September 05, 2011

காளியம்மாள் டீச்சர்

இரண்டாம் வகுப்பு.
வீட்டில் எதற்கோ கோபித்துக் கொண்டு சாப்பிடாமல் பள்ளிக்கு வந்து விட்டேன்.
(அந்த வயசிலேயே கோபமா என்று நீங்கள் புருவம் சுழிப்பது தெரிகிறது.)
நேரம் ஆக ஆக பசி வயிற்றைக் கிள்ளியது.
வகுப்பு ஆசிரியை காளியம்மாள் எனக்கு மிகவும் பிடித்தவர்.
அவர் பாடம் நடத்தும் போது கவனம் வேறெங்கும் போகாது .
இன்று பசியில் நெளிவதை அவர் கவனித்தாரா என்று தெரியவில்லை.
மணி பதினொன்று.
வகுப்பு அறை வாசலில் யாரோ.
"டீச்சர் .. டீச்சர் " என்று சக மாணவர்கள் கத்துவது கேட்க நானும் நிமிர்ந்து பார்த்தேன்.
என் அத்தை.
டீச்சர் அவரிடம் என்ன விஷயம் என்று விசாரிக்க, நான் கோபத்தில் சாப்பிடாமல் வந்த விவரம் அத்தனை பேருக்கும் தெரிந்து விட்டது.
'அவன் பசி தாங்கமாட்டான். அதான் நான் வந்தேன் .. " என்றார் அத்தை.
காளியம்மாள் டீச்சர் என்னைப் பார்த்தார்.
'ஏண்டா சாப்பிடலியா .. அப்படி என்ன கோபம் ' என்கிற விசாரணை எதுவும் இல்லை.
'போ.. போ.. சீக்கிரம் சாப்பிடு '
வராண்டாவில் என்னை உட்கார வைத்து நெய் மணக்க ரசம் சாதம், தொட்டுக் கொள்ள கீரை .. ஊட்டியே விட்டார் அத்தை.
டிபன் பாக்ஸ் தெரியாமல் கண்ணீர் மறைத்தது.
பைப்பில் வாய் துடைத்து விட்டு உள்ளே அனுப்பினார்.
என் இருக்கையில் வந்து அமர்ந்தபோதுதான் டீச்சர் சொன்னார்.
'அட.. அசடு.. என்ன கோபம் வந்தாலும் பட்டினி கிடக்காதே '
இன்றும் ரசம் சாதம் நெய் மணக்கும்போது காளியம்மாள் டீச்சரும் கல்யாணி அத்தையும் நினைவில் வந்து போகிறார்கள்.
இரண்டு பேரும் ஒரே பாடம் கற்றுக் கொடுத்தவர்கள்.
'பட்டினி கிடக்காதே '

ஆசிரியர் தின நல் வாழ்த்துகள்.




26 comments:

பத்மநாபன் said...

வாழ்க்கையில் எவ்வளவு ஆசிரியர்கள் ... அறிவு பசிக்கு பாடமும் , வயிற்று பசிக்கு உணவும் முக்கியம் என கற்று தந்த வாழ்க்கை ஆசிரியர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு வந்தனமாய் இந்த பதிவு ...

ADHI VENKAT said...

நெய் மணக்க ரசம் சாதமும், கீரையும் சாப்பிட்டது போன்ற உணர்வு.
ஆசிரியர் தினத்திற்கேற்ற நல்லதொரு பதிவு.

settaikkaran said...

சும்மாவா சொன்னார்கள்?

"மாதா, பிதா, குரு தெய்வம்" என்று?

ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

T.K.Theeransamy,Kongutamilarkatchi said...

கல்விகொடுப்பதும்,பசிபோக்குவதும் சிறப்புதானே...வாக்குப்பதிவு மற்றும் வாழ்த்துக்களுடன்..
டி.கே.தீரன்சாமி,தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகப்பதிவு--வாங்க எங்க பக்கம்-theeranchinnamalai.blogspot.com

வை.கோபாலகிருஷ்ணன் said...

//'அட.. அசடு.. என்ன கோபம் வந்தாலும் பட்டினி கிடக்காதே ' //

சபாஷ். குட்டிக்கதையில் மிகப்பெரிய விஷயம் புரிய வைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தினத்தில் தங்களையும் என் ஆசிரியராக நினைத்துக்கொண்டேன்.

அன்புடன் vgk
[Voted 5 to 6 in INDLI]

Thenammai Lakshmanan said...

ஆசிரியர்களை என்றும் மறக்கவே முடியாது..

