May 31, 2016

பிச்சி

நாலைந்து நெகிழிப் பைகள். அதில் அடைக்கப்பட்ட காலித் தண்ணீர் பாட்டில்கள். ஒரு எவர்சில்வர் பேசின். ஒரு சாக்குத் துணி. பூட்டிய வீட்டு வாசலின் வெளியே சிமெண்ட் ப்ளாட்பார்மில் அவள்.
தலைக்கு கர்ச்சீபைக் கட்டியிருந்தாள். என்னைப் பார்க்கவில்லை. வானத்தைப் பார்த்து திட்டிக் கொண்டிருந்தாள்.
சில வருடங்களுக்கு முன் அவளைப் பார்த்திருக்கிறேன். ஒரு மகன்.. ஒரு மகள் உண்டு. அப்போதும் தெருவில் தான். தெளிவாகப் பேசிய காலம்.
'அண்ணே..ஏதாச்சும் கொடுங்க' என்பாள்.
பணத்தை வாங்கிக் கொண்டு உரிமைக்காரி போலபோய்விடுவாள்.
கொஞ்ச காலம் கண்ணில் படவில்லை. இப்போது அவளேதான்.. தலை நரைத்து.. வாழ்க்கை தன் பேனா இங்க் தீரும் வரை எழுதிக் கிழித்த கோலத்தில்.
என்னைப் பார்த்து விட்டாள்.
'நல்லாருக்கியா'
சிரித்தேன்.
'ரொம்ப நாளாச்சு..உன்னைப் பார்த்து'
தலையாட்டினேன்.
'கையில் என்ன வச்சிருக்கே'
'தயிர் சாதம்.. கோவில் பிரசாதம்'
'கொண்டா' பேசினை எடுத்து நீட்டினாள்.
வாய் ஓயாமல் பேசிக் கொண்டே.
ஒன்றுக்கொன்று தொடர்பற்ற அல்லது நானாய் இணைக்க வேண்டிய வரித் துண்டுகளில் பேச்சு.
'அவ்வளவையும் பிடுங்கிக் கொண்டு விரட்டிட்டான்.. எனக்கு வழியில்ல.. மூணு வீடு வச்சிருந்தேன்..கேஸ் போடணும்.. நீ வரியா..மிரட்டிப் பார்க்கிறியா.. எல்லாத்தியிம் வாசல்ல தூக்கிப் போட்டான்.. இப்போ ஆளில்ல.. நிக்க வச்சு கேக்கணும்'
ஒரு ஸ்பூன் பிரசாதமாய் வைத்துக் கொண்டு முழுவதையும் பேசினில் வைத்தேன்.
'எனக்கு ஒரு வீடு பார்த்து வைக்கிறியா..'
அவளைப் பார்த்தேன். காலம் சற்றே பின் நொண்டி அடித்தது.
'ம்'
அவள் திரும்பி இலக்கில்லா பார்வையில் அவளை நிர்க்கதியாக்கியவர்களை கேள்வி கேட்க ஆரம்பித்தாள். கை தன்னிச்சையாய் சாதத்தை எடுத்து அவளுக்கு ஊட்டியது.
நகர்ந்து தெருவில் நடந்தேன். யாரோ கை தட்டினார்கள்.
'அவகிட்ட என்ன பேச்சு.. பைத்தியம்..'
திரும்பிப் பார்த்தேன். பசியடங்கிய நிம்மதியில் அவள் பேசினைச் சுத்தமாய்க் கழுவி இடுப்புத் துணியில் துடைத்து நெகிழியில் சொருகிக் கொண்டிருந்தாள்.
ஏன் ஒரு பெரிய வீட்டைக் கட்டக் கூடாது.. சாப்பாடு.. படுக்கை வசதியுடன்..
யோசனையுடன் நகர்ந்தவனை தெருக்காரர் திட்டியது காதில் விழவில்லை.

March 05, 2016

அம்மு 20

“கொசு கடிக்கும்” என்றேன் உடனே.
அம்முவின் முகம் சிணுங்கியது. ‘மொட்டை மாடிக்குப் போகலாமா ‘ என்று ஆசையாய் கேட்டது அவள்தான்.
அமைதியான நதியில் ஓடம் விட்டு சிவாஜி அமைதியானதும் அம்முவிடம் சொன்னேன்.
“வா. போலாம்”
தூரத்தில் கோபுரங்கள். அதன் உச்சி விளக்கொளி. கூடு திரும்பும் பறவைகள். 
அம்மு கால் நீட்டி அமர்ந்தாள். அவள் மேல் படக் கூடாது என்று என் கால்களை வேறு பக்கம் நீட்ட முயன்றேன். தடுத்து தன் மடி மீது வைத்துக் கொண்டாள். 
“எப்போ எழுத ஆரம்பிச்சிங்க “
“ஸ்கூல் சேர்த்த உடனே “
அம்முவின் பொய்க் கோபம் மிக அழகு. 
“ஆறாவதா.. ஏழாவதா .. ஞாபகம் இல்ல”
“ம்‌ம்”
“அம்மு .. நீ சின்ன வயசுல எப்படி இருந்த.. சொல்லேன் “
“அது எதுக்கு இப்போ “
“சொல்லேன் “
“எல்லாரையும் போலத்தான் “
“அம்மாளுன்னு உங்க வீட்டுல வேலை செய்யறவங்க இருந்தாங்க தானே “
“ஆமா”
அம்முவின் கண்களில் பழைய நினைவுகள். 
“வெள்ளிக் கிழமை தப்பாது .. எண்ணை தேய்ச்சு விடுவா .. “
“ஹ்ம்.. கொடுத்து வச்சவ அம்மாளு “ என்றேன் கண் சிமிட்டி.
“எப்பவும் அதே நினைப்புத்தானா .. அது சின்ன வயசுல. நாங்க பெரியவங்க ஆனதும் நாங்களே குளிச்சோம் .. புரிஞ்சுதா “
“ஓ”
“காயத்ரி ஏழு மணிக்கே படுத்துருவா சாப்பிடாம .. எழுப்பி கூட்டிண்டு வந்தா வாயில கடைசி உருண்டையோட தூங்கிருவா “
அம்முவின் தங்கை காயத்ரிக்கு இப்போது கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகளாச்சு.
“ உன்னை யாரும் சைட் அடிச்சதில்லையா “
“என்ன “
“இல்லப்பா .. இவ்ளோ அழகா இருக்க.. அதான் கேட்டேன் “
“அது எனக்கு எப்படித் தெரியும் “
“நாங்க பார்க்கிறது உங்களுக்கு நல்லாவே தெரியும் “
“பிளாக் அண்ட் வொயிட் காம்பினேஷன்ல பாவாடை தாவணில போனப்ப ஒருத்தன் விசிலடிச்சான் .. நான் திரும்பிப் பார்க்கல “
“ஓ”
“அப்பாக்கு நாங்க செல்லம் .. எங்களை எதுவும் சொல்லிரக் கூடாது .. நாள் கிழமைன்னா புது டிரெஸ் நிச்சயம் “
“அப்புறம் “
“ஒரு தடவை கூட திட்டினதுல்ல “
“நானும் தான் “
“பேசாதீங்க .. நேத்து கூட வார்த்தை விட்டீங்க “
“அதெல்லாம் ஒரு கோபமா “
“அப்பா மாதிரி ஒரு கணவன் இருக்கணும் ஒரு பொண்ணுக்கு “
“சரிதான் .. அம்மா மாதிரின்னு நாங்க கூடத்தான் எதிர்பார்க்கிறோம் “
“அப்பா நீட்டா டிரெஸ் பண்ணிப்பார் .. “
“அது அப்படியே உனக்கும் வந்திருக்கு “
“அம்மா சமையல் ..”
“அதுவும் “
“சும்மா ஐஸ் வைக்க வேணாம் “
ஜ்வல்யாவின் குரல் கேட்டது . 
“வா.. இங்கே தான் இருக்கோம் “
காலை எடுத்து விட்டேன் . ஜ்வல்யா என் மடியில் வந்து படுத்துக் கொண்டாள் .
அம்மு தன் பிள்ளை உலகத்திலிருந்து இன்னும் தரை இறங்கவில்லை . ஜ்வல்யா அம்மா என்று அழைத்ததை அனிச்சையாய் ஸ்வீகரித்தாள்.
“ காயத்ரி சொல்லுவா.. நாம இப்படியே இருந்திரலாம்னு “
“ அதெப்படி முடியும் .. மேஜிக் இல்லியே .. குழந்தைன்னா பெரியவங்களா ஆயிருவாங்க “
“ப்ச.. கல்யாணம் பண்ணிக்காம “
“ஓ “
“எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம் .. நாங்க கேட்டு அப்பா செய்யாதது இது ஒண்ணுதான் “
“ விதி யாரை விட்டுது”
“உங்களுக்கு நான் கிடைக்கணும்னு இருக்கு “
“நானும்தானேப்பா “
“ஆமாடா செல்லம் “
“அதென்னவோ வாஸ்தவம் .. ஜ்வல்யா குட்டிக்காக உன்னை எல்லா ஜென்மத்திலயும் கல்யாணம் பண்ணிக்கலாம் “
விருட்டென்று எழுந்திருக்க முனைந்தாள் அம்மு.
“ப்ளீஸ் .. கோவிச்சுக்காத “
“ மொட்டை மாடில கொஞ்ச நேரம் ஜாலியா பேசலாம்னு வரச் சொன்னா ..”
“அம்மு .. உனக்கு உங்க வீடுதான் ரொம்ப பிடிச்சிருக்கா “
“ அது ஒரு சுதந்திரம் “
“இங்கே அது இல்லியா “
“இங்கே வேற மாதிரி .. அது நிஜமாவே சுதந்திரம் “
“அப்போ .. நானு.. ஜ்வல்யா .. இதெல்லாம் “
அம்மு பாதி எழுந்து என்னருகில் நகர்ந்து வந்தாள் . என்னையும் ஜ்வல்யாவையும் இறுக்கிக் கொண்டாள் .
“ரொம்ப பிடிச்சிருக்கு “


அந்த நிமிட பொய்யை ஸ்வீகரிக்க நானும் ஜ்வல்யாவாய் மாற முடிந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும் என்று தோன்றியது அம்முவின் பொய் பேசாத கண்களைத் தற்செயலாய்ப் பார்த்தபோது .

