ ஒரு விதத்தில் ஒரு அற்ப எண்ணம் குடி கொண்டிருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் அது வெளியே வந்து உலாத்தி விட்டு போகிறது. மெசேஜ் அனுப்புகிறவனுக்கு அது மெசேஜ் மூலமாய் வடிகாலாகிறது. சைகாலஜிஸ்ட்டைக் கேட்டால் ஏதாவது ஒரு விளக்கம் தரக் கூடும்.

புனிதாவின் செல் மினுமினுத்தது. மெமரி ஃபுல் என்றது. வேண்டாத மெசேஜை அழித்தால்தான் புது மெசேஜைப் படிக்கலாம்.

முதல் மெசேஜ் வசந்தியிடமிருந்து. அடுத்தது நான் அனுப்பியது. 'மெசேஜ் அனுப்ப கத்துக்கோ' மூன்றாவது.. என் தலைக்குள் பல்ப் ஒளிர்ந்தது அப்போது.

அட.. புனிதா ஆரம்பத்தில் மெசேஜ் அனுப்பத் தெரியாதவளாய் இருந்தாள். நான் தான் க்ரியேட் மெசேஜ்.. டைப் பண்னு.. அனுப்பு.. அப்போது எந்த செல்லுக்கு அனுப்ப வேண்டுமோ அந்த நம்பரை டைப் பண்ணு.. ஸ்டெப் பை ஸ்டெப் ஆக சொல்லிக் கொடுத்தேன்.

மறுபடியும் தலைக்குள் பளிச்!

அனுப்பியதில் போய் பார்த்தேன்.

'ஐ லவ் யூடா செல்லம்' புனிதா அனுப்பிய முதல் மெசேஜ். எந்த நம்பருக்கு.. அட கஷ்ட காலமே.. என் எதிரிக்கு!

கற்றுக்குட்டித்தனமாய் அவள் அனுப்பிய முதல் மெசேஜ் எண்களைத் தப்பாய் அடித்ததில் இவனுக்குப் போய் விட்டது. அதனால் அவனுக்கு குஷியாகி தொடர் தாக்குதல். இவளுக்கோ தான் செய்த தவறு புரியாமல் போனதில் தொடர்ந்து வருகிற மெசேஜை தப்பாய் வருகிறது என்று அலட்சியப்படுத்தி விட்டிருக்கிறாள்.

'ஸாரிடா.. செல்லம்..'

திரும்பி நிச்சலனமாய்த் தூங்குகிறவளைப் பார்த்தேன். ஊஹூம். இப்போது அவளிடம் எதுவும் பேச வேண்டாம். அவனை ஒரு வழி செய்து விட்டு பிறகு இவளிடம் மன்னிப்பு கேட்கலாம்.

நானும் திரும்பிப் படுத்து தூங்கிப் போனேன். நள்ளிரவில் அவன் அனுப்பிய மெசேஜ் வந்தபோது செல் சிணுங்கியது கூடத் தெரியாமல்.

காப்பி சுடச் சுட கிடைத்தது. புனிதா என்னைப் பார்க்கிறாளா என்று ரகசியமாய்ப் பார்த்தபோது அவளிடம் எவ்வித மாற்றமும் இல்லை. பரவாயில்லை. அவள் கோபம் நியாயமானதுதான். மறக்காமல் இரண்டு மொபைல்களையும் எடுத்துக் கொண்டேன்.

டெலிபோன்ஸ் நண்பர் ஃபோன் செய்தார்.

"சொல்லியிருக்கேன். கண்டு பிடிச்சுரலாம்"

எனக்குள் ஒரு படபடப்பு. பேசிப் பார்த்தால் என்ன. முதல் தடவை ரிங் போனதும் சட்டென்று கட் செய்து விட்டேன். இரண்டாவது முறை இணைப்பு கிடைக்கவில்லை. மூன்றாவது முறை 'பிளீஸ் ஹோல்ட் ஆன். தி லைன் ஈஸ் பிஸி'.சற்று தாமதித்ததில் அவனே பேசினான்.

இப்போது அவன் குரலில் ஒரு துள்ளாட்டம்.

"சொல்லுடா. ரொம்ப கஷ்டமா இருக்கா.. பார்க்காம"

"ஆமாண்டா"

"அட. நீயும் டா போடறியா"

வாய் தவறி கோபத்தில் சொன்னதை அவன் உற்சாகமாய் எடுத்துக் கொண்டு விட்டான்.

"ஸாரி.."

"சேச்சே.. நீ அப்படி கூப்பிடும்போது சும்மா அதிருதுல்ல"

"எப்ப பார்க்கலாம்" என்றேன் மிக இயல்பான பெண் குரலில்.

"ஷ்யூர்.. இனிமேல டிலே பண்ண மாட்டேன்.. நாளைக்கு?" என்றான்.

"நாளைக்கா"

"ஜஸ்ட் ஒன் டே வெயிட்டிங்"

"நாளைக்கு ஏமாத்தக் கூடாது" என்றேன் குரலில் குழைவுடன்.

"கூல்" என்றான்.

மனசில் பெர்ரிய ஹீரோ என்று நினைப்பு.

"காலைல முதல் மெசேஜ்ல நாம எங்க சந்திக்கறோம்னு தகவல் இருக்கும். ஓகே "

"தேங்க்ஸ்"

"சீச்சீ.. நமக்குள்ளே என்ன ஃபார்மாலிட்டி.. பைடா"

நாளைக்கு இருக்குடா மகனே உனக்கு தீபாவளி.. என்றேன் மனசுக்குள் அப்போது .

(தொடரும்)

May 29, 2010

எஸ் எம் எஸ் - பகுதி 2

ஒவ்வொரு வாரமும் வசந்தியும் அவள் கணவர் சேகரும் எங்கள் வீட்டிற்கு வருவார்கள். அல்லது நாங்கள் அவர்கள் வீட்டிற்குப் போவோம். இது வசந்திக்குக் கல்யாணமாகி இதே ஊரில் குடித்தனம் வைத்தபின் ஏற்பட்ட எழுதப்படாத உடன்படிக்கை. அக்கா தங்கை பாசம் பொங்கி வழிவதில் நாங்கள் குறுக்கே அணை கட்டுவதாக இல்லை. இந்த ஞாயிறும் வந்து விட்டார்கள்.

எனக்குத்தான் ஏற்கெனவே தலைவலி. நேற்று மட்டும் அவனிடமிருந்து 55 குறுஞ்செய்திகள். எல்லாம் 'கடி' ரகம். பயலுக்கு இப்போது எல்லாம் உச்சத்தில். அவன் தொடர்பு கொண்ட பெண் பேசிவிட்டாளே. அந்த உல்லாசம்.

வசந்தி என்னைப் பார்த்து கேட்டாள்.

"என்ன உர்ர்ருனு இருக்கீங்க..உடம்பு சரியில்லையா"

நான் பதில் சொல்வதற்குள் அடுத்த கேள்வி.

"என்ன எப்ப பாரு அக்காவோட செல்லையே கையில வச்சுகிட்டு இருக்கீங்க" புனிதா போட்டு உடைத்து விட்டாள்.

"எவனோ தெரியலே.. மாஞ்சி மாஞ்சி மெசேஜ் அனுப்பறான். எப்படி கட் பண்றதுன்னு புரியலை"

சேகர் கேட்டான்.

"உங்க நம்பர் அவனுக்கு எப்படி கிடைச்சுது"

வசந்தி குறுக்கிட்டாள்.

"இது என்ன பெரிய விஷயமா.. யாராச்சும் வேண்டாம்னு கேன்சல் பண்ன நம்பரைத்தானே சமயத்துல நமக்கு அலாட் பண்றாங்க. அவனோட டார்ச்சர் தாங்காம யாரோ சரண்டர் பண்ண நம்பர் நமக்கு வந்திருச்சு."

"போலிசுக்குப் போலாமே. நம்பரை ட்ரேஸ் பண்ணி ஆளைப் புடிச்சு.."

வசந்தி மறுபடியும் குறுக்கிட்டாள்.

"அக்கா பயப்படறா.. எதுக்கு வம்புன்னு"

"அய்ய.. இது என்ன படிக்காதவங்க மாதிரி. அவங்க கூட தைரியமா புகார் கொடுக்கறாங்க"

வசந்தி கேட்டாள்.

"இப்ப என்ன மெசேஜ்?"

"வந்து.." தயங்கினேன்.

புனிதா சொல்லிவிட்டாள்.

"ஒரு யானையும் எறும்பும் லவ் பண்ணிச்சாம். எறும்பு வீட்டுல பயங்கர எதிர்ப்பாம். யானை என்ன ஜாதி.. நாம என்ன ஜாதின்னு. லவ் பண்ற எறும்பு பிடிவாதமா நான் யானையைத்தான் கட்டிக்குவேன்னு சொல்லிச்சாம். அப்படி என்ன கட்டாயம்னு கேட்டப்ப எறும்பு சொன்ன பதிலைக் கேட்டு மொத்த எறும்பு குடும்பமும் தற்கொலை பண்ணிகிச்சாம்"

வசந்தி ஆர்வமாய்க் கேட்டாள்.

"என்ன பதில்?"

"நான் இப்ப முழுகாம இருக்கேன்னு அந்த எறும்பு சொல்லிச்சாம்"

வசந்தியும் சேகரும் கண்ணில் நீர் வரச் சிரித்தார்கள்.

"குட் ஜோக்"

"நீங்களும் உங்க ரசனையும்"

புனிதா தலையில் அடித்துக் கொண்டாள்.

"ஜஸ்ட் ஹியூமர் சென்ஸோட பாருங்க.. ஏன் டென்ஷன் ஆகறீங்க"

"நேத்து ஒரு மெசேஜ் வந்தது" என்றேன் பேச்சை மாற்ற நினைத்து.

