August 31, 2010

உதவி

இந்த முறை நிச்சயம் ஏமாறக்கூடாது. இந்த நினைப்பில் உதட்டைக் கடித்துக் கொண்டு எதிரில் நின்றவனை அலட்சியப்படுத்தினேன். விட்டால் அழுதுவிடுவான் போலிருந்தான்.

"ஸார்... உங்களைத்தான்."

"சொல்லு.." என்றேன், கொஞ்சங்கூட இளகாத குரலுடன்.

"அம்மாவுக்கு ரொம்ப முடியலே ஸார். அந்த ஊசியைப் போட்டே ஆவணுமாம். என் கையில சுத்தமா பைசா இல்லே" என்று அழுதான்.

ஒரு நாள் இரவு சினிமா பார்த்துவிட்டுத் திரும்பியபோது பழக்கமான ஆட்டோ டிரைவர்தான் அவன். அடுத்த தெருவில் எங்கோ குடியிருப்பதாகச் சொன்னான்.இத்தனை வீடுகளில் என்னை எப்படித் தேடிப் பிடித்தான்.

இவன் மட்டுமல்ல, எத்தனை நபர்கள்!

"சாப்பிட்டு நாலு நாளாச்சுங்க"

"பர்ஸை தொலைச்சிட்டேன். ஊருக்குப் போவணும்"

"நாலு குழந்தைங்க வேலை போயிருச்சு. ஒரு வாரமா அல்லாடறோம்."

"மாரியம்மன் கோவில்ல கஞ்சி ஊத்தறோம்."

விதவிதமாய் வேண்டுகோள்கள்! ஐந்து, பத்து, இருபது, ஐம்பது என்று எப்படியாவது பேசி மனதை உருக வைத்து பணத்தைக் கறந்து கொண்டு போய் விடுகிறார்கள்.

பிரேமா ஒரு முறை சொல்லிக் காட்டிவிட்டாள்.

" நான் எதுனா கேட்டா, இந்த மாச பட்ஜெட்ல எடமில்லேன்னு சொல்லிடுவீங்க. இந்த மாதிரி ஏமாத்து தர்மம் நிறைய பண்ணுவீங்க."

நேற்றைய சண்டையின் ஹைலைட்டே அதுதான். என்னை ஏமாற்றிப் போனவனை சினிமா தியேட்டர் முதல் வகுப்பு டிக்கெட்டு முன் வரிசையில் பார்த்துவிட்டு என்னையும் ஒரு பார்வை பார்த்தாள்.

தீர்மானித்துவிட்டேன். இனிமேல் சுத்தமாய் 'இல்லை'.

ஆட்டோ டிரைவர் சட்டென்று என் கால்களில் விழுந்தான்.

"ஸார்... எப்படியாச்சும்... இரு நூறு ரூபா கொடுங்க. ப்ளீஸ்.."

உறுதியை மீறி மனசு ஆட்டம் கண்டது.

"இரு.. நானும் உன்னோட வரேன்".

ஷர்ட்டை மாற்றிக் கொண்டேன். பர்ஸில் ஐந்நூறு ரூபாய் இருந்தது.

" நீங்க எதுக்கு ஸார். வீணா அலைச்சல்.." என்றான்.

"பரவாயில்லை. நானும் வரேன்." என்றேன் விடாமல்.

பஸ்ஸில்தான் போனோம். ஹாஸ்பிடல் வாசலில் இறங்கி நடந்தோம்.

"எந்த பெட்.."

"லேடீஸ் வார்ட்ல.. ஸார்... பணத்தைக் கொடுத்தீங்கன்னா ஊசி வாங்கிட்டுப் போயிரலாம்..."

"மெடிகல் ஷாப்புக்கு நானும் வரேன்.."

அரை மனதாய் சம்மதித்த மாதிரி தோன்றியது. ஒரு வேளை நிஜமாகவே அவன் அம்மா சீரியசாய் கிடக்கிறாளா... அல்லது மெடிகல் ஷாப்பில் என்னெதிரில் மருந்து வாங்கிக் கொண்டு பிறகு அது வேண்டாம் என்று திருப்பிக் கொடுத்து பணத்தை ஏமாற்றி விடுவானோ...சந்தேகப் பேய் மனதைப் பிடித்து ஆட்டி அதன் உச்சத்துக்குப் போக ஆரம்பித்தது.

சங்கடமான மன நிலையில் நடந்தபோதுதான் அந்தச் சிறுவனைப் பார்த்தேன்.

"ஏய்.. பாபு.. நீ எங்கேடா இங்கே.."

எங்கள் வீட்டு வேலைக்காரி அஞ்சலையின் மகன்.

"அம்மாவுக்கு இருமல் .. மருந்து வாங்க வந்தோம்..." என்றான்.

எண்ணை காணா தலை, உடம்பில் புழுதி, போட்டிருந்த சட்டை, டிராயர்.. ஓ.. நான் கொடுத்தது. போன வாரம் பழைய துணிகளை ஒழித்தபோது .. 'என் புள்ளைக்கு எதுனாச்சும் தாங்கம்மா..' என்று அஞ்சலை கேட்டு வாங்கிப் போனது.

