November 09, 2013

எப்பவாச்சும் ஒரு ரவுண்ட்




உலகத்திலேயே ரொம்ப சுவாரசியமான இடம் எது தெரியுமா.. பீச்.. அதாங்க கடற்கரை. பலதரப்பட்ட மனிதர்கள் வந்து போகிற இடம். எதிரே கடல். அலைகள் வந்து கரையைத் தொட்டுப் போகும். என் நண்பன் நாகராஜ் ஒரு கவிதை அனுப்பியிருந்தான். கடலே நீ எத்தனை முறை அலையாக வந்து என் காலில் வந்து விழுந்தாலும் உன்னை மன்னிக்க மாட்டேன். தலைப்பு என்ன தெரியுமா.. சுனாமியில் பெற்றவரை இழந்த மகன்.
கடல் இல்லாத ஊர்களில் சுவாரசியத்துக்கு என் சாய்ஸ் என்ன தெரியுமா.. பஸ் ஸ்டாண்ட். வெளியூர்ல இருந்து வரவங்க.. வெளியூருக்குப் போகிறவங்கன்னு அந்த இடமே கலகலப்பா இருக்கும். எத்தனை விதமான சத்தங்கள்.. ஹாரன் ஒலியிலிருந்து மனிதர்கள் பேசுகிற சத்தம் வரை.
இங்கிருந்துதான் கிளம்புது நான் ஏறிக் கொண்ட பஸ்ஸூம். அப்பவே வந்து உட்கார்ந்தாச்சு. ஒரு ட்ரிப் அடிச்சுட்டு கொண்டு வந்து நிறுத்திட்டு ஓட்டுனரும் நடத்துனரும் இறங்கி தேனீர் குடிக்கப் போயிட்டாங்க.
முதல் ஆளா நான் மட்டும் வந்தேன். வெளியே கூட கொஞ்சம் காற்று வீசுது. அது ஏன்னு புரியல. பஸ்ஸுக்குள்ள வெப்ப அலை அடிக்குது. எப்படித்தான் ஓட்டுனரும் நடத்துனரும் காக்கி உடையோட பொறுமையா பஸ்ஸுக்குள்ள இருக்காங்களோ..
எனக்குப் பிறகு ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சாங்க. நான் ஜன்னல் பக்கம் உட்கார்ந்து இருந்தேன். என்னைத் தவிர்த்துட்டு காலியா இருக்கற மத்த சீட்டுல உட்கார்ந்தாங்க. கொஞ்சம் கொஞ்சமா பஸ் ஃபுல் ஆக ஆரம்பிச்சது. கணவன் மனைவி ஜோடியா வந்தாங்க. சுத்திமுத்தி பார்த்துட்டு அப்புறம் எங்கிட்டே வந்தாங்க. பின் சீட்டுல ஒரு இருக்கை காலியா இருக்கு.. நீங்க அங்கே போறீங்களான்னு கேட்டாரு. எனக்கு என்ன செய்யறதுன்னு புரியல. அது ஏங்க குறி பார்த்து நம்மளையே எல்லோரும் தேடி வராங்க.. சீட் மாத்திக்க.
ரெயில்ல போனாலும் இப்படித்தான். லோயர் பர்த்ல இருப்பேன். தம்பி வயசானவன் நானு.. அப்பர் பர்த் கொடுத்துட்டாங்க நீங்க மேல படுக்கறீங்களாம்பாங்க. முடியாதுன்னு சொன்னா விரோதி போல பார்ப்பாங்க. இப்பவும் அதே போலத்தான் எனக்கு விருப்பம் இல்ல.. ஜன்னல் சீட்டை விடறதுக்கு வேடிக்கை பார்க்கத்தான் காலியா இருக்கற பஸ்ஸுல ஏறினேன். அதுவும் ரெண்டு பஸ்ஸை விட்டுட்டு. ஏதோ அவரோட சொத்தைக் கொள்ளையடிச்ச மாதிரி என்னை முறைச்சுட்டு பின்னால போனாங்க.
டிரைவர் இன்னும் வரல. கண்டக்டர் மட்டும் வந்தாச்சு. நாம் கொடுக்கற ரூபா நோட்டுக்களை குறுக்கால மடிச்சு அவரோட விரலிடுக்குல சொருகிக்கிற அழகை ரசிச்சுகிட்டே வெளியேயும் வேடிக்கை பார்த்தேன். கூட்டம் இப்போ அதிகமாக ஆரம்பிச்சது.

