March 13, 2010

என்னுயிர்த்தோழி


கடவுளர்கள் எல்லோரும் நல்ல மூடில் இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் சியாமளியை சந்தித்திருக்க முடியாது.

முதலில் என் சுபாவம் பற்றி சொல்லி விடுகிறேன். என் வாயிலிருந்து வார்த்தையைப் பிடுங்குவது கஷ்டம். மௌனி. மனசுக்குள் பேசிக் கொண்டிருப்பதில் சுகப்படுபவன். தவறி வெளியில் பேசிய தருணங்களில் விரோதம் சம்பாதித்தவன். அதனாலேயே மனசுக்குள் பேச்சு.

பழைய சினிமாப் பாடல்களில் (தமிழ்) ஆர்வம். நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன் என் மகாராணி உனைக் காண ஓடோடி வந்தேன்.. என்னையும் அறியாமல் வாய் விட்டுப் பாடி இருக்க வேண்டும்.

சியாமளியின் சிரிப்பு கேட்டது.எங்களுடையது ஒண்டுக் குடித்தனம். மொத்தம் பதினைந்து குடும்பங்கள். வீட்டின் வாசல் ஒன்றுதான். நடுவில் வெட்ட வெளி. கிணறு. கிணற்றைச் சுற்றி ஒரே சமயத்தில் பத்து பேர் குளிக்கலாம்! வட்டமாய் சிமெண்ட்டில் கிணற்றைச் சுற்றி பீடம்.கழிவறை கடைக் கோடியில். வாசலில் நீர் நிரம்பிய வாளி இருந்தால் உள்ளே ஆள் என்று அடையாளம். தவிப்போடு காத்திருக்க வேண்டும். பெண்களுக்கு தனி.

'ப' வடிவத்தில் வீடுகள். முன்னால் சிமெண்ட் பிளாட்பார்ம். எல்லா வீட்டு வாசல்களிலும் சின்னப் பெண்களின் தலை சீவிக் கொண்டு அம்மாக்கள் வம்பளப்பதை என் வீட்டு வாசலிலிருந்து பார்க்கலாம்.

அம்மாவுக்கு நான் ஒரே பையன். பெண் வாடை இல்லை. அப்பா சமையல் தொழில். பட்சணங்கள் கொண்டு வருவார் சில நாட்களில். அம்மாவின் தேர்வுக்கு ஏற்ப அவ்வப்போது எந்தெந்த வீட்டுக்கு தருவது என்கிற பட்டியல் மாறும். வீடுகளுக்கு போய் பட்சணம் தருவதும் அந்தந்த வீட்டு அம்மாக்கள் என் முன் அம்மாவைப் புகழ்வதும் என் கன்னத்தை செல்லமாய் கிள்ளுவதும் வாடிக்கை. அவரவர் வீட்டுப் பெண்கள் அப்படித்தான் எனக்கு அறிமுகம்.

பத்து பதினைந்து வருடங்களாய் வீடு மாற்றாமல் இருப்பதும் உண்டு. வந்து கொஞ்ச நாட்களிலேயே காலி செய்து கொண்டு போவதும் உண்டு. பொதுவாய் அத்தனை பண வசதி இல்லாதவர்களின் புகலிடம் இந்த ஸ்டோர். (அப்படித்தான் எங்கள் குடியிருப்பு சொல்லப் பட்டது) இதுவே மாடர்ன் உலகில் பன்மாடிக் குடியிருப்பாகி விட்டது!

சியாமளி புதிதாய் வந்தவள். எங்கள் வீட்டுக்காரருக்கு தூரத்து உறவாம். 'அவங்களுக்கு வாடகையே கிடையாது' என்று கிசுகிசுக்கப்பட்டது. அடுத்த மாசமே சியாமளியின் அம்மா என் அம்மாவிடம் வந்து கைமாற்றாக ஐம்பது ரூபாய் வாங்கிக் கொண்டு போனாள். வாடகை தருவதற்காக. அதற்கும் இதர குடித்தனக்காரர்கள் பதில் வைத்திருந்தார்கள். 'அவ்வளவும் பொய்.. திரிசமன்' அந்த வார்த்தை இப்போதும் புழக்கத்தில் இருக்கிறதா தெரியவில்லை.

