September 22, 2012

பரிசு

எட்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு பெண்ணைச் சந்திக்கும்போது என்னென்ன உணர்வுகள் வருமோ, சந்தோஷமும் சில சங்கடங்களும் சந்திராவைப் பார்த்தபோது.

உண்மையில், சந்திராதான் என்னை அடையாளம் கண்டுகொண்டாள்.
"பாலா... நீதானே?... ஸ்ஸ்... நீங்க...?"
என் கணிசமான தொந்தி, மூக்குக் கண்ணாடி, முன் வழுக்கை, காதோரம் மட்டுமின்றி பரவலாய்த் தெரிந்த நரை, இவை மீறிய கண்டிப்பு.
"சந்... சந்திரா..." என்றேன் ஒரு திடுக்கிடலுடன். பெண்கள் வயதானதை ஒப்புக் கொள்வதில்லை. ஜோடனைகள் தவிர்த்து, ஒப்பனையின்றி நின்ற சந்திராவிடம் இன்னமும் பழைய வசீகரச் சிரிப்பு மிச்சமிருந்தது.
“பாலா...!” என்றாள் மீண்டும் உரிமையாய். குரல் நெகிழ்ந்திருந்தது. கண்களில் சட்டென்று ஈரம் பூத்துக்கொண்டது. கூட்டத்தில் தொலைந்த சிறுமி, உரியவர்களில் ஒருவனை இனங்கண்ட பரவசம், நிம்மதி போல் முகத்தெளிவு!
"எதாவது சாப்பிடலாமா?" என்றாள்.
"எனக்குப் பசிக்கலே" என்றவன், சுதாரித்தேன். அழைப்பு பசிக்காக இல்லை. அமர்ந்து பேச ஓரிடம்.
"வா போகலாம்!" என்றேன். கை தன்னிச்சையாய் உயர்ந்து சட்டைப் பையைத் தொட்டுக்கொண்டது. அவசியம் இல்லைதான். கூடுதலான தொகைதான் உள் பாக்கெட்டில். மூவாயிரம். அதை மீறியா சாப்பிட்டுவிடப் போகிறோம்!
"என்ன வேணும்?..."
"கூல்ட்ரிங் எதாச்சும்..." சர்வர் நகர்ந்து போக, என்னைப் பார்த்தாள். அவள் அளவு என்னுள் பரவச அலைகள் இல்லை. புரிந்திருக்க வேண்டும்.
"பாலா! நீ மாறிட்டே!"
"நீயும்தான். கொஞ்சம் பருமன்... முகங்கூட லேசா..."
"பச்... நான் அதை சொல்லலே. மனசுல..."
"பாலா! உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?"
"ம்..." என்றேன் தலை கவிழ்ந்து.
"ஓ!..."
என்னவோ நினைவுகள் அவளுக்குள் ஓடியிருக்க வேண்டும். மிகப் பெரிய விஷயத்தை ஜீரணித்தவள் போலப் பெருமூச்சு விட்டாள்.
"எத்தனை பசங்க?"
"ஒரு பையன். சந்திரன்னு பேரு."
சர்வர் கொண்டு வைத்த பாட்டில்களை வெறித்தாள்.
"பாலா! நான் இப்ப டில்லியில் இல்லை. திரும்ப வந்துட்டேன். பெரியப்பாவும் தவறிட்டாரு."
"அடடா!..."
"கணேசன் என்னை விரட்டிவிட்டான். ப்ச்... போன்னு ரொம்ப நாகரீகமா..."
கூல்ட்ரிங்க் குடிக்க மனமின்றி ஸ்ட்ராவை உருட்டினேன்.
"உன் ஞாபகம்தான் வந்தது பாலா..."
'சந்திரா! என்னைக் கொல்லாதே' என்று கூவ வேண்டும் போலிருந்தது.
"எம் பேர்லதானே தப்பு பாலா?" குரல் பிசிறியது. தன்னிரக்கம் வழிந்தோடக் கேட்டாள்.
"இல்லை சந்திரா. எனக்கு அதிர்ஷ்டம் இல்லே."
"பச்! பொய் சொல்லாதே பாலா! நீ இப்ப வெல் ஸெட்டில்டு."
அவள் என்னை உற்றுப் பார்த்தது உறுத்தியது. குற்றம் சாட்டும் பார்வை. இதற்கு முன், சரியாகப் பத்து வருடங்களுக்கு முன், அவள் பார்வையில் என் மீது காதல்தான் வழிந்திருக்கும்.
******
"வேண்டாம் பாலா! ப்ளீஸ்!"
"ஊஹும்... வேணும்! இன்னைக்கே... இப்பவே..."
"பாலா...!"
"சரி! அவ்வளவுதானே?... உன்னை நான் வற்புறுத்தவே இல்லை."
"கோபமா?"
"இல்லே, ரொம்ப சந்தோஷம்! ஒண்ணு தெரியுமா? நீ மறுக்கிறது இதோட எட்டாவது முறை. உனக்கு என் மேல நம்பிக்கை இல்லை. உன்னைப் பொறுத்தவரை நான் கெட்டவன்... அதானே?"
"பாலா...!!"
"ப்ளீஸ், போ! எனக்குத் தனிமை வேணும்! வீட்டிலேயே யாரும் இல்லே. நிம்மதியா இருக்கேன். போ!... போயிடு!"
"அம்மணி வருவாளா?"
"அது எதுக்கு?"
"சொல்லேன்! வருவாளா?"
"வர மாட்டா. மூணு நாளைக்கு அவளுக்கு லீவு கொடுத்தாச்சு."

