July 30, 2010

நித்திய வலிகள்

நைட் லாம்ப் ஒளிர்ந்தது. அலுப்புடன் படுக்கையில் சாய்ந்தவளை அவன் கை பற்றியது. வியர்வையின் கசகசப்பு எரிச்சலூட்ட உதறினாள்.

"என்னடா செல்லம்"

"ப்ச்'

"பார்த்தியா, ஜாலியான மூடுல நான் இருக்கேன். நீ முகத்தைத் தூக்கி வெச்சிகிட்டா எப்படி"

பக்கத்தில் சிணுங்கிய நான்கு மாதக் குழந்தையை 'ச்ச்ச்' என்று தட்டிக் கொடுத்தாள். இடுப்பில் சரியான வலி. அரை மணியாகக் குனிந்து நிமிர்ந்து பாத்திரங்களைக் கழுவி, சமையறையைச் சுத்தம் செய்த அசதி.

"சொல்ல மாட்டியா.."

சொல்லித்தானா புரிய வேண்டும் என்ற உணர்வில் மௌனமாக இருந்தாள். விலகிச் சில வினாடிகள் படுத்திருந்தாள். மறுபடி நெருங்கினான். நெற்றியில் உள்ளங்கை பதித்தான்.

"தலைவலியா"

"ம்ஹூம்"

"ஜூரமா"

"இல்லே"

"பின்னே.. அம்மா ஏதாவது சொன்னாளா"

"ப்ச்"

"என்னதான் சொல்லேன்..சொன்னால்தானே எனக்குத் தெரியும்"

அருகில் வந்து தலயை வருடினான். நெற்றியில் மெல்ல முத்தமிட்டான்.கன்னங்களை உள்ளங்கை அணைப்பில் ஏந்தினான். 'பாவம்' என்று முனகினான்.

அவனைப் பார்த்தாள். மனசுக்குள் ஏதோ கிளர்ந்தது. இவனிடம் கூடப் பகிர்ந்து கொள்ளத் தயங்கினால் எப்படி என்று தோன்றியது.

"வேலை அதிகம். என்னாலே முடியலே"

"ஏன் அம்மா உதவி செய்யலியா"

"செய்யராங்க. இருந்தாலும்.."

"என்னென்ன வேலை.. சொல்லு"

"காலைல உங்களுக்கு டிபன் ஆறு மணிக்கு"

"அதுதான் வேண்டாம்னு சொன்னேனே.. கேண்டீன்ல சாப்பிடுவேனே"

"அது பிடிக்கலே.. பாதி நாள் சாப்பிடுவது இல்லேன்னு சொன்னீங்களே'

"ம்"

"அப்புறம் எப்படி மனசு வரும், செய்யாம விட"

"சரி.. அப்புறம்'

"மத்தவங்களுக்கு சமையல் செஞ்சு.... குழந்தையின் துணி துவைச்சு.. வேலைக்காரி தோய்ச்சுட்டுப் போன எங்க துணியையும் உலர்த்தி.. சாப்பிடவே மணி ஒண்ணாயிருது. நடுவுல இவனையும் கவனிச்சுக்கணும். குளிப்பாட்டணும்"

"அய்யோ.. ஒரு மணிக்கா சாப்பாடு"

"அப்புறம் சாயங்கால டிபனுக்கு ஊற வச்சு, அரைச்சு, செஞ்சு.. டிப்போவுக்குப் போய் பால் வாங்கி வந்து"

"ஏன் அம்மா எதுவும் செய்யலியா"

"செய்யறாங்க"

"அதுதான் என்ன"

'அவங்களுக்கும் உடம்பு முடியலியா. கறிகாய் நறுக்கறது.. பால் காய்ச்சறது.. பெருக்கறது இந்த மாதிரி சிம்பிளாத்தான் செய்ய முடியும்"

"ம்ம்"

"ரெண்டு வேளையும் வீடு பெருக்கணும். மறுபடி ராத்திரி சாப்பாடு. பாத்திரம் கழுவி.. சமையலறை கழுவி"

"ச்சே.. பாவம்டா நீயி"

"என்னாலே முடியலீங்க. பிரசவமும் கஷ்டமா இருந்துதா. நல்ல ரெஸ்ட்ல இருக்கணும்னு டாக்டர் வேறே சொல்லியிருந்தாங்க."

பிறந்த வீட்டிலிருந்து அவளை அவன் தான் வற்புறுத்தி இரண்டாம் மாதமே அழைத்து வந்து விட்டான்.

'ராத்திரி முழுக்க இவன் அழறான். மணிக்கு ஒரு தடவை எழுந்திருக்க வேண்டியிருக்கு"

அவளை நெருங்கி மார்பில் சாய்த்துக் கொண்டான். விரல்களைச் செல்லமாகச் சொடுக்கினான். வாசனைப் பொடியின் நறுமணம் அவளிடமிருந்து வீசியது.

"ஸாரிடா செல்லம். என்னோட பிடிவாதத்தால நீ அவஸ்தைப் பட வேண்டியிருக்கு" என்றான் கண்களில் நீர் மின்ன.

"எனக்கு ஒண்ணும் செய்ய வேண்டாம்னு எண்ணம் இல்லிங்க"

"அது தெரியாதா எனக்கு"

"என்ன தெரியும். இன்னைக்கு புதுசா ஒரு கூட்டு செஞ்சிருந்தேனே... ஏதாவது சொன்னீங்களா"

'சட்.. அதுவா. ஹேய் பார்த்தியா.. ரெண்டாந்தடவை கேட்டு வாங்கிச் சாப்பிட்டேனே.. புரியலையா. தூள்.. செல்லம்"

விரல்களைப் பற்றி முத்தமிட்டான்.

"நீ எது செஞ்சாலும் ஸ்பெஷல்தான்"

"போங்க"

"எங்கே போகறது"

இன்னமும் நெருங்கினான்.

"வேணாங்க உடம்பு முடியல்லே"

"சரி"

தள்ளிப் படுத்துக் கொண்டான்.

"சாதாரணமாக் கொஞ்சக் கூட பர்மிஷன் கிடையாது" என்று பொருமினான்.

அருகில் நகர்ந்தாள்.

"ஓகே.. நோ மிஸ்சிஃப்"

"அதென்னமோ தெரியலே.. செல்லம். உன்னோட இருக்கும்போது டென்ஷன் எல்லாம் மறைஞ்சு மனசுல ஒரு அமைதி கிடைக்குது. ரொம்ப சந்தோஷமா உணர்றேன்"

நெகிழ்ந்தாள். தன் விருப்பம் பற்றிய கேள்விக்கு இடமின்றி அவன் புலன்களின் ஆளுமைக்கு இடம் கொடுத்தாள். நோக்கம் ஈடேறிய நிறைவில் அவன் தூங்கிப் போக, அவள் உடம்பில் இன்னமும் வலி அதிகரித்துத் தாக்க, தூங்க முடியாமல் தவிக்க ஆரம்பித்தாள்.

(மங்கையர் மலரில் பிரசுரம்)

July 24, 2010

உதிரிப்பூ

"எல்லாரும் ஏறியாச்சா?"

அப்பாவின் குரல் உரத்துக் கேட்டது. பயணம் ஆரம்பித்தது முதல் முழு உற்சாகத்தில் இருந்தார். மகன் திருமணம் முடிந்து தலையில் ஏறிய சம்பந்திக் கிரீடம் இன்னும் 'பளா பளா'.

ரேவதி ஏறப் போனாள். புதுப் புடவையின் ஜரிகை இம்சித்தது.

"அவளை ஸ்ரீதரோட உட்காரச் சொல்லு."

மற்றவர்கள் சிரித்தனர். காரணமே இல்லாமல் ஒரு சிரிப்பு, ரேவதி ஸ்ரீதரோடு உட்கார்ந்தாள்.

மற்றவர்களும் ஏறிக்கொள்ள வேன் கதவு மூடிக்கொண்டது.டிரைவருக்கு அருகில் அப்பா.

"ரெடி. போகலாம்."

"பாம்பே பாட்டு வைக்கச் சொல்லுங்கோ."

"சேஷகோபாலன்... எனக்கு."

"பழைய சாங்ஸ்..."

அப்பா நீதிபதியானார்.

"எல்லாம் உண்டு. இன்னும் மூணு நாள் நாம இதே வேன்லயே போகப் போறோம். எல்லோரோட விருப்பமும் நிறைவேற்றப்படும்."

அரபிக் கடலோரம் அலற ஆரம்பிக்க, வாண்டு தினேஷ் முகமெல்லாம் தீவிரமாய் உச்சஸ்தாயியில் தானும் பாடினான். பெண்கள் வேறு பேச்சு பேச ஆரம்பித்தார்கள்.

ஸ்ரீதருக்கு ரேவதியின் இறுக்கம் புரியவில்லை. ஒரு வேளை இத்தனை கும்பலாய் பயணிப்பதில் வருத்தமா?

"பிடிச்சிருக்கா..."

"எ... ன்ன?"

"இந்தப் பிரயாணம்தான். ரொம்ப நாளாச்சு, நாங்க ஒண்ணா டிராவல் பண்ணி மூணு வருஷம் முன்னால ராமேஸ்வரம், கன்னியாகுமாரி, திருச்செந்தூர் போனோம். அப்பறம் இப்பதான்."

அவனுக்கும் ரேவதிக்கும் இடையில் நூலிழை இடைவெளி இருந்து கொண்டேயிருந்து. இன்னமும் நெருங்கினான். புது வாசனை அடித்தது.

"எல்லோருக்கும் உன்னை ரொம்பப் பிடிச்சுப் போச்சு..." என்றான்.

புகழ்ச்சி மலர்ச்சி தந்திருக்க வேண்டும். இல்லை. அவள் தலையில் முல்லை மாதிரி.

மொட்டாய் கட்டிக் கொடுத்த சரம் விலைக்கு வாங்க, கடைசி வரை மலராமலே வாடிப் போகும். பாதி மலர்ந்ததும் மலராத சரம் சூடிக் கொண்டதும் முழுசுமாய் மலர்ந்து வாசனை பத்தடிக்கு முன்பே ஆளை இழுக்கும்.சரம் வாங்கும் போது தரம் புலப்படாது. ரேவதியின் மெளனம் மலரப் போவதா? மொட்டா?

"நாம எல்லோரும் ஒண்ணாதான் இருக்கப் போகிறோமா..." என்றாள் திடீரென.

என்ன கேட்கிறாள்?

"ஆமா... ஏன் கேட்கறே?"

"உங்க ஒபீனியன் என்ன . வேற எடம் பார்க்கிற ஜடியா இருக்கா?"

"எ..துக்கு. இதுவரை. நான் அப்படி எதுவும் யோசிக்கலே" என்றான் தடுமாற்றத்துடன்.

பக்கத்தில் இருந்தவர்களின் கவனம் இவர்கள் மீது இல்லைதான். குரலும் தணிந்துதானிருந்தது. இருந்தாலும் ஸ்ரீதர் சங்கடபட்டான். ரேவதி பேசியது கேட்டிருக்குமா?

"எனக்குன்னு சில ஆசை... எதிர்பார்ப்பு... இருக்கு..." என்றாள்.

"புரியுது. ஆனா..."

"நாம தனியாப் போகலாமே."

நூலிழை இடைவெளி காணாமல் போனது. நெருங்கியிருந்தாள்

"சட்டுனு என்னால... எதுவும்."

"இப்பவே வேணாம். எல்லா ஊரும் சுத்தி... வேனை விட்டு இறங்கின பிறகு."

மேகமும் வெளிச்சமும் மாறி மாறி பிரதிபலிப்பு.

ஸ்ரீதர் மௌனமாய் வார்த்தைகளைத் தேடினான்.

"வாம்மா... வாம்மா" என்று பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

"ரேவு வந்து... எனக்கும் சிலது... என் ஆசைன்னு இருக்கு. உனக்கும் நல்லதுதான். நாம ஒண்ணா இருந்தா.."

நூல் தாம்புக் கயிறானது. ரேவதி எதிர்ப்புறம் நகர்ந்தாள்.

"ரேவு ப்ளீஸ்"என்றான் அடிக்குரலில்.

"சூடா காபி வேணும்."

யாருடைய குரலோ ஒலித்தது.

"பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல ஹோட்டல். நின்னு காபி குடிச்ச பிறகுதான்அடுத்த ஊர். இங்கே காபி ரொம்ப பிரமாதமா இருக்கும்."

அப்பாவின் பதில் கேட்டது.வேன் நின்று வெளிப்பட்டபோது காற்று பட்டு உடல் குளிர்ந்தது.

"ஹப்பா! உள்ளே ஒரே இறுக்கம்."

"சும்மாவா. பதிமூணு பேரு."

"சம்சாரக் குடும்பம்னா அப்படிதான்."

"வளவளன்னு பேசி நேரத்தை வேஸ்ட் பண்ணாம ஹோட்டலுக்குள்ளே போங்கோ."

ரேவதி வேன் அருகிலேயே நின்றாள். ஸ்ரீதர் நகர்ந்தவன் இவள் வராதது கண்டு திரும்பி வந்தான்.

“வாயேன். காபி வேணாமா.."

"நான் வரலே..."

"சரி. இங்கே நீ மட்டும் தனியா நிக்காதே. வா."

"நான் ஊருக்குப் போறேன்..."

"எ.. ன்ன."

கிளம்பும்போதே அவள் துணிகள் மட்டும் தனி சூட்கேஸில் வைத்திருந்தாள். சீட்டுக்கு அடியிலிருந்ததைத் தேடி எடுத்தாள்.

"நீங்க யோசிச்சு வைங்க. நான் போறேன்."

"ரேவு.. என்னது..."

ஸ்ரீதரின் நிலை குழப்பமானது. இந்த நேரம் பார்த்து பெரியவர்கள் யாருமே அருகில் இல்லை...

"ரேவதி... நில்லு...ப்ளீஸ்..."

அதற்கு மேல் இரைச்சலிட முடியவில்லை. ஹோட்டலுக்குள் ஓடினான்.

"அப்பா."

"என்னடா..."

முகம் நசுங்கிப் போனது. என்னவென்று சொல்ல.

"அவ...கோவிச்சுண்டு போயிட்டா."

'யாரு... ரேவதியா? என்னடா உளர்றே. புரியும்படியா சொல்லுடா."

சொன்னான். அவன் வார்த்தைகளை அவனாலேயே நம்ப முடியவில்லை. குரல் பிசிறடித்தது.

“சீக்கிரம் கிளம்புங்கோ..."

"ஏன் "என்றனர் சிலர் புரியாமல்.

அவசரமாய் பணம் கொடுத்து பாதி காப்பியை அப்படியே வைத்து பஸ் ஸ்டாண்டிற்குள் ஓடி... ரேவதியைக் காணோம்.

"அந்த வழியா இப்பத்தான் ஒரு பஸ்ஸு கிளம்பிப் போறது."

"வேனை எடுக்கச் சொல்லு. ஃபாலோ பண்ணு"

சுற்றுலாவின் மகிழ்ச்சி அடிபட்டுப் போனது. என்ன பெண்ணிவள். ஸ்ரீதர் உள்ளுர நொந்து கொண்டான்.

"அந்த பஸ்ஸைப் பிடிக்கணும்பா."

முக்கிய தெருவின் வாகன நெரிசலிடையே வேன் ஊடுருவி முன்னேறியது. ஓவர்டேக் செய்து நிறுத்தப்பட்டது. பஸ் ஹாரன் அலறியது.

"சீட் இல்லை சார்."

கண்டக்டரின் மறுப்பை மீறி பஸ்ஸினுள் அலசினான். அதோ... ஜன்னலை ஒட்டி ரேவதி.

"ரேவதி... வா.. இறங்கு."

கவனிக்காதவள் போல அமர்ந்திருந்தாள். அப்பா தளர்ந்த வேட்டியை இறுக்கிக் கொண்டு இவனையும் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தார்.

"யோவ்... பார்த்து வாய்யா.. காலை மிதிச்சுக்கிட்டு.."

பெட்டியை எடுத்து ஸ்ரீதரிடம் கொடுத்தார்.

"வாம்மா... கீழே வா. வேற எங்கேயும் போக வேணாம். திரும்பிரலாம். வீட்டுல போய் எது வேணா பேசி தீர்த்துக்கலாம். வாம்மா."

கை கூப்பினார். உடம்பு நடுங்கியது.ரேவதி அரைமனதாய் எழுந்து கீழே இறங்கினாள்.

"ரைட்..." என்றார் கண்டக்டர்.வேனில் எவரும் பேசவில்லை. நடப்பதின் விபரீதம் புலப்பட்டு குழந்தைகளிடம் கூட மெளனம்.

"கோவிலுக்குத் தம்பதியா..."

யாரோ முனகினார்கள்.

"வேணாம் இப்ப எதுவும் வேணாம். ஊருக்கே போலாம். வேனைத் திருப்புப்பா."

பம்பாய்... சேஷகோபாலன்... யாரும் எதுவும் கேட்கவில்லை. ஸ்ரீதரின் அருகிலேயே ரேவதி அமர்ந்திருந்தாள். கிளம்பிய போது இருந்த மனநிலை சுத்தமாய் அடிபட்டு சங்கடமான அமைதி.

"ஊர்ல போய் யாரும் எதுவும் பேச வேணாம் கேட்க வேண்டாம். புரியுதா?"

அப்பா பத்து வயசு கூடியிருந்தார்.

"என்னங்க நீங்க? அவதான்.. கொஞ்சங் கூட மரியாதையே இல்லாம."

"ஸ்ஸ். நீங்க என் பேச்சைக் கேட்பீங்கதானே."

மெளனித்தார்கள்.

"ஸ்ரீதர்... அனுசரிச்சுப் போறதுதான் குடும்பம். உனக்கும் பொறுப்பு இருக்கு. அவ விருப்பப்படி செய்யி."

"அ...ப்பா..."

"டேய்... எங்கே இருந்தாலும் சந்தோஷம் வேணும்டா... மனசு ஒட்டரதுதான் முக்கியம்."

அதன் பின் அப்பா வெளிப்புறமே வெறித்தார். முன் ஜன்னலின் கீழ் தார் ரோடு வழுக்கிக் கொண்டு மறைந்தது.

ரேவதிக்கும் அவனுக்கும் இடையில் இடைவெளி காணாமல் போயிருந்தது. தலையிலிருந்த முல்லை மட்டும் வாடி மணம் தொலைத்திருந்தது.


(இதயம் பேசுகிறது இதழில் பிரசுரம்)


July 22, 2010

எனது விழியில் உனது பார்வை

"பத்ரி"
மூன்றாவது முறையாக அழைப்பு வந்துவிட்டது. ஜன்னலின் அருகில் மழைச்சாரல் படும்படி அமர்ந்திருந்தான்.
"பத்ரி"
காற்றின் மணம் மிக அருகில் வீசியது.
"பத்ரி"
காற்றின் சாரல் உட்புறம் அடித்தது.
"எ... ன்னது... எழுந்திரேன்"
அம்மாவுக்கு மென்மையான குரல். சில நேரங்களில் அலுப்பு தட்டும் போதும் கூட பிசகாத குரல்.
''இந்தா... காபி ஆறியாச்சு"
கப்பை கையருகில் பிடித்துக் கொடுத்தாள்.
"குடி"
குரலில் தெரிந்த மிரட்டலோ அல்லது எல்லை மீறிய அலுப்போ. வாங்கிக் குடித்துவிட்டு காபி கப்பை நீட்டினான்.
"எழுந்து வா... உடம்புக்கு ஆகாது "
"மன்னி வரலியா."
"வருவா, நீ எழுந்திரு..."
"மன்னி வரட்டும். அதுவரைக்கும் நான் இங்கேதான் இருப்பேன்."
இருபத்தாறு வயது மழலை கேட்டது. அம்மா நகர்ந்து போனது புரிந்தது.பத்ரி ஜன்னலோடு முகத்தைத் தேய்த்துக் கொண்டான். மூடியிருந்த கண்களின் மேல் நீர்த் திவலைகள். மனசு புழுங்கி உடலெங்கும் ஜில்லிப்பு. என் இன்னும் வத்சலா மன்னியைக் காணோம்?
நிச்சயம் நேரம் ஓடியிருக்க வேண்டும். யாருக்கு புரிகிறது வினாடி, நிமிஷம் எல்லாம்.
நேத்து காலைல... முந்தா நாள் ராத்திரி... ஜோன்னு மழை கொட்டினப்போ, என்னமா அலங்காரம்... பூ வச்சு ஜோடிச்சு... ஹப்பா... இத்தனை உசரமா...
ஊஹும் எதுவும் புரியாது. புலப்படாது. தொடு. தைரியமா தொடு! கையைப் பற்றி அழுத்தி ஸ்பரிச சந்தோஷம் மட்டும். தகவல் ஒரு புலனில் கிரகிக்கப்படும். இன்னொரு தடவை தொட ஏதோ புலனாகும்.
"இதுவோ... இதுவே..."
''இவதான்.. உன்னோட மன்னி.''
''மன்னி, உங்க பேரு''
''பாரேன், உடனே விசாரணை!''
''இருக்கட்டுமே. தெரிஞ்சுண்டா என்ன தப்பு''
''வத்சலா''
இரைச்சல்களின் நடுவே தம்புராத் தந்தி.
''மன்னி.. உன்னைத் தொடலாமா...''
''எ. என்ன?''
"ச்சீ.. வாயை மூடூரா..''
''ஏன் பதட்டப்படறீங்க. பேசாம இருங்களேன்.''
''சனியன். புத்தி ௬டவா இல்லாம போச்சு... பகவானே... என்னை என் சோதிக்கறே...''

ஆனால் வத்சலா தனிமையில் அவனிடம் வந்தாள். தொடச் சொன்னாள். தயங்கியவனின் கை பற்றிக் கொண்டாள்.

''நான்தான் உன்னோட மன்னி. பேரு வத்சலா. படிப்பு பி.ஏ. ஒத்தைப் பின்னல், கொஞ்ச ஓவல் ஷேப்ல முகம், ஒல்லிதான். கவிதை பிடிக்கும். எழுதுவேன் எப்போவாவது. ரசம் வைச்சா ''சூப்பர்'' னு டம்ளரோட குடிக்க கியூ நிக்கும். ஜஸ்கிரீம் பிடிக்கும். மழைச்சாரல் பிடிக்கும். ஏலக்காய் டீ பிடிக்கும். ஜேசுதாஸ் பிடிக்கும். இப்போ பத்ரியையும் பிடிக்கும்."

