August 02, 2010

அழகு

ஈஸ்வரிக்கு லேசாய் திக்குவாய். அதுவும் சரளமாய் அரட்டை அடிக்கிற சிநேகிதிகளோடு நிற்கையில் இன்னமும் வாய் மூடிப் போகும்.

“ஈஸ்வரி. நீ என்ன சொல்றே? அஜீத்தா.. அப்பாஸா.. யார் அழகு?"

“அ…அ…”

"அஜீத்தா"

"அப்பாஸா"

சிநேகிதிகளிடையே பரபரப்பு மிகும். யாருடைய கை வலுக்கிறது என்று. ஈஸ்வரி சொல்ல நினைத்ததே வேறு.

“அதைப் பற்றி என்னை ஏண்டி கேட்கறீங்க” என்ற வரியின் முதல் எழுத்தோடு நிற்பாள்.

“அவளை விடுங்கடி. சினிமாவுக்கே வரமாட்டா. டிவில இசைக் கச்சேரி கேட்கிறவ."

ஈஸ்வரியை ஒதுக்கி அரட்டை தொடரும். சிநேகிதிகளின் பேச்சில் அவள் லயிப்பாள்.

தனிமையில் ஈஸ்வரி துளித் தடங்கல் இன்றிப் பேசுவாள், பாடுவாள், மனசுக்குள்! ஈஸ்வரிக்கு நீள விரல்கள். வீணை வாசிக்கலாம்; அபிநயம் பிடிக்கலாம். இல்லை, ஈஸ்வரிக்கு அதில் எல்லாம் பரிச்சயம் இல்லை. மத்தியதர குடும்பத்தின் மூன்றாவது பெண் பிரஜை. எந்த செலவுமே அவசியத்தின் அடிப்படையில்.

அக்காக்கள் இருவருக்கும் மணமாகி தலா ஒரு குழந்தையுடனும் இரண்டாவது அக்கா மட்டும் சற்றே அவசரப்பட்டு இன்னொரு கர்ப்பம் தாங்கியும் நிற்கிறார்கள்.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை யாராவது ஒரு அக்கா தன் குழந்தையுடன் வந்து ஒரு வாரம், பத்து நாட்கள் தங்கிப்போவது வழக்கம்.

அதாவது ஒரு வருடத்துக்கு முன்பு.

இப்போது இரண்டாவது அக்கா மட்டுமே வருகிறாள்.

முதல் அக்கா மனஸ்தாபப்பட்டுக் கொண்ட கதை விசித்திரம்.

வழக்கம் போல குழந்தையுடன் முதல் அக்கா வந்த நேரம். பெட்டி நிறைய புதுப் புடவைகள். பொங்கலுக்கு வாங்கியது, தீபாவளிக்கு, திருமண நாளுக்கு, பிறந்த நாளுக்கு… கிளிப்பச்சையில் பூக்களிட்ட அந்தப் புடவை ஈஸ்வரியை கவர்ந்தது. எடுத்து மேலே போட்டு அழகு பார்த்தாள். எழுந்து போய் கண்ணாடி முன் நின்றாள். கடைசியாய் கேட்டும் விட்டாள்.

”அக்கா... நான் ஒரு தடவை கட்டிக்கவா” என்றாள் திக்கல்களின் இடையே.

”ச்சீ... பைத்தியம். இதுக்கெல்லாம் பர்மிஷன் கேட்டுக்கிட்டு...”

அன்று மாலை அக்காவின் புடவையைக் கட்டிக்கொண்டு ஈஸ்வரி நின்ற நேரம் பின்பக்கமாய் வந்தவனுக்கு ஈஸ்வரி என்று தெரியவில்லை.

”ச்... ச்.. ச்சீ... வி.. வி.. விடுங்க" என்றதும்தான் அவள் தன் மனைவி இல்லை என்று புலப்பட்டு இருக்கிறது.

அதே சமயம் அங்கே வந்த அக்காவுக்கோ தவறாகத் தோன்றிவிட்டது. ஈஸ்வரியின் மீது கோபமாய்த் திரும்பியது.

“இவ ஏன் பேசமா நிக்கறா. சத்தம் போட்டிருக்கலாமிலே..”

"என்னடி உஷா... அவளுக்குத்தான் சட்டுனு வேகமா பேச வராதுன்னு உனக்குத் தெரியாதா?'

”திமிறிக்கிட்டு ஓடக் கூடவா முடியாது...”

ஈஸ்வரி வேறு யாருடைய புடவைக்கும் அதன் பின் ஆசைப்படவில்லை. அக்காவின் பேச்சு வேறேதோ சுய சோகத்தின் காரணம் என்றாலும் பலி தன் மீது என்றதில் அரண்டு போனதின் விளைவு.

