January 31, 2011

குரூப் போட்டோ


எல்லோர் முகங்களிலும் பரபரப்பு. இருக்காதா பின்னே..
மூன்று வருடப் படிப்பு முடிந்து இனி அவிழ்த்து விட்ட கழுதைகளாகப் போகிறார்கள்.. அம்மாவின் மொழியில்.
'இன்னிக்குதான் குரூப் போட்டோ எடுக்கப் போறாங்களாம்..'
யார் பக்கத்தில் யார் நிற்பது என்று பேசிக் கொண்டதில் என் சாய்ஸ் குமார் தான்.
அவன் இல்லாவிட்டால் இந்த பிகாம் படிப்பை வெற்றிகரமாய் முடித்திருக்க மாட்டேன்.
முதல் வருடம் தேர்வு முடிந்து ரிசல்ட் வந்தபோது மார்க் மகா கேவலம்..
புரபசர் ஒவ்வொருவராய் தமது அறைக்கு அழைத்து டோஸ் விட்டுக் கொண்டிருந்தார்.
என் முறை வந்த போது சாப்பாட்டு நேரமாகி விட்டது. பசி வயிற்றைக் கிள்ளியது.
மனிதர் விட்டால் தானே..
'உன்னை பத்தி எவ்வளவு பெருமையா நினைச்சேன்.. தெரியுமா.. இந்த காலேஜுக்கு பேர் வாங்கித் தருவேன்னு .. '
வார்த்தைகள் என்னை அறைந்தன..
வெளியே வந்தபோது மற்றவர்களை விட அதிக பாட்டு வாங்கியது நான்தான் என்கிற விவரம் தெரிந்தது.
கொண்டு வந்த டிபன் பாக்ஸ் திறக்க மனசில்லை. அவமானம்.. கூச்சம்..
அப்போதுதான் குமார் வந்து என் அருகில் அமர்ந்தான்.
'கவலைப் படாத.. நாம சேர்ந்து படிக்கலாம்.. '
ஒரு நட்பின் பூர்ண பிம்பம் அப்போதுதான் எனக்கு அறிமுகம்.
என் சிறு பிள்ளைத் தனத்தில் சில நேரங்களில் அவன் எங்கள் வீட்டிற்கு படிக்க வரும் போது 'தலை வலிக்குது ' என்று மறுத்திருக்கிறேன். முகம் சுளிக்காமல்
திரும்பிப் போவான். மூட் இல்லை என்றால் 'நான் படிக்கிறேன் .. நீ கேள் .. போதும்..' என்பான்.
ஒரே ஒரு பர்ஸ்ட் கிளாஸ் .. பதினெட்டு செகண்ட் கிளாஸ்.. அந்த வருடம். அதில் பதினெட்டில் நானும் ஒன்று. குமாரால் சாத்தியமானது.
இன்று குரூப் போட்டோவில் அவனுக்கு பக்கத்தில் நிற்க ஆளைத் தேடினால் காணோம்.. என்ன செய்ய.. கடைசி நிமிடம் வரை அலைபாய்ந்து வேறு வழியின்றி நின்றாகி விட்டது.
கல்லூரி தோட்டத்தின் நடுவில் அமர்ந்திருந்தான். . தனியாக.
'ஏண்டா எங்கடா உன்னைக் காணோம்.. '
'போட்டோக்கு பணம் தர மாட்டேன்னு அம்மா சொல்லிட்டாங்க..'
'அட லூசு.. நான் தந்திருப்பேனே.. உன் பக்கத்துல நிக்க ஆசைப் பட்டேன் டா '
எனது அருமை குமார் மெல்ல சிரித்தான்.. பதில் இல்லை..
அவன் நட்பிற்கு விலையும் இல்லை..
இன்று இந்தப் படத்தைப் பார்க்கும்போது எல்லாம் அதில் நிற்பவர்கள் பற்றி நினைப்பு இல்லை .. நிற்காத குமார் தான் அழுத்தமாய் மனதில் இருக்கிறான்..

