August 06, 2010

துக்கம்

"யாராவது ஒருத்தர் வந்திருக்கலாம்" என்றாள் பூரணி, அழுகை ஒய்ந்த பிறகு.

எதிரே நாங்கள் உட்கார்ந்திருந்தோம். நானும் என் மகளும். பூரணியின் மடியில் என் பேரன் அசோக். கைகளில் முறுக்குத் தீனி.பால் வாங்க சண்முகம் வெளியே போனான். காலைப் பால் மிச்சம் இருந்ததில் காப்பித் தண்ணீர் கலந்ததில் தொண்டை நனைந்தது. அழுகை விட்டு இப்போது பேச்சு.

பூரணியின் தலைமுடி கோடாலி முடிச்சாய் முடியப்பட்டிருந்தது. நெற்றியில் திருநீறு. அது என்னவோ முகம் சட்டென்று அதன் வசீகரம் இழந்து அசட்டுக் களை தட்டி விடுகிறது. முன்பு பார்த்த பூரணி இல்லை.

"எந்திரிடா……. அத்தை மடியில ஒக்காந்து என்ன தொவையல்?"

வடிவு அதட்டினாள்.

"அட…… இவன் ஒக்காந்தா நான் தேய்ஞ்சுருவேன் பாரு. விடுவியா"

என் மனக் கஷ்டம் அதிகரித்துக் கொண்டே போனது. தப்புத்தான். வராமல் போனது. தகவல் என்னவோ உடனே வந்து விட்டது. ஆறு மணி நேரப் பயணம். இருந்தால் என்ன? போன் இருக்கிறது. தகவல் சொன்னால் காத்திருப்பார்கள். பத்தாம் நாள் காரியத்துக்கு மட்டும் வந்து பூரணி இப்போது குறை சொல்கிற மாதிரி நேர்ந்திருக்காது.

"எல்லாரும் வந்திட்டாங்க.. எடுக்கவே வுடாம அழுகை. சொல்லி சொல்லி அழுதாங்க".

பூரணிக்கு மீண்டும் கண்ணீர் பூத்தது.

."ஏதோ எஞ்சோகம்னு தோணலே….. அண்ணாச்சி. ஊரே கலங்கி நின்னப்ப….. நீங்க வரலியேன்னு……. ஒங்க முகம் பார்த்து தெம்பு வந்திருக்கும்….."

குறை சொல்வது போல இல்லாமல் ஒரு ஏக்கம் போலப் புலம்பினாள்.எழுந்திருந்து ஓடிப்போக வழியின்றி எனக்கு நானே போட்டுக் கொண்ட கட்டுக்குள் ஒடுங்கியிருந்தேன்.

"வடிவும் மாப்பிள்ளையும் வருவாங்கன்னு நினைச்சோம்"

இம்முறை மகள் வடிவின் மீது வார்த்தைப் பாய்ச்சல். என்போல அவள் பதறவில்லை.

"எப்ப சொந்த பிசினஸுன்னு அவரு ஆரம்பித்தாரோ…. அவரு வீட்டுக்கு வர்றப்பதான் கணக்கு.. எந்த நேரமும் அலைச்சல். அப்ப நான் மட்டுந்தான்….. இவனை இழுத்துக்கிட்டு தனியா வந்திருக்கணும்….. அவரு கொணம் ஒங்களுக்கே தெரியும். வீட்டை பூட்டிக்கிட்டு எங்கே போனேன்னு ரப்ச்சர் பண்ணுவாரு. இதுவே அவரு இருந்திருந்தா கதையே வேற. கார் வச்சுக்கிட்டு வந்திருவாரு" என்றாள் பாதிப் பெருமையுடன்.

என்னால் இதுபோல் சாமர்த்தியமாய் பேச வராது. நிச்சயம் என் மீதுதான் தப்பு என்று உள்ளுக்குள் குமைவேன்.சண்முகம் பால் செம்புடன் உள்ளே வந்தான்.

