September 21, 2011

குட்டி நாய்




”வீட்டுக்கு போலாமா..”

“இன்னும் கொஞ்ச நேரம் தாத்தா”

“அரை மணி தானே சொன்னே.. இப்ப ஒரு மணி நேரம் ஆச்சு”

“பிளீஸ் தாத்தா”

பூங்காவின் பெஞ்சில் அமர்ந்திருந்தார்கள். சறுக்கு மரம் ஆடியாகி விட்டது.

மஞ்சள் பூக்களைத் திரட்டி யானை பொம்மைக்கு போட்டு அழகு பார்த்தாகி

விட்டது. முன்பெல்லாம் ரேடியோ அலறிக் கொண்டிருக்கும். செய்திகள்

வாசிப்பது சரோஜ் நாராயணசாமி .. இப்போது ரேடியோ இல்லை.

”தாத்தா..”

“என்னடா”

“அங்கே பாருங்க”

“நில்லு.. ஓடாதே”

அவன் ஓடிய திசையில் ஒரு குட்டி நாய். திசை தப்பி வந்த பறவை போல..

கண்களில் ஒரு மிரட்சி..

“நம்ம வீட்டுக்குக் கொண்டு போலாமா”

‘வேண்டாம்’ என்று சொல்ல நினைத்தவர் சொல்லவில்லை.

“ம்” தலையாட்டினார்.

“அது என்ன சாப்பிடும்”

“நீ என்ன சாப்பிடுவே”

“பால்.. பிஸ்கட்.. பருப்பு சாதம்..”

“அதுவும் இதெல்லாம் சாப்பிடும்”

”எங்கே படுக்கும்”

“தனியா பெட் போடலாம்..”

“ஸ்வீட் தாத்தா”

இப்போது அவன் கவனம் முழுக்க அந்த நாயின் மேல். அது இவனிடம் ஒட்டிக் கொண்டது. பின்னாலேயே ஓடியது. அல்லது அவன் அதன் பின்னால் ஓடினான்.

இன்னும் ஒரு கால் மணி கரைந்தது.

மெல்ல இருட்டுவதற்கான ஆயத்தங்களை வானம் செய்ய ஆரம்பித்தது.

லைப்ரரியில் புத்தகம் எடுக்க வந்திருந்தேன். எடுத்தாகி விட்டது.

சா. கந்தசாமியின் ‘அவன் ஆனது’ மறு வாசிப்பிற்காக.

கிளம்பும்போது அந்த நாய்க்குட்டி.. பொடியன்.. தாத்தா. எதிர் பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்த்தேன்.

கிளம்பணும்.. கிளம்பணும் என்று சொன்னவர் நிதானமாய்த்தான் இருந்தார்.

குரலில் அதட்டல் இல்லை.

“போலாமா.. இருட்டப் போறது”

“ம்..”

“நாய்க் குட்டிய என்ன பண்ணலாம்”

‘ம்ம்’

யோசித்து சொன்னான்.

“விட்டுட்டு போயிரலாம்.”

“ஏண்டா.. ஆசைப்பட்டியே”

“அதோட அம்மா தேடுவாங்க”

தாத்தா பேச்சிழந்து போனார். அதே நேரம் அவருக்குத் தெரிந்தவர் போலும்..

ஒருவர் அவரைப் பார்த்து விட்டார்.

“கணேசா.. நான் ஊர்ல இல்லடா.. என்னடா இப்படி ஆயிடுச்சு”

தாத்தா தம் நண்பனிடம் ‘வேணாம்’ என்பது போல உதட்டில் விரலை வைத்துக்

காட்டினார். அதைக் கவனிக்கும் பொறுமை இல்லை வந்தவரிடம்.

“உன் மாட்டுப் பொண்ணு.. ஆக்சிடெண்ட்ல போயிட்டாளாமே.. இந்த

பச்சைக் குழந்தைய விட்டுட்டு.. ஆடிப் போயிட்டேண்டா”

பூங்கா வாசலில் வந்த ஆட்டோவை கை தட்டி நிறுத்தினார் கணேசன் தாத்தா.

பேரனை இழுத்துக் கொண்டு ஏறி.. ஆட்டோ விர்ரென்று போனது.

திகைத்துப் போய் வந்தவர் நிற்க.. குட்டி நாய் ஆட்டோ பின்னால் சற்று தூரம் ஓடி நின்றது.

வெளியே வந்தேன். மனசுக்குள் இருட்டு கவிழ ஆரம்பித்திருந்தது.