மூச்சு விடாமல் பேசினாள்.
''மன்னீ''
"ஸோ... வீ ஆர் ஃ ப்ரெண்ட்ஸ்... ஓகே ''
பார்வை எப்படி மங்கலாகி மறைந்து போனது என்று ஒரு வார்த்தை விசாரிக்காமல் நகர்ந்தாள்.
யார் சொன்னது, அறிமுகத்திற்கும் பழக்கத்திற்கும், பேச்சும் பார்வையும் அவசியம் என்று.
வத்சலாவுடன் நிறையப் பேச முடியவில்லைதான். அவளைப் பார்க்கவே முடியவில்லைதான்.
''ம.ன்..னி''
எதிரில் வந்து நிற்பது புடவை சரசரப்பில் புரியும். கேட்டது கொண்டு வந்து தரப்படும்.
''என்ன செய்யட்டும்?'' என்றதில் அக்கறையும் அன்பும் புரியும்.
அண்ணாவிடம் மன்னி சொன்னாளாம்.
''அப்படியே பத்ரி உங்கப்பா மாதிரியே பரந்த மார்பு. வட்ட முகம். நீங்க கொஞ்சம் பூஞ்சை. பத்ரி நடை கூட உங்கப்பா சாயல். இருட்டுல நின்னா இவரா... அவரான்னு தெரியாது.''
அண்ணா முகம் என்னவாய் மாறியதோ, ஆனால் மன்னி மறுமுறை வேறெதுவும் ஒப்பிட்டு பேசவில்லை. இந்த ஒரு வருஷ காலமாய்.
ஹால் கடிகாரம் ''டோய்ங்'' என்றது. ஏதோ அரை மணி. ஐந்தரையா... ஆறரையா... தெரிந்து என்ன ஆகப்போகிறது.
''வா. பத்தாச்சு படு. விளக்கை அணைச்சுட்டு நாங்களும் படுக்கணும்''
படுத்ததும் நினைப்புகள். அது அலுத்ததும் கனவுகள். அப்புறம் மயக்கம். மீண்டும் விழிப்பு. எழுந்ததும் சுடச் சுட காப்பி.
மன்னியின் வளைகாப்பின்போது ஹால் மூலையில் முகமெல்லாம் பரவசமாய் உட்காந்திருந்தான். நடப்பதை எல்லாம் பக்கத்தில் அமர்ந்த ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
''கை நிறைய வளையலா!'' என்றான் பூரிப்பாய்.
''ம். அதனாலதான் வளைகாப்புன்னு பேரு''
மன்னி வளையல்களைத் தொடச் சொன்னாள். கண்ணாடி வளையல்கள் சப்தித்தது பிடித்தது. அதைவிட அதிகமாய் மன்னியை.
''என்ன... கவிதை எழுதியிருக்கீங்க..''
சில சமயம் மரியாதை. சில சமயம் ''நீ... வா... போ...'' புரிபடாத உறவுக் குழப்பம்.
''அது எதோ... கிறுக்கல்... பத்ரி...''
"சொல்லேன். நானும் கேட்கறேன்.''
மன்னியிடமிருந்து சில வினாடிகள் பதிலில்லை.எழுந்து போய்விட்டாளா..
''மன்னீ''
''ம்''
''சொல்லுங்கோ''
"வேணாம்... பத்ரி''
''ஏன்... ஞாபகம் இல்லியா''
"இருக்கு. ஆனா...''
"சொல்லு" என்றான் பிடிவாதமாய்.
கயல் விழி...
ராஜபார்வை...
மயில் தோகை முழுவதும் கண்களாம்...
வேலும் விழியும் ஒன்றென
இலக்கியம் சொன்னது...
என் பார்வை மட்டும் பழுதடைந்து...
பத்ரியிடம் மெளனம்.
வத்சலா பதறியிருக்க வேண்டும்.
"ஸாரி பத்ரி. சட்டுனு இதான் ஞாபகத்தில வந்தது. அதனாலதான் சொல்ல மாட்டேன்னு..."
"பரவாயில்லே மன்னி. கவிதைதானே"
"கண்ணில்லாத ஒருத்தரைப் பார்த்ததும் ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன். சட்டுனு மனசுல வந்த வரிகள். கவிதையோ... என்னவோ... சின்ன வயசுல... எழுதின.. முதல் கவிதை... என்னவோ சின்ன வயசுல... எழுதின.. முதல் கவிதை... இப்பவும் மறக்கலே..."
"வத்சலா"
அண்ணாவின் குரல் உரத்திக் கேட்டது.
"இதோ வரேன்"
எழுந்து போனாள் என்பது புரிந்தது.
"என் பார்வை மட்டும்... பழுதடைந்து..."
பத்ரிக்கு சிரிப்புதான் வந்தது. இந்தக் கவிதையை நான் எழுதியிருக்க வேண்டும். ரொம்பப் பொருத்தமாய் இருந்திருக்கும்.
"பத்ரி... சாப்பிட வரியா."
அம்மாவின் குரல் மீண்டும் ஒலித்தது.தூக்கி வாரிப் போட்டது. நினைவுகளில் அமிழ்ந்தவனைக் கரை சேர்க்கிற மாதிரி.
"மன்னி வரலியா."
"வருவாடா"
"குழந்தை நன்னாயிருக்கா..."
"ஆமா"
"என்ன பேரு"
"ஆதித்யா"
"நல்ல பேரு."
"சாப்பிட வா"
"மன்னி வரட்டுமே"
"எப்போ வராளோ. கார்லதான் கொண்டு வந்து விடறதாய் பேச்சு. இன்னும் காணோம்."
"அண்ணாவும் போயிருக்கானா.."
"ஆமா... நீ சாப்பிட வா. எனக்கும் காரிய ஆனாப்ல இருக்கும்"
"பசிக்கலேம்மா"
"பொய் சொல்லாதே. வா, மோர் சாதமாவது ஒரு வாய் சாப்பிடு..."
"வே..ணாம்..."
போன் ஒலித்தது. அம்மா வேகமாய் போனது புரிந்தது.
"என்ன... நாதான் பேசறேன்.."
பத்ரிக்கு அம்மா பேசியது சிரிப்பாக இருந்தது.
"ஹலோ சொல்லேன். இதென்ன மொட்டையா ஒரு ஆரம்பம்."
"என்னது .. அட .. ஈஸ்வரா .. எப்படி "
அம்மாவின் அலறல் நிசப்தமான ஹாலில் எதிரொலித்து திடுக்கிடச் செய்தது.
"தெய்வமே... இதென்ன சோதனை..."
"அம்மா..."
பத்ரி தடுமாறி எழுந்தான்...
"இப்பவே கிளம்பி வரோம்... சரி... சரி... எனக்கு முடியும்... பத்ரியும் தான்... அவன் வேணாமா. எங்கே விடறது..."
"அம்மா... அம்மா"
"சரி. வச்சிருங்கோ."
பத்ரி உத்தேசமாய் நடந்து அம்மாவைப் பற்றி விட்டான். உலுக்கினான்.
"எ.ன்னாம்மா.."
"மன்னி நம்மை மோசம் பண்ணிட்டாடா"
"என்ன"
"திடீர்னு ஃபிட்ஸ் மாதிரி வந்து நம்மை விட்டுப் போயிட்டாடா. அய்யோ கைக் குழந்தையை வச்சுண்டு அல்லாடப் போறோமே!"
அம்மாவின் அழுகை பிடிக்கவில்லை. மன்னி, உனக்கு என்ன ஆச்சு? போயிட்டு வரேன்னு தானே சொல்லிட்டுப் போனே. ஏன் சொன்னபடி வரலே.
"நீ எதிர் வீட்டுல இருக்கியா"
"நானும் வரேம்மா"
"நீ"
"இல்லேம்மா. நானும் வரேன். பிளீஸ் என்னை விட்டு விட்டு போகாதேம்மா."
அம்மாவுக்கு அரை மனசுதான் . ஆனாலும் மறுக்கவில்லை.
"மன்னி"
இம்முறை அனுமதி கேட்காமலேயே தொட்டான். கை ஜில்லிட்டு... இதுவா மன்னி.அழுகை வரவில்லை. திமிறியதே தவிர கண்கள் ஒத்துழைக்க மறுத்தன. மன்னி... மன்னி. ஜபம் மாதிரி சொல்லிக் கொண்டேயிருந்தான்.
"ஆச்சு. நேரம் ஆகிறது. மற்ற வேலையைக் கவனிக்கணும்"
யாரோ குரல் கொடுத்தார்கள்.இவனை நகர்த்தினார்கள்.
"ஹாஸ்பிடல்லேர்ந்து வந்தாச்சா"
"எதுக்கு"
"அப்பவே எடுத்தாச்சு, சாகறதுக்கு முன்னால அடிச்சுப் பேசிட்டா"
"என்ன மாதிரி மனசு "
"அய்யோ... தங்கமாச்சே. தங்கமாச்சே. இப்படி பரிதவிக்க விட்டுட்டாளே"
"பத்ரி மேல அலாதிப் பிரியம். என் புள்ளை மாதிரிம்பா"
"கடைசீல இப்படி ஆகணும்னு விதி"
என்ன சொல்கிறார்கள். பத்ரிக்கு என்ன? மன்னி என்ன சொன்னா? என்ன செய்தாள்.
அம்மா அருகில் வந்து அழுதாள்.
"அவளோட கண்ணை உனக்குப் பொருத்தணும்னு சொன்னாளாம்டா. பாவி.. இந்த நல்ல மனசுக்கு இப்படி அற்ப ஆயுசா போயிட்டாளே.
"மன்னீ.."
பத்ரிக்கு அழுகை சுதந்திரமாய் பீறிட்டது .



(ராஜம் மாதர் இதழில் பிரசுரமானது )








July 20, 2010

நிறைவு



ஏனோ அந்தப் பெண்மணியைப் பார்க்கும்போது செத்துப் போன அம்மா ஞாபகம்தான் வந்தது.

வருஷம் தவறாமல் ஆனி மாசம் அம்மா செத்துபோன நாள் வரும். கூடவே சர்ச்சையும்.

"என்றைக்கு"

"பதிமூணாந்தேதி. லீவுக்கு சொல்லிட்டீங்களா"

"சொல்லணும். ஏற்கெனவே ஏகப்பட்ட பிரச்னை. நடுவுல இது வேற. ம்.ம். பேசாம ஒண்ணு செஞ்சா என்ன"

"வேணாம். பேசாதீங்க" என்று தடுக்கும் நளினியின் குரலில் பதற்றம் தெரியும்.

"எல்லாம் மூட நம்பிக்கை"

"அப்படிச் சொல்லாதீங்க. நாலு வருஷங்களுக்கு முன்னால செய்ய முடியாம போயி கோவில்ல வச்சு செஞ்சோம். அடுத்த வாரமே உங்களுக்கு ஸ்கூட்டர் ஆக்சிடெண்ட். பிழைச்சதே அதிர்ஷ்டம்"

"ஸ்கூட்டர்ல ஏதோ ரிப்பேர். அதைப் போயி.."

"சரி. போன வருஷம் அதேமாதிரி நீங்க டெல்லிக்கு டூர் போகணும்னு கோவில்ல செஞ்சீங்க. என்ன ஆச்சு.. பிரபுக்கு ஜுரம். ஸ்கூலுக்கு ரெண்டு வாரம் லீவு. சீரியஸா போயி புள்ளை புழைப்பானான்னு இருந்தான்"

"இப்ப என்னதான் சொல்றே" என்றேன் எரிச்சலாக.

"விளையாட்டே வேணாம். இந்த வருஷம் வீட்டுலதான் தெவசம்"

"உன்னால அவ்வளவு காரியமும் செய்ய முடியாது. அப்புறம் உடம்பு வலி அது, இதுன்னு படுத்திட்டு செஞ்சதுல ஏதோ குறை அப்படீன்னு அடுத்த புராணம் ஆரம்பிப்பே"

"எனக்குத் தெரிஞ்ச மாமி ஒருத்தி இருக்கா. நமக்குக் கூட ஏதோ தூரத்து உறவாம். சமையலுக்கு அவங்களை வச்சுக்கலாம். நம்ம சாஸ்திரிகளுக்கு நீங்க போன் பண்ணிருங்கோ. சிம்பிளாப் பண்ணாலும் வீட்டோட பண்ணிரலாம்"

தலையசைத்து வைத்தேன்.

மாமி சொன்னபடியே வந்து விட்டாள். மடியாகச் சமையலும் ஆரம்பித்து விட்டது. ரொம்பவும் இயல்பாகச் செய்தாள். சர்வீஸ்தான்!

மாமி முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. இறுக்கம்தான். சற்று மேடான நெற்றி. முகச் சுருக்கம். சின்னக் கண்கள். அம்மாவும் இதே ஜாடைதான். அதனால்தானோ என்னவோ மாமியைப் பார்க்கும்போது அம்மா ஞாபகம் வந்தது.

கூடையில் இருந்த சின்னச் சின்ன கத்தரிக்காய்களைப் பார்க்கும்போதும் அம்மா ஞாபகம். ரசம் வைப்பாள். மசாலாப் பொடி திணித்த பிஞ்சுக் காய்கள். அம்மாவுடன் போய்விட்டது அந்த ரசமும். இவளிடம் கேட்டால் சிரிப்பாள்.

"கத்தரிக்காயை என்ன பண்ணப் போறீங்க" என்றேன்.

"ஏதாவது உளறாதீங்க. திவசத்துக்கு கத்தரிக்காயெல்லாம் பண்ணமாட்டா"

என்ன அசட்டுத்தனம். அம்மாவுக்கு அதுதானே பிடிக்கும். இன்று அதைச் செய்யாமல் வேறேதோ காய்கறிகளைச் செய்து வைத்து என்ன பயன்?

சாஸ்திரிகளும் இன்னொருவரும் வரவே பதினொரு மணியாகி விட்டது. வாய் இயந்திரமாய் மந்திரங்களை முணுமுணுக்க மனசுக்குள் அம்மா நினைவுகள்தான்.

அடம் பிடிக்கிற பிரபுவைச் சமாளிக்கிற விதமே தனி.