"காபியப் போடுரா… நல்ல காப்பியா குடிக்கத் தரணும்…"

"எதுக்கு… இப்பத்தானே குடிச்சோம்."

"அய்ய… காலைப் பால்… ருசி இல்லாம அதையும் ஒரு கணக்குக்கு குடிச்சாச்சு. புதுப்பால்ல நல்ல காப்பியா குடிக்கலாம்."

பூரணியின் குரலில் அழுத்தம் தெரிந்தது.அசோக் எழுந்து பூனைக் குட்டியைத் துரத்திக் கொண்டு ஓடினாள்.

"சரியான வாலு… எப்பவும் ஓடணும். கால்ல சக்கரம் கட்டி விட்டாப்பல. அப்படியே அவங்க அப்பாருதான்" என்றாள் வடிவு.

பூரணி என்னைப் பார்ப்பது புரிந்தது.

"அண்ணாச்சி… பேசாமயே இருக்கீங்க…"

வடிவு திடீரென்று எழுந்து பின்கட்டுப் பக்கம் போனாள்.

"என்ன சொல்றது… எம்மேல பிசகு. தகவல் கேட்டு ரொம்பத் துடிச்சுப் போயிட்டேன். ஆனா வரமுடியாம என்னென்னவோ பிரச்சனை."

என் குரல் பிசிறியது.

"மூர்த்தி கூடத்தானே இப்ப தங்கியிருக்கீங்க…"

"ஆமா…" என் தலை ஆடியது.

"அவனுக்கு வரன் எதுவும் பார்க்கறீங்களா…"

"ம்…"

"அவரு இருந்தப்ப… சொல்லிக்கிட்டே இருந்தாரு. மூர்த்தி அப்படியே உங்க வேலு அண்ணாச்சி போல முன்னுக்கு வரணும்னு ஒரு வெறி… திடம்… நீங்க பிடிவாதமா நம்ம ஊரை விட்டுப் போயி… நாலு காசு பார்த்ததை பெருமையா சொல்லுவாரு."

பூரணிக்கு மீண்டும் கண்ணீர் துளிர்த்தது. அவள் சொல்ல வந்தது புரிந்தது. மகள் வனஜாவை மூர்த்திக்கு சம்பந்தம் பேச முனைகிறாள்.வடிவு கிளம்பும்போதே எச்சரித்திருந்தாள்.

"அப்பா நீங்க பாட்டுக்கு வாக்கு கொடுத்துராதீங்க. அம்மா போன பிறகு ஒங்க புத்தியே தறி கெட்டுப் போச்சு. யாராச்சும் அழுதா… கூட சேர்ந்து அழுவறீங்க. மனுசங்க காரியம் ஆவணும்னா என்ன வேணா செய்வாங்க. மூர்த்திக்கு என் வீட்டுக்காரரோட தங்கச்சியப் பார்க்கலாம்னு சொல்லிக்கிட்டு இருக்காரு. அவனுக்கும் அவளை புடிச்சுப் போச்சு. துக்கம் கேட்கப் போனோமா… வந்தமான்னு இருக்கணும்…"

"வடிவு… புள்ளைய கூட்டிட்டு வா…"

பூரணி கூவினாள்.காப்பி மணத்தது. அசோக்கிற்கு பால். வடிவு அசோக்குடன் வந்தாள்.

"சண்முகம்…..புள்ளை கையில பணங் கொடுரா. துணி எடுத்து வச்சிருந்தா தரலாம்"

"எதுக்கு அத்தை…?"

"நீ சும்மாயிரு. மொத தடவை வருது. துக்கமும் சந்தோஷமும் பெரியவங்க கூட…..புள்ளைங்க மனசுல எப்பவும் சிரிக்கணும்."

நூறு ரூபாய்த் தாளை சட்டைப்பையில் சொருகினாள்.

"நல்ல முடிவா சொல்லுங்க அண்ணாச்சி. போனவரு ஆத்மா குளிரணும். பூமியை பார்த்துக்கிட்டு நிப்பேன்னு சொல்லுவாரு."