சியாமளியின் அம்மாவிடம் நல்லதாய் இருந்த இரண்டு புடவைகளும் தையல் போடப்பட்டவை. மற்றவை ஆங்காங்கே கிழிந்தவை. பிறகு சியாமளிக்கு தாவணியாகிவிடும் பாக்கியத்திற்கு உள்ளானவை.

அம்மாவின் மனசில் கடவுள் குடிபுகுந்தார்.

அப்பாவின் பலவீனமான தருணத்தில் 'பாவம்னா அந்தப் பொண்ணு.. உடுத்திக்க நல்ல டிரெஸ் இல்ல' என்று சொல்லி சின்னாளம்பட்டில் பாவாடையும் சுமாரான தாவணியும் (கலர் எடுப்பு) வாங்கிக் கொடுத்தாள். கூடவே சியாமளியின் அம்மாவும் நமஸ்காரம் செய்து வாங்கிக் கொண்டு போனார்கள்.

இதன்பின் எனக்கான அந்தஸ்து சற்று உயர்ந்தது.

சியாமளி அவளுக்குக் கிடைக்கும் தின்பண்டங்களை சேமித்து வைத்து என்னோடு பகிர்ந்தாள்.

அடுத்த குடித்தனக்காரர்கள் திணறலோடு செய்வதறியாமல் அம்மாவின் பக்கம் பாதி எதிர்த்தரப்பாக மீதி என்று பிரிந்தார்கள்.

பண்டிகை நாட்கள் தவிர துக்க தினங்களில் ஒரு நெருக்கடி வந்து விடும். தொண்ணூறு வயசுத் தாத்தா செத்துப் போனபோது எனக்கு தேர்வு. ஒரு பக்கம் விசும்பல் சத்தம். நான் சரியாகப் படிக்காத பகுதிகளை நினைத்து தேம்பிக் கொண்டே படித்ததை அம்மா பல நாட்கள் சொல்லிக் கொண்டிருந்தாள்.

'அந்த தாத்தான்னா அவனுக்கு உசுரு. அழுதுண்டேதான் படிச்சான்'

சியாமளி படிப்பை நிறுத்தி விட்டதாய் சொன்னாள்.

எனக்குக் கஷ்டமாய் இருந்தது. அம்மாவிடம் சொன்னேன்.

'பாவம். படிப்பும் இல்லாம, உறவும் இல்லாம என்ன செய்வா?'

'நாம என்னடா பண்ணமுடியும்'

இதற்கு என்னிடமும் பதில் இல்லை. ஒரே இடத்தில் ஒண்டுக் குடித்தனம் இருக்கும் நாங்கள் பரஸ்பரம் உதவி செய்ய எந்த சாத்தியமும் இல்லைதான்.

சியாமளிக்கு கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருந்தது. முதலில் பாடங்களை அப்படியே படித்து அவளுக்குப் புரிய வைக்க முயன்றேன். அதில் அலுப்பு வந்தபோது சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்தேன். கணக்கு சொல்லிக் கொடுத்தேன். சில பாடல்கள். சரித்திரக் கதைகள். எனக்குக் கிடைத்த கதைப் புத்தகங்கள்.

சியாமளியிடம் அவ்வப்போது ஒரு சுணக்கம் தெரிந்தது. கூட்டுக்குள் சென்று விடுகிற நத்தை போல. என்ன பேசி இழுக்க முயன்றாலும் வெளியே வராமல்..

சியாமளியின் அம்மா என் அம்மாவுடன் வந்து பேசிக் கொண்டிருந்தாள்.

'காய் நறுக்கறது.. கூடமாட ஒத்தாசை செய்யறது.. ஆள் வேணும்னா சொல்லுங்கோ.. நான் வரேன்'

அப்பாவிடம் சிபாரிசு செய்யப்பட்டது. அம்மா சொன்னபோது அப்பா முகத்தைச் சுளித்தார்.

'அதெல்லாம் கஷ்டம்டி'

'என்ன கஷ்டம்.. எப்படியும் ஆள் வேணும். இந்த மாமியைக் கூட்டிண்டு போங்கோ'

அரைமனதாகத் தலையசைத்தார்.