February 21, 2016

அம்மு 19
அம்மு என்னிடம் சொன்னபோது முதலில் எனக்குப் புரியவில்லை. நல்ல தூக்கத்தில் எழுப்பி முழு நினைவுக்கு வருவதற்குள் சொல்லப்பட்ட விஷயம்.
‘ நீங்க அப்பா ஆகப் போறேள்’
‘அப்பா தூங்கிண்டு இருப்பாரே’
‘ஹைய்யோ.. முழிச்சுக்குங்கோ ‘
மிரள மிரள விழித்தேன்.
‘நீங்க அப்பா ஆகப் போறேள் ‘ என்றாள் நிறுத்தி நிதானமாய்.
அம்முவின் முகம் இருட்டில் ஜொலித்தது. 45 நாள் சிசுவை வயிற்றில் தொட்டுப் பார்த்தேன்.
“அம்மு. அம்மாட்ட சொன்னியா “
“முதல்ல உங்ககிட்ட”
“அம்மாவை எழுப்பட்டுமா”
“லூசா நீங்க “
கொஞ்ச நேரம் கொஞ்சினோம். அம்மு தூங்கி விட்டாள் என்று புரிந்ததும் ஹாலுக்கு வந்தேன் . அம்மா தூக்கத்தில் புரண்டாள். எழுப்புவதா.. ச்சே..
திரும்பி விட்டேன். அம்மாவின் குரல் கேட்டது.
“என்னடா கண்ணா “
அம்மாவின் கைகள் என்ன மிருது. என் கண்ணீர் நனைத்தது. பேச அவசியமில்லாத தருணங்கள் வாழ்வில் சில.
“நிஜம்மாவாடா.. நினைச்சேன்.. அவ முகத்தைப் பார்த்து..”
“அவளே கார்த்தால சொல்வாம்மா “
அம்மா எழுந்து பெருமாள் சன்னிதிக்குப் போனாள். கோவிலாழ்வார் தூக்கத்தில் இருந்தார். உள்ளிருந்த தவழும் கிருஷ்ணன் என்ன சொன்னாரோ.. அம்மா ஜ்வலிக்கிற முகத்துடன் வந்தாள்.
“போடா.. போய்த் தூங்கு.. அவ தனியா படுத்துண்டிருக்கா “
அம்முவைத் தலையில் தாங்கிய கால கட்டம் அது. கை உசத்தினாலே போய் பறித்துக் கொண்டு வந்து நின்றோம். இது பிடிக்குமோ அதுவோ என்று தினம் செய்தவைகளை அம்மாளு சாப்பிட்டு புஷ்டி ஆகிக்கொண்டிருந்தாள்.
சீமந்தம் முடிந்ததும் அம்முவை அழைத்துக் கொண்டு போவார்கள் என்று பேச்சு எழுந்ததும் நான் சொன்னேன்.
‘இங்கேயே வச்சு பார்த்துக்கலாமே’
‘உளறாதே.. அம்மு அவாத்துக்கு போகிறதுதான் நல்லது.’
‘அம்மு நீ சொல்லு. இங்கே இருக்கியா அங்கே போறியா’
அம்மு மௌனமாய் இருந்தாள்.
‘சொல்லு அம்மு ‘
‘அவா வருத்தப்படுவாளே போகாட்டி’
‘உன் இஷ்டம் என்ன’
‘போயிட்டு வரேனே’
எனக்குள் இருந்த விஸ்வாமித்திரரும் துர்வாசரும் தங்களை வெளிப்படுத்திய முதல் நிகழ்வு அது.
“போய்க்கோ .. அங்கேயே இருந்துக்கோ”
அம்முவின் அம்மா பக்கத்தில் இருந்தாள். என்னை விட நிதானமாய் அழுத்தமாய் சொன்னாள்.
‘அம்முவைப் பார்த்துக்க எங்களுக்கும் தெரியும். நாங்களே வச்சுக்கிறோம்’
முறைத்துக் கொண்டு வந்து விட்டேன். அந்த வாரம் அலுவலகத்திலிருந்து அப்படியே பஸ் பிடித்துப் போனேன். நள்ளிரவில் காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து காலிங் பெல் அடித்தேன்.
இரவு 12 மணிக்கு தோசை வார்த்துப் போட்டார்கள். அம்முவை ஒரு வார இடைவெளிக்குப் பின் இருட்டில் அருகில் பார்த்தபோது போன வாரம் நானா கத்தினேன் என்று இருந்தது.
ஜ்வல்யா பிறந்தபோது தற்செயலாய் நான் அங்கிருந்தேன்.
‘அம்முவை வலி எடுத்ததுன்னு ஹாஸ்பிடல் கூட்டிண்டு போயிருக்கா’
ஹாஸ்பிடல் ஓடினால் .. ஜ்வல்யா பிறந்தாச்சுன்னு தகவல்.
அப்படியே குட்டி அம்மு. தலைமுடி கருகருவென்று .. அம்மாவுக்கு தகவல் சொல்லி விட்டேன் . அன்று கிளம்ப மனசே இல்லை. மறுபடி புண்ணியாகவசனத்திற்கு வரவேண்டும் .. லீவு போடணும்.
அந்த மூன்று மாசம் நான் நிலை கொள்ளாமல் இருந்தேன். 6 மாதத்தை மூன்றாக குறைத்து எனக்கு சலுகை தந்தார்கள்.
‘மாப்பிள்ளையைப் பார்க்கவே கஷ்டமா இருக்கு.. அம்முவைக் கொண்டு போய் விட்டுறலாம்’
ஜ்வல்யா வந்தபின் எங்கள் வீட்டில் களை கட்டி விட்டது.
‘என்னடா பொண்ணு தானா ‘ என்று கேட்டால் போதும் என்னை அடக்குவது சிரமம்.
‘ஏன் இப்படி கோவம் வருது உங்களுக்கு ‘ அம்முவுக்கே ஆச்சர்யம்.
எனக்கும் புரியவில்லை. பிறகு வருத்தப்படுவேன். ஆனால் மறுபடி அதே கேள்வியை எதிர் கொண்டால் துர்வாசர் தான்.
ஜ்வல்யா இரவில் விளையாடுவாள். பகலில் தூக்கம். இரவில் அவள் அழுதால் அம்முவை எழுப்புவேன்.
‘விடுங்க ‘
‘அவ அழறாம்மா’
‘கொஞ்ச நேரம் மடில போட்டு ஆட்டுங்க .. தூங்கிடுவா ‘
அது பசி அழுகையா .. தூக்க அழுகையா .. இந்த வித்தியாசங்கள் அம்முவுக்கு எப்படி புலனாச்சு.
மடியில் ரோஜா புஷ்பத்தைக் கிடத்திக் கொண்டு வலது துடை தானாக ஆடியது.
இதுவே கிண்டலாச்சு என் மீதும்.
‘கண்ணன் சும்மா இருக்கும் போதும் தானா தொடையை ஆட்டிண்டு இருக்கான்’
அம்மு தூங்கிக் கொண்டிருந்தாள். ஏன் சட்டென்று விழிப்பு வந்தது .. தெரியவில்லை. ஜ்வல்யா தானாய் கையாட்டி விளையாடிக் கொண்டிருந்தாள்.
‘குட்டி..’
‘ப்பா’
அம்முதான் கூப்பிடுகிறாள் என்று முதலில் நினைத்தேன். இல்லை.. அவள் தூக்கத்தில். ஜ்வல்யா !
என் எச்சில் முத்தம் அழுத்தமாய் பதித்தேன்.
லைட் எரியும் கீச்சிடும் ஷூ அம்முவால்தான் எனக்குத் தெரிந்தது. ஜ்வல்யா நடக்க ஆரம்பித்ததும் அதை வாங்கினோம். வெளியே போனால் ஜ்வல்யாவை தூக்கிக் கொள்வது என் பொறுப்பில். உச்ச கர்வம் அப்போது. யாரும் சாதிக்காத ஒன்றைச் செய்த மாதிரி.
இதிலும் ஒரு நாள் ஒரு எதிர்பாராத நிகழ்ச்சி. அன்று என்னவோ ஒரு சோர்வு. ஜ்வல்யாவை நடக்கச் சொன்னேன்.
‘தூக்கிக்கோப்பா ‘
தூக்கிக் கொண்டேன் .
‘நீ காலேஜுக்கு போனாலும் நான் தான் தூக்கிண்டு போகப் போறேன்’
சொல்லியிருக்கவேண்டாம். வாயில் சனி.
‘இறக்கி விடுப்பா ‘
விடுவதற்குள் அப்படியே சறுக்கி விட்டாள். கடைசி வரை நடந்தே வந்தாள். அம்முவிடம் பொருமித் தீர்த்து விட்டேன். பாரேன்.. எத்தனை வீம்பு.
அதன் பின் அவளை நான் எதுவும் சொன்னதில்லை. அவளாக நடக்கும் வரை என் தோளில் தான்.
அம்முவை என் மனதில் இருந்து ஓரம் கட்ட முடியும் என்று அதுவரை நான் யோசித்ததில்லை. ஜ்வல்யா வந்த பிறகு அம்மு இரண்டாமிடத்திற்கு நகர்ந்தாள். பதவிக் குறைப்பை அம்மு சுலபமாய் எடுத்துக் கொண்டாள்.
ஜ்வல்யா ஸ்கூலுக்கு போக ஆரம்பித்து .. என்னை விட்டு கொஞ்சம் விலக ஆரம்பித்து .. அவளுக்கென்று ஒரு உலகம் சிருஷ்டித்துக் கொண்டபோது .. நானும் அம்முவும் படுக்கையில் இருந்தபோது லேசான குற்ற உணர்வுடன் கேட்டேன்.
“அம்மு என் மேல ஏதாச்சும் கோவமா”
‘எதுக்கு’
‘இல்ல.. இப்பல்லாம் நான் ஜ்வல்யா கூட இருக்கேன்.. அவ கேட்டதை செய்யறேன். உன் கூட இருக்கறது குறைஞ்சு போச்சு ‘
அம்மு சிரித்தாள்.
‘அவ வேற .. நான் வேறயா ‘
அம்முவை இன்னும் அதிகமாய் நான் நேசிக்க ஆரம்பித்தது அப்போதிலிருந்துதான்.

