November 10, 2014

வெள்ளியங்கிரி



2 மலைகள் வரை கற்களை வைத்து படிகள் போல அமைத்திருக்கிறார்கள். குச்சியை ஊன்றி நடக்கும் போது அழுத்தி நடப்பதாலும்.. முதுகில் வைத்திருக்கும் பையின் கனமும் சேர ஏறுவது சிரமம் என்று தோன்றியது.. இறங்கும் போது அந்த நினைப்பை பொய்யாக்கி விட்டது ! இறங்குவதுதான் சிரமம் !
ஒன்று அல்லது இரு நபர்கள் நின்றால் எத்தனை இடைவெளி இருக்கும்.. அவ்வளவுதான் சில இடங்களில்.. இரு பக்கமும் அடர்த்தியான மரங்கள்.. செடிகள்.. காடு !
சில இடங்களில் பெரிய மரங்கள் விழுந்து பாதையை அடைத்திருக்கின்றன. ஏறிக் குதித்து போனோம்.
2 வது மலை அருகில் ஒரு விநாயகர் கோவில். இதுதான் தங்கலாம் என்று சொல்கிற அளவுக்கு ஒரு இடம். இதன் பின் வெட்டவெளி அல்லது அடர்த்தியான காடு..
நாங்கள் ஏறும்போது.. இறங்கிக் கொண்டிருந்தவர்கள் சொன்னது.. ‘பிள்ளையார் கோவில்ல தங்கிட்டு விடியல்ல போங்க’ என்றார்கள்... இன்னும் எவ்வளவு நேரம் பிடிக்கும் என்று கேட்டதற்கு. எங்கள் நடை அப்படி !
மொத்தமே அன்று 12 பேர் கூட இல்லை.. இத்தனைக்கும் பௌர்ணமி நாள் ! அந்த 12லும் நாங்கள் 3 பேர் ஏறிக் கொண்டிருந்தோம். மற்றவர்கள் இடைவெளி விட்டு இறங்கிக் கொண்டிருந்தவர்கள்.
பாம்பாட்டி சித்தர் குகை என்று வழியில் ஒரு குகை. இருட்டில் அதற்குள் என்ன என்று கவனிக்க முடியவில்லை..
‘.. 3 பேரோ.. 4 பேரோ இப்பதான் போனாங்க.. ஒரு வேளை அவங்க நைட் தங்கினா அவங்க துணை இருக்கும் உங்களுக்கு’ என்று ஒரு தகவல்.
6 மணிக்குப் பிறகு கும்மிருட்டு. அடர்த்தியான மரங்களினூடே நடை. சுரங்கங்களில் வேலை பார்க்கிறவர்கள் போல ஹெட் லைட் வைத்திருந்தோம். அதன் வெளிச்சத்தில் நடை.
வேறு எதையும் கவனிக்கும் மனநிலையோ வெளிச்சமோ இல்லை ஏறும் போது. எப்படியாவது உச்சியை அடைந்து விடணும் .. அவ்வளவுதான்.
மன தைரியம்.. எப்படியும் ஈசனைப் பார்க்கவேண்டும் என்கிற ஆர்வம்.. இது இருந்தால் போதும்.. ஏறி விடலாம் !
கடைசி மலைகளில் ஒன்று (4 ஓ.. 5 ஓ) வெட்டவெளி.. பிறகு இடுக்குகளில் போய்.. மலை உச்சி.. ஒரு குகை போலத்தான் கோவில்..
என்னிடம் கேமிரா இல்லை.. மொபைல் சார்ஜ் போய் விட்டது. உடன் வந்த நண்பர் எடுத்த படங்களைப் பின்பு பகிர்கிறேன்.
மேலே போய் ஈசனைப் பார்த்ததும் அதுவரை பட்ட கஷ்டம் மறந்து போய்விடும். விடியலில் சூரிய உதயம் பார்ப்பது இன்னொரு ஆனந்த அனுபவம்.


இறங்கும் போது கால்கள் சொன்ன பேச்சு கேட்காமல் டான்ஸ் ஆடும். குச்சி ஊன்றி சமாளித்துத்தான் இறங்க வேண்டும்.
எங்களுடன் வந்த அப்போது அறிமுகமான நண்பர் தடுமாறி கீழே விழுந்து கால் சுளுக்கிக் கொண்டது.
அலுவலகம் வந்ததும் மேலே பிடித்துக் கொண்டு வந்த மலை நீரையும் விபூதியையும் கொடுத்து.. கதைகளைச் சொன்னதும்
ஒரு நண்பர் கேட்டார்..
‘மறுபடி வாய்ப்பு வந்தா போவீங்களா.. இப்ப உடனே இல்லை.. அடுத்த வருஷம்னு வச்சுக்குங்க.. ‘
திகில் கதைகளாய்ச் சொன்னதால் இப்படிக் கேட்டிருப்பாரோ..
என்னையே உற்றுப் பார்த்தவரிடம் நிதானமாய்ச் சொன்னேன்.
‘போவேன்.. ‘
‘நானும் வரேன்.. என்னையும் அழைச்சுகிட்டு போங்க’
அதான் வெள்ளீயங்கிரி !




