July 27, 2012

தேவதை

சிறகுகளை
மறந்து விட்டு
அழுகிறது ஒரு தேவதை.
நான் ஒரு மனிதன்
என்பதை மறந்து விட்டு
தேற்றத் துடிக்கிறேன்..
எனக்கும் முளைக்கிறது
இரு சிறகுகள்..

July 15, 2012

மூலைத்தோப்பு

துண்டு துண்டாய் மனசுக்குள் வெப்ப வரிகள் ஓடின. கதிரேசன் இப்போது அமர்ந்திருந்தது மூலைத்தோப்பில். அதாவது 'மூலைத் தோப்பு' என்று அழைக்கப்பட்ட இடத்தில்.

கிட்டத்தட்ட ஜந்நூறுக்கும் மேற்பட்ட வளர்ந்த மரங்கள், இன்று வெட்டிச் சாய்க்கப்பட்டு இடமே குருஷேத்திரமாய்க் காட்சி தந்தது.

மரத்துக்கு ஆவி உண்டா? உண்டு என்றுதான் தோன்றியது கதிரேசனுக்கு. இதோ கண்ணெதிரே எண்ணற்ற ஆவிகள். மனிதரின் ஆவிகள் போல வெண்ணிறமாய் இல்லாமல் பசுமையான ஆவிகள். தீனமாய்க் குரலெழுப்பிக்கொண்டு குவிக்கப்பட்டிருந்த மரத்துண்டுகளைச் சுற்றிப் பிலாக்கணம் வைத்தன. வயதான இளைய ஆவிகளை மனசு உணர்ந்தபோது கதிரேசனுக்கு யாரோ நெருங்கிய உறவினர்களே கூண்டோடு கைலாசம் போன மாதிரி துக்கம் பீறிட்டது.

"கதிரு" செல்வமணியின் குரல் கேட்டது.

சைக்கிளை மெயின் ரோட்டிலேயே நிறுத்திவிட்டு நடந்து வந்தான்.

"உன்னைத் தேடிக்கிட்டு வீட்டுக்குப் போனேன். நீ வெளியே போயிருக்கிறதாச் சொன்னாங்க. வழியில் நம்ம தங்கராசுவைப் பார்த்தேன். அவர்தான் நீ இங்கே இருக்கிறதாச் சொன்னாரு."

நட்பின் குரல் செவிக்கு எட்டாமல் புலன்கள் யாவும் ஒரே மயக்கத்தில் இருந்தன.

"பரவாயில்லை. இப்பவாச்சும் மனசு வந்து தோப்பை வித்தாரே. பக்கத்து இடமெல்லாம் பிளாட் போட்டு வித்தாச்சு. இது மட்டும் நடுவுல திருஷ்டியா நின்னுச்சு. யப்பா. . . எவ்வளோ பெரிய தோப்பு! எழுபதுக்குக் குறைய மாட்டேன்னு சொல்லிக்கிட்டு இருந்தாரே. என்ன விலைக்குப் போச்சாம்...?"

வெற்றிடம் தந்த பிரமிப்பில் செல்வம் பேசிக்கொண்டு போனான். எதையும் பணத்தால் அளவிடும் மனிதர். இதே தோப்பு போன மாதம்கூட சுற்றிலும் கிளிகளும் குருவிகளுமாய்ப் பச்சைப் பசேலேன்று கவிதை கொஞ்சுகிற அழகில் இருந்தது. அப்படி ஒன்றும் நஷ்டம் ஏற்பட்டதில்லை. பராமரித்த செலவுக்கு மேலாக இத்தனை வருஷமாய்ப் பலன் தந்த தோப்புதான்.

பணமாய்க் கொட்டிய தோப்பு அவ்வப்போது மனத்துக்குக் கொடுத்த குதூகலம், பணத்தால் அளவிட இயலுமா? 

'இன்னைக்குத் தோப்புலதான் சாப்பாடு'

நுனி இலைகளும் அடுக்கு டிபன் கேரியர்களும் வந்து விடும். அன்றைய தினம் முழுவதும் தோப்புக்குள் ஓடுவதும் ஆடுவதும்.