February 08, 2016

அம்மு 18அம்முவிடம் எனக்குப் பிடித்ததே அவளின் திமிர்தான். இதை ஏற்கெனவே சொல்லியிருக்கிறேனா.. எத்தனை தடவை சொன்னாலும் அலுக்காது. எங்கள் உறவு வட்டத்தில் இதனாலேயே அவள் பிரசித்தி. குறும்பு பிரதிபலிக்கும் அவள் கண்கள் கூடுதல் கவர்ச்சி.
கல்யாணங்களில் அவள் பங்களிப்பு மகத்தானது. வேலைக்கு சலிக்க மாட்டாள். கோலம் போடவா. அம்மு. முகூர்த்தப் பைக்கா .. அம்மு. சம்பந்தி சண்டையா .. சமாதானம் பேச அம்மு. அதென்னவோ அம்முவைப் பார்த்தால் பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போய் சாப்பிட வந்து விடுவார்கள் முறைத்துக் கொண்டு நின்றவர்களும்.
எனக்கு எட்டு மணிக்கே சுமாரான பெண்கள் வெள்ளை உடையில் வந்து பாட்டு பாட ஆரம்பித்து விடுவார்கள். தூக்கம் கண்ணைச் சுழற்றும். தலையணை வேண்டாம் . படுக்கை வேண்டாம். அப்படியே ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் ஒரு மூலையாய் ஒடுங்கி தூங்கிப் போய் விடுவேன். முகூர்த்த பை போடுவதோ நள்ளிரவில். ‘நேத்து ஒரே கலாட்டா ..அம்முவோட சிரிக்க.. சிரிக்க .. ‘ என்று மறுநாள் தகவல் கேட்கும்போது வயிற்றில் அமிலம் சுரக்கும்.
இந்த முறை ஏமாறக் கூடாது என்று தீர்மானித்து விட்டேன். எட்டு மணிக்கே போய் ஒரு குட்டித் தூக்கம் போட்டு வந்து விட்டேன். எழுப்பி விட ஒருவனுக்கு லஞ்சம் கொடுத்திருந்தேன்.
வட்டமேஜை போல உட்காரணும். புது வாசனையுடன் பைகள் . ஆளுக்கொரு பொருள் பைக்குள் போட. நான் சுலபமாய் தேங்காயை தேர்ந்தெடுத்தேன். இன்னொரு காரணம் அது அம்முக்கு அருகில் .முதல் நாள் ஜானவாச சாப்பாடு எப்போதுமே அசத்தலாய் இருக்கும். அக்கார அடிசில் சூப்பராய் இருந்ததால் இன்னொரு முறை கேட்டு வாங்கி சாப்பிட்டதில் இருந்த லேசான கிறக்கம் அம்முவின் பக்கத்தில் கூடுதலாயிற்று.
அம்முவுக்கு மிமிக்ரி கை.. இல்லை வாய் வந்த கலை. உறவுக்காரர்களை ஒவ்வொருவராய் பகடி செய்து காட்டினாள் . எங்கள் சிரிப்பில் உக்கிராண அறை அதிர்ந்தது. யாரோ தூக்கம் கெட்டவர் முனகியது கேட்டது.
அம்முவை இத்தனை அருகில் பார்ப்பதும் கூடவே உட்கார்ந்திருப்பதும் ஒரு சவாலாகத்தான் இருந்தது. குடிகூரா பவுடர் வாசனை மிக மெலிதாய். முன்னுச்சி மயிர் மின்விசிறிக் காற்றில் அலைபாய அம்மு மடப்பள்ளி நாச்சியார் போல இருந்தாள்.
சுந்து முதலில் வாங்கிக் கட்டிக் கொண்டான்.
“அம்மு .. நம்ம பண்ணையார் ஆத்துல உன்னைப் பெண் கேட்டாங்களாமே “
“உனக்கு யார் சொன்னது “
அம்முவின் சிரிக்கும் கண்களில் கனல்.
“உண்டா இல்லியா சொல்லு “
சுந்து விடாமல் வம்பிழுத்தான் .
“ அப்போ அவருக்குக் கொடுத்ததை உனக்கும் கொடுக்கணும் “
அதில் என்ன புரிந்ததோ சுந்து வாயடைத்துப் போனான்.
கமலிக்கு அம்முவிடம் சுதந்திரம் அதிகம்.
“அம்மு .. உன் மனசுல யாராச்சும் இருக்காளா “
வெற்றிலை. தேங்காய்.. பாக்கு.. ஸ்வீட் காராச்சேவு பொட்டலம் சாக்கு சாக்காய் .. நெடி மூக்கைத் துளைத்தது. மணி இரண்டை தாண்டியாச்சு .. எல்லோருக்கும் கை உளைச்சல் .. அம்முவின் ஜோக் சூழலை சுந்து திசை மாற்றி விட்டான். கமலிக்கு என்ன பதில் வரும்..
அம்முவை ஓரக் கண்ணால் பார்த்தோம். சம்மணமிட்டு அமர்ந்திருந்த தேவதை. ஒரு நேர்த்தி அவள் உருவில். செய்தவன் ரசனைக்காரன். கண்களில் மின்னும் குறும்பு அதன் இடத்தை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது. ஒரு சவடாலும் தன்னம்பிக்கையும் எப்போதும் போல ஜொலித்தன.
“ தேடிக்கிட்டு இருக்கேன் கமலி “
“அவன் எப்படி இருக்கணும் அம்மு “
“என் பேச்சைக் கேட்கிறவனா “
அம்மு கொஞ்சமும் தயங்காமல் சொன்னாள் .
கமலிக்கு லேசாய் குரல் பிசிறியது.
“அம்மு .. வேடிக்கையா பேசறது வேற .. சாத்தியமாடி “
“ அழற பிள்ளைதாண்டி பால் குடிக்கும் “
இது ஒரு சம்பவம் தான் . பின்னொரு நாளில் நான் அம்முவைக் கரம் பிடித்தது இந்த யுக்தி தெரிந்ததால்தான் .
அம்மு எங்கே போனாலும் நிழலாய் தொடர்ந்து .. அவள் தேவைகளை அவள் கேட்காமலே நிறைவேற்றி .. இத்தனை நாளாய் அவள் பின்னாலேயே சுற்றுகிறேனே.
மறுநாள் கல்யாணத்தில் கண் எரிந்தது இரவுத் தூக்கம் கெட்டதில். ஆனால் அம்முவுடன் சுற்றுகிற வேலைகளாய் இழுத்துப் போட்டுக் கொண்டதில் உற்சாக ஊற்று.
ஜாதகர்மா.. நாம கர்மா ஆச்சு.. இனி காசி யாத்திரை.. கலர் கலராய் சாத உருண்டைகள் தயார். அப்போதுதான் அந்த சத்தம்.
‘அப்பவே நினைச்சேன்.. சொன்னா இவதான் கேட்கல..’
பிள்ளை வீட்டில் ஆரம்பித்த ரகளை. பேசியதில் இரண்டரை பவுன் குறைவதாய்.
‘போட்டுருவேன்.. இப்போ முஹூர்த்த நேரத்துல தகராறு வேணாம் ‘ பெண்ணின் அப்பா கெஞ்சினார்.
‘ஆரம்பமே பொய்யில ‘
அம்முவும் நானும் அருகில் நின்றிருந்தோம். செய்வதறியாமல். அம்முவுக்கும் வாயடைத்துப் போயிருந்தது.
பட்டைக்கரை வேட்டி.. அங்கவஸ்திரம் எனக்குக் கொடுத்திருந்தார்கள். அரங்கனை ஏளப்பண்ண பந்தாவாக போகலாம் என்று. வெறும் மார்பு.. அதில் புரள்கிற மைனர் செயினுடன் நின்ற என்னை அம்மு பார்த்தாள்.
சட்டென்று முடிவு எடுத்திருக்க வேண்டும். என்னைக் கேட்கக் கூட இல்லை. பாதி அவள் கழற்ற முயல நானும் உடன்பட செயின் இப்போது அவள் கையில்.
“இந்தாங்கோப்பா.. குறையறதுக்கு இதைக் கொடுங்கோ”
கல்யாணம் அந்தப் பக்கம் நடந்து கொண்டிருந்தது. இந்தப் பக்கம் டைனிங் ஹாலில் நானும் அம்முவும்.
“என் மேல கோபமா”
“இல்ல அம்மு.. எனக்குத் தோணல சட்டுனு.. நீ செஞ்சதும் சந்தோஷமாயிருத்து”
“கண்ணா.. உன்னைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்” என்றாள் பளிச்சென்று.
அதே திமிர்.. அதே சவடால்.. அதே பார்வை.. அம்மு அம்முதான்..
சந்தோஷமாய்த் தலையாட்டினேன்.
அம்மு சொல்வதைக் கேட்பதில் என்ன குறை வரப் போகிறது எனக்கு.
--------------------------------------------------------------------------
நன்றி : ஓவியர் மாருதி அவர்கள். கூகிள் உதவி.
(தெற்குவாசலில் கடைத்தெருவில் ஒரு முறை ஓவியர் மாருதி அவர்களைப் பார்த்தேன். மூலைத் தோப்பில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்துப் போனார். அவர் வரைந்த ஓவியம் ஒன்றைக் காட்டினார். குடிக்க பாலும் கொடுத்தார். என் ப்ரிய ஓவியரின் அன்பில் அன்று திளைத்தேன். )

3 கவிதைகள்

காற்றில் அளைகிற கைகளை
இறுகப் பற்றிக் கொள்வதற்காகவேனும்
எதிர்ப்படு.

எட்டிய தூரம் வரை
பார்வை
அதைத் தாண்டிய எல்லைக்கு
மனக் குதிரை
அகப்படாமல்
வித்தை காட்டும் நீ.

ஒரு வார்த்தையில்
மடங்குகிறாய்
ஒரு பார்வையில்
திமிறுகிறாய்
புலன்களின் விசாரணையில்
எப்போதும் நீ.