இரண்டாவது அக்கா கல்பனா, இரண்டாவது டெலிவரிக்கு வந்திருக்கிறாள் இப்போது. முதல் குழந்தை சுஜி ஏற்கிற அழகு.

”அ... அப்படியே.. அ... அத்தான் ஜாடை” என்றதும் கல்பனா முகத்தில் லேசாய் இருட்டு.

ஈஸ்வரி தன் குழந்தையை கொஞ்சுவது இயல்பான 'சித்தி -மகள்' உறவு என்ற உணர்வு தொலைந்து வேறேதோ அநாவசியக் கற்பனைகள். இதற்குத் தூபமிட்டது உஷாதான்.

”நாம நினைக்கிற மாதிரி அவ ஒண்ணும் அப்பாவி இல்லைடி. சரியான... நம்ம ரெண்டு பேருக்குமே நல்ல வாழ்க்கை அமைஞ்சு போச்சு. அதுல பொறாமை. பாரேன்... ராத்திரி எத்தனை நேரம் ஆனாலும் எழுந்திருச்சு போக மாட்டா... நம்ம வீட்டுக்காரர் கூட அரட்டை... பேச்சே வராது... இதுல... ஈன்னு இளிச்சிக்கிட்டு...'

பெண்கள் அத்தனை சுலபமாய் தங்களுக்குள் சமாதானம் காண்பதில்லை. ஓர் ஆணுடனான உறவுகளில் தெளிவான தீர்வும் பழக்கமும் கொள்பவர்கள் சக மனுஷியுடன் உள்ளூர முரண்பட்டே நிற்கிறார்கள்.

ஈஸ்வரியை கல்பனாவிற்கும் பிடிக்காமல் போனது. முதல் இரு சகோதரிகளுக்கும் ஈஸ்வரிக்கும் இடையே ஏழு வயது வித்தியாசம். பிரசவ அலுப்புகளில் தளர்ந்து வேறு உபாதைகள் ஆக்கிரமித்த இருவரும் இளையவளின் செளந்தர்யம் காட்டிய பிரமிப்பில் உள்ளுக்குள் ஆடிப்போனார்கள்.

ஈஸ்வரிக்கு இது விநோதமாய் இருந்தது. அவளுக்குத் தெரிந்து சிநேகித குடுமபங்களில் சகோதரிகள் சிநேகிகளாகவே பழகுகிறார்கள்.

”எ... எனக்கு.. ம... மட்டும்...”

மனசுக்குள் தேம்பிய போது திக்கல் வந்தது, முதன் முறையாய். இன்னமும் அதிகமாய் கூட்டுக்குள் ஒடுங்கினாள். வீட்டில் இருப்பதைவிட வெளியில் சிநேகிதிகளின் மத்தியில் பாதுகாப்பாய் உணர்ந்தாள்.

அசோக் அவளைப் பெண் பார்க்க வந்தான். பிடித்து விட்டதாம். அவன் அம்மா ஈஸ்வரியை அருகில் அழைத்து அமர்த்திக் கொண்டாள்.

"ஏன் 'ஷை' யா இருக்கே.. அசோக் பெரிய வாயாடி தெரியுமா..."

ஈஸ்வரிக்கு கண்ணீர் தளும்பியது.

“கடவுளே, என்னைக் காப்பாற்று”

“என்னடா அவ கூடத் தனியா பேசணும்னு சொன்னியே...”

அசோக் நிமிர்ந்து ஈஸ்வரியின் அப்பாவைப் பார்த்தான்.

"ஸார் உங்களுக்கு ஆட்சேபணை... இல்லேன்னா..."

"என்ன ஈஸ்வரி..." என்றார் அப்பா அவளிடம். 'சம்மதம் சொல்' என்கிற தோரணையில்.

ஹாலில் பெரியவர்கள் பேசிக் கொண்டு இருந்தார்கள். கதவு திறந்துதான் இருந்தது. அறைக்குள் ஜன்னலை ஒட்டிய இருக்கையில் அசோக் அமர்ந்தான். பக்கத்தில் இன்னொரு இருக்கை.

"உட்கார். ரெண்டே நிமிஷம். உன்னோட குரலைக் கேட்கணும். பிரத்யேகமாய் எனக்காக எதாவது ரெண்டு வார்த்தை. சம்பிரதாயமாய் என்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்லாதே. நீ சொல்லாமலேயே எனக்குத் தெரியும்..." குறும்பு கண்களில் மின்னப் பேசினான்.

"வேறேதாவது சொல். அடுத்த எலெக்ஷன் சீக்கிரத்திலா... பிடிச்ச சினிமா... ரசிச்ச கவிதை... ஏதாவது சினிமா பாட்டு ரெண்டு வரி 'ஹம்' பண்ணு... ஏதாச்சும்... ப்ளீஸ்..."

