June 22, 2013

காணாமல் போனவன் - 3

மஞ்சரிக்குத் தாகம். எழுந்து வீட்டுக்குள் போனாள். சமையலறைக்குள் நுழையப் போனபோது இவள் பெயர் கேட்டது.

"சும்மா ஒரு ஆம்பளை இப்படி விட்டுட்டுப் போவானா? இவ என்ன ராவடி பண்ணாளோ!"

"இருக்காதும்மா! நம்ம மஞ்சு அப்படிப்பட்ட பொண்ணு இல்ல."

"உனக்கு எல்லாம் தெரியுமா?"

"எனக்கென்னவோ அத்தை சொல்றது சரின்னுதான் தோணுது."

"நம்ம மூலத்தெரு பரிமளம் புருஷன் ஏன் ஓடிப் போனான்... நினைப்பிருக்கா?"

"ஐயோ அவ கொடுமைக்காரியாச்சே! அவ தொல்லை தாங்காம இல்ல அவன் போனான்?"

"சில பேர் வெளியே நல்ல பேர் வாங்கறாப்ல நடிச்சுகிட்டு உள்ளே அவ்வளவும் குசும்புத்தனம் பண்ணுவாங்க."

மஞ்சரிக்குத் தண்ணீர் குடிக்கிற ஆசையே போய்விட்டது. இப்படியெல்லாமா பேசுவார்கள்!

சதாசிவம் முகத்தில் சுரத்தே இல்லை. அவருக்கும் இப்போது லேசாய்க் கவலை. எந்தத் தகவலும் இல்லாமல் எங்கே போய்த் தேடுவது!

"இப்படி உட்காரும்மா!"

மஞ்சரி அவரையே பார்த்தாள். இப்போது அழுகை வரவில்லை. இனி என்ன செய்வது என்கிற யோசனை. இருட்டில் துழாவுகிற பூனை போல. ஏதேனும் ஒரு சிறு வெளிச்சம் கிடைத்தாலும் போதும்.

"அவன் பேங்க் அக்கௌண்ட் பத்தி தெரியுமா?"

"தெரியாது மாமா!" சொல்லும்போதே மஞ்சரிக்குச் சங்கடம் செய்தது மனசுக்குள்.

இப்ப எதுக்கு அதெல்லாம்?...

"உன்னால புள்ளைங்களை வச்சு சமாளிக்க முடியுமா?"

"என்ன மாமா இப்படி கேட்கறீங்க!"

"இல்லம்மா... நாம இப்ப எதுக்கும் ஒரு யோசனை செஞ்சு வச்சிரணும். அவனைத் தேடுறது தனி... அதுக்காவ தினசரி வாழ்க்கையும் பாக்கணுமில்ல?"

மஞ்சரிக்கு இப்போது கண்ணீர் முட்டியது.

"இங்கே பாரும்மா... என்ன நடந்திச்சுன்னு புரியல. அடுத்த யோசனை என்னன்னு..."

"எனக்கு எதுவுமே தெரியாது மாமா! எல்லாம் அவர் பார்த்துக்குவார்னு..."

"என்னம்மா... படிச்ச புள்ளை... நீயா இப்படிக் கலங்கறது?"

மஞ்சரி பதில் சொல்லவில்லை. ராகவியும் பாபுவும் வந்துவிட்டார்கள்.

"அப்பா ஏம்மா பேசல?"

"பேசுவார்மா!" என்றார் சதாசிவம்.

"நாங்க கிளம்பறோம் மாமா" என்றாள் மஞ்சரி.

"என்னம்மா... இப்பவேவா?!"

"ஆமா... எப்படியும் அங்கேதானே போகணும்?"

அவளுக்குள் ஒரு தீர்மானம். இனி இங்கிருக்க வேண்டாம்.

"நானும் வரேம்மா!"

"வேணாம் மாமா! நான் பார்த்துக்கறேன்."

பிடிவாதமாய் மாமாவைத் தவிர்த்துவிட்டுக் கிளம்பினார்கள். அத்தை "பாவம் நீயி" என்று சொன்னதற்கு வெறுமையாய் ஒரு சிரிப்பு.

கோவில் வாசலில் காரை நிறுத்தி, பூட்டிய கதவின் முன் கை கூப்பி நின்றாள்.

"நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யல. என்னைக் கை விடாம காப்பாத்தறது உன் பொறுப்பு!"

மனசுக்குள் பிரார்த்தனை ஓடியது.

"அம்மா! அப்பாக்கு நம்ம மேல கோவமா?"

