February 27, 2010

மூன்று கவிதைகள்


1. விமர்சனம்

அது எனக்கு

விவரம் புரியாத வயது.

எதிர்ப்படும் மனிதரை எல்லாம்

நேசிக்கிறேன் என்று

கை நீட்டினேன்.

பற்றிக் குலுக்கிய சிலர்

என் கையைவிமர்சித்தார்கள்.

விரல்கள் குட்டை..

சொரசொரப்பு அதிகம்..

பிடி இறுக்கம்.. என்று.

பற்றியதை உதறினேன்.

நீட்டிய கையில் என் மனசிருந்ததை

எப்படிச் சொல்லுவேன்?


2. கீறல்கள்

நகங்களை யாரும்

நினைவில் வைப்பதில்லை.

நிறைய முறை வெட்டப்பட்டு

மீண்டும் வளர்ந்து..

உதிர்ந்த துணுக்குகள்

மண்ணோடு மக்கி..

எங்கோ சிதறி..

நினைவைப் பின்னோக்கினால்

கீறல்கள் மட்டும்

அழியாச் சித்திரமாய்!

3. உண்மை

மனசுக்கு மனசு

வித்தியாசப்படும் .

வார்த்தைக்கு அகப்படாமல்

ஜாலம் காட்டும்.

வெளிப்படும்போது

சுயமிழந்து போகும்.

'இல்லை'யென்று வேறொருவர்

நிரூபிக்கும்வரை

எதுவுமே உண்மைதான்எனக்கு!February 25, 2010

கனவாகி


'உன்னைப் பார்க்க ஆசைப்படுகிறேன்'

ஒற்றை வரியில் ஒரு கார்டு. எழுதிய நபரின் பெயர் கீழே 'ரகு'.

'லெட்டர் ஏதாவது?' என்ற வழக்கமான கேள்விக்குப் பதிலாக இன்று ஒரு கார்டு.

"ஏம்பா வேற எதுவும் எழுதலே?" என்றாள் ராஜி.

"இன்னும் என்ன எழுதணும்?"

"நிறைய எழுதலாம்"

"என்னன்னு சொல்லேன்"

புவனா கொண்டு வைத்த காபி ஆறிக் கொண்டிருந்தது.

"அப்பா" என்றாள் ராஜி கையைத் தொட்டு.

"சொல்லு"

"ஏன் வேற எதுவும் எழுதலே"

"அதான் கேட்டேனே.. என்ன எழுதணும்னு"

"ராஜி எப்படி இருக்கா. என்ன கிளாஸ் போறா.. எப்படிப் படிக்கறா.. இப்படி எழுதலாமே" என்றாள் பெரிய மனுஷி போல.

பெரிதாகச் சிரித்தேன்.

"புவனா. இங்கே பார். என்னமா கேள்வி கேட்கறது"

"அவளாவது கேட்க முடியறதே"

ஹாஸ்பிடல் வாசலில் பஸ் ஸ்டாப். போகும் வழியெல்லாம் ராஜியின் கேள்விகள் குறித்து புன்னகை என் உதட்டில்.

ரகு என்னைப் பார்த்ததும் பரபரப்பு காட்டினான்.

"வா.. வா.. வராம போயிருவியோன்னு நினைச்சேன்"

அருகிலிருந்த ஸ்டூலில் அமர்ந்தேன்.

சரியாக பதினைந்து நாட்கள் ஆகின்றன அவனைப் பார்த்து. முதலில் வந்த தகவல் அவனை ஹாஸ்பிடலில் சேர்க்கப் போவது குறித்து. மறுநாளே வந்து பார்த்தேன்.

இரண்டாவது தரம் வந்தது பதினைந்து நாட்களுக்கு முன்பு. இரவு பத்து மணிக்கு வாட்ச்மென் வந்து விரட்டும் வரை பேச்சு.

"போங்க ஸார். அய்யா பார்த்தா சத்தம் போடுவார்"

என்னை வாசல் வரை வந்து வழியனுப்பினான்.இதோ மறுபடி. அதுவும் ரகு கார்டு போட்டு.

"ஸாரிடா. எழுதக் கூடாதுன்னு நினைச்சேன்"

"இப்ப எப்படி இருக்கே"

"நிமிஷத்தை எண்ணிண்டு"பளிச்சென்ற பதில்.

ரகுவிடம் துளிக்கூட வருத்தத்தின் சாயல் இல்லை.

"உன் மிஸஸைக் காணோம்?" என்றேன் பார்வையைச் சுழற்றி.

"பாவம். அவளுக்குப் போரடிச்சுப் போச்சு. இப்ப எனக்கும் விடுதலை. அவங்களுக்கும் விடுதலை கிடைக்கும்.. நான் எதிர்பார்க்கறது நடந்துட்டா"

"உளராதே"

ரகுவை நான் பார்ப்பதைத் தவிர்த்ததற்குக் காரணமே அவனைப் பற்றி டாக்டர் சொன்ன விவரம்தான்.

'பிழைக்கறது கஷ்டம். நாளோ.. மாசமோ'

என்னால் கண்ணீரை மறைக்க இயலாது. அதுவும் ரகுவின் முன்பு.

"டேய்.. பிஆர்ஜியைப் பார்த்தேன். நம்ம மேத்ஸ் ஸார். பக்கத்து வார்டுல. என்னைப் பார்த்ததும் அடையாளம் புரிஞ்சுண்டு செளக்கியமான்னார். என்ன செளக்கியம்? பதிலுக்கு நான் அவரைக் கேட்டேன். எழுபத்தஞ்சு வயசுடா.. இனிமே அசட்டுத்தனமா கேட்காதே. கணக்குப் போட்டு பார்த்தா.. இதுவே ஜாஸ்தின்னார்"

ரகுவின் எலும்புக்கூடு குலுங்கியது. இத்தனை வேகமாய் உடல் க்ஷீணிக்குமா? கடவுளே.. அப்படி ஒன்றும் ஆணழகன் இல்லைதான். இருந்தாலும் விலா எலும்புகளை எண்ணி விடலாம் போல.

"உனக்கு ஞாபகம் இருக்கா. அந்த மனுஷரை எப்படிப் படுத்தியிருப்போம்? மூச்சு விடாம ஸ்டெப் பை ஸ்டெப் ஒரு பெரிய கணக்கைப் போட்டு முடிச்சதும் முதல் வரில சந்தேகம் கேட்போமே"

சாத்துக்குடி வாங்கிப் போயிருந்தேன். உரித்த சுளைகளை கொடுத்தபடி அவன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

"ராஜி உன் கார்டைப் பார்த்து.. ஏன் ஒரு வரிதான் எழுதியிருக்கார்னு கேட்டா"

"அடடா.. அவளைப் பத்தி எழுதியிருக்கலாம்" என்றான் உடனே.

"அவளை அழைச்சுண்டு வரலாம்னு நினைச்சேன். அப்புறம் ஆபீஸ்லேர்ந்து நேரா இங்க வர்றது ஈசின்னு.."

"வேணாம்டா. அவ எதுக்கு இங்கே. பயந்துப்பா"

"போன வருஷம் ஒரு கல்யாணத்துல சந்த்ரிகாவைப் பார்த்தேன்" என்றேன்.

இப்போது கூட அந்தப் பெயரைச் சொல்லும்போது இலேசாய்க் குரல் தடுமாறி ஒருவித உணர்வு அப்பிக் கொண்டது.

"நீதான் கடைசி வரைக்கும் உன் லவ்வை அவகிட்டே சொல்லவே இல்லியே"

"பயம்"

"என்ன பயமோ. என்னைப் பாரு. பார்வதிகிட்டே அசடு வழிஞ்சிட்டுப் போய் உளறிக் கொட்டி.. அவ பாட்டி என்னை விளக்குமாத்தால அடிக்க வந்தாளே. ஞாபகம் இருக்கா"

அன்று தெருவே சிரித்தது. இவன் ஓட.. ஓட.. பாட்டி முடியாத நிலையில் துரத்த.. "டேய். நில்லுடா. என்னால ஓட முடியலை" என்றதுதான் ஹைலைட்!

"ஏண்டா துரத்தறா?" என்று கேட்டதும் இவன் சமாளித்தது அதை விடவும் டாப்!

"விளக்குமாத்தைப் போய் காசு கொடுத்து வாங்கினியேன்னு திட்டறா. வீடு முழுக்க தென்னை ஓலை வச்சுண்டு"

பாட்டியின் சிக்கனம் எல்லோருக்கும் தெரியும் என்பதால் சிரிப்புடன் பாதி கூட்டம் கலைந்து விட்டது.

இத்தனைக்கும் பார்வதிக்கு முன்பல் இரண்டும் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.

சிரித்தவாறே சொன்னேன்.

"நல்ல வேளை. பாட்டி உன்னைக் காப்பாத்தினா"

"சந்த்ரிகாகூட இப்பவாவது பேசினியா"

"ம்.. ரெண்டு பொண்ணு. ஜூனியர் சந்த்ரிகா அப்படியே. அவ மாறிட்டா. பழைய சந்த்ரிகா இல்லை" என்றேன்.

"நீயும்தான். நானும்தான். மாறாம யார் இருக்கா? அந்த சமயம் அவ உன் கண்ணுக்கு அழகாத் தெரிஞ்சாள்ன்னா அது காதல் விதி!"

மணி ஏழரை ஆகிவிட்டது. நேரம் போனதே தெரியவில்லை. இனி இரண்டு பஸ் பிடித்து வீடு போக வேண்டும். அதற்கே இரவு ஒன்பதரை மணி ஆகிவிடும்.