"என்ன"

"ஆபீசர்ஸ் கிளப். வந்தவங்க எல்லாரும் அவங்கவங்களுக்கு பிடிச்ச கேம் விளையாடிகிட்டு இருந்தாங்க. அப்ப ஒரு செல்லுல இன்கமிங் கால். ஒருத்தர் எடுத்து பேசினார். சொல்லும்மா.. என்ன விஷயம்.. வொய்ப் கிட்ட பேசறார்னு புரிஞ்சுது. நகைக்கடைக்கு வந்தேன்.. ஒரு நெக்லஸ் புது மாடலா இருக்கு. விலை 25000 தான்.. வாங்கிக்கவா.. ஓக்கேம்மா.. உடனே அவங்க புது மாடல் கார் வந்திருக்கு.. புக் பண்ணிரவான்னாங்க.. விலை எவ்வளவுன்னு கேட்டாரு.. ஃபோர் லாக்ஸ்தான்.. சூப்பர்.. புக் பண்ணிருன்னுட்டாரு. அப்ப இன்னொரு ஆசையும் சொல்லிரவான்னு கேட்டாங்க. சொல்லும்மான்னாரு. தோட்டத்தோட வீடு வாங்கணும்னு நினைச்சமே.. 20 லாக்ஸ்ல ஒரு ஆஃபர் வந்திருக்குன்னு சொன்னாங்க. ம்ம்.. 18க்கு கேளு.. இல்லாட்டி இருபதுக்கே முடிச்சிரு.. ஹைய்யோ.. ஐ லவ் யூன்னாங்க.. செல்லை எடுத்துப் பேசின ஆளு லைனை கட் பண்ணிட்டு எழுந்து நின்னு இது யாரோட செல்லுன்னார்"

மறுபடியும் சேகரும் வசந்தியும் சிரித்தார்கள். புனிதாவின் முகத்தில் இறுக்கம் போகவில்லை. சாப்பாட்டின் போதும் அதிகம் நான் பேசவில்லை. புனிதாவும் வசந்தியும் கையில் எடுத்துக் கொண்டு ஹாலுக்குப் போய் விட்டார்கள். சேகர் டிவி பார்த்தபடி சாப்பிட்டான். நான் டைனிங் டேபிளிலேயே. சீக்கிரம் முடித்து விட்டேன்.

வசந்தி கிண்டலடித்தாள்.

"அடுத்தது என்ன.. வழக்கம் போல தூக்கம் தானே"

சேகர் சொன்னான்.

"நீங்க போங்க.. நம்ம கஷ்டம் அவளுக்கு என்ன தெரியும்"

படுக்கை அறைக்குள் நுழைந்து கதவை மூடிக் கொண்டேன். படுத்தபோது சட்டைப் பையில் இருந்த செல் உறுத்தியது. எடுத்து கீழே வைக்கப் போனபோது ரிங் கேட்டது.

"ஹாய்.. ஜில்லு"

அவனேதான்.

"என்ன"

"இப்ப நீ எங்கே இருக்கேன்னு சொல்லட்டுமா.. பெட் ரூம்லதானே"

அடப்பாவி. அது எப்படித் தெரியும்.

"பார்த்தியா.. கரெக்டா கண்டு பிடிச்சேனா.. என் ஞாபகம் வந்தாலே நீ பெட் ரூமுக்குத்தானே போவே"

இவனை என்ன செய்ய.

"ஜோக்ஸ் எல்லாம் பிடிச்சிருந்ததா.. என் டேஸ்ட்தான் உனக்கும்னு எனக்குத் தெரியும். அதனாலதான் எனக்குப் பிடிச்ச மெசேஜை மட்டும் உனக்கும் அனுப்பறேன்"

நான் பேசாமல் இருந்தேன்.

"ஹேய் டார்லிங், என்னைப் பார்க்கணும் போல இருக்கா"

"ம்"

"இன்னிக்கே பார்க்கலாமா"

"ம்"

"நாலு மணிக்கு ரெடியா இரு. இடம் சொல்றேன். எனக்குப் பிடிச்ச ஸ்கை ப்ளூ ஸாரி.. ஓ.. நீ சுரிதார் போடுவியா.. அப்ப அதே கலர்ல சுரிதார் இருக்கா"

இருக்குடா படவா.

"நாலு மணி.. ஓக்கே"

கட்டாகி விட்டது. யாரோ கதவைத் தட்டிய சத்தம். எழுந்து போனேன். கதவைத் திறந்தால் எதிரே புனிதா.

"பாயசம் எடுத்துக்கலியே" என்றாள் டம்ளரை நீட்டி.

"இப்ப வேணாம்.. அப்புறம்"

வசந்தியின் குரல் கேட்டது.

"அப்புறம் இருக்காது. இன்னிக்கு வழக்கத்தை விட சூப்பரா அமைஞ்சிருக்கு. நானே எடுத்து குடிச்சிருவேன்"

பாயசம் ரசிக்கிற மூடில் நான் இல்லை. ஒரு அண்டா பாய்சன் இருந்தால் மெசேஜ் அனுப்புகிற தடியனுக்கு ஊத்திக் கொடுத்து விடுவேன்.

"இன்னிக்கு சினிமா போலாமா" என்றாள் வசந்தி.

"நா..ன் வரலே" என்றேன்.

"ஏன்.."

"வெளியே போகணும். ஒரு முக்கியமான வேலை இருக்கு"

"அதானே பார்த்தேன். இப்பல்லாம் நாம மாசம் ஒரு தடவை பார்க்கிறதே அபூர்வமாயிருச்சு. ரெண்டு தடவையா நீங்க இல்லாம நாங்க மட்டும் வந்துட்டு போனோம்."

புனிதாவும் கேட்டாள்.

"போலாமே"

ம்ம். யோசித்தேன். அவன் நினைத்தபடி 'நான்' உடனே வந்து அவனைச் சந்தித்து விட்டால்.. என் மேல் இருக்கிற கவர்ச்சி போய் விடும். இவனை இப்படியே விடக் கூடாது. ஒரு தரம் அவனை அலைய விட வேண்டும்.

"சரி. வா.. சினிமா போகலாம்"

புனிதாவுக்கு ஒரே குஷி. தியேட்டரில் பாதி படம் பார்க்கையில் மெசேஜ்.

'ஸாரிடா.. இன்னிக்கு புரொகிராம் கேன்சல்.. அப்புறம் பார்க்கலாம்'

அவனும் என்னைப் போலவே உஷார் பார்ட்டிதான். உடனே வரக் கூடாதென்று மழுப்புகிறான். பத்து நிமிடங்களில் இன்னொரு மெசேஜ்.

'நான் இப்ப எங்கே இருக்கேன் தெரியுமா.. சினிமா தியேட்டர்ல.. ப்ச்.. என் பக்கத்துல நீ இல்லியேன்னு வருத்தமா இருக்கு'

அந்த நிமிடம் எனக்கு டெலிபோன்ஸில் வேலை பார்க்கும் ஒரு நண்பரின் நினைவு வந்தது. எப்படியும் அவரைப் பார்த்துப் பேசி இந்த எண்ணின் சொந்தக்காரன் யார் என்று கண்டுபிடித்து விடவேண்டும்.


(தொடரும்)

எஸ் எம் எஸ்

கை தவறி மொபைலை எங்காவது வைத்து விடுவதும் பிறகு அதை தேடுவதும் எனக்கு வாடிக்கையாகி விட்டது.

சங்கரன் சிரித்தான்.

"அது எப்படி ஒவ்வொரு தடவையும் கை தவறி வைப்பீங்க? சரி. நம்பரைச் சொல்லுங்க. கால் பண்ணா செல் இருக்கிற இடம் தெரிஞ்சுரும்"

"நம்பர்?"

மறுபடி மூளைப் பிரதேசத்தைத் துழாவினேன். போன மாசம் வரை வைத்திருந்த எண் ஞாபகத்தில் வந்தது. புது கனெக்ஷன் நம்பர்.. அதற்குள் என் செல்லே அழைத்தது. மெசேஜ் ஏதோ வந்திருக்கவேண்டும். 'பல்லெலக்கா..' டியூன் கேட்டதும் ஓடிப் போய் ஃபைலுக்குள் இருந்த செல்லை எடுத்துக் கொண்டேன்.

சங்கரன் மறுபடி சிரித்தான்.

"இனியாச்சும் பத்திரம்"

இப்போது லஞ்ச் நேரம். இதற்காகத் தனியே மூலையாக பெரிய மேஜை போட்டிருந்தது. ஒருவருக்கொருவர் கொண்டு வந்திருந்த உணவுப் பதார்த்தங்களைப் பரிமாறிக் கொண்டோம்.

சங்கரன் சினிமாப் பாட்டுப் பிரியன். அதுவும் பழைய பாடல்கள்.

"என்ன.. இன்னிக்கு பாட்டு கிடையாதா?" என்றான்.

"என்ன பாட்டு வேணும்"

"வசந்த கால நதிகளிலே.."

சிரித்துக் கொண்டேன். முதல் தடவை எங்கள் அலுவலக பங்ஷன் ஒன்றில் நான் தான் இறை வணக்கம் பாடினேன். நிகழ்ச்சி முடிந்ததும் சங்கரன் ஓடி வந்து கை கொடுத்தான்.

"ஸ்வீட் வாய்ஸ்"

பக்கத்தில் நின்ற நாராயணசாமி

"அவர் ரெண்டு வாய்ஸ்லயும் பாடுவார்.. ஜெண்ட்ஸ்.. லேடீஸ்" என்றதும் திகைப்புடன் பார்த்தான்.