"உள்ளே நகருங்க சார்.. ஏறினவங்க எல்லாரும் படியிலேயே நின்னுகிட்டா மத்தவங்க எப்படி ஏர்றது"
நடத்துனரின் குரலில் தெரிந்த கோபம் யாரையும் பாதித்த மாதிரி தெரியவில்லை. அவரவர் நின்ற இடத்திலேயே லேசாக அசைந்து கொடுத்துக் கொண்டார்கள்.
"டிக்கட்.. டிக்கட்"
"சில்லறையாக் கொடுங்க.. எல்லாரும் பத்து ரூபாயை நீட்டினா?"
எனக்கு கடைசி ஸ்டாப். ஆறு ரூபாய் சில்லறையாய்க் கொடுத்து டிக்கட் வாங்கினேன். நடத்துனரிடம் அதற்காக சர்டிபிகேட் கிடைக்கவில்லை. ஒரு புன்முறுவல் கூட கிடையாது.
பத்துரூபாய் கொடுத்தவர் டிக்கட் வாங்கிக் கொண்டு மீதிக்கு கை நீட்டினார்.
"ஒரு ரூபாய் கொடுத்துட்டு அஞ்சு ரூபாய் வாங்கிக்குங்க"
"சில்லறை இல்ல"
"அப்ப வெயிட் பண்ணுங்க.. சேஞ்ஜ் வந்தா தரேன்"
நடத்துனர் முன்னால் போய் விட்டார்.
சினிமா பாட்டு அலறியது. அது ஏன் எல்லாப் பேருந்துகளிலும் காதைக் கிழிக்கும் சத்தத்துடன் மனதைக் கெடுக்கும் வார்த்தைகளோடு டப்பாங்குத்து இசையில் பாட்டைப் போடுகிறார்களோ.
என் அருகில் அமர்ந்திருந்தவன் கையால் தாளம் போட்டுக் கொண்டு வந்தான். முன் சீட்டுக் காரருக்கு கைபேசியில் அழைப்பு வர ஹலோ ஹலோ என்று அலறினார்.
"பஸ்ல வந்துகிட்டிருக்கேன்.. இறங்கிட்டு பேசவா"
செல்லை அணைத்துவிட்டு முனகினார்.
"பேச்சே கேட்கலே.. என்ன சொல்ல வந்தானோ.."
என்னைத் திரும்பிப் பார்த்தார்.
என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாங்க.. சத்தமா பாட்டு வைக்கிறாங்க”
என்றார்.
ம்” என்று தலையசைத்தேன். அப்போது ஒலிபரப்பான பாடல் எனக்குப் பிடித்த பாடல்.
'ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே.. வாழ்வென்றால் போராடும் போர்க்களமே'
மனசுக்குள் ஓடிக் கொண்டிருந்த பாட்டை நிறுத்திவிட்டு அவருக்கு உம் கொட்ட வேண்டியதாயிற்று.
அவருக்கு நடத்துனரிடம் சொல்ல என்ன தயக்கமோ.. அல்லது சொன்னால் அவர் கேட்க மாட்டார் என்கிற சந்தேகமோ.
இதற்குள் இன்னொருவர் கத்தினார்.
"டவுனுக்கு டிக்கட் கொடுங்க"
நடத்துநர் விசில் அடித்தார் எரிச்சலாய்.
"போர்டைப் பார்த்து ஏறமாட்டீங்களா.. இறங்குய்யா"
எதிர் திசையில் ஏற வேண்டியவர் இந்த பக்கம் வந்து விட்டார் என்று புரிந்தது.
அடுத்த ஸ்டாப்பில் பத்து பேர் ஒரே குடும்பமாய் ஏறினார்கள்.
"ஏய் புள்ளைய புடிடி.."
"டிக்கட்.. "
"பத்து ஜங்ஷன் கொடுங்க"
"அந்தப் பையனுக்கு எடுத்தீங்களா"
"அவனுக்கும் சேர்த்துத்தான்"
போடா போய் அந்த சீட்டுல ஒக்காரு” என்று விரட்டினார். காலியாகிற சீட்டுக்கு ஓட்டப்பந்தயம் பஸ்ஸுக்குள்ளேயே நடந்தது.
முன்சீட்டு செல்காரர் இறங்கிப் போக இப்போது எனக்கு முன் சீட்டில் புதிதாய் கல்யாணம் ஆன ஜோடி.
"உன் தம்பியும் கூட வந்திருவான்னு நினைச்சேன்"
"வந்தா நல்லா இருந்திருக்கும்" என்றாள் அவள்.
"நீங்க ரெண்டு பேரும் போங்கன்னு நான் வீட்டுல இருந்திருப்பேன்.."
"அப்பவே சொல்லியிருந்தா அவனைக் கூட்டி வந்திருப்பேன்ல"
"என்ன.. விளையாடுறியா"
"யாரு விளையாடறது..நீங்களா.. நானா"
பட்பட்டென்று வார்த்தைகள். இருவரிடமும் யார் சீண்டலில் முந்துவது என்கிற போட்டி.   கொஞ்ச நேரம் கழிச்சு பார்த்தா ரெண்டு பேரும் கையை கோர்த்துகிட்டு சிரிச்சு பேசிகிட்டு இருந்தாங்க  அது என்னவோ சண்டை போட்டு சமாதானம் ஆனாத்தான் சுவாரசியமோ என்னவோ.
கைக்குழந்தையோடு ஒருத்தி வர முன் சீட்டுக்காரன் புது மனைவியை விட்டுப் பிரிய மனசில்லாமல் ஜன்னலுக்கு வெளியே பார்த்தான். என் அருகில் இருந்தவன் எழுந்திருக்க கைக்குழந்தைக்காரி என்னை ஒரு முறை முறைத்து விட்டு என் அருகில் அமர்ந்தாள். குழந்தை என் சட்டைப்பையை இழுத்தது.
"ஏய்.. தொடாதே.." என்று அவள் கத்தியதை லட்சியம் பண்ணவில்லை. என் சட்டைப்பை அலுத்ததும் குழந்தையின் கவனம் முன் சீட்டு பெண்ணின் கூந்தல் மேல் திரும்பியது. சூடியிருந்த பூவை இழுத்துப் பார்த்தது. அவள் கோபமாய்த் திரும்பி குழந்தைதான் என்று தெரிந்ததும் சிரித்தாள்.