"ராஜிகிட்டே சொல்லு. அடுத்த லெட்டர்ல.. அப்படி ஒண்ணு எழுதினா.. அவ பேரையும் எழுதறேன்னு"

"நீ பாம்பேல இருந்தப்ப.. வாரம் ஒரு லெட்டர் போடுவியே.. எல்லாம் பத்திரமா வச்சிருக்கேன். நீ படிச்ச புக்ஸ்.. பார்த்த விஷயம்னு"

"அந்தக் குப்பையை ஏன் சேர்த்து வச்சிருக்கே"

"உன் கையெழுத்து ரொம்ப அழகு. இந்தக் கார்டுல கூட நீட்டா அந்த ஒரு லைன்"

"டேய்.. நமக்கு நாப்பத்தஞ்சு வயசுடா"

"சின்ன வயசுதாண்டா. எழுபது.. எண்பதைக் கம்பேர் பண்ணா.. நம்ம பிஆர்ஜி வயசெல்லாம் பார்த்தா.."

"ஆனா.. அதுவே எனக்கு அதிகம்னு தீர்மானம் பண்ணியாச்சே"

"எங்கே.. உன் மிஸஸைக் காணோம்"

பேச்சை மாற்றினேன்.

"எம் பையன் கூட இங்கே வரவேணாம்னு சொல்லிட்டேன். அப்பான்னா வேற ஞாபகம் வரட்டும். ஹாஸ்பிடல் பெட்ல எலும்புக்கூடு மாதிரி இமேஜ் வர வேணாம்னு"

"ரகு.. பிளீஸ்டா. உனக்கு எதுவும் ஆகாது"

என் குரல் கட்டுப்பாடு மீறி உடைந்தது.

"ஹாஸ்பிடல் விட்டு வெளியே வந்ததும் நல்ல படமா.. பழசு.. சிவாஜி நடிச்சது.. போகணும்டா. ராக்சில.. மாட்னி"

"மாட்னி.. ஈவ்னிங்னு அப்ப சினிமா பைத்தியாமா சுத்தினோம்"

"காலம் ஒரு நாள் மாறும்.. நம் கவலைகள் யாவும் தீரும்"

மெலிதாய் பாட்டு ஹம்மிங்கில்.

"கண்ணதாசனைப் பத்தி மணிக்கணக்காய் பேசுவோமே"

"நம்ம வயசுக்காரங்களுக்கு கண்ணதாசன். இப்ப ராஜிக்கு எனக்கே புரியாத புது சினிமா பாட்டு. அட்சரம் பிசகாம பாடறா கூடவே"

"ராஜியைப் பார்க்கணும் போல இருக்கு" என்றான் கண்களை மூடி.

"சரிடா. நீ கிளம்பு. மணி ஆச்சு"

"நீ தனியா இருக்கியே"

"தனியே வந்து தனியே போகப் போற உயிர்தானே"

மணி எட்டரை. இனிமேல் வாட்ச்மென் வந்துவிடுவார்.

"நாளைக்கு வரியா.. முடிஞ்சா"

அவனைப் பார்க்கவில்லை. என் கண்களின் பொய்யை அவன் படித்து விடக் கூடும்.

"வரேண்டா" என்றேன் பொதுவாய்.

"ஒரே ஒரு நிமிஷம்.. இரேன்"

நின்றேன். அவனைப் பார்த்தேன். கூடாது. என் விரோதிக்கும் இந்த மாதிரி வியாதி வரக் கூடாது.

"போயிட்டு வா"

ராஜி விழித்திருந்தாள். மணி பதினொன்றைத் தொட்டு விட்டது.

"பார்த்தியா. உன் ஃப்ரெண்டை"

"அடுத்த லெட்டர்ல உனக்கும் எழுதுவான்"

"பாவம்தானேப்பா" என்றாள் கரிசனத்துடன்.

என்னை மீறி அழுகை பீறிட்டது. பேசாமல் தலையசைத்தேன்.

"ஸ்வாமிகிட்டே வேண்டிக்கட்டுமா.. அவருக்கு நல்லது பண்ண"

அவனுக்கு நல்லது எது?

மறுநாள் விடியலில் ஃபோன் மணி ஒலித்தது.

ரிசீவரை எடுத்தேன்.

மிஸஸ் ரகுவின் அழுகை கேட்டது.


February 23, 2010

முற்றுப் பெறாமலே ..

என்னிடம் ஒரு ஓவியம்

முற்றுப் பெறாமலேஇருக்கிறது..

ஒரு கவிதையின்

கடைசி வரிகள்

இன்னும் எழுதப்படாமல்..

நிறைவேறாத ஆசைகள் சிலவும் ..

வீட்டின் அண்மையில்

என்னுடன் பழகும்

சில குழந்தைகளும் கூட..

என் ஆயுளை நீட்டிக்க

இவை போதுமென்று

வந்தவன் புன்னைகையுடன்

திரும்பிப் போனான்..

காலிப் பாத்திரமாய்

என் இருப்பு புரியாமல்!

February 20, 2010

ஓவியம்


சாருலதாவிடம் எந்த மாற்றமும் இல்லை. முன்னை விட இன்னமும் வெளுப்பாய் அழகாய்த் தெரிந்தாள்.

ஹாலில் சோபாவில் உட்கார்ந்திருந்தவளை முதலில் 'யாரோ' என்று நினைத்தான்.

'யாருங்க அது' என்றாள் அவனுடன் ஒட்டிக் கொண்டு படியிறங்கிய உமாவும்.

அப்பாவுடன் பேசிக் கொண்டிருந்தவள் திரும்பிப் பார்த்து புன்னகைத்தாள்.

'ஹாய்'

இயல்பான புன்னகை.

அவனுக்குத்தான் வினாடி நேரப் படபடப்பு. சமாளித்துக் கொண்டு சிரித்தான்.

உமாவுக்குப் புரிந்து விட்டது. ஓ.. இவளா.. அந்த நிமிடம் அவள் மனதில் நிறைய கேள்விகள் எழுந்திருக்கும்.

சாருலதாவிடம் சொல்லிக் கொண்டு போவதா, வேண்டாமா என்ற குழப்பமே இல்லை. அவளைப் போலவே தானும் சுதந்திர புருஷன்.

'வா.. உமா' என்றான்.

வெளியே போனதும் உமா விசாரித்தாள்.

'இவதானே உங்க பர்ஸ்ட் வொய்ப்'

தலையசைத்தான்.

உமாவுடன் திருமணம் நிச்சயமான மறுதினமே பர்சனலாய் சந்தித்து பேசி விட்டான்.

'எனக்கு ஏற்கெனவே திருமணமாகி விட்டது. நான் இப்போது விவாகரத்தானவன். வேறு உபத்திரவங்கள் இல்லை. இந்த விவரங்கள் உங்கள் குடும்பத்துக்கு முன்பே தெரியும். இருந்தாலும் நீ நேரடியாய் என்னை எதுவும் கேட்க விரும்பலாம். அதனால்தான் இந்த சந்திப்பு.'

உமா எதுவும் கேட்கவில்லை. அதாவது முதல் திருமணம் பற்றி. நிறைய முன் கூட்டியே தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

இவனுடன் மற்ற செயல்கள் பற்றி கேட்டாள்.

விடை பெறும்போது மட்டும் சாருலதா பற்றி ஒரு கேள்வி.

'அவங்க ஆர்ட்டிஸ்ட்டாமே. பெயிண்டிங்ல ஆர்வம்னு கேள்விப்பட்டேன்'

'ஆமா.. எக்சிபிஷன்லாம் நடத்தியிருக்கா'

'ஓ.. நம்ம வீட்டுல அவங்க வரைஞ்சது ஏதாவது இருக்கா'

யோசித்து தலையாட்டினான் மறுப்பாக.

'ஸெபரேஷன் போது எடுத்துகிட்டு போயிட்டா'

'ஸீ யூ'

தான் நினைத்ததை விட உமா முற்போக்கானவள் என்று புரிந்தது.

இந்தத் திருமணமாவது தான் தேடிய ஆதர்ச வாழ்க்கை தரக் கூடும் என்று எதிர்பார்த்தது அப்போதுதான்.

எட்டு மணிக்கு வீடு திரும்பியபோது சாருலதா இருந்தாள்.

இந்த முறை வேறு வழியில்லை. நின்று ஓரிரு வார்த்தைகளாவது பேசாமல் போனால் பயந்து ஓடுகிறான் என்ற பெயர் வரக் கூடும்.

'எனக்கு ஒன்றும் பாதிப்பு இல்லை' என்கிற தோரணையில் கால் மீது கால் வைத்து நெஞ்சு நிமிர்த்தி அமர்ந்தான்.

உமா சாருலதாவின் அருகிலேயே அமர்ந்து விட்டாள்.

அப்பாவின் முகத்தில் கூட புன்னகை கீற்று. புது மருமகளும், பழைய மருமகளும் நல்ல ஒப்புமை.

'இன்னிக்கு நாங்க வெளியே சாப்பாடு.. வந்து உங்களுக்கு ஏதாவது'என்றாள் உமா லேசாய் திக்கிய குரலில்.

'ஆச்சு' என்றாள் சாரு முறுவலுடன்.

அப்பா பேசினார்.

"நானும் இன்னிக்கு என்னோட விரதத்தை மாத்திகிட்டேன். ரெண்டு ஸ்லைஸ் ப்ரெட்.. சாப்பிட்டேன். அவ டோஸ்ட் பண்ணின்டா"

"ஃப்ரிட்ஜ்ல பால் இருந்துதே"

"ம்.. ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு டம்ளர்.. சூடான பால்"

இது சாருலதா.

ஏதோ வெளியுறவு மந்திரியுடனான பேச்சு வார்த்தை போலத் தடம் பிறழாத வார்த்தைகள்.

"இப்ப எதுவும் எக்சிபிஷன் வைக்கப் போறீங்களா" என்றாள் உமா.

"என்னை நீன்னே கூப்பிடலாம் உமா"

சாரு இன்னமும் மாறவில்லை.