ஒரு சொட்டு உதிராமல் ததும்பியது பூரணிக்கு.

"சொல்லிக் கொள்ளாமல் கிளம்ப வேண்டும் என்ற விதி." அந்தச் சமயம் நன்றாகவே உதவியது எனக்கு. தெருவில் இறங்கியபோது துக்கத்துக்கு வராததை விட மோசமாய் உணர்ந்தது மனசு.

(கல்கியில் பிரசுரம். )

22 comments:

http://rkguru.blogspot.com/ said...

Good post....

துளசி கோபால் said...

ஹைய்யோ!!!!

பிரமிப்பு அடங்கலை!!!

எப்படிங்க ரிஷபன்??? எப்படி????

யதார்த்தமான நடை.

இனிய பாராட்டுகள்.

கே. பி. ஜனா... said...

அந்த சில நிமிடங்கள்... அந்த சில மாந்தர்கள்... அதன்பிறகு வெகு நேரம் மனதை விட்டு அகலாமல்...

anbarasan said...

CLICK THE LINK AND READ


ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.

................

க ரா said...

அருமை. வழக்கம் போல ...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

திரு இராமசாமி கண்ணன் சொன்னதையே நான் வழி மொழிகிறேன்!

Radhakrishnan said...

:) பரிதவிப்புடன் எழுதப்படும் கதைகள் மனதை கொள்ளை கொண்டு விடுகின்றன. சிறுகதையின் இலக்கியம் அழகாகவே அறிந்து வைத்து இருக்கிறீர்கள்.

ers said...

இந்த பதிவை தமிழர்ஸ் இணையத்தில் இணைக்க விரும்பினால் சுட்டியை சொடுக்கவும்.

vasu balaji said...

வார்த்தையேயில்லை. அபாரம்.

Anonymous said...

கதை படிச்ச பிறகும் மதிலிருந்து துக்கம் போக மாட்டேன்கறது நல்ல கதை

வை.கோபாலகிருஷ்ணன் said...

// சொல்லிக் கொள்ளாமல் கிளம்ப வேண்டும் என்ற விதி." அந்தச் சமயம் நன்றாகவே உதவியது எனக்கு. //

துக்கம் விசாரிக்கச்சென்ற இடத்திலும், ஒரு வித நிம்மதி என்னவென்றால், எளிதில் எஸ்கேப் ஆகி வந்து விட முடியும். அதற்கான வழி தான் இந்த விதியோ!

கண்மணி/kanmani said...

அருமை யதார்த்தம்

அம்பிகா said...

// சொல்லிக் கொள்ளாமல் கிளம்ப வேண்டும் என்ற விதி." அந்தச் சமயம் நன்றாகவே உதவியது எனக்கு. //

யதார்த்தமான நடை. பாராட்டுக்கள்.

பனித்துளி சங்கர் said...

மிகவும் சிறப்பு நண்பரே நல்ல இருக்கு . கல்கியில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள்

ஹேமா said...

எப்பவும்போல எப்பவும்போல எப்பவும்போல ரிஷபன் !

Unknown said...

உள்ளம் தொடும் உணர்வுக்கதை

Anonymous said...

வசனங்கள்ல கலக்கறீங்க

பவள சங்கரி said...

மிக யதார்த்தமான வசனங்கள். நன்று, நண்பரே.

Katz said...

good story..

Thenammai Lakshmanan said...

எழுந்திருந்து ஓடிப்போக வழியின்றி எனக்கு நானே போட்டுக் கொண்ட கட்டுக்குள் ஒடுங்கியிருந்தேன்//

இப்பிடியே எப்பவும் ஆளை அசர அடிச்சிடுறீங்களே ரிஷபன்

vasan said...

Reality replaces the sentiments.

Matangi Mawley said...

great! romba azhagaana kathai.. ethaarthamaa irunthathu.. beautiful!