என் எதிர் சீட்டில் ஒரு பெண் பஸ் ஏறிய நிமிடத்தில் இருந்து கண் கலங்கியபடியே இருந்தாள். என்ன சோகமோ. விசாரிக்க வேண்டும் போல ஒரு தவிப்பு. கவலைப்படாதே எதுவாக இருந்தாலும் சரியாகிவிடும் என்று ஆறுதல் சொல்ல வேண்டும் போல.. ஆனால் நிஜத்தில் அது முடியாது.
மார்க்கட் பகுதியைத் தாண்டிப் போகும் போது மிளகாய் நெடி கமறியது. நயம் உருட்டுப் பருப்பு கிடைக்கும் என்று விளம்பரம். அது என்ன உருட்டுப் பருப்பு என்று மனசுக்குள் ஒரு பிறாண்டல். பஸ் மெல்ல ஊர்ந்து அந்த இடத்தைக் கடந்து முன்பு சினிமா தியேட்டர் நிறுத்தமாய் இருந்த இடத்திற்கு வந்தது.
'அப்பல்லாம் இங்க்கே 100 நாள் ஓடும் எந்தப் படம் வந்தாலும்'
என்னருகில் நினறவரின் குரல் கேட்டது.
இப்ப தியேட்டரே இல்லை.. இடிச்சுட்டாங்க..' என்று அவரே சொல்லிக் கொண்டார்.
மேம்பாலத்தின் மீது போகும் போது காற்று வேகமாய் முகத்தில் அறைந்தது. பேக்கரியைத் தாண்டும்போது கேக் வாசனை. கைக்குழந்தைக்காரி இறங்கிப் போக நடத்துனர் என் சீட்டுக்கு அருகில் வந்து எட்டிப் பார்த்தார். அவரது கைப்பை என் முகத்தில் உரசியது.
"சீக்கிரம் இறங்குங்க.."
"இறங்கறதுக்குள்ள என்ன அவுதி.."
யாரோ ஒரு பெண்மணி கத்திக் கொண்டே போனாள். இறங்கியபின்னும் அவள் குமுறல் ஓயவில்லை. ' ஏத்தும்போது எங்க்கே வேணா நிறுத்தி ஏத்துவாங்க.. இறங்கும் போது மட்டும் பொறுமை இல்ல.. வுழுந்து வச்சா ஆசுபத்திரி செலவுக்கு இவங்களா பணம் தருவாங்க'
பஸ் தபால் அலுவலக ரௌண்டானாவைக் கடந்து ரெயில் நிலையத்திற்குள் நுழைந்தது.
ரெயிலுக்கு போறவங்கல்லாம் இறங்கிக்கலாம்”
பார்த்து.. பார்த்து” என்று ஒரு கரிசனக் குரல் கேட்டது.
பொட்டிய எடுத்துகிட்டியா.. வாட்டர் பாட்டில் வச்சிருந்தியே அந்தப் பை..”
சாமான் களை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கணக்குப் பார்த்தவர்கள் தடுமாறி நின்ற குழந்தையை விட்டு விட்டார்கள்.
ஏய்.. கலா எங்கேடி”
நீங்க கூட்டிட்டு வரலியா”
நல்ல வேளை. பஸ் இன்னும் கிளம்பவில்லை. கலாவின் தகப்பன் பஸ்ஸுக்குள் பாய்ந்து மிரண்டு நின்றிருந்த குழந்தைடை கூட்டிக் கொண்டு கீழிறங்கினார்.
'என்ன அவசரமோ.. பெத்த புள்ளையைக் கூட விட்டுட்டு போறாங்க' என்று ஒருவர் நக்கலடித்தார்.
பஸ் இப்போது மத்திய பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தது. பாதி கூட்டம் கீழிறங்க காலியான இடங்களில் நினறவர்கள் பாய்ந்து அமர்ந்தார்கள். புதிதாய் ஏறியவர்கள் சிலர் இடம் கிடைத்து அமர, மற்றவர்கள் நிற்க.. பஸ் மீண்டும் கிளம்பியது.
எனக்கு இவ்வளவு யோசனையிலும் பஸ்ஸைப் பற்றிய நினைப்பும் வந்தது.
பஸ்ஸுக்கு மட்டும் உணர்வும் பேச்சுத் திறனும் இருந்தால் என்னவெல்லாம் சொல்லி இருக்கும்.. அது ஒரு இயந்திரம் தானே பயணிப்பவர்களுக்கு. ஏறிக் கொள்வதும் பயணம் முடிந்தால் இறங்கிப் போவதுமாய் மனிதர்கள் பஸ்ஸைப் பயன்படுத்திக் கொள்கிறார்களே தவிர.. பஸ்ஸைப் பற்றி சிந்திக்க அவகாசம் இருக்கிறதா என்ன.
அந்த நேரம் பட்டென்ற சத்தம்.. டயர் வெடிப்பது போல..
போச்சுடா.. பிரேக் டவுனா.. டயர் அவுட்டா”
பஸ் ஓரங்கட்டி நின்றதும் உள்ளே எரிச்சலும் இரைச்சலும் அதிகமாயின.
'கலெக் ஷன் பார்க்கிறாங்களெ தவிர.. பஸ்ஸுக்கும் பராமரிப்பு பண்ணனும்ல”
இப்போது பஸ்ஸுக்கு மனசு குளிர்ந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். அந்த நினைப்பே எனக்கு சிரிப்பை வரவழைித்தது.
இறங்கிப் பாருங்கண்ணே' என்று நடத்துனரும் ஓட்டுனரும் ஒருவரை ஒருவர் சொல்லிக் கொண்டார்கள்.
இதுவரை எனக்கிருந்த வேடிக்கை பார்க்கும் மன நிலை அப்போதுதான் லேசாய் ஆட்டம் கண்டது. என்ன ஆச்சு.. பஸ் போகாதா.. பிரச்னையா..
சிலர் இறங்கிப் பார்த்தார்கள். டிரைவர் டயரை தட்டிப் பார்த்தார்..
'மறுபடி எல்லோரும் ஏறிக் கொண்டார்கள்.
