November 07, 2012

வேறென்ன கேட்பேன் ? - பகுதி 2


இதன் முதல் பகுதியைப் படிக்க


இனி இரண்டாம் பகுதி இதோ..


ஆராமுதின் பக்கம் வந்து சிவபாதம் உட்கார்ந்ததை ஆச்சர்யமாய் பார்த்தாள்.
'எழுந்துப்பாரான்னு கிடந்த மனுசனா இவுரு..'

அப்படி ஒன்றும் உடம்பு சொல் பேச்சு கேட்கவில்லைதான். கால் ஒரு பக்கம் இழுக்க கை ஒரு பக்கம் இழுத்தது. பிடிவாதம் ஜெயித்தது. பால்ய நண்பனைப் பார்த்த வேகமோ.. அல்லது மனதின் குதியாட்டமோ. பதறிப் போய் பற்றிக் கொள்ள வந்தால் உதறியதில் வீம்பு தெரிந்தது. ஆராமுது பிடித்துக் கொண்ட போது உடன்பட்டதில் லேசாய் பொறாமையும் கோபமும் வந்தது.

"தட்டு போதும்டா"

ஆராமுது சொன்னதைக் கேட்காமல் வாழை இலை. புது எவர்சில்வர் டம்ளர். சுடச் சுட இட்லி. சட்னி.

ஆராமுதுக்கு உள்ளே ஏதோ தளும்பியது. அவமானம் பின்னுக்குப் போய் ஆதி நாட்களின் பிரியம் மேலோங்கியது. எது கிடைத்தாலும் பகிர்ந்து கொண்ட நட்பு.

"ரொம்ப காரமா.. எண்ணை ஊத்துடி.. " சிவபாதம் இரைந்ததில் குரலில் கணீர்.
"அதெல்லாம் இல்லை.."
"இன்னும் ரெண்டு வைக்கட்டுமா"

அம்மா.. அம்மாவின் ஞாபகம் வந்தது. கேட்கக் கூட மாட்டாள். போட்டு விட்டு போவாள். வயிற்றைப் பார்க்காமல் மனசைப் பார்த்து ஊட்டிய காலம்.

சுடச் சுட காப்பி. சிவபாதம் மீண்டும் கட்டிலுக்கு வர.. பக்கத்தில் ஆராமுது. வயிறு நிறைந்து, மனம் மட்டும் குமுறிக் கொண்டு. எங்கிருந்து ஆரம்பிப்பது.. சுவர் காலண்டர் பின்னோக்கி போன பிரமை.

மகன், மருமகள், மனைவி பற்றிய விசாரிப்புகளுக்கு ஏதோ பதில் சொல்லிக் கொண்டிருந்தார். மனம் ஒட்டவில்லை. அதை சிவபாதமும் புரிந்து கொண்டதாலோ என்னவோ டக்கென்று பேச்சை நிறுத்தி ஏதோ கேட்டார்.

"ஆராமுது.. டேய் ஆராமுது"
"ஆங்க்.. என்ன"
"உன் கவனம் இங்கே இல்லைதானே"

ஆராமுது அவனையே வெறிக்கப் பார்த்தார். மனசுக்குள் ஒரு உக்கிரம் கிளம்பிவிட்டது. உன்னால் தானே.. உன்னால் தானே..

"என்னடா.. ஏதாச்சும் பண்ணுதா.. கொஞ்சம் படுக்கறியா.. பிரயாணம் ஒத்துக்கலியா"
சிவபாதம் குரலில் அக்கறை பீரிட்டது.

ஆராமுது தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தார். உன் பேச்சைத் தானே இத்தனை நாள் கேட்டேன்.
"வெளியே போயிட்டு வரேன்.."
"ஏண்டா.. இப்பதானே வந்த.. இரு.. அப்புறமா போகலாம்.." சிவபாதம் கெஞ்சிய குரலில் சொன்னார்.

ஆராமுது அதற்குள் எழுந்து விட்டார். சிவபாதம் முகத்தைப் பார்க்கவில்லை. கோபம் தெரிந்து விடும்.
"பத்து நிமிஷம்.. வந்துருவேன்"

படிகளில் இறங்க ஆரம்பித்து விட்டார்.
"அவன் போறான்டி.. கூப்பிடேன்"
சிவபாதம் மனைவியிடம் சொல்லியது கேட்டது.