"சரி, வா!... என்ன பார்க்கிறே? நாந்தானே வேணும்? வா... எடுத்துக்க!"

"இப்படி இல்லே. முழு மனசா. பிச்சை போட வேணாம்!"

"முழு மனசா சொல்றேன். வா! ஐ பீலீவ் யூ!"

"வே...ணாம்...!"
என் மறுப்பு தோற்றது. ஏனெனில் அது பொய்யானது. அவளின் அன்பு நிதர்சனமாய் வென்றது.

"இப்ப சொல்லு! எனக்கா உன் மேல் நம்பிக்கை இல்லை?"

தலை கவிழ்ந்தேன். அன்றும் இன்றும்.
*********
"பாலா!... என்ன யோசிக்கறே?... என்னை ஏன் பார்த்தோம்னு இருக்கா?"

"இல்லே சந்திரா. நான் ஒரு கோழை. என்னாலே யாருக்குமே சந்தோஷம் இல்லை..." இம்முறை என் குரலில் ஒப்பனை தொலைந்து நிஜம் பீரிட்டது.

"அழகான மனைவி, மகன். அப்பறம் என்ன பாலா?" என்றாள். என் வசதிகளைவிட அவள் இழப்புகளின் கனம் குரலில் தொனித்தது.

"இப்ப எங்கே இருக்கே சந்திரா?"

"பச்... என்ன செய்யறதுன்னு புரியலே பாலா. மறுபடி டெல்லிக்குப் போயிரலாமான்னு... இங்கே விட அங்க எனக்கு உதவ யாராவது இருப்பாங்கன்னு... ஆனா..."

"என்ன சந்திரா?..."
"ஒண்ணுமில்லே பாலா. என்னவோ தெரியலை. உன்னை மறுபடி பார்த்ததும் எனக்கு பழைய திடம் மனசுல வந்த மாதிரி... சில சமயங்களில், வாழ்க்கை என்னை சந்தோஷமாகவும் வச்சிருக்கு. இன்றைய சோகம் மட்டுமே சாஸ்வதம் இல்லே..."

எழுந்து கொண்டாள்.

"இதோ வரேன் பாலா. ஒரே நிமிஷம்..."