"என்ன கேட்டே.. எக்சிபிஷனா.. ப்ச்.. வைக்கணும். ஆனா.. எனக்கே இன்னும் ஒரு திருப்தி வரலே. என்னோட கலெக் ஷன்ல.."

"இங்கே நீங்க.. ஸ்ஸ்.. நீ வரைஞ்சது ஏதாவது இருக்கும்னு எதிர்பார்த்தேன். எதுவும் இல்ல" என்றாள் உமா.

"அப்பா..ஹால்ல ஒண்ணு இருந்ததே.. அதோ அந்த கார்னர்ல"

சாருலதா 'அப்பா' என்றுதான் முன்பும் அழைப்பாள். பிரிவின்போதும் பிரியாத பந்தம் என்று இருவரும் கை குலுக்கிக் கொண்டார்கள்.

சீண்டியிருந்தான் முன்பே.

'ஆஃப்டர் ஆல்.. நீ என்னோட வாழ வந்தவ. இப்ப அது முறிஞ்சு போச்சு. அது என்ன.. என்னோட அப்பா உனக்கும் அப்பா'

'நல்ல சிநேகிதம் எப்பவும் பட்டுப் போகாது' என்றாள் பளிச்சென்று.

உறவு முறைகளை விட நட்பு போலப் பழகுவதில்தான் ஈடுபாடு. அதில்தான் தனி மனித சுதந்திரமும் இருக்கும். விட்டுக் கொடுத்தலும் இயல்பாய் வரும் என்பாள்.

'என் ரூம்ல இருக்கு இப்ப' என்றார் அப்பா, விட்டுப் போன பேச்சின் தொடர்ச்சியாய்.

'நான் பார்க்கணும்' என்றாள் உமா.

அவளுக்கு 'மாமா' என்றும் வரவில்லை. 'அப்பா' என்றும் கூப்பிட மனசில்லை. மையமாய் பேச்சுகள்.

'லேட்டாயிருச்சே. இங்கேயே தங்கிடலாம்'என்றாள் உமா.

இவனைச் சுத்தமாய் உதாசீனப்படுத்திய சம்பாஷணை. அல்லது இவனால்தான் இயல்பாக ஒட்ட முடியவில்லையா.. மனசுக்குள் நமைச்சல்.

" இல்லை.. போகணும்.ரூம் போட்டிருக்கேன். போயிரலாம். ஆட்டோதான் இருக்கே"

அப்பா குறுக்கிடவில்லை. வற்புறுத்தி இருந்தால் தங்கி விடுவாளோ என்னவோ..

அப்பாவும் அவளும் நன்றாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

'எனக்கு மட்டும் ஏன் சாத்தியமின்றிப் போனது' என்று நினைத்தான்.

உமா அவன் தோளில் தட்டினாள்.

"கொஞ்சம் உள்ளே வாங்க"

சமையலறைக்குள் போனதும் கேட்டாள்.

"ஆமா.. நீங்க ஏன் பிரிஞ்சீங்க"

இதுவரை கேட்டிராத கேள்வி. உமாவை வெறித்தான்.

'இருவரும் மனசொப்பி விவாகரத்து கேட்பதால்' சுலபமாய் எந்த வித நிபந்தனைகளுமின்றிப் பிரிதல்.

"உமா.. இங்கே வாயேன்.."

சுருட்டிய கெட்டியான காகிதம். பட்டு நூல் முடிச்சு.

"ஸ்மால் ப்ரசெண்ட் ஃபார்யூ" என்றாள் சாருலதா.

உமா ஆர்வமாய்ப் பிரித்தாள்.

பார்டர் எதுவுமற்று வரையப்பட்ட படம்.ஒரு பெண்ணின் படம் என்று யூகிக்க முடிந்தது. முகம் ஒழுங்கற்று.. கண்கள், மூக்கு, உதடு எல்லாம் விட்டேத்தியாய்.. ஆனால் படத்தில் பெண்ணின் மார்பகங்கள்மட்டும் துல்லியமாய்.. மிகப் பெரிதாய்.. அவ்வளவுதான். முகமும் மார்பும்தான்.

"புரியலை" என்றாள் உமா உடனே.

"யோசி. புரியும்"

அப்பா எட்டிப் பார்த்து லேசாய் அதிர்ந்த மாதிரித் தெரிந்தது.

"ஏம்மா.. இவ்வளவு கோபமா உனக்குள்" என்றார்.

அவருக்குப் புரிந்து விட்டது போலும்.

சாருலதா 'குட் நைட்' சொல்லி வெளியே போனாள்.

அப்பாவும்.

அவனும் ஓவியத்தை வாங்கிப் பார்த்தான்.

'ஒரு பொண்ணுகிட்ட வேற என்ன எதிர்பார்க்கப் போறேன்'

எப்போதோ சாருலதாவிடம் சொன்ன வாசகம் நினைவில் வந்து பளீரென்று அறைந்தது.


February 17, 2010

மனிதம்


வாசல் கதவு திறக்கும் சப்தம் கேட்டது. சுப்ரமணியாகத்தான் இருக்கும். சொன்ன நேரத்திற்கு வந்து விட்டான்.

'ஞாயிறு காலை பத்து மணிக்கு' என்றால் மிகச் சரியாக ஹால் கடிகாரம் சங்கீதம் எழுப்புகிற நேரத்தில்.

"வாடா.. கன் டைம். நீ வரலேன்னா என்ன செய்யறதுன்னு டென்ஷன்ல இருந்தேன்" என்றேன்.

மிக நிதானமாய் அரசு முறை பயணத்தில் வந்தவன் மாதிரி நடந்து சுற்றுப் பிரதேசங்களைப் பார்வையால் அலசினான்.

"கேசட் கொண்டு வந்தியா"

குரல் என்னையும் மீறி பரபரத்தது.

வீட்டில் என்னையும் இப்போது வந்த சுப்ரமணியையும் தவிர வேறு யாரும் இல்லை. ஊஹூம். இன்னொரு நபரும் இருக்கிறார். வீட்டுக்குள் இல்லை. வெளியில்..

"பிளாஸ்க்குல காப்பியா" என்றான் மேஜை மீதிருந்ததைப் பார்த்து.

"எடுத்துக்கோ. சாப்பாடு ஆச்சா"

காப்பியின் மணம் எனக்கும் வீசியது.

அதே நேரம்..

'ழெங்கா.. ழேய்.. ழெங்கா'

வாசல்புறமிருந்து குரல் கேட்டது.

சுப்ரமணி காபியை மேலே சிந்திக் கொண்டான். வழிந்ததைத் துடைத்துக் கொண்டான்.

"யா.. யாருடா அது"

"ப்ச்..என்னோட தலைவிதி. இன்னைக்கு எல்லாரும் ஜாலியா பங்களூர் மேரேஜுக்குப் போயிருக்க.. நான் மட்டும் ப்ரெட் ஸ்லைஸ்.. ஆப்பிள்னு அனாதையா ஒக்கார்ந்திருக்கேனே"

என் குரலில் வெறுப்பு பூர்ணமாய் வெளிப்பட்டது.

"உன் பிரதர்னு சொல்லுவியே.. அவனா.. ஸாரி. அவரா"

"அவனேதான்"

"அவரை ஏதோ இல்லத்துல விட்டு வச்சிருக்கிறதா"

"எங்கேயும் இருக்காது. ரெண்டே மாசம். ஏக ரகளை பண்ணி திரும்பி வந்துட்டான். கட்டின பணம் பூரா வேஸ்ட். அழைச்சுகிட்டு போங்கன்னு டெலிகிராம் கொடுக்கிற அளவு ரோதனை பண்ணியிருக்கான்."

"பாவம்டா. அவரை நான் பார்த்ததே இல்லை. எங்கே.. நான் உள்ளே வரப்ப கவனிக்கலியே"

சுப்ரமணி எழுந்துவிட்டான்.

"ப்ச்.. ஒக்காருடா. பெரிய விஐபி. நீ அவசியம் பார்க்கணுமா"

"பிளீஸ்ரா"

"ழெங்கா.. ழேய்"

மீண்டும் அந்தக் குரல். தகரத்தைத் தரையில் தேய்த்த மாதிரி கர்ண கடூரமாய் தூக்கிப் போடுகிற அலைவரிசையில் கேட்டது.

"சனியன். பேசாம கிடக்கறதா பாரேன்"

பின்னாலேயே நானும் போனேன்.

வீட்டின் முன்புறம் இடப் பக்க மூலையில் சின்னதாய் ஷெட். ஆஸ்பெஸ்டாஸ் தொங்கிக் கொண்டிருந்தது.

காற்றோட்ட வசதிக்காக சிமிண்ட் ஜன்னல்.

"அங்கேதான் இருக்கான்" என்றேன் வெறுப்புடன் சுட்டிக்காட்டி.

ஒருவித ஆர்வமுடன் சுப்ரமணி ஷெட்டை நெருங்கினான்.

பாதி உடைந்து தொங்கிய கதவு வழியே எட்டிப் பார்த்தான்.

பிரேதக் களை முகத்தில் சொட்ட, செம்பட்டை தலைமுடி தடித்த பிரஷ் போல சிலுப்பி நிற்க, புழுதி படர்ந்த உடம்பும், வெறித்த பார்வையுமாய் அந்த உருவம் கண்ணில் பட்டது.

சுப்ரமணியை வெறித்தது. மெல்ல எழுந்து நின்றது. கை உயர்த்தி கோணலாய் சிரித்தது.

"குட் மார்னிங்"

"கு..குட் மார்னிங்"

"நீ.. நீ.. நாணாதானே"

அருகில் வந்து கை நீட்டித் தொட முயன்றது.

"டேய்.. கையை எடுரா" என்று அருகே போய் இரைந்தேன்.

