May 21, 2013

வாழ்க்கை



”உங்க வயசு என்னம்மா?"

"எம்பளது" 80 என்பதைத்தான் அப்படிச் சொல்கிறார் என்று புரிந்தது.

"அப்ப உலக யுத்தம் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க"

"எம்டன் குண்டு போட்டப்ப பட்டணத்துலதான் தம்பி நான் இருந்தேன்.. ஊரைக் காலி பண்ணிட்டு ஓடினோம்..புழைச்சாப் போதும்னு"

"சுதந்திரம் கிடைச்சப்ப எப்படி உணர்ந்தீங்க"

"காந்தி மவராசரு பாடுபட்டு ரெத்தம் சிந்தி வாங்கியதாச்சே.. எத்தினி பேரு போராடி.. உசுரைக் கொடுத்து விடுதலை வாங்கினாங்க.. ஆடுவோமே.. பள்ளு பாடுவோமே" பாடும்போது குரல் நடுங்கினாலும் முகத்தில் பிரகாசம்!

"பாரதி பாட்டுன்னா ரொம்பப் பிடிக்குமா?"

"மொத மொதல்ல ஜாதி வித்தியாசம் இல்லாம மனுஷனை மனுஷனா மதிச்ச மகாகவியாச்சே"

"இவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்கீங்க.. ஆச்சர்யமா இருக்கே"

"ஏன் தம்பி ஆச்சர்யப்படுறீங்க. பொட்டைப் புள்ளைங்க படிப்பறிவு இல்லாம நிக்கணும்னு நினைச்ச காலம் மலையேறிப்போச்சு. இப்ப ஆம்பளைக்கு சமமா பெண்களும் வரணும்னு பிரியப்படற மனுஷங்க அதிகமாயிட்டாங்களே"

"எப்ப உங்களுக்கு கல்யாணம் ஆச்சு"

"பதினஞ்சு வயசுல புருஷன் வீட்டுக்குப் போனேன்பா"

"எத்தினி புள்ளைங்க உங்களுக்கு"

"மூணு பெத்தேன்.. எல்லாம் பூமிக்குள்ளே போயிருச்சு"

"ப்ச்.. கேட்கவே கஷ்டமா இருக்கு"

"அவரும் சிறு வயசுலயே போயிட்டாரு"

அடுத்த கேள்வி கேட்க நாக்கு எழும்பவில்லை உடனே.

"புகுந்த வீட்டுல அவரு கூடப் பொறந்தவங்க எல்லாம் சின்னதுங்க.. என் மாமியாளுக்கு துணையா நானும் நின்னு அதுங்களை வளர்த்து ஆளாக்கினேன்"

"வேற கல்யாணம் கட்டிக்க.." முழுக் கேள்வி கேட்க மனசு வரவில்லை.

"அந்தக் காலம் வேற தம்பி.. நா(ள்)பூரா ஒழைப்புத்தான்.. சலிக்காம வேலை.. எல்லாரையும் வளர்த்து.. கட்டிக் கொடுத்து.. பிரசவம் பார்த்து.. டேயப்பா.. படம் எடுத்தா.. இப்ப நீங்க பொட்டியில பார்க்கறீங்களே.. வாரம் முச்சூடும்.. அழுதுகிட்டே.. அந்த மாதிரி இருக்கும்"

பாட்டிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்தான்!

நிதானமாய்க் கேட்டேன்.

"பாட்டி.. எப்பவாச்சும் ச்சீ.. என்னடா வாழ்க்கைன்னு தோணியிருக்கா?"

அதைவிட நிதானமாய்ச் சொன்னார்.

