துண்டு துண்டாய் மனசுக்குள் வெப்ப வரிகள் ஓடின. கதிரேசன் இப்போது அமர்ந்திருந்தது மூலைத்தோப்பில். அதாவது 'மூலைத் தோப்பு' என்று அழைக்கப்பட்ட இடத்தில்.
கிட்டத்தட்ட ஜந்நூறுக்கும் மேற்பட்ட வளர்ந்த மரங்கள், இன்று வெட்டிச் சாய்க்கப்பட்டு இடமே குருஷேத்திரமாய்க் காட்சி தந்தது.
மரத்துக்கு ஆவி உண்டா? உண்டு என்றுதான் தோன்றியது கதிரேசனுக்கு. இதோ கண்ணெதிரே எண்ணற்ற ஆவிகள். மனிதரின் ஆவிகள் போல வெண்ணிறமாய் இல்லாமல் பசுமையான ஆவிகள். தீனமாய்க் குரலெழுப்பிக்கொண்டு குவிக்கப்பட்டிருந்த மரத்துண்டுகளைச் சுற்றிப் பிலாக்கணம் வைத்தன. வயதான இளைய ஆவிகளை மனசு உணர்ந்தபோது கதிரேசனுக்கு யாரோ நெருங்கிய உறவினர்களே கூண்டோடு கைலாசம் போன மாதிரி துக்கம் பீறிட்டது.
"கதிரு" செல்வமணியின் குரல் கேட்டது.
சைக்கிளை மெயின் ரோட்டிலேயே நிறுத்திவிட்டு நடந்து வந்தான்.
"உன்னைத் தேடிக்கிட்டு வீட்டுக்குப் போனேன். நீ வெளியே போயிருக்கிறதாச் சொன்னாங்க. வழியில் நம்ம தங்கராசுவைப் பார்த்தேன். அவர்தான் நீ இங்கே இருக்கிறதாச் சொன்னாரு."
நட்பின் குரல் செவிக்கு எட்டாமல் புலன்கள் யாவும் ஒரே மயக்கத்தில் இருந்தன.
"பரவாயில்லை. இப்பவாச்சும் மனசு வந்து தோப்பை வித்தாரே. பக்கத்து இடமெல்லாம் பிளாட் போட்டு வித்தாச்சு. இது மட்டும் நடுவுல திருஷ்டியா நின்னுச்சு. யப்பா. . . எவ்வளோ பெரிய தோப்பு! எழுபதுக்குக் குறைய மாட்டேன்னு சொல்லிக்கிட்டு இருந்தாரே. என்ன விலைக்குப் போச்சாம்...?"
வெற்றிடம் தந்த பிரமிப்பில் செல்வம் பேசிக்கொண்டு போனான். எதையும் பணத்தால் அளவிடும் மனிதர். இதே தோப்பு போன மாதம்கூட சுற்றிலும் கிளிகளும் குருவிகளுமாய்ப் பச்சைப் பசேலேன்று கவிதை கொஞ்சுகிற அழகில் இருந்தது. அப்படி ஒன்றும் நஷ்டம் ஏற்பட்டதில்லை. பராமரித்த செலவுக்கு மேலாக இத்தனை வருஷமாய்ப் பலன் தந்த தோப்புதான்.
பணமாய்க் கொட்டிய தோப்பு அவ்வப்போது மனத்துக்குக் கொடுத்த குதூகலம், பணத்தால் அளவிட இயலுமா?
'இன்னைக்குத் தோப்புலதான் சாப்பாடு'
நுனி இலைகளும் அடுக்கு டிபன் கேரியர்களும் வந்து விடும். அன்றைய தினம் முழுவதும் தோப்புக்குள் ஓடுவதும் ஆடுவதும்.
பெரியவர்கள் கம்பளம் விரித்து அமர்ந்திருக்க, சிறுவர்களின் இரைச்சல் புதிய சுதந்திரத்தில்.