பிரேமா கூட சொன்னாளே 'அதையும் வித்துடுவா.. அவ எங்கே பையனுக்குப் போடப் போறா.. அதுக்கு பேசாம நானாவது ரெண்டு பாத்திரம் வாங்குவேன்' என்று.

நான்தான் வற்புறுத்தி இரண்டு செட் டிராயர், ஷர்ட்டை கொடுத்து அனுப்பினேன். இதோ எதிரில் நல்ல துணி அணிந்த பெருமிதத்தில் பாபு.

உள்ளூர ஏதோ உறுத்தியது.

இது வரை நான் செய்த உதவிகள் எல்லாம் என்னால் செய்ய முடிந்தவைதான். என் சக்தியை மீறி எதுவும் செய்யவில்லை. கொடுத்தபோது இருந்த சந்தோஷம்.. இம்மாதிரி நேரில் பார்க்கும் போது இன்னும் இரட்டிப்பாகிறது.

அதைவிட்டு சந்தேகத்துடன் துரத்திப் போனால் மனசு அலைபாய்ந்து உதவி கேட்டு வருகிற எல்லோருமே ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்ற கணிப்புக்கு விரைவது ஏன்! முடிந்தால் முடிந்ததைக் கொடுத்து சந்தோஷப்பட்ட மனதை ஏன் சின்னாபின்னப் படுத்திக் கொள்ள வேண்டும்?

அவன் தோளைத் தட்டி நிறுத்தினேன்.

"இந்தா.. மருந்து வாங்கிட்டு வா.."

ஹாஸ்பிடலுக்கு எதிர் திசையில் என் கால்கள் நடந்தன.

21 comments:

கே. பி. ஜனா... said...

உதவும் சிந்தனை உள்ள எல்லாருக்கும் வரும் தடுமாற்றத்தை அதன் இரு பக்கத்தையும் சொல்லி அழகாக...

rajasundararajan said...

உதவி வரைத்தன்று உதவி; உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

என்று வள்ளுவரே சொல்லி இருக்கிறாரே? அதனால் கதைநாயகன் உதவிகேட்டவனின் சால்பறியச் சென்றதில் தவறில்லை, ஆனால் அப்படி அலைந்தலைந்து சால்பறிந்தால் நம் அலுவலை யார் பார்ப்பது?

"கண்ணில் தெரிந்துவிடும் உண்மையும் பொய்யும்" என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

என் வீட்டில் இருந்ததொரு முழுப்போத்தல் பிராந்தியை ஒரு வேலையாள், தன் மனைவிக்குப் பிரசவம் என்று வாங்கிக்கொண்டு போனான். ஒரு வாரம் கழித்து, அவன் மனைவியின் தம்பியைப் பார்க்கையில், "என்னப்பா உங்க அக்காவுக்குப் புள்ளெ பொறந்திறுச்சா?"ன்னு கேட்டேன். "எங்க அக்காவுக்கா?"ன்னு என்னெ ஒரு மாதிரியாப் பார்த்தவன் சொன்னான், "அவளுக்குக் குடும்பக்கட்டுப்பாடு பண்ணி ரெண்டு வருஷம் ஆச்சே!"

Anonymous said...

அருமை நண்பரே, எனக்கு அவ்வப்போது எழும் பிரச்னைக்கு அற்புதமான தீர்வு கிடைத்தது, இறைவன் என் முன் தோன்றி இதை சொன்னதாய் எடுத்துக்கொண்டேன்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கொய்த மலர் கொடியிலே ஒட்டாது
எய்த அம்பினி இருப்பிடம் செல்லாது,
பெய்த மழை அளவைக் ககனம் காணாது
செய்த சிறு உதவி சீர் தூக்கிப் பாராதே!!


அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.

அம்பிகா said...

அருமை. இந்த தடுமாற்றம் வந்தாலும், அதை மீறிய பச்சாதாபம் உதவ வைத்து விடும். கதை இயல்பா இருக்கு சகோ.

பத்மநாபன் said...

எல்லோரையும் நம்பி உதவி செய்து கொண்டே இருப்பவர்கள் இருக்கிறார்கள்.

யாரையும் நம்பாமல் உதவி செய்யாமலே இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

அளவு நிர்ணயித்து உதவுபவர்களும் இருக்கிறார்கள்.

இதில் காலத்தினால் செய்யும் உதவிதான் சால சிறந்தது.

உதவும் மனம் படைத்த அனைவர்க்கும் வரும் உணர்வை அழகாக படம் பிடித்துள்ளீர்கள்.

vasan said...

ரிஷ‌ப‌ன்,
இர‌க்க‌ குண‌ம், ஏமாற்ற‌ப்ப‌டும் போது வரும் ஆற்றாமை,த‌ன்னிர‌க்க‌ம் ஒரு த‌னி ர‌க‌ம். ந‌ம‌க்கு ம‌ட்டுமே ந‌ட‌க்கும் தின‌ம் தின‌ம் வித‌ம் வித‌மாய். அனுப‌வக் கொள்முத‌லாய் எடுத்துக் கொள்ள‌ வேண்டிய‌துதான் அல்ல‌து பிளாக்கில் போட்டு புல‌ம்ப‌ வேண்டிய‌து தான். அவ்வ‌ள‌வு நட‌ந்திருக்கு என்க்கும்.