"தோசை சாப்பிட வாடா"

"எப்ப பார் அதே தோசை. வேணாம் போ"

"இங்கே பார். யானை தோசை.. குருவி தோசை"

மாவை வெவ்வேறு ஷேப்பில் கொட்டித் தோசை வார்த்து சாப்பிடச் செய்து விடுவாள்.

"உங்க அப்பனையும் இப்படித்தான் தாஜா பண்ணணும்" என்று கூடவே கமெண்ட் வேறு.

கொஞ்சங்கொஞ்சமாய் வியாதிகள் வர ஆரம்பித்தன. சாப்பாடு குறைந்து கொண்டே வந்து மோர் சாதத்தில் நின்று விட்டது. எது அதிகப்படியாய் சாப்பிட்டாலும் வாந்திதான். பேதிதான். நல்ல வேளை. ரொம்ப கஷ்டப்படாமல் போய்விட்டாள்.

"சுபிட்சமா தீர்க்காயுசா இருக்கணும்" என்றார் சாஸ்திரிகள்.

சாப்பாடு முடிந்தாகி விட்டது. தட்சணையும் கொடுத்தாகி விட்டது. கிளம்ப வேண்டியதுதான்.

"ரொம்ப திருப்தி.. வரட்டுமா"

போய்விட்டார்கள்.ஊஹூம். எனக்கு ஏனோ திருப்தி ஆகவில்லை. மனசுக்குள் ஏதோ குறை நெருடியது. புரிந்தும் புரியாமலும் மந்திரங்களைச் சொன்னதில் அதிருப்தி.மனசு அலை பாய பார்வை தன்னிச்சையாய் மாமி மேல் பதிந்தது. அருகே போனேன்.

"மாமி நீங்க சாப்பிடுங்கோ. நான் பரிமாறட்டுமா"

ஏதோ சொல்ல முயல்வது புரிந்தது.

'நம் அந்தஸ்து என்ன.. போயும் போயும் சமையல்கார மாமிக்கு நீங்க ஏன் பரிமாறணும்?' என்கிற தொனி புரிந்தது.

மாமி சோகையாய் சிரித்தாள்.

"எனக்கு இப்ப எதுவும் ஒத்துக்கிறதில்லை. ஏதோ ருசியா சமைப்பேனே ஒழிய நான் சாப்பிடறது மோர் சாதம் மட்டும்தான். வேறேதாவது சாப்பிட்டா வாந்தி வந்துரும். முடியறதில்லே"

மெல்ல மோர்சாதம் கலந்து தொட்டுக் கொள்ள ஏதுமின்றி ஒவ்வொரு கவளமாக விழுங்கினாள்.

அம்மா...

மனசு உடைத்துக் கொள்ள, கண்ணீர் தானாகக் கொட்ட.. அடக்க இயலாமல்.. விம்ம ஆரம்பித்தேன்.


(கல்கியில் பிரசுரமானது)



July 18, 2010

கண்ணாடி


முகம் பார்க்கிற கண்ணாடி ஒன்று நல்லதாய் வேண்டும் என்று அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள்.வீட்டில் இருந்தது பின்புறம் ரசம் போய் அதுவுமின்றி வெவ்வேறு முகங்களைக் காட்டிக் கொண்டிருந்தது.

சரோஜினி அக்காவுக்கு தினசரி காலை அதனுடன் மல்லுக்கு நிற்பதே வேலை. சுவரில் கண்ணாடி அதன் போக்கில் தொங்கிக் கொண்டிருக்க அக்கா தன்முகத்தை அதற்கு ஏற்றாற்போல அனுசரிப்பாள்.

இடுப்பு கூன் போட்டு எல்லாத் திசைகளிலும் திரும்பி கடைசியில் குறிப்பிட்ட இடம் தப்பி பொட்டு விழுந்திருக்கும்.

எரிச்சலில் ஒரு தடவை கீழே வீசி எறிய அதன் ஆயுள் கெட்டி என்பதால் இலேசான விரிசல்களுடன் பிழைத்து விட்டது.

பிறகுதான் கோளாறுகள் அதிகப்பட்டன.. முன்பு சுமாராய்த் தெரிந்த முகம் இப்போது ஏழெட்டு விதங்களில் தெரிய ஆரம்பித்தது.

அக்காதான் முதலில் பொருமினாள்.

"இதைத் தூக்கி எறியணும்..சனி"

அம்மா குளித்து விட்டு ஈரம் சொட்டிய உடம்புடன் புடவையைச் சுற்றிக் கொண்டு வந்து நின்றாள்.

"இங்கே கொண்டா"

கையில் வாங்குவது கூடாது என்கிற சாஸ்திரப்படி சரோஜினி இன்னொரு தரம் அதைக் கீழே வீசி எறிய நினைத்தபோது அம்மாவின் உள்ளுணர்வு கண்டு பிடித்து விட்டது.

"வேணாம்டி.. வெள்ளிக்கிழமை"

அக்கா மனமிரங்கிக் கண்ணாடியைக் கீழே வைத்தாள். அம்மாவுக்குக் கண்ணாடி அனாவசியம். ஒரு ரூபாய் அகல குங்குமப் பொட்டு நெற்றி நிறைக்கப் போகிறது. பிறகு சமையல் வேலைகளில் அதன் அழகு சிதைந்து தீற்றல் மட்டும் அம்மாவின் சுமங்கலித்தன்மைக்கு சாட்சியாய் நிற்கும்.

"ஜெய ஜெய தேவி.. துர்க்காதேவி.."

அம்மாவின் குரல் நடுங்கி ஒலித்தது. இனி ஸ்லோகம் முடியுமோ சமையல் முடியுமோ என்கிற போட்டி. எதுவாயினும் அம்மா பக்தியாய் சமைத்தால் அதன் சுவையே தனி.


இன்று தீர்மானம் நிறைவேறி விட்டது.

'இது நாள் வரை சமாளித்தது போதும். புதுக் கண்ணாடி வாங்கிவிட வேண்டியதுதான்'

எங்கள் மாநாட்டில் அப்பா சேரவில்லை. அவர் பிறவியிலேயே அதிர்ஷ்டக்காரர். இல்லாவிட்டால் அம்மாவைப் போல ஓர் அருமையான மனுஷி மனைவியாய் வாய்த்திருப்பாளா?

எல்லோர்க்கும் எல்லா வீட்டிலும் முதல் தேதி சம்பளம் என்றால் வீடே குதூகலிக்கும். எங்கள் வீட்டில் அப்படி இல்லை. அப்பா எப்போது சம்பளம் கொண்டு வந்து தருவார் என்று எங்களுக்குத் தெரியாது. ஏன், அப்பாவுக்குமே தெரியாது.ஆனால் ஒரு சிறு முனகல் கூடக் காட்டாமல் அம்மா தன் சாம்ராஜ்யத்தை நடத்தி வந்தாள்.

பட்சண டப்பா என்றுமே காலியாய் இருந்ததில்லை. குறைந்த பட்சம் பொட்டுக்கடலை வெல்லம் வைத்து இடித்த மாவு மட்டுமாவது நிரப்பப்பட்டு இருக்கும்.

மாநாட்டில் அப்பா கலந்து கொள்ளாததற்கு அவருடைய இன்னொரு அதிர்ஷ்டமும் காரணம். - அவருடைய வழுக்கை.தலை சீவிக் கொள்ள அவருக்குக் கடந்த பத்து வருடங்களில் இயற்கை வாய்ப்பே தரவில்லை. பிறந்தபோதே அப்படித்தான் இருந்திருப்பாரோ என்ற எங்கள் சந்தேகத்தை அம்மாதான் தீர்த்து வைத்தாள்.

அப்பா, அம்மா இணைந்து எடுத்துக் கொணட ஒரே புகைப்படத்தைக் காட்டினாள்.கருகருவென்று பெண்கள் லஜ்ஜைப்படுகிற நீளத்தில் முடியுடன் அப்பா.. கருமையான அடர்த்தியான மீசை வேறு.

"நாப்பது வயசுன்னு சொல்லுவியா" என்றாள் கிசுகிசுப்பாய்.

முடியாதுதான் . அப்பா லேட் மேரேஜ். 'வேண்டாம்' என்று மறுத்துக் கொண்டிருந்தவர் அம்மாவைக் கல்யாணம் செய்து கொண்டது தன் பூர்வ புண்ணியம் என்றாள்.

வேலைவெட்டி இல்லாத மனுஷனுக்கு எவர் பெண் தரப் போகிறார்கள்? அம்மாவின் குடும்பம் ஏழ்மைக்கும் சற்று கீழே. அப்பா கரை சேர்க்க வந்தவராய்க் கருதப்பட்டதில் அதிசயம் என்ன !

பின் எப்படி முடி கொட்டியது?

சரோஜினி அக்கா பிறந்து நாலைந்து வருடங்களுக்குப் பிறகு நான் பிறந்தேனாம். ஒரு குழந்தைதான் என்கிற தீர்மானத்தில் இருந்தார்களாம். எனது வரவு எதிர்பாராதது.

"நீ பொறந்தப்புறம்தான் அவர் முடி கொட்ட ஆரம்பிச்சுது.. ஒரே வருஷம்.. முழுக்கக் கொட்டிருச்சு" என்றாள் அம்மா பாதி வசவாய்.

நான் மௌனமாயிருந்தேன். என் பெயரை அகாரணமாய் இழுத்ததில் எனக்கு அத்தனை உடன்பாடில்லை. மேலும் அப்பா எனக்கு அறிமுகமானது முதல் இதே தோற்றம்தான். இதனால் பெரிதாய் இழப்பு தோன்றவில்லை.


சரோஜினி அக்கா தன் நெடுநாள் தீர்மானத்தை வெளிப்படுத்தினாள்.

"ஆளுயரக் கண்ணாடி வாங்கணும். புடவை கட்டினா முழு உருவம் தெரிகிற மாதிரி"

கண்கள் ஆசையில் மின்னிக் கொண்டிருந்தன. மானசீகமாய் கண்ணாடி முன் நின்றாள். சிண்ட் ரெல்லா போல சட்டென்று அக்கா உருவம் மாறிப் போனது. அழகு மெருகிட்டுக் கொண்டு ஜொலித்தது.

"அய்ய.. இது என்ன வீடா.. ஷோ ரூமா" என்றேன்.

அம்மாவுக்கும் விருப்பம் இல்லை.

"வீட்டுல வச்சிக்க முடியாதுடி" என்றாள் மெல்ல ஆனால் அழுத்தமாய்.

சரோஜினியின் முகம் இறுகியது.

"எனக்குப் புடிச்சதை சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம்"

அம்மாவுக்கு அவள் மனதை நோகடிக்க விருப்பம் இல்லை.

"விலை ரொம்ப அதிகமா இருக்குமோ" என்ற சந்தேகத்தை வெளியிட்டாள்.

"இருக்கும் .. இருக்கும் " என்றேன்.

அக்கா என்னை முறைத்தாள். தனது ஆசைக்கு எதிரி என்ற பாவனையில்.

"போய் விசாரிச்சு பார்ப்போம்.. அப்புறம் முடிவு பண்ணலாம்"

அம்மாவுக்கு இதில் உடன்பாடுதான். 'விலை அதிகம்' என்று தெரிந்தால் அக்கா மனசு மாறக்கூடும்.

அப்பா பிரஸ்ஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வருவதற்கு ஒன்பதரை மணி ஆகிவிடும். மாலையில் எல்லோருமாய்ச் சேர்ந்து கடை வீதிக்கு போய் வரலாம் என்று நிச்சயித்தோம்.

அக்கா கீழே கால் பதியாமல் அலை பாய்ந்து கொண்டிருந்தாள்.சேமிப்பு என்று அம்மாவிடம் சொல்லிக் கொள்கிற மாதிரி எதுவும் இல்லை. கண்ணாடி பத்து இருபது ரூபாய்க்குள் அடங்கி விடும் என்பதால் அம்மாவின் மனசில் படபடப்பு இல்லை.

ஆனால் அக்கா எந்த துணிச்சலில் ஆள் உயரக் கண்ணாடி தேடினாள் என்று எனக்குப் புரியவில்லை.

