March 31, 2012

உதவி

இந்த முறை நிச்சயம் ஏமாறக்கூடாது. இந்த நினைப்பில் உதட்டைக் கடித்துக் கொண்டு எதிரில் நின்றவனை அலட்சியப்படுத்தினேன். விட்டால் அழுதுவிடுவான் போலிருந்தான்.

"ஸார்... உங்களைத்தான்."

"சொல்லு.." என்றேன், கொஞ்சங்கூட இளகாத குரலுடன்.

"அம்மாவுக்கு ரொம்ப முடியலே ஸார். அந்த ஊசியைப் போட்டே ஆவணுமாம். என் கையில சுத்தமா பைசா இல்லே" என்று அழுதான்.

ஒரு நாள் இரவு சினிமா பார்த்துவிட்டுத் திரும்பியபோது பழக்கமான ஆட்டோ டிரைவர்தான் அவன். அடுத்த தெருவில் எங்கோ குடியிருப்பதாகச் சொன்னான்.

இத்தனை வீடுகளில் என்னை எப்படித் தேடிப் பிடித்தான். இவன் மட்டுமல்ல, எத்தனை நபர்கள்!

"சாப்பிட்டு நாலு நாளாச்சுங்க"

"பர்ஸை தொலைச்சிட்டேன். ஊருக்குப் போவணும்"

"நாலு குழந்தைங்க வேலை போயிருச்சு. ஒரு வாரமா அல்லாடறோம்."

"மாரியம்மன் கோவில்ல கஞ்சி ஊத்தறோம்."

விதவிதமாய் வேண்டுகோள்கள்! ஐந்து, பத்து, இருபது, ஐம்பது என்று எப்படியாவது பேசி மனதை உருக வைத்து பணத்தைக் கறந்து கொண்டு போய் விடுகிறார்கள்.

பிரேமா ஒரு முறை சொல்லிக் காட்டிவிட்டாள். " நான் எதுனா கேட்டா, இந்த மாச பட்ஜெட்ல எடமில்லேன்னு சொல்லிடுவீங்க. இந்த மாதிரி ஏமாத்து தர்மம் நிறைய பண்ணுவீங்க."

நேற்றைய சண்டையின் ஹைலைட்டே அதுதான். என்னை ஏமாற்றிப் போனவனை சினிமா தியேட்டர் முதல் வகுப்பு டிக்கெட்டு முன் வரிசையில் பார்த்துவிட்டு என்னையும் ஒரு பார்வை பார்த்தாள்.

தீர்மானித்துவிட்டேன். இனிமேல் சுத்தமாய் 'இல்லை'.

ஆட்டோ டிரைவர் சட்டென்று என் கால்களில் விழுந்தான்.

"ஸார்... எப்படியாச்சும்... இரு நூறு ரூபா கொடுங்க. ப்ளீஸ்.."

உறுதியை மீறி மனசு ஆட்டம் கண்டது. "இரு.. நானும் உன்னோட வரேன்".

ஷர்ட்டை மாற்றிக் கொண்டேன். பர்ஸில் ஐந்நூறு ரூபாய் இருந்தது.

" நீங்க எதுக்கு ஸார். வீணா அலைச்சல்.." என்றான்.

"பரவாயில்லை. நானும் வரேன்." என்றேன் விடாமல்.

பஸ்ஸில்தான் போனோம். ஹாஸ்பிடல் வாசலில் இறங்கி நடந்தோம்.

"எந்த பெட்.."

லேடீஸ் வார்ட்ல.. ஸார்... பணத்தைக் கொடுத்தீங்கன்னா ஊசி வாங்கிட்டுப் போயிரலாம்..."

"மெடிகல் ஷாப்புக்கு நானும் வரேன்.."

அரை மனதாய் சம்மதித்த மாதிரி தோன்றியது. ஒரு வேளை நிஜமாகவே அவன் அம்மா சீரியசாய் கிடக்கிறாளா... அல்லது மெடிகல் ஷாப்பில் என்னெதிரில் மருந்து வாங்கிக் கொண்டு பிறகு அது வேண்டாம் என்று திருப்பிக் கொடுத்து பணத்தை ஏமாற்றி விடுவானோ...

சந்தேகப் பேய் மனதைப் பிடித்து ஆட்டி அதன் உச்சத்துக்குப் போக ஆரம்பித்தது.

சங்கடமான மன நிலையில் நடந்தபோதுதான் அந்தச் சிறுவனைப் பார்த்தேன்.

"ஏய்.. பாபு.. நீ எங்கேடா இங்கே.." எங்கள் வீட்டு வேலைக்காரி அஞ்சலையின் மகன்.

"அம்மாவுக்கு இருமல் .. மருந்து வாங்க வந்தோம்..." என்றான்.

