September 08, 2012

புரிந்து கொள்ள வேண்டும்

மதிய நேரம். அவரவர் டிபன் கேரியர்கள் திறக்கப்பட்டு, கலவையான உணவு வாசனைகள்.

"வாவ்! உருளைப் பொரியலா! பார்க்கவே கண்ணைப் பறிக்குது! டப்பாவை இங்கே நகர்த்துங்க சுப்பிரமணி!"

"என்னப்பா, ஏலக்காய் வாசனை?.. பாயசமா?.. வேலு! என்ன விசேஷம்? சொல்லவே இல்லியே!"

"என்ன சபாபதி! கேரியரைத் திறக்காமல் அப்படியே உட்கார்ந்து இருக்கீங்க?"

சபாபதி இறுக்கிப் பிடித்திருந்த மூடியைத் தட்டித் திறக்க முயன்றான்.

"பார்த்து! கொட்டப் போவுது. உள்ளே, ஸ்பெஷல் ஐட்டம் ஏதாச்சும் இருக்கப் போவுது."

"சபாபதி வீட்டுலயா!"

பளிச்சென்று கேலி வந்து விழுந்து விட்டது. வாஸ்தவம்தான். கேரியரைத் திறந்தால் மணத்தக்காளிக் கீரை, ரசம், மோர் சாதம்.

"என்னப்பா பத்திய சமையல்!"

மற்றவர்கள் கவனம் திசை திரும்பி விட்டது. சபாபதிக்கு மட்டும் பொருமல் தணியவில்லை. மஞ்சுளா திருந்தவே மாட்டாள். ச்சே! இவளால் மானம் போகிறது. 'வழ.. வழ' சமையலைச் செய்து அனுப்பவில்லை என்று எவன் அழுதது! குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டான்.

"சபாபதி! உனக்கு ஃபோன்."

எழுந்து போனான். அப்பாதான்.

"இன்னிக்கு ரிப்போர்ட் தரேன்னு சொன்னாங்க... டாக்டரைப் பார்த்துட்டு வந்துடறியா?... ஞாபகப்படுத்தலாம்னு ஃபோன் பண்ணேன்."

"சரிப்பா!"

வைத்து விட்டு வந்தான். ரிப்போர்ட் அம்மாவுக்குத்தான். ஒரு வாரமாய், உடல் அசதி என்கிறாள். உடம்பு வேறு திடீரென்று பெருத்துக் கொண்டு போகிறது. எல்லா டெஸ்ட்டும் பண்ணிரலாம் என்று டாக்டர் அட்வைஸ்.

ரிப்போர்ட்டைப் பார்த்த டாக்டர் முகத்தில் தெளிவு. 

"ஒண்ணும் கவலைப்படாதீங்க! சர்க்கரையைக் குறைக்கச் சொல்லுங்க, போதும்!"

கூடவே மருந்துப் பட்டியலும். வீட்டுக்கு வந்தான். அம்மா சபாபதியைப் பார்த்ததும் எழுந்துகொள்ள முயன்றாள்.

"நீங்க ஏன் சிரமப்படறீங்க? அவ எங்கே ஒழிஞ்சா?" என்றான் லேசான எரிச்சலுடன்.

"டாக்டர் என்ன சொன்னார்?"

அப்பா பின்னாலேயே வந்தார்.

"ஒண்ணும் பயப்பட வேணாம்! சர்க்கரை கண்ணுலயே காட்டக் கூடாதுன்னார்."

"மாமா! உங்களுக்கும் காப்பி கொண்டு வரட்டுமா?" மஞ்சுளா முகம் துடைத்தபடி வந்தாள்.

"கொண்டு வா! ஆ.. இரு! சர்க்கரை போட வேண்டாம்!" என்றார்.

"அம்மாவுக்குத்தானே பிரச்சனை. நீங்க போட்டுக்கிட்டா என்ன?" என்றான் சபாபதி.

"பரவாயில்லைடா! நானும் பழகிக்கிறேன்."

இருவரும் பரஸ்பரம் புன்னகைத்துக் கொண்டனர். அம்மா சொன்னாள், மஞ்சுளாவைக் காட்டி.

"பாவம்! ஒரு வாரமா வயிற்று வலியில் துடிக்கிறா. அசிடிடின்னு டாக்டர் சொன்னாராம். மணத்தக்காளிக் கீரை சாப்பிடுன்னு எதிர் வீட்டுப் பாட்டி சொல்லியிருக்காங்க. சமையல் செய்ய முடியாம துடிச்சுப் போயிட்டா வலியில."

காப்பியுடன் வந்தவளைப் பார்த்தான். வலியையும் மீறிச் சமைத்து அனுப்பி இருக்கிறாள். எனக்கும் அப்பாவுக்கும்தான் எத்தனை இடைவெளி, புரிந்து கொள்வதில்... அனுசரித்துப் போவதில்!

