தகவல் சொன்னவன் காத்திருக்கவில்லை. வண்டியைக் கிளப்பிக் கொண்டு போய் விட்டான். மணிவேல்தான் பதறினான்.
”நான் போறேன்”
சண்முகம் விடவில்லை.
“நீ நில்லு.. யாவாரத்தைக் கவனி. நான் போயிட்டு என்னான்னு பார்த்திட்டு வரேன்.”
கல்லாவைத் திறந்து கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பும்போது பார்வை தன்னிச்சையாய் பெற்றோர் படத்தின் மீது பதிந்தது.
‘கூட வரீங்களா’
சரக்கு எடுக்கப் போகும்போது.. வங்கியில் பணம் கட்டப் போனால்.. எந்த முக்கிய வேலை என்றாலும் ‘அம்மா.. அப்பா’ படம். மனசுக்குள் வேண்டுதல். ‘கூட வாங்க’. தடங்கல் இல்லாமல் வேலை முடியும் என்ற நம்பிக்கை.
மணிவேல் தணிந்த குரலில் சொன்னான்.
“உடனே ஃபோன் பண்ணிருங்க.. “
சண்முகம் தலையாட்டினான். பைக் உறுமிக் கொண்டு போனது.
”தம்பி.. அரிசி 25 கிலோ வேணும். அனுப்பிடறீங்களா”
வாடிக்கையாளர் வந்ததும் புத்தியில் வியாபாரம் புகுந்தது.
“அண்ணே.. கவர் பால் இருக்கா”
ப்ரிட்ஜைத் திறந்து அரை லிட்டர் பாலை எடுத்துக் கொடுத்து பணத்தை வாங்கிப் போட்டான். மளிகைக் கடை என்று பெயரே தவிர ஆத்திர அவசரத்திற்கு எல்லாம் விற்பனைக்கு வைத்திருக்க வேண்டியிருக்கிறது. ‘தலைவலி’ மணடையை பொளக்குது என்று ஒருத்தர் வருவார். ’கிப்ட் ஐட்டம் இருக்கா’ என்று கூட ஒருவர் கேட்டார். இல்லையென்று அனுப்பியதும் மணிவேல்தான் அதற்கும் அவசரப் பட்டான்.
‘அண்ணே ஏதாச்சும் வாங்கி வைக்கணும்’
இதெல்லாம் ரெகுலர் விற்பனை இல்லை. பணத்தை முடக்க வேண்டாம் என்று சமாதானம் செய்ய வேண்டியிருந்தது.
பெட்டிக்கடை ரேஞ்சில் எதிரில் கடை வைத்திருந்தவன் இவர்களுக்கு முன் போட்டி போட முடியாமல் வியாபாரம் படுத்துப் போய் காலி செய்து கொண்டு போய் விட்டான்.
’அண்ணன், தம்பியா’ என்றூ ஒருத்தர் கேட்டாராம்.
’ஏனாம்’
‘இல்ல.. ஒத்துமையா யாபாரம் பண்றாங்களே.. அது எப்படின்னு’
அண்ணனுக்குப் பெண் பார்க்கப் போனபோது பெண் வீட்டில் தரகர் முதலில் இவனைத்தான் அறிமுகம் செய்தார்.
‘மணிவேலுன்னு சொன்னேனே.. அது இவருதான்’
வரப் போற அண்ணி எட்டிப் பார்த்தாங்களாம்.
‘கட்டிக்கப்போறவன் என்னைக் கூட இவ சரியா பார்த்தாளோ.. என்னவோ.. முத முதல்ல உன்னைத்தான் பார்த்தாளாம்’ என்று சண்முகமே கேலி செய்வான்.
கல்யாணப் பேச்சு ஆரம்பித்த உடனேயே மணீவேலை அழைத்துக் கொண்டு வங்கிக்குப் போனான்.
’இவன் பேர்ல ஒரு அக்கவுண்ட் ஆரம்பிக்கணும்’
மணிவேல் பதறிப் போனான்.