வாஷ்பேசினுக்குப் போனாள். மேஜை மீதிருந்த கைப்பையை அவள் கவனிக்கிறாளா என்று நோட்டம் விட்டு அவசரமாய்த் திறந்தேன். உள்ளே ஒரு பத்து ரூபாயும் சில சில்லறை நாணயங்களும்.

'டெல்லிக்கே போகலாம்னு...' சந்திரா மனசுக்குள் கேவல் கேட்டது.

திரும்பி வந்தாள். கைப்பையை எடுத்துக் கொண்டாள். பளீரெனச் சிரித்தாள்.

"நீதான் கூல்ட்ரிங்க்ஸுக்குப் பணம் தரணும். உனக்கு செலவு வைக்கிறேன்."

"என்னது சந்திரா...? ஆஃப்டர் ஆல்..."

வெளியே வந்தோம்.

"மறுபடியும் எப்ப வருவே... சந்திரா?"

"வரமாட்டேன் பாலா."

திடுக்கிட்டு அவளைப் பார்த்தேன்.

"பயப்படாதே பாலா! நான் என் வழி போறேன். எனக்கும் எதாச்சும் ஒரு நல்ல வழி கிடைக்காமலா போயிடும்?... பாலா! மறுபடியும் நாம சந்திக்கிற வரை, என்னை ஞாபகம் வச்சிருப்பியா?" கடைசி வரியில் தேம்பிச் சுதாரித்தாள்.

"வரட்டுமா?"

திரும்பிப் பார்க்காமல் போய்விட்டாள்.
*****
வத்சலா என்னை வினோதமாய்ப் பார்த்தாள்.

"அடுத்த வாரம், நம்ம மேரேஜ் டேக்கு ஏதோ வாங்கித் தந்து அசத்தப் போறேன்னு கிளம்பிப் போனீங்க... வெறுங் கையா திரும்பி வர்றீங்க!"

"அடுத்த வாரம்தானே?... இன்னும் ஆறு நாள் இருக்கே!..." என்றேன் லேசான சிரிப்புடன்.


(எழுதி எவ்வளவோ வருடங்களாச்சு.. இப்போ உங்க கூட சேர்ந்து படிக்கிறேன்..)





24 comments:

G.M Balasubramaniam said...


உண்மை சொன்னால் இப்போது உங்கள் எழுத்து நன்றாக பாலிஷ் செய்யப் பட்டிருப்பது தெரிகிறது. நல்ல முன்னேற்றம்....! வாழ்த்துக்கள்.

எல் கே said...

பழைய காதலை சந்திக்க நேர்ந்தால் இதுதான் பிரச்சனை

Rekha raghavan said...

அருமை!

கதம்ப உணர்வுகள் said...

மனசை என்னமோ பண்றதே ரிஷபன்.... கதை படிச்சிட்டேன்... இதோ விமர்சனத்துடன் இன்னும் சில நேரத்தில்....

கதம்ப உணர்வுகள் said...

கதையின் தலைப்பு ரொம்ப பொதுவாக தான் இருந்தது. ஆனால் கதையை படிக்கும்போது அதில் ஆழ்ந்துவிட்டதாகவே எனக்கு தோன்றியது... காதல் வாழ்க்கையில ஒரு முறையாவது இடறிவிடுகிறது... அந்த காதல் எல்லோருக்குமே வெற்றியைத்தான் தருகிறது என்று கண்டிப்பாக எதிர்ப்பார்க்கமுடியாது.. அதுக்காக எல்லாம் யோசித்து திட்டம் போட்டு அவள் நம் ஜாதியா, அவள் சம்பாதிக்கிறாளா? நம் அழகுக்கு ஏற்றவளா இப்படி இத்தனை கேள்விகளுக்கும் சரியான பொருத்தமாக பெண் தேடி காதலிப்பதற்குள் வயசு போய்விடும்.. அப்படி தேடி காதலித்தால் அதில் காதல் இருக்காது, உயிர்ப்பு இருக்காது. உணர்வுகள் இருக்காது. எதிர்ப்பார்ப்புகளுடன் தேடும் இணை காதலை கொடுப்பதில்லை... ரணத்தை தான் கொடுக்கும்...

