October 25, 2014

அந்த நாள் தேவதை





சித்திரை வீதியின் தேர் நட்ட நடுவில் ஷெட்டுக்குள் இருந்தது. அதற்குள் முன்பெல்லாம் பன்றிகள் உள்ளே போய் வரும். இப்போது அவைகள் கண்ணிலேயே படுவதில்லை. தேரோட்டத்தின் முன் தகரம் விலக்கி தேரை தூசு தட்டுவார்கள். பி.எச்.ஈ.எல் அமைத்துக் கொடுத்த கிண்ணென்று இருக்கும் சக்கரங்கள்.
ஒரு ரவுண்ட் சுற்றி தேரின் இரு கைகள் போல (ராமாயண கபந்தனை நினைவு படுத்தும்) வடக் கயிறு.
தேர் இழுக்க முடியாத, பயப்படுகிற ஆத்மாக்கள் ஓடும்போது சற்றே நிற்கும் இடைவெளியில் 'கொஞ்சம் இடம் விடுப்பா' என்று வடத்தைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டு நகர்வார்கள்.
கிராமங்களில் இருந்து வருபவர்கள் மாடு ஓட்டிக் கொண்டு வந்து கோவிலுக்கு நேர்ந்து விடுவதும், தோற்பையில் நீர் நிரப்பி 'கோவிந்தா' என்று எதிரில் நிற்பவர் மேல் பீய்ச்சி விட்டுப் போவதும், கொஞ்சம் கூட்டமாய் நிற்பவர்களை விலக்கிப் பார்த்தால் நடுத்தர வயதுப் பெண்மணிக்கு ஆவேசம் வந்து குறி சொல்லிக் கொண்டிருப்பதும், ஆங்காங்கே போகும் வழியெல்லாம் கற்பூரம் பெரிய சைசில் எரியும் வாசனையும்.. தேர்த் திருநாள் எப்போது வரும் என்று காத்திருப்போம்.
முதல் நாள் வையாளி. குதிரை வாகனத்தில் பெருமாள் சாவகாசமாய் நடை போட்டு வந்து (நடை அழகு) தேர் இருக்கும் இடம் சமீபித்ததும் பரபரப்பு அப்பிக் கொள்ள கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டு அப்புறம் கலைந்து தேரை ஒட்டிய 200 அடி பிரதேசத்தில் வாகனததைத் தூக்கிக் கொண்டு ஓடுவதும் கண்கொள்ளாக் காட்சி.
முதலில் நளினமாய்.. பின்னர் ஜிக்ஜாக்காய்.. (கோண வையாளி) கூட்டம் ஆர்ப்பரிக்கிற அழகே தனி. ஓடி முடித்ததும் வாகனம் நின்று குதிரையின் மூச்சிரைக்கிற காட்சி தத்ரூபம். தேர்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வாகனம் சுமக்க (எழுந்தருளப் பண்ணுதல்) வருவார்கள். தேரை ஒட்டிய இரு பக்க வீடுகளின் மாடியில் நின்று வையாளியை வேடிக்கை பார்க்கலாம்.
அப்படி ஒரு தருணத்தில்தான் ஜெயந்தியைப் பார்த்தேன்.
இப்போது வழக்கொழிந்த ரெட்டை ஜடை. இரண்டையும் முன்னால் விட்டுக் கொண்டு அவள் கண்கள் பட்டாம்பூச்சி போல் படபடக்க திருவிழாவின் தாத்பர்யம் பற்றி கேட்டுக் கொண்டிருந்தாள்.
என் பங்கிற்கு நானும் கதை சொன்னேன். முந்தைய பாராக்களை.
ஒரு ஜடை என் மேல் உரசிப் போனது. மழை வெய்யில் என்று மாற்றி மாற்றி அடித்த மொட்டை மாடிப் பிரதேசம் கருப்படித்து கொஞ்சம் வழுக்குப் பகுதியாகவே மாறி விட்டிருந்தது. இதர நாட்களில் யாரும் மேலே போவதில்லை.
தெரு விளக்கின் அசட்டு வெளிச்சம் மட்டும் பட்டும் படாமலும் தெரிய அதன் உபயத்தில் இடுப்பளவு சுவரைப் பிடித்துக் கொண்டு வேடிக்கை பார்த்தோம்.
ஜெயந்தி வந்த நாளிலிருந்தே அவரவர் மனக் குளத்தில் கல்லெறிந்து விட்டாள். எப்படியாவது அவளைக் கவர் பண்ண அரவணை, ரொட்டி, செல்வரப்பம் என்று கோவில் பிரசாதங்களுடன் ராமானுஜன் வர.. என் பங்கிற்கு சுஜாதா கதைகளை எடுத்துக் கொண்டு போனேன்.
எங்கள் இருவருக்கும் வசந்தைப் பிடித்திருந்தது. 'ச்சீய்' என்று சொல்லி வசந்த் ஜோக்கை நான் ரிபீட் செய்தபோதெல்லாம் அநியாயத்துக்கு சிரிப்பாள்.
'ஏண்டா.. நான் கேட்டா தரமாட்டே.. அவ கிழிச்சு தரா. ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கிறே' என்று என் தங்கை திட்டியதை புறந்தள்ளி கைப்பணத்தைக் காலி செய்து புதுத்தகங்களுடன் போவேன்.