January 30, 2011

மயில்


அலுவலக வளாகத்தில் சர்வ சாதாரணமாக மயில்கள் சுற்றும். அதுவும் மாலை அலுவலகம் முடிகிற நாலரை மணிக்கு மேல் மனித நடமாட்டம் குறைகிற நேரத்தில் பெரிய தோகையை விரித்துக் கொண்டு ஸ்டைலாக போகும் காட்சி மிக அற்புதம்.
அன்றைய தின சோர்வை ஒரு நிமிடத்தில் மறக்கடிக்கிற நிகழ்வு அது.
நேற்று, இரு வார வவுச்சர் ஆடிட் முடிந்து கிளம்பியவர்களை வழியனுப்ப போனபோது மூன்று மயில்களின் அணிவகுப்பு..
சற்று முன் வரை நிகழ்ந்த விவாதம்.. பதில்கள் எல்லாம் மறந்து இயற்கையின் ஜாலம் காட்டிய பிரமிப்பில் நின்றோம் அப்படியே .
கனமான லெட்ஜர்கள்.. கணக்கிலடங்கா எண்கள் .. சரி பார்க்க வேண்டிய வரவு செலவுகள்.. எல்லாம் மூட்டை கட்டிப் போட்டு விட்ட அழகு ..
மனிதனுக்குள் இன்னமும் இயற்கை பற்றிய ரசனையும் , ஆர்வமும், பிரமிப்பும், தேடலும் மிஞ்சி இருக்கின்றன..
இது போதும்.. எப்படியேனும் உள்ளிருக்கும் மனிதத்தை உயிர்ப்பித்து விடலாம் என்றே நம்பிக்கை பிறக்கிறது நம்முள்..
தேவை எல்லாம் அதற்கான முயற்சிகளும்.. பொறுப்பானவர்களும்..

January 27, 2011

விடிவு


வவ்வால்களின் சிறகடிப்பில்

மிரண்டு கிடந்த நேரம்.

என்றோ நிகழ்ந்த பூஜைகளின்

அடையாளம் மட்டும் மிச்சமாய்..

கருவறைத் தெய்வம்

பேசும் துணையற்று ..

மதில் சுவர் இடிந்து

உட்பிரகாரம் சிதைந்து

செடிகள், மரங்கள் என

ஊடுருவிய இயற்கை ..

அவ்வப்போது வந்து போகிற

பாம்பும்..

வாசலில் விழுந்து கிடக்கிற

ஒற்றைக் கல்லில்

சுமையிறக்கி ஆசுவாசம் கொண்டு

வியர்வை கொப்பளிக்கும்

அவனோ..அவளோ..

சொல்லித்தான் செல்கிறார்கள்..தினமும்.

' இப்படியே இருக்க மாட்ட..

என்னிக்காச்சும் விடிவு வரும் ..

உனக்கும் எனக்கும்.'


January 23, 2011

கருணைவிரட்டாதீர்கள்..

அவர்கள் தான்

இந்த பூமியின் சொந்தக்காரர்கள்..

நமக்கு முன்னே குடியேறியவர்கள்..

நாம் பாதை போட்டதாய்

பெருமை அடித்துக் கொள்கிறோம்..

பாதைகள் பிளவு படுத்திய

பூமியை விட

மண்டிக்கிடந்த தாவரங்களுக்கு நடுவே

ஒன்றிக் கிடந்தவர்கள்.. அவர்கள்..

மிரண்டு விழித்தவர்களை

கொலை வெறியுடன் விரட்டி விட்டோம் ..