‘எதுக்குண்ணே’
’எல்லாம் நல்லதுக்குத்தான்’
கணிசமான தொகையுடன் ஆரம்பித்த கணக்கில் பணம் மாதாமாதம் ஏறிக் கொண்டிருக்கிறதே தவிர மணிவேல் எடுக்க வேண்டிய அவசியமே வரவில்லை.
அதுவுமில்லாமல் இப்போது இன்னொரு வேலையும் சண்முகம் செய்துவிட்டான். தரகர் வந்துவிட்டுப் போனதாக கடைப்பையன் சொன்னதும் முதலில் மணிவேல் நம்பவில்லை.
‘வீட்டுல வச்சுப் பேசாம கடையில வச்சு ஏன் பேசணும்’
மணிவேலுக்கு அண்ணனிடம் கேட்கத் தயக்கம். ‘அவரே சொல்லுவாரு’ என்று விட்டு விட்டான். பிறகுதான் புரிந்தது. மணிவேலுக்குப் பெண் பார்த்திருக்கிறான்.
’அண்ணி உங்களுக்குத் தெரியுமா’
சண்முகம் குறுக்கிட்டு சொன்னான்.
’அவதாண்டா பார்க்கச் சொன்னது.. உனக்கும் வயசாச்சில்ல’
அண்ணி சிரித்தாள்.
‘அதெல்லாம் ஒண்ணுமில்ல.. நான் தனியா இருக்கேனாம்.. சண்டை போட ஆள் வேணுமான்னு கேட்டாரு.. கூட்டியாங்கன்னு சொன்னதும் உனக்கு பொண்ணு பார்க்கறாரு’
அண்ணி உறவில் ஒரு சம்பந்தம் இருப்பதாகத் தகவல்.
’புடிச்சிருந்தா மட்டும் பேசலாம்.. எங்க வீட்டு மனுஷங்கன்னு ஒப்புத்துக்க வேணாம்’
கார் வைத்துக் கொண்டு போனார்கள். பெண் அப்படியொன்றும் அசத்தல் இல்லை. ஆனாலும் அவர்கள் வீட்டில் திரும்பத் திரும்ப ‘ரொம்ப மரியாதை தெரிஞ்ச பொண்ணு’ என்று சொன்னது மூளைச் சலவை செய்த மாதிரி ஆகிவிட்டது.
மறுபடி அந்தப் பெண்ணைப் பார்க்க ’ஆமா.. நான் அப்படித்தான்’ என்று சொல்கிற மாதிரி முகபாவம்.
’என்னடா சொல்றே’
‘உங்களுக்குப் பிடிச்சிருந்தா சரிண்ணே’
’வாழப் போறவன் நீதாண்டா’
சண்முகம் சிரித்ததும் பெண்வீட்டார் விசாரித்தார்கள்.
அண்ணி ஏதோ சொல்ல முயற்சி செய்ய சண்முகம் தடுத்து விட்டான்.
’தகவல் சொல்லி விடறேன்.. அப்ப வரட்டுங்களா’
வீட்டுக்கு வந்ததும் அண்ணிதான் கேட்டாள்.
’ஏன் அப்படி சொல்லிட்டு வந்தீங்க’
சண்முகம் மௌனமாக இருக்கவும் அண்ணி மீண்டும் பதட்டமாய் கேட்டாள்.
மணிவேல் ஹாலை விட்டு வாசற்புறம் வந்து விட்டான். இருந்தாலும் சண்முகத்தின் குரல் தெளிவாகக் கேட்டது.
'உடனே சம்மதம்னு சொல்லி மணியை அவங்க குறைவா எடை போட்டிரக் கூடாதில்ல.. ஒரு வாரம் பொறுத்து சொல்லுவோம். நீ பேசாம இரு.. முந்திரிக் கொட்டையாட்டம் போய் உளறி வைக்காதே’ என்றான் கொஞ்சம் இறுக்கமாகவே.