பெரியவர்கள் கம்பளம் விரித்து அமர்ந்திருக்க, சிறுவர்களின் இரைச்சல் புதிய சுதந்திரத்தில்.

ஓடு... ஓடு... எல்லையற்ற தோப்புக்குள் எங்கே வேண்டுமானாலும் ஓடு. ஒளிந்து கொள்.

"ரெடி ஜூட்டா."

"எங்கே, கண்டுபிடி பார்க்கலாம்"

ஜோதி எங்கே, மீனா எங்கே, வேலு எங்கே? என்று அலைந்தது போக, இன்று இந்த மரம் எங்கே, அந்த மரம் எங்கே என்று பதற வைத்து விட்டதே...!

"என்னடா?"

மரத்தில் பெயர் செதுக்கியவனை, தாத்தாவின் குரல் அதட்டியது.

"எம்பெரு தாத்தா. இது எம்மரம்"

"இது என்னோடது"

"இது எனக்கு"

"வச்சுக்குங்கடா... பயலுவளா"

நட்டதோடு சரி. நீரூற்றினால் சொந்தம் கொண்டாடி விட முடியுமா? உள்ளிருந்து பட்டுப் போகாமல், எந்த சக்தி காத்து வந்தது?

முட்டாள் மனிதர்கள். இன்றைக்குத் தேவை எனில் சொந்தம் கொண்டாடுவதும், அதைவிட வேறு பலன் எனில் வெட்டி எறிவதும்... சுயநலப் பிசாசுகள்.

"டேய்... என்னடா?"

செல்வமணி கதிரேசனைப் பற்றி உலுக்கினான்.

"ப்ச்"

"எல்லாரும் எப்ப வராங்க?

"நாளைக்கு"

தகவல்கள். ச்சே. பேசவே அலுத்தது. 'என்னை விட்டு விடு' என்று கெஞ்சத் தோன்றியது. விடமாட்டான். லட்சங்கள். பிரமிக்க வைக்கும் தொகை. இன்றைய செய்தியே கதிரேசனின் குடும்பத்துக்குக் கிட்டிய அதிஷ்டம்.

"தாத்தா எப்படி இருக்காரு?"

"இருக்காரு"

"வெளியே நடமாட்டமே இல்லையே"

கதிரேசன் எழுந்து விட்டான். இனியும் இங்கிருக்க முடியாது. செல்வம் விடமாட்டான்.

"போகலாமா?"

கதிரேசன் தலையசைத்தான். செல்வத்தின் குரலில் படபடப்பு.

"நான் கேட்டது நினைவுல இருக்கா.. கதிரு?"

கதிரேசனின் பங்கில் ஒரு தொகையைக் கடனாகக் கேட்டிருந்தான். விலைக்கு வருகிற அரிசி மில்லை வாங்க உத்தேசம். கதிரேசன் வெறும் தலையசைத்தது செல்வத்திற்குப் படபடப்பை அதிகமாக்கியது.

"உன்னைத்தான் நம்பியிருக்கேன்... கதிரு"

திரும்பிப் பார்த்துப் புன்னகை புரிந்தான். "ஞாபகம் இருக்கு... செல்வம்"

"அவனைக் கிரயம் பண்ண விடாமே தடுத்து வச்சிருக்கேன்..."

"நாளைக்கு அவங்க வந்த பிறகுதான் முடிவாகப் போகுது செல்வம்"

"விற்கிறதா முடிவுதானே? பின்னே ஏன் மரத்தை வெட்டினாங்க...?"

உடனுக்குடன் முடிவெடுக்கத் தூண்டும் பதற்றம். 

மெயின் ரோட்டிற்கு வந்து விட்டார்கள்."வீட்டுல கொண்டு விட்டுட்டுப் போறேன் கதிரு... வா." ஒற்றைக் காலை ஊன்றி சைக்கிளில் பேலன்ஸ் செய்து நின்றான்.