"பச்சைப்புள்ளையா அவரு.. போயிட்டு வந்துருவாரு.."
ஆராமுது சிவபாதம் அருகில் அந்த நிமிஷம் இருக்கப் பிடிக்காமல் இறங்கி வந்து விட்டாரே ஒழிய.. தெருவுக்கு வந்ததும் எங்கே போவதென்று புரியவில்லை. தன்னிச்சையாய் கால்கள் நடந்தன. பண்டாபீஸ் இங்கேதானே.. எங்கே காணோம்.. முப்பது வருஷத்துக்குப் பிறகு தேடுவதில் ஒரு அபத்தம் புரிந்தது மனசுக்கு. தெருவின் முகம் மாறிப் போயிருந்தது. யாரோ கூப்பிடுவது போல.. இல்லை.. விரட்டுவது போல.. காலகள் வேகமாய் நடக்க பின்னாலேயே வந்து கையைப் பிடித்து இழுத்தார் ஒருத்தர்.

"அது நான் இல்லை.. நான் இல்லை" அலறினார் ஆராமுது.
"ஸார்.. பர்ஸை கீழே போட்டு போறீங்க.."
பர்ஸ். முகத்துக்கு எதிரே காட்டினார். ஆமாம். என் பர்ஸ். என் பணம்.

"தொலைச்சவுங்களுக்குத் தான் அந்த அருமை தெரியும் ஸார்..பிடிங்க.. பத்திரமா வைங்க"
தொலைச்சவங்க.. எத்தனை வருஷம் கழிச்சு வந்தாலும் வார்த்தைகள் உயிரோடு நின்று மிரட்டுகின்றன.

 'பாவி.. வெளங்குவியாடா நீ.. நல்லா இருப்பியா..'
'நான் இல்ல.. நான் இல்ல'
ஆராமுது வாய் விட்டு அலறி இருக்க வேண்டும். எதிரே இரண்டு மூன்று பேர் நின்று வேடிக்கை பார்த்தார்கள்.

'புத்தி சரியில்லையா'

ஆராமுது திரும்பி நடக்க ஆரம்பித்தார். வேணாம், சிவபாதம்கிட்ட போயிரலாம்.. படியேறியபோது மீண்டும் நாயின் குரைப்பு.

"வந்துட்டாரு உங்க நண்பர்"
சிவபாதம் உடம்பு நடுங்கியது இவரைப் பார்த்து.

"நீ திரும்பப் போயிடுவியோன்னு பயந்துட்டேன்.."
"இல்ல" முனகினார் ஆராமுது.

"உன் கிட்ட பேசணும்டா"
"ம்ம்.."
"அவர் கொஞ்சம் படுக்கட்டுமே.."
"ஓய்வு எடுக்கறியாடா"
"ம்ம்"

பூக்குழி மிதித்த மாதிரி உடம்பு எங்கும் அனலடித்தது. தலைக்கு உசர கட்டை வைத்து மின் விசிறியின் அடியில் படுத்தார்.
இறந்த காலம் உயிர் பெற்று எழுந்து இரைச்சல்கள் கேட்டன.

"டேய்.. ஆராமுது.. நல்லா இருப்பியாடா.. '

'அவனை என்ன கேள்வி.. பிடிங்கடா'

'இரு கொஞ்சம் விசர்ரிக்கலாம்..'

'விசாரிக்க என்ன இருக்கு.. கையும் களவுமா பிடிச்சாச்சு'

'சிவபாதம் நீ இதுல தலையிடாதே..'

சிவபாதம் சட்டென்று ஒதுங்கியதைப் பார்த்து ஆராமுது அரண்டு போனார்.

டேய் சிவபாதம்..”
கூட்டம் மெல்ல மெல்ல முன்னேறியது. சிவபாதம் நகர்ந்து கொண்டே பின்னுக்கு போவது தெரிந்தது. அவன் கண்களில் தெரிந்த மிரட்சி.. கெஞ்சல்.. பயம்..

ஆராமுதுவுக்கு இன்னது செய்வதென்ற நிதானம் தொலைந்தது.