இரண்டு,மூன்று மாதங்கழித்து மாமியும் சியாமளியும் புதுத் துணிகள் கொண்டு வந்து காட்டினார்கள்.

'நல்லா இருக்கா சொல்லுங்கோ'

அம்மாவின் முகத்தில் தெய்வீகப் புன்னகை. நலிந்த குடும்பம் இன்று தன்னால் நல்ல நிலைமைக்கு வருகிறது என்கிற பிரகடனம் எதுவுமின்றி 'அவள் உழைப்பு.. அதன் பலன்' என்று யோசித்தமாதிரி அருள் வாக்கு.

நான் அப்பவே சொன்னேனே..உங்க கஷ்டம் எல்லாம் விடிஞ்சிரும்னு

சியாமளி என்னைப் பார்த்த பார்வையில் அபரிமிதமான பிரியம் தெரிந்தது. நானும் அவளும் பேசிக் கொண்ட போதெல்லாம் எங்கள் வருங்காலம் தனித்தனியே எப்படி இருக்கும் என்கிற விவாதம் நிச்சயம் உண்டு.

எனக்குக் கிடைத்த நல்ல தோழி என்கிற இமேஜ் என்னுள் இருந்தது. என் மனம் விட்டு என் கவலைகள், அச்சங்கள், எதிர்பார்ப்புகள், திட்டங்கள் எல்லாம் பகிர்ந்தேன். அவள் எதுவும் பதில் சொன்னதில்லை. நான் சொல்லும்போது கேட்டுக் கொண்டிருப்பாள். அதுவே எனக்கு ஆறுதலாய் இருந்தது.

எனக்குக் காலாண்டுத் தேர்வில் மார்க் குறைந்திருந்தது. அம்மாவின் முகத்தில் பயம் வெளிப்படையாகத் தெரிந்தது.

'என்னடா.. நீ நல்லா படிச்சு வேலைக்குப் போவேன்னு எதிர்பார்த்தேன்.. மண்ணள்ளிப் போட்டுருவியா'

'இல்லம்மா'

அதற்கு மேல் என்னால் எதுவும் சொல்லமுடியவில்லை.

சியாமளி என் அழுகையைப் பார்த்து பதறிப் போனாள்.'

உன் படிப்புல கவனம் சிதறிப் போனது என்னாலயா'

'இல்ல.. நான் நல்லாத்தான் எழுதினேன்'

'இனிமே என்னோட நீ பேச வேண்டாம்'

அதிர்ந்து போனேன்.

'அடுத்த பரிட்சைல நல்ல மார்க் வாங்கிட்டு வா..'

அது ஒரு அதிர்ச்சி வைத்தியம் என்று நினைத்தேன். நான்கு மணிக்கு எழுந்து படித்தேன். பலமுறை எழுதிப் பார்த்தேன். சியாமளி என் கண்ணிலேயே படவில்லை. அம்மாவுடன் உதவிக்குப் போகிறாள் என்று நினைத்தேன்.

என் கிளாஸ்மேட் குமார் இந்த சமயத்தில் உதவியாய் இருந்தான்.

'நீ ஒப்பி.. நான் கேட்கறேன்.. அப்புறம் நான் சொல்றதை நீ கேளு..'

அரையாண்டுத் தேர்வில் நானும் குமாரும் முதலிரண்டு இடங்கள்.சியாமளிக்கு பிராகிரஸ் ரிப்போர்ட் காட்ட ஓடி வந்தேன்.

வீடு பூட்டியிருந்தது.

"அம்மா.. சியாமளியைக் காணோம்.."

"அவங்க காலி பண்ணி போயாச்சே"

"எப்ப"

"பத்து நாளாச்சு.. உங்கிட்டே சொல்லச் சொன்னா.. நாதான் மறந்துட்டேன்.. நீ குமார் வீட்டுக்குப் படிக்கப் போயிருந்தே"

எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.

"கையில என்னடா"

அம்மாவிடம் கொடுத்தேன். முகம் மலர்ந்து போனது.

"ஹப்பா.. பகவான் கண்ணைத் திறந்துட்டார்.. நீ என்னை ஏமாத்தல"

ஆனால் அப்பா எங்களை ஏமாற்றிவிட்டார். ஒரு வாரம்.. பத்து நாட்கள்.. வீட்டுக்கு வரவே இல்லை.