September 17, 2011

அன்பின் மொழி




ஒரு நீண்ட முனகலுக்குப் பின்
வெளியே வந்தோம்.
மனப் பறவை கூடு விட்டு
வெளியே பறந்திருந்தது..
இருட்டி, இடி மின்னல் என
குமுறி விட்டுப் போயிருந்தது வானம்.
கால்கள் நனைய
விரல்களின் வழி
ஜில்லிப்பு ஏறத் துவங்கியது..
வெளிறிட்ட வானம்
அதுவரை ஒளிந்திருந்த
மனிதரை
வெளியே அழைத்தது..
குருவிகளின் சிறகடிப்பு
எங்கள் தலைக்கு மேல்..
காதல் பேசிய காலங்களின்
சிறகசைப்பு எங்களுக்குள்ளும்..
குழந்தைகளானோம்..
அவள் கரம் பற்றி எனதும்
உயர்ந்து நிமிர..
அத்தனை பறவைகளும்
போட்டியிட்டு வந்தன..
வெளியே தெரியாமல்
எங்கள் மனப் பறவையும்
இணைந்த கரங்களின் வழியே
அதன் கூட்டுக்குள் நுழைந்து
கேலி செய்தது..
அன்பின் மொழி பேசி!




September 12, 2011

பசங்க


பயமறியாது ஓடி வந்து
பேருந்தில்
தொற்றிக் கொள்ளும்
பள்ளிச் சிறுவர்களைப்
பார்க்கும்போதெல்லாம்...
ஓட்டுநரின் கால்களில்
மானசீகமாய் விழுகிறது
மனசு..
‘பார்த்து ஓட்டுய்யா’


ஆரவாரமின்றி கடந்து போக
நினைக்கும் மனசு..
முந்திச் செல்லும்
ஊர்தியில்
பள்ளிக் குழந்தைகள்
கையசைப்பில்,
பால்யம் திரும்பி
துள்ளாட்டம் போட
ஆரம்பித்து விடுகிறது
என் இரு சக்கர வாகனமும்..
அனல் கொதிக்கும்
சாலையில்!