"நிஜம்மாவா"

"ம்"

"ஏதாச்சும் ஒரு லைன் பாடுங்க பிளீஸ்"

வசந்த கால நதிகளிலே தான் பாடினேன். இரு குரல்களிலும். அதிலிருந்து எப்போது பாடச் சொன்னாலும் முதல் சாய்ஸ் வசந்த கால நதிகள்! முழுப் பாட்டையும் பாடினேன் மெல்லிய குரலில். சங்கரனின் கண்கள் மினுமினுத்தன.

சாப்பாட்டு நேரம் முடிந்து என் இருக்கையில் அமர்ந்தேன். கை அனிச்சையாய் செல்லை மேஜை மேல் வைத்தது. இது புனிதாவின் கைபேசி. என்னுடையது இப்போது அவளிடம் இருக்கிறது. அதுவும் ஞாபகமறதிதான். காலையில் கிளம்புகிற அவசரத்தில் அவளுடையதை எடுத்துக் கொண்டு வந்து விட்டேன். வந்ததும் முதல் ரிங்கே அவள் தங்கையிடமிருந்து.

"என் நம்பருக்கு பண்ணும்மா. மறந்து போய் இதை எடுத்துகிட்டு வந்துட்டேன்" என்றேன்.

"சாயங்காலம் மறக்காம நம்ம வீட்டுக்கு வந்திருங்க" என்றாள் பதிலுக்கு.

சிரிக்க முடியவில்லை. கைபேசி இருப்பது பல நேரங்களில் உதவி. இப்படி சில சங்கடங்களும். மீண்டும் 'பல்லேலக்கா..' ஒலித்தது. அடுத்த மெசேஜ். யாரது..

எடுத்துப் பார்த்தேன்.

இரண்டாவது மெசெஜ்.. en pathil illai? 'ஏன் பதில் இல்லை' தமிழ் + ஆங்கிலக் கலப்பு.

எதற்கு பதில்? முதல் மெசேஜ் பார்த்தால் புரியுமா.. இப்போது என் கை விரல்களில் நடுக்கம்.

முதல் மெசெஜ் திறந்து கொண்டது. 'எப்படி இருக்கே.. எனக்கு உன் ஞாபகம்தான். உனக்கு?'

மெசேஜ் அனுப்பியவன் யார் என்று புரிபடவில்லை. தவறுதலாய் வந்து விட்டதா? அப்படியானால் ஏன் இரண்டு முறை அனுப்ப வேண்டும்? மறுபடியும் மெசேஜ் டோன்.

'உன்னைப் பார்த்தது நான் இல்லை. என் கண்கள். உன்னைப் பார்த்தபின்போ நானே இல்லை!'

கண்றாவி கவிதை. கோபத்தில் அழிக்கப் போனேன். சட்டென்று எனக்குள் ஒரு குழப்பம். புனிதாவிடமே கேட்டு விடலாமே. என் செல்லுக்கு அழைப்பு விடுத்ததில் 'நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் வாடிக்கையாளர் இப்போது தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்' என்றது ஒரு முறை. அடுத்த தடவை முயற்சித்ததில் பிஸி டோன். அதற்குள் அலுவலக வேலைகள் வந்து விட என் கவனம் திசை மாறியது.

மாலை ஐந்து மணிக்கு சங்கரன் ஞாபகப்படுத்தினார்.

"செல்லை மறக்காம எடுத்துக்குங்க"

சட்டைப்பையிலிருந்து எடுத்துக் காட்டினேன். இன்னொரு மெசேஜ் வந்திருந்தது.

'கடவுள் காதலைப் படைத்தபோது உன்னைப் பார்த்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் காதல் இத்தனை அழகானதாய் இருக்குமா?!'

ராஸ்கல். என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் மனதில். அவனைச் சும்மா விடக்கூடாது. செல்லை அழுத்தினேன். யூஸ் நம்பர்.. அழைப்பு போனது. ஏதோ பாட்டு ஒலித்தது. உடனே அவன் குரல்.

"நினைச்சேன். நீ நிச்சயம் ஃபோன் பண்ணுவேன்னு.."

அந்த நிமிடம் ஏனோ என் குரல் கோபத்தில் பிசிறியது. என் இரட்டைக் குரலில் ஒன்றான பெண் வாய்ஸில் கேட்டேன்.

"என்ன இது விளையாட்டு"

அவன் சிரித்தான்.

"ஏன் பிடிக்கலியா. வேற என்ன விளையாடறதாம்"

என் கோபம் எல்லை மீறியதில் வாயடைத்துப் போனது.

"என்ன பேசலே.. ஓ.. யாராச்சும் வந்துட்டாங்களா.. ஓக்கேடா டார்லிங்.. அப்புறம் பேசலாம்"

துண்டித்து விட்டான். வீட்டுக்குள் நுழைந்ததும் புனிதா சொன்னாள்.

"வசந்திக்கு பத்து பைசா கனெக்ஷன் போட்டிருந்தேன். நீங்க எடுத்துகிட்டு போயிட்டீங்களா.. இதுல பேசினதுல அநியாயமா முப்பத்தஞ்சு ரூபா ஆயிடுச்சு"

எதுவும் சொல்லாமல் அவளுடைய செல்லை நீட்டினேன். வாங்கி வைத்து விட்டாள் அலட்சியமாக. காப்பி சூடாக இறங்கியது. சிறிது நேரம் பேப்பர் பார்த்து விட்டு குளிக்கப் போனேன். தலையைத் துவட்டிக் கொண்டு வெளியே வந்தபோது புனிதா கேட்டாள்.

"யாரது.. மூணு மெசேஜ் வந்துருக்கு"

"என்னவாம்"

"பேத்தல்.."

படுத்ததும் தூங்கிப் போகிறவன் அன்று புரண்டு கொண்டே இருப்பதைப் பார்த்து புனிதா கேட்டாள்.

"என்ன ஆச்சு உங்களுக்கு.. உடம்பு எதுவும் சரியில்லையா?"

"ப்ச்"

"டைஜின் வேணுமா"

ஜீரணிக்க முடியாத ஒரு எரிச்சலில் நான் இருப்பது வாஸ்தவம்தான். ஆனால் இதற்கு டைஜின் போதாது.

"நீ தூங்கு"

வெளியே ஹாலுக்கு வந்தேன். டிவி சானல் மாற்றிக் கொண்டே இருந்ததில் அதுவும் அலுத்தது. புனிதாவின் செல்லை எடுத்து இன்பாக்ஸ் பார்த்தேன். சமீபமாய் வந்திருந்த மெசேஜ் தவிர வேறெதுவும் இல்லை. அப்படியானால் இப்போதுதான் அனுப்பத் துவங்கி இருக்கிறானா.. அல்லது.. முன்பு அனுப்பியவை அழிக்கப்பட்டு விட்டதா. எப்படித் தெரிந்து கொள்வது? அவனையே கேட்டு விட்டால்..என் கைகள் என் சிந்தனையே இல்லாமல் மீண்டும் மெசேஜில் இருந்த எண்ணை அழைத்தது.

"ஏய்.. செல்லம்.. மணி இப்ப என்ன தெரியுமா? என்ன தூக்கம் வரலியா" சரியான அலட்டல் அவன் குரலில்.

"ம்.." என்றேன் கிறக்கமாய் என் பெண் குரலில்.

"என் மெசேஜ் எல்லாம் புடிச்சிருக்கா.."

"சகிக்கலே"

"ஏய்.. பொய்தானே சொல்றே.. இதுவரைக்கும் அம்பது மெசேஜ் அனுப்பியிருப்பேன்.. உனக்கு என் மேல பிரியம் வரணுமேன்னு எப்படி தவிச்சேன் தெரியுமா.."

"பொய்யி" என் குரல் கொஞ்சியது.

"பிராமிஸ்டா.. டேய்.. நீ என்கூட பேசணுமேன்னு.. ஹா.. என் கையை நானே கிள்ளிப் பார்த்துக்கணும்.."

எதிர்முனையில் அவன் சுத்தமாய் வழிவது புரிந்தது.

"டேய்.. செல்லம்.. உனக்கு என்ன வேணும்டா.. சொல்லு.. உன் அட்ரஸ் கூட எனக்குத் தெரியாதுடா.. பிளீஸ்.. உன்னை நேர்ல பார்க்கணும்போல இருக்குடா.. உன் வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்ரா.."

புலம்ப ஆரம்பித்தான். சட்டென்று துண்டித்து விட்டேன். அடுத்த நிமிடம் அவன் அழைப்பு. மறுபடியும் துண்டித்தேன்.இப்போது மெசெஜ்.

'ஓக்கே.. புரியுது. யாரோ வந்துட்டாங்க. நாளைக்கு பேசலாம். ஆனா எனக்குத் தூக்கம் போச்சுரா'

உனக்கில்லை. எனக்குத்தான். எனக்குள் சுடர் விட்டெறிய ஆரம்பித்தது.. வன்மம்!

(தொடரும்...)

May 26, 2010

உறுத்தல்

அலுவலக விலாசத்திற்கு வழக்கமாய் எனக்குக் கடிதங்கள் வருவதில்லை.

அட்டெண்டர் திடீரென ஒரு கடிதத்தை என் மேஜை மீது வீசி விட்டுப் போனதும் முதலில் புரியவில்லை.

"யாருக்கு லெட்டர்" என்றேன்.

"ஒங்களுக்குத்தான்" என்றார் போகிற போக்கில்.

மஞ்சள் கவரில் நீண்ட உறை. பார்த்தாலே உள்ளுக்குள் சற்று உதறும். பத்திரிக்கைகள் திருப்பி அனுப்பும் கதைகள் சாதாரணமாக அலுவலக விலாசத்திற்கு வருவதில்லை. அதெல்லாம் வீட்டோடு சரி. பின் இந்தக் கடிதம் யாரிடமிருந்து.. மாற்றலாகிப் போன நண்பன் எழுதியிருப்பானோ?