'என்னவாம்.. '
இப்போது பஸ்ஸுக்குள் சிரிப்பு சத்தம் கேட்டது. டயர்லாம் வெடிக்கல.. பஸ் எது மேலயோ ஏறி அந்த சத்தம்.. வாட்டர் பாட்டில் போல..
எனக்கும் பெருமூச்சு வந்தது. கைக்கடிகாரத்தில் நேரம் பார்த்துக் கொண்டேன்.
ஒன்றேகால் மணி நேரம் பயணம் ஒரு வழியாய் முடிவுக்கு வந்தது. சோழன் நகர் பஸ் நிறுத்தம். கடைசி ஸ்டாப்.
எல்லோரும் இறங்கிப் போக ஓட்டுனர் இறங்கி சிகரட் பற்ற வைத்தார். நடத்துநர் எதிர் டீக்கடைக்குள் போனார். பஸ்ஸுக்குள் இப்போது என்னைத் தவிர வேறு எவரும் இல்லை.
நடத்துனர் மேலே வந்ததும் என்னைப் பார்த்தார்.
"என்ன இறங்கலியா"
நான் முன்பு ஏறிய பஸ் ஸ்டாப்பைச் சொல்லி மறுபடி டிக்கட் கேட்டேன்.
இந்த முறையும் சில்லறையாகக் கொடுத்தேன்.
என்னை ஒரு மாதிரி விழித்துப் பார்த்துவிட்டு டிக்கட் கிழித்து கொடுத்தார். பதினைந்து நிமிடக் காத்திருத்தலுக்குப் பின் பஸ் வந்த ரூட்டிலேயே விரைய ஆரம்பித்தது.
இப்போது வேறு மாதிரியான பயணிகள். சம்பாஷணைகள். இப்போது நடத்துனர் என்னைக் கடக்கும்போதெல்லாம் ஒரு பார்வையை வீசிவிட்டுப் போனார். அவருக்கு நான் ஒரு புதிராகத் தெரிந்திருக்க வேண்டும். என்னிடம் கேட்க முடியாமல் அவரது கடமைகள் அவரை இழுத்து விட்டன.
பஸ் இப்போது வந்த பாதையிலேயே திரும்பி ஓட ஆரம்பித்தது. முன்பு பார்த்த அதே இடங்கள்..மறுபடி மேம்பாலம்.. மிளகாய் நெடி.. கேக் வாசனை.. சில்லறை சண்டை.. ஆற்றுப்பாலம்.. ஆனால் இந்த முறை பயணித்தவர்கள் எல்லோருமே புதுசு. என்னைத் தவிர,.
ஒரு குட்டிப் பெண்ணும் அப்பாவும் ஏறினார்கள். பெண்ணை என் அருகில் உட்காரச் சொன்னார். கொஞ்சம் தயங்கி விட்டு அமர்ந்தது.
அங்கிள் இன்னிக்கு எனக்கு பர்த் டே”
சாக்லேட்டை நீட்டியது. அப்பா மகளின் பேச்சை ரசித்தார். ஒரு வினாடி தயங்கின என்னை வாங்கிக் கொள்ளச் சொன்னார்.
தேங்க்ஸ் பா.. உன் பேர் என்ன”
நிர்மலா”
நல்ல பெயர்.. என்ன படிக்கிற”
சொன்னாள்.
அடுத்த ஸ்டாப்பில் இறங்கும் போது எனக்கு டாட்டா காட்டிவிட்டு போனாள்.
சாக்லேட்டைப் பிரித்து வாயில் போட்டுக் கொண்டேன். அடி நெஞ்சு வரை இனித்தது எதிர்பாராமல் கிட்டிய நேசம்.
ஆற்றுப்பாலத்தில் காற்று பிய்த்துக் கொண்டு போனது. நெடுந்தூரம் ஓடிய அலுப்போ என்னவோ பஸ் இப்போது ஒரு பெருமூச்சு விடுகிற பிரமை எனக்குள்.
ஏறிய இடத்திற்கே வந்து நின்றது.
கோவிலுக்கு போகிறவங்க எல்லாம் இறங்கிடுங்க்க. இதான் கடைசி ஸ்டாப்”
எல்லோரும் இறங்கினார்கள்.. என்னைத் தவிர. கொஞ்சங்கூட அலட்டிக் கொள்ளாமல் அமர்ந்திருந்தேன். வெளியே என் பார்வை ஓடியது.
நடத்துனர் என் அருகில் வந்தார்.
"இறங்கப் போறீங்களா.. டிக்கட் போடவா" என்றார் பாதி கேலியாக.
சிரித்தேன் மனம் விட்டு. அதே நேரம் என் தம்பி பஸ்ஸுக்குள் வந்தான்.
நடத்துனர் ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த்தார்.
"போலாமா" தம்பி என்னிடம் கேட்டான்.
"ம்" என்று தலையாட்டினேன்.
என்ன சந்தோஷமா” என்றான் சிரிப்புடன்.
இதற்கும் ஆனந்தமாய்த் தலையசைத்தேன்.
கைலாகு கொடுத்து குழந்தையைப் போல என்னை அள்ளிக் கொண்டான். கீழே வேட்டி காற்றில் ஆடியது. துவண்டு போன என் இரு கால்கள் நிற்கும் பலமிழந்து தொய்ந்திருந்தன. நிதானமாய் என்னைத் தூக்கிக் கொண்டு கீழிறங்கினான்.
அருகிலேயே காத்திருந்தது ஆட்டோ.
என்னை அவன் ஆட்டோவில் ஏற்றி அமர வைத்தபோது நடத்துனர் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்த அதிர்ச்சி.
"வந்து.. நான்.." என்றார் கீழே இறங்கி என்னிடம் வந்து.
அவர் தோளைத் தட்டினேன் நட்பாக.
"எனக்கு வீட்டுலேயே அடைஞ்சு கிடக்க முடியல.. அதனால எப்பவாச்சும் ஒரு ரவுண்டு இப்படி.. உங்களுக்கு நன்றி .."
தம்பியும் ஆட்டோவில் ஏறிக் கொண்டான். வெளியே எட்டிப்பார்த்தேன்.
ஆட்டோ கிளம்பியபோது நடத்துனர் கையாட்டுவது தெரிந்தது. பதிலுக்கு நானும் புன்முறுவலுடன் கையாட்டினேன்.