ஓடு... ஓடு... எல்லையற்ற தோப்புக்குள் எங்கே வேண்டுமானாலும் ஓடு. ஒளிந்து கொள்.
"ரெடி ஜூட்டா."
"எங்கே, கண்டுபிடி பார்க்கலாம்"
ஜோதி எங்கே, மீனா எங்கே, வேலு எங்கே? என்று அலைந்தது போக, இன்று இந்த மரம் எங்கே, அந்த மரம் எங்கே என்று பதற வைத்து விட்டதே...!
"என்னடா?"
மரத்தில் பெயர் செதுக்கியவனை, தாத்தாவின் குரல் அதட்டியது.
"எம்பெரு தாத்தா. இது எம்மரம்"
"இது என்னோடது"
"இது எனக்கு"
"வச்சுக்குங்கடா... பயலுவளா"
நட்டதோடு சரி. நீரூற்றினால் சொந்தம் கொண்டாடி விட முடியுமா? உள்ளிருந்து பட்டுப் போகாமல், எந்த சக்தி காத்து வந்தது?
முட்டாள் மனிதர்கள். இன்றைக்குத் தேவை எனில் சொந்தம் கொண்டாடுவதும், அதைவிட வேறு பலன் எனில் வெட்டி எறிவதும்... சுயநலப் பிசாசுகள்.
"டேய்... என்னடா?"
செல்வமணி கதிரேசனைப் பற்றி உலுக்கினான்.
"ப்ச்"
"எல்லாரும் எப்ப வராங்க?
"நாளைக்கு"
தகவல்கள். ச்சே. பேசவே அலுத்தது. 'என்னை விட்டு விடு' என்று கெஞ்சத் தோன்றியது. விடமாட்டான். லட்சங்கள். பிரமிக்க வைக்கும் தொகை. இன்றைய செய்தியே கதிரேசனின் குடும்பத்துக்குக் கிட்டிய அதிஷ்டம்.
"தாத்தா எப்படி இருக்காரு?"
"இருக்காரு"
"வெளியே நடமாட்டமே இல்லையே"
கதிரேசன் எழுந்து விட்டான். இனியும் இங்கிருக்க முடியாது. செல்வம் விடமாட்டான்.
"போகலாமா?"
கதிரேசன் தலையசைத்தான். செல்வத்தின் குரலில் படபடப்பு.
"நான் கேட்டது நினைவுல இருக்கா.. கதிரு?"
கதிரேசனின் பங்கில் ஒரு தொகையைக் கடனாகக் கேட்டிருந்தான். விலைக்கு வருகிற அரிசி மில்லை வாங்க உத்தேசம். கதிரேசன் வெறும் தலையசைத்தது செல்வத்திற்குப் படபடப்பை அதிகமாக்கியது.
"உன்னைத்தான் நம்பியிருக்கேன்... கதிரு"
திரும்பிப் பார்த்துப் புன்னகை புரிந்தான். "ஞாபகம் இருக்கு... செல்வம்"
"அவனைக் கிரயம் பண்ண விடாமே தடுத்து வச்சிருக்கேன்..."
"நாளைக்கு அவங்க வந்த பிறகுதான் முடிவாகப் போகுது செல்வம்"
"விற்கிறதா முடிவுதானே? பின்னே ஏன் மரத்தை வெட்டினாங்க...?"
உடனுக்குடன் முடிவெடுக்கத் தூண்டும் பதற்றம்.
மெயின் ரோட்டிற்கு வந்து விட்டார்கள்.
"வீட்டுல கொண்டு விட்டுட்டுப் போறேன் கதிரு... வா." ஒற்றைக் காலை ஊன்றி சைக்கிளில் பேலன்ஸ் செய்து நின்றான்.
"இல்லை. நீ போ. எனக்கு வேற வேலை ஒண்ணு இருக்கு"
"நாளைக்குப் பார்ப்போம். வரட்டுமா?"
