April 19, 2013

மனைவியின் மறுபக்கம்

பசித்தது. காலையில் டிபன் சாப்பிடவில்லை. கல்பனா டிபன் செய்திருந்தாள்; அவன்தான் சாப்பிடவில்லை. அலமாரித் தட்டில் அவனுடைய கைப்பைக்கு அருகில் டிபன் பாக்சும் இருந்தது. கிளம்பும்போது வேண்டுமென்றே எடுத்துக் கொள்ளாமல் வந்து விட்டான்.


காலை நேர அலுவலகப் பரபரப்பில் முதலில் எதுவும் தெரியவில்லை. ஒன்பதரை மணிக்கு நண்பர்களுடன் சேர்ந்து குடித்த டீ வேறு பசியைத் தற்காலிகமாக மறக்கடித்திருந்தது.

பதினோரு மணிக்கு லேசாக வயிற்றைக் கிள்ளியது. நேரம் ஆக... ஆக… பசி அதிகமாகி… பனிரெண்டு மணிக்கு வரும் கேரியர்க்காரரை மனசு எதிர்பார்த்துத் தவித்தது.

"என்னடா… சண்முகம் ஒரு மாதிரி நெளியறே?" என்றான் பக்கத்து சீட்டிலிருந்த சுந்தர்.

"இன்னைக்கு என்னவோ… சீக்கிரமாவே பசிக்குது."

"டிபன் சாப்பிட்டீல்ல… காலைல…"

"ஆ… ஆங்…" என்றான்.

"அப்புறம் என்ன ஆச்சு… வீட்டு பிரச்னை?"

"எ… எது…?"

"அதான்… உன் சிஸ்டர் லெட்டர் போட்டிருந்தாங்கல்ல? பணம் வேணும்னு சொல்லி... உங்க வீட்டுல அதனால ஏதோ பிரச்னைன்னு…"

பாவம்! பழகின நட்பில் வீட்டுப் பிரச்சினையைப் பகிர்ந்து கொண்டதால் நினைவு வைத்துக் கொண்டு கேட்கிறான். ஆனால், இப்போதைய மனநிலையில் அவன் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாது. காலையில் டிபன் சாப்பிடாத காரணமே அதுதான். நேற்றிரவு படுக்கப் போனதும் இதே வாக்குவாதம்.

"அப்புறம்... என்ன முடிவு எடுத்தீங்க?" என்றாள்.

"எதுக்கு?…"

"உங்க தங்கைக்கு பணம் அனுப்பற விஷயமா."

"பாவம்! அவளால முடியாம போனதாலதானே லெட்டர் போட்டிருக்கா?"

"இங்கே பாருங்க… எதற்கும் ஒரு அளவு இருக்கு! அதை நினைப்புல வச்சிருங்க."

"இப்ப நீ என்னதான் சொல்லுறே…" என்றான் எரிச்சலுடன்.

"நாளைக்கு நமக்கு கஷ்டம்னா… யாரும் வரமாட்டாங்க. அவ்வளவு ஏன், போன மாசம் பாத்ரூம்ல நான் தவறி விழுந்து காலை உடைச்சுக்கிட்டப்போ கையில் பைசா இல்லாம திண்டாடினமே… நினைவிருக்கா?"

"ம்… ம்…"

"உங்க தங்கை… வெறுங்கையை வீசிக்கிட்டு வருவான்னு நினைச்சேன். அது கூட இல்லே. ஒரு லெட்டர்… சீக்கிரமா உடம்பு குணமாவட்டும்னு. அவ்வளவுதான் உறவு…"

"இப்ப என்ன சொல்றே? உன்னை நேர்ல வந்து பார்த்தாதான் அன்பாயிருக்கிறதா அர்த்தமா… இல்லேன்னா பாசம் இல்லேன்னு ஆயிருமா?"

"உங்களுக்கு சொந்தமாவும் அறிவு இல்லே. சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டீங்க. இப்ப இருக்குன்னு செலவழிச்சுட்டு… பின்னால எவன் கடன் கொடுப்பான்னு அலைவீங்க" என்றாள் முணுமுணுப்பாய்.

இதுவரை இருந்த பொறுமை விலகிப் போக… சண்முகம் இரைச்சலிட்டான்.

