July 31, 2013

இசை 1

பரிச்சயக் கையொன்றுதான்
அப்படித் தள்ளியது...
இன்னும் கிட்டவில்லை
தரை.
(நன்றி: ப்ராங்க்ளின் குமார்)

இன்பாக்ஸில் ஒளிர்ந்த கவிதை ரேணுகாவினுடையது. நள்ளிருட்டில் செல் மினுக்கியதும் எடுத்துப் படித்தேன். நேரம் 12.10. 

வயலட் பூக்கள் நிறைந்த நைட்டியில் இருப்பாள். இன்னும் அவள் தூங்காமல் இருப்பதன் அடையாளம் இந்தக் கவிதை. 

ரேணுகாவின் கோபம் கூட அழகு! கவிதைகளால் நெய்யப்பட்ட அவள் உலகில் கோபம் கூடக் கத்தரித்துப் போட்ட பட்டுத்துணி.

என்ன பதில் தருவது... 'ம்ம்' என்று டைப் அடித்து, நீக்கி, கொஞ்ச நேரம் குழம்பினேன். 

வாக்களித்தபடி என்னால் போக முடியவில்லை. இன்று கவியரங்கம். அதிலும் ரேணுகாவின் கவிதை. அவள் குரலில் கேட்கும் வாய்ப்பை... அதற்கான கரகோஷத்தைக் கேட்கும் வாய்ப்பை இழந்தாகி விட்டது. ஆடிட்டைக் கண்டுபிடித்தவர்களையும் அதை அவசியமாக்கியவர்களையும் சுண்ணாம்புக் காளவாயில் போட்டு அறம் பாட வேண்டும்.

என் இயலாமையை முன்பே சொல்லி இருந்தேன். வர முயற்சிக்கிறேன்... முடியாவிட்டால் சகியே கோபிக்காதே.. என்று.

***

பதற்றத்தில் கை தவறி வெற்றுச் செய்தியை அனுப்பி விட்டேன். மெசேஜ் சென்ட்.. என்று ஒளிர்ந்தது. போச்சு... அவளைச் சீண்டியாகிவிட்டது... என்ன சொல்லப் போகிறாளோ!

நட்சத்திரங்கள் தொலைவில் மினுக்கிக் கொண்டிருந்தன. கேலிச் சிமிட்டல், 'மாட்டிகிட்டியா... மவனே!' 

இன்பாக்ஸில் சேகரித்து வைத்திருந்த எண்ணூற்றுச் சொச்சம் குறுஞ்செய்திகளில் தேடினேன்.

'சில நேரங்களில் வெற்றுச் செய்தி கூட ஒரு தகவல்தான். நேசிக்கும் உள்ளம் அதைப் பூர்த்தி செய்து புரிந்து கொள்ளும்!'

அட... அனுப்பிய நண்பனுக்கு மனசுக்குள் நன்றி சொல்லி, அதையே ரேணுகாவுக்கு அனுப்பினேன் அடுத்த செய்தியாக. 

இசைவாளா... இல்லை முறுக்கிக் கொள்வாளா!...
***

ஸ்மைலி வந்தது அவளிடமிருந்து...! 

அடுத்த நிமிடமே அழைப்பும்.

'ரிஷி! இப்போ படிக்கவா... உனக்கு மட்டும்?' என்றாள். 

கண்சிமிட்டிய நட்சத்திரங்கள் மையிருட்டில் மூழ்கிக் காணாமல் போய்விட்டன அப்போது.நன்றி : கல்கி (ஒரே தலைப்பில் இரு கதைகள் - இது முதல் கதை.. அடுத்தது அடுத்த பதிவில் )


15 comments:

வெங்கட் நாகராஜ் said...

//'சில நேரங்களில் வெற்றுச் செய்தி கூட ஒரு தகவல்தான். நேசிக்கும் உள்ளம் அதைப் பூர்த்தி செய்து புரிந்து கொள்ளும்!'//

அருமை.....

சிறப்பான சிறுகதை. இதே தலைப்பில் அடுத்த சிறுகதையும் படிக்க ஆவலுடன்....

மஞ்சுபாஷிணி said...

அழகிய குட்டி கவிதையுடன் (ஃப்ராங்க்ளின் குமார்) தொடங்குகிறது கதை….

நேசம்…. நட்பு… அன்பு.. இதை எல்லாம் பிரிக்கத்தெரியாது எழுத்துகளுக்கு….

இந்த மூன்றும் வேறு வேறு தான் என்றாலும்.. பிரிக்கமுடியாத அளவு இறுக்கம் இருக்கும் இந்த மூன்றுக்குமே..

ரேணுகாவின் கவிதை இன்பாக்ஸில் நடு இரவில் ஒளிர்ந்ததுக்கு இந்த மூன்றில் ஏதோ ஒன்று கண்டிப்பாக காரணமாக இருந்திருக்கும்..