January 27, 2016

அம்மு 15“உள்ளே வாங்கோ.. அதென்ன விளக்கு வைக்கிற நேரத்துல வாசல்ல நின்னுண்டு போற வரவாகிட்ட வழியறது”
அம்முவின் குரல் கேட்டால் மணி 6 என்று அர்த்தம். உள்ளே விளக்கேற்றியாச்சு. சந்தன ஊதுபத்தி வாசனை காற்றில்.
மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே.. 
அம்முவுக்கு நல்ல குரல். அந்த நாளில் பாடேன் அம்மு என்றால் பிகு பண்ணிக் கொள்ளாமல் எனக்கு மட்டும் கேட்கிற குரலில் பாடுவாள்.
இந்த பாட்டு அந்த பாட்டு என்றில்லை. சினிமாப் பாட்டும். மகாராஜன் உலகை ஆளலாம். இந்த மஹாராணி அவனை ஆளுவாள்..
கண்ணதாசன் வரிகளில் பூடகமாய்ச் சொன்னதை அழுத்தம் கொடுத்து எதிர் பாட்டு பாடினால் சத்தமெழாமல் சிரிப்பாள். கள்ளி.
துரத்தித் துரத்தி காதலித்தோம். பெரியவர்கள் காதுக்குப் போனது. அவள் வீட்டில் அவளை. என் வீட்டில் என்னை.
‘என்னடி / என்னடா நிஜமா’
இந்த விஷயத்தில் ரெண்டு பேருக்கும் குண்டு தைரியம். நேருக்கு நேராய்ப் பார்த்து சொன்னோம்.
‘ஆமா’
‘என்னடி பண்றது இதை’
‘பேசாம பண்ணி வச்சிருவோம்’
அக்ரஹாரக் குழந்தைகள் கூட்டம் எங்களைச் சுற்றி. ஒவ்வொன்றின் முகத்திலும் கொள்ளைச் சிரிப்பு. சும்மாவா.. அம்முவும் நானும்தானே அவர்களது விளையாட்டுத் தோழர்கள். கல்யாணம்.. நலங்கு.. என்று கூட இருந்தவர்களை ராத்திரி பேக்கப் பண்ணுவது கஷ்டமாய் இருந்தது.
“போடா கண்ணா நானும் இருப்பேன்” என்று இரண்டரை வயசு உரிமையாய்த் திட்டியபோது அம்மு சிரித்து விட்டாள். பாவி..
பெரியவர்கள் வந்து அதட்டினார்கள். ம்ஹூம். நான் கெஞ்சினேன் வெட்கத்தை விட்டு. ஊஹூம். அம்மு கவலையே இல்லாமல் ஜாங்கிரியைக் கடித்துக் கொண்டிருந்தாள்.
நாச்சியார் பாட்டிதான் தீர்ப்பு சொன்னாள்.
“இருந்துட்டு போறதுடா.. குழந்தைகள் தானே.. காலைலேர்ந்து லூட்டி அடிச்சிருக்கு,, கொஞ்ச நாழில தூங்கிடும்”
பெரியவர்கள் நமுட்டுச் சிரிப்புடன் நகர்ந்து போனார்கள்.
அம்முவைப் பாடச் சொன்னேன் அப்போதுதான். குழந்தைகளில் ஒன்று என் மடியில். இன்னொன்று அம்முவின் மடியில். இதுவரை உலகம் கண்டிராத சாந்தி முஹூர்த்தம்.
மறுநாள் காலை எங்களைப் பார்த்த பெரியவர்கள் திகைத்தார்கள். என்ன ஒரு ஆனந்தம் எங்கள் முகத்தில். ஆம். அந்த அறையில் ஆளுக்கொரு பக்கமாய் குழந்தைகளுடன் தூங்கிப் போனோம் பாட்டு அலுத்த நள்ளிரவில்.
அம்மு கொஞ்சம் வளர்ந்த குழந்தை என்று தான் என் மனதில் பிம்பம். அதே நினைப்பில் அவளை ஏகத்துக்குத் தாங்கினேன். அவள் கிழித்த கோட்டைத் தாண்டவில்லை. சொன்ன நேரத்தில் வீட்டில் இருந்தேன். கேட்ட பொருளை வாங்கித் தந்தேன். பிடித்த இடங்களுக்கு அழைத்துப் போனேன். முதன் முதல் தள்ளிப் போனபோது நடக்க விடவில்லை. எங்களை விடவும் தெருக் குழந்தைகளுக்கு.
மரணம் என்பது எத்தனை குரூரம் என்று அது முகத்தில் அறையும் போது புரிகிறது. அதுவும் தனக்கு நேரும் போது. அம்முவுக்குப் பெண்குழந்தை என்றதும் அவள் முகம் சுளித்தாளாம். பிரசவம் பார்த்த அம்மாளு சொன்னாள்.
‘அதென்ன அந்தப் புள்ளை பையன் தான் வேணும்னு.. பொண்ணுன்னதும் முகஞ்சுளிச்சுகிட்டு’
அம்முவைத் தனியே பார்த்தபோது சொன்னேன்.
‘இனி இந்த வீட்டில் ரெண்டு அம்மு’
‘ஒண்ணே அதிகம்’
‘உளராதே.. எனக்குப் பெண் வேனும்னு ஆசைப்பட்டேன்.. கொடுத்துட்டார்’
அம்மு உம்மென்று இருந்தாள்.
இன்னும் புண்ணியாகவசனம் ஆகவில்லை. ஏழாம் நாளா.. எட்டா நாளா.. ஞாபகம் இல்லை. நடு ராத்திரி. திடீரென பரபரப்பு. எல்லோரும் அம்முவின் அறைக்கு ஓடினார்கள். எனக்கு தூக்கக் கலக்கத்தில் புரியவில்லை. என்ன ஆச்சு.  ஏன் ஓடுகிறார்கள்..
அம்மா ஓடி வந்து என்னைக் கட்டிக் கொண்டாள். அழுதாள்.
‘என்னம்மா’
‘ராஜா.. என் செல்லமே உனக்கு ஏன் இப்படி’
அப்படியே ஒரு அமைதியின் இருட்டு வீட்டைக் கவிழ்த்து மூடியது. யாரும் பேசவில்லை. உதட்டைக் கடித்துக் கொண்டு.. அம்மு.. உனக்கு ஒண்ணும் ஆகலியே.. அம்மு..
மலர்ந்த ரோஜா. உதட்டில் லேசாய் ஒரு புன்னகை. பாக்கி இருந்த கர்மாவை என் வீட்டில் கழித்து விட்டேன் என்று பெருமிதமாய்.. உள்ளங்கை.. உள்ளங்கால்.. பூக்கள்.. தலை முடி அடர்த்தி.. விரல்கள் எவ்வளவு நீளம்.. வீணை வாசிப்பாள் பின்னாடி..  நம்மை விட உயரமா இருப்பா வளர்ந்தப்புறம்.. உன் ஜாடைதான்.. இல்ல. உங்க ஜாடை.. போடி ஜாடை மாறிண்டே இருக்கும்.. என்ன பேர் முடிவு பண்ணிட்டியா.. உங்க பாட்டி பேரா.. ச்சே.. நல்ல பேரா யோசிப்போம்..
அதற்கெல்லாம் அவசியமே இல்லை. டாட்டா காட்டி விட்டது.  தூளியில் எடுத்துக் கொண்டு போனார்கள். தெருக் குழந்தைகளைத் துரத்துவது பெரும்பாடாகி விட்டது. எதுவும் சாப்பிடவில்லையாம். அழுகையாம். எங்களைப் பார்க்கணும் என்று படுத்தலாம்.
அம்முவைத் தான் எப்படி நேர் செய்வது என்று புரியவே இல்லை. பால் கட்டிக் கொண்டு.. அழுது.. வேணாம்டி.. உனக்கு ஏதாச்சும் ஆயிடப் போகுது..
சரி .. போதும்.. நிறுத்திக் கொள்கிறேன். என் சிலுவையை எதற்கு உங்கள் தோள்களில் சுமத்திக் கொண்டு. நாங்கள் நாங்களாக இன்னும் காலம் கனியவில்லை இத்தனை வருடங்களுக்குப் பிறகும்.
என்னை விடவும் அம்முவை ரொம்பதான் பாதித்து விட்டது. கிட்ட வர விட்டேன் என்றாள். ஏன் மறுபடி தூளிக்குக் கொடுக்கணுமா என்றாள். அப்படி நேராது என்று எல்லோரும் சொல்லிப் பார்த்தாகி விட்டது. ம்ஹூம். கேட்கவில்லை. அதை விடவும் மோசமாய்..என் மீதான சாடல்கள்.
‘அங்கே என்ன பேச்சு’
‘ஒண்ணுமில்லம்மா.. ரேஷன்ல சர்க்கரை என்னிக்குன்னு’
‘ஏன்..அந்தக் குழந்தை ஞாபகமா பால் பாயசம் வைக்கணுமா’
வந்தவர் ஓடி விட்டார்.
‘போனா போன இடம்.. உடனே திரும்பி வரத் தெரியாதா’
‘பூத்ல க்யூ பெருசா’
‘மத்த வீட்டுல பொம்மனாட்டிதானே வந்திருப்பா.. ‘
‘இல்லம்மா.. ரெண்டு பேரும் ‘
‘உங்களுக்கு பேச்சுக்கு அவாதானே’
‘இனிமே நான் போகல’
‘அப்புறம் வேளா வேளைக்கு வக்கணையா காபி குடிக்கணுமே’
அம்முவின் அருகில் போய் தலையின் மேல் கை..
‘எடுங்கோ.. அந்த நினைப்பே இனி வேண்டாம்’
‘அந்த ரேடியோவை அணைங்கோ.. என்ன கருமாந்திர பாட்டு’
டி எம் எஸ் பி சுசீலா பயத்துடன் வாயை மூடிக் கொண்டார்கள். எம் எஸ் வி ஆர்மோனியப் பெட்டியுடன் ஓடினார். கண்ணதாசன் தலையைக் கவிழ்த்துக் கொண்டார்.
ஆச்சு.. காலத்திற்கு என்ன.. இன்னிக்கு உதயமாகிறவன் சாயங்காலம் வரை அம்முவைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு எவ்வித மாற்றமும் இல்லை என்று புரிந்து பெருமூச்சுடன் முகம் சிவந்து ஓடிப் போவான். பௌர்ணமி வீட்டு வாசலில் வரும் போது அஞ்சாறு மேகம் துணையுடன் வந்து வீட்டைக் கடந்ததும் ஸ்ஸ் ஹப்பாடா என்று பெருமூச்சு விடும்.
சில சமயம் மனசிருந்தால் ஒரு ஸ்லோகம் வரும். பாதி ஸ்லோகத்தில் விதி ஞாபகம் வந்து உதட்டிற்கு சீல் வைத்து விடும். அம்முவின் தீனமான அழுகை வாசலில் உட்கார்ந்திருக்கிற என்னைப் பிசையும். கால் பரபரக்கும். எழ விடாமல் கைகளால் அமுக்கிக் கொண்டு உதட்டைக் கடிப்பேன்.
பிடிவாதமாய் பாயில்.. தரையில் தான் அவள் படுக்கை. சாப்பாடு ரசித்து இல்லை. குழந்தைகள் பெரியவர்களாகி வெளியே போய்விட்டார்கள். ஊருக்கு வரும்போது எங்களைப் பார்க்க வருவார்கள். அம்முவின் கண்களில் ஜலம் கட்டிக் கொண்டு கண்ணாடித் திரை தொங்கும். யாரும் பேசிக் கொள்ள மாட்டோம். பத்திரிகை வைக்க யாரும் வருவதில்லை. விசேஷங்களுக்கு அழைப்பு இல்லை.
எனக்கு வருத்தம் இல்லையா என்று கேட்கிறீர்களா.. இருக்கிறது. போனதை விட இருக்கும் அம்முவை நினைத்து. யாராவது ஒருவர் அம்முவை இதிலிருந்து மீட்டு எடுத்தால் மிச்சமிருக்கிற ஆயுசுக்கும் நன்றி சொல்வேன்.