டவுனில் கடை வீதி பரந்துவிட்டது. எது தேவையானாலும் அது கிடைக்கிற அதற்கே உரித்தான ஜாலக்கோடு இருந்தது. ஜவுளி என்றால் வரிசையாய் இருபது ஜவுளிக் கடைகள். தங்கம் என்றால் பதினைந்து ஜுவல்லரி மார்ட். பாத்திரம் என்றால் வரிசையாய் முன் வாசலில் கட்டித் தொங்க விடப்பட்டு மின்னும் எவர்சில்வர், பித்தளைப் பாத்திரங்க்கள். ஒரு தூக்கு வேண்டுமென்றாலும் ரகவாரியாய் தூக்கிலடப்பட்ட தூக்குகள் நிரம்பிய பாத்திரக் கடல்! கடை இல்லை.. கடல்!

பிரமிப்புடன் கூட்டத்தோடு கூட்டமாய் நகர்ந்து கொண்டிருந்தோம். எதையாவது வாங்க அல்லது வாங்கிக் கொண்டு ஆனந்தம் மற்றும் கவலை தோய்ந்த முகங்கள் எங்களைக் கடந்து போய்க் கொண்டிருந்தன.

தனி வரிசையாய்க் கண்ணாடிக் கடைகள். முதல் கடை திருப்தி தரவில்லை. சின்னச் சின்னதாய்க் கண்ணாடிகள். அடுத்ததில் வாஷ் பேசின் மேல் வைக்கிற மாதிரி கண்ணாடிகள்.

அம்மா மிரண்டிருந்தாள். 'கையில் பணமின்றி ஏன் கடை வீதிக்கு வந்தாய்' என்று கடை முதலாளிகள் சங்கம் மிரட்டுகிற மாதிரி சுருண்டு காட்சி தந்தாள்.

நான் கூட தைரியமாய் நிமிர்ந்து நடந்தேன். அக்காவின் மனோரதம் நின்றது ஒரு கடை வாசலில். கண்ணாடிக் கடல். பெரிய ஹால் போல கடை அமைப்பு. யார் யாரோ உள்ளே போய் வெளியே வந்தார்கள். யார் ஓனர் என்று புரியாதபடி நின்றவர்கள் அத்தனை பேருமே எங்களை வெறித்தார்கள்.

அக்காவின் காலடிக்கு இணையாய் நானும் வைத்துப் பின் தொடர்ந்தேன். அம்மாவை லேசாக இழுத்துக் கொண்டு.

"என்ன வேணுங்க" என்றான் ஒருவன்.

"கண்ணாடி" என்றாள் அக்கா.

குரல் பிசிறியது.

"என்ன மாதிரி"

"பெரிய சைஸ்ல.. ஆள் உயரம்"

"மாடிக்குப் போங்க"

இதற்கு மேல் மாடியா.

பிரமிப்புடன் நகர்ந்து எதன் மீதும் இடித்துக் கொள்ளாமல் படியேறினோம்.

கண்ணாடி பேக்கிங்க் செய்து வைத்த வைக்கோல்.. காகித ஜல்லி.. அட்டை.. என்று சிதறிக் கிடந்தன.

ஹாலில் ஏதோ வாசனை அடித்து மூச்சு முட்டியது.

மேலே போனால் அதிசயம்!

எங்கு திரும்பினாலும் சரோஜினி அக்கா.. உடன் நான்.. அம்மா.

அம்மா இப்போது மிரட்சியின் உச்சத்தில். புடவையை இன்னும் இழுத்துப் போர்த்திக் கொண்டு குறுகினாள்.

அக்கா சவடாலாய் நின்றாள்.

கைப்பையை ஒரு தரம் சுழற்றி மீண்டும் தோளில் அணிந்தாள்.

என் முகத்தை அத்தனை கண்ணாடிகளிலும் தேடிக் கண்டு பிடித்து குதூகலத்தின் உச்சத்தில் இருந்தேன்.

அக்கா என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். எப்படி வேண்டுமானாலும் சமாளிக்கட்டும். இந்த நிமிடம்.. சொர்க்கத்தின் ஆதரவு பெற்ற நிமிடம். இதை இழக்கக்கூடாது.

இமை கொட்டாமல் என் உருவங்களை ரசித்துக் கொண்டிருந்தேன்.

எத்தனை விதமாய் 'நான்'கள்.


பஸ் ஏறியபோது பத்துரூபாய் பெறுமானமுள்ள சிறிய இலேசாய் நடுவில் கோடு தெரிகிற கண்ணாடிப் பார்சல் அம்மா கையில் இருந்தது. அடுத்த இருக்கையில் நானும் .. அக்காவும்.. எங்கள் பார்வையில் பரவசம் சற்றும் குறையாமல்.


(கல்கியில் பிரசுரமானது)

July 16, 2010

ரெட்டை நாக்கு

ஒருத்தர் கிட்ட ஒரு மாதிரி சொல்லி அதே மேட்டர அடுத்தவர் கிட்ட மாத்தி சொன்னா அவங்கள என்ன கேப்போம் ?
"என்னப்பா .. உனக்கு ரெட்டை நாக்கா? "
அப்படி ஒருத்தருக்கு ரெட்டை நாக்கே இருந்தா..
நினைக்கவே உதறுது..
எனக்கும் இந்த வீடியோ பார்த்து அப்படித்தான்..
நிஜமா .. பொய்யா தெரியல.. எதையாச்சும் அனுப்பி எனக்கு பீதி கிளப்பற சகா இதுக்கு பதில் சொல்லல..
அட்லீஸ்ட் நீங்களாச்சும் பார்த்து இது உடான்ஸா .. நிஜமான்னு சொல்லுங்க..



எப்படி சாப்பிடுவாங்க ?

July 13, 2010

சிரிப்பு

அது ஒன்றுமே இல்லாத விஷயம். எனக்கும் சற்று கோரோஜனைக்குரல்.
(புரியாதவர்களுக்காக இந்த விளக்கம். குழந்தைக்கு நாட்டு மருந்து கடையில் கோரோஜனைஎன்கிற மருந்தை வாங்கி தேனில் குழைத்து கொடுப்பார்கள். பேச்சு வந்ததும் குரல் கணீரென்று இருக்க )
என் முகம் கடுகடுவென்று இருக்க.. வந்தவரும் அதே பாதிப்பில் சற்று சவுண்ட்விட சூழலின் அமைதி குலைந்து சுற்றி நின்றவர்கள் எங்களை வேடிக்கை பார்த்தார்கள்.
வந்தவர் போய் விட்டார். என் சகா அருகில் வந்து 'தண்ணி குடி' என்றான்.
'நீயே பாரேன்' என்று ஏதோ சொல்ல முனைந்தபோது என்னைத் தடுத்தான்.
'முதல்ல தண்ணி குடி'
குடித்தேன்.
'அவருக்கு பதிலா என்னை நினைச்சுக்க.. நாதான் அந்த ஆளுன்னு.. இப்படித்தான் பேசி இருப்பியா'
மாட்டேன்.
'சரி. அதுதான் போகட்டும். ஏன் உன் குரல் இப்படி மைக்கை முழுங்கின மாதிரி உச்ச ஸ்தாயில இருக்கு.. உன் மறுப்பை சொல்ல வரும் போது ?'
வாஸ்தவம்தான்.
'ஒரு சிரிப்போட அவர் கேட்டதுல இருக்கிற சங்கடத்தை சொல்லி இருந்தா வேறு வழி ரெண்டு பேரும் யோசிச்சு இருக்கலாமே'
அட.. ஆமா..
'இப்ப நிதானமாயிட்டியா '
'ம்'
'அவர்ட்ட போ .. படியேறி போ.. லிப்ட் வேணாம்.. சொல்லு .. ஆனா ஒரு சிரிப்போட.. நேச்சுரலா..புரியுதா '
அவர் என்னைப் பார்த்ததும் முதலில் மிரண்டு போனார். துரத்தி வந்து சண்டை போடுகிறேன் என்று.
நிஜமாகவே நட்புடன் சிரித்தேன்.
'சாரி பாலா.. ' என்றேன் அவர் கையைப் பிடித்து.
பக்கத்தில் ஒரு இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்தேன். அவர் கேட்டதில் இருந்த சிரமங்களை சொன்னேன்.
இப்போது என் குரலில் தணிவு. கூடவே ஒரு நட்பின் புன்னகை.
என்ன அதிசயம். அவர் மேலாளர் அவரிடம் இதை சொன்னபோது , நான் என்னென்ன காரணங்களால் தருவது சிரமம் என்றேனோ அதையேதான் சொல்லி இருக்கிறார் . ஆனால் மேலாளர் வற்புறுத்தவே வேறு வழியின்றி என்னிடம் வந்திருக்கிறார்.
இரண்டு பேரும் வேறு வகையில் கொஞ்சம் கஷ்டப் பட்டு அந்த வேலையை முடித்தது தனிக்கதை .
சின்னதாய் ஒரு சிரிப்பு மட்டும் கூடவே இருந்தால்.. எத்தனை விஷயங்கள்
சுலபமாகி விடுகின்றன..
இந்தக் குழந்தையின் சிரிப்பைப் போல !!!!



July 11, 2010

அப்பா

எனக்கு மெயிலில் வந்த வீடியோ
இதற்கு முன் வேறு பதிவுகளில் யாராவது போட்டிருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை.
நான் மிகவும் ரசித்தேன். அதனால் உங்களுடன் பகிரவும் ஆசைப் பட்டேன் .

என்ன எளிமையாய் ஒரு சிறுகதை போல அழகாய்படம் பிடித்திருக்கிறார்கள்..

யார் அந்த மகானுபாவன் என்று தெரியவில்லை..

அவருக்கு என் மகிழ்ச்சியும் நன்றியும் !

July 10, 2010

கோலம்



வீதி நிறைக்கிறது
படி பத்து ரூபா என்று
வாங்கிய கோலப்பொடி.
சுற்றி சுற்றி வந்து
புள்ளிக் கணக்கு தவறாமல்
போட்ட கோலம்.
முதல் நாள் இதற்காய் கண் விழித்த
பயிற்சி முகாம்
வாகனங்களை விரட்ட
பொடியர்கள் படை.
'மிதிச்சிராம போங்க '
அரை மணியா.. முக்காலா ..
நேரம் போனது தெரியவில்லை..
போட்டு முடித்து
பெருமிதப் பார்வை..
அன்றிரவு தூங்க போகுமுன்
கால்கள் அழித்து போனது போக
மிச்சம் இருந்த
வளைவு நெளிவுகள்
தந்த சுகம்
காலையில் போட்டபோது கூட
இல்லை
நினைத்துப் பார்க்கும் புத்திக்கு!




July 07, 2010

ஜெய் பத்ரி - வியாசர் குகை

சென்ற பதிவில் வியாசர் குகை பற்றி சொல்லி இருந்தேன்.

அவர் கணபதிக்கு மகாபாரதம் சொல்லி வரும்போது இருவருமே நிபந்தனைகள் போட்டுக் கொண்டனர் .

"நான் எழுதற ஸ்பீட்ல நீங்க சொல்லணும்" என்று கணபதி.

"புரிஞ்சுக்காம எழுதக் கூடாது " - இது வியாசர்.

அப்பத்தான் சரஸ்வதி நதியின் இரைச்சல்.

'அம்மா .. தாயே .. ரூட் மாத்திக்க " என்று வியாசர் வேண்டுகோள் வைக்க சரஸ்வதி பிரவகித்து வந்தவள் , சட்டென்று மறைந்து பிறகு மலையின் வேறு பக்கம் வெளிப்பட்டு அதே பேரிரைச்சலுடன் ஓடுகிறாள்.

கண்கொள்ளா காட்சி !

இதோ வியாசர் குகை நுழைவு வாசல். எத்தனை வருடங்களுக்கு முந்தைய குகை என்று போட்டிருக்கிறது பாருங்கள். ( 5111 வருடங்கள் பழமையான குகை)

சரஸ்வதி மீண்டும் வெளிப்பட்டு ஓடும்போது அதே இரைச்சல்!

வீடியோ பதிவு உங்களுக்காக ...

ஒரு சின்ன கோவிலும் சரஸ்வதிக்காக அங்கே இருக்கிறது.. அதையும் வீடியோவில் பார்க்கலாம்.