வாசிப்போரின் மனதிலும் கேள்விகளை எழுப்பவைக்கும்படியான எழுத்துகள் பாராட்டக்கூடியதுப்பா…. அந்த வகையில் இந்த கதை சுவாரசியங்களைக்கூட்டுகிறது….

ரேணுகா என்று சொல்லும்போதே அவளின் குணாதிசயத்தை அழகாய் வெளிப்படுத்த ரசனையான வரிகள்… ரசித்து வாசித்த வரிகள்….

ரேணுகாவின் கோபம் கூட ஒரு அழகு தான்… கவிதைகளால் நெய்யப்பட்ட அவள் உலகில் கோபம் கூட கத்தரித்துப்போட்ட பட்டுத்துணிப்போல.. பலமுறை இந்த வரிகளை வாசித்தேன்..

ரசனை மட்டும் இல்லையென்றால் வாழ்க்கையே சூன்யம் தான்… எதையும் ரசித்து ரசித்து செய்யும் செயல்களின் நிலைபாடுகள் நேசத்தை அதிகரிப்பவை….

அதிகம் பழக்கமில்லாதவர் அழைத்திருந்தால் தவிர்க்கமுடியாத காரணங்களால் வர இயலவில்லை சாரி என்று சொல்லிவிட்டு விலகிவிடலாம்.. ஆனால் இங்கு அன்பைப்பூவாக்கி மனதில் வாசத்துடன் வளையச்செய்து….

கவியரங்கில் ரேணுகாவின் சிமிட்டும் பளபளக்கும் கண் இமைகள் அத்தனைக்கூட்டங்களுக்கு இடையே என்னையே பார்த்துக்கொண்டு பரவசமாக வாசிக்கும் அந்த வாய்ப்பை மிஸ் செய்ததும், அதன்பின் ஏற்பட்ட கரகோஷம்..

நமக்கு பிரியமானவர் பெறும் பாராட்டுகள் என்னமோ தாமே பெறுவது போன்றதொரு குதூகலம்.. இதெல்லாம் மிஸ் பண்ணியாகிவிட்டது…

ஆடிட்டிங் கண்டுப்பிடித்தவரையும் நன்றாக வார்த்தைகளால் நைய புடைத்தாகிவிட்டது.. எல்லாம் செய்து என்னப்பயன்… ரேணுகாவை சமாதானப்படுத்தவேண்டுமே.. சின்ன சின்ன புரிதலின்மையால் அன்பில் விரிசல் வருவதை யாருமே விரும்புவதில்லை…

இயலாமையைக்கூட அழகிய கவிதை வரிகளாகசொன்னது க்யூட். சகியே கோபிக்காதே… இப்படிச்சொன்னால் கோபம் கூட வருமா என்ன? செல்லக்கோபமாக இருக்கும் ரேணுகாவிற்கு… அதையும் தீர்க்க கதை நாயகன் செய்யும் முயற்சி… அதையும் சொதப்பி…பதட்டம் பதட்டம்….

பதட்டத்தில் எப்போதும் எல்லாரும் செய்யும் அதே தவறு.. வெற்றுச்செய்தி அனுப்பியாகிவிட்டது.. சும்மா இருந்த ரேணுகாவை சீண்டியாகிவிட்டது.. குட்டி குட்டி இது போன்ற வார்த்தைகள் கதைக்கு அழகு சேர்க்கிறதுப்பா….

எத்தனை முயற்சிகள்… மனம் தளராமல்….. அத்தனை இன்பாக்ஸ் செய்திகளில் இருந்து குறுந்தகவல் நண்பனுக்கு ஒரு நன்றி… பின்ன.. பெரிய கோபத்தில் இருந்து மீட்டச்செய்தி அல்லவா அது… ரசிக்க வைத்து… கோபத்தை முழுமையாய் கரையவைத்த செய்தி அல்லவா அது.. வெற்றுச்செய்தி கூட ஒரு தகவல் தான்… நேசிக்கும் உள்ளம் அதை பூர்த்திச்செய்து புரிந்துக்கொள்ளும்… புரிதலில் காதல் தான் எத்தனை அழகாய் சுகந்தம் வீசுகிறது….

எதிர்ப்பார்த்தது எல்லாம் நடக்கவா செய்கிறது? இசைவாளா கோபத்தில் கொதிப்பாளான்னு இங்கே டென்ஷனாக…. ரேணுகாவின் ஸ்மைலி.. கோபம் காக்கா ஊச்… ஸ்மைலி தொடர்ந்து அழைப்பு… ரிஷி இப்ப படிக்கவா உனக்கு மட்டும்???

இந்த வரிகள்… அது கிசுகிசுத்த குரல்…. நேசம் அங்கே துளிர்க்க ஆரம்பித்து மணம் வீசிக்கொண்டே இருக்கிறது.. வாசகர்களின் மனதையும் அங்கேயே நிலைக்கவைத்து…..