"இல்லை. நீ போ. எனக்கு வேற வேலை ஒண்ணு இருக்கு"

"நாளைக்குப் பார்ப்போம். வரட்டுமா?"

செல்வம் சைக்கிளை மிதித்துப்போனபோது உள்ளுக்குள் கலவரப்பட்டிருந்தான்.

காக்கி நிஜார், அரைக்கை கத்தார் சட்டையில் தங்கராசுவைப் பார்ப்பவர்கள் அவர் வயது குறித்து ஆலோசிப்பார்கள். ஐம்பதைத் தாண்டிய இளமை அவரிடம் இருந்தது.

"வா... தம்பி... செல்வத்தைப் பார்த்தியா?

"ம்...தோப்புக்கு... வந்தான்" 

'தோப்பு' என்று உச்சரித்தபோது குரல் பிசிறியது. தங்கராசுவும் பெருமூச்சு விட்டார்.

"என் கையால வளர்ந்த தோப்பு, சின்னப் புள்ளையில் எங்க அய்யா என்னைக் கொண்டாந்து விட்டாரு. படிப்பு ஏறலை. ஆனா மரத்தைப் பார்த்தா வயசு சொல்லிடுவேன்"

புத்தகப் படிப்பு இல்லைதான். அனுபவம் தந்த ஆரோக்கியப் படிப்பு அவரிடம் இருந்தது.

"திடீர்னு இப்படி செஞ்சுப் பிட்டாங்களே. என்னைக் கூப்பிட்டு, உனக்கு எவ்வளவு வேணும் சொல்லு, தோப்பை விற்கப் போறம்னு பெரியவரு சொன்னதும் ஆடிப் போயிட்டேம்பா.."

கதிரேசனுக்குத் தலை நிமிர்ந்து அவரைப் பார்க்கும் துணிச்சல் இல்லை.

"எப்படி இருந்த ஊரு. பச்சு... பச்சுனு கண்ணும் நெஞ்சும் குளுந்து போவும். இப்ப ஊருல பாதிப் பசுமை அழிஞ்சு போச்சு" இயலாமை குரலில் தொனிக்க கிழவர் விசும்பிய தொனியில் பேசினார்.

"செல்வம் எதுக்கு உன்னைத் தேடறான்?"

"ரைஸ் மில் விலைக்கு வருதாம்"

தங்கராசு பெரியதாய்ச் சிரித்தார். "வயக்காடே இல்லாம போகப் போவது. இவன் ரைஸ் மில்லு வாங்கறானாமா. எதுக்காம்? இடிச்சுப்புட்டு சினிமா தியேட்டர் கட்டவா? இப்பதான் விளை நெலத்தை அழிச்சு பேக்டரி கட்டரானுங்களே. பக்கத்து ஊருல பெரிய கலாட்டா ஆயிருச்சாமே. தெரியுமா?" என்றார்.

"தெரியும். ஆனால் கூக்குரல் வீணாகித்தான் போனது. கெமிகல் பேக்டரி வருவது உறுதியாகி விட்டது. அதே நபர்தான் இந்த இடத்தையும் வாங்குகிறார். வேலைக்கு அமர்த்துகிற பெரிய அதிகாரிகளுக்கு 'குவார்ட்டர்ஸ்' கட்டப் போகிறாராம்."

"ஏம்பா... கெடுதல்னு தெரிஞ்சும் துணிஞ்சு செய்றாங்களே... எப்படிப்பா?" கிழவரின் அறியாமைக் குரல் வினோதமாய் ஒலித்தது.

"பணந்தான். கட்டு கட்டா வரப்போகிற லாபம்."

"பெத்த தாயை வேலை பேசிடுவாங்க. சரியான அனம் கெடைச்சுதுன்னு எங்கய்யா சமயத்துல சொல்லுவாரு. நெசந்தான் போலிருக்கு" என்று அலுத்துக் கொண்டார்.