கூடவே போகிற சுப்புணியைக் கேட்டோம்.

"அப்பா வரவே இல்லியே.. வெளியூர்னாக்கூட சொல்லுவாரே.."

சுப்புணி தலையைக் குனிந்து கொண்டார்.

"சொல்லுங்கோ.. அவர் எங்கே"

"வந்து.."

அவ்வளவும்நாடகம்.அப்பாஅரங்கேற்றியது.

எங்கள் சக குடித்தனக்காரர்களுக்குப் புரிந்த விஷயங்கூட எங்கள் மரமண்டைக்கு எட்டாமல் போயிருந்தது.

அப்பாவின் பெண். அந்த மாமி அப்பாவின் இன்னொரு மனைவி. நடுவில் ஒரு சிக்கல் நேர்ந்த போது அப்பாவுக்கு வேறு வழி தெரியவில்லை. பக்கத்திலேயே கொண்டு வந்து வைத்து விட்டார். பிறகு வேறு இடம் பார்த்து மாற்றி விட்டார். மாமி வாடகை வாங்கிக் கொண்டது 'அந்த' உரிமையில்தான். இல்லாமையில் அல்ல!

"யாராச்சும் ஒருத்தரோட இருங்கோ.. பொண் குழந்தையை வச்சிண்டு நான் அல்லாடறேன்"

சியாமளியின் அம்மா நியாயத்தீர்ப்பு வழங்கச் சொன்னதும் அப்பா எந்த அறிவிப்பும் இல்லாமல் போய்விட்டார்.

சுப்புணி கை கூப்பினார்.

"என்னை மன்னிச்சிருங்கோ.. சாடை மாடையா நான் முன்னால சொன்னப்போ.. நீங்க புரிஞ்சிக்கல.. எனக்கும் உடைச்சு சொல்ல முடியல.. எனக்கும் குடும்பம் இருக்கு. அவர் பார்த்து வேலை கொடுத்தாத்தான்.. என் புத்திக்கு தனியா போய் சமாளிக்க முடியாது.. அவர்கிட்டேயும் சொல்லிப் பார்த்தோம்.. நியாயமா.. எங்க வேலையான்னு தீர்மானிக்கச் சொன்னார்.. விட்டுட்டோம்.."

ஓடிப் போனார். பாவம் அவர் என்ன செய்ய முடியும்..கதவை மூடிக் கொண்டு எதுவும் சாப்பிடாமல் அன்றிரவு முழுவதும் விழித்திருந்தோம்.

அம்மா ஐந்து மணிக்கே கிணற்றடியில் குளித்து விட்டு வந்து விட்டாள்.

"நீ என் பேச்சைக் கேட்பியாடா.."

அழுகையுடன் தலையாட்டினேன்.

"முடிஞ்ச வரை படி..எனக்காக இல்ல"

அம்மா இப்போது வீட்டு வேலைக்குப் போகிறாள். சமையலும் செய்து, துணி துவைத்து உலர்த்தி..வீட்டு வேலைகள்.

அம்மாவிடம் இப்போது நல்ல புடவைகள் இல்லை. இருப்பதும் ஒட்டுப் போட்டவை. சுமங்கலிப் பிரார்த்தனைக்கு அழைத்து வருடத்தில் ஓரிரு புடவைகள் கிடைத்து விடுகின்றன. இல்லாத 'அப்பா'வால் அம்மாவுக்குக் கிடைத்த அந்தஸ்து!

அதன் பின் நான் சியாமளியைச் சந்திக்க முயற்சிக்கவே இல்லை.


16 comments:

அமைதிச்சாரல் said...

அருமையான சிறுகதை.படிக்கும்போதே மனசு கலங்குகிறது.பாராட்டுக்கள்.

padma said...

கு ப ரா வின் ஜாடை தெரிகிறது .ரொம்ப நல்ல இருக்கு

VAI. GOPALAKRISHNAN said...