செல்வம் சைக்கிளை மிதித்துப்போனபோது உள்ளுக்குள் கலவரப்பட்டிருந்தான்.
காக்கி நிஜார், அரைக்கை கத்தார் சட்டையில் தங்கராசுவைப் பார்ப்பவர்கள் அவர் வயது குறித்து ஆலோசிப்பார்கள். ஐம்பதைத் தாண்டிய இளமை அவரிடம் இருந்தது.
"வா... தம்பி... செல்வத்தைப் பார்த்தியா?
"ம்...தோப்புக்கு... வந்தான்"
'தோப்பு' என்று உச்சரித்தபோது குரல் பிசிறியது. தங்கராசுவும் பெருமூச்சு விட்டார்.
"என் கையால வளர்ந்த தோப்பு, சின்னப் புள்ளையில் எங்க அய்யா என்னைக் கொண்டாந்து விட்டாரு. படிப்பு ஏறலை. ஆனா மரத்தைப் பார்த்தா வயசு சொல்லிடுவேன்"
புத்தகப் படிப்பு இல்லைதான். அனுபவம் தந்த ஆரோக்கியப் படிப்பு அவரிடம் இருந்தது.
"திடீர்னு இப்படி செஞ்சுப் பிட்டாங்களே. என்னைக் கூப்பிட்டு, உனக்கு எவ்வளவு வேணும் சொல்லு, தோப்பை விற்கப் போறம்னு பெரியவரு சொன்னதும் ஆடிப் போயிட்டேம்பா.."
கதிரேசனுக்குத் தலை நிமிர்ந்து அவரைப் பார்க்கும் துணிச்சல் இல்லை.
"எப்படி இருந்த ஊரு. பச்சு... பச்சுனு கண்ணும் நெஞ்சும் குளுந்து போவும். இப்ப ஊருல பாதிப் பசுமை அழிஞ்சு போச்சு" இயலாமை குரலில் தொனிக்க கிழவர் விசும்பிய தொனியில் பேசினார்.
"செல்வம் எதுக்கு உன்னைத் தேடறான்?"
"ரைஸ் மில் விலைக்கு வருதாம்"
தங்கராசு பெரியதாய்ச் சிரித்தார். "வயக்காடே இல்லாம போகப் போவது. இவன் ரைஸ் மில்லு வாங்கறானாமா. எதுக்காம்? இடிச்சுப்புட்டு சினிமா தியேட்டர் கட்டவா? இப்பதான் விளை நெலத்தை அழிச்சு பேக்டரி கட்டரானுங்களே. பக்கத்து ஊருல பெரிய கலாட்டா ஆயிருச்சாமே. தெரியுமா?" என்றார்.
"தெரியும். ஆனால் கூக்குரல் வீணாகித்தான் போனது. கெமிகல் பேக்டரி வருவது உறுதியாகி விட்டது. அதே நபர்தான் இந்த இடத்தையும் வாங்குகிறார். வேலைக்கு அமர்த்துகிற பெரிய அதிகாரிகளுக்கு 'குவார்ட்டர்ஸ்' கட்டப் போகிறாராம்."
"ஏம்பா... கெடுதல்னு தெரிஞ்சும் துணிஞ்சு செய்றாங்களே... எப்படிப்பா?" கிழவரின் அறியாமைக் குரல் வினோதமாய் ஒலித்தது.
"பணந்தான். கட்டு கட்டா வரப்போகிற லாபம்."
"பெத்த தாயை வேலை பேசிடுவாங்க. சரியான அனம் கெடைச்சுதுன்னு எங்கய்யா சமயத்துல சொல்லுவாரு. நெசந்தான் போலிருக்கு" என்று அலுத்துக் கொண்டார்.
"வரேன்" கதிரேசன் எழுந்தான்.
இங்க வந்து ஆறுதல் தேட முற்பட்டு, மேலும் இதயம் கனத்துப் போனதே மிச்சம்.