"வரேன்" கதிரேசன் எழுந்தான். 

இங்க வந்து ஆறுதல் தேட முற்பட்டு, மேலும் இதயம் கனத்துப் போனதே மிச்சம்.

குடும்ப நபர்களைப் பேச்சளவில் எண்ணிக்கை இட்டது போக, இன்று அவ்வளவு பேரையும் நேரில் அணிவகுத்தாகி விட்டது. கல்யாணம், துக்கம் இரண்டிலும் மட்டும் இவ்வளவு நபர்களும் ஒன்று சேருவார்கள்.

இன்று கல்யாணம் சந்தோஷமா... இல்லை...

கதிரேசனுக்குத் தன் நினைப்பு ஓடிய வேகம் திகைப்பைத் தந்தது. "இந்த அளவுக்கா பாதிக்கப்பட்டு விட்டேன்?"

"என்னடா... எல்லாரும் வந்தாச்சா?" பெரியவரின் குரல் பாதி அதட்டலும், பாதி உல்லாசமுமாகக் கேட்டது.

கூட்டம் அமைதி காத்தது. தாத்தா எழுப்பி அமர வைக்கப்பட்டிருந்தார். விவரம் அவருக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

"தொண்ணூறுக்குப் பேசி கடைசியா எழுபத்தஞ்சுல தெகைஞ்சது." வியப்பில் விழிகள் விரிய, அவரவர் பங்கு பற்றிக் கணக்கிடத் தொடங்கினர்.

"சமமா பிரிச்சிருக்கு. புள்ளை, பொண்ணு எந்த பேதமும் வேணாம்னு சொல்லிட்டாரு" மருமகன்கள் முகங்களிலும் மலர்ச்சி தெரிந்தது.

"தாத்தா பங்குன்னு பிரிச்சதை அவரு தனக்காவ வச்சுக்கலை"

என்ன செய்யப் போகிறார்...?

"பாதியைக் கதிரேசனுக்கு... மூத்த பேரனாச்சே... மீதியை மட்டும் பேரப் புள்ளைங்க எல்லாருக்கும் பிரிக்கச் சொல்லிட்டாரு..."

கதிரேசனைப் பொறாமையாய்ப் பார்த்தார்கள்.

"இன்னும் பத்திரம் பதியலை. உங்க எல்லாரையும் கலந்து பேசிட்டு முடிவு சொல்லணும். ஆட்சேபனை எதுவும் இருந்தா சொல்லிடலாம். நம்ப குடும்பத்துல யாருக்கும் சங்கடம் இருக்கக் கூடாதுன்னுதான்..."

ஜனநாயக ரீதியில் முடிவை எடுக்க உத்தேசம் என்று தெரியப்படுத்தி பெரியவர் மெளனமானார்.

கூட்டத்தில் கிசுகிசுப்புக் குரல்கள். சில நிமிடங்களுக்குப் பின் லேசான அமைதி. 

"எங்களுக்குச் சம்மதம்..."

அப்போது கதிரேசன் எழுந்தான். "என்னை மன்னிக்கணும். உங்களோட ஒத்து வராம வேறு கருத்தைச் சொல்றதுக்கு."

கூட்டம் அவனை விசித்திரமாகப் பார்த்தது. கதிரேசன் எழுந்து நின்றவன் நகர்ந்து போனான். பெரிய ஹாலில் மற்றவர்கள் ஒருபுறம். இவன் மட்டும் தனியே. எதிரே.

"என்னைப் படிக்க வச்சீங்க. வளர்ந்து பெரிய ஆளாக்கினீங்க. இதுக்கெல்லாம் நன்றி செய்ய என்னால முடியாது. இதேபோல நம்ம மூலைத்தோப்பு கொடுத்த பலனுக்குப் பதில் நன்றி செய்யவும் நம்மால முடியாது. பெரியவங்க என் கருத்தை ஏத்துப்பீங்கன்னு நம்பறேன்"

என்ன சொல்ல வருகிறான்...?

"சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்பட்டு வருதுன்னு நிறையக் கேள்விப்படறோம். படிக்கிறோம். துன்பம் அனுபவக்கிறவங்க படற கஷ்டம் டிவியில் காட்டறாங்க. பேசறாங்க. ஆனா நம்மைப் பொறுத்தவரை எந்தப் பாதிப்பும் இல்லை. நம்ம சுயலாபம்தான் பெரிசாப் போச்சு..."

"நீ சின்னவன். வாயை மூடு." மூத்த மருமகன் குரல் கொடுத்தார் சற்றுக் கோபமாகவே.

கதிரேசனின் தந்தை கையசைத்தார். "பொறுங்க... அவன் என்னதான் சொல்ல வரான்னு பார்க்கலாம்.

மருமகன் ஈகோ பாதித்த உணர்வில் அமர்ந்தார்.

"நம்ம ஊருல மூலைத்தோப்பால வந்த இயற்கை சந்தோஷம் இன்னைக்கு அழிக்கப்பட்டாச்சு. என்னால பெரிய அளவுல அதை ஈடுகட்ட முடியாது. மத்தவங்க வழிக்கு நான் குறுக்கே வரலை. ஆனா என்னோட வேண்டுகோள் இதுதான். எனக்கு பங்காத் தரப்போகிற தொகை. அப்புறம் இதோ இவங்க தொகை... அப்புறம் இதோ இவங்க பங்கு... இதை மொத்தமா கணக்குப் போட்டு அதற்கு ஈடான நிலத்தை மூலைத் தோப்புல கிரயம் பண்ணித் தர்றோம்... எங்க பேர்லயே விட்டு வச்சிடணும். தயவுசெஞ்சு ஏன் கோரிக்கையை ஏற்பீங்கன்னு நம்புறேன்..." என்றவன் கையசைத்தான்.

வரிசையாய் ஒவ்வொரு குடும்பத்துக் குழந்தைகளும் எழுந்து கதிரேசனின் அருகில் வந்து நின்றனர்.

ஒவ்வொருவருவரின் முகத்திலும் உறுதி, தெளிவு, நிதானம். பெரியவர்கள் ஆடித்தான் போனார்கள்.

இது தனிக்குரல். எதிர்ப்பு இல்லை. சூழலின் மகத்துவம் உணர்ந்த இளைய சமுதாயத்தின் ஒட்டு மொத்தக் கெஞ்சுதல். 

பெரியவர் எழுந்து வந்து கதிரேசனின் தோளைத் தட்டினார். "சரிப்பா"

தங்கராசுவின் கண்களில் மின்னியது சந்தோஷம். அவரைச் சுற்றி இளமையின் அணிவகுப்பு.
சீர்திருத்தப்பட்ட நிலத்தின் நட்டு வைக்க இளங்கன்றுகள்.

"கொண்டா... என்னோட கடைசி மூச்சுக்குள்ளே புது மூலைத்தோப்பைப் பார்த்திருவேன்ல..." கை நீட்டி வாங்கினார்.

எதிர்காலம் நம்பிக்கையாய் நடப்பட்டது.

(நன்றி : அமுதசுரபி)

July 04, 2012

வாரிசு

"ஊரே திமிலோகப்படும். அத்தனை பேரும் ஒத்தாசைக்கு வருவா. கறிகாய் நறுக்க மட்டும் பத்துப் பன்னிரண்டு மாமி. மூட்டைல வந்து இறங்கும் அத்தனை சாமானும். லிஸ்ட்தான் கொடுப்பார். 'டேய் என்னால ஒவ்வொன்னையும் செக் பண்ண முடியாது. உன்னை நம்புறேன். போனது, வந்தது... சொத்தை, சொள்ளை தலையில் கட்டிடாதே' ன்னு சிரிச்சுண்டு சொல்வார். சாமான் அனுப்பறவங்க பதறிப்போய்... 'அப்படி எல்லாம் அனுப்ப மாட்டோம்னு சொல்லுவா...'"