July 06, 2010

ஜெய் பத்ரி

பயணங்கள் போல சுவாரசியமான விஷயம் எதுவும் உண்டா?
வீட்டில் அடைந்து கிடக்கும் நமக்கு வெளியூர் போய் வந்தாலே எத்தனை விதமாய் மனமலர்ச்சி.. அதிலும் மழைப் பிரதேசங்கள் .. தப்பு .. தப்பு மலைப்பிரதேசங்கள் என்றாலே படு குஷி!
4 வருடங்களுக்கு முன் ஹரித்வார் , ரிஷிகேஷ் , பத்ரிநாத் போய் வந்தோம்.
பத்ரியில் முதல் நாள் இரவு தரிசனம் முடித்து கோவில் கதவு பூட்டும் வரை வேடிக்கை பார்த்தோம். பூட்டிய கதவுகளுடன் இதோ பத்ரிநாத் கோவில் .




இப்போது நான் சொல்ல வந்தது மறுநாள் காலை .. ஐந்தரை மணிக்கு கண் விழித்து வெளியே வந்தபோது எதிரே நாராயண பர்வதம் 'தக தகவென ' தங்கமாய் மின்னிய அதிசயம்.


நர , நாராயண பர்வதங்கள் (மலைகள்) இடையில்தான் பத்ரிநாத் இருக்கிறது.

அங்கே தான் வியாசர் குகையும் இருக்கிறது. வியாசர் சொல்லச் சொல்ல பிள்ளையார் மகாபாரதம் எழுதினார் . அப்போது அருகில் சரஸ்வதி நதி இரைச்சலோடு ஓட , வியாசர் சொன்னதால் நதி மறைந்து வேறு பக்கம் வெளிப்பட்டு ஓடுகிறது.

இந்தியாவின் முதல் டீகடை என்று பெயர்ப் பலகையுடன் ஒரு டீக்கடை மலை உச்சியில் உண்டு. இந்திய எல்லையில் இருப்பதால்!

எத்தனை விவரங்கள்.. எத்தனை விதமாய் மனிதர்கள். பயணங்கள் எப்போதும் சுகமே ..

பத்ரி யாத்திரை பற்றி நிறைய படித்திருப்பீர்கள்.. என் அனுபவமும் கொஞ்சம் சொல்ல ஆசைப்பட்டு இந்த பதிவு.



July 04, 2010

கிங் க்வீன் ஜாக் - பகுதி 4

இனிப்புப் பெட்டியுடன் உமா வீட்டுக்குள் நுழைந்தபோது, அங்கு இன்னொரு உலக யுத்தம் பாதி நடந்திருந்தது.

அம்மாவின் எதிரே ஆக்ரோஷமாய் அப்பா.

"முடிவா நீ என்னதான் சொல்றே?"

"....."

அம்மா இந்த மனிதரிடம் இனி பேசிப் பயனில்லை என்கிற தோரணைக்குப் போய்விட்ட நிலை.

"நான் வாக்கு கொடுத்தாச்சு. நீ எப்படி தடுக்கறேன்னு பார்க்கறேன்"

ஏதோ ஒரு கவரை ஆட்டி ஆட்டிப் பேசினார். அதற்குள் என்ன இருக்கிறது என்று யூகிக்க முடியவில்லை உமாவால்.

உமாவைப் பார்த்ததும் ஏனோ பேசாமல் போய்விட்டார்.

"என்னம்மா கலாட்டா"

எப்போதேனும் மனசு உற்சாகமாய் உணரும்போது, உடனே ஸ்வீட் வாங்கிக் கொடுப்பது உமாவின் பழக்கம்.

'எனக்கு ஹேப்பியா இருக்கு இப்ப.. இனிப்பு எடு.. கொண்டாடு'

அவளுக்கு ஆபீசில் இதனாலேயே 'ஸ்வீட்டி' என்று செல்லப் பெயர் வந்து விட்டது.

தினகர் அதற்கும் ஒரு விளக்கம் வைத்திருந்தான்.

'உன் கோபம், வருத்தம் இதெல்லாம் கூட நீ ஷேர் பண்ணிக்கறே மறைமுகமா. யாரோடவும் பேசாம.. விஷ் பண்ணாம சைலண்ட்டா இருக்கறப்ப..'

அவன் வார்த்தைகள் சுட்டன. ஆனால், எதுவும் பேசாமல் விட்டு விட்டாள். இந்த குணமும் அம்மாவிடமிருந்துதான் வந்திருக்க வேண்டும்.

"என்னம்மா பிரச்னை"

"உனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கார்"

"நல்ல விஷயம்தானே"

பெண்ணின் கிண்டலை ரசிக்க அம்மாவுக்கு முடியவில்லை.

"ரெண்டாம்தாரம்.. பத்து வயசுல ஒரு பொண்ணும், எட்டு வயசுல ஒரு பையனும் இருக்காங்களாம். இவரோட சீட்டு விளையாடறவரோட பையனாம். நாப்பத்தஞ்சு வயசு. ஃபோட்டோ பார்க்கறியான்னு கேட்டார். சண்டை ஆரம்பிச்சுது"

"அப்பா ஃபோட்டோ காட்டுங்க"

உமாவே தேடிப் போனாள்.அப்பா இதை எதிர்பார்த்திருக்க மாட்டார் என்று அவர் திணறலிலேயே புரிந்தது.

"எ..ந்த ஃபோட்டோ"

"எனக்காக நீங்க பார்த்த மாப்பிள்ளை"

"அ..து எதுக்கு"

பக்கத்திலேயே கவர் கிடந்தது.

"ரெண்டு குழந்தைகளாப்பா"

"ம்"

"இப்ப யார் பார்த்துக்கறாங்க"

"மாமனார் வீட்டுல விட்ட்ருக்கார். இவருக்கு அம்மாவும் இல்லே"

அப்பா இப்போது சுதாரித்துக் கொண்டு விட்டார். பதில்கள் நிதானமாக வந்தன.

"எப்ப தவறிப் போனா.. முதல் மனைவி"

இந்தக் கேள்வியே அநாவசியம் என்று அப்பா முகத்திலேயே தெரிந்தது. இரண்டாவது பையனுக்கு எட்டு வயசு. பிரசவத்திலேயே போயிருந்தாலும் எட்டு வருடங்கள்.

"அது ஞாபகம் இல்லை. பிரைவேட்ல வேலை. ஒரு கெட்ட பழக்கமும் இல்லை. மாமனார், மாமியாருக்கும் சிரமம் தரவேணாம்னு யோசனை. போய்ப் போய் பசங்களைப் பார்த்துட்டு வர கஷ்டம் வேற. வீட்டோட ஒருத்தி இருந்தா இந்தச் சிக்கல் இல்லை பாரு."

"நானும் வேலைக்குப் போறேனேப்பா"

"அதனால என்ன.. பசங்க பெரியவங்க. சோறு ஊட்ட வேணாம். அவங்க வேலையை அவங்களே செஞ்சுக்கற மாதிரி"

"நைஸ் பா"

உமாவுக்கு நிஜமாகவே சந்தோஷம் வந்தது அதைக் கேட்டு.

"அப்புறம் என்ன.. பேசாம ரெண்டு பேரையும் கூடவே வச்சுகிட்டா.. இவர் ஆபீஸ் போகறவரை இருக்கலாம். அப்புறம் வீட்டுக்கு வந்ததும் அவங்களோட இருக்கலாம். அதுக்கு எதுக்குக் கல்யாணம்"

அப்பாவின் முகம் மாறியது. உமா தன்னுடன் விளையாடுகிறாள் என்று நினைத்து எரிச்சலானது புரிந்தது.

"உனக்குப் புரியாதுடி. அவனுக்குச் சின்ன வயசுடி. அதுக்குள்ள தனியாளா நிக்கணுமா"

"ஏம்பா தனியாளு.. அவரோட அப்பா.. ரெண்டு பசங்க.. ஹேப்பியா இருக்கலாமே"

"போடி"

அப்பாவுக்கு மூச்சிரைத்தது. பெண்ணுடன் எந்த அளவு இறங்கி வந்து உரையாடல் நிகழ்த்துவது என்கிற குழப்பம் தெரிந்தது.

"ஸோ.. அவருக்கும் ஒரு மனைவி தேவை.. அதானே"

"ஆமா.."

"குழந்தைங்க மேனேஜ் பண்ணும்.. அம்மா இல்லாம.. ஆனா இவரால முடியலே"

"உளராதே.. புரியாம பேசாதே"

"நம்ம வீட்டுலயும் நீங்க ரெண்டு பேரும் வெளி உலகத்துக்குத்தான் கணவன், மனைவி.. எப்படி மேனேஜ் பண்றீங்க"

உமாவின் கன்னத்தில் விழுந்த முதல் அறை. சட்டென்று நிகழ்ந்து விட்டது.அம்மா ஓடி வந்தாள். தன் துக்கம் மகளுக்கும் தொடர்கிறது என்கிற பதட்டம்.

"கோபப்படாதீங்க.. யோசிங்க"

உமாவின் கண்கள் கலங்கி இருந்தாலும் குரலில் நிதானம் தப்பவில்லை.



அன்றிரவு அப்பா ஹாலில் விளக்கெரித்துக் கொண்டு, கைவசம் இருந்த சீட்டுக்கட்டைப் பிரித்து, தனக்குத் தானே ஆடிக் கொண்டிருந்தார். சாப்பிடவும் வரவில்லை.

உமா, அம்மா இருவரும் சாப்பிடவில்லை. காலையில் பார்த்தபோது இனிப்பில் எறும்புகள் மொய்த்திருந்தன.

"வேஸ்ட்டாப் போச்சேடி"

அம்மா எதைச் சொன்னாள் என்று புரிந்தது.

"எறும்பாவது சாப்பிடட்டும்மா.. தட்டி விட்டுராதே.. பின் பக்கமா வெளியே வச்சுரு."

"நீயே வச்சுட்டு வா"

உமா எறும்புகளின் அணிவகுப்பினைக் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தாள்.

"இன்னிக்கு லீவு போடட்டுமாம்மா"

"உன் இஷ்டம்"

"நீயும் வாம்மா. எங்கேயாவது வெளியே போயிட்டு வரலாம்."

"நான் வரலே"

"உனக்கு அலுப்பு வரலியாம்மா"

"எதையும் மனசுக்குக் கொண்டு போனாத்தான் அலுப்பும் இனிப்பும். எட்ட வச்சு வேடிக்கை பார்த்தா ஒரு நாள் ஓடறது ஒரு நிமிஷத்துல"

அம்மா! பெண் தினகர்! ஏன் இந்த கோணத்தில் அம்மாவை இதுவரை யோசிக்கவே இல்லை.

அப்பாவின் ஆக்கிரமிப்பில் சுயம் தொலைத்த பெண்மணி என்றே பட்டியல் போட்டு வைத்தது தன் தவறுதானா?

"அம்மா"

"வலிக்கிறதாடி"

கன்னம் தொட்டுக் கேட்டாள். இரு விரல்களின் தடம் பதிந்த இடம். லேசாய்..

"இல்லம்மா"

"கஞ்சி போடட்டுமா"

"அம்மா எனக்குக் கல்யாணமே வேண்டாம்னு தோணுதும்மா"

"ம்"

"ஏதோ விரக்தியில் சொல்லலே. நல்லா யோசிச்சுத்தான் சொல்றேன்"

அம்மா மெளனமாய் இருந்தது யோசித்ததாலா.. அல்லது யோசிக்க விரும்பாததாலா.. என்று புரியவில்லை.

"தினகர் மேல எனக்குப் பிரியம் உண்டும்மா. ஆனா அது கல்யாணம் வரைக்கும் போகுமான்னு புரியலே. அவனுக்கும் சில அபிப்பிராயங்கள், யோசனைகள், தெளிவுகள், தீர்மானங்கள் எல்லாம் இருக்கு. அது எப்பவும் எனக்கு சந்தோஷம் அல்லது நிம்மதி தருமான்னு தெரியலே. ரெண்டு பேரும் பிரியமான முறையில முரண்படறோம்"

அம்மா இப்போது உமாவைக் கூர்ந்து கவனித்தாள்.

"அவனுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கற ஆசை இருக்கான்னு கூட எனக்குத் தெரியாது. கேட்டுத் தெரிஞ்சுக்கிற விருப்பமும் இப்ப எனக்கு இல்லே. நான் அவனைக் கல்யாணம் பண்ணிக்கறதால என்ன மாற்றம் வரும்னு புரியலே"

"என்னடி சொல்றே"

"அம்மா அப்பாவை விட்டுட்டு நீ என்னோட வரியான்னு கேட்க நினைச்சேன். வேணாம்மா.. அதுவும் அவசியம் இல்லே..நாம இப்படியே இருக்கலாம்"

"எங்க காலத்துக்குப் பிறகு நீ தனியா.."

"இல்லம்மா.. நான் தனி இல்லே.. இப்ப தினகர்.. அப்ப யாராவது என் சுயம் புரிஞ்சு.. என்னோட நல்ல நட்பு பாராட்டி.."

"இது வெறும் கனவுடி.. யதார்த்தம் இல்லே"

"அப்பாவோட வாழ்க்கை சீட்டுக் கட்டுல அடங்கறமாதிரி.. உன்னோட வாழ்க்கை சமையல்கட்டுல முடியறமாதிரி.. என்னோட வாழ்க்கையும் நினைவுக் கூட்டுல இருக்கட்டுமே"

"தினகரே வந்து கேட்டா"

"அப்ப பார்க்கலாம். நான் முடிவு எதுவும் எடுக்கலம்மா.. ஆனா முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தா.. நல்ல முடிவா எடுக்க.. நம்ம மனசுல ஒரு தெளிவு வேணும் இல்லியா.. அதைத்தாம்மா இப்ப வளர்த்துக்கறேன்"

எழுந்து நின்ற மகளிடம் வயதுக்கு மீறிய முதிர்ச்சி இருப்பதாய் புலப்பட்டது அம்மாவுக்கு.

தன்னையும் அறியாமல் பெருமூச்சு விட்டாள். அதில் கொஞ்சம் பெருமிதமும் குழைந்திருந்தது.


(முற்றும்)



கல்கியில் வெளிவந்த நாலு வாரத் தொடர்.

July 03, 2010

கிங் க்வீன் ஜாக் - பகுதி 3

அத்தை ஊரிலிருந்து வந்திருந்தாள்.
பெண்ணுக்குக் கல்யாணமாம். பத்திரிகை வைத்து நேரடி அழைப்பு. "உமாவுக்கும் இவளுக்கும் ஆறு மாசந்தான் வித்தியாசம்"
அம்மா அதைக் காதில் வாங்காத மாதிரி நின்றதால், அத்தை இன்னொரு தரம் சொன்னாள்.

"அவனை நம்பாதே. கட்டு இருந்தாப் போதும். சோறு, தண்ணி வேண்டாம்"

அம்மாவின் முகம் இப்போதெல்லாம் என்ன நினைப்பு ஓடுகிறது என்று புலப்படுத்துவதில்லை.

"அவனை நீயாச்சும் திருத்தி வழிக்குக் கொண்டு வருவேன்னு பார்த்தோம். ம்ஹூம்.. உனக்கும் சாமர்த்தியம் இல்லே"

உறவுகளோடு எந்தவிதப் போக்குவரத்தும் ஏன் அம்மா வைத்துக் கொள்வதில்லை என்று உமாவுக்கு இப்போது புரிந்தது.

"ஏன் அத்தை.. இப்ப நீங்க பார்த்திருக்கிற மாப்பிள்ளையைப் பத்தி நல்லா விசாரிச்சுட்டீங்களா"

உமா இயல்பான குரலில்தான் கேட்டாள். அம்மாவுக்கு ஏதோ புரிய, பின்னாலிருந்து வேண்டாம்டி என்பது போல் சைகை செய்தாள்.

"நல்லா விசாரிச்சாச்சு.. ஒரு கெட்ட பழக்கமும் இல்லை. அவ்வளவு ஏன்.. அவரே மனசு விட்டு பேசினார்..என்னைப் பத்தி நானே சர்டிபிகேட் தரக் கூடாது. ஆனாலும் சொல்றேன். ஆபீஸ்ல எப்பவும் ஏதாவது பெரிய மனுஷா வந்தா, என்னைத்தான் அனுப்புவாங்க. கம்பெனி கொடுக்கணும். வர்றவனுக்கு ட்ரிங்க்ஸ் பழக்கம் இருந்தா ஹோட்டல் ரூமுக்கு வரவழைச்சு தரணும். முதல்ல ஒரு மரியாதைக்கு 'சிப்' பண்ணேன். அப்புறம் இதுவே பழக்கம் ஆயிரும்னு விட்டுட்டேன்னார்"

"ஓஹோ" என்றாள் உமா.

"பாரேன்.. என்ன வெளிப்படையா பேசறார்னு"

அத்தையின் முகம் பூரித்திருந்தது.

"குடிகாரன் பேச்சுன்னு ஏதோ சொல்வாங்களே.. அது மாதிரி ஆயிடப்போவுது. அப்புறம் உங்க பொண்ணு அவரைத் திருத்தலேன்னு கெட்ட பேர் வந்திடப் போவுது."

உமா பட்டென்று சொல்லி விட்டாள்.அத்தையின் முகம் செத்துப் போனது. பிறகு சுள்ளென்று கோபம் கொப்பளித்தது.

"என்னடி பேசறே"

"நீ விடு.. ஏய் உமா.. உள்ளே போடி"

அம்மா விரட்டினாள்.

"சும்மா இரும்மா. இத்தனை வருஷம் நாம எப்படி இருக்கோம்னு கவலைப்படாதவங்க இப்ப வந்து புத்தி சொல்றாங்க"

"உங்களை மதிச்சு உறவு விட்டுரக் கூடாதுன்னு வந்தேன் பாரு.. எனக்கு வேணும்"

அத்தை எழுந்து போய் விட்டாள்.

****************

தினகர் சிரித்தான்.

"ம்ம்.. அப்புறம்"

"அப்புறம் என்ன.. அம்மாவுக்கு என் மேல பயங்கரக் கோபம். என்னாலதான் அத்தை உறவு போச்சுன்னு"

"உனக்கு ஏன் அப்படி ஒரு கோபம் வந்தது?"

"தெரியலே தினகர். ஒரு வேளை அம்மாவை அத்தை இன்ஸல்ட் பண்ணது எனக்குப் பிடிக்காம அப்படி பேசிட்டேனா"

"ஊஹூம். அதை விடவும் வேற காரணம் இருக்கணும்"

உமா யோசித்தாள். கோபத்துக்கான காரணத்தை அறிய மூன்றாம் மனுஷி போல, நிகழ்ந்ததை மனத் திரையில் ஓட்டிப் பார்த்தாள்.

"உனக்கு உங்கம்மா மேலேயே கோபம் இருக்கு. இப்படி அநியாயமா ஏமாந்திருக்கக் கூடாதுன்னு"

தினகர் நிதானமாய்த்தான் சொன்னான். உமாவின் முகம் அப்படியே வாடிப்போனது.

தினகர் எப்போது நகர்ந்தான் என்று புரியவில்லை. உமாவால் மேலே பேச இயலாத மெளனம். உள்ளே குமுறல்களுடன் வெளியே அமைதி.

அம்மா பூத்தொடுத்துக் கொண்டிருந்தாள். சரமே விலைக்குக் கிடைக்கிறது. ஆனாலும், அம்மாவுக்கு உதிரிப்பூ வாங்கித் தொடுப்பதில் தனி சந்தோஷம். அந்த லாகவம் உமாவுக்கு வரவில்லை. முடிச்சு ஒழுங்காய் வந்தால் பூ விழுந்து விடும். பூ ஒழுங்காய் நின்றால் முடிச்சு தப்பிவிடும்.

"அம்மா"

'என்ன' என்று கேட்பது போல, நிமிர்ந்து பிறகு பூத்தொடுப்பதில் கவனம் திரும்பியது.

"எந்த மாறுதலும் இல்லாம.. வாழணுங்கிற நிர்ப்பந்தம் மட்டும் இருக்கிற மாதிரி.. நாம வாழறாப்ல இருக்கு"

அம்மா குனிந்திருந்ததால் என்ன உணர்வை முகம் பிரதிபலிக்கிறது என்று புரிபடவில்லை.

"அபத்தமா இருக்கும்மா"

"இப்ப என்ன செய்யணும்"

"எங்கேயாவது ஒரு பத்து, பதினைந்து நாள் போயிட்டு வரலாம். ஆனா திரும்ப இதே வாழ்க்கைக்குத் திரும்பணும். வேற ஊருக்கு மாற்றல் வாங்கலாம். அதுவும் ஆறு மாசம் இருந்தாப் பழகி,அலுப்பு வந்துரும்"

'நீயே யோசித்து முடிவு சொல்' என்கிற மாதிரி அம்மாவின் மெளனம் இருந்தது.

"செத்துப் போயிடலாம்னுகூடத் தோணுது"

சொன்னபிறகு உமா நாக்கைக் கடித்துக் கொண்டாள். சட்டென்று அந்த வரி விடுபட்டு விட்டது. எய்த அம்பு இனித் திரும்பாது.

அம்மா அழுதிருக்க வேண்டும். பூவுக்குத் தெளித்த நீருடன் இரண்டு சொட்டுக் கண்ணீரும் தெறித்தது. பாதி தொடுத்ததோடு எழுந்து போய் விட்டாள்.

பக்கத்து வீட்டாருடன் அவ்வப்போது புன்னகை பரிமாறியதுடன் சரி. வேறு விதமான உரையாடல்களோ, விசேஷ நாட்களில் இனிப்பு வழங்கிப் பெறுவதோ இல்லை.

இன்று வெளியில் வந்து நின்ற உமாவைப் பார்த்துச் சிரித்ததோடு நிற்காமல், நெருங்கியும் வந்து நின்றாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி.

"எங்க வேலை பார்க்கறே"

சொன்னாள்.

"என்ன சம்பளம் வரும்?"

லேசாய் எரிச்சல் வந்தது.

"எங்க குடும்பத்துக்குப் போதும்"

"அதுக்கில்ல.. உனக்குக் கல்யாணம் ஆயிருச்சின்னா, உங்க வீட்டுக்கு உன்னால பணம் எதுவும் தர முடியுமான்னு"

"நீங்க ஏன் அதுக்கு கவலைப்படறீங்க"

"பின்னே.. இத்தனை வயசாகியும் உன்னைக் கட்டிக் கொடுக்கணும்னு நினக்காம.. கம்முனு இருக்காங்களே.. கட்டிக் கொடுத்துட்டா.. உன் சம்பளப் பணம் போயிரும்னுதானே.. வளர்ந்த பெண்ணைப் புருஷனோடப் பார்க்கணும்னு பொறுப்பு வேணாமா"

எவ்வளவுதான் அண்டை அயலாருடன் விலகி இருந்தாலும், நம்மைக் கவனிப்பதும் நம் மீதான விமர்சனங்களுடன் அவர்கள் வாழ்வதும் தவிர்க்க முடியாது போலும் என்று, அந்த நிமிடக் கோபத்திலும் உமாவுக்குத் தோன்றியது.

தினகரின் பழக்கம் கற்றுத் தந்த உணர்வு அலசல் இது.

'நாம எப்பவும் தெளிவா இருக்க முடியும் உமா. அதனால என்ன பயன்னு நினைக்கறியா.. மத்தவங்களை நாம மாத்த நினைக்கறது வீண் வேலை. நம்மால அது முடியாத காரியங்கூட. நம்ம உணர்வை சரியான கோணத்துல பழக்கிட்டோம்னா.. எப்பவும் நிதானமா இருக்கலாம். குறைந்த பட்சம் மத்தவங்க நம்மை ஆளுமைப் படுத்த முடியாது'

உமா எதுவும் பதிலளிக்காமல் உள்ளே வந்து விட்டாள். அம்மாவும் இந்த உரையாடலைக் கேட்டிருக்க வேண்டும். இவள் வரும்போது அம்மா வழியில் நின்றிருந்தாள்.குளத்தில் எறியப்பட்ட கல் அலை எழுப்பாமல் விடுவதில்லை. உள்ளூர அடிமட்டத்தில் நிச்சலனமாய் இருந்தாலும் புறத்தில் தளும்பித்தான் ஆக வேண்டும் என்றும் உமாவுக்குத் தோன்றியது.

******

தினகர் 'குட் மார்னிங்' சொன்னதும் திருப்பிச் சொன்னாள்.