யார் வரப் போகிறீர்கள்..

நன்றி  திரு மணியம் செல்வன்  (கூகிள்)

January 11, 2016

அம்மு 14
”அப்போ நீ எங்க வீட்டு வழியாத்தான் போவே.. சரியா ஏழு மணி. பிரவுன் கலர் பேண்ட்.. கோடு போட்ட ஷர்ட்.. இது அடிக்கடி நீ போடற ட்ரெஸ். பக்கத்து.. எதிர் வீட்டுல எல்லாம் எப்பவோ வாசல் தெளிச்சு கோலம் போட்டிருப்பா. நான் ஏழு மணிக்கு நீ வரும் போதுதான் வாசல் தெளிப்பேன். உன்னைப் பார்க்கணும்னு.”
என் எதிரில் அம்மு. இது அவள் ஆபிஸ். ஆடிட் ஆபிசில் வேலை. ஆடிட்டர் இப்போது வர மாட்டார்.
“லெமன் டீ குடிக்கிறியா”
“உனக்கு எதுக்கு சிரமம்”
“எனக்கு இப்போ டீ குடிக்கிற டைம். உனக்கும் சேர்த்து செய்வேன்.. பிடிக்கும்னா”
“ம்ம்”
மஞ்சள் பந்து இரண்டாய்ப் பிளந்து தன் ஹ்ருதயம் காட்டியது என்னைப் போல. ஒரு சொட்டு என் கன்னத்தில் தெறித்தது. உதட்டில் ஒன்றுமாய்.
பழங்கதை புளிக்குமா என்ன..
பஸ்ஸை விட்டு இறங்கியபோது சற்று முன் நடந்து கொண்டிருந்த அம்மு கண்ணில் பட்டாள். அதே பஸ்ஸில் தான் வந்திருக்கிறாள். எனக்கு இந்த ஏரியா புதுசு. அலுவலக நிமித்தம் வந்திருக்கிறேன். கண்ணைக் கட்டி காட்டில் விட்ட திகைப்பு. நண்பர் சொல்லியிருந்த வழி திடீரெனக் குழப்பியது. இடது பக்கம் திரும்பணுமா.. வலது பக்கமா..
அந்த நிமிஷம் தான் எதிரில் அம்மு.
சாலையைக் கடக்கத் திரும்பியவள் என்னைப் பார்த்து விட்டாள். முதலில் அனிச்சையாய்.. பின் ஞாபக முடிச்சில் ஏதோ நெருட பின் கவனமாய்..
“கண்ணன்”
“அம்மு”
நாங்கள் பிரிந்து பல வருடங்கள் ஆச்சு. இதைச் சொன்னால்தான் தெரியும். இந்த நிமிஷமோ நாங்கள் பார்த்துக் கொண்டபோது.. விட்ட இடத்திலிருந்து பேச்சை ஆரம்பிக்கிற.. நேற்றிரவு சந்தித்துப் பிரிந்து.. இதோ இப்போது மீண்டும் பார்த்துக் கொள்கிற அதே உணர்வு.
அம்முவிடம் நான் எப்போதும் உணர்வது இவ்வித சௌகர்ய நிலை. பிற பெண்கள் போல ‘ஏண்டா என்னை மறந்துட்ட..” என்கிற கூண்டில் ஏற்றுகிற வசனங்கள் கிடையாது.
வந்தியா.. இந்தா இதைச் சாப்பிடு.. பேசு.. நானும் பேசறேன்.. கிளம்பறியா.. சரி போயிட்டு வா..மறுபடி எப்போ வருவ என்கிற கேள்வி இல்லை.
அவள் கண்களில் எப்போதும் அலையடிக்கிற என்மீதான ப்ரியம். பார்வை என் தலை முதல் கால் வரை ஸ்கான் செய்து நான் நலமாய் இருப்பதை உறுதி செய்து கொள்கிற வாத்சல்யம்.. பேசித் திரும்பும்போது விரல் கூட படாத அந்தப் பேச்சின் முடிவில் பார்வையால் அளித்த அழுத்த முத்தம்.
அம்மு…
“கண்ணா.. நிகழுக்கு வா” என்றாள் அம்மு.
“அம்மு.. “
“நீ என்னைத் தேடவே இல்லை.. இல்லியா”
“அப்படி இல்லை.. நான் உன்கிட்ட பேசினது ஞாபகம் இருக்கா”
இந்தக் கேள்விக்குத்தான் முதல் பாரா. அவ்வளவையும் ஞாபக பீரோவைத் திறந்து சொல்லிக் கொண்டே போனாள். இரண்டு வருடமாய் அவளை என் பார்வையால் துரத்தியது.. பஸ்ஸில் என் கவிதை வந்த கணையாழி இதழை அவள் பிரித்து வைத்திருந்தது.. பஸ்ஸை விட்டு இறங்கியவளிடம் என் காதலைச் சொன்னது.. அவள் மென்மையாய் தன் நிலை சொல்லிப் போனது.. பிறகு அவள் ஒரு சிநேகிதியிடம் சொல்லி அனுப்பியது.. ‘என்னை மறந்துரு’
“உன்கிட்ட நான் கேட்ட கேள்விக்கு எவளோ ஒருத்தி.. ஸாரி.. என் கிட்ட வந்து பேசினது எனக்குக் கோபம் அம்மு”
“நீ ரொம்ப டீஸண்ட்டா பேசினதா அவ சொன்னா”
“அவகிட்ட எப்படி என் கோபத்தைக் காட்டறது”
“உன்னை அவ ரொம்பப் புகழ்ந்தா.. என் முடிவு தப்புன்னு திட்டினா”
“ப்ச்.. அது எனக்குத் தெரியாது.. டெல்லிக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு போனேன்.. நானாவே கேட்டு.. அம்மா.. வசந்திலாம் அழுதா.. ப்ரமோஷன் கிடைக்கும் சம்பளம் கூட வரும்னு பொய் சொன்னேன்”
“ஆனா என்னைத் தேடல நீ”
“நீ என்ன ஆனேன்னு யார்கிட்ட போய் கேட்கறது.. நீ குடியிருந்த வீட்டுல வேற யாரோ இருந்தாங்க.. வசந்திகிட்ட நாசூக்கா கேட்டா அவ ஒழுங்கா பதில் சொல்லல”
டீ குடித்த டம்ளரைக் கை நீட்டி வாங்கிக் கொண்டாள்.
“நான் வாஷ் பண்ணித் தரேனே”
“கொண்டா” அவள் குரலில் அழுத்தம். எதிலும் தீர்மானமாய் முடிவு எடுப்பவள்.
”எனக்கு ஒரு பையன்.. உனக்கு”
“பொண்ணு”
“அவ பேர் அம்முவா” லேசான கேலி அவள் குரலில்.
“எதுக்கு.. தெனம் சாகவா”
அம்மு டம்ளர் அலம்புகிற சாக்கில் எழுந்து போய் விட்டாள். நான் உட்கார்ந்திருந்தேன். எனக்குள் லேசான படபடப்பு. என்ன ஒரு நையாண்டி.. என்னை நிராகரித்ததும் இல்லாமல்..
”இப்போ என்ன திடீர் விஜயம்”
“ஆபிஸ் வேலை”
“ம்ம்.. நானும் உன்னைப் பத்தி விசாரிச்சேன்.. நீ டெல்லி போனது.. வசந்திகிட்ட பேசினேன்.. நீ என்னைக் காதலிச்சதையும் சொன்னேன்.. என் நிலையையும்”
“அவ சொல்லவே இல்லியே”
“சொல்லாதேன்னு சொல்ல மாட்டேன்.. உனக்கு அவசியம்னு பட்டா உன் அண்ணன் கிட்ட சொல்லுன்னேன்.. சொல்லியிருக்க மாட்டா”
என்ன ஒரு திமிர். மனிதரைத் தன் இஷ்டத்திற்கு வளைக்கிற சாதுர்யம்.
இன்னொன்றும் எனக்குப் புரியவில்லை. அம்மு என்னை நிஜமாய் நேசித்தாளா.. இது என்ன கண்ணாமூச்சி விளையாட்டு..
“நிறைய புக் படிப்பியே.. இப்பவும் அந்தப் பழக்கம் இருக்கா”
“ம்ம்”
”மூணு வருஷமா கையில வச்சிண்டு சுத்தறேன்.. என்னிக்காவது உன்னைப் பார்ப்பேன்னு தெரியும். மனசு சொல்லிண்டே இருந்தது.. உன்னைப் பார்க்கும்போது தரணும்னு”
கைப்பையில் பேப்பர் பேக்கில் இருந்த புத்தகத்தை எடுத்து என்னிடம் நீட்டினாள்.
“உள்ளே எதுவும் எழுதல.. எழுதணுமா என்ன”
வாங்கிக் கொண்டேன்.
ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள். ரொம்ப இயல்பாய். எதையும் இழக்காதவள் போல. நேரம் ஓடியது. சட்டென்று நிறுத்தினாள்.
”வா.. நீ போகவேண்டிய இடம் பக்கத்துலதான்.. வழி சொல்றேன்”
எழுந்தேன்.
“பைக்குள்ள வச்சிக்கோ”
புத்தகத்தைப் பையில் திணித்துக் கொண்டேன். லிப்டில் இறங்கினோம்.
“உன் ப்லாக் நல்லா இருக்கு.. எழுதறதை விட்டுராதே”
“எப்படித் தெரியும்”
“ஒரு கமெண்ட் போட்டிருந்தேனே..”
அது நீதானா..
“எனக்கு வச்ச இன்னொரு பேர் அது” சிரித்தாள்
தெருவில் நின்று தொலைவில் இருந்த பில்டிங்கைக் காட்டினாள்.
“நாலாவது மாடிலன்னு நினைக்கிறேன்.. அந்த ஆபிஸ்”
என்னை ஒரு தடவை நன்றாகப் பார்த்தாள். ‘போயிட்டு வரேன்’ என்று கூடச் சொல்லவில்லை. சொல்லணுமா என்ன.. திரும்பி அவள் ஆபிசுக்குள் போய்விட்டாள்.
காலச்சக்கரம் ஒரு முறை நன்றாகச் சுழன்று பழைய கண்ணனை மீட்டெடுத்து வந்து மீண்டும் கத்தியால் அழுந்தக் குத்தியது அப்போது.