"ழெங்கா.. தண்ணி வேணும்டா"

"கொண்டு வரேன். போய் உட்காரு"

"ழெங்கா.. பசிக்குதுடா"

"சனியனே.. இப்பதானே தட்டு நிறைய சோத்தைக் கொட்டினேன். பிசாசு மாதிரி திங்கறியே"

சுப்ரமணிக்கு ஏனோ இந்த வகை உரையாடல் பாதித்தது. அடி வயிற்றில் ஏற்பட்ட சுரீர் இன்னமும் அடங்கவில்லை.

இப்படியும் ஒரு பிறப்பா.. கூன், குருடு, செவிடு, பேடு நீங்கிப் பிறத்தலரிது..

கடவுளே என்னைக் காப்பாற்றினாய்.

"பாவம்டா. தாகமா இருக்கும் போலிருக்கு"

"அதெல்லாம் ஒண்ணுமில்லே. என்னை விரட்டணும். வேலை வாங்கணும்"

"இங்கே அசெளகரியமா இருக்குமே. ஹால்ல ஒரு ஓரமா உட்கார வச்சு.."

சுப்ரமணி முடிக்கவில்லை. எனக்கு முகம் கடுத்தது.

"மணி.. உனக்கு இவனைப் பத்தி தெரியாது. ஒரு தடவை எங்க மன்னி ஊர்லேர்ந்து வந்தப்ப இதே மாதிரி.. இவனைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டா. கூட்டிண்டு வந்தா.. தடால்னு மேலே பாஞ்சு.. கையைப் பிடிச்சு.. அசிங்கம் பண்ணிட்டான். பிரிச்சு விடறதுக்குள்ளே வெலவெலத்துப் போயிருச்சு. நீ வா. உள்ளே போலாம்" என்றேன்.

சுப்ரமணி அரை மனதாய்த் திரும்பிய அந்த வினாடியில் அவன் கையைப் பற்றிக் கொண்டது. எச்சில் ஒழுகி மேலே தெறித்தது.

"பைசா.. பைசா.. கொழு"

"ஏய்.. விடுரா"

"இரேன் ரெங்கா.காசுதானே.. நான் தரேன்"

ஒரு ரூபாய் நாணயத்தைத் துழாவி எடுத்துக் கொடுக்கப் போனபோது தட்டிப் பறித்தேன்.

"பேசாம வா. முழுங்கி வச்சு பிராணனை வாங்கும்"

சுப்ரமணிக்கு அதற்கு மேல் சுதந்திரமற்று செய்வது அறியாது என்னைப் பின் தொடர்ந்தான்.

விசிஆரில் கேசட் சொருகி டியூன் செய்ய அலைகள் முடிந்து படம் தெரிந்தது.

"எப்படிரா கிடச்சுது.. புத்தம் புதுப் படம்" என்றேன் விழிகள் விரிய.

"ம்.. ஒரு நண்பன் கடையில் இருந்தது. துபாய் பிரிண்ட்"

சுவாரஸ்யம் என்னை ஆக்ரமிக்க, சுப்ரமணியை மறந்து போனேன்.

சட்டென்று நினைவு வந்து திரும்ப, சுப்ரமணி இல்லை. எங்கே போனான்?டிவியை ஆஃப் செய்து விட்டு வெளியே வந்தேன்.

ஷெட் அருகே தண்ணீர் சொம்புடன் நின்றிருந்தான். நீர் வழிந்த உதட்டுடன் என் அண்ணா.

"சார்.. நீங்க வேலை பார்க்கழீங்களா"

"ஆமா. பெரிய ஆபீஸ். நெறைய பேர் இருக்கோம். ரூம்ல ஏஸி பண்ணியிருக்கும். மழை பேஞ்சா ஜில்லுன்னு இருக்குமே. அது மாதிரி ஜில்லுன்னு"

சராசரி மனிதனிடம் பேசுவது போல பேசிக் கொண்டிருந்தான்.

"காழ்.. இருக்கா"
"காழா"

"அதான்.. டுர்ர்.. காழ்"

"ஓ. காரா.. இருக்கே. பெரிய கார். ஸ்பீடாய் போகும்"

முட்டாள்.

ஒரு ஞாயிறு பற்றி பேசி நிர்ணயித்த அட்டவணைகளை உதாசீனப்படுத்தி இங்கே வந்து நிற்கிறான்.

என்னுள் கண்மூடித்தனமாய் கோபம் கிளர்ந்தது.

என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்?

"வாடா. ஹி ஈஸ் இண்ட்ரஸ்டிங்.. ரொம்ப ஆசையாப் பேசறார். நான் சொன்னா நல்லா புரிஞ்சுக்கிறார்"

சுப்ரமணியின் கையை அவன் வருடிக் கொண்டிருந்த வினோதம் என் பார்வையில் பட்டது.

"ஏண்டா.. ஒனக்கென்ன பைத்தியமா.. இவன் கூட வந்து வேலை மெனக்கெட்டு நிக்கறியே"

என்னையும் மீறி வார்த்தைகள் தடித்தன.

என் இரைச்சல் அண்ணனைப் பாதித்து, பற்றியிருந்த கையை உதறி ஷெட்டின் பிறிதொரு மூலையில் ஒடுங்கிக் கொண்டான்.

சுப்ரமணி நிதானமாய் என்னைப் பார்த்தான்.

"எனக்கு.. பை காட்ஸ் கிரேஸ்.. பைத்தியம் இல்லைடா. அதனாலேதான் அவரோட பேசிகிட்டிருக்கேன்"


February 15, 2010

புஜ்ஜி

ஒரு கதகதப்பான காற்று தழுவிக் கொண்டு போன பிரமை. பனி இறங்கிக் கொண்டிருந்தது.

பைக் ஓட்டுவதில் சிரமம் தெரிந்தது. ஆனாலும் போக வேண்டும்.

நால்வழிப் பாதை வேலைகள் மும்முரமாய் நடந்து கொண்டிருந்தன. மேம்பாலத்திற்காக உயர்த்திய மண் மேட்டில் தான் இப்போது இரு புற வாகனங்களும் போய்க் கொண்டிருந்தன. கீழ்ப் பகுதியில் போக்குவரத்து இல்லை. பழைய சாலையை பெயர்த்து போட்டிருந்தார்கள்.

சட்டென்று வண்டிகள் நின்று விட்டன. ஹாரன்கள் அலறி அதுவும் ஓய்ந்து விட்டன. போகவும் இல்லை.. வரவும் இல்லை.

எஞ்சினை அணைத்துவிட்டு ஹெல்மெட்டைக் கழற்றி முன்னால் வைத்தான். கைபேசி சிணுங்கியது. குறுஞ்செய்தி வந்திருக்கும் அடையாளம்.

'ஹாய்.. புஜ்ஜி.. கவித நல்லா இருக்குபா'

தமிங்கிலத்தில் செய்தி. என்ன கவிதை அனுப்பினேன்.. யோசித்தான். ஓ..

பெயரியல் நிபுணர்

பெயர் மாற்றச் சொன்னார்..

மறுத்தேன்..

'புஜ்ஜி' என்றாய்.

மகிழ்கிறேன்!

'வழியில மாட்டிகிட்டேன் டா.. டிராபிக் ஜாம்'

'ப்ரெட் இல்லியா'

'கடிக்காதடா செல்லம்.. பசி கொல்லுது..'

'பக்கத்துல டீக்கடை இல்லியா'

'இந்த பக்கம் மண் மேடு.. அந்த பக்கம் பொக்லைன்.. எதைத் திங்கட்டும்'

'கோவமா பா'

'ஊஹூம்.. சந்தோசம்'

'நான் இப்ப பண்ணட்டும்.. டிபன் எடுத்துகிட்டு வரவா'

'நடக்கிறத பேசுடா'

'கால் பண்ணவா..'

'ம்ம்.. சுத்தி ஒரே சத்தம்.. அவனவன் பொறுமை போய் ஹார்ன் அடிச்சே கொல்றான்'

'ரொம்ப பசிக்குதா பா'

'சட்டையை திங்கலாமான்னு யோசிக்கறேன்..'

'ப்ளூல செக் வச்ச ஷர்ட் தானே'

'ம்'

'அது எனக்கு பிடிச்ச ஷர்ட் பா'

'ம்'

'நீ ம் கொட்டறது நல்லா இருக்கு பா'

'அடிப்பாவி.. ரசனையா'

'நிஜமாவே.. காதுக்குள்ள ம் சொல்ற பீலிங்'

'ம்'

'வேணாம் பா.. அப்புறம் வண்டி புடிச்சு வந்திருவேன்'

'நீ ம் சொல்லு'

'எதுக்கு'

'உன்னோட ம் புடிச்சு போயித்தானே உன்னை லவ் பண்ணேன்'

'பொய்யி'

'போடி.. பிகு பண்ணாத..'

"கோவமா பா''...

''என்ன பண்றே.. டிராபிக் கிளியர் ஆயிருச்சா'

'இன்னும் ரெண்டு நாள் ஆவும்.. கிளியர் ஆக'

'ம்'

'பிளீஸ் டா.. ஒன்ஸ் அகைய்ன்'

'ம்'

'கொல்றடி.. அய்யோ.. கடவுளே.. என் வண்டிய மட்டும் அப்படியே தூக்கி வெளியே விட்டுரேன்'

'ம் சொன்னா என்ன பண்ணுது உனக்கு'

'புரியாத மாதிரி கேட்காத..'

'உன்னைப் பார்த்தா இன்னும் வளரவே இல்லாத சின்னப் புள்ளை மாதிரியே இருக்க'

'என்ன பண்ற.."