(  நன்றி - கல்கி )


"

November 01, 2013

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் !




இனிய   தீபாவளி  நல்வாழ்த்துகள்   !

October 19, 2013

நேச முகம்

இள மனதின் ஆழத்தில் பதியனிட்ட நேச முகங்கள் நினைவுபாசனத்தின் நித்திய நீரூற்றலில் பச்சென்று மனசெங்கும் பசுமையாய் படர்ந்திருக்கும் எங்கேயோ எப்படியோ நிகழும் சந்திப்பில் ஆரதழுவிகொள்ளும் பிரியமான நினைவுகள்.. 'ம் ' அப்புறம் , என்பதாய் கைகொர்த்துகொள்ளும் புரிதலான பார்வைகள் .. சொட்ட சொட்ட நனைய வைக்கும் நேசத்தின் பொழிதலில் எப்போதும் குளிர்ந்துகிடக்கும் ஈரமான மனசு!

September 17, 2013

நேசம்



எப்பவும் அடுத்தவ்ருக்காகவே
வாழ்ந்தாச்சு..
இதுவரை!
வருத்தமேதுமில்லை....
ஆனால்
இன்னமும்
ஒரு குழல்..
ஒரு மயிற்பீலி..
ஒரு பீதாம்பரம்..
சீந்துவாரற்று !




ஒளித்து வைத்த மயிலிறகு
குட்டி போடப் போவதில்லை என்றாலும் 
ஒளிக்காமல் இருப்பதில்லை 
இந்த மனசு !



ப்ரியம் பூத்திருக்கும் 
பூவைப் பார்க்காவிட்டாலும் 
வாசனை அடித்துக் கொண்டுதான் இருக்கிறது 
வாழ்நாள் முழுமையும் !




September 08, 2013

கொஞ்சம் கவிதைகள்

என்னைச் சிலுவையில் 
அறைந்தால்
உயிர்க்கத் தெரியாது..
விட்டு விடு !



அவர்களாக அறைக்குள்
வருகிறார்கள்..
வெளியேறுகிறார்கள்..
வாசம் சுமந்த
சுவர்கள்
ததும்புகின்றன
விம்மல்களில்..
நுழைவதற்கு முன்
இருந்த
சுயம் தொலைத்த
அறை
இப்போது ஏங்குகிறது
வரவிற்காக!


உன் மழை பற்றி நீயும்
என் மழை பற்றி நானும்
கவிதைகள் எழுதி
கை மாற்றிக் கொண்டோம்..
சேர்ந்து
வாசிக்கும் போது
அது நமக்கான மழையாய்
இருந்தது !



அமரவும்
விருட்டென்று
சிறகை விரித்துப் பறக்கவும்
ஆகிறது பறவைக்கு..
முடங்கிக் கிடக்காமல் !





August 27, 2013

வித்தியாசம்



”ஹலோ.. அக்கவுண்ட்ஸ்ங்களா”
“ஆமா..”
“மெடிகல் கிளைய்ம்ல ஒரு டவுட்டு”
“அது வேற செக்‌ஷன்.. நம்பர் சொல்லவா”
“அது எனக்குத் தெரியும்.. நான் டவுட் கேக்கறது உங்ககிட்டதான்”
“கேளுங்க”
“ஒரே ஆஸ்பத்திரில் அட்மிட் ஆகி.. சிசேரியன் .. ஆச்சு.. ரெண்டு பேருக்கு.. ஆனா பில் செட்டில் பண்ணதுல பணம் கூடக் குறைய இருக்குதுங்களே”
”அப்படியா.. “
”ஒரே நாள்.. ஒரே மாதிரி சிசேரியன்.. அரை மணி இடைவெளில.. 1500 ரூபா குறைச்சு கொடுத்திருக்காங்க ஒருத்தருக்கு..”

(இதையே பத்து நிமிஷம் விடாமல் கேட்டார்)

“ரெண்டும் என்ன குழந்தைங்க”
“ரெண்டுமே ஆண் குழந்தைங்கதான்”
“ஓ.. அப்போ அதுலயும் வித்தியாசம் இல்ல.. ம்ம்”

எதிர்முனையில் வெற்றிக் களிப்பு.
“அதாங்க சொல்றென்.. எப்படி குறைக்கலாம்”
“ஆங்.. குழந்தை என்ன வெயிட்”
“ம்ம்.. என் குழந்தை 2.9 இன்னொன்னு 3.2”
“அதானே பார்த்தேன்.. வித்தியாசம் இருக்குல்ல.. அதான் குறைச்சு பாஸ் பண்ணி இருக்காங்க “
“ஓ.. அப்படியா.. அக்கவுண்ட்ஸ்ல தப்பு பண்ண மாட்டாங்கன்னு அப்பவே சொன்னேன் அவகிட்ட.. இப்ப புரிஞ்சிருச்சு.. நன்றி ஸார் “

(ஸ்ஸ்ஸ்ஸ்.. அப்பா.. கண்ணைக் கட்டுதே.. )

எங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த பக்கத்து இருக்கைக்காரர்களுக்கு சிரிப்பு.