எண்ணை காணா தலை, உடம்பில் புழுதி, போட்டிருந்த சட்டை, டிராயர்.. ஓ.. நான் கொடுத்தது. போன வாரம் பழைய துணிகளை ஒழித்தபோது .. 'என் புள்ளைக்கு எதுனாச்சும் தாங்கம்மா..' என்று அஞ்சலை கேட்டு வாங்கிப் போனது. பிரேமா கூட சொன்னாளே 'அதையும் வித்துடுவா.. அவ எங்கே பையனுக்குப் போடப் போறா.. அதுக்கு பேசாம நானாவது ரெண்டு பாத்திரம் வாங்குவேன்' என்று.

நான்தான் வற்புறுத்தி இரண்டு செட் டிராயர், ஷர்ட்டை கொடுத்து அனுப்பினேன். இதோ எதிரில் நல்ல துணி அணிந்த பெருமிதத்தில் பாபு. உள்ளூர ஏதோ உறுத்தியது.

இது வரை நான் செய்த உதவிகள் எல்லாம் என்னால் செய்ய முடிந்தவைதான். என் சக்தியை மீறி எதுவும் செய்யவில்லை. கொடுத்தபோது இருந்த சந்தோஷம்.. இம்மாதிரி நேரில் பார்க்கும் போது இன்னும் இரட்டிப்பாகிறது.

அதைவிட்டு சந்தேகத்துடன் துரத்திப் போனால் மனசு அலைபாய்ந்து உதவி கேட்டு வருகிற எல்லோருமே ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்ற கணிப்புக்கு விரைவது ஏன்! முடிந்தால் முடிந்ததைக் கொடுத்து சந்தோஷப்பட்ட மனதை ஏன் சின்னாபின்னப் படுத்திக் கொள்ள வேண்டும்?

அவன் தோளைத் தட்டி நிறுத்தினேன். "இந்தா.. மருந்து வாங்கிட்டு வா.."

ஹாஸ்பிடலுக்கு எதிர் திசையில் என் கால்கள் நடந்தன.


(எப்பவோ எழுதியது)

March 24, 2012

ஸ்பரிசம்



மண் சாலைகளில்

நடந்திருக்கிறீர்களா..

மழை பெய்து ஓய்ந்த பின்

நடந்தால்

ஈரப் பதம் அப்பி

கால் சுவடுகளை

விட்டு செல்லலாம் ..

மண்ணின் ஸ்பரிசம்

எத்தனை சுகமென்று

உள்மனம் சொல்லும்.

செருப்புகளைத் தவிர்த்த நடை

நகரங்களில் சாத்தியமில்லை..

இரு புறமும் மரங்கள் வாய்த்தால்

இன்னும் சுகம்..

கிளைக் கரங்கள் மானசீகமாய்

தழுவும் பாவனையில்

கால்கள் பின்னிக் கொள்ளும்..

தலைக்கு மேல் குடை பிடிக்கும்

மரங்கள் ஊடே

தாய் மடியில் தவழ்கிற

குழந்தையாய்

நகர்ந்து செல்கிற நேரம் ..


சொல்லப் போவதில்லை..

இன்னொரு மழையும்

இன்னொரு மரங்களும்

இன்னொரு மண் பாதையும்

தேர்ந்தெடுத்து நடந்து பாருங்கள்..


இந்தக் கவிதை உங்களால்

பூர்த்தியாகும்.




March 19, 2012

கன்னுக்குட்டி




அலுவலக வளாகத்தின் முன் அவ்வப்போது மாடுகள் கூட்டமாய் போவதை பார்ப்போம் .


'புது ஸ்டாப் போல இருக்கு ' என்று மொக்கையுடன்.


கட்டிடங்கள்.. நடு நடுவே மரங்கள் புதர்கள் .. இப்படித்தான் எங்கள் அலுவலகம்.


யார் கவனித்தார்களோ ..


பிறந்து ஓரிரு நாட்களே ஆன கன்றுக் குட்டி..


விட்டுவிட்டு போய் விட்ட தாய்ப் பசு...


'தலைச்சன் கிடேரி.. அதான் விட்டுட்டு போயிருச்சு'


'அப்படின்னா'


'மொதக் கன்னு .. கிராமத்துல என்ன செய்வாங்கன்னா பசு குட்டி ரெண்டையும் ஒரே கொட்டில்ல வச்சு அடைச்சிருவாங்க.. மொதல்ல மிரண்டாலும் அப்புறம் குட்டியை சேர்த்துக்கும்.. பால் ஊட்ட ஆரம்பிச்சிரும்.. இந்த மாதிரி தெரு மாடுங்க இப்படித்தான் குட்டியை போட்டுட்டு போயிரும்..'


கால்கள் பிடிமானம் இல்லாமல் தள்ளாட்டமாய் நின்றது.