"நான் முட்டாள்தான். நேத்து வந்தவ நீ! அவ கூடப் பொறந்தவ! அந்த வித்தியாசம் உனக்கு ஏன் புரியலே… பெரிய புத்திசாலிக்கு…?"

விலகிப் படுத்து விட்டான். அழுது கொண்டிருந்தாள் போலும். விசும்பல் சத்தம் கேட்டது. எப்போது துங்கினாளோ…?

காலையில் எழுந்தபோது கண் எரிந்தது. பேசவேயில்லை. மௌனமாகக் குளித்து… தலை சீவி… உடை அணிந்து ஞாபகமாய் டிபன் பாக்சைத் தவிர்த்து ஆபீஸ் கைப்பையை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து விட்டான்.

இதோ இந்த நிமிடம், பசிதான் சாஸ்வதம் என்று தோன்றியது. உணவுதான் உடனடித் தேவை. தொழிற்சாலையை ஒட்டி நல்ல ஹோட்டல்கூடக் கிடையாது. மதியம் கேரியர் எடுத்து வரும் நபரின் வரவுதான் இப்போது தேவை.

"சாப்பிடப் போகலாமா..." என்றான் சுந்தர் தோளைத் தட்டி.

ஓ… பனிரண்டு ஆகிவிட்டதா? டைனிங் ஹாலை நோக்கிப் போனார்கள்.

நல்லவேளை! கேரியர் வந்து விட்டது. கை கழுவிக் கோண்டு அவரவர் டிபன் அடுக்கைப் பிரித்தார்கள்.

என்ன இது… முதல் தட்டு காலியாக… இல்லை நான்காக மடித்திருந்த காகிதம்…
எடுத்துப் பிரித்தான்.

"டியர்… என் மேல் உள்ள கோபத்தில் உங்கள் வயிற்றுக்குப் பிரச்னை செய்து விட்டீர்கள். உங்களுக்குப் பசி தாங்காது. என்ன செய்தீர்களோ?… எனக்கு என் கணவர், என் குடும்பம் என்றுதான் நினைத்துப் பார்க்க முடியும். தவறானாலும் சரி... மற்றபடி, முடிவு எடுக்கிற உங்கள் சுதந்திரத்தில் தலையிடவில்லை. என்னுடைய கருத்தை நேற்றிரவு சொன்னேன். ஏற்பதும் விடுவதும் உங்கள் விருப்பம். அதற்கும் உணவு விஷயத்துக்கும் முடிச்சுப் போடலாமா? ஐந்து மணிக்கே கண் விழித்து… உங்களுக்காக டிபன் செய்கிறேன். ஒரு வினாடியாவது அதை நினைத்துப் பார்த்திருந்தால் இப்படிச் செய்திருக்க மாட்டீர்கள். போகட்டும்! மாலையில் சீக்கிரம் வீடு திரும்பி விடுங்கள். புதிதாய் டிபன் செய்து வைத்திருக்கிறேன்".

கண்களில் நீர் கட்டிக் கொண்டு வந்தது. எத்தனை அபத்தம்! எழுந்ததும் குளித்து அரக்க பரக்க அலுவலகம் ஓடி வந்து விடுகிறேன். நின்று பேசக் கூட நேரம் இல்லாமல். எனக்கு முன்னே எழுந்து டிபன் செய்து தயாராக வைத்திருக்கிறாள்… பாவம்!

தன்னுடைய தவறு மனதில் உறைக்க, மௌனமாய்க் கடிதத்தைப் பையில் வைத்துக் கொண்டான்.

"சீக்கிரம் வீட்டுக்குப் போக வேண்டும்!"

15 comments:

Ramani S said...

Arumai vaazhththukkal

Srinivasan Balakrishnan said...

மனைவியின் மறுபக்கம் அழகாய் சொல்லி விட்டீர்கள் மனைவிக்கு கணவன் மீது அன்யோன்யத்தை

வெங்கட் நாகராஜ் said...

என்ன தான் பிரச்சனை என்றாலும் உணவின் மீது கோபத்தினைக் காட்டக் கூடாது எனச் சொல்லுவார்கள்.....

அதை உணர்த்தியது உங்கள் கதை. நல்ல சிறுகதை!

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் சாதாரண ஓர் நிகழ்வு தான் என்றாலும் தங்களின் அசாதாரண எழுத்துக்களில் மின்னுவதாக உள்ளது.