"நாம.. நம்ம சுகம்னு எம்மனசுல எப்பவும் நினைச்சதில்ல அப்பு.. கண்ணெதிர்ல எம்புருஷன் குடும்பம் வளர்ந்து ஆளானதைப் பார்த்த சந்தோஷம் இருக்கே.. என் காலைச் சுத்தி இப்பவும் அந்த உறவு நிக்கிதே.. என் கண்ணசைப்புல என் மனசைப் புரிஞ்சுக்குதே.. அது போதும் தம்பி.. நான் பொறந்ததற்கு அர்த்தம் கிடைச்சாச்சு"

அவர் முகம் அந்த நிமிடம் இன்னும் கூடுதலாய் பிரகாசித்தது அப்போது.

13 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"நாம.. நம்ம சுகம்னு எம்மனசுல எப்பவும் நினைச்சதில்ல அப்பு.. //

சுயநலமற்ற வெள்ளந்தியான மனிதர்கள் .... ஆங்காங்கே இன்னும் சிலர் மட்டும் உயிரோடு.

நல்லதொரு அழகான படைப்பு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

பகிர்வுக்கு நன்றிகள்.

இராஜராஜேஸ்வரி said...

இன்னும் கூடுதலாய் பிரகாசித்த வாழ்க்கைப் பகிர்வுகள்..பாராட்டுக்கள்.

அப்பாதுரை said...

நிறைவின் விளக்கம்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

//நாம.. நம்ம சுகம்னு எம்மனசுல எப்பவும் நினைச்சதில்ல அப்பு.. கண்ணெதிர்ல எம்புருஷன் குடும்பம் வளர்ந்து ஆளானதைப் பார்த்த சந்தோஷம் இருக்கே.. என் காலைச் சுத்தி இப்பவும் அந்த உறவு நிக்கிதே.. என் கண்ணசைப்புல என் மனசைப் புரிஞ்சுக்குதே.. அது போதும் தம்பி.. நான் பொறந்ததற்கு அர்த்தம் கிடைச்சாச்சு"//

ஒரு உரையாடல் முடிவடைந்து போனதால், இது இறுதிக் கேள்விக்கான பதிலாய் அமைந்துவிட்டது தற்செயல்தான். ஆனாலும் அவரை எடைபோட அந்த ஒரு பதில் போதும்.

அந்த நிறைகுடத்தின் மனதில் சுரக்கும் அத்தனையும் அமிர்தம்தான்.

நிறைவான ஒரு மனுஷியை நுட்பமாய்க் கண்டெடுத்த ரிஷபனுக்கு ஒரு ஷொட்டு.

sury siva said...

// அது போதும் தம்பி.. நான் பொறந்ததற்கு அர்த்தம் கிடைச்சாச்சு"//

இன்னிக்கு கணிணியைத் திறந்ததற்கும் ஒரு அர்த்தம் கிடைச்சாச்சு.

சுப்பு தாத்தா.

திண்டுக்கல் தனபாலன் said...

/// நம்ம சுகம்னு எம்மனசுல எப்பவும் நினைச்சதில்ல ///

அப்படி வாழ்பவர்களுக்கு என்றும் வாழ்க்கை அற்புதம் தான்...

சிறப்பான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்... நன்றி...

ராமலக்ஷ்மி said...

வணக்கத்துக்குரிய இதுபோன்றவர்கள் இன்னும் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

G.M Balasubramaniam said...

அந்த மூதாட்டியின் பேச்சில் புத்தனை காண்கிறேன். .

The sole justification for existence is the search for truth என்று காந்தி சொன்னதும் Love thy neighbor as thyself எனும் பைபிள் வாசகமும் நினைவுக்கு வருகிறது.பதிவுக்குப் பாராட்டுக்கள்.

ezhil said...

ஆம், பிறந்ததற்கு அர்த்தமான வாழ்வு...

middleclassmadhavi said...

pala kElvikaLin vidai!!
Thanks

நிலாமகள் said...

டேயப்பா ...!! சிலிர்ப்பு.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

super story from a super star writer.....

vimalanperali said...

நல்ல மனுசி,இது போன்றவர்கள் நிறைந்து சிதறிக்கிடக்கிற புண்ணிய பூமி நம்மளது.