                                                                                                       (தொடரும்)

 இதன் 3ம் பகுதியை ஆரண்யநிவாஸ் - மூவார் முத்து தொடர்கிறார்...



20 comments:

ஸ்ரீராம். said...

சம்பவம் என்னவென்பதை அடுத்த ஆளுக்கு நகர்த்தி விட்டீர்கள். கடைசி சொல்லாமலே போகுமோ? அதுதான் பேசி வைத்துள்ள 'ஒன் லைனோ'?அவரவர்களுக்கு அவரவர் அனுபவத்தில் ஒரொரு சம்பவம் நினைவாய் விரியலாம்! ஆராவமுதின் மனக் குழப்பத்தை நன்றாக வார்த்தைகளில் கொண்டு வந்திருக்கிறீர்கள்.

ரிஷபன் said...

முதல் வருகைக்கு நன்றி.. ஸ்ரீராம்.

வெங்கட் நாகராஜ் said...

அடடா மோகன் அண்ணா வைத்த சஸ்பென்ஸ் இங்கேயும் தொடருதே.... போட்டி போட்டு சஸ்பென்ஸ்...

மூவார் முத்து, சீக்கிரமா வாங்க, வந்து சஸ்பென்ஸ் என்னன்னு எங்களுக்கு தெரியப்படுத்துங்க! :)


Ranjani Narayanan said...

மோகன்ஜி வைத்த சஸ்பென்ஸ் இன்னும் தொடருகிறதே! யார் விடுவிக்கப் போகிறார்கள்?

அடுத்த புதன் வரை காத்திருக்க வேண்டும்!

இருக்கிறேன்!

ஆரமுதுவிற்கும், சிவபாதத்திற்கும் நடுவில் என்ன நடந்திருக்கும்?
யோசித்துக் கொண்டே.....புதன் வரை.....

ஜீவி said...

இடையில் ரிஷபன் சார் வந்தது தெரிலே போனது தெரிலே. அவ்வளவு பதவிசு; அவ்வளவு ஆர்பாட்டமில்லாத மென்மை.

பிரம்பு வளையத்தோட அந்தக் காலத்தில் ரயில் சாவி கொடுப்பாங்களே, அந்த மாதிரி அவர் அடுத்தவரிடம் கொடுத்திருக்கும் 'பர்ஸ்' 'தொலைச்சவங்க'ங்கற வார்த்தைகள் மட்டும்--

வார்த்தைகள் மட்டும்?.. 'உயிரோடு நின்று மிரட்டுகின்றன'!

ஒண்ணையும், ரெண்டையும் சேர்த்து மூன்றாக்கி மூன்றில் மூவார் எப்படி தூள் கிளப்புகிறார், பார்ப்போம்!

ADHI VENKAT said...

ஆராமுதின் மனகுழப்பம் என்பதை ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் சஸ்பென்ஸ்....

அடுத்து அங்கே என்ன என்பதை காத்திருந்து தெரிந்து கொள்கிறோம்.

vasan said...

க‌ப‌டி ஆடித் தொட‌ங்கிய‌து க‌தை.
மோக‌ன்ஜி முத‌ல் (அடி) ஆடி முடிந்த‌தும்
ரிஷப‌ன்ஜி அடுத்த ப‌டி (பாடி) வ‌ந்து விட்டார்.
ஆர்3 வ‌ந்து தான் முடிவைச் சொல்ல‌னும்.

ப‌ழைய‌ ந‌ட‌ப்பு(நட்பு)ல எது தூக்க‌லா இருக்கோ?
பால்ய‌ நிக‌ழ்வுக‌ள் தான் நிக‌ழ்கால‌த்தின் நிழ‌ல்..
கொஞ்மேனும் இளைப்பாற‌....

மாதேவி said...

தொடர் அருமையாகப்போய்கொண்டு இருக்கின்றது அடுத்து.....

அப்பாதுரை said...

ஜீவியின் பின்னூட்டம் அபாரம்.

Matangi Mawley said...

There is visible difference in the style of the story... Very smooth transition at the same time! Really interesting! The different authors strategy has made the story so vibrant... Can't wait to read how it ends...

கே. பி. ஜனா... said...

விறுவிறுப்பு தொடர்கிறது...

manichudar blogspot.com said...