விடியற்காலம் எழுந்திருந்து கஷ்டப்பட்டு டிபன் செய்துகொடுத்ததை, வேண்டுமென்றே கொண்டு வராமல் போனதின் அவதியும் அனுபவித்தார்.

அவளின் மறுபக்க அன்பினையும் புரிந்து கொண்டார்.

புரிந்து கொண்டால் மறுபக்கமும் எப்போதுமே சூப்பராகத்தான் இருக்க முடியும் ! ;)

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.

கோமதி அரசு said...

மனைவியின் மறுபக்கம் அழகாய் சொல்லிவிட்டீர்கள்.

இராஜராஜேஸ்வரி said...

தன்னுடைய தவறு மனதில் உறைக்க

மனைவியைப் புரிந்து கொண்ட நிதர்சனம் ..

நிலாமகள் said...

அதுதான் பெண்டாட்டி!

ராமலக்ஷ்மி said...

அருமையான கதை.

அப்பாதுரை said...

நெகிழ வைத்தக் கதை.

எல்லா உறவுகளையும் துறந்து தன்னை மட்டுமே நம்பி வரும் மனைவிக்கு மறுபக்கம் என்று எதுவும் கிடையாது, அதை உருவாக்குவது கணவர்கள் என்றும் நினைக்கிறேன்.

Jayajothy Jayajothy said...

இங்குதான் இப்படிதான் பெண்கள் இருக்கிறார்கள். பலமும் பலவீனமும் அதுதான்.

ezhil said...

அன்பின் புரிதல் இதுதான்... அருமை

sury Siva said...

இப்படி ஒரு மனைவி கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்ல...

எந்த ஊருங்க இவுக ?

ஸ்ரீரங்கமா ?

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
www.vazhvuneri.blogspot.in

vasan said...

இத‌ய‌த்துக்குள் விரைவில் நுழைய எளிய‌ வ‌ழி.
இல்லாளுக்கும், இர‌ந்த‌ங்க‌ளுக்குள்ளூம் புரிதல்
இல்லையெனில், சிறு சிறு த‌லைவ‌லிக‌ள் தான்
என்றென்றும்.

Manjubashini Sampathkumar said...

என்னோடு சேர்த்து நிறையப்பேருக்கு இந்த பழக்கம் இருக்கிறது.

பிரச்சனை இல்லாத வீடு கண்டிப்பாக இருக்காது.

என்ன பிரச்சனை என்றாலும் பேசி தீர்த்துக்கலாம். இப்படியா வயிற்றைப்பட்டினி போடுவது? மனைவி அப்படி சொன்னது தப்பு தான். சுயநலமாய் இப்படி ஒவ்வொருவரும் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் அப்புறம் உறவுகள் கேள்விக்குறையாகிவிடும். இனிவரும் நம் சந்ததிகளுக்கு உறவுகளின் மதிப்பும் தெரியாமல் போய்விடும்.

மனைவி சுயநலமா சிந்தித்தாலும் புருஷனுக்காக அதிகாலை எழுந்து டிபன் செய்து வைத்தது ரொம்ப க்யூட் சீன்.

தங்கை தவறு செய்திருந்தாலும் பாசமுள்ள அண்ணன் அதை மனசுல வெச்சுக்காம தன் கடமைகளில் ஒரே போல் இருக்கிறார்.

மனைவியின் அன்பையும் சொல்லி, தங்கை மீதுள்ள அன்பையும் சொல்லி, தனக்கு பசிச்சா தன் மனைவிக்கு தெரியும் என்பதை மட்டும் உணர தவறிய கணவனுக்கு அழகிய சங்கேத லெட்டர் டிபன் கேரியரில்.

வாழ்க்கையில் எது முக்கியம், எப்படி இருக்கலாம் இருக்கக்கூடாது என்ற நுண்ணிய கருத்துடன் கதை முடிகிறது.

எளிய இயல்பனா அழகிய எதார்த்த கதைப்பா ரிஷபா....

அள்ளிட்டு போகுது மார்க்குகளை..

அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு...

gayathri said...

ippadi iruntha thaan pa avanga manaivi,, purusarukku selavu than seiya theirum , pondathiku than semikka theirum
:D