தலைமுடி எண்ணெய் வைத்து, சிக்கு பிரித்து, நடுவகிடு எடுத்து இருபுறமும் இணைந்து கொண்டிருக்க பாட்டியின் பேச்சு கூடவே.

"பிறகு?"

தலை பின்னுக்கு இழுக்கப்பட்டு இறுக்கமாய் முடி பின்னப்பட, வித்யா 'ஸ்ஸ்' என்றாள், அவளையும் மீறி.

"ஏண்டி... வலிக்கிறதா?"

"நை... நை..."

தமிழ் சரளமாய்ப் பேச வரவில்லை. பாட்டியுடன் பேசும்போது ஹிந்தி சட்டென்று வந்துவிடும். பாட்டி விழிப்பதைப் பார்த்து மொழிபெயர்ப்பு.

"பருப்பு... அரிசி... அடேயப்பா... அந்த ஒரு நாள் வருஷத்தில் என்னிக்கு வரும்னு... நாங்க காத்திருப்போம். பெரிசா... பந்தல் போட்டு... ஆயிரம் இலை.... அதுதான் கடைசிப் பந்தி வரைக்கும் அளவு குறையாம... அப்பாவுக்கு அதிலே ரொம்பக் கண்டிப்பு. இல்லைன்னு யாரும் சொல்லிடக் கூடாது."

"உங்களுக்குப் பிதாஜின்னா..."

"உனக்குக் கொள்ளுத் தாத்தா..."

"கொள்ளு..."

"ம்..."

"கொள்ளுன்னா... கியா ஹை மம்மி...?"

"ஆங்... குதிரைக்கு வைக்கிறது."

மாலதி சிரிக்காமல் சொன்னாள். "ஏய்.. குழந்தையைக் குழப்பாதடி. கிராண்ட் ஃ பாதர் மாதிரி... அதுக்கு அடுத்தது..."

"ஒ... கிரேட் கிராண்ட் ஃ பாதரா?"

"அம்மா! உன் பழைய கதையை ஏன் அவகிட்டே சொல்லிண்டு. அவளுக்குப் புரிய வைக்கிறதுக்குள்ளே..."

பேத்தியை இழுத்து அணைத்துக் கொண்டாள்.

"நானும் அவளும் என்னவோ பேசிக்கிறோம். நீ எங்கேயோ கோயிலுக்குப் போகணும்னியே. கிளம்பலையா?" 

"நான் அப்பவே ரெடி. பேத்திக்கு எப்ப அலங்காரம் முடிக்கப் போறியோன்னு காத்துண்டிருக்கேன்."

"போம்மா. முகத்தை அலம்பிண்டு வா..."

வித்யா எழுந்து போனாள். சீப்பில் சிக்கியிருந்த முடிகளைப் பந்து போல் சுருட்டிக் கொண்டு வாசல் பக்கம் போனாள் அன்னபூரணி.

"அம்மா... கிளம்பலையா?"

வாசலிலிருந்து குரல் கேட்டது. வித்யாவுக்கு மல்லிகைப்பூவை வைத்து விட்டவள் "இதோ... வரேன்" என்று குரல் கொடுத்தாள்.

"நைட்... சாப்பிடறதுக்கா?”

கிளறி வைத்திருந்த சேவையைப் பார்த்துக் கேட்டாள் வித்யா.

"உனக்கு வேணுமா?"

"தோடா..."

டெஸ்ட் பார்த்துவிட்டு 'ஹை...' என்றாள்.

"கோயிலுக்குப் போயிட்டு வந்து சாப்பிடலாம். நியூஸ் பேப்பர்... அதோ இருக்கு பாரு... எடுத்துண்டு வா..."

"அம்மா..." மாலதியின் குரல் மறுபடி கேட்டது.

"உங்க அம்மாவுக்குப் பொறுமையே இல்லை. சின்ன வயசிலேர்ந்து எப்பவும் பரபரப்பு... ஆனா... நீ என்னை மாதிரி... நிதானம்..."