ஒரு வாரம் என்பது அப்படி இப்படியென்று பத்துப் பதினைந்து நாள் ஆகிவிட்டது.
அதற்குள்தான் இந்தத் தகவல்.
’நம்ம மணிவேலுக்குப் பார்த்தோமே.. அந்தப் பொண்ணு மருந்து குடிச்சிருச்சாம். ஆசுபத்திரிக்குக் கொண்டு போயிருக்காங்க’
என்ன நடந்தது.. ஏன் மருந்து குடித்தாள்.. என்னைப் பிடிக்கவில்லையா.. காதல் தோல்வியா.. வீட்டார் வற்புறுத்தி எனக்குப் பேசியதால் இந்த முடிவா.. தறிகெட்டு ஓடிய மனசைக் கடிவாளம் போட முடியாமல் மணிவேல் தடுமாறித்தான் போனான்.
போன் மணி ஒலித்தது. அவனையும் அறியாமல் கடிகாரத்தைப் பார்த்தான். ஒரு மணி நேரம் ஓடிவிட்டது. அவசரமாய் எடுக்க சண்முகத்தின் குரல்.
’ஒண்ணுமில்ல.. புழைச்சிருச்சு’
ஹப்பாடா..
’அண்ணே.. வந்து..’
’அண்ணியும் நானுந்தான் வந்தோம்.. அவ இங்கே தங்கிட்டு வரேன்னா.. நான் அரை மணில கடைக்கு வந்திருவேன்.. வச்சிரட்டுமா’
பதிலை எதிர்பாராமல் வைத்துவிட்டான். மணிவேல் ‘அண்ணே.. அண்ணே’ என்று கத்தியதுதான் மிச்சம்.
இனி அவன் வரும் வரை நிலை கொள்ளாது. பதில் தெரியாத கேள்விகள் தலையைக் குடைந்து கொண்டிருக்கும். இன்னும் முப்பது நிமிஷம்.. இருபத்தொம்பது.. இருபத்தெட்டு.. ஏன் இத்தனை மெதுவாக நகர்கிறது..
’எங்கே பெரியவரைக் காணோம்..’
வாடிக்கையாளர்தான். ஒரு வகையில் உறவுகூட.
’வெளியே போனாரு.. வந்திருவாரு’
’நம்ம பொண்ணு கல்யாணம் ஞாபகம் இருக்கில்ல.. சாமான் முழுக்க நம்ம கடையிலதான்.. எப்ப லிஸ்ட் கொடுக்கட்டும்’
’ஒன் அவர் டைம் கொடுங்க.. கொண்டு வந்து இறக்கிர மாட்டோம்..’ என்று வழக்கமாய் உற்சாகமாய் பதில் வரும். இன்று மெதுவாகத் தலையாட்டினான். வந்தவருக்கே அவன் சுணக்கம் புரிந்து போனது.
’என்ன தம்பி.. மேலுக்கு சுகமில்லியா’
சுதாரித்துக் கொண்டு தலையாட்டினான்.
'நல்லாத்தான் இருக்கேன்’
பெரிதாய் ஒரு சிரிப்பும் சிரித்து வைத்தான்.
’அதானே பார்த்தேன்.. வெக்கை அதிகமா.. அதான் தம்பி முகம் வாடியிருக்கு’ என்று அவராகவே ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு போய்விட்டார்.
சண்முகத்தின் பைக் சத்தம் கேட்டது. அவசரப்படக்கூடாது. அவனாகவே சொல்லட்டும். மணிவேல் ஏதோ ஒரு வேலையாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் பார்வை சண்முகத்தைத்தான் தேடியது.
உள்ளே வந்து கல்லாவின் அருகில் உட்கார்ந்து பெரிதாய் ஒரு மூச்சு விட்டான். சொம்புத் தண்ணீர் கடகடவென இறங்கியது. தொண்டைக்குழி மேலும் கீழும் ஏறி இறங்கியதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மணிவேலுக்கு பொறுமை இறங்கிக் கொண்டிருந்தது.