ஈஸ்வரி நிமிர்ந்தாள். கண்களில் நீர் கோலிக் குண்டு போல வர்ண ஜாலம் காட்டியது.

'எனக்குத் திக்கும்' என்று அவனுக்கு எவரும் சொல்லவில்லையா.தெரிந்தால் என்ன சொல்லுவான். வேகமாய் வெளியே பொய் 'மறைச்சுட்டீங்க. ஸாரி... எவ்ரிதிங் கேன்சல்டு...' என்றா!!

"பேசேன் ஈஸ்வரி..."

அசோக் ஆர்வமாய் அவளைப் பார்த்தான்.

"எ... எனக்கு... பே... பேச... தி... திக்கும்..."

மெல்லிய உதடுகளின் இளஞ்சிவப்பு அசைவுகள் என்ன செய்ததோ... அசோக் பிரமிப்பாய் அவளைப் பார்த்தான், கண்களில் மின்னலுடன்.

"நீ பிரேக் பண்ணி பேசறது எவ்ளோ அழகா இருக்கு... ஜ லவ் யூ மோர்..."

சில நேரங்களில் எதுவுமே அழகாகி விடுகிறது.

(தமிழ் அரசியில் பிரசுரம்)

19 comments:

க ரா said...

அருமை ரிஷபன் :)

Rekha raghavan said...

.


கதையும் சொன்ன விதமும் அழகு.


ரேகா ராகவன்.

Unknown said...

நல்லா இருக்கு. கடைசி வரி தேவையில்லை.

அம்பிகா said...

சரளமான நடை. நல்லாயிருக்கு ரிஷபன்.

பனித்துளி சங்கர் said...

நல்ல இருக்கு நண்பரே .

vasu balaji said...

லவ்லி:)

ஹேமா said...

ஒரு கதை எழுத எப்படித்தான் கருத் தேடி எடுப்பீர்களோ.எதுவுமே அத்துப்படிதான் உங்களுக்கு ரிஷபன்.

Chitra said...

மத்தியதர குடும்பத்தின் மூன்றாவது பெண் பிரஜை. எந்த செலவுமே அவசியத்தின் அடிப்படையில்.


..... ரெண்டே வரிகளில், சொல்ல வேண்டிய குடும்ப சூழ்நிலையை எத்தனை அருமையாக சொல்லி விட்டீர்கள்....
...beautiful story!

பத்மா said...

super super ...
kalakkureenga rishaban sir

Anonymous said...

simply superb ..thanks for sharing

வெங்கட் நாகராஜ் said...

அழகு! உங்களுக்கு உரிய பாணியில் அழகிய கதை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

உங்கள் தொகுப்பினில் படித்த வெகு நாட்களுக்குப் பிறகு ப்ரேக் கொடுத்து மீண்டும் படித்ததில் மீண்டும் கிளிப்பச்சை நிறத்தில் பூப்போட்ட அந்தப்புடவையுடன் ஈஸ்வரியைப் பார்த்தது போலவும், மீண்டும் படபடப்பில்லாத அவள் பேச்சைக் கேட்டது போலவும், எனக்கே மிக அழகாக உள்ளது - உங்கள் கதை.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஈஸ்வரியின் திக்கு வாயே அவளுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை சம்பாதித்துக் கொடுத்து விட்டது.பலே..பலே..
அந்த ஈஸ்வரி மட்டும் ஊமையாய் இருந்து விட்டால்...அடடா..அவன் ரொம்ப கொடுத்து வைத்தவன்!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஒரு இருபத்திமூன்று வருசம் முன்னால் இது நடந்திருக்கக் கூடாதா? ஹூம்..எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேண்டும்!!!

குட்டிப்பையா|Kutipaiya said...

அருமை ரிஷபன் :)
எந்த ஒரு குறையும் குறையல்ல என் சொல்லும் உங்கள் கதைகள் அனைத்தும் மிக அருமை..தொடருங்கள்!

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

எது அழகு என்பது இன்று வரை எவருக்கும் விளங்காத ஒன்று. மனம் ஒன்றை விரும்பி விட்டதென்றால் எதுவும் அழகுதான். அருமையான கதை. பத்திரிகைகள் நல்ல சிறு கதைகளுக்கு இப்போதெல்லாம் முக்கியத்துவம் அளிப்பதில்லை. இணையம் அதற்கு வழி வகுத்திருக்கிறது. நிறைய எழுதுங்கள். சிறுகதைக் காதலர்கள் பின் தொடர்வார்கள்.

கே. பி. ஜனா... said...

சில நேரங்களில் எதுவுமே அழகாகி விடுகிறது! ஆம்!

Anonymous said...

மிக அழகு

பொன்கார்த்திக் said...

யோவ் அருமை :-))