ஆறறிவுக்கு முன் தோற்றுப் போன

சிற்றறிவு ஜீவராசிகளை

நேசிக்க முடியா விட்டாலும்

வாழ விடலாம் கருணையுடன்.
January 19, 2011

ஸ்ரீரங்கம் யானை


மேரிபிஸ்கட் .. குட் டே பிஸ்கட் கொடுத்ததும் ஆசையாய் வாங்கி சாப்பிட்ட யானை, வாழைப் பழம் கொடுத்ததும் தூக்கிப் போட்டது!
பாகன் சொன்ன தகவல்..
'யானை ஓவர் வெயிட்டாம் .. 750 கிலோ வெயிட் கூடவாம் .
பிளட் பிரஷர் வேற இருக்காம். வாழைப் பழம் நோ .. '
டெய்லி வாக்கிங் போகிறதாம்..
********************************************************************
அபார்ட் மென்ட்டில் புதுசாய் ஒரு பைக் ..
எந்த வீட்டில் கேட்டாலும் 'என்னோடது இல்லை' என்றார்கள்.
அவ்வளவுதான் .. பீதி கிளம்பி விட்டது செகரட்டரிக்கு.
'திருட்டு பைக் .. நைசா இங்க வச்சுட்டு போயிட்டான்.' என்று சீரியல் பார்க்கிற மாமி பிரஷர் ஏற்றி விட ..
'போலிஸ் ல சொல்லிருங்க ' என்று ஒருவர் அறிவுரை சொல்ல ..
'வேணாம் .. உங்களை அலைக்கழிப்பாங்க ' என்று இன்னொருவர் தடுக்க..
மெல்ல மாடியிலிருந்து இறங்கி வந்த நண்பர் கொட்டாவியுடன் சொன்னார்.
'நைட் டூட்டி முடிஞ்சு லேட் ஆ வந்தேன்.. அதான் ப்ரெண்டு கிட்ட வண்டி வாங்கிட்டு ..'
பீதி கிளப்பியவர்கள் எஸ்கேப்!

January 18, 2011

தோழியாய்

தேர்முட்டி என்றதும் கிராமமும் திருவிழாவும் ஞாபகத்துக்கு வந்து விட்டன. ஒன்றுமில்லை. என் நண்பன் சரவணனின் கடிதம் இன்று வந்தது.

அகிலா-என் மகள் ஓடி வந்து, 'நான் தான் படிப்பேன்' என்று அடம் பிடித்தாள்.

தமிழ் படிக்க எப்படியாவது பழக்கப்படுத்த வேண்டும் என்கிற ஆசையில் எப்போதுமே அவளைத்தான் படிக்கச் சொல்வேன்.

"இந்தா.. நீயே படி"

"இனிய நட்பிற்கு.. காலமும் தூரமும் பிரித்து வைத்த நம்மை சேர்த்து வைக்கும் கடிதத்திற்கு நன்றியுடன். சரவணன். இந்த முறையாவது நீ திருவிழாவிற்கு குடும்பத்துடன் வருவாய் என்ற நம்பிக்கை எனக்கு. மங்கையும் திருச்செல்வியும் உங்களைப் பார்க்கும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

பாலா..நம் சிநேகிதி தெய்வானையை சந்தித்தேன். அவள் கணவனுடன் வந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் அவள் முகம் பிரகாசித்து அடங்கியது. எனக்கோ அவளைப் பார்த்த பரபரப்பில் அருகில் போய் வணக்கம் சொன்னேன். மங்கையும் அப்போது என்னுடன் இருந்தாள். தெய்வானையின் கணவருக்கு எங்களை அறிமுகம் செய்து கொண்டோம். எங்கள் வீட்டிற்கு அவர்களை அழைத்தேன். 'வர இயலாது' என்றார்கள்.

உன்னைப் பற்றி அவள் விசாரிப்பாள் என்று நினைத்தேன். ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நாங்களும் கிளம்பிவிட்டோம். எதற்கும் இருக்கட்டும் என்று என் விலாச அட்டையை அவளிடம் கொடுத்தேன். அதில் என் தொலைபேசி எண்ணும் இருந்தது. அவள் பேசுவாள் என்று நினைத்தேன். இன்றுவரை பேசவில்லை.

எப்படி பாலா.. பெண்கள் மட்டும் மாறிப் போய் விடுகிறார்கள்.. திருமணத்திற்குப் பின்னால்? பழைய நட்பு எல்லாம் அப்புறம் தீண்டத் தகாதவை தானா? மங்கையும் தெய்வானைக்கு ஆதரவாகத்தான் சொல்கிறாள். ஒரு பெண்ணின் நிலைமை உங்களைப் போல் இல்லை' என்கிறாள். அப்படித்தானா.. பாலா"

அகிலா படித்து முடித்ததும் என் கையில் கொடுத்து விட்டாள்.

"ஒண்ணுமே புரியலைப்பா.. மாமா என்ன எழுதியிருக்கார்.. யாருப்பா தெய்வானை.. உங்க கிளாஸ்மேட்டா.."

"ம்"

"திருச்செல்வி இப்ப நல்லா உயரமா என்னை மாதிரி இருப்பாளாப்பா"

"உன்னை விட உயரமா இருப்பா"

"போகலாமாப்பா"

"உங்கம்மாவைக் கேளு. அவங்க முடிவு தான் எப்பவும்"

"அம்மா.. திருச்செல்வியை பார்க்கப் போகலாமா"

"அப்பாவைக் கேளு.. அவர் என்ன சொல்றாரோ அதான்"

"போங்கப்பா.. "

அகிலா சிணுங்கியது ஒரு கவிதை!

