February 21, 2014

3 கவிதைகள் !

எப்போதோ பேசிக் கொள்கிறோம்..
மூன்று மாதமோ..
ஆறு மாதமோ..
விட்ட இடத்திலிருந்து
தொடங்க முடிகிறது
நம் பேச்சை
எந்த நாளிலும்..
நீயோ நானோ
கேட்டுக் கொண்டதில்லை
ஏன் பேசவில்லை இத்தனை நாளென்று..

எப்படி சாத்தியமாயிற்று
நமக்குள்ளே இப்படி ஒரு அந்நியோன்னியம் ?!




நீ யாரோ
தெரியாது..
உன் முகமறியேன்..
காற்றின் வழி
செவி மோதுகிற
பிடித்த பாடலாய்..
நீ எனக்குப் ப்ரியமாகிறாய்.
உன் பெயர் கேட்க
புன்னகைத்துக் கொள்கிறேன்..
அவ்வப்போது உன் சிரிப்பில்
எனக்குள் முகிழ்க்கிறது
அதே ஆனந்தம்..
நாம் சந்திப்போமோ இல்லையோ..
எனக்கென்று
நீ இருக்கிறாயெனும்
நினைப்பில்
என் திமிருக்கு
சூட்டிக் கொள்கிறேன்
நிரந்தரமாய் ஒரு மகுடம் !



பார்க்காமல்
இருந்திருக்கலாம்..
நேசிக்காமல்
இருந்திருக்கலாம்..
அல்லது
அதைச் சொல்லாமலாவது
இருந்திருக்கலாம்..

இருந்திருக்கலாம் !

15 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

சூட்டிக் கொள்வதை மிகவும் ரசித்தேன்...

ராஜி said...

இருந்திருக்கலாம்..

இருந்திருக்கலாம் !
>>
இருந்திருக்கலாம்தான். ஆனா, விதி!?

இராஜராஜேஸ்வரி said...

நிரந்தரமாய் மகுடம் சூடும் கவிதைகள்..!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நாம் சந்திப்போமோ இல்லையோ..
எனக்கென்று
நீ இருக்கிறாயெனும்
நினைப்பில்//

அந்த நினைப்பே சொர்க்கமாச்சே ! ;)

வை.கோபாலகிருஷ்ணன் said...

அந்நியோன்னியம் .... ஓர் தனி அழகல்லவோ !

எப்படி சாத்தியமாயிற்று? என்று எப்படி வெளியே வெளிப்படையாகக் கூற முடியும்? ;)

அப்பாதுரை said...

ஒவ்வொன்றாக ரசித்தேன்.
கடைசி கவிதையல்ல.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அதான் பார்த்தாச்சு ....
நேசிச்சாச்சு ...........
சொல்லியாச்சு ........

வசமாக மாட்டியாச்சு ..........

அதனால் என்ன இப்போ !

வாழ்க ! பாசத்துடனும் நேசத்துடனும்.

கதம்ப உணர்வுகள் said...

மனம் நிறைத்த அன்பு..... எடுக்க எடுக்க குறையாத அக்‌ஷ்யமாய் அன்பு.... அன்பு நிறைந்த மனம் இருந்தால் கண்டிப்பாக இது சாத்தியம்பா ரிஷபா... ஏன்னா... எத்தனை நாள் அல்லது எத்தனை மாசம் அல்லது எத்தனை வருஷம் கழிச்சு திடிர்னு பார்த்தாலும் ரொம்ப நாள் கழிச்சு பார்த்த உணர்வே இருக்காது. ஏன்னா எப்போதும் பேசிட்டு இருப்பது போன்ற உணர்வு இருந்துண்டே இருப்பதால் தான்... நேரில் பார்க்கும்போது அப்படியே தொடர்ந்துவிடுகிறது பேச்சு.... அற்புதமான வரிகள்பா ரிஷபா....

கதம்ப உணர்வுகள் said...

யாரென்று தெரிய அவசியமில்லை... நேரே பார்க்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை... சுவாசமெங்கும் நிறைந்த நேசத்தை பார்த்தால் என்ன பார்க்காவிட்டால் என்ன? ஆனால் நேசமெனும் நம்பிக்கை... அது தரும் திமிர்.... அந்த திமிரில் நிதம் சூட்டிக்கொள்ளும் மகுடம்.. இந்த வரி மிகவும் ரசித்தேன்பா ரிஷபா.. எண்டயர்லி ஒரு வித்தியாசமான இதுவரை நான் வாசித்திராத வரிகள். “ எனக்கென்று
நீ இருக்கிறாயெனும்
நினைப்பில்
என் திமிருக்கு
சூட்டிக் கொள்கிறேன்
நிரந்தரமாய் ஒரு மகுடம் !” நம்பிக்கை தந்த நினைப்பு.... நம்பிக்கை தந்த திமிர்..... நம்பிக்கை எப்போதும் நேசத்தைப்போலவே நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கை.... அட்டகாசம்பா ரிஷபா...

கதம்ப உணர்வுகள் said...

பார்த்தது தெய்வ சங்கல்பம் என்றால் நேசிப்பு மனதில் இருக்கும் அதீத அன்பின் வெளிப்பாடு.... மூன்றாவது வரி அதிகம் யோசிக்கவைத்த வரிகள்பா... அதாவது கையை இறுக்க மூடி வைக்கும் வரை கைக்குள் என்ன இருக்கு என்று அறிய ஆர்வம். கைகளை விரித்தப்பின்னரோ அட இது தான் இருந்ததா கைக்குள் என்ற ஆர்வம் குறைந்துவிடலாம். அல்லது இது நான் எதிர்ப்பார்த்தது தான் என்று திக்குமுக்காட வைக்கலாம். அல்லது இதை நான் வேண்டவே இல்லையே என்று மனம் கனக்க வைக்கலாம். இது எதுவும் நடக்காமல் இருக்க கையை இறுக்க மூடியே வைத்திருப்பது. அதைப்போல் மனதில் பூட்டி வைத்ததை சொல்லாமல் இருக்கும் வரை இப்படி இருக்குமோ இப்படி இருக்குமோ என்ன இருக்கும் என்று சொல்லாத விஷயத்துக்கான மதிப்பும் ஆர்வமும் துளி கூட குறையாமல் இருக்கும். எந்த ஒரு விஷயத்தையுமே சொல்லுமுன் செய்யுமுன் யோசிக்காமல் சொல்லிவிட்டோ அல்லது செய்துவிட்டோ அதன் ரிசல்ட் நமக்கு நன்மையாக கிடைக்கவில்லை என்றால் அச்சோ சொல்லாம இருந்திருக்கலாமோ அப்படின்னு யோசிக்க வெச்சுடுது.. மனிதனின் எதார்த்த மனதினை அப்படியே மிக அற்புதமாக வெளிக்காட்டிய வரிகள்பா ரிஷபா...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான கவிதைகள்
நன்றி

நிலாமகள் said...

அன்பின் கவிதைகள்!

தொடர்புக்கு அப்‌பால் அல்லது இப்‌பால் இருப்‌பதெல்லாம் வெறும் கருவிகள் தானே!

இருந்திருக்கலாம் தான்...

சாந்தி மாரியப்பன் said...

அத்தனையும் அருமை..

ராமலக்ஷ்மி said...

மூன்றும் மிக அருமை.

வெங்கட் நாகராஜ் said...

அத்தனையும் அருமை.....