"வரியா? டாக்டர்கிட்டே போயிட்டு வந்திரலாம்!" என்றவனை அப்பாவும் அம்மாவும் அர்த்தத்துடன் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர்.

21 comments:

எல் கே said...

அனுபவம் பெற பெற புரிதல் அதிகமாகும்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//எனக்கும் அப்பாவுக்கும்தான் எத்தனை இடைவெளி, புரிந்து கொள்வதில்... அனுசரித்துப் போவதில்!//

சூப்பர் சார்!

இந்தக்கால இளம் ஜோடிகள் இதை

[புரிந்து கொள்வதையும், அனுசரித்துப் போவதையும்]

அவசியம் புரிந்து கொள்ள நிசசயமாக உதவும் இந்தத் தங்களின் படைப்பு.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். vgk

சாந்தி மாரியப்பன் said...

தம்பதியர் நடுவே நல்ல புரிதல் இருந்தா அதை விட சந்தோஷம் வேறு உண்டா.. அருமையான கதை.

Rekha raghavan said...

அருமை சார்.

ரேகா ராகவன்.

திண்டுக்கல் தனபாலன் said...

என்னே அருமையான புரிந்து கொள்ளல்... இவ்வாறு இருந்து விட்டால் சந்தோஷம்.... (இக்காலத்தில் உள்ளவர்களுக்கு)

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

"பரவாயில்லைடா! நானும் பழகிக்கிறேன்."

இந்த வரியில் மையம் கொண்டிருக்கிறது பரிவின் புயல்.

ஸ்ரீராம். said...

"வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும் ஆனாலும் அன்பு மாறாதது... அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே... நல்ல மனையாளின் நேசம் ஒருகோடி..."

Rasan said...

அருமையாக புரிதலை பற்றி கூறியுள்ளீர்கள். என்னை மாதிரி இளைய
தலைமுறையினர் அறிந்து கொண்டதால் வாழ்க்கை சொர்க்கமாகும். பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.

மனோ சாமிநாதன் said...

அனுபவங்களுக்குப்பின் வரும் புரிதல் என்றும் அருமை தான்!
சிற‌ப்பான சிறுகதை!!

SNR.தேவதாஸ் said...

அன்புடையீர் வணக்கம்.
தங்களது பதிவுகளை எனது மெயிலுக்கு அனுப்பித் தர இயலுமா?
வாழ்க வளமுடன்.
கொச்சின் தேவதாஸ்
snrmani@rediffmail.com

மோகன்ஜி said...

இரண்டு தலைமுறையின் புரிதல் மாறுபாட்டை எளிமையாய் சொல்லி விட்டீர்கள் ரிஷபன். உங்கள் அலைபேசி எண் மாறிவிட்டதா என்ன?

கே. பி. ஜனா... said...

அருமை!

Yaathoramani.blogspot.com said...

எனக்கும் அப்பாவுக்கும்தான் எத்தனை இடைவெளி, புரிந்து கொள்வதில்... அனுசரித்துப் போவதில்//

இன்று வள்ர்ந்து விரிகிற
பல பிரச்சனைகளுக்குக் காரணம்
புரிந்து கொள்ளாமைதானே
மனம் தொட்ட அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

கீதமஞ்சரி said...

அழகான புரிதலோடு அமைதியாய் ஒரு பாடம். அந்தப் பாடத்தைப் புரிந்துகொள்ளும் திறன் சபாபதியைப் போல் அனைவர்க்கும் அமைந்துவிடுவதில்லை. எளிய நடையில் ஆழமானக் கருத்தை உள்ளடக்கிவிட்டீர்கள். பாராட்டுகள் ரிஷபன் சார்.

G.M Balasubramaniam said...


பெரியவர்களிடமிருந்து கற்க வேண்டியது நிறையவே இருக்கிறது.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கதை அருமை!

அப்பாதுரை said...

இருபது வருடங்கள் பின்னோக்கி அல்லது முன்னோக்கிப் போனால் புரிதல் சமன்படுமோ? சுவாரசியமான சிந்தனையைத் தூண்டியக் கதை.

தி.தமிழ் இளங்கோ said...

ஒரு எதார்த்தமான சிறுகதை. படிப்பவர்கள் சலிக்காத வண்ணம் உரையாடல்கள் மூலம் கதையை சொல்வது பெரிய கலை.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான கதை....

ADHI VENKAT said...

அர்த்தமுள்ள கதை சார். புரிந்து கொண்டால் வாழ்க்கை இனிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நிலாமகள் said...

பெரிய‌வ‌ங்க‌ளோட‌ இருக்க‌ற‌துல‌ எவ்வ‌ள‌வு செள‌க‌ர்ய‌மிருக்கு!