‘அண்ணே நல்லா இருக்கில்ல’
’ம்ம்’
‘எ.. என்னவாம்’
’மருந்து குடிச்சிருச்சு’
‘தெரியாமலா’
’தெரிஞ்சுதான்’
‘ஏனாம்’
மணிவேலின் குரல் அடைத்துக் கொண்டது.
’நாம பதில் சொல்ல லேட்டாயிருச்சுல்ல.. ஒரு வேளை புடிக்கலியோன்னு தப்பா யூகம் பண்ணிகிட்டு’
சண்முகத்திற்கு இப்போது குரல் பிசிறியது. ஒருவேளை தன்னால்தானோ..
‘அப்புறம்’
’நல்ல பொண்ணும்மா.. நாள் நட்சத்திரம் பார்க்கவேணாமா.. டப்புன்னு எதையாச்சும் சொல்லிர முடியுமான்னு சமாதானம் சொல்லி.. இப்படி பொசுக்குன்னு மருந்து குடிச்சா.. எந்த நம்பிக்கையில உனக்கு சம்மதம் சொல்றது.. எங்க வீட்டுக்கு வந்தப்புறம் இப்படித்தான் இருப்பியான்னேன்.. பாதியை அதுவே துப்பிருச்சாம்.. முழுசாக் குடிக்கல.. ஒரு வாய் கூட உள்ளே போவல.. அதுக்குள்ர இவங்க பதறிப் போய் ஆசுபத்திரிக்கு கூட்டிகிட்டு போயிட்டாங்க.. உங்க அண்ணி கேட்டா.. ருசி பார்த்து குடிக்கிற மனுஷியா.. உடனே துப்பிட்டியேன்னு.. பொண்ணுக்கு எதுவும் ஆபத்தில்லேன்னு தெரிஞ்சப்புறம்தான் இந்த பேச்சு எல்லாம்’
மணிவேல் மௌனமாக இருந்தான். நிதானம் வந்திருந்தது. தன்மீது பெண்ணுக்கு மனக்குறை இல்லை.
’ரெண்டு கிலோ ரவை.. ஒரு கிலோ மைதா.. மூணு கிலோ சக்கரை’
கடைக்கு வந்தவர் கையில் வைத்திருந்த லிஸ்ட்டை படிக்க ஆரம்பிக்க மணிவேல் கைப்பேடில் குறிக்க ஆரம்பித்தான்.
’இங்கே கொடுரா.. நான் பார்த்துக்கறேன்’ என்றான் சண்முகம் கையை நீட்டி.
’நான் சும்மாதானே இருக்கேன்’
‘இந்தா சாவி.. போய் பார்த்திட்டு வா.. உன் வாயால சம்மதம்னு சொல்லிட்டு வந்திரு.. யாவாரம் ஆவுதுன்னாலும் சும்மா சும்மா பூச்சி மருந்தெல்லாம் கடையில வாங்கி வைக்க முடியாதில்ல..’
கை நீட்டி சாவியை வாங்கிக் கொண்ட மணிவேலுக்குத் தோன்றியது.
’அண்ணனின் சிரிப்பு கூட அழகுதான்’
(கல்கி பிரசுரம்)
16 comments:
கதையில் ரொம்ப ரொம்ப ருசி அதிகம், சார்.
மிகவும் ரசித்துப்படித்தேன்.
அண்ணன் தம்பி பாசம், மரியாதை, மனத்தினில் அவ்வப்போது தோன்றி மறையும் எண்ணங்கள் என அனைத்தும் வெகு அழகாக, ஆழமாக உங்களுக்கே உள்ள தனித்திறமையுடன், பளிச்சிடுகிறது.
//உன் வாயால சம்மதம்னு சொல்லிட்டு வந்திரு.. யாவாரம் ஆவுதுன்னாலும் சும்மா சும்மா பூச்சி மருந்தெல்லாம் கடையில வாங்கி வைக்க முடியாதில்ல..’//
நல்லதொரு இனிமையான, சுபமான முடிவு. ”கல்கி” யில் வெளி வந்ததற்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். அன்புடன் vgk
(Voted)
"தம்பிக்கோர் கீதம்".
