”வீட்டுக்கு போலாமா..”
“இன்னும் கொஞ்ச நேரம் தாத்தா”
“அரை மணி தானே சொன்னே.. இப்ப ஒரு மணி நேரம் ஆச்சு”
“பிளீஸ் தாத்தா”
பூங்காவின் பெஞ்சில் அமர்ந்திருந்தார்கள். சறுக்கு மரம் ஆடியாகி விட்டது.
மஞ்சள் பூக்களைத் திரட்டி யானை பொம்மைக்கு போட்டு அழகு பார்த்தாகி
விட்டது. முன்பெல்லாம் ரேடியோ அலறிக் கொண்டிருக்கும். செய்திகள்
வாசிப்பது சரோஜ் நாராயணசாமி .. இப்போது ரேடியோ இல்லை.
”தாத்தா..”
“என்னடா”
“அங்கே பாருங்க”
“நில்லு.. ஓடாதே”
அவன் ஓடிய திசையில் ஒரு குட்டி நாய். திசை தப்பி வந்த பறவை போல..
கண்களில் ஒரு மிரட்சி..
“நம்ம வீட்டுக்குக் கொண்டு போலாமா”
‘வேண்டாம்’ என்று சொல்ல நினைத்தவர் சொல்லவில்லை.
“ம்” தலையாட்டினார்.
“அது என்ன சாப்பிடும்”
“நீ என்ன சாப்பிடுவே”
“பால்.. பிஸ்கட்.. பருப்பு சாதம்..”
“அதுவும் இதெல்லாம் சாப்பிடும்”
”எங்கே படுக்கும்”
“தனியா பெட் போடலாம்..”
“ஸ்வீட் தாத்தா”
இப்போது அவன் கவனம் முழுக்க அந்த நாயின் மேல். அது இவனிடம் ஒட்டிக் கொண்டது. பின்னாலேயே ஓடியது. அல்லது அவன் அதன் பின்னால் ஓடினான்.
இன்னும் ஒரு கால் மணி கரைந்தது.
மெல்ல இருட்டுவதற்கான ஆயத்தங்களை வானம் செய்ய ஆரம்பித்தது.
லைப்ரரியில் புத்தகம் எடுக்க வந்திருந்தேன். எடுத்தாகி விட்டது.
சா. கந்தசாமியின் ‘அவன் ஆனது’ மறு வாசிப்பிற்காக.
கிளம்பும்போது அந்த நாய்க்குட்டி.. பொடியன்.. தாத்தா. எதிர் பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்த்தேன்.
கிளம்பணும்.. கிளம்பணும் என்று சொன்னவர் நிதானமாய்த்தான் இருந்தார்.
குரலில் அதட்டல் இல்லை.
“போலாமா.. இருட்டப் போறது”
“ம்..”
“நாய்க் குட்டிய என்ன பண்ணலாம்”
‘ம்ம்’
யோசித்து சொன்னான்.
“விட்டுட்டு போயிரலாம்.”
“ஏண்டா.. ஆசைப்பட்டியே”
“அதோட அம்மா தேடுவாங்க”
தாத்தா பேச்சிழந்து போனார். அதே நேரம் அவருக்குத் தெரிந்தவர் போலும்..
ஒருவர் அவரைப் பார்த்து விட்டார்.
“கணேசா.. நான் ஊர்ல இல்லடா.. என்னடா இப்படி ஆயிடுச்சு”
தாத்தா தம் நண்பனிடம் ‘வேணாம்’ என்பது போல உதட்டில் விரலை வைத்துக்
காட்டினார். அதைக் கவனிக்கும் பொறுமை இல்லை வந்தவரிடம்.
“உன் மாட்டுப் பொண்ணு.. ஆக்சிடெண்ட்ல போயிட்டாளாமே.. இந்த
பச்சைக் குழந்தைய விட்டுட்டு.. ஆடிப் போயிட்டேண்டா”
பூங்கா வாசலில் வந்த ஆட்டோவை கை தட்டி நிறுத்தினார் கணேசன் தாத்தா.
பேரனை இழுத்துக் கொண்டு ஏறி.. ஆட்டோ விர்ரென்று போனது.
திகைத்துப் போய் வந்தவர் நிற்க.. குட்டி நாய் ஆட்டோ பின்னால் சற்று தூரம் ஓடி நின்றது.
வெளியே வந்தேன். மனசுக்குள் இருட்டு கவிழ ஆரம்பித்திருந்தது.
43 comments:
குட்டிக் கதையில் மனசு கனக்கச் செய்து விட்டீர்கள்.
அருமை. பேச்சே வரலை.