'சின்ன புள்ள'

'ஓ.. டைப் பண்ண லேட்டா.. கதை மாதிரி பெருசா அடிக்காத.. சின்ன சின்னதா அனுப்பு'

'நீயும் தான் கதை அடிக்கறே'

'இல்லடா.. நிஜமாவே.. ஐ லவ் யூ'

'பொய்யி'

'நம்பாட்டி போ'

'ம்'

'மறுபடியுமா.. என்னால முடியலடா'

'இப்ப எப்படி இருக்கு..'

'ஜிவ்வுனு இருக்கு'

'ச்சீ.. டிராபிக் ஜாம்'

'ம்ஹூம்'

'பசிக்குதா'

'ம்'

'ஒண்ணு தரட்டுமா'

'கொண்டா..'

'கன்னத்தைக் காட்டு'

'சூப்பர்.. இந்த கன்னம்'

'பசி போச்சா'

'அதிகமாயிருச்சு'

'சீக்கிரம் வாப்பா'

'நானா பிடிவாதம் பிடிக்கறேன்'

'ஹார்ன் சத்தம் கேட்குது'

'ஆங்.. கொஞ்சம் நவுருது'

'வந்துரு..வந்துரு..'

'கிளியர் ஆயிரும் போல.. அப்புறம் மெசேஜ் பண்றேன் டா'

சர சரவென வழி கிடைத்த ஜோரில் வாகனங்கள் விரைந்தன. அவனது பைக்கும்..

அரைமணியில் வீட்டுக்கு வந்து விட்டான். அழைப்பு மணி அடிப்பதற்குள் அவளே கதவைத் திறந்து விட்டாள்.

டைனிங் டேபிள் மீது சுடச் சுட காபி.

'புஜ்ஜி..'

அவள் கையில் கைபேசி. ஏதோ மெசேஜ் அடித்தாள்.

'நல்லா பேசிகிட்டு இருந்தோம்ல..'

அருகில் இழுத்து அவள் கண்களைப் பார்த்தபோது சற்றே கலங்கிய விழிகள். உதடால் கண்களை ஒற்றினான்.

உள்ளிருந்து அம்மா வந்தாள்.

'தவிச்சுப் போயிட்டாடா.. அவ கவலையை என்கிட்ட சொல்லவும் முடியல.. செல்லை வச்சு பைத்தியம் மாதிரி மெசெஜ் அடிச்சுகிட்டே இருந்தா.. அவளுக்கு பேச வரலைங்கிற குறை இன்னிக்குதான் எனக்கே கஷ்டமா இருந்ததுடா'

இங்கிதம் புரிந்தவளாய் அம்மா நகர்ந்து போக.. உதட்டசைவில் 'புஜ்ஜி' என்று புரிந்து கொண்டு..

ஒரு கதகதப்பான காற்று தழுவிக் கொண்டு போன பிரமை அவனுக்கு..February 13, 2010

கொஞ்சம் பின்னோக்கி பயணித்து..


நண்பர் மாதவராஜ் சொன்னது போல சில விஷயங்கள் மனசோடுதான். பகிர்தலற்ற அந்தரங்கம். நானே எடுத்துப் புரட்டிப் பார்க்கக் கூட தயக்கம். அதன் ஒரிஜினல் செளந்தர்யம் வாடிப் போய் விடும்.. என்கிற பயம்.

அப்பா போஸ்ட்மாஸ்டராய் வருடத்திற்கு ஒரு முறை கிரகங்களைப் போல இடப் பெயர்ச்சி ஆவார். அதனால் என் பள்ளி நாட்கள் ஒவ்வொரு வகுப்பும் ஒவ்வொரு ஊரில் என்று ஆனது.

முதல் 5 வகுப்புகளை 6 பள்ளிகளில் படித்த பெருமை எனக்குண்டு. பிறகுதான் எங்களை ஸ்ரீரங்கத்தில் விட்டு அவர் மட்டும் அவதிப்பட்டார்.

முதல் வகுப்பு அரியலூர் அருகே விக்கிரமங்கலத்தில். பத்தடி வைத்தால், அந்த ஊர் அம்பாப்பூர். இந்த பகுதி விக்கிரமங்கலம்! போஸ்டல் விலாசம் அம்பாப்பூர். அப்பா இதனால் இன்றுவரை 'அம்பாப்பூர்' என்றே அழைக்கப்படுகிறார், ஓய்வு பெற்ற பிறகும். ஒரே பெயரில் 4 பேர் தபால் துறையில் பணியாற்றிய நேரம் அது.

ஞாபகங்களை பின்னோக்கி தள்ளினால்.. முதல் நினைவே நான் வாங்கிய அடிகள்தான்.
தங்கையை கீழே போட்டதால் அவள் அழுது ஒரு குட்டு.
பள்ளி விட்டு வரும் போது கீழே கிடந்த சிகரெட் (அ) சுருட்டு எதையோ எடுத்துப் பார்க்க நண்பன் தூண்ட, ஆர்வக் கோளாறு. எடுத்த மறு நிமிடம் தூக்கிப் போட்டு விட்டாலும் வத்தி வைக்கப்பட்டு, அடுத்த குட்டு.

பக்கத்து வீட்டில் திராட்சைக் கொடி பயிரிட்டு இருந்தார்கள். அதனூடே போய் வந்த பிரமிப்பு இப்போதும்.

கோடை விடுமுறையில் தாத்தா வீடு. கோவில் வாசலில் குளம். இந்தக் கரையில் குதித்து நீருக்குள் நீச்சலடித்து அடுத்த கரை தொட்டு திரும்பிய சாகசங்கள். தாத்தாவிற்குத் தெரியாமல்.

'ஏண்டா ஊமைச்சாமு.. ஒங்கப்பனுக்கு எவன் பதில் சொல்றது' என்று குட்டு வெளிப்பட்ட போது திட்டினார். டிராயர் நனையாமல் கழற்றி வைத்து கோவணம் கட்டி கூத்தடித்த குளம். கரையிலேயே ஒரு மரத்தில் கட்டி காயப் போட்டு வைத்திருப்போம்.

தாத்தாவின் பீரோ பல ரகசியங்களுக்கும் அதன் பிரத்தியேக வாசனைக்கும் சொந்தமானது. அந்நாள் கோகுல் சாண்டல் பவுடர் டப்பா தாத்தாவின் பேவரைட். அவசரமாய்த் திறந்து முகத்தில் பூசிக் கொண்ட அதே நிமிடம் வெளியே போயிருந்த தாத்தா வந்து விட்டார். நிச்சயம் வாசனை காட்டிக் கொடுத்திருக்கும். ஆனால் எதுவுமே கேட்கவில்லை.

என் இலக்கிய வீதிக்கு அடையாளம் காட்டியது அவர் பீரோதான்!

கல்கி, கலைமகள் என்று அவர் சேகரித்த புத்தகங்கள்.. அழகாய் அவர் பெயர் எழுதி வைத்திருந்த தொகுப்புகள்.. வி.ஸ.காண்டேகர்.. தி.சா.ராஜு, தி.ஜா., லா.ச.ரா.. என்னைப் புரட்டிப் போட்ட காலம் அது.

வெறியாய் படித்தேன். பின்னாளில் நான் எழுத வருவேன் என்று அறியாத பருவம். விதம் விதமாய் வார்த்தைகள் எனக்குள் இறங்கி என்னை மூழ்கடித்துக் கொண்டிருந்தன.

அம்பாப்பூர் பள்ளி சினேகிதியைப் பல வருடம் கழித்து ஒரு திருமணத்தில் பார்த்தபோது அவள்தான் என்னை நினைவு வைத்திருந்தாள்.

தாத்தா ஊரிலும் ஒரு வருடப் படிப்பு. அம்மை ஊசி போட வந்த அலுவலர்களிடம் தப்பித்து சுவர் ஏறிக் குதித்து ஓடி வந்த போதே எனக்குப் புரிந்து விட்டது. நான் சமர்த்துப் பிள்ளை லிஸ்ட்டில் இல்லை என்று.

மீன்சுருட்டி என்கிற ஊரில் பள்ளி சிநேகிதி பக்கத்து வீட்டு பெண்ணே. வகுப்பில் அமைதியை நிலைநாட்ட என்னை நியமித்துப் போன ஆசிரியரிடம் பேசிக் கொண்டிருந்த அவளைக் காட்டிக் கொடுத்து அடி வாங்க வைத்தேன். வீட்டின் பின்புறம் இரு வீட்டாரும் பேசிக் கொள்ளும் வகையில் சுவரற்ற திறந்த வெளி. அவள் அம்மாவிடம் அழுது என்மீது புகார் வாசிக்கப் பட்டு என் அம்மா சமாளிக்க வேண்டியதாகி விட்டது.

சமயபுரம் அருகில் புரத்தாக்குடியில் ஒரு வருடப் படிப்பு. முதல் மாணவனாய் மதிப்பெண் பெற்றதால் பள்ளி இறுதி வகுப்பு வரை லீடர் பதவி.என் கையில் ஒப்புவித்த பிரம்பைத் தொலைத்ததால் (முதல் நாள் அடி வாங்கிய மாணவனின் விஷமம்) மூங்கில் காட்டுக்கு விரட்டப் பட்டேன். புதுப் பிரம்புடன் திரும்பி வந்ததும் முதல் அடி எனக்கு! 'இனிமேல் ஜாக்கிரதையா இரு'

ஏழாம் வகுப்பு முதல் ஸ்ரீரங்கம். ஸ்டோர் என்று சொல்வோம். ஒண்டு குடித்தனம். அதாவது ஒரே வீட்டில் பல குடித்தனக்காரர்கள்.

எதிர் போர்ஷன் மாமி மட்டும் வருடா வருடம் வாசல் பக்க அறைக்குப் போய் திரும்பும் போது கையில் எப்படி குழந்தை வருகிறது என்கிற திகைப்பு. பிரசவ நேரங்களுக்காக ஒதுக்கப் பட்ட அறை அது.