"ஏம்மா இப்படி செஞ்சார்?"

மாற்றி மாற்றிக் கேட்டதற்கு மஞ்சரியால் பதில் சொல்ல முடியவில்லை. 

"அம்மா! அப்பா திரும்பி வருவார்ல?"

இந்தக் கேள்விக்குத்தானே விடை தெரியாமல் அவளும் தவிக்கிறாள்.

****

கார் போய்க் கொண்டிருந்தது. டிரைவர் நாசூக்கு தெரிந்து எதுவும் பேசாமல் ஓட்டிக் கொண்டிருந்தார்.

"அம்மா! இங்கேதானே அப்பா காணாம போனார்?"

திடீரென ராகவி கத்தினாள்.

"ஆமாம்! இதே இடம்தான்."

"காரை நிறுத்துப்பா!"

இறங்கி நின்றனர் மூவரும். விளையாட்டு போல ஆகிவிட்டது. கிளம்ப மாட்டேன் என்றவர்களை வற்புறுத்தி இழுத்து வந்து... கடைசியில் ரமேஷைக் காணாமல் போக்கியாகி விட்டது.

மஞ்சரி கண் மூடி விம்மினாள்.

எனக்கேன் இந்தச் சோதனை?...

"அம்மா!"

ராகவியின் பதற்றமான குரல்.

கூடவே பாபுவின் குரலும்.

"அம்மா!"

மஞ்சரி தலை கவிழ்ந்து குமுறிக் கொண்டிருந்தபோது யாரோ தோள் தொட்ட பிரமை.

"மஞ்சு!..."

ரமேஷின் குரல்.

திடுக்கிட்டுக் கண் விழித்துப் பார்த்தாள்.

எதிரே ரமேஷ்!
--தொடரும்...

10 comments:

அப்பாதுரை said...

சபாஷ், சரியான கொக்கி.

sury Siva said...

நான் சொன்னேன் இல்லயா.. பாதுகா ஸஹஸ்ரம் படிங்கோ அப்படின்னு.

அத்தனை ஆக்ஸிஜனும் ஆத்துக்குள்ளே வந்தாப்போல இருக்கு.

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in

ராமலக்ஷ்மி said...

எங்கே சென்றிருந்தார் என அறியவும், சுபமான முடிவுக்கும் காத்திருக்கிறோம்.

திண்டுக்கல் தனபாலன் said...

எப்படி தீடீரென்று எதிரே ரமேஷ்...!?! சஸ்பென்ஸ் தாங்க முடியலே சாமீ...! ஹிஹி...

ஆவலுடன்...

ரிஷபன் said...

காலையில் உங்க குரல் கேட்டதும் ரொம்ப குஷியாயிட்டேன்.. சுப்பு தாத்தா ஆசி இருக்கும் வரை எல்லாமே சக்சஸ்தான் !

இராஜராஜேஸ்வரி said...

ரமேஷின் குரல்.

திடுக்கிட்டுக் கண் விழித்துப் பார்த்தாள்.

எதிரே ரமேஷ்!

கனவு போல ...!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"மஞ்சரிக்குத் தண்ணீர் குடிக்கிற ஆசையே போய்விட்டது.

இப்படியெல்லாமா பேசுவார்கள்!//

அதானே!

வெறும் வாயையே மென்று வருபபவர்கள். இப்போ அவல் கிடைத்துள்ளதே!

//திடுக்கிட்டுக் கண் விழித்துப் பார்த்தாள். எதிரே ரமேஷ்!//

ஆஹா, கனவோ நனவோ, ரமேஷ் திரும்ப வந்துள்ளதில் படிப்போருக்கு சற்றே ஆறுதல்.

சுவையான எழுத்துக்களை சுகமாகத் தொடருங்கள்.

நிலாமகள் said...

பள்ளம் படுகுழியில் தவறி விழுந்துட்டாரோ...?!

சுப்பு தாத்தாவை பாதுகா சகஸ்ரம் பற்றி எல்லோருக்கும் தெரியும்படி எழுதச் சொல்லுங்கோ... எல்லோருமா படிப்போம்.

இராஜராஜேஸ்வரி said...

கலாட்டா செய்ய வீடுக்கு வந்து பதுங்கி என்ன செய்கிறார்கள் என்று வேடிக்கைபார்த்திருப்பாரோ..!

G.M Balasubramaniam said...

கதையை முழுவதும் படித்துக் கருத்திட்டால்தான் சரியாக இருக்கும்.