வீசிய வேகத்தில் கீழே விழுந்திருந்த கடிதத்தை எடுப்பதற்குள் மனசுக்குள் ஆயிரம் யோசனைகள். குனிந்து எடுத்தேன். பெறுநர் விலாசத்தில் என் பெயர்தான். அனுப்புனர் பெயர் மனோகர் என்றிருந்தது. கீழே வேலூர் சிறைச்சாலை என்ற வார்த்தை என்னை உலுக்கி விட்டது.

"யார் லெட்டர் போட்டிருக்காங்க"

பக்கத்திலிருந்து டைப்பிஸ்ட் கேட்டார்.

"ஃப்ரெண்ட் தான்" என்றேன் அவசரமாக.

கவரைப் பிரிப்பதற்குள் மனக்குரங்கு மறுபடி தாவி வித்தை காட்டியது.'ஏதாவது கதையைப் படிச்சுட்டு திட்டி எழுதியதா?'

கை நடுங்கப் பிரித்தேன்.

'மதிப்பிற்குரிய எழுத்தாளர் அய்யா அவர்களுக்கு வணக்கம்.' என்று ஆரம்பித்திருந்தது.

ஆயுள் தண்டனை பெற்ற கைதியாம். சிறைச்சாலை அவரைப் புடம் போட்டுக் கொண்டிருக்கிறதாம். ஆன்மீகப் புத்தகங்கள் படிக்கிறாராம். ஓம் முருகா என்று தினம் 108 தடவை எழுதுகிறாராம். ஜெயிலர் ஒரு தடவை கையில் வைத்திருந்த சிறுகதைத் தொகுப்பைப் பார்த்தாராம். படிக்கக் கேட்டிருக்கிறார்.

'உங்கள் கதைகள் எனக்கு இப்படித்தான் அறிமுகம் ஆனது. ஜ்வாலை கதையைப் படித்து விட்டு அன்றிரவு முழுக்க தூக்கம் வராமல் புரண்டேன். அடுத்த கதையினை என்னால் உடனே படிக்க முடியவில்லை. ஜ்வாலை அப்படியே என்னைப் புரட்டி போட்டு விட்டது. எழுத்துக்கு சக்தி உண்டு என்று இதற்கு முன்பு சிலர் சொன்னபோது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இப்போதோ எனக்கு அதன் வலிமை புரிகிறது.'

என்னதான் சொல்லுங்கள்.. பாராட்டு எந்த திசையிலிருந்து வந்தால்தான் என்ன.. அது தருகிற உற்சாகமே தனி.கடிதத்தை இப்படி முடித்திருந்தார்.

'உங்களுக்கு சிரமம் எதுவும் இல்லையென்றால் பதில் போடுங்கள்'

எனக்கும் பதில் எழுத ஆர்வம் இருந்தது. எழுதிவிட்டேன்.

'நன்றி. வேறு புத்தகங்கள் வேண்டுமானால் எழுதுங்கள். அனுப்பி வைக்கிறேன். விடுதலை ஆனதும் புது வாழ்வு அமைய நல்வாழ்த்துகள்'

விலாசம் எழுத முனைந்தபோது சட்டென்று அறிவு விழித்துக் கொண்டது. 'வீட்டு விலாசம் வேண்டாம். எதற்கு வீண் வம்பு'

பதிப்பகத்திற்குத்தான் எழுதி கேட்டிருக்கிறார். அவர்கள் என் அலுவலக விலாசம் கொடுத்திருக்கிறார்கள். அதுவே இருந்து விட்டுப் போகட்டும்.கடிதத்தை போஸ்ட் செய்து விட்டேன்.

பத்தே நாட்களில் பதில் வந்து விட்டது.

'நீங்கள் பதில் போடமாட்டீர்கள் என்று இங்கு ஒருவர் சொன்னார். ஆனால் எனக்குள் ஒரு நம்பிக்கை, உங்கள் பதில் வருமென்று. என் நம்பிக்கை வீண் போகவில்லை'

ஜானகிக்கு - என் மனைவி - கடிதங்களைக் காட்டினேன்.

'பாவம் அவனுக்கு ரெண்டு தண்டனையா'

'யார் யார் எப்படி இருப்பாங்கன்னு சொல்லவே முடியலே' என்றேன் பொதுவாக.

வீட்டு விலாசமே கொடுத்திருக்கலாம் என்று தோன்றிவிட்டது. மாதம் 3 கடிதங்களுக்கு குறையாமல் கடிதப் போக்குவரத்து. கிருஷ்ணன் பிறப்பு பண்டிகையன்று கைமுறுக்கு, சீடை பார்சல் அனுப்பினேன். நன்றி சொல்லி கடிதம் வந்தது. விஷயம் இத்தோடு முடியவில்லை. என்னிடம் அவருக்கு ஏதோ ஒரு நம்பிக்கை. அல்லது அவன் என்னைத் தொடர்பு கொண்டதே இந்த காரணத்திற்குத்தானோ? அவர் விரித்த புகழ் வலையில் சுலபமாய் விழுந்திருக்கிறேன்.

'அய்யா.. எனக்கு உங்களால் ஒரு உதவி ஆக வேண்டியிருக்கிறது. ஒரு விலாசம் தருகிறேன். உங்கள் பகுதிதான். மாதாமாதம் உங்கள் பெயருக்கு எம்.ஓ என்னிடமிருந்து வரும். அந்த விலாசத்தில் உள்ளவர்களிடம் சேர்க்க வேண்டும். செய்ய இயலுமா? உங்கள் பதில் பார்த்து எம்.ஓ. அனுப்புகிறேன். சிரமப்படுத்துவதற்கு மன்னிக்கவும்'

ஜானகியிடம் கடிதத்தைக் கொடுத்தேன்.

"புரியவே இல்லை. இவரே நேரடியாக அனுப்பிர வேண்டியதுதானே" என்றேன் குழப்பமாய்.

டிவி சீரியல் பார்க்கிற ஜோரில் பதில் சொன்னாள்.

"அவன் ஏதோ தப்பு பண்ணிட்டு உள்ளே போயிருக்கான். அவங்க குடும்பம் அவமானம் தாங்காம ஊரை மாத்தி இங்கே வந்திருக்காங்க போல. அவனுக்கு மனசாட்சி உறுத்துது. ஜெயில்ல சம்பாதிக்கிற பணத்தை குடும்பத்துக்கு அனுப்பி வைக்கிறான்னு நினைக்கிறேன். நேரடியா கொடுத்தா வாங்க மாட்டாங்க. உங்க மூலமா ஏதாச்சும் பொய் சொல்லி பணம் தர முயற்சி பண்ணறான்னு நினைக்கிறேன்"

அவள் சொன்னதில் லாஜிக் இருந்தது.ஆனாலும் நான் வெறும் சம்மதம் மட்டும் சொல்லி கடிதம் எழுதவில்லை. என் சந்தேகத்தையும் சேர்த்து எழுதினேன்.

'அய்யா.. என்னால் இப்போது எதுவும் சொல்ல முடியாது. என்மீது உங்களுக்கு முழு நம்பிக்கை இருக்குமானால் செய்து கொடுங்கள். நிச்சயமாக என்னால் உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது'

அடிமனதில் எல்லோருக்கும் எப்போதாவது ஒரு த்ரில் வேண்டியிருக்கிறது. எனக்கு இப்போது அந்த நேரம் போலும்.

'முழு சம்மதம்' என்று எழுதினேன்.மாதாமாதம் எம்.ஓ. வர ஆரம்பித்தது. முதல் மாதம் அவன் கொடுத்த விலாசத்திற்கு போனேன். விதவைத்தாய், 3 பெண்கள், கடைக்குட்டி பையன். குடும்பத்தலைவர் புகைப்படம் சந்தனப் பொட்டுடன் சுவரில் தொங்கியது.

"உங்க விலாசம் ஒருத்தர் கொடுத்தாரு.. உங்க குடும்பம் மேல அக்கரை உள்ள ஒருத்தர். நாங்க உதவி தேவைப்படற குடும்பத்திற்கு சேவை செய்யற அமைப்பு வச்சிருக்கோம். இது இனாம்னு நீங்க நினைக்க வேணாம். நல்ல நிலைமைக்கு வந்ததும் நீங்களும் இந்த அமைப்புக்கு பணம் தரலாம். அடுத்தவங்களுக்கு உதவலாம்." என்றேன்.

எல்லோரும் சேர்ந்து பேசிக் கொண்டார்கள். மூத்த பெண் வந்து தொகையை வாங்கிக் கொண்டாள். எனக்கு காப்பி கொடுத்து உபசரித்தார்கள். என் வீட்டு விலாசம் கொடுத்தேன்.

அரை மணி நேரம் பேசி விட்டுத் திரும்பியபோது மனசு நிறைந்திருந்தது.

முதலில் நான் ஏன் தயங்கினேன் என்று கூட வெட்கப்பட்டேன். நாம், நம் குடும்பம் என்று ஒரு வட்டத்தில் சுழல்கிறோம். அதை விட்டு விலகி வந்து பிறர் நலம் நினைக்கும்போது அதனால் வரும் மன நிறைவே தனி. மனோகர் என்னை ஒரு புது அனுபவத்திற்கு தயார் செய்திருக்கிறார்.

ஜானகிக்கும் அவர்களைப் பிடித்துப் போய் விட்டது.

'அண்ணி.. அண்ணி' என்று அவர்கள் உறவு கொண்டாடுவதை ரசிக்க ஆரம்பித்து விட்டாள்.

"சொல்லிட்டீங்களா.. மனோகர்தான் பணம் தரார்னு"

பதறி விட்டேன்.