"க்யா?"

"ஸ்லோ... ஸ்டெடி..."

பாட்டியின் ஆங்கில அறிவு பேத்திக்கு உபயோகப்பட்டது.

எண்ணெய்த் தூக்கு, விளக்குத் திரி, சூடம் என்று கூடை முழுதும் சாமான்கள்.

மூன்று தலைமுறைப் பெண்கள் தெருவில் இறங்கி கோயிலை நோக்கி நடந்தபோது பாட்டியை நெருங்கி வந்தாள் வித்யா.

"சொல்லு... பாட்டி"

"ஓ!... கதையா? உன்னோட கிரேட் கிரேண்ட் ஃ பாதர்... சலிக்காம அத்தனை பேருக்கும் சாப்பாடு போடுவார். நாங்கள்ளாம் கூடப் பரிமாறுவோம். சின்ன சின்னதா... கூட்டு... காய்... அப்பளம்னு... நான் எல்லாருக்கும் குடிக்கத் தண்ணி தருவேன். பாவாடை, சட்டை போட்டுண்டு... தடுக்கி விழாம இருக்க தூக்கிப் பிடிச்சுண்டு... வாட்டர் ஜக்கோட போவேனாம்... சொல்லுவா..."

பாட்டியின் கண்களில் பழைய நினைவுகள் பளபளத்தன. மாலை வெயில் மதிய வெயில் போல அடித்தது. சிலர் வீட்டு வாசல்களில் பெருக்கி, நீர் தெளிக்க முற்பட, புழுதி காற்றில் கலந்தது.

"தாத்தா வருவாரா... உங்களோட?"

"தாத்தாவா? அப்போ எனக்கு மேரேஜ் ஆகலை... ஆனா... தாத்தாவும் எங்க ஊர்தான். ஹெல்ப்லாம் பண்ண மாட்டார்" என்றாள் சிரிப்புடன்.

மாலதியை யாரோ பிடித்துக்கொண்டு விட்டார்கள். 'எப்ப ஊர்லேர்ந்து வந்தே? உம் பொண்ணா? அப்படியே... உங்கம்மா ஜாடை' காற்றில் மிதந்து வந்தன பேச்சுக் குரல்கள்.

"மம்மிக்கி நிறைய பிரெண்ட்ஸ்."

"அவ எப்பவும் இப்படி தெருவுலதான்... வீட்டுக்குள்ளே வரமாட்டா. சாப்பாடு நேரத்துல மட்டும்தான். உங்க தாத்தாவும் அவளை ஒண்ணும் சொல்லமாட்டார்."

"பாட்டி... பிறகு?"

“கிரேட் கிராண்ட் ஃ பாதர் வருஷம் தவறாம இதைப் பண்ணுவார். ஏன் பண்றீங்கன்னு யாரோ கேட்டா... சிரிச்சுண்டு பேசாம போயிட்டார். நான் விடலை... ஒரு நாள் நானும் கேட்டேன். 'ச்சீ... ச்சீ... போடி'ன்னார். அப்பல்லாம் ரொம்ப மரியாதை. நீ உன் டாடி மேல விழற மாதிரி - நாங்க இல்லை. தள்ளி நிப்போம். பேசவே பயம். நான் மட்டும் கொஞ்சம் செல்லம். அந்த தைரியம்... விடாம மறுபடி கேட்டேன்..."

வித்யா பாட்டியுடன் ஒட்டிக்கொண்டு நடந்தாள். கதை கேட்கிற சுவாரசியம்.

"சாப்பிட்டுட்டு போறப்ப... அவா... முகத்தைப் பார்த்திருக்கியொன்னார்... ம்ம்... யோசிச்சேன்... லேசா ஞாபகம்... என்னப்பான்னு கேட்டேன்... எத்தனை நிறைவு... திருப்தி... அதான்... அதுக்காகத்தான்... மத்தவா சொல்ற மாதிரி... புண்ணியம்... அது... இதுன்னு கணக்குப் பார்க்கற புத்தி இல்லை. அவா வயித்தை நிரப்பினா... அவா மனசை அந்த நிமிஷம் தொட முடியறதே... அந்த சந்தோஷம்தான்..."