கணவர் தன் முயற்சியில் சற்றும் தளராமல் ஆறு பெண் மகவுகளுக்குப் பிறகு இரண்டு மகன்களையும் உருவாக்கிக் கொடுத்தார்.

மூத்த பெண்ணும் நானும் ஒரே வகுப்பு.

பெண்கள் பள்ளி தனியே இருந்தது. இரண்டு பள்ளிகளுக்கும் இடையே ஒரு காம்பவுண்ட் சுவர் சற்றே பலவீனமாய். மைக்கில் அந்த ஹெச். எம். மாணவிகளைத் திட்டி அலறுவது எங்களுக்குக் கேட்கும். கல்யாணம் செய்து கொள்ளாமல் கல்விப் பணி.

பிரேயர் நேரத்தில் ஸ்ரீரங்கமே அதிரும் அளவு இரைச்சல். இரு பள்ளிக்கும் பொதுவாய் ஒரு பியூன். பெயர் பாவாடை. 'நீராரும் கடலுடுத்திக்' கொண்டிருந்தபோது பியூன் குறுக்கே போய் தடுக்கி விழ.. மைக்கில் ஹெச்.எம். 'பாவாடையைத் தூக்கு' என்று அலற.. தப்பாய் புரிந்து.. ஒரு அற்ப ஜோக் எங்கள் மத்தியில் அப்போது பிரபலம்.

இந்த நாட்களில்தான் கையெழுத்துப் பிரதி அறிமுகம். கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி சர்குலேஷன் விட்டோம்.

குமுதம், கல்கண்டு படிக்க ஆரம்பித்தேன். ரா.கி.ரங்கராஜன், பாக்கியம் ராமசாமி, புனிதன், எஸ்.ஏ.பி., தமிழ்வாணன் என்று என்னை ஆக்கிரமித்த எழுத்துக்கள். அப்புசாமிக்கு நான் சிரித்தது போல அதன்பின் அவ்வளவு மனம் விட்டு சிரிக்கவில்லை.

கல்லூரி நாட்களில் திருச்சிக்கு ரெயில் பயணம். ஆபீஸ் வண்டி என்று அதற்குப் பெயர். அந்த நேரம் பெரும்பாலும் பணி புரிபவர்கள்தான் போவார்கள். சீட்டுக் கச்சேரி அப்படித்தான் அப்போது அறிமுகம். பிறகு ஒரு நாள் ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பார்மில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பெரியவர் பார்த்து வருத்தப்பட்டார். திட்டக் கூட இல்லை. எங்களுக்குள் ஒரு சுருக்! தண்டவாளத்தில் வீசி எரிந்து உதறினோம் அந்த ஆசையை.

நாங்கள் ஜங்ஷன் போக.. அதற்கு முன் டவுன் ஸ்டாப்பில் பெண்கள் இறங்கி விடுவார்கள். ஸ்டேஷனில் அவர்கள் பார்க்கிறார்களா என்று நாங்கள் தவிக்க ஆரம்பித்த காலம்!

மிகப் பெரிய ஓப்பன் வைத்த ஜாக்கெட்டில் சற்றே வளர்த்தியான பெண் முதுகில் சிறுகல் எறிந்து ஒருவன் வீர சாகசம் நிகழ்த்தினான். அவள் தன் அண்ணனிடம் அப்போதே முறையிட, 'நீ ஒழுங்கா டிரெஸ் பண்ணிக்கோ' என்று நிராகரிக்கப்பட்டாள்.

எனக்குப் பிடித்த மாதிரி இருந்த ஒரு பெண் பற்றி தகவல் அறிய தவித்தது இப்போதும் வெட்கம் தருகிறது. கடைசி வரை அவளிடம் பேசவே இல்லை.

எங்களுடன் ஒரு நண்பன் வருவான். சீனியர். இரு குரலிலும் பாடுவான் . வசந்த கால நதிகளிலே பாடலை அவனை பாட சொல்லி கேட்பது எங்கள் பொழுது போக்கு.

அடுத்த தெருவில் இன்னொரு பெண் கவர்ந்தாள். அவள் கையில் கணையாழி மேகசின் பார்த்து அன்றே ஒரு கவிதை எழுதி போஸ்ட் செய்தேன்.

சிகரத்தின் உச்சி
தொலைவானால் என்ன..
முதலடி பெயர்க்காதவரை
இடைவெளி குறையாது..
கால்களைச் சுற்றி சிலந்தி
கூடு கட்டும் வரை
யோசித்தது போதும்..
இது செயல்படும் காலம்.

என்னவோ கவிதை பார்த்து உடுத்திய துணியுடன் அவள் வரப் போகிற மாதிரி ஒரு பிரமை. கவிதை கணையாழியில் பிரசுரமானது மறு மாதமே. என் உறவினரிடம் சொல்ல, அவர் பெண் கேட்டு போனார். அடுத்த வருடம் அவளுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது, வேறு ஒருவருடன்!

என் சிநேகிதிகள் எல்லோருமே என்னை விட மேம்பட்டவர்கள். என் மீதான அவர்களின் புரிதல், கரிசனம், காதல் சொல்லில் அடங்காதது.. இப்போதும் என் பார்வையின் நிச்சலனம் அவர்கள் எனக்கு சொல்லாமல் சொல்லித் தந்தது.. என்னைக் கோட்டுக்குள் வெகு இயல்பாய் நிறுத்தி குற்ற உணர்வே வராமல் பார்த்துக் கொண்ட அவர்களின் திறமையால் இன்னமும் இழந்து விடாத நல்ல நட்பின் பிடியில் என்னால் அழகாய் ஜீவிக்க முடிகிறது.

ஆண்.. பெண் என்கிற பேதமற்று 'நண்பர்கள்' என்கிற ஒரே அடையாளம் மட்டுமே இத்தனை வருடங்களில் நான் சேகரித்து வைத்திருக்கும் புத்தி கொள்முதல். உள்ளிருக்கும் சுடர் இப்போதும் ஆடாமல் ஒளிர்வதும் அந்த பாக்கியத்தால்தான்.

நிறைய சொல்வதற்கு இருக்கிறது.. சுய வரலாறுக்கு இன்னும் காலம் இருக்கிறது.. அதற்கு முன்பாக ஆகச் சிறந்த படைப்பு ஒன்றினை இனங்கண்டு பிடித்து பதிந்து விட்டு வரலாம் என்றே ஒத்திவைப்பு!

நண்பர்கள் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி, கே.பி.ஜனா, ரேகா ராகவன் பிடித்தால் தொடரலாமே.. இளமைக் கோலங்களை !


February 12, 2010

இதுதான் காதல் என்பதா


வானவில் தோன்றும் இரவு.

காகிதப்பூக்களில் கூட நறுமணம்.

விழிகளில் வழியும் நிலவு.

கால்களின் அடியில் பூகம்பம்.

விழித்திருந்து கனவு.

ஆளரவமற்ற சாலையில் அழைப்புக் குரல்.

ஸ்விட்ச் ஆஃப் ஆன அலைபேசியில் ரிங்டோன்.

கை நழுவிப் போகும் பொழுது.

எதையும் நினைக்காமலேகனக்கும் மனசு.

ஜாடையில் தெரிந்தாலேஅதிரும் இதயம்.

உதடுகள் முழுக்க இனிய பொய்கள்.

கலவர பூமியில் தென்றல்.

முழங்காலுக்கு அடியில் பஞ்சுப் பொதி.

இமைகளின் வேலை நிறுத்தம்.

பிடித்தது கூடப் பிடிக்காமல்..

பிடிக்காதது எல்லாம் பிடித்து..

தன்னைத் தொலைத்துதன்னில் தொலைந்து..

'தான்' 'தனது' எல்லாம் மறந்து..

எந்த அரசியலாலும் சாதிக்க முடியாதசமத்துவம்!


February 11, 2010

பூஞ்சிறகு


திரையரங்கின் சுவர் ஒட்டிய கடைசி இருக்கையில் நான்.

பக்கத்தில் புஷ்பா. வரிசையாய் இரு தம்பிகள். மணமான அவள் அக்கா, அவள் கணவன்.

"பாபு.. நீயும் வா"

அழைப்பை ஏற்று உடன் வந்தவனுக்கு புஷ்பா பக்கத்தில் அமர்வாள் என்ற எதிர்பார்ப்பு இல்லை.

எல்லோரும் திரையில் பிம்பங்களின் பொய் சோகத்தில் ஆந்திருந்தபோது என் மீது மெத்தென்ற விரல்கள் படிந்தன.

திடுக்கிட்டு திரும்பினேன்.

புஷ்பாவின் கவனமும் திரையில்தான். விரல்கள் மட்டும் சுதந்திரம் பெற்று என் கை விரல்களுடன் கூட்டணி தேடின.

ஜுரம் வந்தபோது கூட இத்தனை நடுக்கம் வந்ததில்லை.

தயக்கம், பயம், ஆசை என்று உணர்ச்சிக் கலவையின் மத்தியில் சுத்தமாய் படம் என்ன என்பதே புரிபடாமல் போனது.

இடைவேளை வெளிச்சத்தில் என்னைப் பார்த்துச் சிரித்தாள்.

இது முதல் பூஞ்சிறகு !

கைவிரல்களை மெல்ல நிதானித்துப் பிரித்து காற்றில் பறக்காமல் நோட்டமிடும் சிறுவனாய் நினைவுகளைப் பிரிக்கும் நான்.

ரயிலின் தடக்..தடக்கில் கூடவே மனசும்.

ஆறு வருட இடைவெளிக்குப்பின் இதோ புஷ்பாவைத் தேடிப் போகிறேன்.

இன்னொரு பூஞ்சிறகு !

"டிபன் சாப்பிடறியா..பாபு"

"எதுக்கு.. வேணாம்"

"சும்மா பிகு பண்ணாதே"

தட்டில் கேசரி,பஜ்ஜி. நெய் விரல்களில் ஈஷிக் கொள்கிறது.