September 09, 2011

சைக்கிள்


சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ள நினைத்தபோது பாபு (எ) ராஜகோபால் தான் நினைவுக்கு வந்தான்.
எதிலுமே தடாலடி. தெரு கவுன்சிலர் பெண்ணையே கலாய்த்தவன். அதுவும் இவனைப் பார்த்தால் வெகுளியாய் சிரிக்கும்.
எனக்குத் தெரிந்து சுமாராய் சைக்கிள் ஓட்டிய முதல் நபர் எங்கள் தெரு எலிமெண்ட்ரி ஸ்கூல் வாத்தியார்.
வீட்டு வாசலில் அவர் ஏற முயற்சிக்கும்போது, அரை பர்லாங் தள்ளி யாரோ நடந்து வருவது.. ஏதேனும் ஒரு வாகனம் கண்ணில் பட்டால் இறங்கி விடுவார். பெடல் செய்து ஏறினால் சுலபம் என்று யாரோ சொன்னதைக் கெட்டியாய் பிடித்துக் கொண்டு பாதி தெரு வரை தார் ரோட்டில் காலைத் தேய்த்து புது ரோடு போட வேண்டிய அவசியம் உண்டாக்கிவிடுவார்.
’ரொம்ப ஈசிடா’
பாபு தைரியம் கொடுத்தான். ரகசியமாய் சிகரட் பிடிப்பான். எங்கள் மத்தியில் அவன் பிடிக்கும்போது ‘வளையம் விடு’ என்று நேயர் விருப்பம் வைப்போம்.
அவன் எங்காவது போக வேண்டியிருந்தால் அப்போது வருவான்.
‘வாடா.. கத்துத் தரேன்’
ஏறத்தெரியாது. இறங்கத் தெரியாது. ஆனால் எப்படியோ ஓட்ட மட்டும் கற்றுக் கொண்ட நேரம் அது.
பாபு பிடித்துக் கொள்ள நான் ஏறி ஓட்ட ஆரம்பித்ததும் அவன் லாவகமாய் (லாகவமா, லாவகமா என்கிற குழப்பத்தை நண்பர் சௌரிராஜன் தான் அழகாய் தீர்த்து வைத்தார். லவ்.. லாவகம் .. இப்படி ஞாபகம் வச்சுக்குங்க. அவரிடம் கேடகல.. லகுவாய் இருப்பதால் லாகவம்தானே என்று. லகுவை விட லவ் பிடித்துப் போனதால்) ஏறி அமர்ந்து இடத்தைச் சொல்லுவான்.
இறங்கப் போகிற இடம் வந்ததும் அவன் குதித்து சைக்கிளைப் பிடித்துக் கொள்ள நான் குதிப்பேன்.
இரண்டு சம்பவங்கள் மறக்க முடியாதவை.
மேலூர் சாலையில் ஓட்டிப் போனபோது எதிரில் ஒரு பாட்டி தடி ஊன்றி நடந்து வந்தார். என் சைக்கிளுக்கு அவர் மேல் என்ன பாசமோ.. பாபு எச்சரித்தான். ‘பார்த்து ஓட்டுடா.. பாட்டி’
அரைகுறையாய்க் காதில் வாங்கிக் கொண்டு பாட்டி மீது விட்டேன்.
குச்சி இரண்டாக உடைந்து விட்டது. பாட்டிக்கு எந்த சேதாரமும் இல்லை.
‘கட்டைல போக’ என்றார் ஸ்பஷ்ட்மாக.
இனி நன்றாக ஓட்ட வரும் என்று தைரியம் வந்தது! பாட்டியின் ஆசிர்வாதம்.
அடுத்த சம்பவம். சைக்கிளை போட்டுக் கொண்டு விழுந்து காலில் சிராய்ப்பு.
வண்டிக்கும் அடி.
‘என்னடா பண்றது..’
“கடைக்காரர் உன்னை பெண்டு நிமிர்த்திடுவார்..” என்றான் பாபு சைக்கிள் பெண்டை முடிந்தவரை நிமிர்த்திக் கொண்டு.
கஷ்ட காலத்தில் குறுக்கு புத்தி சரியாக வேலை செய்கிறது.
கடைக்கு ஐம்பதடி வரை தள்ளிக் கொண்டு போய்.. டக்கென்று குரங்கு பெடல் அடித்து.. கடை வாசலில் லாவகமாய் (!) நிறுத்தி..
“எவ்வளவுண்ணே”
பேரம் பேசாமல் பைசாவைக் கொடுத்து விட்டு முட்டி வலி கூடப் பார்க்காமல்
வேகமாய் ஓடி வந்து விட்டேன்.
பத்தாவது நிமிஷம் பஞ்சாயத்துக்கு கடைக்காரர் வீட்டுக்கு வந்து விட்டார்.
‘என்ன தம்பி.. வண்டிய டாமேஜ் பண்ணிட்டு நைசா கொண்டு வச்சிட்டீங்க’
‘அப்படியா.. நல்லாத்தானே இருந்திச்சு.. ஓட்டிகிட்டு வந்தேனே’
பக்கத்தில் நின்ற என் சுற்றம் என் அப்பாவித்தனத்தைப் பார்த்து ‘உலக நாயகன்’
பட்டம் கொடுக்க நினைத்தபோது..
‘ஒழுங்கா ரிப்பேர் காசு கொடுத்துருங்க’
கொடுத்து அனுப்பி விட்டார்கள்.
‘கடைல இனிமே எடுக்காத.. பக்கத்து வீட்டு சைக்கிள்ல கத்துக்க’
அந்த சைக்கிள் மேலே ஏறி அமர காலைத் தூக்க்க்க்க்க்கி.. கிட்டத்தட்ட திரிவிக்கிரம அவதாரமே எடுக்க வேண்டும். அதை ஓட்டியவர் ரெங்காராவ் கெட்டப்பில் ஆறரை அடி உயரம்.
இரவல் கொடுக்கக் கூடாது என்றே அப்படி ஒரு சைக்கிள்.
சீட்டில் இருந்தால் பெடல் பண்ண முடியாது. பெடல் பண்ண கீழிறங்கினால்.. இரவு தூக்கத்தில் யாரையாவது உதைத்துக் கொண்டிருப்பேன் வலி பொறுக்காமல்.
இரண்டு கையும் விட்டு அழகாய் ஓட்டிப் போகிறவர்களைக் கண்டால் உள்ளூர பொறாமையும், பிரமிப்பும் வருகிறது இப்போதும்.