பாட்டியின் குரல் தணிந்து மந்திரம்போல் வித்யாவுக்கு மட்டும் கேட்கிறமாதிரி ஒலித்தது. வித்யாவின் தமிழறிவு மீறி நேரடியாய் மனதைத் தொடுகிற வார்த்தைகள். பாட்டியின் பார்வை புரியாத வார்த்தைக்கும் அர்த்தம் சொல்லிக் கொண்டிருந்தது.

சந்நிதியில் விளக்கு ஏற்றி நமஸ்காரம் செய்தார்கள். வலம் வந்தார்கள். இருளில் தீப ஒளி மட்டும் பிரகாசிக்க ஸ்வாமியும், அம்பாளும் தரிசனம். 'கரெண்ட் இல்லை... கார்த்தால போச்சு. எப்ப வருதோ.'

பிரகாரத்தில் பூச்செடிகள். நந்தியாவட்டை, சரக்கொன்றை, செம்பருத்தி, அரளி, மந்தாரை என்று விதவிதமாய், ரகம் ரகமாய் வாசனை.

"ல்வ்லி..." என்றாள் வித்யா. கண்கள் மலர.

"இன்னும் உங்கம்மாவைக் காணோம்...பாரு."

"இங்கேயே உட்காரலாமா... பாட்டி?"

"இரு... இதோ... ஒரு நிமிஷம்..."

பூசைக் கூடையை எடுத்துக் கொண்டு பாட்டி கோயில் வாசல் பக்கம் போனதைப் பார்த்து வித்யாவும் பின்னால் ஓடினாள்.

சற்று ஒதுங்கி அமர்ந்திருந்த அந்தத் தம்பதி, வயசானவர்கள். வயது முதிர்ந்த ஒருத்தியின் அருகில் பார்வை மங்கிய முதியவர்.

பாட்டி கிளம்புமுன் கட்டிக்கொண்டு வந்திருந்த பொட்டலங்களை அவர்களிடம் தருவதைப் பார்த்தாள் வித்யா.

"என்ன பாட்டி?"

"ஸ்ஸ்... வா. உள்ளே போகலாம்."

வித்யா திரும்பிப் பார்த்தபோது அந்த வயதானவள் பொட்டலத்தைப் பிரித்து, சேவையை ஒரு பிடி எடுத்து முதியவரின் வாயில் ஊட்டி விடுவதைப் பார்த்தாள்.

பிரகார மண்டபத்தை நோக்கி பாட்டி நடந்து கொண்டிருந்தாள்.

அன்னபூரணி. வருஷத்துக்கு ஒரு தவம். ஆயிரம் பேருக்குச் சாப்பாடு.

"என்னால முடியலைடி. உங்க தாத்தாவுக்கு இதிலே இஷ்டம் இல்லை. அப்பவே கேலி பண்ணுவார். எப்பவாவது இரண்டு பொட்டலம். யாரோ இரண்டு பேருக்கு... என்னால முடிஞ்சது. எங்கப்பா ஞாபகமா. வேறொண்ணும் வேண்டுதல் இல்லை. 'அவர் பொண்ணா நீ? அன்னதானம் வெங்கட்ராமனோட பொண்ணா நீ? அன்னதானம் வெங்கட்ராமனோட பொண்ணா?'ன்னு எல்லாரும் கேக்கர்ச்சே உடம்பு ஆடிப் போகிறது. நானும் என் பங்குக்கு அணில் மாதிரி சின்னதா."

பாட்டியின் குரல் சந்தோஷத்தில் கேவியது.

மஞ்சள் வெயில் முகத்தில் பட்டு பாட்டியின் முகம் ஜொலிக்கிறபோது வித்யாவுக்குள்ளும் என்னவோ நிகழ்ந்தது.

(நன்றி : அமுதசுரபி)