இரண்டு பேரும் ஒரே நேரத்தில் ஓடி வந்து அவளைக் கட்டிக் கொண்டோம்.

"போலாம்மா"

தனிமையில் புவனா என்னைக் கேட்டாள்.

"யாருங்க அது தெய்வானை"

"எங்க கூட படிச்சவங்க"

"அழகா இருப்பாங்களா"

"உன்னை மாதிரி இருப்பாங்க"

"இந்த கிண்டல் தானே வேணாங்கிறது"

"நீ அழகுதானேப்பா"

"என்னை நீங்க அகிலா ரேஞ்சுலதான் வச்சிருக்கீங்க"

புவனாவிடம் ஏதோ சொல்லி சமாளித்து விட்டேன்.

தெய்வானை மனசில் இடம் பிடிப்பது யார் என்று அந்த நாட்களில் எனக்கும் சரவணனுக்கும் போட்டியே நடந்தது. நான் அவளுக்கு ஹோம் வொர்க் எழுதிக் கொடுத்தால், சரவணன் படம் வரைந்து கொடுப்பான்.

தேர்வு நாட்களில் அம்மன் குங்குமம் கொண்டு வந்து யார் முதலில் தருவது என்பதில் எங்களுக்குள் சண்டை எப்போதும்.

அவள் உடம்பு சரியில்லாமல் படுத்த ஒரு வாரமும் நாங்கள் எங்கள் வீட்டிற்கு போனதே கொஞ்ச நேரம்தான்.

வளர்ந்ததும் ஆளுக்கொரு திசையாகப் பிரிந்தோம். இப்போது மீண்டும் அவளைப் பற்றி பேச்சு.

கிராமத்துக்குப் போனோம். எங்களைப் பார்த்ததும் சரவணன் குடும்பம் குதூகலித்தது. திருச்செல்வி உயரம் தான் என்று தனியாக வந்து அகிலா என் காதில் சொன்னாள்.

திருவிழா கொண்டாட்டம் எல்லாம் எங்கள் எல்லோருக்கும் உற்சாகமாய் இருந்தது. தெய்வானையையும் பார்த்து விட்டோம்.

"அதோ பாரு"

சரவணன் கிசுகிசுத்தான்.

தெய்வானை, அவள் கணவர், மகள் மூன்று பேரும் நின்றிருந்தார்கள். என்னைப் பார்த்து விட்டாள். அவள் கண்களில் என்ன மின்னியது?

"புவனா அவங்க தான் தெய்வானை"

புவனா அவளைச் சற்று பொறாமையுடன் பார்த்தாள்.

"அழகாத்தான் இருக்காங்க"

அருகில் போனோம். என் குடும்பத்தாரை அறிமுகப் படுத்தினேன். ஒரு மணி நேரம் பேசினோம்.

சரவணன் கண்களில் பொறாமை லேசாகத் தெரிந்தது. 'எங்கிட்ட சரியாவே பேசல.. உன்னோட நல்லா பேசுறாங்க'

என் விலாசத்தைக் கொடுத்தேன். கூடவே என் கைபேசி எண்ணும். தெய்வானை உடனே அதைத் தன் கைபேசியில் ஏற்றி.. ஒரு மிஸ்டு கால் கொடுத்தாள்.

'நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை..' என் மொபைல் பாடியது.

"நம்பர் சரியா அடிச்சிருக்கேனான்னு செக் பண்ணேன்" என்றாள் சிரிப்புடன்.

விடை பெற்றுக் கிளம்பும் போது புவனா கேட்டாள்.

"உங்க பொண்ணு பேரு சொல்லவே இல்லியே"

தெய்வானை மெதுவாக ஆனால் அழுத்தமாகச் சொன்னாள்.

'சரவணபாலா'

எங்கள் பால்யம் அந்த நிமிஷம் மீண்டும் உயிர் பெற்று எழுந்த மாதிரி இருந்தது அப்போது.