//அம்மா இப்போது வீட்டு வேலைக்குப் போகிறாள். சமையலும் செய்து, துணி துவைத்து உலர்த்தி..வீட்டு வேலைகள்.
அம்மாவிடம் இப்போது நல்ல புடவைகள் இல்லை. இருப்பதும் ஒட்டுப் போட்டவை. சுமங்கலிப் பிரார்த்தனைக்கு அழைத்து வருடத்தில் ஓரிரு புடவைகள் கிடைத்து விடுகின்றன. இல்லாத 'அப்பா'வால் அம்மாவுக்குக் கிடைத்த அந்தஸ்து!//


கதையின் முடிவு என் மனத்தைக் கலங்க அடிக்கிறது.
யாருக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது, சார் !

அம்பிகா said...

நல்ல நடை, தொய்வில்லாமல் கொண்டு சென்றிருக்கிறீர்கள்.

ஜீவன்சிவம் said...

தலை பின்னீட்டிங்க....நான் ஏதோ சுயசரிதையோன்னு நினைச்சேன்...கதை அருமை.
இப்படி கூட நடக்குமா என்ன

Chitra said...

கதையின் கருவை விட, கதையின் எழுத்து நடையில் காட்சிகளை கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள். அருமை.
வாழ்த்துக்கள்!

VAI. GOPALAKRISHNAN said...

நம் உயிர்த்தமிழில் நேரிடையாக அடிக்கும் முதல் கடிதம். கதை மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

ஐயா...உம்ம கையில் உள்ளது பேனாவா இல்ல..?.காமிராவா...?

செந்தில் நாதன் said...

அருமை..தொய்வே இல்ல.. அழகான வரிகள்..

ரெம்ப பிடிச்சு இருந்தது..

Nanum enn Kadavulum... said...

மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் எழுத்து, உங்கள் எழுத்து.
உங்கள் மெயில் ID தெரியாததால், இங்கேயே நன்றி சொல்கிறேன்...
என் எண்ணங்களை எட்டிப்பார்த்ததற்கு.

ரமேஷ் கார்த்திகேயன் said...

சிறுகதை நல்ல இருக்கு .
ஆனா முடிவு எதிர்பார்த்த ஒன்று தான்

thenammailakshmanan said...

சில ஆண்கள் இப்படி நடந்து கொள்வது அதிர்ச்சியாகத்தான் இருக்கு.. ரிஷபன் நல்ல உயிர்த்துடிப்புள்ள நடை..

அமிர்தவர்ஷினி அம்மா said...

பட்.. பட்.. நு அடுத்தடுத்த காட்சிகளாய் நகர்த்துகிறீர்கள் கதையை.

மனதில் ஒட்டிக்கொண்ட கதை.

மஞ்சுபாஷிணி said...

கதையின் தலைப்பு “ என்னுயிர்த்தோழி “ பார்த்ததும் கதை படிக்கும் ஆர்வம் மேலிட வாசிக்கத் தொடங்கினேன்.

எளிமையான இயல்பான சகஜமாக நடுத்தரவர்க்கத்தினரின் வாழ்க்கை முறையை மிக அழகாய் தொடுக்கப்பட்டிருந்தது…..


சமையல் வேலைக்கு போகும் அப்பா….. அப்பா கொண்டு வரும் பட்சணத்தை அம்மா அங்கு ஒண்டுக்குடித்தனம் இருப்போருக்கு பகிர்ந்துக்கொடுக்கும் நல்லமனதை படிக்கும்போதே அம்மாவின் மேல் வாசிப்போருக்கும் அன்பும் வாத்ஸல்யமும் தோன்றியதில் வியப்பில்லை.

கதையின் நாயகன் மௌனி என்பதற்காக கொடுத்த உவமை மிக அருமையாக இருந்தது… ” மௌனி. மனசுக்குள் பேசிக் கொண்டிருப்பதில் சுகப்படுபவன். தவறி வெளியில் பேசிய தருணங்களில் விரோதம் சம்பாதித்தவன். அதனாலேயே மனசுக்குள் பேச்சு.” உண்மையே…. பேசாது நமக்குள் இருக்கும் வார்த்தைகளுக்கு நாம் எஜமான். வாய்த்தவறி சிதறவிடும் வார்த்தைகள் நமக்கு எஜமானனாகிவிடும். அதற்கு இடம் கொடுக்காமல் மௌனியாகவே இருப்பது சிறப்பு…. அருமையான விஷயம்…