உண்மையில் என்னவென்றால்.. ஒரு டெலிவரிக்கு கூடுதலாய் ஊசி.. மருந்து தேவைப்பட்டிருந்தது.. அதான் அந்த தொகை வித்தியாசம். விசாரித்த நபர் என்னிடமும் பதினோராவது ஆளாய்க் கேட்டார். வேறு வழியின்றி இப்படிப் பேசி அக்கவுண்ட்ஸ் மானத்தைக் காப்பாத்தினேன்.




August 25, 2013

ஜ்வல்யா

ஊசி போட
எதிரே டாக்டர்..
‘அழமாட்டா தானப்பா
ஜ்வல்யா’
அவளாகவே சொல்லிக் கொள்கிறாள்..
‘ஊசி வேண்டாமே’
அழுகிறேன் நான் !



நட்சத்திரங்களை
எண்ணும்போது
என் விரலகளையும்
சேர்த்துக் கொள்கிறாள்
ஜ்வல்யா..
‘கையை நீட்டுப்பா’ என்று !



என்னைத் தூங்க
வைத்ததும்
அம்மாவிடம்
போய் விடுகிறாள்
ஜ்வல்யா..
ஒவ்வொரு இரவும் !



’இரு..
அப்பாகிட்ட
பேசிட்டு வரேன்’
என்கிறாள்
சினேகிதியிடம்
ஜ்வல்யா..
இரு பெரிய மனுஷிகளின்
தனிமையில்
குறுக்கிட்ட எனக்குத்தான்
நெருடல் !



தவறவிட்ட
கூட்டத்தில்..
கைப்பற்றிய
குழந்தை
’நான் ஜ்வல்யா இல்லை’
என்கிறது..
சிரிப்புடன்!








ஜ்வல்யாவைத்
தேடிக் கொண்டே
இருக்கிறது
மனசு..
எதிர்ப்படும் எந்தக் 
குழந்தையைக் கண்டாலும் !




August 16, 2013

கண்ணே கணினி மானே.. (தொடர் பதிவு)




மஞ்சுபாஷிணி மேடம் என்னையும் இதில் சேர்த்து விட்டதுக்கு நன்றி முதல்ல.

என்னதான் கொசுவர்த்தி சுருள் சுத்தினாலும் முதல் முதல்ல கணினியை எப்போ தொட்டேன்னு.. ரொம்பவே யோசிச்சேன்.

ஆ.. ஞாபகம் வந்திருச்சு. அக்கவுண்ட்ஸ்ல இருக்கறதால கஸ்டமர்ட்ட இருந்து வர கலெக்ஷன் பணத்தை அக்கவுண்ட் பண்ண அப்போ ரெண்டே ரெண்டு சிஸ்டம் வச்சிருந்தாங்க.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு டைம் ஸ்லாட்..

ஏற்கெனவே டிசைன் பண்ணி வச்ச ப்ரொக்ராம்.. அதுல லாக் இன் பண்ணி அந்தந்த பீல்ட்ல செக் நெம்பர் தேதி கஸ்டமர் பெயர் வந்த தொகை இப்படி பில் அப் பண்ணனும். அதுக்கு செக் லிஸ்ட் வரும் தப்பா அடிச்சிருந்தா கரெக்ட் பண்ணனும் இப்படி ஆரம்பிச்சது. ஆனா இது டெர்மினல் டைப்.. டேட்டா ரொப்ப மட்டும்தான்.. இதில் வேற எதுவும் நம் விருப்பத்தில் இல்லை.

அப்புறம் தான் ஒரிஜினல் கணினியின் அறிமுகம்.. ஒவ்வொருத்தருக்கும் பாஸ்வேர்ட்.. கொண்டு வந்து வச்ச புண்ணியவான் ஏகத்துக்கு பயமுறுத்திட்டு போக. அதைத் தொடவே ரொம்பவே யோசிச்சி.. ஒருத்தர் கொடுத்த தைரியத்துல எக்செல்.. வேர்ட்.. இப்படி கொஞ்சம் கொஞ்சமா எல்லை விஸ்தீரணம் ஆச்சு.. இப்போ எல்லோருக்குமே ஆளுக்கொரு கணினி.. அதைத் தவிர வீட்டுலயும்...

 என்னைப் பாதிச்ச சத்யஜித்ரேயின் பதேர் பாஞ்சாலி, அபூர் சன்ஸார், அபரஜிதோவை டவுன் லோட் பண்ணி பார்த்தப்பதான் கணினி மேல எனக்குப் பயங்கர காதலே வந்திச்சு..

ஒரு நணபர் இன்னமும் விடாம டிபேஸ்.. பாக்ஸ்ப்ரோ.. அடிச்சுகிட்டு இருக்காரு.. அவரை நல்லாவே கலாய்ப்போம்.. 30 வரில ப்ரோகிராம் எழுதி 28 வரிக்கு * போட்டிருக்கீங்க.. அப்பவும் அது வொர்க் பண்ணுதுன்னு.

எல்லாமே சுயம்பு தான்.. அடிபட்டு அடிபட்டு தப்பு பண்ணி சரி பண்ணி கத்துகிட்டது.. பர்ஸ்ட் கணினியைத் தொடும்போது அது ஏதோ ஷாக் அடிக்கப் போறாப்ல பயத்துல தொட்டது போக.. அப்புறம் ஒரு சவடால்த்தனம் வந்தாச்சு.