"நைட் சரியாத் தூங்கலியா"

"ம்"

"இன்னிக்கு லீவு போட்டிருக்கலாமே"

"ஸ்டேட்மெண்ட் முடிக்கணும்"

"ஹெல்ப் பண்ணவா"

"இல்லே.. நான் பார்த்துக்கறேன்"

"ஓக்கே"

போய்விட்டான். அவனிடம் இந்தக் குணம் அவளுக்குப் பிடிக்கும். பிறர் போல மேலே மேலே கேள்விகள் கேட்டு இம்சிப்பதில்லை.வேலை திருப்தியாய் முடிந்ததும் அரை மணி ஓய்வு கிடைத்தது.

மேனேஜர் அவளைப் பாராட்டிச் சொன்னதும் பிடித்திருந்தது. உள்ளூர வந்த பெருமிதம் யோசிக்கவும் வைத்தது.

'வார்த்தைகள் வருத்தமும், சந்தோஷமும் தர முடியுமானால்.. எப்படி விலகுவது'

தினகரிடம் பேச வேண்டும் போலிருந்தது.



(தொடரும்)

- கல்கியில் வெளிவந்த நாலு வாரத் தொடர்

July 02, 2010

கிங் க்வீன் ஜாக் - பகுதி 2



சீட்டுக் கட்டைப் பிரித்ததும் அப்பாவின் முகம் என்னமாய் விகசிக்கும். புதுக் கட்டு என்றால் ஆசையாய் வாசனை பார்ப்பார்.கலைத்து இடை சேர்த்து பர்ரென்று அடித்து மீண்டும் குலுக்கி.. படங்களும் எண்ணும் அவரைத் தங்கள் ஆளுமையில் வைத்திருந்தன.


'ரம்மி ஆடணும்னா இது வேணும்'


தலையைத் தொட்டுக் காண்பிப்பார்.


சின்னவயசில் ஒரு தரம் உமாவையும், அம்மாவையுமே இழுத்து அமர வைத்து விட்டார்.


"ஒரு தரம்.. ஒரே ஒரு தரம்.. வந்து விளையாடிப் பாருங்க"


அம்மாவுக்கு மனசே இல்லை. உமாவுக்கு அது என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம்.


"வாம்மா.. ஒரு தடவைதானே"


கலைத்து.. ஜோக்கர் வெட்டச் சொல்லி.. ஆளுக்கு 13 கார்டுகள் பிரித்துப் போட்டார்.அதற்கு முன்பே விளக்கம் சொல்லியிருந்தார்.


"இது ஏஸ்.. இது கிங்.. இது க்வீன்.. இதுதான் கிளாவர்..டைஸ்..ஆடுதன்..இப்படிச் சேர்ந்தா ஒரு செட்டு"


முதலில் புரிபடவில்லை. தானே இருதரப்பும் விளையாடிக் காட்டியதும் ஓரளவு புரிந்தது. தானும் சேர்ந்து விளையாடிப் பார்க்க பாதி ரகசியம் வெளிப்பட்டது.இரவுச் சாப்பாடு முடிந்து வீட்டில் இருந்த அபூர்வம். அப்பாவின் கைகள் பரபரவென்று சீட்டுகளை ஏந்தத் துடித்த தவிப்பு, அம்மாவையும் பெண்ணையுமே உட்கார வைத்து விட்டது.


அம்மா வெறுப்பாய் அமர்ந்திருந்தாள்.


"எதைப் போடறதுன்னு புரியலைப்பா"


"எதையோ ஒண்ணு போட்டுத் தொலைடி" என்றாள் அம்மா.


"ரெண்டு ஆடுதன் தனியா நிக்குமே.. அதைப் போட்டுடாதே"


அப்பா எப்படிக் கண்டு பிடித்தார்.. மூன்று சுற்று முடிந்து நாலாவது சுற்று.


"எப்படிப்பா?"


தலையைத் தொட்டுக் காண்பித்தார்.


"உங்கம்மாவுக்கு அது வேணும். வேற கார்டை இறக்கு. செட்டு சேர்ந்தது வேணாம். மூணு ஏஸ்.. மூணு கிங்னு வச்சிருப்பியே.. அதுல கழட்டு"


"போப்பா.. அப்புறம் எப்படி மறுபடி சேர்க்கறது"


"உங்கிட்டே ரியல் ரம்மியே இல்லியே"


"அது எப்படிப்பா தெரியும்?"


மறுபடி வியப்பு.


"உம்மூஞ்சியப் பார்த்தாலே தெரியறது.."


உமாவுக்குச் சந்தேகம் வந்து விட்டது.அன்றைய ஆட்டத்தில் அம்மாதான் ஜெயித்தாள். கொத்தாய்க் கீழே போட்டு எழுந்து போனாள்.


"பாரேன் அலட்சியத்தை.."


அப்பா எரிச்சலாகி விட்டார்.


அம்மாவிடம் இரவுப் படுக்கையில் சிலாகித்தபோது "வாயை மூடுடி.." என்றாள்.


"எப்படிம்மா"


"எனக்கு அதுல வெறி இல்லைடி. எப்பவாவது அமையறதை எப்பவும் கிடைக்கும்னு தொரத்தறது உங்கப்பா"


வீட்டில் அதன் பிறகு அப்பா இவர்களைக் கூப்பிடுவதில்லை.


அப்பாவின் சட்டைப்பை வறட்சியான தினங்களில் தானே மானசீகமாய்ப் பிரித்துப் போடுகிற பாவனையில் அபிநயிப்பார்.


உமா அப்பாவுடன் பேசிப் பார்த்ததில் இன்னமும் இறுகிப் போனார்.


"நீ சின்னப் பொண்ணு.. பேசாம போ.. எனக்குத் தெரியும்"


"பொழுதுபோக்கா இருக்க வேண்டிய விஷயம்பா. இப்படி அதுவே வாழ்க்கைன்னு"


அப்பாவின் கோபம் முகத்தில் தெரிந்தது.


"வாயை மூடிண்டு போடி"


அப்பா கை நீட்டி அறைந்ததில்லை. அன்று அந்த வார்ததைகள் அறைந்தன. உமாவுக்குச் சலிப்பு வந்து விட்டது.'எப்படியோ போகட்டும்'கூட்டுக்குள் முடங்கியவளை வெளியே இழுத்தவன் தினகர்.


"எங்கப்பா நல்லவர்தான் தினகர். ஆனா சீட்டாடணுங்கிற வெறியில அந்த நிமிஷம் என்ன செய்யிறார்ங்கிற நிதனம் இல்லை"


தினகரைப் பொறுத்தவரை ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு ரகம்.'சொல்லிப் பார். பதற்றப்படாமல். கேட்கவில்லையா.. விட்டு விடு'


"எப்படி முடியும் தினகர். எப்பவும் இறுக்கம் அப்பிக் கிடக்கிற குகைக்குள் காலடி வைக்கிற மாதிரி, வீட்டுக்குள் போனதும் வாடிப் போகுது மனசு"


"மனசுக்கு எல்லாத்தையும் கொண்டு போகாதே. அப்பாவைத் திருத்த முடியலைன்னு நீயும் உங்கம்மாவும் ஒவ்வொரு நிமிஷத்தையும் ஏன் வீணாக்கணும். அது உங்க லைஃப்.. நீங்க வாழ வேண்டிய நிமிஷங்கள்"


புத்திக்குப் புரிந்தது. மனசு ஏற்க மறுத்து அடம் பிடித்தது.


"மேல.. மேல.. நீங்களாவே ஒரு வலை பின்னி முடங்கிப் போறீங்க. உங்க அப்பாவும் அதே போல இன்னொரு வலையில"


தினகர் நிதானமாய் துளிக்கூட சலிப்பு காட்டாமல் தினசரி சொல்லிச் சொல்லி, அவளைச் சுற்றி நெருக்கமாய்ப் பின்னப்பட்டிருந்த மானசீக வலையை அறுத்து விட்டான்.


அவனுடன் இருக்க நேர்கிற நேரங்களில் தன்னம்பிக்கை துளிர் விட்டுக் கொள்ளும். வீட்டுக்குத் திரும்பியதும் அப்பா இல்லாத வெறுமையும், அம்மாவின் சோக வலையும் அவளையும் முடக்கிப் போடும்.


"யாரு.. தினகர்.. சொல்லு"


அம்மா கேட்டதும் என்னவென்று சொல்ல?


"உனக்கு எப்படித் தெரியும்மா"


"பக்கத்து வீட்டுக்கு ஃபோன் பண்ணான்.. நீ அப்போ இல்லை. ஒரு வாரம் லீவுன்னு சொன்னான்"


"ஓ"


"யாருடி அவன்"


"இருட்டிலேயே பிடிவாதமா நிக்கறேன்னு நின்னப்ப.. வெளிச்சத்தைக் காட்டினவன்மா"


"புதிர் போடாதே"


தினகர் கொடுத்த தைரியம் பற்றிச் சொன்னாள்.


"இப்பல்லாம் என்னால எதையாவது ரசிக்க முடியறதுன்னா.. அது தினகராலதாம்மா"


"எந்த ஜாதி"


"எதுக்கும்மா"


"சொல்லேன் பதில் கேள்வி கேட்காம உன்னால பேச முடியாதா"


உமாவுக்கு முதலில் சிரிப்புத்தான் வந்தது. பாவம், அம்மாவால் சில எல்லைகளைத் தாண்டி வர முடியவில்லை.


"மனுஷ ஜாதிம்மா. நட்புக்கு அந்த விவரம் போதும்"


அம்மா ஏனோ மெளனமாகி விட்டாள்.


ஒரு கவலையை அலசித் தீர்வு தேடிய மெளனமும் உண்டு. தீர்வு புலப்படாமல் விரக்தியில் வாய் மூடிப் போகும் மெளனமும் உண்டு.


உமாவும் மேலே பேசவில்லை. அம்மாவைச் சமாதானப்படுத்தவென்று ஏதேதோ பேசிக் கொண்டு போக, அம்மாவின் பயம்தான் அதிகரிக்கும்.


தினகர் ஆனால் இதற்கு முரணாகப் பதில் சொன்னான்.


"உன் அம்மாவைப் பொறுத்தவரை அந்தக் கேள்விகளில் நியாயம் இருக்கு"


"நியாயம் இருக்கோ இல்லியோ, பயம் இருக்கு அம்மா மனசுல"


"அப்ப நீ வெளிப்படையா இல்லேன்னு அர்த்தம். உன்னைப் பார்த்து உங்கம்மா எதுக்குப் பயப்படணும்"


உமா நிதானமாய்ச் சொன்னாள்.


"இது என்னால வர்றதில்லை. எங்கப்பாவால வந்தது. எதிர்பார்ப்பு.. ஏமாற்றம் எல்லாத்துக்கும் அம்மா அவர்கிட்டேதான் கத்துக்கிட்டா"


சிரிப்போடுதான் சொன்னாள். சொல்லி முடிக்கும்போது மனசு கசந்து வழிந்தது.தினகர் பேசாமல் இருந்தான். அவள் தரப்பு வாதத்தின் நியாயம் முழுமையாய்ப் புரிகிறவரை.மறுபடி மென்மையாய்ச் சொன்னான்.


"பேசு. உமா. அம்மா மனசுல கவலை விருட்சமாக விட்டுராதே. தினகர் விஷயமோ.. வேறெந்த விஷயமோ.. அம்மா ஏத்துக்கணும்னு போராடாம.. உன் மனசுல இவ்வளவுதான்னு புரிய வைக்கிற மாதிரி. அதுல ஒண்ணும் தப்பு இல்லை.. நாம மனுஷங்கதான். பேச்சு சக்தி கடவுள் கொடுத்ததே அவசியத்துக்கு பேசித்தான் ஆகணும்னு.. இல்லேன்னா இன்னொரு ரக மனுஷனா.. பேச்சு வராத மாதிரி படைச்சிருக்கலாமே"


அவன் பேசப் பேச.. அதன் தாக்கம் தன்னைப் பாதித்த மாதிரி.. அம்மாவுக்கும் தன்னுடைய பேச்சு அவசியம் என்று புரிந்தது உமாவுக்கு. இன்னொன்றும்.. அதே போலத்தான் அப்பாவுக்குமா?




(தொடரும்)


- கல்கியில் வெளிவந்த நாலு வாரத் தொடர்