இன்னும் வேறென்ன? காத்திருக்க துவங்கினேன்.

Geetha Sambasivam said...

அது என்ன மூவார் முத்து? புரியலை!

இரண்டே இரண்டு வார்த்தைகள் கொடுத்திருக்கார் ரிஷபன். அதை ஒட்டி அடுத்து திரு ராமமூர்த்தி என்ன எழுதப் போகிறார்? ஆராமுது, சிவபாதத்தாலே என்ன விதத்தில் அவமானப் பட்டார்? புரியலை. அந்த அவமானமே மறக்காமல் இருக்கையில் வாழ்க்கையிலும் அவமானங்களைச் சந்தித்திருக்கார்னு முதல்லே மோகன் ஜி எழுதி இருந்தார் இல்லையா! பொறுத்திருந்து பார்க்கணும். :))))

raji said...

அச்சச்சோ! இப்பிடி சஸ்பென்சா கொண்டு வந்து நிறுத்திட்டீங்களே?சரி அடுத்தவர் எப்பிடி முடிக்கறார்னு பாக்கலாம்.ஆனா வேறே வேறே எழுத்தாளர்கள் எழுதற மாதிரியான feel இல்லாம நல்லா sync ஆகி வந்திருக்கு.கிரேட்!

நிலாமகள் said...

தொட‌க்க‌ம் முத‌லே உங்க‌ 'ட‌ச்' தெரிய‌த் தொட‌ங்கிச்சு. ப‌ண்டாபீஸ் சஸ்பென்ஸ்...
ந‌ல்ல‌தொரு சாவி. க‌தைப் போக்கு குறித்து. எல்லோரும் போல் நானும் அடுத்த‌ ப‌குதியை ப‌ண்டிகை முடித்த‌ திருப்தியோடு ப‌டிக்க‌க் காத்திருக்க‌ வேண்டும். என் அனுமான‌ங்க‌ள் எந்த‌ள‌வு ச‌ரியாகுமென்ற‌ குறுகுறுப்புட‌ன்.

கதம்ப உணர்வுகள் said...

இஷ்டப்பட்டவரைக் காண நின்றுக்கொண்டிருக்கும் மூச்சை இழுத்துப்பிடிக்கும் சக்தி எதுவா இருக்கும்??? மரணத்தின் விளிம்பில் நிற்பவரையே வேண்டுவோரைக்கண்டதும் முகம் பிரகாசமாகி மூச்சை நிறுத்துமே… அதுக்கு காரணம் என்னவா இருக்கும்? ஆராமுதுக்காக இத்தனைக்காலம் சிவபாதம் காத்திருந்து காத்திருந்து திடிர்னு பார்க்கும்போது ஏற்படும் சந்தோஷமும் மனதின் பலம் உடலுக்கு கொடுத்து இத்தனை சுறுசுறுப்பாக்கி இருந்திருக்கிறது….

இஷ்டமானவரை ரொம்ப நாள் பிரிந்திருந்து என்றாவது ஒருநாள் காணும்போது நமக்கே தெரியாமல் நம் முதுகில் சடார்னு இறக்கை முளைப்பது போல இருக்கும்… மனம் உருகிப்போகும்…. இந்த நிலை தான் சிவபாதத்திற்கும்…. அதனால் தான் சொல்பேச்சு கேட்காத உடம்பை பிடிவாதம் ஜெயிக்கவைத்திருக்கிறது….அந்த காலத்து நட்பே நட்பு…. முதுமை, அயற்சி, தளர்ச்சி பார்வைமங்கல், இதெல்லாம் கூட பால்ய நண்பரை பார்த்ததும் தடுமாறாது நினைவுக்கொள்ள வைத்ததே…. அந்த அன்பே பிடிவாதமாய் பிடிமானம் கொள்ள வைத்ததே…. இடையில் வாழ்க்கைத்துணைவியானவருக்கு இது புரிந்திருக்க நியாயமே இல்லை தான்…. என்னவோ ஐயோ தடுமாறி விழப்போகிறாரே என்று பிடிக்கவரும்போது கூட வீம்புடன் உதறியதும் அதுவே ஆராமுது வாகாய் பிடித்துக்கொண்டபோது அவரையும் அறியாமல் உடன்பட்டுவிட்டதும் அட அந்த காலத்து ஹீரோ இப்ப நாடி நரம்பு தளர்ந்து இருந்து ஆராமுது வந்து நம்மை நிற்கவைக்க உதவுவது தான் கோபம் வந்திருக்குமோ சிவபாதத்திற்கு?