"ஊஹூம். நீயும் சொல்லிராதே. மனோகர் அனுமதி தருகிறவரை வாயைத் திறக்கக்கூடாது"

எழுத்தாளனுக்கே உரிய அடுத்த அரிப்பும் வந்து விட்டது.'இதை அப்படியே ஒரு கதையாக்கினால் என்ன?'முதலில் முழு மனசாய் எழுதமுடியவில்லை. மனோகர் என்னைப் பற்றி தப்பாக நினைக்கலாம். அல்லது அவன் உதவி செய்கிற குடும்பத்திற்கு உண்மை தெரிந்து விடக் கூடும். எழுத வேண்டும் என்கிற என் ஆர்வத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை. எழுதி விட்டேன். ஜானகியிடம் படிக்கக் கொடுத்தேன்.

"என்னை மிரட்டிட்டு நீங்க கதையாவே எழுதிட்டீங்களா?"

"எனக்கு இந்த தீம் பிடிச்சுப் போச்சு.. அதான்"

"இப்ப என்ன செய்யப் போறீங்க"

"பத்திரிகைக்கு அனுப்ப முடியாது. மனோகர் தப்பா நினைச்சுக்குவார்"

அலுவலகத்தில் ஏதோ வேலைக்கு நடுவில் அந்த திடீர் யோசனை.'கதையை மனோகருக்கே அனுப்பினால் என்ன'அவ்வளவுதான் யோசனையை உடனே செயலாக்கி விட்டேன். வழக்கமாய் உடனே பதில் வந்து விடும். பதினைந்து நாட்களுக்குப் பின்னும் பதில் இல்லை. எனக்குள் சங்கடமானது. என்மேல் நம்பிக்கை வைத்திருந்த ஒருவரை ஏமாற்றி விட்டேனா.

மறுபடியும் அந்தக் கதையின் காப்பியை எடுத்துப் படித்துப் பார்த்தேன்.சந்தர்ப்பவசத்தால் ஜெயிலுக்குப் போன ஒருவன் தன் நண்பன் மூலமாக அநாதரவாக விட்டு வந்த தன் குடும்பத்திற்கு உதவுகிறான். உண்மை தெரிந்தபிறகு அவனை சபித்துக் கொண்டிருந்தவர்கள் விடுதலையாகி வரும் நாளுக்காகத் தவிப்போடு காத்திருக்கிறார்கள் என்று முடித்திருந்தேன்.

'சிறைப் பறவைகள்' என்று தலைப்பு.

'நெஜம்மா நாங்கதான் ஜெயில்ல இருக்கோம். அவனைப் பார்க்காத சோகத்தை தண்டனையா அனுபவிச்சுகிட்டு சிறைப் பறவைகளா காத்திருக்கோம்' என்று முடித்திருந்தேன்.

மீண்டும் படித்தபோது தவறு எதுவும் புலப்படவில்லை. இன்னொரு கடிதம் எழுதி விடலாமா என்று கூடத் தோன்றியது.20 வது நாள் பதில் வந்தது.

'அருமையான கற்பனை. ரசித்துப் படித்தேன். உடனே பதில் போடாததற்கு மன்னிக்கவும். எனக்கு உடல் நலம் சரியில்லாமல் போய் விட்டது. கடும் ஜுரம். இன்றுதான் முழுமையாகக் குணம் அடைந்தேன். உடனே உங்களுக்குப் பதில் எழுதி விட்டேன்'

ஆனால் அந்தக் கதையைப் பிரசுரத்திற்கு அனுப்பலாமா என்பதற்கு பதில் இல்லை. ஜானகியிடம் காட்டினேன்.

"வேணாம்னா சொல்லியிருப்பாரே" என்றாள்.

எனக்கு அதில் திருப்தி வரவில்லை. மனோகர் என் முடிவிற்கு விட்டுவிட்டதாகத் தோண்றியது. அவன் வெளிப்படையாக சம்மதம் தராதபோது எனக்கும் அனுப்ப மனம் வரவில்லை.

சந்தானம் - என் அலுவலக நண்பர் - கேட்டார்.

"நேற்று உங்களை ராம்நகர் பக்கம் பார்த்தேன். அங்கே யார் இருக்காங்க"

நெருங்கிய நண்பர்தான். சொல்லக்கூடாது என்று மறைத்து வைத்திருந்தது சட்டென்று வெளிப்பட்டு விட்டது. ரகசியம் காப்பதில் எனக்கு அத்தனை சாமர்த்தியம் இல்லைதான்.

"என்ன ஆச்சர்யம் பாருங்க. சொந்தக் குடும்பத்திற்கே இன்னொரு நபர் மூலம் உதவி செய்ய வேண்டியிருக்கு. இதுதான் விதி"

சொன்னபிறகு சத்தியம் வாங்கிக் கொண்டேன். 'யார்கிட்டேயும் சொல்லிராதீங்க'

இரண்டு நாட்கள் கழிந்தன.வீடு திரும்பியபோது மனோகர் உதவுகிற குடும்பத்து மூத்த பெண் என் வீட்டில் காத்திருந்தாள். ஜானகியிடமும் பதற்றம்.

"ஏதாச்சும் சாப்பிடக் கொடுத்தியா" என்றேன்.

"எதுவுமே வேணாம்னு சொல்லிட்டா. என்ன விஷயம்னு கேட்டா பதிலே இல்லை. நீங்க எப்ப வருவீங்கன்னு கேட்டு பேசாம உட்கார்ந்திருக்கா"

"என்னம்மா.. யாருக்காச்சும் உடம்பு சரியில்லையா"

"அம்மா உங்களை அழைச்சுகிட்டு வரச் சொன்னாங்க" என்றாள் என் முகம் பார்க்காமல்.

என்ன நிகழ்ந்தது.. திகைப்புடன் போனேன்.என்னை உட்காரக் கூடச் சொல்லவில்லை.

"இனிமேல நீங்க இங்கே வராதீங்க. நீங்க கொடுத்த இந்த மாசப் பணம் இதோ. இதுக்கு முன்னால நீங்க கொடுத்த பணத்தை எப்படியும் திருப்பிக் கொடுத்திருவோம்"

"என்னம்மா.. என்ன ஆச்சு"

"வேணாங்க. எங்களை விட்டுருங்க"

எதுவும் புரியாமல் வெளியே வந்தேன். தெரு முனையில் சந்தானத்தைப் பார்த்தேன்.

"ஒரு தப்பு நடந்து போச்சு" என்றார் தவிப்புடன்

"என்ன"

"நீங்க சொன்னதை அப்படியே என் வீட்டுக்காரியிடம் உளறிட்டேன். அவ சும்மா இல்லாம அந்த வீட்டுல போய் சொல்லிட்டா. அப்புறம்தான் தெரிஞ்சுது. அவங்களோட இந்த நிலைமைக்குக் காரணமே மனோகர்தான்னு."

குடும்பத்தலைவன் இறப்பிற்குக் காரணமாய் இருந்த மனோகர் பிராயச்சித்தமாய் இந்த உதவியைச் செய்திருக்கிறான். என் அஜாக்கிரதையால் தப்பு நடந்து விட்டது. மனோகருக்கு என்ன பதில் சொல்லப்போகிறேன்.

ஜானகியும் தன் பங்கிற்கு என்னைச் சாடினாள்.

"லேடீஸை குறை சொல்வீங்களே. இப்ப நீங்களே சொதப்பிட்டீங்க"

எழுதிவிட வேண்டியதுதான். மனோகர் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்க வேண்டியதுதான்.பதில் வருகிறவரை நிம்மதி இல்லை. ஒரு மாதம் கழித்து ஜெயிலரிடமிருந்து பதில் வந்தது.

"மனோகர் ஏற்கெனவே சொல்லி வைத்திருந்தார். அவர் உடல் நிலை மீண்டும் மோசமாகி ஹாஸ்பிடலில் சேர்த்திருந்தோம். உயிர் பிரிந்த கடைசி நிமிடம் வரை உங்கள் நினைவுதான் அவருக்கு. அடுத்த பிறவி என ஒன்று இருந்தால் நான் அவருடன் பிறக்க வேண்டும் என்று சொன்னார். அவர் உறவினர்கள் என்று யாரும் இல்லாததால் ஜெயில் நிர்வாகமே இறுதிக் கடன்களைச் செய்து விட்டது. உங்களுக்குத் தகவல் தெரியப்படுத்தவே இந்தக் கடிதம்."

என் கடிதம் மனோகர் பார்வைக்கே போகவில்லை. தபாலில் தவறி இருக்கிறது. கடைசி வரை என்னைப் பற்றி நல்ல நினைப்புடன் இருந்திருக்கிறார்.

ஒரு கைதிக்கு தன் தவறின் பிராயச் சித்தம் தெரிந்திருக்கிறது.

ஆனால் எனக்கு?

May 24, 2010

அவன் மட்டும் இருந்திருந்தால்..

கதவைத் தட்டினேன். அழைப்பு மணி பார்வையில் படவில்லை. தட்டியபிறகு தோன்றியது. இத்தனை வேகம் காட்டியிருக்கவேண்டாமென்று.

சுசீலாதான் வந்து கதவைத் திறந்தாள். என்னைப் பார்த்ததும் திகைப்பு.

"உள்ளே வரலாமா"

"வா..ங்க"

சுதாரித்துக் கொண்டு அழைத்தாள். உள்ளே புழுக்கம் இன்னும் அதிகமாய்த் தெரிந்தது.

"தினு ஸ்கூலுக்குப் போயிருக்கானா"

தலையசைத்தாள். கூடவே குழப்பமும். நான் ஏன் இந்த வேளையில் வந்திருக்கிறேன் என்று.

"எதுவும் சாப்பிடுகிறீர்களா"

அவளை நேராகப் பார்த்தேன்.