இந்த காதலும் சந்திரா பாலாவின் காதல் எல்லோரையும் போல் இருவரையும் உரசிவிட்டுச்சென்றுவிட்டது. கலைந்துவிட்ட காதல் திரும்ப எட்டு வருடங்கள் கழித்து இருவரையும் சந்திக்கவும் வைத்துவிட்டது. என்ன செய்யமுடியும்?? காதலித்தவராயிற்றே.... இருவர் கண்களிலும் அதே பழைய காதலை எதிர்ப்பார்க்கமுடியவில்லை என்றாலும் ஏதோ ஒரு புதுவித உணர்வு சட்டென்று மனதை அடைக்கும். கண்களில் நீரையும் நிறைக்கும்.. ஏண்டாப்பா பார்த்தோம்னு தோணும்... பார்த்ததும் காதல் துளிகளின் மிச்சத்தை இணையிடம் தேடவும் தோணும்...

சங்கடமான நிமிடங்கள் அவர்களின் சந்திப்பு நடந்த அந்த நேரம்.... பாலாக்கு ஒரு குடும்பம் அமைந்துவிட்டது. மனைவி மகன் என்று... பாலாவால் சந்திராவை மறக்க இயலவில்லை என்பதை தன் மகனுக்கு காதலியின் பெயரை வைத்திருந்ததில் இருந்தே தெரிகிறது. ஆனால் அவன் கையாலாகாத்தனத்தால் சந்திரா தொலைத்தது தன் வாழ்க்கையை, காதலை, அரவணைப்பை எல்லாமே தான்...

பாலாவின் கோழைத்தனத்தால் இன்று சந்திரா நிராதரவாக... சந்திராவின் கண்கள் இன்னமும் ஏக்கங்களை தேக்கிக்கொண்டு காதலை தேக்கிக்கொண்டு ரிஷபனின் எழுத்துகளால் உணரமுடிகிறது சந்திராவின் காதலை அதில் தன்னை அமிழ்த்துக்கொண்டதை...

பாலாவின் சட்டைப்பையில் இருந்த 3000 சந்திராவின் கைப்பையில் வைத்துவிட்டதை எத்தனை அழகாய் ரிஷபன் எழுதி இருக்கார்... பாலாவின் இளவயது, சந்திராவின் நம்பிக்கை, இருவரின் அன்பு இதெல்லாம் சேர்ந்து புனிதத்தை கொஞ்சம் இடம் பெயர வைத்துவிட்டதே....பாலாவை தவறு சொல்லமுடியவில்லை... பாலாவின் மனதிலும் அந்த காதல் நிலைத்து இருந்ததால் தான் அவனால் தன் தவற்றை நினைத்து இப்போதும் தலைகுனிந்து அவளிடம் ஏதும் பேசமுடியாமல் மௌனியாக இருக்கமுடிந்தது..

ரிஷபனின் டச் இந்த வரிகளில் தெரிந்தது ” தலைகவிழ்ந்தேன் அன்றும் இன்றும்

சந்திராவின் வறுமை.... அவள் கைப்பையில் சில்லறைகள் மாத்திரம்... டெல்லிக்கே திரும்ப போகிறேன் என்ற அவள் வாக்கியம்...”

சந்திராவுக்கு பாலாவை பார்த்ததே ஒரு திடத்தை கொடுத்தது என்றால் காதலுக்கு அத்தனை சக்தியா?? ஆச்சர்ய உண்மை இது...

மறுபடி சந்திப்போம் என்று எப்படி சந்திரா இத்தனை நம்பிக்கை வைக்கிறாள்??