மனதைப் பிசைந்த கதை! அந்தப் பையனை நினைத்தால்...! :-((
ரொம்ப பிரமாதம்! மனதை தைத்து விட்டது இந்த கதை!
அந்தக்குட்டி நாய் போலவே, பாவம், அந்தச் சிறுவன் நிலையும். மனதுக்கு சங்கடமாக ஆகிவிட்டது. நல்ல பகிர்வு.
நாய் குட்டியை "அதோட அம்மா தேடுமே" என்கிற குழந்தையின் தாய்க்கு அப்படியானதை, தாத்தா பேரன் உறவில் சொன்னது ரெம்ப டச்சிங்க இருந்தது, அப்பா கேரட்டர் மூலம் சொல்லியிருந்தால் இந்த தாக்கம் இருந்திருக்காது தானே அன்பு ரிஷபன்?
மனதைத் தொட்ட கதை.. இரண்டு பிஞ்சுகளின் நிலையும் ஒன்றுதானோ :-(
நாய்க்குட்டி மேல் அத்தனை ஆசை இருந்தும் அதன் அம்மா தேடும் என்று பரிவுடன் சொல்லும் அந்தக் குழந்தையை, அதே பரிவுடன் தேட அவன் அம்மா இல்லை என்பதைச் சொல்லி முடிக்கும்போது மனம் கனமாகிறது!
அருமையான சிறுகதை!
நெகிழ்ச்சி...
இந்த முடிவை எதிப்பார்க்கவே இல்லை.இலேசாக ஆரம்பித்த கதை கடைசியில் ஒரு சோகத்தை உண்டுபண்ணிவிட்டது
மனதைத் தைத்த கதை.... பூங்காவில் ஆரம்பித்த சுகமாய் ஆரம்பித்த கதை, இப்படி முடிந்து விட்டதே...
மனதைகனக்கச்செய்த கதை.
பதிவின் முடிவில் வலி உணரப்படுகிறது..
அழகாக எழுதப்பட்ட கதை. இந்த நண்பர் மாதிரி நேரம்,காலம், சூழ்நிலை பார்க்காமல் பேசுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். - ஜெ.
அழகாக எழுதப்பட்ட கதை. இந்த நண்பர் மாதிரி நேரம்,காலம், சூழ்நிலை பார்க்காமல் பேசுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். - ஜெ.
நெஞ்சம் கனக்கின்றது ..
மனது கனத்து விட்டது. பாவம் ”அம்மா தேடுமே” என்று சொன்ன குழந்தைக்கு அம்மா இல்லை...
மிக சிறிய கதை உள்ளம் என்னவோ கனத்து போனது பாராட்டுகள் தொடர்க...
குட்டிக்கதையானாலும் மனதை கெட்டியாக நனைத்து விட்டது.
நெகிழவைக்கும் கதை.
உணர்வு தரும் கதை அருமையாய் வந்திருக்கு
குழந்தையின் ஏக்கத்தை அதன் வார்த்தைகளிலும், தாத்தாவின் கோபத்தை அவரது மெளனத்திலும் புரியவைத்துவிட்டீர்கள். சிறிய கதைக்குள் பெரிய அழுத்தம்.
மனதுக்குள் பாதிப்பு ஏற்படுத்தி விட்டது.
கனமான கதை.மனதையும் கனமாக்கியது
ஆஹா..அற்புதமான சிறுகதை..ஒரு ஆர்ட் ஃபிலிம் பார்த்தது போன்ற பிரமிப்பில்.....
,ரிஷபன், நான் அந்த பூங்காவிலேயே நிக்கிறேனே....என்ன இப்படி பண்ணிட்டீங்க .எதாவது சொல்லுங்க..எனக்கு மின்னாடி அந்த நாய்க்குட்டி வேற...
சோகமான கதை. நல்லது. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
அய்யோ க்யூட்டான நாய்க்குட்டி படம். ஆனால் கதை, மனசு கனத்துப் போயிற்று.
மனதை பிசைந்த கதை.
மனம் கனக்க வைத்த பகிர்வு!
.................
எனக்கு தெரியும்....
கண்டிப்பா இது கதை இல்லை....
நிஜம்... சுடும் நிஜம்..... கண்ணீர் அடக்கி அதை வெளிக்காட்ட முடியா இயலாமை நிஜம்....
சின்ன குழந்தையை விளையாட கூட்டிட்டு வந்த பல தாத்தாக்களில் இவரும் ஒன்று என்று தான் படிக்க ஆரம்பிச்சவங்க எல்லாருமே நினைச்சிருப்பாங்க கண்டிப்பா....