படம் உதவி கூகிள்  நன்றி திரு. மாருதி அவர்கள்


January 06, 2016

அம்மு - 13

ஆபிஸ் ட்ரெய்ன் என்று 9.15 வண்டிக்கு பெயர். ரெயில்வே ஊழியர்கள் பெரும்பாலும் அந்த பாசஞ்சரில் போவதால். ஜங்ஷனில் இறங்கி ரெயில்வே லைனோடு நடந்து குறுக்குப்பாதையில் போய் (போகிற வழியில் தான் ரெயில்வே கேண்டின்) மெயின் ரோட்டைப் பிடித்தால் எங்கள் கல்லூரி.
ஸ்ரீரங்கம் ஸ்டேஷன் எப்போதுமே பாபுலர். ராக்போர்ட்டோ.. பல்லவனோ.. ராமேஸ்வரமோ.. எந்த வண்டியாய் இருந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விடக் கூடுதலாய் நின்று பயணிகளைப் பத்திரமாய் உதிர்த்து விட்டுப் போகும்.
கல்லூரி நாட்களில் கேட்கவேண்டுமா.. டவுன் ஸ்டேஷனில் இறங்கிப் போகும் ஸ்ரீரங்கம் பெண்கள்.. பிளாட்பார்ம் முழுக்க நாலைந்து பேராய் குழுமி நிற்பார்கள்.
நல்ல பேர் வாங்கிய என்னைப் போல ஓரிரு மடிசஞ்சிகளைத் தவிர மற்ற பையன்கள் என்ன விஷமிக்கலாம் என்று அலைவார்கள். ஜன்னல் இல்லை பெரிய கதவே வைத்த ஜாக்கட் முதுகுக்காரி மேல் மிளகு சைஸ் கல்லை விட்டெறிந்த பாபு அந்நாளில் ஹீரோ.
கல்லடி வாங்கியவள் ஆறடிக்குக் குறையாத உயரம். பெயர் கூட ஷோபாவோ என்னவோ. அவள் அண்ணனும் அதே ட்ரெய்ன். போய் புகார் செய்ய ‘நீ ஒழுங்கா ட்ரெஸ் பண்ணுடி’ என்று மானத்தை வாங்கினான்.
வண்டி கிளம்பியதும் தான் சிலர் ரன்னிங்கில் ஏறுவார்கள். ஒரு முறை நானே லேட்டாகி ஓடி வந்து தொற்றியபோது டவுன் ஸ்டேஷன் போவதற்குள் முழி பிதுங்கி விட்டது. குறிப்பாய் காவிரிப்பாலம் கிராஸ் செய்யும் தருணம். அப்போது மீட்டர்கேஜ் வேறு. தடதடவென்ற சத்தம். கீழே காவிரி (அப்போது) ஆக்ரோஷமாய் ஓடிக் கொண்டிருந்தாள். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணம். டவுன் ஸ்டேஷனில் வண்டி நின்றதும் வேகமாய் உட்பக்கம் நகர்ந்து மூச்சு விட்டேன்.
எங்கள் கல்லூரி ஸ்ட்ரைக்கிற்கு பெயர் போனது. நடந்த நாட்களை விட கல்லெறிந்த நாட்கள் தான் அதிகம். பிளாசா தியேட்டரை குத்தகைக்கு எடுத்தவர்கள் என்கிற கியாதி எங்களுக்கு உண்டு.
சார்லஸ் ப்ரான்ஸன்.. ஷான் கேனரி.. பட் ஸ்பென்சர்.. டெர்ரன்ஸ் ஹில்.. இப்படி என் வாழ்க்கையில் புகுந்தவர்களோடு.. அம்முவும்.
பியு முடித்து விட்டு பிகாம் முதலாண்டில் போனபோது சின்னதாய் பரு வந்தது. சித்தியா கேலியாகச் சிரித்தார். ‘கண்ணனுக்கு ஆசை வந்தாச்சு’
கிளியரிசில் போட்டாலும் அடங்காத தொல்லை. கிள்ளிடாதே என்று அட்வைஸ். ஆசை என்றால் என்ன என்று புரியாத.. மனப் பிரதேசத்தின் ஒரு மூலையில்.. தொட்டிச் செடியில் பூத்த ஒற்றை ரோஜா போல ஒரு படபடப்பு.
ஸ்டேஷனில் முதன் முதலில் ஒற்றையாய் நின்ற பெண் அம்மு. பிற பெண்கள் எல்லாம் தோழியரோடு நின்ற நாட்களில் இவள் மட்டும் தனியாய்.
அதனால் கவனம் ஈர்த்தாள். அலங்காரம் இல்லை. தலை முடி நீளம். பேசும் போது மற்ற பெண்கள் போல ஈசான்ய மூலை பார்ப்பது.. படபடவென்று சிமிட்டுவது எல்லாம் இல்லாமல் நேராய்ப் பார்வை. அவளுக்கு ஒரு தம்பி.. ரெங்கு.. இருப்பது அவள் ஒருநாள் டிபன் பாக்ஸை விட்டு வந்ததில் தெரிந்தது. ஓடி வந்து கொடுத்து விட்டு – பார்த்துப் போடா ரெங்கு – டுர்ரென்று மானசீகக் கார் ஓட்டிப் போனான். அப்போதெல்லாம் பிளாட்பார்ம் டிக்கட் மிரட்டல்கள் இல்லை. கட்டிய வேட்டியுடன் தோளில் துண்டுடன் காலை வாக்கிங் போகலாம் இந்தக் கோடியில் இருந்து அந்தக் கோடி வரை ப்ளாட்பார்மில். கார்ட் தெரிந்தவர். டிக்கட் செக்கர் தெரிந்தவர். எஞ்சின் ட்ரைவர் தெரிந்தவர்.
எப்போதாவது வருகிற வட இந்திய – எப்போதோ குளித்த – பக்தர்களைத் தவிர பெரும்பாலும் வெறிச்சோடிக் கிடக்கிற ஸ்டேஷன். பைப்பைத் திறந்தால் பீச்சியடிக்கும் காவிரி நீர். இருவாட்சி வேணுமாம்மா என்று பூக்காரி நம்பிக்கை இல்லாத தொனியில் கேட்டு கடந்து போவாள். இருவாட்சிப் பூ பார்த்திருக்கிறீர்களா..
அம்மு ஜாதிப்பூ ப்ரியை. அதுவும் லைட் ரோஸ் கலந்த மாதிரி இருக்கிற வாசனை தூக்குகிற ஜாதிப்பூ. (டிஸ்கோ ஜாதி என்றும் சொல்வார்கள். டிஸ்கோ சாந்தி என்று தப்பாகப் படிக்க வேண்டாம்). தெரியாமல் நான் இருவாட்சி வாங்கிக் கொடுத்து.. அம்மு எனக்கு ஜாதிப்பூ தான் பிடிக்கும் என்று முகத்திற்கு நேராய் சொன்னதும் நீட்டிய பூக்கையுடன் விழித்த நாள் இன்னும் மனசில் அழியாக் கோலமாய்.
அது ஒரு விபரீத நாள். முதல் பீரியட் கிடையாது. அமாவாசை என்பதால். ஆனால் நாங்கள் வழக்கம் போல ஆபிஸ் வண்டிக்குக் கிளம்பி விடுவோம். ரெயில்வே கேண்டினில் ரெண்டு இட்லி ஒரு மக் சாம்பார் வாங்கிக் கரைத்துக் குடித்து விட்டு மப்பில் வகுப்பிற்குப் போவோம். ரெயில்வே ட்ராக்கில் நடந்த போது பாபு சவால் விட்டான்.