” பாலா! மறுபடியும் நாம சந்திக்கிற வரை, என்னை ஞாபகம் வச்சிருப்பியா?" கடைசி வரியில் தேம்பிச் சுதாரித்தாள்.” இந்த வரிகளை படித்ததும் சட்டென தானே சந்திராவாக உணர்ந்து கண்கள் கலங்குவதை நிறுத்த இயலவில்லை. மனதில் கனமும்...

பாலா ஒன்னும் அப்படி வெல் செட்டில்ட் இல்லை என்று தான் நினைக்கிறேன்.

வீட்டில் வந்தால் வத்சலா வாழ்க்கைத்துணை.... பிறந்தநாள் பரிசுக்காக வெச்சிருந்த 3000 என்றோ காதலித்து தன்னையும் இணைத்துக்கொண்டவளை மறக்கவும் முடியாமல் தன் மகனுக்கு அவள் பெயரை வைத்து... இப்போது அவளுக்கு கைச்செலவுக்கு பணம் இல்லை என்றறிந்து அந்த பணம் காதலுக்கு பயனாகிவிட்டது...

அழகிய குட்டிக்கதை.... மன உணர்வுகளோடு போட்டி போடவைக்கும் கதை...
வாழ்க்கையில் காதலித்தால் அது திருமணத்தில் முடிந்தால் சிறப்பு... இல்லைன்னா இப்படி தான் ஆகும் என்று உணரவைத்த சிறப்பான கதைப்பகிர்வுக்கு அன்பு வாழ்த்துகள் ரிஷபன்...

எழுதி எவ்வளவோ வருடங்களாச்சு.... யாரு??? இப்போ உங்கக்கூட சேர்ந்து படிக்கிறேன்??? என்னது????



கதம்ப உணர்வுகள் said...

வாழ்க்கைத்துணைக்கு பரிசு வாங்கப்போயிட்டு வாழ்க்கைத்துணையா வரவேண்டி வராமல் போன காதலியின் பயணத்துக்கு அந்த தொகை செலவழிக்கப்பட்டுவிட்டது....

Yaathoramani.blogspot.com said...

மனதிற்குள் சிறு கீறலை ஏற்படுத்திப் போகுது பதிவு
எப்போதும் பொறுப்புக்கும் காதலுக்கும் இடையே
தூரம் அதிகம்தான் .குறிப்பாக கோழைகளிடம்
உண்டாகும் காதலுக்கு...
மனம் தொட்ட கதை
பகிர்வுக்கு நன்றி

ஸ்ரீராம். said...

உணர்வுகளுக்கு மூவாயிரம் ரூபாயில் விலை பேச முடிவதில்லை! பிராயச்சித்தமாகத்தான் இருக்க வேண்டும்!

raji said...

உணர்வுகளின் பாதிப்பில் எழுத்துக்கள் வருவதும் உண்டு. எழுத்துக்களால் உணர்வுகள் பாதிக்கப் படுவதும் உண்டு

வை.கோபாலகிருஷ்ணன் said...

சார், காதல் கதையில் உயிரும் உணர்வுகளும் நல்லாவே இருக்கு. ஆனால் அனுபவிக்க உடம்பு மட்டும் இல்லாதது போல சம்பவங்கள் நிகழ்ந்து விட்டன.

//"அடுத்த வாரம், நம்ம மேரேஜ் டேக்கு ஏதோ வாங்கித் தந்து அசத்தப் போறேன்னு கிளம்பிப் போனீங்க... வெறுங் கையா திரும்பி வர்றீங்க!"

"அடுத்த வாரம்தானே?... இன்னும் ஆறு நாள் இருக்கே!..." என்றேன் லேசான சிரிப்புடன். //

முத்திரை பதித்த முடிவு தான்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.

அன்புடன் VGK

அப்பாதுரை said...