"இந்தா சீயக்காய். தேய்ச்சுக் கழுவு"

கைநீட்டி வாங்க முயன்றவனை விரல் பற்றி தேய்த்துக் கழுவி.. பளிச்சென்ற முத்தம் உள்ளங்கையில்.

"எ..ன்ன"

"புஷ்பா.."

குரல் கேட்டுத் திரும்பிப் போகிறாள். போகுமுன் என்னிடம் கள்ளச் சிரிப்பு வீசி.

ரயில் நின்று சிக்னலுக்காகக் கூவுகிறது.

'ழே..'

மனசும்.. 'புஷ்பா..'

அடுத்த பூஞ்சிறகின் ஸ்பரிசம் !

புதுப் புடவை. முகத்தில் பளிச். இன்று என்ன விசேஷம்? சாக்லேட் எதற்கு?

"பிரிச்சு வாயிலதான் போடேன்"

'ஆ' காட்டினாள்.பின்பக்க வராண்டாவின் தனிமையா.. அது தந்த துணிச்சலா.. போட்டதைப் பாதி கடித்துத் திருப்பித் தந்தவளை ஆச்சர்யமாய் பார்க்க.. சாக்லேட் இத்தனை தித்திக்குமா!

"சொல்லு. மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ்"

ஓ. பிறந்த நாளா. விறுவிறுவென்று பேப்பர் எடுத்து எழுதினேன்.

சூரியக் கதிர்களில்ஏன் இத்தனை மென்மை?

மரங்களில் ஏன் இன்றுமலர்க்கூட்டம்?

வண்ணத்துப்பூச்சிகள்கூடபுத்தம்புது நிறங்களில்!

வானவில்லும் தரையிலா?

இன்று புஷ்பித்தது யார்,நீயா..

இல்லை..என் மனசா?!

எழுதிய கையைப் பற்றி இன்னொரு முறை உதடுகளின் ஒற்றல். நழுவி விடப் போகிறது என்று இன்னும் இறுக்கமாய் விரல்களை மூடிக் கொண்டு நான்.

தடக்.. தடக்.ஆறு வருஷம். அலைச்சல். கால்கள் தரையில் பதிய எனக்கொரு அடையாளம், அங்கீகாரம் கிடைக்க. இன்று தலை நிமிர்ந்து பதில் சொல்ல முடிகிறது. புஷ்பாவைப் பெண் கேட்க இயலும். எதிராளியை பணத்தால் புரட்டிப் போட முடியும்.

பூஞ்சிறகுகளின் பலத்தில் நான்..

படியேறும் போது முரளி எதிரில் வருகிறான். அவள் தம்பி.

"வா. ரொம்ப நாளாச்சு பார்த்து"

புஷ்பாவின் அம்மா முகம் சுளித்து.. இனம் புரிந்து லேசாய் புன்னகையின் தீற்றல்.

அவள் எங்கே.. பார்வை துழாவிக் கொண்டே இருக்கிறது.

"லெட்டரே போடலை. எங்கே இருக்கேன்னே தெரியலே. அப்படி என்ன அழுத்தம்? உங்கம்மா தினம் அழுகைதான்"

மழுப்பலாய் சிரித்தேன்.

"நீ வரப் போறேன்னு லெட்டர் வந்த பிறகுதான் அவ கண்ணுல உயிர் வந்தது"

"சாதிச்சுட்டானே.. அதைச் சொல்லு"

முரளியின் கைக்குள் என் கை சிறைப்பட்டு மீண்டது.

"வா. உட்கார். ஏன் நின்னுண்டே இருக்கே. காப்பி கொண்டு வரேன்"

சோபாவில் சாய்ந்து உள்ளுக்குள் தவித்தேன். கேட்டு விடலாமா? புஷ்பா எங்கே?பார்வை அலைபாய்ந்தது.

எதிர்ச்சுவரில்.. என்ன.. யாரது..

விலகிய பார்வை மீண்டும் புகைப்படத்தில் பதிய.. உறைந்த புன்னகையுடன் புஷ்பா.

கைக்குள் பூஞ்சிறகுகள் அதிர்ந்தன.

"என்னமோ ஜுரம். பத்து நாள் போராடி.. ஆச்சு. ஒரு வருஷம். தேத்திக்கவே முடியலே. உனக்குத் தகவல் கூட சொல்ல முடியலே"

புஷ்பாவின் அம்மா புத்தம் புதிதாய் அழுதாள். படத்தில் அசைவில்லை. இழப்பு நிஜம்தான்.விஷயம் பாதித்த திகைப்பில் வெறித்தேன்.

யாரோ வலுக்கட்டாயமாய் என் விரல்களைப் பிரித்து.. ஒவ்வொன்றாய்.. பூஞ்சிறகுகள்.. காற்றில் பறக்க ஆரம்பித்ததை என்னால் தடுக்க முடியவே இல்லை அந்த நிமிஷம்.


February 09, 2010

மழை பெய்து ஓய்ந்த நிமிடம்


மழை பெய்து ஓய்ந்த நிமிடம்..
அலுவலக ஜன்னல்
எட்டிப் பார்த்தேன்.
எதிர் மாடியில்
சுவற்றின் விளிம்பில்
அணில் ஓடியது.
செடிகளின் இடையே
குருவிகள் பறந்தன,
தரைக்கும் உயரத்திற்குமாய்.
பறவைகளுக்கு யாரும்
குடை பிடிப்பதில்லை!
அணில்களுக்கும் தான்..
ஈரம் படிந்த தரையைத் தொட
விரல்களால் முடியவில்லை..
இருந்தது மூன்றாவது மாடியில்.
மாலையில் அலுவலகம் முடிந்து
வீடு திரும்பும்போது
நினைவிலிருக்குமா?
ஈரத்தரையும்..
ஓடிய அணிலும்..
குருவிகளூம்..
இன்னொருவர் நுழைய முடியாத
மனிதக் குடைகள் மட்டுமே
அப்போது
என்னைச் சுற்றிநிற்கும்!

February 08, 2010

காயங்கள்


காயங்கள் எவரிடம்தான்இல்லை..
அவை உள் காயமா..
வெளிக் காயமா..
ரணமாகிப் போனதா..
வறண்டதா..
தழும்பா..
மறைப்பில் உள்ளதா..
காயமற்ற மனிதர்உலகில் இல்லை..
வலி உணராத மனிதர்
வாழத் தெரியாதவர் ..
வார்த்தைகளினாலா..
ஆயுதங்களாலா..
விபத்தா..
நேரிட்டதா..
'இந்தக் காயம் சொல்லால் இல்லை' என்ற
நிம்மதிப் பெருமூச்சு மட்டுமே
வாழ்வின் அடையாளம்..
வாழ்ந்ததின் அடையாளம்!


February 07, 2010

ஒவ்வொரு வியாழனும் உன் நினைப்பாகவே

தட்சிணாமூர்த்தியை

ஒவ்வொரு வியாழக் கிழமைகளில்பார்க்கும்போது

'உங்க ஆளு' என்று

வம்பிழுத்த நாட்கள்

வந்து போகும் நினைவில்.

'அதென்ன சாமியை உங்காளுன்னுகிட்டு'

'பின்னே எனக்கா

முல்லைப் பூ,

கொத்துக்கடலை மாலை..

சூடம்.. விளக்கு..

என்னைப் பார்த்த நேரத்தை விட

அவரைப் பார்த்த நிமிஷம்தான் அதிகம்.

'சீண்டும் வார்த்தைகளில் உள்ளூர

இழையோடும் தவிப்பு.

சாமிகூட நம்ம குறுக்கேவரக் கூடாதுன்னு

சொல்லும் மனசு!

அதான் உன் கல்யாணப் பேச்சப்ப..

கண்டுக்காம நின்னுச்சோ சாமி?

இப்பவும் ஏதோ ஒரு ஊர்ல

ஒரு தட்சிணாமூர்த்தி உங்கையால

மாலை வாங்கிப் போட்டுக்குது தவறாம(ல்).

அது எங் கழுத்து தவற விட்ட மாலைன்னு

யார் போய்ச் சொல்றது

ஜோடி பிரிச்சு விட்ட

தட்சிணாமூர்த்திகிட்ட..!February 04, 2010

காற்று


எல்லா யுகங்களிலும்இருந்திருக்கிறது.

கடவுள்களை (நிஜமோ.. பொய்யோ)

தரிசித்திருக்கிறது.

வன்முறை, மென்முறைதெரியும்.

யுத்தம், சமாதானம்

இவற்றின் சாட்சியாய்நின்றிருக்கிறது.

பிரளயங்களையும் அது அறியும்.

எப்போதும் எல்லோரையும்

தொட்டுச் செல்லும் காற்று

ஏன் சொல்வதில்லை...

சாஸ்வதம் எனும் நினைப்பில்

சண்டையிட்டுக் கொள்ளும்நம்மிடம்...

நம் முன்னோரின்மூச்சுக் காற்றும்

தன்னிடம் இருப்பதை.


February 02, 2010

எட்டுத்திக்கும்அவர் முகத்தைப் பார்க்கவே எனக்குக் கூச்சமாய் இருந்தது.


மனிதர் இத்தோடு நாலாவது தடவையாக வருகிறார் கொஞ்சங்கூட அலுப்பில்லாமல்.


"ஒங்க போன் நெம்பர் கொடுத்துட்டு போங்க ஸார்.. நான் தகவல் சொல்றேன்.. பாவம்.. எத்தனை தடவை வருவீங்க"


துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டார்.


"பரவாயில்லை.."


சற்று தயங்கி விட்டு குடிக்க தண்ணீர் கேட்டார். என் இரண்டாவது பெண்ணிடம் ஜாடை காட்டினேன். உள்ளே போய் சொம்பில் நீருடன் வந்தாள்.