கதம்ப உணர்வுகள் said...

என்ன தான் பால்ய நண்பன் என்றாலும் ஆராமுதுவை வாழை இலையில் உபசரிப்பதும் ஆராமுது அதை விரும்பாதத்தால் தட்டு போதும் என்று சொல்வதும்….புது எவர்சில்வர் டம்ளர் வைத்து பரிமாறியதும்…. விருந்தோம்பலும் அன்பும் எல்லாவற்றையும் மறக்கவைக்கும் சக்தி இல்லை என்றாலும் அந்த நிமிடத்திற்கு தான் பட்ட அவமானத்தையும் அதற்கு காரணமானவரான சிவபாதத்தின் மீது கோபம் தணிந்ததும் ரிஷபனின் எழுத்துகளில் உணரமுடிகிறது…. ஆமாம் உண்மையே நட்பு எத்தனை மகத்தானது.. தான் பெற்ற நல்லவை எல்லாம் பகிரும் அற்புத ஆற்றல் பெற்றதாச்சே….

அன்போடு தன்னலமில்லாத மனதோடு பகிரும் எதையும் சட்டுனு அம்மாவை தானே நினைவுப்படுத்தும்….. பசி மட்டுமே தாயின் கண்ணுக்கு தெரியும்…. ஆராமுதுக்கு அம்மாவின் நினைவு வந்தது சரியே…. இன்றைய சூழலில் மகன் மகள் எல்லோரும் தன்னை படுத்தும் அவமானங்கள் எல்லாம் நினைவுக்கு வந்து ஆராமுதை படாத பாடு படுத்துகிறது என்றால் ஹுஹும்.. அதான் அங்க தினமும் ரொட்டீன் ஆகிவிட்டதே… சிவபாதம் காரணமாக என்னவோ மிகப்பெரிய அடி ஆராமுது வாழ்வில்… அதனால் அவர் வாழ்வே திசை மாறிய கோலம்…. இதெல்லாம் தான் ஆராமுதுவை சட்டுனு கிளம்ப சொல்லிட்டுதோ?

ரிஷபனின் எழுத்து நடை மிக எளிமை…. பாமரனும் புரிந்துக்கொள்ளும் வகையில்….. அந்த எளிமையான வரிகளில் நுணுக்கமான ரசிக்க வைக்கும் விஷயங்கள்… அட இது தான் ரிஷபன் டச் யா என்று சொல்லவைக்கும்படி….

தொலைச்சவங்களுக்கு தானே அதன் அருமை தெரியும்… என்ன தொலைத்தார்…. தொலைத்ததை தேடி வந்தாரா? காலம் எத்தனை கரைந்து போனாலும் கரையாது தொண்டைக்குழியில் நின்று இன்றும் ஆராமுதை சிரமப்படுத்தும் வார்த்தைகள்…. அதை ரிஷபன் ஸ்டைல்ல வாசித்தால் “ வார்த்தைகள் உயிரோடு நின்று மிரட்டுகின்றன “ இத்தனை காலமாகியும் முதுமையிலும் மறதி இருந்தபோதும் வார்த்தைகளின் மிச்சம் இன்னும் வடுவாகி ஆராமுதை இன்னமும் விரட்டிக்கொண்டும் மிரட்டிக்கொண்டும் இருக்கத்தான் செய்கிறது…..

கதம்ப உணர்வுகள் said...

செய்யாத ஏதோ ஒரு தவற்றுக்கு பலியாகி பழி ஏற்று கூனிக்குறுகி நிற்கும் அந்த கொடுமையான கணங்களை நினைவுக்கு கொண்டு வந்திருப்பாரோ ஆராமுது?

பண்டாபீஸ் பற்றி அடிக்கடி நினைக்கிறார்னா எதுனா பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் தான் இத்தனை ப்ரச்சனையாகி அதனால் குற்றம் ஏற்று அசிங்கப்பட்டிருப்பாரோ ஆராமுது?