ரொம்ப நல்லா இருந்தது.
மருந்து குடிச்சிடிச்சுன்னு ஆரம்பிச்சு உள்ள இழுத்துகிட்டு போயிட்டீங்க... வாசகனை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்ப விடாத நடை. ஹாட்ஸ் ஆஃப். ;-))
இந்த காலத்தில் இப்படி இருக்காங்களா ? சந்தேகம்தான். நல்ல கதை
பூச்சி மருந்து அப்படியே உள்ளே இழுத்துத் தள்ளி விட்டது. முழுதாய் ஒரே மூச்சில் படித்து முடித்தவுடன் தான் விட்டது.... நல்ல கதை.
// யாவாரம் ஆவுதுன்னாலும் சும்மா சும்மா பூச்சி மருந்தெல்லாம் கடையில வாங்கி வைக்க முடியாதில்ல..’//
உண்மையான பேச்சு...
கல்கியில் வெளிவந்தமைக்கும் வாழ்த்துகள்.
பிடிப்பு விலகாமல் அண்ணன் தம்பி ஒற்றுமையை கூறி வந்த கதை ... மளிகை கடைக்குள் உட்காரவைத்து மண்டை வெல்ல வாசனையோடு கதை கேட்ட உணர்வை கொண்டு வந்து விட்டீர்கள் ...
அருமையான கதை. இயல்பான முடிவு.
என்னாச்சுங்க ஒரே சிறுகதையா இருக்கு.,
இந்த கதையே அப்புறம் வந்து படிக்குறேன்
நல்ல கதை. அண்ணன் தம்பி பாசத்தை அழகாக எடுத்துக் கூறுகிறது. கல்கியில் பிரசுரமானதற்கு வாழ்த்துக்கள் சார்.
கதையை ஒரே மூச்சில் படிக்க வைத்தீர்கள்! இப்படி உறவுகள் அமையாதா என ஏங்கவும் வைத்தீர்கள்!!
முழுதும் ஒரு நடுக்கம் இருந்தது நண்பரே ...
முடித்திருக்கும் விதம் சிறப்பு ...
உன்னதமான உறவுகளைப் படிக்க நேரும்போது உடலும் மனசும் படபடக்கத்தான் செய்கின்றன எந்தக் காலமானாலும் எத்தனை வயதானாலும்.
ரிஷபனால் மட்டும் எழுதமுடிகிற மனிதர்களின் மேன்மை சொல்லும் எழுத்துக்கு ஓர் வந்தனம்.
ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குங்க... !எந்த எந்த இடம் என இன்னும் நாலைந்து தடவை படிச்சாகணும். அவ்வளவு பரபரப்பும் விறுவிறுப்பும். அம்மா கைச் சமையல் மணமும் சுவையும் போல இழைந்திருக்கிற உறவும் பாசமும் !!
‘இந்தா சாவி.. போய் பார்த்திட்டு வா.. உன் வாயால சம்மதம்னு சொல்லிட்டு வந்திரு.. யாவாரம் ஆவுதுன்னாலும் சும்மா சும்மா பூச்சி மருந்தெல்லாம் கடையில வாங்கி வைக்க முடியாதில்ல..
முடிவு சூப்பர் !!!!!!!!!!!!!!!!!!!!!!!
நான் இந்த கதையைப் படிக்கவே இல்லை ரிஷபன்.
ஆனால் படமாய் பார்த்தேன். அருமையான காட்சிகள்.
அருமையான கதை.
இதமான வார்த்தைகள் கொண்டு நயமாய் இழைக்கப்பட்ட அழகு க(வி)தை!! (இதைப் படிக்கையில் என் நண்பர் ஒருவரின் வாழ்க்கை சம்பவம் நினைவிற்கு வந்து படுத்தியது)
Post a Comment