நான்.. பாபு.. சுந்து.. சிவா நால்வரும் ஒரு செட். டிராக்கிலிருந்து தனியார் பகுதி வழியே (இரும்பு வேலி பிரித்து) நடந்தபோது ஒரு பச்சைப் பாம்பு அப்பிராணியாய் ஓடியது.
அடிரா பாம்பை.. என்று பாபு கத்தினான்.
பாவம்டா.. அது விஷம் இல்லை இது நான்.
எங்கள் சர்ச்சையில் அது புதருக்குள் மறையப் போனது. பாபு அடித்து விட்டான் அதற்குள். கடைசியாய் என்னை ‘நீயுமா’ பார்வை பார்த்த பிரமை.
பாபு சீண்டினான். “கண்ணன் கிட்ட ஒரு கல்லு கொடுடா. அவனும் அடிக்கட்டும்”
”வேணாம்டா” கெஞ்சினேன்
எங்க ப்ரெண்ட்ஷிப் வேணுமா வேண்டாமா
மிரட்டினான். 99 சதவீதம் செத்திருந்த பாம்பின் மேல் என் கல் பட்டது.
”அட.. கண்ணனுக்குக் கூட துணிச்சல் வந்தாச்சு”
“அப்போ டெஸ்ட் பண்ணிர வேண்டியதுதான்”
“நம்ம ஸ்டேஷன்ல நிக்கிதே.. அந்த ஒத்தைக் கிளி.. அவகிட்ட போய் நீ பேசணும்”
“போடா.. என்னால முடியாது”
”நாளைக்குப் பேசற”
என்னைத் தனியே விட்டு முன்னால் போய்விட்டார்கள். பின்னால் துரத்திக் கொண்டு ஓடினேன்.
மறுநாள். இன்னும் கூட்டம் சேரவில்லை. ஒவ்வொருவராய் வருகிற நேரம். அம்மு வந்து விட்டாள். நாங்களும். ’போடா.. போய்ப் பேசு’
கால்கள் துவண்டன. வார்த்தை வராமல்  தந்தியடித்தேன். பார்வையால் கெஞ்சினேன். ‘போ’ 
அம்முவை நெருங்கி…
“என்னடா கண்ணா” என்றாள் ஸ்பஷ்டமாய்.
“க.. க..”
“வசந்தி அண்ணா தானே நீ”
“ஆ.. ஆமா”
“இன்னிக்கு உங்காத்துக்கு வரேன்னு சொல்லு”
எப்படித் திரும்பி வந்தேன் என்று புரியவில்லை. பாபு என்னைப் பார்த்த பார்வையில் பொறாமை தெரிந்தது. பெரும்பாலும் அவன் வாய்ச் சவடால் தான். கூசாமல் ஏ கதைகள் சொல்வான். தெருப் பெண்களுக்கு பட்டப் பெயர் வைப்பான். கோழி என்று ஒரு முறை யாரையோ அழைத்து அடி வாங்கினான்.
”என்னடா சொன்னா”
“சாயங்காலம் எங்காத்துக்கு வராளாம்”
“நாங்களும் வரோம்”
சொன்னபடி அம்மு வந்தாள். வசந்தியும் அவளும் கேமிரா ரூமில் (அதற்கு ஏன் அந்தப் பெயர் என்று இன்று வரை தெரியாது. ஒரே இருட்டாக இருக்கும். அக்கம்பக்க குழந்தைகளை வைத்துக் கொண்டு பேய்க் கதைகள் சொல்ல எனக்கு அந்த அறைதான் வசதி) பேசிக் கொண்டிருந்தார்கள்.
பாபு சைக்கிளில் வந்தான்.
“அவங்க வரலியா”
“நான் மட்டும்தான் வந்தேன்.. எங்கே அவ”
“வேணாம்டா போயிரு”
பாபு ‘மாமி’ என்றழைத்துக் கொண்டு என்னை விலக்கி உள்ளே போனான்.
வசந்தி “அம்மா இல்லை.. கோவிலுக்குப் போயிருக்கா” என்று சொன்னது கேட்டது. நானும் உள்ளே ஓடினேன்.
“தேர்த்தம் குடேன்”
“மர பீரோ மேல சொம்புல இருக்கு. எடுத்துக்கோ”
அம்மு கிளம்புகிற வரை பழியாய் வாசலில் என்னைப் பிடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தான். அம்மு வெளியே வந்தாள்.
“அம்மு.. நானும் அந்தப் பக்கம் தான் போறேன்.. கொண்டே விடட்டுமா” என்றான் பட்டென்று.
அம்மு அவனைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை. போய்விட்டாள். போகுமுன் என்னை ஒரு முறை முறைத்து விட்டு.
பிளாசாவிற்கு படம் போய்விட்டு.. கரண்ட் போய்.. அப்புறம் படம் போட்டு வீடு திரும்ப இருட்டி விட்டது. அம்மு எதனால் லேட் என்று இப்போது  ஞாபகம் இல்லை. ஸ்டேஷனில் அவளும் இறங்கினாள்.
“நில்லுங்கோ”
நின்றேன்.
“உங்கம்மா உங்களை ரொம்ப நம்பியிருக்கா.. சகவாசம் சரியில்லை உங்களுக்கு.. பார்த்துக்குங்கோ”
என் கண்களைப் பார்த்து சொன்னாள். போய் விட்டாள்.
அன்றிரவு நான் படிக்க ஆரம்பித்தேன். அந்த மாத டெஸ்ட்டில் நான் வாங்கிய மார்க்கை வசந்தி சொல்லியிருக்க வேண்டும் அம்முவுக்கு.
‘பூ வாங்கித் தரீங்களா எனக்கு’ என்றாள் போகிற போக்கில்.
இருவாட்சி வாங்கிப் போனேன். ஜாதிப் பூ பிடிக்கும் என்று தெரிந்தது. பிகாம் முதல் வகுப்பில் தேறிய இருவரில் நானும் ஒருவன். கிளியரிசில் பிறகு உபயோகிக்கவில்லை. காஸ்டிங் பண்ணுங்கோ என்றாள். டால்மியா சிமெண்டில் கல்லூரி மூலமாய் இண்டர்வியூவிற்கு அழைப்பு வந்த ஏழு பேரில் நானும் ஒருவன்.
அம்முவின் மார்க்கிற்கு மத்திய அரசு வேலை கிடைத்து விட்டது. சென்னை போஸ்டிங். நாலு வருஷம். எங்கிருக்கிறாள் என்று தெரியாத நாட்கள். என்ன முயற்சித்தும்.
‘எனக்கு ரொம்ப முடியலைடா’ என்று அம்மா வற்புறுத்தி.. கல்யாணமாகி பெரிய மனுஷியாய் இருந்த வசந்தியும் கிடுக்கிப் பிடி போட லதாவின் கழுத்தில் தாலி கட்டினேன்.
சமீபத்தில் அம்முவைப் பார்த்தேன். அவள் ஆபிசில். லிப்ட் கதவு திறந்து நான் வெளியே வந்தபோது சற்று தொலைவில் அம்மு. வயசாகி இருந்தாலும் அதே நேர்ப்பார்வை. கம்பீரம். ‘கண்ணா’
“எப்படி இருக்கீங்க”