கதம்ப உணர்வுகள் said...

அட அசட்டு ரிஷபா நானும் சொல்றேன்.... கோபம் வந்தால் பட்டினி இருக்க கூடாது... சமர்த்தா சாப்பிட்டு உடம்பு பலமா வெச்சுக்கனும்... உடல் பலமா இருந்தா தானே அடி வாங்கினா வலிக்காது?

சும்மா தமாஷ் பா.... உண்மையே...
அன்னத்தின் மீது கோபத்தை காமிக்கவே கூடாது என்னிக்கும்....

நல்லதை அன்னிக்கு சொல்லிக்கொடுத்த காளியம்மாள் டீச்சரையும் அன்பா நெய் மணக்க ரசம் சாதமும் கீரையும் ஊட்டி விட்ட கல்யாணி அத்தையையும் எங்க கண்முன்னும் வந்து சென்றனர்பா...

அன்பு ஆசிரியர் தின நல் வாழ்த்துகள்...

அன்பு நன்றிகள் ரிஷபா பகிர்வுக்கு...

வெங்கட் நாகராஜ் said...

சாப்பாட்டின் மீது மட்டும் என்றுமே கோபம் காட்டக்கூடாது என்பதை சிறுவயதிலேயே உணர்ந்து கொண்டுவிட்டீர்கள் நீங்கள்.... அது மிக நல்ல விஷயம்.... இதைச் சொல்லிக் கொடுத்த உங்கள் டீச்சர் நல்லவர்...

இன்றளவும் இவ்விஷயம் நினைவில் நிற்பதில் இருந்தே இதன் தாக்கம் புரிகிறது.

ஆசிரியர் தினம் அன்று நல்ல விஷயம் பகிர்ந்த உங்களுக்கும் அந்த ஆசிரியருக்கும் நன்றி....

KParthasarathi said...

ஆசிரியரின் மென்மையான நல்ல குணத்தை மறக்காமல் மிகவும் அழகாக சொல்லிவிட்டீர்கள் இந்த சிறிய பதிவில். சபாஷ்!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பரவாயில்லையே..இரண்டாம் வகுப்பு நிகழ்வு கூட ஞாப்akaம் இருக்கிறதா..
அருமையான பகிர்வு.......

manichudar blogspot.com said...

அன்பான அழகான ஆசிரியர்களின் அன்பில் தோய்ந்த நினைவுகள் எப்போதும் பசுமையாய் நம் நினைவில்.அருமை. என்னை பாதித்த ஆசிரியர்களை அசை போட தூண்டியது உங்கள் பதிவு.

raji said...

எழுத்துலகில் நீங்கள் என் ஆசிரியரே

இது போல் என்றுதான் என் பதிவில் நெய் மணம் வீசுமோ?

ஸாதிகா said...

அனுபவத்தை அழகாக கூறி சுவாரஸ்யமாக்கி விட்டீர்கள்.காளியம்மாள் டீச்சருக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

vettha.(kovaikavi) said...

இரசம் சாதம் எனக்கும் மணந்தது..ம்...ம்....ம்.....
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

Yaathoramani.blogspot.com said...

அத்தை செய்ததை விட
டீச்சர் சொன்னதுதான் நமக்கு
மனதில் பாடமாகப் பதிகிறது
அதுதான் ஆசிரியருக்கு உள்ள சிறப்பே
ஆசிரியர் தின நாளில் ஒரு சூப்பர் பதிவைத்
தந்தமைக்கு வாழ்த்துக்கள்

கே. பி. ஜனா... said...

கோபத்தை சாப்பாடு மேல காட்டக் கூடாது தான்!

கதம்ப உணர்வுகள் said...

ரிஷபா.....

இதற்கு முந்தைய பகிர்வு ஒன்னு பாதி தான் படிச்சேன்...

தாத்தா கிட்ட ஒரு குழந்தை தன் கையில் இருக்கும் பொம்மைக்கு ஒரு பெயர் வைத்து....

முழுசா படிக்கலப்பா...

தேடினால் கிடைக்கலை எனக்கு :(

அது தாங்களேன் ரிஷபா...

கீதமஞ்சரி said...

அந்த அன்பால்தான் இன்றும் அத்தையும் ஆசிரியரும் நினைவில் இருக்கிறார்கள். நல்வழிப்படுத்துகிறார்கள். ஆசிரியர்கள் அமைவதும் வரம்தான். நல்ல பகிர்வு.