குடும்ப நபர்களைப் பேச்சளவில் எண்ணிக்கை இட்டது போக, இன்று அவ்வளவு பேரையும் நேரில் அணிவகுத்தாகி விட்டது. கல்யாணம், துக்கம் இரண்டிலும் மட்டும் இவ்வளவு நபர்களும் ஒன்று சேருவார்கள்.
இன்று கல்யாணம் சந்தோஷமா... இல்லை...
கதிரேசனுக்குத் தன் நினைப்பு ஓடிய வேகம் திகைப்பைத் தந்தது. "இந்த அளவுக்கா பாதிக்கப்பட்டு விட்டேன்?"
"என்னடா... எல்லாரும் வந்தாச்சா?" பெரியவரின் குரல் பாதி அதட்டலும், பாதி உல்லாசமுமாகக் கேட்டது.
கூட்டம் அமைதி காத்தது. தாத்தா எழுப்பி அமர வைக்கப்பட்டிருந்தார். விவரம் அவருக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
"தொண்ணூறுக்குப் பேசி கடைசியா எழுபத்தஞ்சுல தெகைஞ்சது." வியப்பில் விழிகள் விரிய, அவரவர் பங்கு பற்றிக் கணக்கிடத் தொடங்கினர்.
"சமமா பிரிச்சிருக்கு. புள்ளை, பொண்ணு எந்த பேதமும் வேணாம்னு சொல்லிட்டாரு" மருமகன்கள் முகங்களிலும் மலர்ச்சி தெரிந்தது.
"தாத்தா பங்குன்னு பிரிச்சதை அவரு தனக்காவ வச்சுக்கலை"
என்ன செய்யப் போகிறார்...?
"பாதியைக் கதிரேசனுக்கு... மூத்த பேரனாச்சே... மீதியை மட்டும் பேரப் புள்ளைங்க எல்லாருக்கும் பிரிக்கச் சொல்லிட்டாரு..."
கதிரேசனைப் பொறாமையாய்ப் பார்த்தார்கள்.
"இன்னும் பத்திரம் பதியலை. உங்க எல்லாரையும் கலந்து பேசிட்டு முடிவு சொல்லணும். ஆட்சேபனை எதுவும் இருந்தா சொல்லிடலாம். நம்ப குடும்பத்துல யாருக்கும் சங்கடம் இருக்கக் கூடாதுன்னுதான்..."
ஜனநாயக ரீதியில் முடிவை எடுக்க உத்தேசம் என்று தெரியப்படுத்தி பெரியவர் மெளனமானார்.
கூட்டத்தில் கிசுகிசுப்புக் குரல்கள். சில நிமிடங்களுக்குப் பின் லேசான அமைதி.
"எங்களுக்குச் சம்மதம்..."
அப்போது கதிரேசன் எழுந்தான். "என்னை மன்னிக்கணும். உங்களோட ஒத்து வராம வேறு கருத்தைச் சொல்றதுக்கு."
கூட்டம் அவனை விசித்திரமாகப் பார்த்தது. கதிரேசன் எழுந்து நின்றவன் நகர்ந்து போனான். பெரிய ஹாலில் மற்றவர்கள் ஒருபுறம். இவன் மட்டும் தனியே. எதிரே.
"என்னைப் படிக்க வச்சீங்க. வளர்ந்து பெரிய ஆளாக்கினீங்க. இதுக்கெல்லாம் நன்றி செய்ய என்னால முடியாது. இதேபோல நம்ம மூலைத்தோப்பு கொடுத்த பலனுக்குப் பதில் நன்றி செய்யவும் நம்மால முடியாது. பெரியவங்க என் கருத்தை ஏத்துப்பீங்கன்னு நம்பறேன்"
என்ன சொல்ல வருகிறான்...?
"சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்பட்டு வருதுன்னு நிறையக் கேள்விப்படறோம். படிக்கிறோம். துன்பம் அனுபவக்கிறவங்க படற கஷ்டம் டிவியில் காட்டறாங்க. பேசறாங்க. ஆனா நம்மைப் பொறுத்தவரை எந்தப் பாதிப்பும் இல்லை. நம்ம சுயலாபம்தான் பெரிசாப் போச்சு..."
"நீ சின்னவன். வாயை மூடு." மூத்த மருமகன் குரல் கொடுத்தார் சற்றுக் கோபமாகவே.
கதிரேசனின் தந்தை கையசைத்தார். "பொறுங்க... அவன் என்னதான் சொல்ல வரான்னு பார்க்கலாம்.
மருமகன் ஈகோ பாதித்த உணர்வில் அமர்ந்தார்.
"நம்ம ஊருல மூலைத்தோப்பால வந்த இயற்கை சந்தோஷம் இன்னைக்கு அழிக்கப்பட்டாச்சு. என்னால பெரிய அளவுல அதை ஈடுகட்ட முடியாது. மத்தவங்க வழிக்கு நான் குறுக்கே வரலை. ஆனா என்னோட வேண்டுகோள் இதுதான். எனக்கு பங்காத் தரப்போகிற தொகை. அப்புறம் இதோ இவங்க தொகை... அப்புறம் இதோ இவங்க பங்கு... இதை மொத்தமா கணக்குப் போட்டு அதற்கு ஈடான நிலத்தை மூலைத் தோப்புல கிரயம் பண்ணித் தர்றோம்... எங்க பேர்லயே விட்டு வச்சிடணும். தயவுசெஞ்சு ஏன் கோரிக்கையை ஏற்பீங்கன்னு நம்புறேன்..." என்றவன் கையசைத்தான்.
வரிசையாய் ஒவ்வொரு குடும்பத்துக் குழந்தைகளும் எழுந்து கதிரேசனின் அருகில் வந்து நின்றனர்.
ஒவ்வொருவருவரின் முகத்திலும் உறுதி, தெளிவு, நிதானம். பெரியவர்கள் ஆடித்தான் போனார்கள்.
இது தனிக்குரல். எதிர்ப்பு இல்லை. சூழலின் மகத்துவம் உணர்ந்த இளைய சமுதாயத்தின் ஒட்டு மொத்தக் கெஞ்சுதல்.
பெரியவர் எழுந்து வந்து கதிரேசனின் தோளைத் தட்டினார். "சரிப்பா"
தங்கராசுவின் கண்களில் மின்னியது சந்தோஷம். அவரைச் சுற்றி இளமையின் அணிவகுப்பு.
சீர்திருத்தப்பட்ட நிலத்தின் நட்டு வைக்க இளங்கன்றுகள்.
"கொண்டா... என்னோட கடைசி மூச்சுக்குள்ளே புது மூலைத்தோப்பைப் பார்த்திருவேன்ல..." கை நீட்டி வாங்கினார்.
எதிர்காலம் நம்பிக்கையாய் நடப்பட்டது.
(நன்றி : அமுதசுரபி)

23 comments:
ம்ம்ம் ...
என்ன சொல்ல
உங்க கதை எப்பவுமே தனித்துவம் பெற்றுதான் சார்
மூலைத்தோப்பு.... மனதைத் தொட்டது ரிஷபன் ஜி! இம்முறை ஸ்ரீரங்கம் வந்தபோது மூலைத்தோப்பு பக்கம் சென்றிருந்தேன். எல்லா தோப்புகளும் அழிந்து விதவிதமாக அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். தாத்தாச்சாரியார் கார்டன் முழுவதும் வீடுகளாகிவிட்டதே.
அருமையான கதை. ஏக்கப் பெருமூச்சுடன் வாசித்தேன்.
மண்ணிலிருக்கும் பசுமை மறைந்தாலும் மனதிலாவது பசுமைத் துளிர்க்கிறதே.... அருமையான படைப்பு.