"என்னம்மா இது.. டம்ளர் இல்லாம எப்படி குடிப்பாரு"


"பரவாயில்ல.. எனக்கு அவ்வளவு தண்ணியும் வேணும்"


மடமடவென்று குடித்து விட்டு கீழே வைத்தார். சட்டைப் பையிலிருந்து ஒரு சாக்லேட்டை எடுத்து என் பெண்ணிடம் நீட்டினார்.


"லோ ஷுகர்.. எப்பவும் கையில வச்சிருப்பேன்"


கேட்காமலே காரணமும் சொன்னார்.


"தேங்க்ஸ்"


முனகிவிட்டு போனாள்.


"ரூம் பூட்டியே வச்சிருக்கா"


"ஆமா.. என் பிரச்னை என்னன்னா.. அவன் திரும்பி வரமாட்டான்னு தெரிஞ்சா.. வேற யாரையாச்சும் குடி வச்சிருவேன்.போயி விளையாட்டு போல ரெண்டு வாரத்துக்கு மேல ஆச்சு. ஒரு தகவலும் இல்ல..பூட்டை உடைக்கவும் யோசனையா இருக்கு"


என்னையும் மீறி என் குரலில் லேசான கோபம் தெரிந்தது.


"ஆபீஸ் வேலையா போயிருக்காரா"


"தெரியல ஸார்.. நான் அவ்வளவா அவங்கூட பேசறது இல்ல.. வாடகை கூட என் மிசஸ் கையில கொடுத்துருவான்.. சமயத்துல என் பொண்ணுக்கு ஏதாச்சும் திங்கறதுக்கு வாங்கி வந்து கொடுப்பான்..எப்ப போறான்.. எப்ப வரான்னு தெரியாது.. ஆனா அவனால ஒரு பிரச்னையும் இல்லங்கிறதால நானும் கண்டுக்கல"


வந்தவருக்கு எப்படியும் வயது அறுபதுக்கு மேலிருக்கும். ஓய்வு பெற்றவராய் இருக்கலாம்.


"ஆமா.. நீங்க எதுக்கு தேடறீங்க"


சொல்லலாமா, வேண்டாமா என்கிற போராட்டம் கண்ணில் தெரிந்தது.


"எனக்கு மூணு பொண்ணுங்க. மூத்தத கட்டிக் கொடுத்தாச்சி.. இப்ப ரெண்டாவதுக்கு வரன் தேடறேன்.. மணமகன் தேவைன்னு விளம்பரம் கொடுத்ததைப் பார்த்து இந்தப் பையன் லெட்டர் போட்டாரு..நாங்களும் பதில் போட்டோம்.. எப்ப பொண்ணு பார்க்க வரீங்கன்னு.. ஒரு மாசமாச்சு. பதிலே இல்லை. அதான்.. நேர்ல பார்த்து (வி)சாரிச்சுட்டு போலாம்னு வந்தேன்"


நியாயம்தான்.


இந்த முறை என் குரலில் கொஞ்சம் அக்கறை இருந்தது.


"கட்டாயம் அவர் வந்த உடனே நீங்க வந்திட்டு போனதா சொல்றேன்.."


அவர் எழுந்து போனது அரை மனதாய்த்தான் இருந்தது. விட்டால் அவன் வரும்வரை இங்கேயே உட்கார்ந்திருப்பார் போல.


அவர் போனதும் சுகுணா சொன்னாள்.


"இவ்வளவு நாள் சொல்லாம போனது இல்லீங்க.. அந்தப் பையன் ஆபீஸ் நெம்பர் தெரிஞ்சா விசாரிக்கலாமே.."


"தெரியாதே.."


அன்று மாலையே அவன் ஆபீஸிலிருந்து ஆள் வந்து விட்டது.


"சரவணன் இங்கேதானே இருக்காரு"


"ஆமா. நீங்க?"


"கம்பெனிலேர்ந்து வரோம். ரொம்ப நாளா ஆபீஸே வரல. என்னன்னு பார்த்துட்டு வரச் சொன்னாங்க.."


"அப்ப.. அவரு ஆபீஸ் வேலையா போவலியா"


"சரவணன் வீட்டுல இல்லியா"


எங்கள் குழப்பம் அதிகரித்து விட்டது.


அடுத்த பத்து நாட்களும் ஓடின. சரவணனைத் தான் காணோம். 'காணவில்லை' என்று விளம்பரம் கொடுக்கலாமா.. அதை நான் கொடுப்பது சரிதானா. பக்கத்து வீட்டுக்காரரிடம் என் கவலைப் பகிர்ந்தபோது அவர் மேலும் பீதியைக் கிளப்பினார்.


"போலீஸ்ல சொல்லிருங்க ஸார்.. குடி வச்சிருந்த ஆளைக் காணோம்னா அப்புறம் வேற ஏதாச்சும் பிரச்னை ஆயிரப் போவுது"


"கொஞ்சம் நீங்களும் கூட வரீங்களா.."


உள்ளிருந்து ஏதோ குரல் கேட்டது.


"வரலாம்.. ஆனா நான் அர்ஜெண்டா ஒருத்தர பார்க்கப் போவணும்.."


"சரி ஸார்"


சுகுணாவும் அதை ஆமோதித்தாள்.


"என்ன பயம்.. தைரியமா போங்க.. போலிஸ்ல சொல்றதுதான் சரின்னு எனக்குப் படுது"


போனேன். உட்காரச் சொன்னார்கள். முதலில் ஒருவர் என்ன விஷயம் என்று கேட்டார். மறுபடி உட்காரச் சொல்லி பத்து நிமிடங்கழித்து இன்னொருவரிடம் அதே கதை. மீண்டும் அமர்வு.


கடைசியாய் இன்ஸ்பெக்டர்.


"ம்ம்.."


யோசித்தார்.


"இப்ப சொன்னதை எழுதிக் கொடுங்க"


நல்ல வேளையாகப் பேப்பரும் பேனாவும் எடுத்துக் கொண்டு போயிருந்தேன். சுகுணாவின் ஆலோசனை!


"என்ன தேதிலேர்ந்துன்னு சொன்னீங்க"


சொன்னேன்.


"ஹாஸ்பிடல்லாம் செக் பண்ணீங்களா"


"எ..துக்கு"


"அடையாளம் தெரியாத பாடி.."


"வ.. ந்து.. நான் எப்படி.. வீட்டு ஓனர்.. அவர் குடி இருக்கறவர்.."


"சரி.. சரி. போங்க.. பார்க்கலாம்"


இரண்டு நாட்கள் கழித்து ஒரு போலீஸ்காரர் வந்தார்.


"ஜி எச் வரைக்கும் போயிட்டு வரலாம்.. வாங்க ஸார்"


ஆட்டோவில் போனோம். வழியில் டீக்கடை.


மார்ச்சுவரியில் குப்பென்று குளிர் காற்று முகத்தில் அறைந்தது. அடி வயிற்றைப் புரட்டிக் கொண்டு வந்தது.


"இவரு சொந்தக்காரவுங்களா"


"வூட்டுல குடி இருக்கறவரு"


அவர்கள் சம்பாஷணை எனக்கு ரசிக்கவில்லை. சரவணனாக இருக்கப் போவதில்லை. அதற்குள் இவர்கள் அவன் போனதாகவே முடிவு எடுத்து..


"ரோட்டுல அடிபட்டு கிடந்தாரு.. யாரும் கேட்டு வரல.. பின் தலையில அடி பட்டு.. ஸ்பாட்லயே உயிர் போயிருச்சு.. ஆமா.. என்ன வயசிருக்கும்.. உங்க சொந்தக்காரருக்கு"


"சொந்தமில்லப்பா"


"சரி.. ஏதோ ஒண்ணு.. வயசு என்ன"


"முப்பதுக்குள்ள"


"முப்பதா.. இது பெருசாச்சே.."


ஹப்பாடா. அது சரவணன் இல்லை. எனக்குள் நிம்மதி பெருமூச்சு.


"அப்ப போயிரலாமா"


போலீஸ்காரர் யோசித்தார்.


"அப்படிங்கிறீங்க"


அதே நிமிடம் மார்ச்சுவரி வாசலில் ஏதோ சத்தம் கேட்டது.


"யாரு"


"நாதான் ஸார்.. வீட்டுல சொன்னாங்க.. உடனே ஓடியாந்தேன்.. அம்மாவுக்கு உடம்பு சீரியசாப் போச்சு.. ஊருக்குப் போன நேரத்துல.. என் தப்புதான் தகவல் சொல்லாம விட்டது.. அப்புறம் ஆபிஸுக்கும் சொல்லிட்டு.. இப்ப வீட்டுக்கு வந்தேன்.."


சரவணனுக்கு மூச்சிரைத்தது.


"டென்ஷன் பண்ணிட்டப்பா"


"ஸாரி ஸார்"


"அம்மா எப்படி இருக்காங்க"


"வீட்டுக்கு கூட்டி வந்தாச்சு ஸார்.. ஒரு லட்சம் போல போயிருச்சு"


போலிஸ்காரர் அதட்டினார்.


"கதை பேசற எடமா இது.. "


"அப்ப பாடிய பார்க்கலியா"


மார்ச்சுவரி வாட்ச்மென் கேட்டார்.


"என்ன பாடி.."


"நீ காணோம்னதும் போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் கொடுத்து.. "


தடுமாறினேன் எப்படிச் சொல்வதென்று.


"ஸாரி ஸார்" என்றான் மீண்டும்.


"முகத்தை மூடிருப்பா" என்றார் போலீஸ்காரர்.


தற்செயலாகத் திரும்பினேன்.


"கொஞ்சம் இரு.."


அங்கே விறைத்துப் போயிருந்த உடல்.. சரவணனைப் பார்க்க வந்த அதே பெரியவர்!