முப்பது வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு மோசமான நிகழ்வினால் பாதிக்கப்பட்ட ஆராமுது தொலைத்த அவமானத்தை மீட்கவோ தன் தொலைந்த சந்தோஷங்களை மீட்கவோ வந்திருக்க நியாயமில்லை. ஆனால் இதற்கு காரணமாக இருந்தோ அல்லது உண்மை என்னவென்று தெரிந்திருந்தும் அந்த கூட்டத்தில் நிமிர்ந்துச்சொல்லாமல் பின்வாங்கி பேடியாகி ஓடிப்போனதால் தான் ஆராமுதுக்கு இத்தனை கோபமா சிவபாதத்தின் மேல்?

போனவர் திரும்பி வந்ததும்…

இறந்தகாலம் உயிர்ப்பெற்றுவந்து இரைச்சல்கள் கேட்டன… ஆஹா சிந்தனைகளின் உயிர்ப்பு இருக்கும் வரை அமுதமாய் எழுத்துகள் தொடர்ந்துக்கொண்டே தான் இருக்கும்…. ஆங்காங்கு சட்டுனு திடிர்னு அத்தர் மணம் வந்ததும் இது அத்தர் வாசனை தானே அப்டின்னு திரும்பி அக்கம் பக்கம் பார்ப்போமே.. அதே போல ரிஷபனின் எழுத்துகளின் கோர்வையில் அங்கங்கே தெளித்த இதுபோன்ற வரிகள் நினைக்கவைக்கிறது இதுபோல்…

'விசாரிக்க என்ன இருக்கு.. கையும் களவுமா பிடிச்சாச்சு'

'சிவபாதம் நீ இதுல தலையிடாதே..'

சிவபாதம் சட்டென்று ஒதுங்கியதைப் பார்த்து ஆராமுது அரண்டு போனார்.

“டேய் சிவபாதம்..”
கூட்டம் மெல்ல மெல்ல முன்னேறியது. சிவபாதம் நகர்ந்து கொண்டே பின்னுக்கு போவது தெரிந்தது. அவன் கண்களில் தெரிந்த மிரட்சி.. கெஞ்சல்.. பயம்..

மோகன் ஜி தொடங்கி வைத்த களத்தில் சிக்ஸர் சிக்ஸர் என்று தொடர்கிறது…. அதோடு சஸ்பென்ஸும்…. யார் தான் விடுவிப்பார் சஸ்பென்ஸை தொடரும் வாசகர்களும் அதே ஆர்வத்துடன்….

அதெப்படி ரிஷபா எழுத்துகள் உங்கள் வசப்படுகின்றன?? சொல்பேச்சு கேட்கின்றன?? திகைக்கவைக்கின்றன??

அடுத்து ராமமூர்த்தி சார் என்ன எழுதி இருப்பார் என்ற ஆர்வம் மேலிடுகிறதுப்பா…

தொடர்ந்த சிக்ஸர் அடிச்சதுக்கு மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் ரிஷபா........

G.M Balasubramaniam said...

கோலம் வரையத் துவங்கு முன்பே இன்னும் சில புள்ளிகள் வைக்கப் பட்டு விட்டன. புள்ளிகள் அதிகமாகும்போது கோலம் வரைவதும் சிரமம். இருக்கும் புள்ளிகளை ஒழுங்காய் இணைக்க வேண்டும் அல்லவா. மூவரும் சேர்ந்து கண்ணாமூச்சி ஆடுவார்களா. பொறுத்திருந்து பார்ப்போம் மோகனின் பதிவில் எழுதிய பின்னூட்டந்தான் இது. எழுத்து நடை அணுகல் எல்லாவற்றிலும் ஒரு வித்தியாசம் தெரிகிறது. கை சுடுகிறது அடுத்தவர் பிடிக்கட்டும் என்பதுபோல் தெரிகிறது. ராமமூர்த்தி எப்படி நகர்த்துகிறாரோ பார்ப்போம்.
.

7

கதம்ப உணர்வுகள் said...