ஆரம்பம் முதல் வரியே அட்டகாசம்… கடவுள்கள் நல்ல மூடில் இருந்திருப்பதைச்சொன்னது…..
புதிதாக குடித்தனம் வந்த தாய் மகள் பற்றி அக்கம் பக்கத்தினர் பேசும்போது அந்த பேச்சில் அம்மா தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாமல் இருந்தது அவரின் அன்பு குணத்தை பிரதிபலிக்கிறது. கைமாற்றாக 50 ரூபாய் கேட்டபோது பாவம் உதவின்னு வந்து கேட்கிறாளே “ கனிவான மனசு “ உடனே தன் கணவரிடம் வாங்கித்தருவதில் இருந்து அம்மாவின் இரக்க மனசு தெரிகிறது….
பிள்ளை இரண்டும்கெட்டான் வயசு…. இயல்பாய் அந்த வயதில் அழகாய் கொஞ்சம் சிரித்து உரிமை எடுத்துப்பேசும் தன் வயதுடைய பெண்களிடம் பேசவும் நட்புக்கொள்ளவும் முயற்சிக்கும் வெள்ளந்தி குணம் பிள்ளைக்கு….

சியாமளி திண்பண்டம் சேமித்து வைத்து தருவது ரசிக்க வைத்த துணுக்கு….90 வயது தாத்தா இறந்துவிட்டபோது படிக்காத பகுதி எல்லாம் தேர்வுக்கு விசும்பிக்கொண்டே படித்தது… குட்டி குட்டி துணுக்குகள் ரசிக்க வைத்தவை…

மஞ்சுபாஷிணி said...

அம்மாவின் மனதில் கடவுள் குடிபுகுந்தப்பின் சியாமளியின் அம்மாவுக்கும் சியாமளிக்கும் தேவையான நல்லவைகள் நடக்க ஆரம்பித்தது தானாகவே சின்னாளம்பட்டு பாவாடையும் தாவணியும் (எடுப்பான கலரில்) அப்டின்னா இந்த கதை 1960 ல நடந்தது போல் எழுதி இருக்கு….

அசத்தல்…. அம்மாவின் அம்மாஞ்சித்தனமோ? யாருமே இத்தனை உதவிகள் செய்யமாட்டார் தான் கஷ்டப்படும்போது இன்னொருத்தருக்கு துணி எடுத்துக்கொடுப்பது….


ஒண்டுக்குடித்தனம் என்று சொல்லி நிறுத்தாமல் அதன் காரண காரியங்களை மிக சிறப்பாக விவரித்தது மிக மிக அருமை… அதை ஸ்டோர் என்றும் இப்போது பன்மாடி குடியிருப்பு, காமன் டாய்லெட், பிரைவேசி இல்லை என்றாலும் யாருக்காச்சும் எதுனா அவசரம் என்றால் உதவுவதும், புரளி பேசுவதும் வெகு இயல்பாய் கதையில் சொல்லி இருக்கு….


கூடமாட ஒத்தாசைக்கு சமையல் வேலைக்கு கூட்டிச்செல்ல சொன்ன அம்மாவின் நல்ல மனசு….. அதனால் சியாமளி வீட்டில் கொஞ்சம் சுபிக்ஷம் கூடியதும்…. சம்பாதித்ததைப்பற்றி அம்மாவிடம் சொல்லும்போதும் அதே கருணை… தன்னால் தான் இத்தனை நல்லவை என்று அறியாமல் அவள் உழைப்பு அவளின் இந்த வசதி… எத்தனை அம்மாஞ்சி இந்த அம்மா…

சியாமளியின் நட்பினால் பிள்ளையின் படிப்பில் பின்னடைவு வந்துவிட அதன்பின் சியாமளியின் பாராமுகத்தால் ஒரு உத்வேகத்துடன் படித்து நல்ல மதிப்பெண் பெற்றதை காண்பிக்க வந்த சந்தோஷம்…. அதற்குள் கதைக்குள் ஒரு ட்விஸ்ட்…

யாருமே எதிர்ப்பார்க்காத ஒரு பயங்கர ட்விஸ்ட்…. படிக்க படிக்க முகம் தெரியாத சியாமளியின் அம்மா மீது கோபம் பீறிட்டு எழுகிறது…. முகம் தெரியாத அம்மாவின் நல்ல மனசை நினைத்து கலங்குகிறது… எத்தனை துரோகம் அப்பா செய்தது….