.
மனதைத் தொட்ட ஏ கிளாஸ் கதை.
அவரைச் சுற்றி இளமையின் அணிவகுப்பு.
சீர்திருத்தப்பட்ட நிலத்தின் நட்டு வைக்க இளங்கன்றுகள்.
மனதில் பசுமை
பயிராக்கிய அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
பசுமையான சுற்றுச்சூழலை பணத்திற்காகக் கெடுக்காமல்,
காக்க வேண்டிய அவசியத்தை ஓர் இளஞ்சிறுவன் மூலம் கதையில் வலியுறுத்திக் கொண்டு வந்து, ”எதிர்காலம் நம்பிக்கையாய் நடப்பட்டது”, என்ற இறுதி வரிகளுடன் முடித்துள்ளது மிகச்சிறப்பாகவே உள்ளது.
அமுதசுரபியில் வெளிவந்துள்ளதும் மகிழ்வளிக்கிறது.
பாராட்டுக்கள்.
கதையின் தலைப்பும், கதையின் போக்கும், வலியுறுத்தியுள்ள விஷயங்களும், கதையின் முடிவும், காட்டப்பட்டுள்ள படங்களும் மிகவும் ஜோராக அமைந்துள்ளன.
அருமையான, பசுமையான, பசுமரத்து ஆணி போல மனதில் பதிந்த படைப்பு.
வாழ்த்துக்கள்.
vgk
மரங்களைக் கொன்று ஆவியாய் அலையவிடும் மனிதர்கள் மத்தியில் ஈரமனசுகள் இன்னும் இருப்பதை நினைத்தால் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை துளிர்க்கிறது. மனம் தொட்ட கதை ரிஷபன் சார்.
ஸ்ரீரங்கத்துக்காரர்கள் மூலைத் தோப்பை சிலாகித்துப் பேசுவார்கள். உங்கள் கதையில் அதன் ஏக்கமும் தவிப்பும் தெரிகிறது. கதை ஓட்டம் அருமை.
அருமையான கதை.. ஒவ்வொரு முறையும் ஊருக்குப் போறப்ப விளை நிலங்களை மனைகளாகப் பார்க்கும் அதிர்ச்சியை இக்கதையை வாசிக்கையிலும் உணர்ந்தேன்.
அருமை. நீண்ட நாளுக்கப்புறம் உங்கள் கதையை இங்கு வாசிக்கிறோம். பாசிடிவாக முடித்தது நிறைவு
நம்பிக்கை! இனி அது ஒன்றுதான் ஆறுதல். நாங்கள் இருந்த மேல அடயவளஞ்ஜான் முனியப்பன் கோயில் பக்கத்தில் இருந்த ஸ்டோர் பின்னால் ஒரு பெரிய தென்னந்தோப்பு இருந்தது (ஹோமியோபதி டாக்டர் ஒருவருடையது). இப்போது எல்லாம் சேர்ந்து அபார்ட்மென்ட் ப்ளாக். இபோது வரும்போதெல்லாம் அந்த இடத்தைப் பார்க்க, கொஞ்ஜம் நெஞ்ஜு அடைத்துக் கொள்கிறது. அதோடு இல்லை, சென்னை - திருச்சி வழியில் எத்தனை விளை நிலங்கள் வீடுகளுக்கான ப்ளாட் ஆக மாறுகின்றன. இன்னும் 5, 10 வருஷத்தில், நாம் அரிசிக்கு எங்கு போவோம்? - ஜெ.
இளைய சமுதாயத்தின் கைகளில் தான் பசுமையைக் காக்க வேண்டிய கடப்பாடு இருக்கிறது என்பதை அழுததமாய் எடுத்துச் சொல்லியது கதை. உங்களின் கதைகள் எப்போதுமே கனமான விஷயங்கள் தாங்கியவைதான். இப்போதும் மனதைத் தொட்டு அசைக்கத் தவறவில்லை. அருமை சார்.