January 16, 2011

மரம்


எல்லா மரங்களும்
விசேஷம்தான் ..
அதிலும் குறிப்பாய்
ஆற்றங்கரை ஒட்டிய
மரங்கள்..
ஈரம் இயல்பாய் படர்ந்த
சூழல்..
இலைகளில் என்னவொரு
மினுமினுப்பு..
விண்ணைத் தொடும்
பிரும்மாண்டம் ..
உதிரும் சருகுகள்
ஆற்றில் கதை பேசிப் போகும்..
சாலையில் வெட்டுப்படும் அபாயம் ..
ஆற்றங்கரை மரங்களுக்கு இல்லை..
நீருக்குள் கால் வைத்து
கிளைகளால் காற்றைத் தடவி..
மூச்சால் சேதி சொல்லி
எத்தனை பிறப்பு இறப்பு பார்த்த
மரங்கள்..
கட்டிப் பிடிக்க நினைத்தாலும்
முடியாத ஆகிருதி ..
விழுந்து வணங்க கூச்சம்..
என் நேசிப்பை எப்படி சொல்ல?!
January 09, 2011

சிவாவின் காதல்

சிவராம கிருஷ்ணனைப் பார்த்ததும் எனக்குக் கொஞ்சம் அதிர்ச்சிதான். என் பள்ளி நாட்களில் என்னோடு படித்தவர்களை எங்காவது பார்க்க நேர்ந்தால் அதுவும் அவர்கள் என் ஞாபகத் திரையில் இருந்தால் தனி உற்சாகம்தான். இவனைப் பார்த்தது ஒரு கல்யாண மண்டபத்தில்.
"மோர்க்குழம்பு யார் கேட்டது" என்று எவர்சில்வர் வாளியுடன் வந்து நின்றான்.
"எனக்குத்தான்" என்று கை உயர்த்தி.. அட.. இது நம்ம சிவா!
சட்டென்று வாளியுடன் ஓடி விட்டான்.
"என்ன.. ஊத்தாம போறாரு" என்றார் பக்கத்து இருக்கைக்காரர்.
"ம்"
கை கழுவிக் கொண்டு வந்து அவனைத் தேடினேன். சமையலறை உள்ளே.. ஸ்டோர் ரூமில்.. எங்கு பார்த்தாலும் ஆள் இல்லை. எனக்கு என்னவோ அவன் எங்கேயோ நின்று கொண்டு என்னைக் கவனிப்பது போலவே ஒரு பிரமை.
மணமக்களை வாழ்த்தி, அன்பளிப்பு கொடுத்து, குரூப் போட்டோ எடுத்துக் கொண்டு தேங்காய் பையுடன் வெளியே வந்து விட்டேன்.
கொஞ்ச நேரம் தெரு முனையில் நின்று விட்டு பிறகு மண்டபத்திற்குள் போனேன். எதிர்பார்த்த மாதிரியே அவன் வாளியுடன் ஒவ்வொரு இலையிலும் எதையோ பரிமாறிக் கொண்டிருந்தான்.ஒதுங்கி நின்று அவனைக் கவனித்தேன். கொஞ்சங்கூட மாறவே இல்லை. அதே ஒல்லி. அதே கோண வாய் சிரிப்பு. கண்கள் மின்னியது மட்டும் மிஸ்ஸிங்க்.
அவன் சற்று ஓய்வானபோது அருகில் போனேன்.
"சிவா"
அவன் கையைப் பிடித்துக் கொண்டு விட்டேன் ஓடி விடாமல் இருக்க.
"ம்"
"ஏண்டா என்னைப் பார்த்து ஓடற.. நான் சீனிடா.. உன்னோட படிச்சேனே"
"ம்"
"உன்னை மறுபடி பார்ப்பேன்னு நினைக்கலடா.. இன்னிக்கு எதிர்பாராம உன்னைப் பார்த்ததுல ரொம்ப சந்தோஷம்டா"
"ம்"
என் உற்சாகம் அவனிடம் பிரதிபலிக்கவில்லை. அது புரிந்ததும் எனக்குள் உறுத்தல்.
"என்னடா சிவா ஏன் டல்லா இருக்க"
"வரட்டுமா.. வேலை இருக்கு"
"உங்க வீட்டுக்கு வரணும்டா. அம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. உனக்கு ஞாபகம் இருக்கா.. ஒரு நாள் நான் கோவிச்சுகிட்டு வீட்டுல சாப்பிடாம வந்திட்டேன். அப்ப உங்க அம்மா எனக்கும் சாப்பாடு போட்டாங்களே.."