'நீ போ.. நீ போ' என்று கடைசியில் என்னைப் பிடித்துத் தள்ளி விட்டார்கள். எப்படி சொல்லப் போகிறேன்.

"கொஞ்சம் நாம இப்ப வெளியே போகணும். கிளம்பலாமா" என்றேன்.

"எ..துக்கு"

"நத்திங். வந்து.. சரவணன்..."

சுசீலாவுக்கு எதுவோ புரிந்திருக்க வேண்டும்.

"இருக்காரா.. இல்லே"

என் மெளனம் அவளை உலுக்கியது. அதைவிட அவளின் நிதானம் என்னை ஆச்சர்யப்படுத்தியது.

"போ..லாம்"

உள்ளுக்குள் விசும்ப ஆரம்பித்து விட்டாள்.

"தினுவையும் கூட்டிகிட்டு போயிரலாம்" என்றாள் காரில் ஏறும்போது.

ஹாஸ்பிடலில் போஸ்ட்மார்டம் முடிந்து இறுதிச் சடங்குகளும் முடிய இரவு எட்டு மணியாகிவிட்டது.

என் மனைவியுடன் கோபியின் மனைவியும் சேர்ந்து சுசீலாவுக்குத் துணையாக இருந்தார்கள்.

நாங்கள் மூவரும்தான் ரொம்ப வருஷமாய் சிநேகிதம். எங்களில் சரவணன் மட்டுமே வித்தியாசப்பட்டவன். பழக்கங்களுக்கு அடிமையாகிப் போனவன்.

"நீங்களாச்சும் அவருக்கு புத்தி சொல்லக்கூடாதா?" என்றாள் என் மனைவி ஒருமுறை.

"சொல்லாமலா.. நோ அட்வைஸ் பிசினஸ். அப்புறம் உங்க நட்பே வேணாம்னு போயிருவேன்னான். வேற வழி.. பேசாம விட்டுட்டோம்"

"எனக்கு என்னவோ சரின்னு படலீங்க. வீட்டுக்கு பணமே தரலியாம். பாவம். அவங்க ஒரு தடவை ரொம்ப அழுதுட்டாங்க."

"என்னை என்ன பண்ணச் சொல்றே.. அவன் புத்திமதி கேட்கிற ஆள் இல்லை. மீறி சொன்னா.. இப்ப பேசறதும் போயிரும். அதனால திருந்தப் போறதில்லே. அட்லீஸ்ட் இப்ப எங்க மேல ஒரு மரியாதையாவது வச்சிருக்கான்"

சுசீலாவுக்கு எங்கள் அலுவலகத்திலேயே வேலை கிடைத்துவிட்டது. நானும் கோபியும் மிகவும் முயற்சித்தோம். பலன் கிடைத்தது.அவ்வப்போது அவளைப்போய் பார்த்துவிட்டு வருவோம். தினு நன்றாகப் படிக்கிறான் என்பது தெரிந்து சந்தோஷப்பட்டோம்.

அன்றும் போயிருந்தோம்.

"தினு.. பிராகிரஸ் ரிப்போர்ட்டைக் காட்டு.. அங்கிள்கிட்டே"

முதல் ரேங்க்!

கையைப் பற்றி குலுக்கினேன். லேசாய் வெட்கப்பட்டான். அப்படியே சரவணன் ஜாடை.எனக்குள் பெருமூச்சு.

"ஹூம்.. அவன் இருந்தா.. சந்தோஷப்பட்டிருப்பான்"

சுசீலாவிடமிருந்து நிதானமாய் பதில் வந்தது.

"இல்லீங்க. இவனும் அவரைப் பார்த்து கெட்டுப் போயிருப்பான். இப்ப அந்த அதிர்ச்சில பொறுப்பு வந்து என் பேச்சை முழுசாக் கேட்கறான். நிச்சயமா இவன் முன்னுக்கு வருவான். எங்களுக்கும் இழந்து போன சந்தோஷம் கிடைச்சுரும்."

சில சமயங்களில் யதார்த்தம் விடுகிற அறை பளீரென்றுதான் விழுகிறது!

May 22, 2010

ஒரே ஒரு கவிதை

ஒரே ஒரு கவிதை
எழுதியதும்

எல்லோரும் பிரமிக்கும்
அந்த ஒரே ஒரு கவிதையை
எழுதியதும்

நிறுத்திக் கொண்டு விடலாம்

கவிதை எழுதுவதையும்..
நினைப்புகளையும்..

May 19, 2010

மயிலிறகு ஒத்தடங்கள்

வித்யாவைப் பார்க்கும்வரை எனக்குக் காதலில் நம்பிக்கை இல்லை.
எங்கள் அலுவலகத்துக்குப் புதிதாக ஒருவர் மாற்றலாகி வருகிறார் என்று தகவல் வந்ததும் என்னைத் தவிர மற்றவர்கள் பரபரப்பானார்கள்.
"யார் வராங்களாம்"
"ஒருத்தருக்கும் ட்ரான்ஸ்பரே கிடையாதுன்னு சொல்லிகிட்டிருந்தாங்க.. ஹெட் ஆபீஸ்ல.. இப்ப எப்படி?"
"அட அத விடுப்பா.. யாருன்னு சொல்லுங்களேன்"
"அதான் நம்மள மேனேஜ்மெண்ட்ல மதிக்கறதே இல்லை.. உணர்ச்சியே இல்லை ஒருத்தனுக்கும்"
"லேடி ஸ்டாஃப்.. பேரு வித்யாவாம்"
"மேரீடா.. அன்மேரீடா?"
"ரொம்ப முக்கியம்.. உனக்குக் கல்யாணமாகி ரெண்டு பொண்ணு இருக்கு.. மறந்துராதே"
கேட்டவர் வழிந்தார்.
"அதுக்கில்லே.. நம்ம ஆபீஸ் ஒரே பாலைவனமா இருக்கா.. அதான் "
"ஏன்.. எங்களைப் பார்த்தா மனுஷியா தெரியலியா" என்றார் ஒரு பெண்மணி.
"அதனாலதானே அவரு ஃபீல் பண்றாரு.." என்றார் ஒருவர் இடக்கு மடக்காக.
இவர்கள் உரையாடல் என்னைப் பாதிக்கவில்லை.
என் கையிலிருந்த 'மிக அவசரம்' கோப்பை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தேன்.
"பாரேன்.. நம்ம திவாகர் ஸார் மட்டும் அசையவே இல்லை.. உலகமே அழியப் போவுதுன்னு மெசேஜ் வந்தாலும் ஃபைலை முடிச்சுட்டுத்தான் வெளியே ஓடுவார்"
எல்லோரும் சிரிக்க நான் என்னவென்று நிமிர்ந்து பார்த்தேன்.
"உங்களுக்கு அஸிஸ்ட் பண்ண ஒரு லேடி ஸ்டாஃப் வராங்க.. தெரியுமா?"
சொன்னவர் கண்களில் கேலி மின்னியது.
"அப்படியா"
"இனிமே நீங்க ரிலாக்ஸ் ஆகலாம்"
நான் மீண்டும் ஃபைல் பார்க்க ஆரம்பிக்க கேலி பேசியவர் அலுத்துப்போய் போய் விட்டார்.
அவர் கேலியாகச் சொன்னது என்னவோ பலித்தே விட்டது. வித்யா- புதிதாக வந்த பெண்மணியை எனக்குத்தான் உதவியாளராக நியமித்தார்கள். வித்யாவின் கற்றுக் கொள்ளும் ஆற்றல் என்னைத் திகைக்க வைத்து விட்டது. படு ஷார்ப்.
வாய் விட்டே சொல்லி விட்டேன்.
"இனிமே நான் தைரியமா லீவுல போலாம்"
சிரித்தாள். அவள் பர்சனலாக எதுவும் பேசுவதில்லை. இதற்குமுன் வேலை பார்த்த ஆபீஸ், ஊர், பிடித்த எழுத்தாளர், படித்த புத்தகங்கள் இப்படி பொதுவாய் எல்லாம் பேசி இருக்கிறோம்.
தற்செயலாக ஒரு தரம் சொன்னாள்.
'வயசான அம்மா.. வீட்டுக்கு நேரத்துக்குப் போயிட்டா நல்லது. பக்கத்து வீட்டுல சொல்லி வச்சிருக்கேன். இருந்தாலும் அவங்களை ரொம்ப தொந்திரவு செய்ய முடியாது. நல்லா இருக்காது.'
நிச்சயம் வயது முப்பது இருக்கும். ஏன் மணமாகவில்லை என்று புரியவில்லை. அந்தக் கேள்வியை 35 வயது பேச்சிலர் கேட்பது சரியாக இருக்காது என்று தோன்றியது.
அன்று மழை பலமாகப் பிடித்துக் கொண்டு விட்டது. சோதனையாக ஹெட் ஆபீஸிலிருந்து கேட்டிருந்த தகவல் தயார் ஆகவே மணி ஏழு ஆகிவிட்டது. வித்யா பக்கத்து வீட்டுக்குத் தகவல் சொல்லி விட்டதால் அத்தனை பரபரப்பு காட்டவில்லை. எனக்குத்தான் உள்ளூர உறுத்தல். சக அலுவலர் தன் நிலைமையை ஏற்கெனவே சொல்லி இருக்கும்போது அவர்களை நிர்ப்பந்தப்படுத்துவது முறையல்ல என்று நினைப்பவன். அதனால் மன்னிப்பு கேட்கும் குரலில் சொல்லிவிட்டேன்.
"என்னைக்கோ ஒரு நாள்தானே.. ஏன் ஃபீல் பண்றீங்க" என்றாள் வித்யா.
"அப்படி இல்லீங்க.. இந்த உலகத்துல அடுத்தவங்களைப் புரிஞ்சுக்கறவங்களே கம்மி.. அதனாலதான் நிறைய பேருக்கு மன அழுத்தம்.. வியாதி எல்லாம். மறைமுகமா அடிமனசுக்குள்ளே ஒருவித எதிர்ப்பு அலை ஓடிகிட்டே இருக்கும்.. உள்ளே ஒண்ணு.. வெளியே ஒண்ணுன்னு இதனாலதான் பாதிப் பேர் மாறிடறாங்க. ஆனாலும் யாராவது நம்மள புரிஞ்சுப்பாங்களான்னு ஒரு எதிர்பார்ப்பு, ஏக்கமும் இருக்கத்தான் செய்யுது. நம்ம மேல அக்கறை இருக்கற நபரைக் கண்டு பிடிச்சுட்டா மனசுக்கு மயிலிறகு ஒத்தடம் கிடைச்ச எபக்ட்"
என் குரலின் அடி ஆழத்திலிருந்து வார்த்தைகள் வந்தது எனக்கே திகைப்பாய் இருந்தது. வித்யா பதில் சொல்லவில்லை .
நான் ஏன் அதிகப்படியாகப் பேசி விட்டேன் என்று மனசுக்குள் திட்டிக் கொண்டேன் என்னையே.
வேலையை முடித்து விட்டோம். கிளம்பவேண்டியதுதான். மழையும் குறைந்திருந்தது. ஆட்டோ பிடித்துப் போய் விடுவதாக வித்யா சொன்னாள். வெளியே வந்து விட்டோம்.
"நீங்க எந்த பக்கம்?"
சொன்னாள். அட.. நான் இருக்கும் பகுதிக்குப் போகும் வழிதான்.
"உங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லேன்னா.. வாங்க.. இறக்கி விட்டுட்டு போயிடறேன்.. நானும் ஆட்டோலதான் போறேன்" என்றேன்.
அந்த நிமிடம் வித்யா நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.
"பர்சனலா உங்களை ஒண்ணு கேட்கலாமா.."
"எ..ன்ன"
"நீங்க ஏன் கல்யாணம் செஞ்சுக்கல இதுவரை.."
"யாரும் என்னைக் கேட்கலை" என்றேன் பாதி கேலியாய், பாதி உண்மையாய்.
ஆட்டோவில் ஏறி அமர்ந்ததும் வித்யா சொன்னாள்.
"எங்கம்மாவுக்கு உங்களைப் பார்க்கணுமாம்.. வீட்டுக்கு வந்துட்டு போறீங்களா.. உங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லேன்னா.."
என் வார்த்தைகளை அதே தொனியில் சொன்னபோது அவள் கண்களில் குறும்பும் என் மீதான காதலும் மின்னியது மழை விட்டு விடாத வானத்தைப் போலவே.
(தேவியில் பிரசுரமானது)