நமக்கு இஷ்டமானதை நம் மனசுக்கு பிடிச்சவங்க அதுவும் ரொம்ப நாள் பிரிஞ்சு இருந்து ஒரு நாள் பார்க்கும்போது பகிரும்போதோ அல்லது அருகே அமரும்போதோ அல்லது அகஸ்மாத்தாய் தடுமாறும்போது பிடிச்சுக்கும்போதோ சட்டுனு முதுகுல ரெண்டு இறக்கை கண்ணுக்கு தெரியாமல் முளைத்து பறப்பது போல ஒரு உணர்வு ஏற்படும்... அந்த மாதிரி ஆராமுதுவை பார்த்ததும் சிவபாதத்துக்கு பலமும் சந்தோஷமும் ஆர்வமும் இன்னும் என்னென்னவோ கலவையா மனதில் ஏற்பட்டு அந்த உந்துதலில் எழுந்துட்டார் போலிருக்கு... ஆனாலும் அந்த வர்ணனை பிடிச்சிருந்தது ரிஷபா.... எப்டி எப்டி? உடம்பு சொல்றப்பேச்சை கேட்பதில்லை தானாம்... கை ஒரு பக்கம் கால் ஒரு பக்கம் இழுக்கிறதாம். ஆனாலும் உத்வேகம்? பிடிவாதம்? நெடுநாள் சந்திக்காமல் சந்தித்த நட்பின் பலம்? மனசு படும் சந்தோஷம்.... பதறி போய் பிடிக்க வந்தா உதறுவது ஏனாம்?? செல்லக்கோபம் இருக்க வாய்ப்பில்லை.. இருவருக்கும் மனசுக்குள்ள நிறைய பகிரவேண்டிய விஷயங்கள் இருக்கே.. படிக்கும் எங்களுக்கும் தெரியவேண்டிய ரகசியங்களும் அதில் அடங்கி இருக்கே.... என்னவா இருக்கும் என்னவா இருக்கும்னு மோகன் ஜி எழுதியதில் தலை பிச்சுக்க ஆரம்பிச்சது ரிஷபா உங்க எழுத்துகளின் வசீகரத்தில் கேட்க வேண்டியதை மறந்து கதையில் லயித்து தான் போய்விட்டோம்பா....

நட்பு நட்பு.... அதன் சந்தோஷத்தை மனசு பற்றிக்கொண்டுவிட்டது... உடல்நலம் சரியில்லாத வயோதிகம்... ஆராமுது பிடிச்சுக்கிட்டப்ப தனக்கே தெரியாம தான் உடன்பட்டுட்டோமேன்னு ஒரு பொறாமையா? இல்லை சின்ன வயசுல தான் ஹீரோவா இருந்தோம்.. ஆராமுது சுண்டைக்காய் பையனா இருந்தான்..இப்ப இவன் நல்லா இருக்கான் நாம இப்படி இவன் முன்னாடி படுக்கையில் கிடக்கவேண்டி வந்ததே கை ஒரு கோலம் கால் ஒரு கோலம்னா? அதான் அதான் அதானே?? அதனால் தானேப்பா பொறாமையும் கோபமும் வீம்பும்?

ஆராமுது என்ன தான் நெடுநாள் பால்ய நண்பனா இருந்தாலும் இத்தனை வருஷம் கழிச்சு பார்த்ததில் சங்கோஜம் தெரிகிறதே இருவரின் பேச்சிலும் நடவடிக்கையிலும்.... தட்டுல சாப்பிட விருப்பப்படுவானோ மாட்டானோன்னு வாழை இலையில் போஜனமா? இல்லை டிபனா? என்னவோ விருந்தாளியை உபசரிப்பது போல் உபசரிக்கும்படி ஆகிவிட்டதேன்னு ஆயாசமா சிவபாதத்தின் மனசுல? ஆராமுதுக்கு சங்கோஜமா தோண்றதை தட்டு போதும்டா என்று சொல்வதில் தெரிகிறது...

வாழை இலை, புது சில்வர் டம்ளர், சுடச்சுட இட்லி, சட்னி... ஐயோ மணி இங்க இரண்டரை சாப்பாட்டு டயத்துல மெனு பாரேன் என்னமா கொடுக்கிறார்.... அது ஏன் அப்படி? புது சில்வர் டம்ளர்? பிரிவு மனசை கூடவா தூரமாக்கும்? இயல்பான பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள செய்யுமா என்ன?