பழைய நினைவுகளில் திளைத்து என் கண்களில் ஒரு நினைவுப்படலம். அந்த நிமிஷம் அவன் எங்கோ நகர்ந்து போய் விட்டான் மறுபடி.
"என்ன ஸார்.. யாரை தேடறீங்க"
"சிவா.. சிவராமகிருஷ்ணன்"
"அவனா.. கிறுக்குப் பய.. இங்கேதான் இருப்பான்"
"அவர் வீடு எங்கேன்னு தெரியுமா"
"எதுக்கு ஸார்.. ஏதாச்சும் கடன் வாங்கிட்டு திருப்பித் தரலியா"
"சேச்சே.. நான் அவர் கூட படிச்சேன்"
"ஓ.. அவன் படிச்சிருக்கானா.."என்றார் கேலியாக.
"அவர் வீடு எங்கே"
விலாசம் சொன்னார். வெளியே வந்தேன். பக்கத்தில் தான். நடக்கிற தூரம். அந்த நாளில் ஈபி ஆபிஸ் இருந்த சந்து. கரண்ட் பில் கட்ட அம்மா என்னை அனுப்புவார்கள்.
அப்போதுதான் சிவா வீடு அங்கே இருந்தது எனக்குத் தெரிய வந்தது. வாசலில் நின்று பம்பரம் விட்டுக் கொண்டிருந்தான். 'அப்பீட்' என்று நிமிர்ந்தவன் என்னைப் பார்த்ததும் அதட்டினான்.
"இங்கே எதுக்குடா வந்தே"
"ஈபி பில் கட்ட வந்தேன்டா.. உங்க வீடாடா"
"போடா.."
அவன் அம்மா அந்த நிமிடம் வெளியே வந்து விட்டார்.
"யாருப்பா அது"
"சிவா கூட படிக்கறேம்மா"
"அப்படியா.. ஏண்டா வெளியே நிக்க வச்சு பேசற.. தம்பி.. உள்ளே வாப்பா"
சிவா என்னைப் பார்த்த பார்வையில் அதட்டல் தெரிந்தது.
"இல்லம்மா . அப்புறம் வரேன்.. ஈபி பில் கட்டணும்"
"நல்லா படிக்கிறானாப்பா இவன்"
"மேத்ஸ்ல மார்க் குறைஞ்சிட்டான்மா"
"கணக்குல நூறுன்னான்.. "
சிவா உடனே என் மேல் பாய்ந்தான். என்னைத் தள்ளி விட்டு மணலில் புரட்டினான்.
"மாட்டி விடறியா..இருடா.. உன்னை.."
அவன் அம்மா வேகமாய் வந்து விலக்கி விட்டார்.
"ராஸ்கல்.. பொய் வேற. போடா.. நீ போப்பா தம்பி"
சட்டை எல்லாம் மண். தட்டி விட்டுக் கொண்டு கீழே விழுந்த கார்டை எடுத்துக் கொண்டு நடந்தேன். திரும்பி அதே வழியாகத் தான் வந்தேன். சிவாவைக் காணோம். அவன் அம்மா என்னைப் பார்த்து விட்டார்.
"இந்தாப்பா.."
கை முறுக்கு கொடுத்தார்.
"அவனைப் பார்த்துக்கப்பா.. படிப்புல அக்கறையே இல்லப்பா.. இவனை நம்பித்தான் இருக்கேன்"
தலையாட்டினேன். சிவா எல்லாப் பாடத்திலும் மார்க் குறைவுதான். அதைச் சொன்னால் இன்னும் மன வருத்தப்படுவார்.
மறுநாள் சிவாவிடம் சொன்னேன்.
"நல்லா படிடா.. நான் வேணா உனக்கு ஹெல்ப் பண்ணவா.."
"உன் வேலையைப் பார்த்துட்டு போ"
"அம்மா உன்னைப் பத்தி கவலைப்படறாங்கடா"
"எங்கம்மாவா.. உங்கம்மாவா"
"உங்கம்மாதான்டா"
"அதைப் பத்தி நீ கவலைப்படாதே"
படிப்பு விஷயம் தான் இப்படி என்றால் அடுத்ததாய் இன்னொரு சிக்கலும் எங்கள் ஆண்கள் பள்ளியை ஒட்டித்தான் பெண்கள் மேனிலைப்பள்ளியும். இரு பள்ளிகளுக்கிடையில் பொதுவான காம்பவுண்டு சுவர். இங்கிருந்து அங்கே போக ஒரு வாசல்.