May 15, 2010

காதலாகி...


இரு புறமும்

யூகங்களை

விதைத்துக் கொண்டே

போனார்கள்..

பின் முளைத்தெழுந்த

விருட்சங்களின் நிழலில்

ஒதுங்கியபோதுதான்

நாம் கண்டு பிடித்தோம்

நமக்குள் ஒளிந்திருந்த

நம் காதலை!


May 11, 2010

சின்னப்பையன்


நான் பார்த்தபோது

கடவுள் ஒரு சின்னப்பையனுடன்

விளையாடிக் கொண்டிருந்தார் ..

அரை டவுசரில்

அவரை எனக்கு

அடையாளம் தெரியவில்லை..

இன்னொரு பையன்

அவரைத் தனக்கு சமமாக நினைத்து

மழை நீரை காலால்

வீசிக் கொண்டிருந்தான்.

விளையாட்டு முடிந்து

திரும்பியபோது

கேட்டேன் ..

'என்ன இது விளையாட்டு?'

கடவுள் புன்னகைத்தார்..

'எவ்வித நிபந்தனைகள்..

பிரார்த்தனைகள் அற்ற

சூழல் எனக்கும்

அவ்வப்போது

வேண்டியிருக்கிறது.. '

என் கைவசம் இருந்த

வேண்டுதலை

அவர் அறியாமல்

கசக்கிப் போட்டு

கை குலுக்கி விட்டு

திரும்பினேன் !

May 08, 2010

நான் வெளியே வரணும்..

எனக்கு இன்னும்
அனுமதி இல்லை..
வெளியுலகம் குறித்த
தகவல்கள்
அத்தனை திருப்தியாய் இல்லை..
என்றாவது ஒரு நாள்
நான்
தெருவில் காலடி
வைத்தே ஆகவேண்டும்..
ஏதேனும் ஒரு முகம் ...
ஒரு வார்த்தை ..
ஒரு நம்பிக்கை ..
என்னுள் விதைக்கப் பட்டால்
திரைச்சீலை மறைவில் நின்று
எட்டிப் பார்க்கும் தயக்கம் விட்டு
உங்களுடன் கை கோர்ப்பேன்..
யார் சொல்லப் போகிறீர்கள்
உங்களில் ஒருவர்..
அல்லது அதிகமான நபர்கள்..
'வா வெளியே ..
வந்தால்..
ஒன்று எங்களை சந்திப்பாய்..
அல்லது
உன்னால் தெருவிற்கு
ஒரு நம்பிக்கை வெளிச்சம் கிட்டும் என்று..'
சொல்லுங்கள் சீக்கிரம்..
என் பெற்றோர் என்னை வெளியே
அனுமதிக்க !

May 07, 2010

வேஷம்


ஒப்பனைகளை மீறி
சுயம் வெளிப்பட்டு
விடுகிறது..
என்ன முயன்றாலும்
மறக்க முடிவதில்லை
சில இழப்புகளை ..
கவலைகளை புறந்தள்ளி
போராடும் குணம்
எல்லோருக்குமா
வாய்த்துவிட்டது?
ஆனாலும்
இப்போதும் தொடர்கிறது
தினசரி ஒப்பனைகளும்
உள்ளே புதைத்திருக்கும்
ஆசாபாசங்களும் ..

May 05, 2010

ஆட்டக்காரன்


வாழ்க்கை ஒரு சவால்..

அல்லது பந்தயம்..

அல்லது விளையாட்டு..

நேருக்கு நேர்

மோதும்

வீரர்களைத்தான்

அது கொண்டாடுகிறது..

விலகிப் போகும் மனிதரிடம்

அது சுவாரசியம்

காட்டுவதில்லை..

தோற்றுப் போகும் போது

இன்னொரு சான்சும்

தருகிறது..

கடைசி வரை

விளையாடிக் கொண்டிருப்பவர்கள்

கை நிறைய மெடல்கள்..

அல்லது பாராட்டு பத்திரங்கள்..

குறைந்த பட்சம் கை குலுக்கல்கள் உடன்

திரும்புகிறார்கள்..

எல்லைகளற்ற மைதானமாய்

வாழ்க்கை..

அடையாளங்களுக்குள் அகப்படாமல்

ஆடலாம் நமக்கான ஆட்டத்தை..

ஜெயித்தாலும் தோற்றாலும்

ஆட்டக்காரன் அழைக்கப்படுவது

இறுதி வரை

"ஆட்டக்காரன்" என்கிற பெயரில்தான்!

May 03, 2010

நன்றி நன்றி நன்றி !



விளையாட்டாய்த்தான் ஆரம்பித்தேன் ..
இதோ 100 வது பதிவு!
எனது கிறுக்கல்களை ரசித்து என்னை பின் தொடரும் 70 அன்புள்ளங்களுக்கும் மனப்பூர்வமான
நன்றி!
எனது எல்லாப் பதிவுகளையும் படித்து ... பின்னூட்டமிட்ட .. அனைத்து நண்பர்களுக்கும் நன்றி !
சிலர் வலைத்தளங்களில் என் வலைத்தள முகவரியும் முகப்பில் வைத்திருக்கிறார்கள்.. என்னவென்று சொல்ல .. அந்த ஒற்றை சொல்லை தவிர..
தனக்குக் கிடைத்த பாராட்டை என்னோடும் பகிர்ந்த "பத்மா" அவர்களுக்கு விசேஷ நன்றி.
மிகச் சிறந்த படைப்பாளிகள் எனக்கு அறிமுகமானார்கள். வாசிப்பு ருசியை பரிபூர்ணமாய் அனுபவிக்கிறேன். திகட்டாத எழுத்துக்களுக்கு சொந்தக்காரர்களை கை குலுக்கி மகிழ்ந்த எனக்கு என் எழுத்துத் திறமையும்(!) சற்றே மெருகேற வாய்ப்பு கிட்டியது.
இந்த எழுத்து சாகரத்தில் என்னை முதன் முதலில் அமிழ்த்திய.. எனக்கு ஆலோசனைகள், தெளிவூட்டல்கள் தந்த ரேகா ராகவன், கே.பி.ஜனா ஆகியோரை சொல்லாமல் என் நன்றி பூர்த்தி ஆகாது.

வாழ்க்கை புரிதலுக்கானது

தவறாகவேனும்..

பின்பு சரிபார்த்தல் நிகழக் கூடும்..

தெருவில் காலடி வைக்காமல் எந்தப் பயணமும் பூர்த்தி ஆவதில்லை..

நீரில் கால் நனைக்காமல் நீச்சல் இல்லை..

வறண்ட பூமிக்குள்ளும்

அடி ஆழத்தில் நீரோட்டம் ஓடுகிறது..

மனிதரின் இதயங்களிலும் நேசம்..

ப்ரியம் சொல்லாமல் எதுவும் இல்லை..

எந்தப் படைப்பும் பிரியத்திற்கு பிறகே..

ஈரமற்ற எழுத்தை அக்னியும் நிராகரிக்கும்..