November 09, 2014

வெள்ளியங்கிரி - ஆன்மீகப் பயணம்



பர்வத மலை.. சதுரகிரி.. போய் வந்தாச்சு.
வெள்ளியங்கிரியை மட்டும் விட்டு வைப்பானேன் என்று நண்பரிடம் (2 முறை போய் வந்தவர்) கேட்டோம்.. நானும் இன்னொரு நண்பரும்.
இந்த பௌர்ணமிக்கு போகலாம் என்றார். 6.. 7 தேதிகளில் என்று திட்டமிட்டோம்.
குளுகோஸ் கரைத்த தண்ணீர்.. திராட்சை.. நெல்லி என்று முன்னேற்பாடுகள்.
நடந்து செல்ல வசதியாக கம்பு வாங்க கடைக்குப் போனால் ஏற இறங்கப் பார்த்தார்.
‘இப்பவா ஏறப் போறீங்க’
மதியம் 2 மணி அப்போது.
‘ஆமா.. நைட் மலைல தங்கிரலாம்னு.. காலைல சூரிய உதயம் பார்த்துத் திரும்பலாம்னு’
’இல்ல.. இன்னிக்கு கூட்டம் அதிகமில்லை.. மலை ஏறினவங்களும் காலைலயே போயிட்டாங்க.. இப்ப திரும்பிகிட்டு இருப்பாங்க’
வாசல் விநாயகர் கோவில் பூசாரியின் பார்வையிலும் ஒரு பதற்றம்.
விபூதி கொடுத்து எங்கள் பிடிவாதம் பார்த்து ‘முன்னேற்பாடாத்தானே வந்திருக்கீங்க.. நல்ல குளிர் இப்போ’ என்றார்.
மலை ஏற ஆரம்பிக்கும் இடம் அடைக்கப் பட்டிருந்தது.
.. பனிப்பொழிவு.. மிருகங்கள் நடமாட்டம்.. ஏற வேண்டாம் என்று எச்சரிக்கை செய்யப்படுகிறது’..
எச்சரிக்கை மணி எங்களுக்குள் ஒலித்தது அப்போதுதான்.
அங்கே அடிவாரத்தில் கோவிலில் அன்னதானம் செய்கிறார்கள் தினமும். சாப்பிட்ட இலைகள் மலை போல் குவிந்து கிடந்தன முதலில் நாங்கள் பார்த்தபோது.
மறுநாள் பார்த்தபோது அவ்வளவாக இல்லை.
சரி.. ஆடு.. மாடு தின்றிருக்கும் என்று நினைத்தோம்.
‘நேத்து ராத்திரி காட்டுப்பன்னி கூட்டம் வந்துச்சு.. அதான்’
என்றார் ஒருவர் சாதாரணமாய்.
‘காட்டுப்பன்னியா..’
‘முந்தாநேத்து ஒரு சிறுத்தையே வந்திச்சே.. நாங்கலாம் விரட்டினோம். ஒரு நாயைக் கவ்விட்டு ஓடிருச்சு மலைக்கு மேல’
முதல் நாள் கேட்டார்கள். ‘குளிருமே.. என்ன வச்சிருக்கீங்க’
‘அதெல்லாம் வச்சிருக்கோம்’
‘2 மாசம் முன்னால 6 பேர் போனாங்க.. குளிர் தாங்காம ஒருத்தர் விறைச்சு.. போயிட்டாரு’
நாங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம்..
மலை ஏறிக் கொண்டிருந்த போது 4 பேர் கீழிறங்கினார்கள்.
‘இப்பவா போறீங்க’
‘ஆமா’
‘பார்த்துப் போங்க.. ஒத்தை ஆனை கொப்பை ஒடிச்சுகிட்டு உலாத்துது.. நாங்களே வேற வழியா ஒரு கிமீ சுத்தி பாதையைப் புடிச்சு வந்தோம்’
’போன வருஷம் ஒத்தையா ஒரு ஆளு.. செந்நாய்ட்ட மாட்டி போயிட்டாரு’
இதை எல்லாம் பயமுறுத்துவதற்காக சொல்லவில்லை. கேட்டதை அப்படியே சொல்லிவிட்டேன்.
பெண்கள்,. குழந்தைகள் ஏறிப் போய் வருகிறார்கள்.
பல வருடங்களாய்ப் போகிறவர்களும் இருக்கிறார்கள்.
எல்லோரும் சொல்கிற ஒரே வார்த்தை..
‘அவனை நம்பி போங்க.. கை விட மாட்டான்’
தென்னாடுடைய சிவனே போற்றி !

( தொடரும் )

November 01, 2014

இன்றைக்கான கவிதைகள் !




இன்றைக்கான கவிதைகள்




1. அதன் கண்களில்
ஒரு கெஞ்சல் இருந்தது..
சிறிது நேரம்
மௌனமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன்
என்ன செய்வதென்று புலப்படாமல்..
என் தயக்கம் பார்த்து
வினாடி நேரத்தில்..
ஆம்.. வினாடி நேரத்தில்
அதன் கண்களில்
மின்னி மறைந்த கேலி..
என்னைக் குறித்த
அதன் விமர்சனமாய்..
நிராகரித்து நகர்ந்தபோது
எனக்குத்தான்
அதிகமாய் வலித்தது..
அந்த புறக்கணிப்பு !


2. ஒரு நேரத்தில்
ஒரு கவலை
என்றுதான்
வகைப்படுத்திக் கொண்டேன்..
எனக்கும் அதுவே
வசதியாய் இருந்தது..
இப்போதெல்லாம்
ஓடி வந்து
மடியில் விழுகிற
அத்தனை மகிழ்ச்சிகளையும்
அப்படித் தள்ள முடியவில்லை !


3. வாயைத் திற..
பல்லைக் கடி இறுக்கமாய்
விட்டு விடாதே..
ம்ம்..
சூழ் நிலையை வாயில் திணித்து
அடிக்க ஆரம்பித்து விடுகிறது
வாழ்க்கை விளையாட்டு..