கலாவதி என்கிற பெண்ணுக்கு அப்போது ரசிகர்கள் அதிகம். ரெட்டை ஜடையும் மை தீட்டிய கண்களுமாய் அவள் வரும்போதே பசங்களுக்கு கிறுகிறுப்பு. அவள் மேல் சிவாவிற்கு லவ் இருப்பது எனக்கு மட்டும் தெரியவில்லை. காரணம் அதே காதல் என் கண்ணையும் மறைத்திருந்தது. ஏகப்பட்ட பிழைகளுடன் ஒரு லவ் லெட்டர் எழுதி அவள் வரும்போது எதிரில் போட்டு விட்டு ஓடினேன். அது இருட்டி விட்ட நேரம். அவர்கள் வீட்டுப் பக்கம் போனதும் திரும்பி ஓடி வந்ததும் யாருக்கும் தெரியாது என்றுதான் நினைத்தேன். ஓடி வரும்போது யார் மீதோ இடித்துக் கொண்டு வந்தேன். பிறகுதான் புரிந்தது. அது சிவா என்று.அவனும் இதே போல அவளைப் பார்க்க வந்திருக்கிறான். என்னைப் பார்த்தானா இல்லையா என்று புரியவில்லை. கையில் கடிதத்துடன் கலா நிற்கும்போது எதிரில் இவன் போயிருக்கிறான். லெட்டரைப் போட்டுவிட்டு அவன் தான் திரும்பி வந்து பார்த்திருக்கிறான் என்று நினைத்து விட்டாள்.இதெல்லாம் பழைய கதை. எனக்குத் துணிச்சல் போதாமல் அப்புறம் சமர்த்தாய்ப் படிப்பு முடித்து, அப்பா, அம்மா பார்த்த பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு, பிறந்த பெண்ணுக்கு கலாவதி என்று பெயர் வைத்தேன்.
இப்போது சிவாவைப் பார்த்ததும் பழைய நினைவுகள் பீரிட்டன. அவன் விலாசமும் கிடைத்து விட்டது. அவன் அம்மாவைப் பார்க்க வேண்டும். கதவைத் தட்டினேன்.
"அம்மா"
"யாரு."
"சீனிம்மா.. சிவா கூட படிச்சவன்.."
கதவைத் திறந்து.. கலாவதி நின்றாள்.
"நீ.."
"ம்.. "
கலாவதியின் மீதான சிவாவின் காதல்தான் உண்மையான காதல். நான் காதலை உதறிவிட்டு போய்விட்டேன். சிவா படிப்பு வராவிட்டாலும் காதலில் உறுதியாய் இருந்திருக்கிறான். கலாவதி சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
"அவங்க அம்மா இப்போ இல்லை.. தவறிட்டாங்க"
என்ன சொல்வதென்று புரியாமல் விடை பெற்றேன்.
என் வேலை.. கை நிறைய சம்பளம்.. மதிப்பு.. எல்லாம் அந்த நிமிடம் வேடிக்கையாய் இருந்தது.. சிவாவின் காதல் எதுவுமில்லாமலேயே ஜெயித்துவிட்டதைப் பார்த்தபோது.
(தேவியில் இந்த வாரம் பிரசுரம்)

January 06, 2011

பயணத்தில்..

தார்ச் சாலையில்
பரப்பப் பட்டிருக்கும்
தானியங்களை
காரில் கடக்கும் போது
கூசிப் போகின்றன
உள்ளிருக்கும்
கால்களும் .
January 02, 2011

அசல்என் பிம்பங்களில்

உனக்குப் பிடித்திருந்த

ஒன்றைத்

தேர்ந்தெடுக்கச் சொன்னேன்

உன்னிடம்.

நிராகரித்தவை போக

உனக்குப் பிடித்ததாய்

ஓரிரண்டைச் சொன்னாய்.

அதெல்லாம் நான் உன்னிடம்

உண்மை பேசியபோது

பதிவான

என் அசல்கள்.