மஞ்சுபாஷிணிக்கு,
நீங்கள் தேடியது இந்தப் பதிவுக்கு முந்தைய பதிவு 'பூஜாவும் பவனும்'.

மோகன்ஜி said...

உங்கள் பதிவைப் படித்தவுடன் கண்ணில் கண்ணீர் திரையிட, கைப்பிடித்து அழைத்து வந்த ஆசிரியப் பெருமக்களை நினைத்துக் கொண்டேன்.. நமக்கு கிடைத்த ஆசிரியர்கள் போல் இன்றைய தலைமுறைக்கு கிடைக்கவில்லையே பெரும்பாலும் என்ற வருத்தத்தையும் நாம் பதிவு செய்யத்தானே வேண்டும்?

குறையொன்றுமில்லை. said...

எவ்வளவு பெரியபடிப்பெல்லாம் படித்திருந்தாலும் குழந்தைப்பருவ நினைவுகள் என்ருமே பசுமை நிறைந்த நினைவுகளாகத்தான் இருக்கு.

இராஜராஜேஸ்வரி said...

ஆசிரியர் தின நல் வாழ்த்துகள்.
அழகான பகிர்வு. வாழ்த்துக்கள்!

vasan said...

ஆழ‌மான ஆசிரிய‌ர் தின‌ வாழ்த்து.
மாதா, பிதா, குரு, தெய்வ‌ம்.
என்ன‌ அருமையான அலாட்மெண்ட்.

ஹ ர ணி said...

சில தொழில்நுட்பச்சிக்கல்களால் உங்கள் பக்கத்தில் கருத்துரை வழங்க முடியவில்லை. இப்போது வந்துவிட்டேன். உங்களுடன் பேச உங்கள் வலைப்பக்கம்தான் எனக்கு. எனவேதான். வழக்கம்போல அருமையான கதை இது. கோபத்தோடு எழுந்திருப்பவன் நஷ்டத்தோடு உட்காருவான் என்று பழமொழி உண்டு. நல்ல கதை. மாணவனின் கதையைச் சொல்லி ஆசிரியரின் பெருமை பேசிய கதை. வித்தியாசமான அணுகுமுறை. தொடர்ந்து வருவேன் ரிஷபன். அப்பா. அம்மா பிள்ளைகள் குடும்பத்தாருக்கு என் அன்புகள்.

நிலாமகள் said...

க‌ற்றுத்த‌ருப‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் வ‌ண‌ங்க‌த்த‌க்க‌வ‌ர்க‌ள் தானே... ம‌ன‌ம்பொறாம‌ல் ஓடிவ‌ந்து ஊட்டிவிட்ட‌ அத்தையை எப்ப‌டி ம‌ற‌க்க‌? ஆசிரிய‌ர் தின‌த்தை அவ‌ர‌வ‌ர் பார்வையில் ம‌ரியாதை செய்வ‌து போற்ற‌ வேண்டிய‌துதான். ஒவ்வொருவ‌ரிட‌மும் க‌ற்க‌ ஏதேனுமொன்று இருக்க‌த் தானே செய்கிற‌து! கவ‌ன‌மாய் க‌ருத்தில் கொள்வ‌துதான் ந‌ம் வேலை.

ம‌ஞ்சுபாஷிணி மேட‌ம் உங்க‌ ப‌ள்ளிக்கூட‌ சினேகிதியா சார்? ச‌க‌ஜ‌மான‌ விளிப்பு என‌க்கு விய‌ப்பு. அதுச‌ரி... ப‌டைத்த‌ க‌ட‌வுளையே 'எல்லாம் அவ‌ன் செய‌ல்' என‌ ப‌க்க‌த்து இருக்கை சினேக‌மாக‌ பாவிப்ப‌வ‌ர்க‌ள் தானே நாம்!

அம்பாளடியாள் said...

பிந்திய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் .
அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி .....

R. Jagannathan said...

கல்யாணி சித்தி (எனக்கு) இன்னும் எத்தனை வருஷங்கள் வாழ்ந்திருக்கணும். அந்த கலகலப்பும், பாசமும் எத்தனை காலமானாலும் மறக்குமா? நீண்ட நாட்களுக்குப் பின் என்னை கால யந்திரத்தில் பின்னோக்கி அழைத்துக் கொண்டு போனதற்கு நன்றி. அப்படியே சித்தியாவும் (கல்யாணி சித்தியின் அப்பா, என் அம்மாவுக்கு சித்தியா, எங்களுக்கும் சித்தியா!), பாட்டியும் எல்லோரும் மனசில் வந்துபோகிறார்கள். - ஜெ.