September 05, 2011

காளியம்மாள் டீச்சர்

இரண்டாம் வகுப்பு.
வீட்டில் எதற்கோ கோபித்துக் கொண்டு சாப்பிடாமல் பள்ளிக்கு வந்து விட்டேன்.
(அந்த வயசிலேயே கோபமா என்று நீங்கள் புருவம் சுழிப்பது தெரிகிறது.)
நேரம் ஆக ஆக பசி வயிற்றைக் கிள்ளியது.
வகுப்பு ஆசிரியை காளியம்மாள் எனக்கு மிகவும் பிடித்தவர்.
அவர் பாடம் நடத்தும் போது கவனம் வேறெங்கும் போகாது .
இன்று பசியில் நெளிவதை அவர் கவனித்தாரா என்று தெரியவில்லை.
மணி பதினொன்று.
வகுப்பு அறை வாசலில் யாரோ.
"டீச்சர் .. டீச்சர் " என்று சக மாணவர்கள் கத்துவது கேட்க நானும் நிமிர்ந்து பார்த்தேன்.
என் அத்தை.
டீச்சர் அவரிடம் என்ன விஷயம் என்று விசாரிக்க, நான் கோபத்தில் சாப்பிடாமல் வந்த விவரம் அத்தனை பேருக்கும் தெரிந்து விட்டது.
'அவன் பசி தாங்கமாட்டான். அதான் நான் வந்தேன் .. " என்றார் அத்தை.
காளியம்மாள் டீச்சர் என்னைப் பார்த்தார்.
'ஏண்டா சாப்பிடலியா .. அப்படி என்ன கோபம் ' என்கிற விசாரணை எதுவும் இல்லை.
'போ.. போ.. சீக்கிரம் சாப்பிடு '
வராண்டாவில் என்னை உட்கார வைத்து நெய் மணக்க ரசம் சாதம், தொட்டுக் கொள்ள கீரை .. ஊட்டியே விட்டார் அத்தை.
டிபன் பாக்ஸ் தெரியாமல் கண்ணீர் மறைத்தது.
பைப்பில் வாய் துடைத்து விட்டு உள்ளே அனுப்பினார்.
என் இருக்கையில் வந்து அமர்ந்தபோதுதான் டீச்சர் சொன்னார்.
'அட.. அசடு.. என்ன கோபம் வந்தாலும் பட்டினி கிடக்காதே '
இன்றும் ரசம் சாதம் நெய் மணக்கும்போது காளியம்மாள் டீச்சரும் கல்யாணி அத்தையும் நினைவில் வந்து போகிறார்கள்.
இரண்டு பேரும் ஒரே பாடம் கற்றுக் கொடுத்தவர்கள்.
'பட்டினி கிடக்காதே '

ஆசிரியர் தின நல் வாழ்த்துகள்.




September 01, 2011

பூஜாவும் பவனும்


அவர் ரொம்ப நேரமாய் தயங்கித் தயங்கி நின்றிருந்தார்.

‘போம்மா.. அந்த தாத்தாக்கு என்ன வேணும்னு கேளு’ என்றேன் இரண்டரை வயது பூஜாவிடம்.

கையில் வைத்திருந்த விளையாட்டு பொம்மையுடன் (பெயர் பவன்) போனாள்.

‘தாத்தா என்ன வேணும்..’

அவருக்கு இவளிடம் கேட்கலாமா, வேண்டாமா என்ற யோசனை.

‘சொல்லுங்க.. என்கிட்டே சொல்ல வேண்டாம்னா பவன் கிட்ட கேளுங்க’

அது யாரு பவன் என்று விழித்தார்.

‘பவன் தெரியாதா.. ’

கையில் வைத்திருந்த பொம்மையை உயர்த்திக் காட்டினாள்.

‘இவன் தான்.. அவனுக்கு எல்லாரும் ப்ரெண்ட்ஸ்’

வந்தவர் ஏதோ கேட்க, அந்த வீட்டுச் சிறுமியின் பேரைத் தற்செயலாகச்

சொன்னதும் பூஜாவே கொண்டு போய் விட்டாள்.

அபார்ட்மெண்ட்டில் குடியிருக்கிற யாரைப் பற்றி கேட்டாலும் அவளுக்குத்

தெரிகிறது.

புவனாவிடம் சொன்னேன்.

‘பாரேன்.. இந்த வாலு அத்தனை பேரையும் தெரிஞ்சு வச்சிருக்கு..’

புவனா கொடுத்த நோஸ்கட்..

‘உங்களையே பூஜா அப்பான்னாதான் தெரியும்.. இங்கே.. பேங்க் மேனேஜர்னு

அலட்டல் செல்லாது.. ‘

திரும்பிப் பார்த்தேன்.

சாயம் போன ‘பவனுடன்’ பூஜா ரொம்ப சுவாரசியமாய் பேசிக் கொண்டிருந்தாள்.

குழந்தைகளின் உலகம் இனிமையானது..


(எதிர் வீட்டு குழந்தையை கவனித்ததில் கிடைத்த கதை)