ஆனா எனக்கு மட்டும் படிக்கும்போதே இதில் என்னவோ ஒரு அழுத்தமான ஒரு சோகம் இருக்கப்போகுதுன்னு பயந்துக்கிட்டே தான் படிச்சேன். ஏன்னா உங்க படம் அதை காட்டிக்கொடுத்துருச்சு...
சாதாரண கதை போல தான் இது முடியும்னு நினைச்சிருப்பாங்க வாசிச்சவங்க... நானும் அப்டியே... அனாதையா திரிந்த நாய்க்குட்டி.... அதன் மிரட்சி பார்வையில் விட்டு போக மனசில்லாம வீட்டுக்கொண்டு போய் அம்மா கிட்ட திட்டுவாங்கினாலும் பரவால்ல அப்டின்னு சொல்லி வீட்ல போய் மருமகளிடம் திட்டு வாங்கப்போகும் காட்சியா முடியும்னு நினைச்சேன்.
தனித்துவம் உங்க படைப்புகளில் எல்லாமே நான் காண்பதுண்டு.. இதுவும் அப்டியே..... என்னப்பா உன் மருமக ஆக்சிடெண்ட்ல :( படிச்சப்ப சட்டுனு மனசு உலுக்கிச்சு.. ஐயோ ஐயோ இந்த குட்டி குழந்தைக்கு இதன் பயங்கரம் தெரியாம தான் விளையாடிண்டு இருக்கா?? அம்மா எங்க தாத்தா அப்டின்னு கேட்டிருக்குமோ? அதன்கவனம் திசைமாற்ற தான் இங்க விளையாட கூட்டிட்டு வந்திருப்பாரோ? வந்த இடத்தில் இப்படி ஒரு குட்டி நாய் தன் தாயை தொலைத்து பரிதவித்து பார்த்து குழந்தை இரக்கப்படுவதை தன் இயலாமையுடன் பார்க்கிறாரோ?
ஆனால் குழந்தை கடைசில இப்படி சொல்லிடுத்தே :( அம்மாக்கிட்ட இருக்கட்டும் தேடுமே அம்மா....
இனி இந்த குழந்தைக்கு எப்படி சொல்வார் சமாதானம்? தாயை எப்படி கொண்டு வரமுடியும்?
ஆரம்பத்தில் இருந்தே தாத்தாவின் மனதில் சோகமும் வெறுமையும் தான் இப்படி வெளிப்பட்டுதா வரிகளா?
மனதை தொட்ட வரிகள் ரிஷபா....
கண்கலங்கறதை தடுக்கமுடியல :(
அருமையான பகிர்வுப்பா...
எதிர்பாரா கனத்த முடிவு.
சமீபத்தில் எங்கள் குடும்பத்தில் தந்தையை இழந்த இரண்டு வயது பிஞ்சின் நிலையைப் போலிருக்கீறது. இப்பவும் தந்தையின் செருப்பைப் பத்திரமாக எடுத்துவைத்து, அப்பா வருவார் என்று சொல்லிக்கொண்டிருக்கிறானாம்.
மனத்தைக் கனக்க வைத்தாலும் அருமையான கதை.
அன்பரே!
மனம் நிறைய எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன்
ஆனால்..
இதயம் கனத்துப்போய்
கிடக்கிறது
அழகிய சின்ன ஓவியம்
திடீரென்று அழித்தது போன்ற உணர்வு
தொடர வாழ்த்துக்கள்!
புலவர் சா இராமாநுசம்
நானும் அந்த ஆட்டோ பின்னாடி ஓடினேன் . அந்த குழந்தையை அணைத்து முத்தமிட. ஆனால் மனம் கனத்து நிற்கிறேன்.
நானும் அந்த ஆட்டோ பின்னாடி ஓடினேன் . அந்த குழந்தையை அணைத்து முத்தமிட. ஆனால் மனம் கனத்து நிற்கிறேன்.
சிறுவன் என்ன பேசுவானோ எப்படி பேசுவானோ அதே வார்த்தைகள். ரசித்துப் படித்தேன். அருமையான சிறுகதை
am touched! chance-e-illa!
மனதுக்கு சங்கடமாக ஆகிவிட்டது. நல்ல பகிர்வு.
பூங்கொத்து!
ரிஷபன் சார்! மனசு இன்னமும் நாய்குட்டி போல கதையை சுத்தி வருது. ஸ்திமிதப்பட கொஞ்ச நேரம் ஆகும் எனக்கு.
வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_30.html -ல் உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். முடிந்த போது பார்க்கவும்!
Dramatic end. But certainly makes an impact.
Post a Comment