முதலில் கை குலுக்குவோம்..

பிறகு பேசிக் கொள்ளலாம்..

பேதங்களைப் பற்றி..

ஏனென்றால் கை குலுக்கியதும்

நாம் சமமாகி விடுகிறோம்..

எப்போதும் ப்ரியங்களுடன்..



ரிஷபன்.





குரல்கள்



அந்தக் கேள்வியை நான் கேட்டிருக்கக் கூடாது.

அது கேள்வி அல்ல. விமர்சனம். ஆனால் கேள்வியின் உருவில்.

'உன்னால் பேசாமல் இருக்க முடியாதாக்கா...'

வெளிப்பட்ட மறு நிமிடம் எனக்குள் நிகழ்ந்த மறு பரிசீலனையில் விடுப்பட்ட வார்த்தைகளைத் திரும்ப உள்வாங்கிக் கொள்ளும் சமர்த்தின்றி தளர்ந்திருந்தேன்.

அக்காவின் முகம் பார்க்கும் துணிவில்லை. மனசு அமைதி இழந்து விட்டது. கண்ணாடி விரிசலை இனி எதை வைத்து ஒட்டுவது.

அக்கா பூத்தொடுத்துக் கொண்டிருந்தாள். வாய்தான் ஓயாமல் பேசியது. அதுவும் என் எரிச்சலால் மூடிக் கொண்டது. கைகள் பரபரவென்று இயங்கி ஒரு புறம் நார் மேலெழும்பி பூக்கண்ணிகளால் மறந்து மறுபுறம் சரமாய் இறங்கிக் கொண்டிருந்தது.வாசலில் படி மூன்று ரூபாய் என்று சைக்கிளில் விற்று வருபவரிடம் வாங்கியது.

'அம்மா.. பூ.. பூவேய்..'

வாசனையற்ற உரத்தகுரல். கூடையை நெருங்க கமழும் மணம் குரலில் எப்படித் தொலையும்?

'அக்கா.. அவன் பூ விக்கவே லாயக்கில்ல' என்று அடக்க மாட்டாமல் சொல்லியிருக்கிறேன்.

மடித்துக் கட்டிய கைலி. திணித்த சட்டைப்பை.. படியாத தலை. கழுத்தில் கர்ச்சீப் கட்டி பூ.. பூவேய்..சை. என்ன இரக்கமற்ற குரல்.

மல்லி.. முல்லை.. கனகாம்பரம்.. என்று கூடையில் ஈரத்துணியால் பிரிக்கப்பட்ட பூக்குவியல்.

'எதுக்கு தெனம் போல உதிரிப்பூ வாங்கணும்'

என் சந்தேகத்திற்கு அக்காதான் பதில் தருவாள்.

'தொடுத்த பூ விலை பார்த்தியா.. அந்த காசுக்கு மூணு பங்கு வாங்கி தொடுத்தா கிடைச்சுரும்'

ஊஹூம். டூந்தக் கணக்கு மட்டுமில்லை. வேறேதோ.. எதிரில் தாம்பாளத்தில் பூக்குவியல். முன்னே வைத்து அக்கா ஈரப்படுத்திய நாரில் அழகாய் முடிச்சிட்டுக் கொண்டு அரை மணி நேரத்தைக் கழிக்கும் அழகே தனி. தொடுத்து எழுந்து போன பின்பும் வாசம் காட்டும் தரை.

இன்று ஏன் கோபப்பட்டேன்.. கையில் இருந்த புத்தகமா.. அதன் வரிகளில் ஈர்க்கப்பட்டு இடையூறாய் உணர்ந்த அக்காவின் குரலா.. அல்லது என் செவிக்குள் ஒரு வாரமாய் கேட்கிற குரல்களா.. குரல்.. சே..

'ஸாரிக்கா'

ஒரு வார்த்தை போதும். பார்வையில் வந்துவிட்ட வருத்தம் வார்த்தையில் விழாமல் ஜாலம் காட்டியது.

எதுக்கு சொல்லணும்? அக்காவே ஏன் தன் தப்பை உணரக்கூடாது? என் படிப்புக்கு இடையூறாய் இனி வரமாட்டேன் என்று ஏன் சொல்லக் கூடாது.. வீம்பும் அன்பும் மனசுள் மோதிக் கொண்டிருக்க, புத்தகம் தன் சுவாரசியம் இழந்து மனம் வாசிப்பில் லயிக்கத் தவறியது.

'விளக்கு ஏத்தலியா”

அம்மாவின் குரல் கேட்டது. மூன்று மாதமாய் படுக்கை. ஒரு கை.. ஒரு கால் சொன்ன பேச்சு கேடகத் தவறி ஒத்துழையாமை. விளக்கு ஏற்றுகிற நேரம் லேசாய்க் கண்ணீர் வடியும். 'இப்படி படுக்க போட்டுட்டியே' அக்கா ஓடிப் போய் ஒற்றி எடுப்பாள். விபூதி வைப்பாள்.

“கொஞ்சந்தான் இருக்கு.. போறேன்”

அக்காவின் குரலில் பிசிறு இருந்ததை அம்மா படித்து விட்டாள்.

“ஏண்டி அழுதியா”

“இல்லியே”

“குரல் ஒரு மாதிரி இருக்கு”

“இல்லேங்கிறேனே”

என் சீற்றம் ஏன் அக்காவை இந்த அளவு பாதித்து விட்டது. அல்லது பெண்ணுக்கே உரிய சட்டென்று உணர்ச்சிவசப்படும் இயல்பா.. சொடுக்கினால் கண்ணீரா..என்ன ஆனாலும் சரி.. இன்று நானாக சமாதானம் பேசப் போவதில்லை. என்னுள் வைராக்கியம் பெரிதாய் படர்ந்து கொண்டது.

அக்கா எழுந்து போனாள். தொடுக்க இயலாத பூக்கள் சிதறிக் கிடந்தன. விரல் நீள மிச்ச நாரும்.

பூஜை விளக்கை அக்கா ஏற்றி வைத்து ஊதுபத்தி கொளுத்தியதும் பூ வாசனையுடன் அந்த மணமும் இணைந்தது.

“சாதம் வச்சிரு”

அம்மாவுக்கு மெல்ல மெல்ல உடல் நலம் திரும்புவதை உணர்த்தும் அதிகாரக் குரல். இன்னமும் முழு வீச்சில் வராவிட்டாலும் சொல்லுவது புரிகிற தொனி.

இன்று ஏன் குரல்களைப் பற்றிய ஆராய்ச்சி என்று எனக்குள்ளும் வியப்பு. ஏன் அம்மா அனத்துகிறாள்.. அக்காவே அடுத்த வேலையாய் சமையலில்தான் இறங்கப் போகிறாள்..

எழுந்து வெளியில் வந்தேன்.

கோவில் கோபுரத்தில் ஸ்பீக்கர் பொருத்தி தேவாரப் பாடல் கேட்டது. அந்தி நேர பூஜை. வாகன இரைச்சல்கள் மீறி தெய்வப் பண்.

“இவர் என்ன சொன்னாலும் கேட்கலே.. பின்னால நாம் கஷ்டப் படறப்ப.. யார் உதவிக்கு வருவாங்க”

யாரோ இரு பெண்மணிகள் பேசிக் கொண்டு போனார்கள். மறுபடி குரல்கள். எனக்குள் விபரீதமாய் யோசனை. என் விரல் சொடுக்கில் உலகமே ஸ்தம்பித்துப் போக வேண்டும். பறவைகள், காற்று, கடல் அலை, எந்த சப்தமும் இன்றி.. அமைதி.. பரிபூர்ண அமைதி.. நான் அசைந்தால்.. அசைய.. அகிலம் எல்லாமே..

என்னையும் மீறி விரலைச் சொடுக்கி வினோதமாய் நின்றிருக்க வேண்டும். வேகம் வேகமாய்.. எதுவும் நிகழாமல்.. நான் எதிர்பார்த்த மாதிரி.

அக்காவின் கைகள் என்மேல் படிந்து இறுக்கிக் கட்டிக் கொண்டதும் விழிப்பு வந்து விட்டது.

“கேசவா.. என்னடா”

அக்காவின் குரலில் வசீகரம் இல்லை. சற்றே கீச்சிட்டது. ஆனால் அந்த நிமிஷம் அதில் கலந்திருந்த நூறு சதவீத பாசம் வேறெந்த குரலிலும் கிட்டாதது.அழுதேன்.. அவள் அணைப்பில் சுழன்று.

“அழாதே.. இந்த பரிட்சை போனா என்ன.. அடுத்த தடவை.. தைரியமா இரு.. தளர விட்டுராதே”

பேசப் பேச என்னுள் குரல்கள் பற்றிய அருவருப்பு தொலைந்து நம்பிக்கையின் கனம் கூடிக் கொண்டே போனது.



May 02, 2010

இரு கவிதைகள்

மேகங்கள்

என் வீட்டை கடந்து தான்

போகின்றன..

பொழிவது எப்போதாவது

என்றாகி விட்டது..

இருந்தாலும்

வானம் பார்க்கும் ஆவலும்

மேகம் தொடும் ஆசையும்

இப்போதும் மாறாமல்

மனசுக்குள்..





வீட்டு வாசலில்

நாலைந்து ஆடுகள் கூடி

இடைவிடாமல்

'மே .. மே ..' சத்தம்..

ஒன்று கேட்க

இன்னொன்றின் பதில் போல ..

தூக்கம் தொலைந்த

எதிர்வீட்டுக் காரன்

வெளியே வந்து விரட்டி

விட்டான்..

பாதி சம்பாஷணையில்

அவைகள் கிளம்பிப் போனதும்

மீதி என்னவாக இருக்கும் ?

இதுவே இப்போது

என் மண்டை குடைச்சல்..