“இருக்கேன் அம்மு”

(படம் உதவி கூகிள்.  நன்றி திரு மணியம் செல்வன்)

January 05, 2016

அம்மு 12


சக்கரத்தாழ்வார் சந்நிதிக்கு முன் ஒரு மேடை அ திண்ணை இருக்கும். ஸ்ரீரங்கவாசிகளுக்கு அது பரிச்சயம். பிரதட்சிணம் முடித்து வருபவர்கள் அதில் அமர்ந்து விட்டு போவார்கள். பியூன் எப்போதாவது அதில் உட்காருவார். வழக்கமாய் ஓரிருவர் அதில் மூலையாய் உட்கார்ந்து ஜபிப்பார்கள்.
எனக்கு படிப்பு முடித்து வேலை கிடைக்காத சமயம். அம்மா தொணதொணவென்று சொல்லிக் கொண்டிருப்பாள். போடா.. சக்கரத்தாழ்வாரைச் சுத்து.. ஒரு மண்டலம்.. வேலை கிடைக்கலன்னா சொல்லு.
இது யாரோ அம்மாவுக்கு மந்திரித்து விட்டது. அம்மா வெகுளி. யார் சொன்னாலும் அப்படியே நம்பி விடுவாள்.
உங்காத்து பூஜை ரூம்ல ரெட்டை விளக்கு ஏத்து..
ஒரு மட்டைத் தேங்காயை ஆஞ்சநேயர் சந்ந்தில வேண்டிண்டு கட்டிட்டு வா அப்புறம் சொல்லு காரியம் நடக்கலன்னா
ஆத்து வாசல்ல.. ஆத்தைப் பார்த்துண்டு நில்லு.. வலது கை.. ஒரு சிட்டிகை சர்க்கரை.. தரையில போடு.. எண்ணி முப்பதே நாள்.. நீ நினைச்சது நடக்கும்.
காட்டழகிய சிங்கர்ட்ட போ.. அவன் கால்ல விழு. நீதான்னு சொல்லிட்டு வந்துரு. ஜாம் ஜாம்னு வேலை தேடி வரும்..
அப்பளம் இடும்போது கண்ணீர் விட்டால் உப்புக் கரிக்கும்மா என்று கிண்டல் செய்தால் கேட்க மாட்டாள். ஊறுகாய் கை வலிக்கக் கிளறுவாள். கை முறுக்கு ஸ்பெஷலிஸ்ட் என்று புகழ்ந்தால் போதும். ஒரு சம்புடம் நிறைய முறுக்கு சுத்தி எடுத்துண்டு போவாள்.
எங்கே விட்டேன்.. ஆங்.. சக்கரத்தாழ்வார்.. இதை ஜபிக்கச் சொல்லு.. ஓம் க்ரீம் க்லீம் க்ருஷ்ணாய.. கோவிந்தாய.. கோபி ஜன வல்லபாய.. என்று யாரோ கிறுக்கி எழுதிக் கொடுத்ததை என் கையில் திணித்து விரட்டி விட்டாள். சந்தி வேளையில் ஜபி என்று.
முதலில் நெருடியது. தப்பாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். தாடி வைத்த மாமா ஒருத்தர் என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
‘என்னடா சொல்றே’
‘மஹா சுதர்சன மந்திரம்’
‘சொல்லு..’
சொன்னேன். தலையில் அடித்துக் கொண்டார். தப்பா சொல்கிறேனாம்.
பிழை திருத்தி 108 தடவை சொல்ல வைத்து விட்டு போனார். சேவிக்க வந்தவர்கள் வேடிக்கை பார்த்து நின்றதில் மானம் போனது. அம்மாவிடம் போய்ச் சொன்னால் கோவில் திக்கைப் பார்த்து கண்ணீர் விடுகிறாள்.
‘நன்னாப் பார்த்தியா அவரை.. சட்டுனு மறைஞ்சிருப்பாரே’
‘இல்லம்மா.. நடந்து போனார்’
‘போடா.. உன் கண் பார்வை மறையறவரை அப்படி.. அப்பவே அந்த மாமி சொன்னா.. ரொம்ப உசத்தியான மந்திரம்டி.. கை மேல பலன் கிடைக்கும்னு.. உனக்கு அவரே மாறு வேஷத்துல வந்து உபதேசம் பண்ணிட்டு போயிருக்கார்’
எனக்கே குழம்பியது. அதற்குப் பிறகு அவரை நான் பார்க்கவே இல்லை என்பதால் குழப்பம் நிரந்தரமாக என்னில் தங்கி விட்டது. ஆனால் அவர் தான் என் வாழ்க்கையில் ஒரு புது அத்தியாயத்தை உண்டாக்கியவர்.
அம்மு..
“பட்சணம் பண்ற மாமி வீடு இதானே”
ஒண்டுக் குடித்தன ஸ்டோர் முன் நின்று அந்த ரெட்டை ஜடை கீச்சுக் குரலில் கேட்கவும் அம்மா என்னை விரட்டினாள்
“போய்ப் பாருடா யாருன்னு”
அரை மனதாக எழுந்து வந்தேன்.
“பட்சண மாமி..”
“எங்கம்மா பேர் வசந்தா”
“ஸாரி.. பேர் தெரியாது.. அவங்களைப் பார்க்கணும்” என்றாள்.
கூடவே என் மீது குறுகுறுவென்று ஒரு பார்வை. பொழுது போகாமல் கொள்ளிடக்கரையில் இருந்த ஜிம்முக்கு போவேன். கர்லாக் கட்டை சுழற்றி.. தம்ஸ் எடுத்து.. சட்டை போடாத பளிச் மார்பில் அவள் பார்வை பதிந்ததும் அவசரமாய் உள்ளே ஓடினேன்.
“உன்னைப் பார்க்கத்தான்”
இட்லி மாவுக் கையுடன் அம்மா வந்தாள். ஒரு துண்டைப் போர்த்திக் கொண்டு பின்னாலேயே நானும்.
“100 கைமுறுக்கு வேணும்.. பாப்பா மாமி உங்களைப் பார்க்கச் சொன்னா..”
“எப்போ “
“நாளைக்குக் கார்த்தால”
அப்போதே இருட்டத் தொடங்கி விட்டது. அம்மாவுக்கு என்னைக் கோவிலுக்கு விரட்டவேண்டிய நேரம். அம்மா யோசிக்கவும் வந்தவள் வேகமாய்ச் சொன்னாள்.
“பாப்பா மாமி ஸ்பெஷலா சொல்லச் சொன்னா.. “
“ம்ம்.. சரி,, அட்வான்ஸ் இருக்கா”
கையில் சுருட்டி வைத்திருந்த நோட்டுகளை நீட்டினாள். அம்மா முகத்தில் ஜோதி தெரிந்தது.
“கார்த்தால வா.. ரெடியா இருக்கும்”
அம்மா வேகமாய் உள்ளே போக வந்தவள் என்னைப் பார்த்தாள்.
“உங்களுக்கு ஒரு அதிர்ஷ்டம் இருக்கு”
என்ன சொல்கிறாள்..
“அன்னிக்கு உங்க மந்திரத்தைத் திருத்தம் சொன்னவர் பெரிய உபாசகராக்கும்”
ஓ.. இவளும் வேடிக்கை பார்த்த கூட்டத்தில் ஒருத்தியா..
“கண்ணா.. இங்கே வாடா”
அம்மாவின் குரல் கேட்டது.
“கண்ணன்.. ம்ம்.. பேர் நன்னா இருக்கு”
சுழற்றித் திரும்பியவளின் ஜடையில் ஒன்று என்  மேல் பட்டுப் போனது.
இரவு தூங்கப் போனபோது மணி ரெண்டு. அம்மா அப்படியே சரிந்து விட்டாள். நான் எடுத்து பத்திரப் படுத்தி வைத்து விட்டு வாசல் திண்ணைக்கு வந்தேன். வழக்கமாய் நான் படுக்கும் மூலை காலியாய் இருந்தது. அடித்துப் போட்ட மாதிரி வலி. எப்போது தூங்கினேன்.. தெரியவில்லை..
“மாமி.. “
அம்முவின் குரல் கேட்டு திடுக்கிட்டு விழித்த போது நன்றாக விடிந்திருந்தது. அம்மா அம்முவிடமிருந்து காலி சம்படங்களை வாங்கிக் கொண்டு உள்ளே போனாள். முறுக்கை நிரப்பிக் கொண்டு வந்தாள்.
கனத்தோடு தூக்க முடியாமல் அம்மு திணறவும் அம்மா சொன்னாள்.
“போடா.. அவாத்துல கொடுத்துட்டு வா”
“பரவாயில்ல மாமி.. ஒண்ணொண்ணா எடுத்துண்டு போறேன்”
“இருக்கட்டும். அவன் எடுத்துண்டு வருவான்”
இரண்டையும் இரண்டு கையில் ராமலட்சுமணர்களைச் சுமப்பது போல எடுத்துக் கொண்டு அவள் பின்னால் போனேன். ஒரு ஜடை தட்டிப் போன இடத்தை அடுத்த ஜடை தட்டும் போது சுவாரசியமாய் இருந்தது பின்னாலிருந்து பார்க்க.
அம்மு அதன் பின் அடிக்கடி கண்ணில் பட ஆரம்பித்தாள். கோவிலில்.. சாத்தார வீதி பூச்சந்தையில்.. துலா ஸ்நானத்தில்.. ரெங்கன் புறப்பாட்டில்..
நாலு வீதியும் சுற்றி வந்து திருவந்திக் காப்பு சேவித்து விட்டுத்தான் போவாள். ஆண்டாள் ரெங்கா என்று பிளிறும்போது அவள் கண்கள் ஜொலிக்கும் அழகே தனி.
ஓம் ஐம் க்ரீம் க்லீம்.. அம்மு எனக்குக் கிடைப்பாளா பெருமாளே.. கோபி ஜன வல்லபாய.. வேலை கிடைச்சதும் அம்முவைக் கல்யாணம் பண்ணிக்கணும்..
சேவார்த்திகள் வரும் திசை பார்த்து உட்கார்ந்து ஜபிக்கப் போக.. (ஒருவேளை.. அம்மு வருவாளோ இப்போ) தெற்கைப் பார்த்து உட்காராதே.. திரும்பு என்று தெரிந்த மாமி அதட்டி விட்டுப் போனாள்.
டவுன் ரோட்வேய்ஸில் கணக்கு எழுதும் வேலை கிடைத்தது. கோவிலில் எடுபிடி வேலைக்குப் போய் பழகி இருந்ததிலும்.. அவ்வப்போது ரெங்கனை ஏளப்பண்ணதிலும் என் சௌகர்யத்திற்குப் போய் கணக்கு எழுதலாம் என்கிற வசதி வந்தது. ‘கண்ணனைக் கூப்பிடு.. சேவை பண்ணி வைக்க’ என்று முதலாளி.. அவருக்கு வேண்டியவர்களை.. அவருக்குக் காரியம் ஆகிற வேலைகளுக்கு.. என்னோடு அனுப்பி வைத்து.. மூலஸ்தானத்தில் கணையை எடுத்து உள்ளே நிறுத்தி ‘நன்னா சேவிச்சுக்குங்கோ’ என்று ஒரு தடவைக்கு ரெண்டு தடவை கைவிளக்கு காட்டி.. வளர்த்துவானேன்.. என் கையிலும் காசு புழங்க ஆரம்பித்தது.
அம்மாவுக்கு எடுத்த கருநீலப் பட்டுப் புடவை.. அம்மா அழுதாள்.
எனக்காடா.. எனக்காடா..
உனக்குத்தாம்மா..
உன் ஜபம் உன்னைக் கைவிடலடா..
அப்போதுதான் அம்மு வந்தாள். புடவை கட்டியிருந்தாள் தாவணிக்குப் பதிலாக. கையில் நாலு மூலையும் மஞ்சள் தடவிய பத்திரிகை.
“அம்மா.. உங்களுக்கு நானே கொண்டு வந்து என் கையால தரணும்னு”
என்னைப் பார்க்கக் கூட இல்லை. வந்தாள். கொடுத்தாள். நமஸ்கரித்தாள். போய் விட்டாள்.
அம்மாதான் கல்யாணத்திற்குப் போனாள். பட்டுப் புடவை கட்டிக் கொண்டு.
ரோட்வேய்ஸ் முதலாளி கார் எடுத்துக் கொண்டு வந்து அம்மாவிடம் கேட்டிருக்கிறார். கண்ணன் வரவே இல்லியே.. என்னாச்சு.
வரலியா.. அம்மாவுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கும்.
வேலைக்குப் போகாம எங்கடா போற..
தலை கவிழ்ந்து பதில் சொல்லாமல்.. சாப்பிடாமல் படுத்துத் தூங்கிப் போகிறவனைத் திகைப்புடன் பார்த்தாள்.
’இப்போ அவனுக்கு நேரம் சரியில்லை.. ஒரு மண்டலம் சக்கரத்தாழ்வாருக்கு..’
அம்மா தினமும் என்னை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு வருகிறாள். சக்கரத்தாழ்வார் திண்ணையில் உட்கார வைக்கிறாள். முடிந்தவரை பிரதட்சிணம் செய்கிறாள். தீர்த்தம் கையில் வாங்கி வந்து என் முகத்தில் தெளிக்கிறாள். திரும்ப அழைத்துக் கொண்டு போகிறாள்.
நிச்சயம் எனக்காக இல்லாவிட்டாலும் அம்மாவுக்காக.. அம்மாவின் நம்பிக்கைக்காக.. நான் சரியாகி விடுவேனாம். தெரு சொல்கிறது.
அவன் நிச்சயம் நல்லா இருப்பாம்மா.. என்கிட்ட வேலைக்கு வருவான்.. எனக்கு நம்பிக்கை இருக்கு.. வீடு தேடி மாசாமாசம் வந்து.. வேலை பார்க்காமலே என் சம்பளப் பணத்தைக் கொடுத்து விட்டுப் போகிறார் ரோட்வேய்ஸ் முதலாளி.

திண்ணையில்தான் இப்போதும் என் படுக்கை. நடுத் தூக்கத்தில் நான் அம்மு என்று முனகுவதை.. நல்லவேளை.. யாரும் கேட்கவில்லை இதுவரை.