மனதை தொட்டகதை. கல்கியிலும் உங்க கதை ஊர்மிளா வை இன்னிக்குதான் படிக்க முடிஞ்சது நல்ல எழுத்தாற்றல் வாழ்த்துகள்.
ரசனையான கதை... இக்காலத்திற்கு தேவையான கருத்துக்கள் , இளைஞர்கள் தோள் தட்டும் கதை வாழ்த்துக்கள்
முட்டாள் மனிதர்கள். இன்றைக்குத் தேவை எனில் சொந்தம் கொண்டாடுவதும், அதைவிட வேறு பலன் எனில் வெட்டி எறிவதும்... சுயநலப் பிசாசுகள்.//
சுயநல மனிதர்கள் மனம்மாறி மரம் நடுவதும், இளையவர்கள் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிப்பதும்! மூலை தோப்பில் மறுபடியும், கிளி, குயில், மயில் என பறவைகளின் கீச் கீச் ஒலி இப்போதே கேட்க தொடங்கி விட்டது என் காதுகளில்.
பசுமை பாரதம் வருக!
வளம் தருக!
இந்த கதைஅமுதசுரபியில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.
பருவத்தே பயிர் செய்தல் போன்ற
காலத்தே வந்த அருமையான் கதை.
விளைநிலத்தை, விலைநிலமாக்கும்
ஓரிருவரின் மனத்தையேனும் இக்கதை மாற்றும்.
அதுவே திரு.ரிஷபனின் ச்மூகம் சார்ந்த
எழுத்துக்கான வெற்றியாய் அமையும்.
ப்ரமாதம் சார்! கண்கள் கசிந்துவிட்டன ...கதிரின் தவிப்பும் துடிப்பும்... செதுக்கலான வரிகளும் வார்த்தைகளும் அசத்தல்! அவரவர் நிலையை துல்லியமாகச் சொல்லி ஒதுங்கிக் கொள்கிறீர்கள் வாசிப்பவர் மனப்போக்கில் நம்பிக்கையுடன்!
தோப்புக்கள் எல்லாம் கட்டிடங்களாக மாறிக்கொண்டிருக்கும் காலத்தில் "நம்பிக்கை நடப்பட்டது". அருமை.
சுற்றி நடக்கும் ஒவ்வொன்றையும் ஊன்றி கவனித்து ஒரு வித பொறுப்புணர்வுடன் அதனை வெளிப்படுத்துகிறீர்கள்.
எந்த விஷயத்தையும் பல வித உணர்வுகள் கலந்து நீங்கள் தரும் பாணி தனிச்சிறப்புடையது.
மூலைத்தோப்பு மூலையில் கிடக்காமல் சிம்மாசனம் போட்டு அமர்கிறது.பகிர்விற்கு நன்றி
தங்கள் படைப்பில் ஒவ்வொரு முறையும் நான் கற்றுக் கொள்ள ஏதேனும் இருக்கிறது
நிறைவான கதை..... கதிரைப் போன்ற மனம் உடையவள் நான். இந்த பரபரப்பான வேலை, புகைமூட்டம் நிறைந்த இடம் எல்லாவற்றையும் விட்டு விலகி எங்காவது போய் மரங்களுடன், செடிகளுடன் பேசி வாழ ஏங்குபவள்.... உங்கள் கதை என்னை நெகிழ வைத்தது.... இன்றைய உலகின் யதார்த்தமும், கதிரின் மனமும், அதன் துடிப்பும் மிக அழகாக சொல்லப் பட்டிருக்கிறது.... இளைய சமுதாயம் கதிரின் மன நிலையில் தான் இருக்கிறது. நாம் தான் அவர்களை திசை மாற்றுகிறோம். ஒரு நல்ல கதையை வாசித்த திருப்திக்கு நன்றி ரிஷபன் சார்.....
Post a Comment