குற்ற உணர்வு இரண்டு பக்கமும் வரும்பொழுது இதயங்கள் பிழியப்படுவதை அழவைக்கும் படி எழுதியிருக்கிறீர்கள். இன்னொரு தடவை சேர்ந்து படிப்போம்.

அப்பாதுரை said...

மஞ்சுபாஷிணியின் கமெந்ட் படித்துவிட்டு கதையில் விட்டுப்போனதாக நினைத்த வரிகளை மறுபடி படித்தேன்.

Karthikeyan said...

பொதுவாக உங்கள் வலைப்பூவை படித்து விட்டு அப்படியே சென்று விடுவேன். ஆனால் இந்த பதிவு என்னை ஏதோ செய்ய கமெண்ட் டைப் செய்ய ஆரம்பித்தேன். மனதை பிசைய வைக்கிறது உங்கள் எழுத்து நடை..

RVS said...

சூப்பர்ப்.

கே. பி. ஜனா... said...

அந்தந்த வினாடிகளுக்கான உணர்வுகளை அந்தந்த உணர்வுகளுக்கான வார்த்தைகளில் வடிப்பதில் அப்போதும் சரி இப்போதும் சரி வல்லவர் நீங்கள்!

சீனு said...

கனமான கதை... கதை சொல்லிய விதம் அருமை... உங்களைப் போன்றவர்களைப் பார்த்து தான் கதை எழுத கற்றுக் கொள்ள வேண்டும்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ennathai solla arumai enbathai thavira!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கதை... மனது ஏனோ கனத்தது...

நன்றி...

vasan said...

அன்று, அடிக்க‌டி ஒருவருக்கொருவ‌ர் பார்த்துக் கொண்டிருந்த‌தால், கொண்டிருந்த‌ காத‌லின் க‌ன‌ம் அக்க‌ண‌த்தில் ச‌ரியாக‌ க‌ணிக்க‌ப் ப‌டுவ‌தில்லை. கால‌ங்க‌ள் க‌ட‌க்க‌, நின‌வுக‌ள் அதைத் த‌டுக்க‌, பின்னொரு அற்பு‌த‌க் க‌ண‌ம் க‌னியும் போது, க‌சியும் க‌ண்ணீரும், பீறிடும் உண‌ர்வுக‌ளும் க‌ட்டுப் ப‌டுத‌த‌ப்படும் க‌ட்டாய்த்திற்கு த‌ள்ளுகிறது நிக‌ழ்கால நிஜ‌ம்.இழ‌ந்த‌ நாட‌க‌ளுனின் ஊடே மாறிய‌ இருவ‌ரின் எண்ண, வாழ்வின் த‌ள‌ம‌ற்ற‌ங்க‌ள், திற‌க்க‌ வேண்டிய‌ ம‌ன‌தை, பிற‌ர் வேத‌னையை ப‌கிர்த‌ல் மேலும் சோக‌த்தைக் கிள‌றி விடுமோவென‌ அஞ்சி ம‌வுனித்து, இத‌ய‌ம் மூடி இத‌ழ்ம‌ட்டும் திற‌ந்து வெறும் வார்த்தையோடு, தெட‌ர்பு எண்கூட‌ இல்ல‌து பிரித‌ல் பூவுல‌கின் ந‌ர‌க‌ம் த‌விர்த்து வேறென்வாய் இருந்துவிடும்?
ஒவ்வொருவ‌ர் வாழ்விலும் ஏதோவொரு ப‌ழைய‌ நின‌வு எந்த‌ ந‌ப‌ரையும் அழ‌வைத்து விடுகிற‌து.

நிலாமகள் said...

பாலாவின் கோழைத் த‌ன‌த்தால் அன்றும் இன்றும் த‌டுமாற்ற‌மே. மூவாயிர‌ம் தீர்வில்லை. பிராய‌சித்த‌முமில்லை. காத‌ல் த‌வ‌ற‌ல்ல‌. நெறி பிறழ்வின் விளைவுக‌ள் கால‌கால‌த்துக்கும் துர‌த்தும் வெறிநாயாய்.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_3.html) சென்று பார்க்கவும்...