வசந்தமுல்லை said...

fine story

Thenammai Lakshmanan said...

கொடுத்தபோது இருந்த சந்தோஷம்.. இம்மாதிரி நேரில் பார்க்கும் போது இன்னும் இரட்டிப்பாகிறது//

இது இதுதான் ரிஷபன் டச்.. அருமைப்பா..

வை.கோபாலகிருஷ்ணன் said...

நம்மால் முடிந்த உதவிகளைச் செய்து கொண்டே இருப்போம். கொடுப்பதில் தான் மகிழ்ச்சி என்பதை உணரும் போது தான் நாம் வாழ்வில் சற்றே உயர்ந்து நிற்கிறோம்.

ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சென்னை வடபழனி பேருந்து நிலையத்திலும், திருவண்ணாமலை கோயில் அருகே உள்ள ஒரு ஹோட்டல் வாசலிலும் ஆபத்துக்கு உதவி செய்யப்போன நான், ஏமாறத் தெரிந்தேன். பிறகு அங்குள்ள வேறு சில நல்ல மனிதர்களில் எச்சரிக்கையால், ஏமாறாமல் தப்ப முடிந்தது.

இடம், பொருள், ஏவல், உதவி நாடுபவரின் விழிகளிலும், பேச்சினிலும் தோன்றும் உண்மைத் தன்மை, நம் கையிருப்பு வசதி முதலியவற்றை உத்தேசித்து நம்மால் முடிந்த அளவு, ஏதோ ஒரு தர்மம் என்று நினைத்தாவது உதவலாம்.

அருகில் மனைவி இருந்தால் அவசியம் அவர்களின் ஒப்புதலோடு செய்வது தான் சாலச்சிறந்தது. பிரச்சனை இல்லாததும் கூட.

தர்ம சாஸ்திரப்படி, தானம் செய்யும் போது, மனைவியின் ஒப்புதல் மிக மிக அவசியம்.

வெற்றிலை பாக்கின் மேல் மனைவியானவள் ஒரு உத்தரணி தீர்த்தம் ஊற்றி (ஒப்புதல் தந்து) அதன் பிறகு தானம் செய்தால் தான் முழுப்பலன் உண்டு.

ஹேமா said...

கொடுக்கும்வரைதான் எம் பங்கு.பிறகு அதை அவர்கள் என்ன செய்வார்கள் என்பது ?அதனால் யாருக்கு எதற்குக் கொடுக்கிறோம் என்று தெரிந்து கொடுப்பது நல்லது என்பார்கள் !

சாந்தி மாரியப்பன் said...

கொடுக்கும் மனதின் தடுமாற்றம்.. அழகா வந்திருக்கு.

வெங்கட் நாகராஜ் said...

பணமோ, பொருளோ பிறருக்கு உதவியாகக் கொடுக்கும் வரைதான் நம்முடையது. கொடுத்த பின் அவருடையது ஆகிவிடுகிறது. அதனால் கொடுத்த பிறகு நாம் சஞ்சலப்படுவதில் அர்த்தமில்லை என அழகாய் புரிய வைத்தது உங்கள் கதை. பகிர்வுக்கு நன்றி.

க.பாலாசி said...

நல்லாயிருக்குங்க ரிஷபன். அனுபவித்து படிக்கவும் முடிந்தது. எல்லோருக்கும் இந்த தடுமாற்றம் இயல்புதான் போல.

'பரிவை' சே.குமார் said...

கொடுக்கும் மனதின் தடுமாற்றம்.. அழகா வந்திருக்கு.

ஹுஸைனம்மா said...

அட, இந்தத் தடுமாற்றம் எல்லாருக்குமே இருக்கும்போல!!

ஜெயந்தி said...

//அட, இந்தத் தடுமாற்றம் எல்லாருக்குமே இருக்கும்போல!!//

ஆமா.

Unknown said...

நம்முடைய உதவி கரெக்டா ரீச் ஆகுதாங்கறது ரொம்ப சந்தேகந்தான்..

நல்லவிதமான கருத்துக்களைக் கொண்ட நல்ல கதை..

சுந்தர்ஜி said...

எல்லாரையும் நம்பலாம். எல்லாரையும் சந்தேகப்படாதே என்பதுதான் என் பாலிஸி. கொடுத்ததெல்லாம் சரியாகச் சேர்கிறதா என்பதை எதுவரை நின்று பார்க்க முடியும்? நிம்மதிதான் கெடும்.சில நேரங்களில் உதவத் துடிக்கும் அதே மனம் சில நேரங்களில் தடை போடும். மனமே மார்க்கபந்து.

ADHI VENKAT said...

ரொம்ப இயல்பா இருக்கு. இரண்டு பக்கங்களையும் அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள்.

CS. Mohan Kumar said...

உங்களின் இந்த சிறுகதையை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டு எழுதி உள்ளேன். இயலும் போது வாசிக்கவும்