ஜக்கில் நீர் கொண்டு வந்து மெதுவாய் ஊற்றியதும் விழுங்கியது. மேலே தண்ணீர் தெளித்ததும் மூத்திரம் பெய்தது.


அதை தூக்கி வந்தவர் முகத்தில் நிம்மதி.


'எங்க வீட்டுக்கு கொண்டு போறேன்.. மாடு வச்சிருக்கேன்.. அதுவும் இப்பதான் குட்டி ஈனுச்சு.. இதுவும் அது கிட்ட பால் குடிக்கட்டும்.. '


மிக சுலபமாய் தத்து !




March 16, 2012

உயிர்ப் பறவை




தாகத்திற்கு நீர்


அகன்ற வாளியில்


மொட்டை மாடியில்


வைத்து


திரும்பிப் பார்த்தபோது


வாளியின் விளிம்பில்


அமர்ந்திருந்தது


என் உயிர்ப் பறவை !








March 12, 2012

திருவெள்ளரைப் பெருமாள்


இந்த வாரம் அதாவது இன்று திருவெள்ளறைப் பெருமாள் - புண்டரீகாட்சன் - செந்தாமரைக் கண்ணன் - கொள்ளிடக் கரைக்கு விஜயம்.

திருவரங்கத்திற்கும் பழமையானது என்பதால் ஆதிவெள்ளறை என்று அழைக்கப்படுகிறது. தாயார் உற்சவருக்கு பங்கஜவல்லி என்று திருநாமம்.

உற்சவர் - பெருமாள், தாயார் இருவரும் சேர்த்தியாய் இன்று கொள்ளிடக்கரைக்கு காட்சி கொடுத்தார்கள்.



ஆற்றில் இறங்கி மக்கள் பெருமாளைச் சேவிக்க வருகிறார்கள்.




எதிரே தெரிகிற மண்டபம், படித்துறைதான் திருமங்கை மன்னன் படித்துறை.



புண்டரிகாக்ஷனை தாயாருடன் சேவித்து வலம் வந்தோம்.



இந்திரனோடு பரமன்  ஈசனிமையவ ரெல்லாம்,   மந்திர மாமலர் கொண்டு  மறைந்தவ ராய்வந்து நின்றார்,   சந்திரன் மாளிகைசேரும்  சதுரர்கள் வெள்ளறை நின்றாய்,  அந்தியம் போதிது வாகும்  அழகனே! காப்பிட வாராய்

என்று ஆழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார் !


அந்தியம்போதில் தரிசித்துத் திரும்பியபோது மனசும் நிறைந்து போயிருந்தது !






March 08, 2012

தீர்த்தவாரி



மாசி மகம் அன்று தீர்த்தவாரி கண்டருள (அபிஷேகம்) அன்பில் சுந்தர்ராஜப்பெருமாளும் உத்தமர்கோவில் புருஷோத்தமப் பெருமாளும் கொள்ளிடத்திற்கு வருவார்கள்.



ஆற்றில் இறங்கி கால்கள் நனைய பெருமாளைத் தேடி இதோ பக்தர்கள்.

தூரத்தில் தெரிகிற வெளிச்சம் பெருமாள் தங்கியிருக்கும் பந்தல்.


திருமாலிருஞ்சோலை கள்ளழகர்..
மதுரை கூடலழகர்..
அன்பில் வடிவழகர்..

மூவருக்கு மட்டுமே ‘அழகர்’ எனும் திருநாமம் !

பேருக்கு ஏற்றார்போல உற்சவர் கொள்ளை கொள்ளும் அழகுத் திருமேனி..




அடுத்த பந்தலில் உத்தமர்கோவில் எனும் திவ்யதேசத்தைச் சேர்ந்த புருஷோத்தமர்..




அவரின் முன்னழகை சேவித்து பின்னால் சென்றால்..



பின்னழகின் ஜாஜ்வல்யம்..

மாலை நேரத்தின் பௌர்ணமி வெளிச்சத்தில் உற்சவ மூர்த்திகளைக் கண்ணாரக் கண்டு ஸேவித்து திரும்பியதில் எத்தனை ஆனந்தம் !




March 03, 2012

ஈரம்


நதியில்
கால் நனைத்துத்
திரும்பினேன்..
மனசுக்குள் கசிந்தது
ஈரம் !



புதிதாய்த்தான்
ஒவ்வொரு முறையும்
கூடு கட்டுகிறது
எந்தப் பறவையும்..
ஒரே கூட்டில்
வெகு காலமாய்
பொரித்துக் கொண்டிருக்கிறேன்
கவிதைக் குஞ்சுகளை!



ஜன்னல் திறந்து
பிஞ்சு விரல்
நீட்டியது மனசு..
முதுகில் அடி வைத்து
உள்ளே இழுத்துப் போனது
புத்தி !