நன்றி…

கதம்ப உணர்வுகள் said...

அன்பின் ரிஷபன்,

தங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். சமயம் கிடைக்கும்போது வந்து பாருங்கப்பா..

http://blogintamil.blogspot.com/

நான் மிக வியக்கும் குட்டி டைனமைட்/ இத்துணூண்டு கதை தான் எழுதுவார். ஆனால் அந்த அத்துணூண்டு கதையில் நமக்கு வாழ்க்கைக்கு பயன்படக்கூடும் கருத்துகள் கண்டிப்பாக இருக்கும்… அட படிச்சுட்டு அதோடு மறந்துட்டு அடுத்த வேலை பார்த்துட்டு போகலாம் என்பது போல இருக்காது. அட நம்ம ரிஷபன் சொன்னதுபோல நாம யோசிச்சு செயல்பட்டால் தான் என்ன என்று யோசிக்கவைக்கும். இத்துணூண்டு வயசுல இத்தனை அறிவா சிந்திக்கிறதே பிள்ளை என்று எனக்கு வியக்கத்தோணும்.. சொன்னா நம்பமாட்டீங்க. ரிஷபனோட சில பதிவுகளைத்தரேன்.. படிச்சுப்பார்த்தீங்கன்னா அட ஆமாம்னு நீங்களே நினைப்பீங்க.
தேவதை
அறிமுகம்
சூர்யா
அம்மா
குரூப் போட்டோ
லவ்வுன்னா என்னப்பா
ஞாபகம்
ஈரங்கொல்லி

வல்லிசிம்ஹன் said...

பரிசு...யாருக்கு. காதலனின் மனசுக்கா.
காதலியுடன் செலவழித்த கணங்களுக்கா.

எத்தனை காதல்கள் இது போல மாறி இருக்கின்றன. நல்லவேளை அவள் சாவைத் தேடவில்லை.
மனம் கனம் மிகுந்துவிட்டது ரிஷபன் சார்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ஸாரி ரிஷபன்.

சந்திராவுக்கும் பாலாவுக்குமிடையில்- எட்டு வருட கால இடைவெளிக்குப் பின் - உடலைக் கடக்க முடியா வேட்கை இருந்தது ஆச்சரியமாக இருக்கிறது.

அதுவே கூட அவர்களை இணைக்காமல் இருந்ததன் காரணமாய் இருக்கலாம்.பொருத்தமில்லாமல் “மோகமுள்” பாபு - ஜமுனா நினைவுக்கு வருகிறார்கள்.
தன் மகனுக்குச் சந்திராவின் பெயர் வைக்கத் துணிந்த பாலாவின் காதலில் கறை இருக்கிறது.

கதையின் தலைப்பும் உங்களின் உயர்வான ரசனைக்குப் பொருத்தமாயில்லை. யாருக்கு யார் தந்த பரிசு? புரியவில்லை.

இப்படி நடக்கத்தான் நடக்கிறது.இந்த வரியை எழுதும் இந்த நிமிடத்தில் ஆயிரக்கணக்கில் இம்மாதிரியான சம்பவங்கள் நடந்தபடியேதான் இருக்கின்றன.எழுதப்பட்ட படியேதான் இருக்கின்றன.

ஆனால் ரிஷபன் எழுத நிறைய உன்னதமான விஷயங்கள் காத்திருக்கின்றன.

ஒரே ஆறுதல் இதை நீங்கள் வெகுநாட்களுக்கு முன் எழுதியதுதான்.

இதற்குப் பின் உங்களால் மட்டுமே எழுதக்கூடிய கதைகளை எழுதியிருக்கிறீர்கள்.

நீங்கள் கடந்து வந்த பாதைக்கு உதாரணமாய் இந்தக் கதையைச் சொல்லலாம்.