கதையின் வரிகள் எளிமையாக எல்லோரும் வாசித்து புரிந்துக்கொள்ளும்படியாக அமைத்து அதில் நேசத்தின் கோபத்தை எப்படி எல்லாம் வசப்படுத்தி கனிய வைக்கலாம் என்ற முயற்சியின் முத்தாய்ப்பாய் கதை மிக அழகாய் அமைந்ததுப்பா… கதையில் ரேணுகாவின் சிமிட்டும் கண்களும்….

கோபத்தில் சுழிக்கும் உதடுகளும்… இறுதியில் கனிந்து உனக்கு மட்டும் என்ற வார்த்தையில் இளகிய மனமும் ஒன்றாய் பார்க்க முடிந்ததுப்பா… அற்புதம்….


திண்டுக்கல் தனபாலன் said...

அடுத்த கதையை விரைவில் வாசிக்க காத்திருக்கிறேன்...

தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

ezhil said...

அருமையான கதை...

இளமதி said...

இசையில் அப்படியே அசைவற்று இறங்கிப் போனது மனம்...

தொடரும் இசையையும் ரசித்திட...

மிக மிக அருமை!

பகிர்விற்கு நன்றி! வாழ்த்துக்கள்!

த ம.2

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ரேணுகாவின் கோபம் கூட ஒரு அழகு தான்… கவிதைகளால் நெய்யப்பட்ட அவள் உலகில் கோபம் கூட கத்தரித்துப்போட்ட பட்டுத்துணிப்போல.. //

மிகவும் ரஸித்தேன். ;)))))

// வெற்றுச்செய்தி கூட ஒரு தகவல் தான்… நேசிக்கும் உள்ளம் அதை பூர்த்திச்செய்து புரிந்துக்கொள்ளும்…//

சூப்பர் சார்.

பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள். கல்கியில் வந்ததற்கும் வாழ்த்துகள்.

[மஞ்சுவை மீறி நான் என்னத்தச் சொல்ல இருக்கு. ;))))) ஒட்டுமொத்தமாகச் சொல்லியாச்சு]

Ramani S said...

அருமையான கவித்துவமான கதை
மஞ்சுவின் விரிவான பின்னூட்டம்
கூடுதல் சுவைசேர்க்கிறது
வாழ்த்துக்கள்

Ramani S said...

tha.ma 3

நிலாமகள் said...

அடித்துப் போட்ட மாதிரி (பிரமிப்பில்)ஒரு க(வி)தை!!

நிகழ்வின் கனமும் கதகதப்பும் மனசை விட்டு நகரவே மாட்டேன் என்கிறது.

எடுத்தாண்ட வரிகளும் எழுதிய வரிகளும் ஒன்றுக்கொன்று போட்டி.

பின்னூட்டங்கள் பலத்த விருந்துக்குப் பின்னான பழக் கலவை, ஐஸ்க்ரீம்,தாம்பூலம்.

இசைவித்து விட்டால் குதூகலம் தான்! இசைகெட்டால் ... பிராங்க்ளின் வரிகளை பலமாகப் பற்றிக் கொள்ள வேண்டியது தான்!

ராமலக்ஷ்மி said...

இனிய இசை. பத்திரிகையில் வாசித்து விட்டிருந்தேன் இரண்டையும்.

இராஜராஜேஸ்வரி said...

'சில நேரங்களில் வெற்றுச் செய்தி கூட ஒரு தகவல்தான். நேசிக்கும் உள்ளம் அதைப் பூர்த்தி செய்து புரிந்து கொள்ளும்!'

கல்கியில் வந்ததற்கு வாழ்த்துகள்..!

கீத மஞ்சரி said...

இசைவான இதமான புரிதல். மௌனமும் பல நேரங்களில் மாயவித்தை புரியும்போது வெற்றுச்செய்தி தகவல் தெரிவிக்க இயலாதா என்ன? நேர்த்தியான நேசத்தின் வெளிப்பாடு ரசனையின் உச்சம். பாராட்டுகள் ரிஷபன் சார்.

Ranjani Narayanan said...

புரிந்துகொண்ட இரு உள்ளங்களின் ஊடலையும் கூடலையும் கதையில் சுவையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

அடுத்த கதை படிக்க காத்திருக்கிறேன்.

Manjubashini Sampathkumar said...

//Blogger Ramani S said...
அருமையான கவித்துவமான கதை
மஞ்சுவின் விரிவான பின்னூட்டம்
கூடுதல் சுவைசேர்க்கிறது
வாழ்த்துக்கள்//

அன்பு நன்றிகள் ரமணி சார்...

G.M Balasubramaniam said...

/ஆடிட்டைக் கண்டுபிடித்தவர்களையும் அதை அவசியமாக்கியவர்களையும் சுண்ணாம்புக் காளவாயில் போட்டு அறம் பாட வேண்டும்./ அட... இந்தச் சாக்கு போக்கு எல்லோருக்குமா.?புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.