முன்பு கையால் எழுதி கதைகள் அனுப்பினது போக அப்புறம் கணினியில் டைப் பண்ணி கன்வர்ட் பண்ணி அனுப்பற அளவு வந்ததும் எனக்கே ஒரு ஆச்சர்யம்தான்.

பிலாக் ஆரம்பிக்க திரு. ரேகா ராகவன் உதவினார். அவர் மட்டும் என்னைத் தூண்டலேன்னா இவ்வளவு பதிவுகள் போட்டிருக்க மாட்டேன். அதைப் படிச்சு எனக்குப் பாராட்டும் திட்டும் சொன்ன நட்பு வட்டம் அமையலன்னா இந்த அளவு வளர்ந்திருக்க மாட்டேன்..

கணினித் துறையில் எவ்வித படிப்பும் இல்லாமல் இப்படி பிலாக், முக நூல் என்று இப்போ (சுமாராவாவது) கலக்கிகிட்டு இருக்கேன்னா.. அதுக்கு எனக்குள்ளே ஒளிஞ்சுகிட்டிருந்த ஒரு வித தன்னார்வம்தான் காரணம்..

இப்பவும் கணினி பத்தி எனக்கு முழுமையாத் தெரியாது.. ஆனா வல்லுனர்கள் இப்படி பண்ணலாம்னு சொல்றப்ப லேசாப் புரியற மாதிரி இருக்குன்னா அது என் முன்னோர்களின் அறிவுஜீவித்தன ஜீன்ஸ் தான் ..

நிறைய சொல்லிட்டே போலாம்.. ஆரம்பகால அசட்டுத்தனங்கள்.. பூட் ஆகல.. சிஸ்டம் தானா ஆஃப் ஆகி ரீபூட் ஆகுது.. ஓஎஸ் பண்ணிடலாம்.. கண்ட் ரோல் பேனல்ல பார்த்தீங்களா.. இப்படி முதல் முதலா கணினி  சம்பந்தமான வார்த்தைகளை கேட்டபோது மாடு விரட்டி மிரண்டு நிற்கிற மாதிரி நினறதும்.. பின் தெளிந்ததும்..

பாவம் ரேகா ராகவன் ஸார்.. சாட்ல வந்து அவர் சொன்னது எனக்குப் புரியாம.. காது டப்பாஸு மாதிரி 'ஆ.. ஆ' கேட்க அவர் போன்ல வந்து சொல்லிப் பார்த்து அதுவும் புரியாம முழிக்க.. உங்க பாஸ் வேர்டை சொல்லுங்க நானே சரி பண்ணிடறேன்னு அட்சதை போட்டுகிட்டதும்..

என்னதான் சொல்லுங்க.. நாமளே கண்டுபிடிச்சு.. கற்றுக் கொள்ளும் அந்த நிமிட உற்சாகத்திற்கு ஏதாச்சும் ஈடு உண்டா.. அந்த வகையில் கணினி தினமும் எனக்கு ஒரு உற்சாக ஊற்றுத்தான் இப்போதும் !

யார் வேண்டுமானாலும் தொடரலாம்,,  

வாசிக்க எங்களுக்கு கசக்குமா என்ன?


August 06, 2013

இசை 2

அப்பாவுக்கு நாங்கள் மூவரும் கொடுதத வாக்குறுதியே யாரையும் லவ் பண்ண மாட்டோம் என்றுதான். 

ஒரு பெளர்ணமி இரவு மொட்டை மாடியில் அப்பா, அம்மா, நாங்கள் (புவனா, காயத்ரி, சங்கீதா). மூவரும் நைட்டியில். அப்பாவின் சங்கீத ஆலாபனை நடுநடுவே. 'கீரவாணி' என்று முனகுவாள், கொஞ்சம் தெரிந்தவள் சங்கீதா மட்டும். பாட்டு கிளாஸ் போனவள் அவள் மட்டும்தான். நான் (புவனா) பெயிண்ட் அடித்துப் பார்த்து, பிறகு அதுவும் வராமல் விட்டுவிட்டேன். வாங்கி வைத்த வாட்டர் கலர், ஆயில் பெயிண்ட் எல்லாம் காய்ந்தே போய்விட்டன. 

மிஸ்ஸியம்மாவில் சாவித்ரி பாடும் பாட்டை அப்பாவைப் பாடச் சொன்னாள் அம்மா. 

'நல்ல லவ் ஸ்டோரி!'

"நீங்க யாரையாச்சும் லவ் பண்றீங்களா" என்றார் அப்பா. 

"என்ன பேச்சு இது?" - இது அம்மா. 

"அப்படி ஏதாச்சும் ஐடியா இருந்தா சுத்தமாத் தொடைச்சிருங்க!" 

"இல்லப்பா" என்றோம் கோரஸாக. அந்த நிமிடம் நிச்சயமாய் எங்கள் மனதில் எதுவும் இல்லை.

மிஸ்ஸியம்மா பாட்டு அப்பா பாடவில்லை. அம்மா எழுந்து வெளிநடப்பு செய்தாள். அப்பாவும் சற்று நேரத்தில் கீழே போனார். நாங்கள் மட்டும் தனியே.

"எப்படிடி தைரியமா லவ் பண்ண மாட்டேன்னு சொன்ன?"

"ஏன்... நீயும்தான் சொன்ன!"

"அப்ப சினிமால காட்டறது பொய்யா?... லோ லோன்னு அலையறாங்களே!..."

"கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகாதா நமக்கு?" என்றாள் சங்கீதா கிண்டலாய்.

"ஹிஸ்டரிதான் வொர்க் அவுட் ஆகும்... நம்ம குடும்ப சரித்திரம். தாத்தா... அப்பா... எல்லோருமே ஏற்பாடு செய்த கல்யாணம்தான்."

"அப்பாவோட மியூசிக் திறமைக்கு யாராச்சும் லவ் பண்ணியிருக்கணுமே?"

"இன்னிக்கு ஏன் பாடாம போயிட்டார்?"

படியேறி யாரோ வரும் சத்தம் கேட்டது. அப்பாவும், அம்மாவும்.

"மனசே இல்லைடி அவருக்கு. புலம்பிட்டார்... பாடாம வந்துட்டேன்னு..."

வட்டமாய் அமர்ந்தோம். "பிருந்தாவனமும் நந்த குமாரனும்..." அப்பாவின் குரலில் வசியம் இருந்தது.

"சுத்த சாவேரியா?" என்றேன் கிசுகிசுப்பாய் சங்கீதாவிடம்.

"ச்சே... ஆரபியா?..."

"என்னடி குழப்பறே..."

"ஏ.எம்.ராஜா இல்லாட்டி ராஜேஸ்வர்ராவ் இருந்தா கேட்டுடலாம்."

எங்கள் ராக சர்ச்சையில் குரல் உயரவும் அப்பாவிடம் சிரிப்பு. பாடிக் கொண்டே சங்கீதாவின் தலையில் செல்லமாய்த் தட்டினார்.

"மண்டு... மண்டு... நல்லாக் கவனி!"

அம்மா, அப்பாவையே கிறங்கிப்போய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள். எங்கள் கவனிப்பை உதாசீனம் செய்து. எங்கள் எதிர்காலம்... கல்யாணம்... நாளைய கவலைகள்... கடன் பாக்கி... அப்பாவின் உடல் நலம்... எல்லாம் மறந்து.


(நன்றி : கல்கி )


July 31, 2013

இசை 1

பரிச்சயக் கையொன்றுதான்
அப்படித் தள்ளியது...
இன்னும் கிட்டவில்லை
தரை.
(நன்றி: ப்ராங்க்ளின் குமார்)

இன்பாக்ஸில் ஒளிர்ந்த கவிதை ரேணுகாவினுடையது. நள்ளிருட்டில் செல் மினுக்கியதும் எடுத்துப் படித்தேன். நேரம் 12.10. 

வயலட் பூக்கள் நிறைந்த நைட்டியில் இருப்பாள். இன்னும் அவள் தூங்காமல் இருப்பதன் அடையாளம் இந்தக் கவிதை. 

ரேணுகாவின் கோபம் கூட அழகு! கவிதைகளால் நெய்யப்பட்ட அவள் உலகில் கோபம் கூடக் கத்தரித்துப் போட்ட பட்டுத்துணி.

என்ன பதில் தருவது... 'ம்ம்' என்று டைப் அடித்து, நீக்கி, கொஞ்ச நேரம் குழம்பினேன். 

வாக்களித்தபடி என்னால் போக முடியவில்லை. இன்று கவியரங்கம். அதிலும் ரேணுகாவின் கவிதை. அவள் குரலில் கேட்கும் வாய்ப்பை... அதற்கான கரகோஷத்தைக் கேட்கும் வாய்ப்பை இழந்தாகி விட்டது. ஆடிட்டைக் கண்டுபிடித்தவர்களையும் அதை அவசியமாக்கியவர்களையும் சுண்ணாம்புக் காளவாயில் போட்டு அறம் பாட வேண்டும்.

என் இயலாமையை முன்பே சொல்லி இருந்தேன். வர முயற்சிக்கிறேன்... முடியாவிட்டால் சகியே கோபிக்காதே.. என்று.

***

பதற்றத்தில் கை தவறி வெற்றுச் செய்தியை அனுப்பி விட்டேன். மெசேஜ் சென்ட்.. என்று ஒளிர்ந்தது. போச்சு... அவளைச் சீண்டியாகிவிட்டது... என்ன சொல்லப் போகிறாளோ!

நட்சத்திரங்கள் தொலைவில் மினுக்கிக் கொண்டிருந்தன. கேலிச் சிமிட்டல், 'மாட்டிகிட்டியா... மவனே!' 

இன்பாக்ஸில் சேகரித்து வைத்திருந்த எண்ணூற்றுச் சொச்சம் குறுஞ்செய்திகளில் தேடினேன்.

'சில நேரங்களில் வெற்றுச் செய்தி கூட ஒரு தகவல்தான். நேசிக்கும் உள்ளம் அதைப் பூர்த்தி செய்து புரிந்து கொள்ளும்!'

அட... அனுப்பிய நண்பனுக்கு மனசுக்குள் நன்றி சொல்லி, அதையே ரேணுகாவுக்கு அனுப்பினேன் அடுத்த செய்தியாக. 

இசைவாளா... இல்லை முறுக்கிக் கொள்வாளா!...
***

ஸ்மைலி வந்தது அவளிடமிருந்து...! 

அடுத்த நிமிடமே அழைப்பும்.

'ரிஷி! இப்போ படிக்கவா... உனக்கு மட்டும்?' என்றாள். 

கண்சிமிட்டிய நட்சத்திரங்கள் மையிருட்டில் மூழ்கிக் காணாமல் போய்விட்டன அப்போது.



நன்றி : கல்கி (ஒரே தலைப்பில் இரு கதைகள் - இது முதல் கதை.. அடுத்தது அடுத்த பதிவில் )