தன் இரண்டாவது மனைவியையும் மகளையும் தன் கண்பார்வையிலேயே வைத்துக்கொள்ள நினைத்த மஹானுபாவர் எப்படி தன் மனைவிக்கு செய்யும் துரோகத்தை மறந்தாரோ?  தன் பிள்ளைக்கு இந்த விஷயம் தெரிய வந்தால் எத்தனை இகழ்வாய் நினைப்பான் என்பதை எப்படி மறந்தார்?

மஞ்சுபாஷிணி said...

இரண்டு மனைவிகளுமே வேலைக்கு போகாதவர்கள். நியாயமாக தன் தவற்றை தன் மனைவியிடம் சொல்லி ஒப்புக்கொண்டு மனைவியின் மனதில் என்ன இருக்கிறது என்பதைக்கூட அறிய முயலாத கையாலாகாத அப்பா…. பெண் குழந்தை பெத்து வெச்சிருக்கேன் என்ற வார்த்தை அப்பாவை முழுமையா சியாமளியின் அம்மாவிடம் சரண் அடையவைத்து சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போக வைத்ததே? என்ன நம்பிக்கையில் இந்த காரியம் செய்திருப்பார்?
நல்லவேளை பிள்ளை ஏமாற்றவில்லை…

ரிஷபனின் ஸ்டைல் ஒவ்வொரு வரிகளிலும் நச்..….நீ என்னை ஏமாத்தல்… ஆனால் அப்பா ஏமாற்றிவிட்டார்….
இருவரும் அண்ணன் தங்கை என்பது தெரியாமல் இருந்தாலும் நட்பில் இருவரின் நாட்கள் ஓடிக்கொண்டிருக்க இந்த இடி…

நீ என் பேச்சை கேட்பியா? நல்லா படி எனக்காக இல்லை… அழுத்தமான வரிகள் இதெல்லாம்…
அதன்பின் அம்மாவின் நல்ல மனசு வைராக்கியத்தில் வைரமாகிவிட்டது.

வீட்டு வேலைக்கும் சமையலுக்கும் போய் குழந்தையை நல்லா படிக்கவெச்சு முன்னுக்கு கொண்டு வந்துருவா என்பதில் வாசிப்போருக்கும் மன உறுதி ஏற்பட்டுவிட்டது…
தான் நல்லது செய்யப்போய் இப்ப அம்மாவின் ஒட்டுப்போட்ட புடவைப்பற்றி படிக்க படிக்க மனம் கனமானது, நல்லது கூட செய்வது தவறோ என்று யோசிக்கவைக்கிறது… உதவினால் தனக்கே பெரும் பாவம் வந்து சேருமோ என்று பதறவைக்கிறது…
அருமையான கதை ரிஷபா….

யோசனைகள் எப்போதும் உயிர்ப்புடையவை…. யோசனையில் விளையும் கருவோ சில பேரின் வாழ்க்கையின் நிதர்சனம் உரைக்கிறது சத்தமாக….இப்படி கதை வடிவில்….

தலைப்பை பார்த்து ரசித்து வாசிக்க ஆரம்பித்து மனம் கனத்து பின் தெளிந்து உறுதியானது அம்மாவின் வைராக்கியமான செயலைக்கண்டு… ஹாட்ஸ் ஆஃப் ரிஷபா… அன்புநன்றிகள் கதையாக நினைத்து படிக்க முடியாத அளவுக்கு என்னவோ செய்கிறது மனதை…..

கதையில் உயிர் இருக்கிறது… படைத்த கதாபாத்திரங்கள் உயிரோடு கண்முன் நடமாடுகின்றனர்…. கதை எழுதிய ரிஷபன் கண்முன்னே மனம் பதற காட்சிகள் நடப்பது போல விவரித்திருப்பது க்ளாஸ்…….

அன்பு வாழ்த்துகள் ரிஷபா…