'அம்மாகிட்ட சொல்றேன்' என்று அவள் மிரட்டியதில் அத்தனை பயம் வரவில்லை. ஜெயந்தியுடன் என்னைத் தொடர்புபடுத்தியது மட்டும் மனசுக்குள் மழையடித்தது.
மூன்று மாதங்கள் இருந்தாள்.
நடுநடுவே ரகசியப் பயணம் போவார்கள் அவளை அழைத்துக் கொண்டு. அன்றைய தினங்களில் மட்டும் அவள் முகம் வாடியிருக்கும்.
'அவளுக்கு என்னவோ பிரச்னைடா.. அதான் இங்கே வச்சு பார்க்கறா.. சக்கரத்தாழ்வார் சன்னிதில ஜபம் பண்றா அவ பேருக்கு. குணசீலம் போய் உச்சி காலத்துல ஜலம் தெளிச்சுண்டு வந்தா' தங்கை சொல்லச் சொல்ல எரிச்சலானது.
'அவளுக்கு எதுவும் இல்லைன்னு' கத்தத் தோன்றியது.
சட்டென்று மனக் கதவைத் திறந்து உள்ளே சுவாதீனமாய் வந்து விடுகிற சாமர்த்தியம் சில பெண்களுக்கு மட்டுமே வாய்க்கிறது.
ஜெயந்தியின் ஆகர்ஷணத்தில் மொட்டை மாடி வெளிச்சுவற்றில் ஜே என்று பெரிதாக எழுதி அழகு பார்த்துக் கொண்டிருந்த போது அவளே வந்து விட்டாள்.
'கதை எல்லாம் எழுதறே.. கிளாஸ்ல பர்ஸ்ட்.. ஆள் பார்க்க ஜம்னு இருக்க.. அப்புறம் ஏன் இந்த கிறுக்குத்தனம்' என்றாள் ஸ்பஷ்டமாய்.
கண்ணில் மளுக்கென்று தளும்பியது.
வாசனைப்பொடியின் சுகந்தம் மணத்தது அவள் அருகில் வந்தபோது.
எதிரே வெள்ளைக் கோபுரம் மௌனமாய் எல்லாம் தெரிந்த தோரணையில் எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தது. நாலாபக்கமும் எந்த வீட்டிலும் மொட்டை மாடிகள் காலியாக இருந்தது.
என் இரு கன்னங்களையும் தன் கைகளால் பற்றி நெற்றியில் முத்தமிட்டாள்.
"என்னை விட ஜோரா ஒருத்தி உனக்கு வருவா.. போ..உன் கையாலயே இதை அழிச்சுட்டு" திரும்பிப் பார்க்காமல் போய் விட்டாள்.
கொஞ்ச வருடம் கழித்து தலை முடி கொட்டி வயதுக்கு மீறிய கிழடு தட்டி அந்தப் பெண்மணி என்னை அணுகி "உன் பொண்ணா" என்று கேட்டபோது பக்கத்தில் இருந்த புவனா முகம் சுளித்து "யார் இவ" என்றாள்.
எனக்கும் முதலில் புரியாமல் அப்புறம் திடுக்கிட்டு "ஜே.. நீயா" என்றேன்.
என் பெண் பூஜா அவள் பிடியிலிருந்து நகர்ந்து புவனாவிடம் ஓடினாள்.
ஜெயந்தி (சித்திரை வீதிப் பக்கம் போனபோது பார்த்தேன் அந்த வீட்டை இடித்துக் கட்டி விட்டார்கள்.. ரசனை இல்லாத எவரோ ஒரு புண்ணியவான்.) -
அந்த நாள் தேவதை -  நகர்ந்து போகுமுன்   "ராஸ்கல்,, அழிக்கச் சொன்னா அப்படியே விட்டுட்டு போயிட்ட.. மொட்டை மாடியில"  என்றாள்  எனக்கு மட்டும் கேட்கும் குரலில்.

(நன்றி  : அமுதம்)

(நன்றி  :  மணியம் செல்வன் - கூகிள் )

14 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//சட்டென்று மனக் கதவைத் திறந்து உள்ளே சுவாதீனமாய் வந்து விடுகிற சாமர்த்தியம் சில பெண்களுக்கு மட்டுமே வாய்க்கிறது. //

:)))))

ஆமாம்.... ஆமாம்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//'கதை எல்லாம் எழுதறே.. கிளாஸ்ல பர்ஸ்ட்.. ஆள் பார்க்க ஜம்னு இருக்க.. அப்புறம் ஏன் இந்த கிறுக்குத்தனம்' என்றாள் ஸ்பஷ்டமாய். //

அதானே !

அவளுக்கென்ன ... ஏதாவது இதுபோலச் சொல்லிவிடுவாள்
அவஸ்தை நமக்கல்லவோ !

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"என்னை விட ஜோரா ஒருத்தி உனக்கு வருவா.. போ..உன் கையாலயே இதை அழிச்சுட்டு" திரும்பிப் பார்க்காமல் போய் விட்டாள்.//

//"ராஸ்கல்,, அழிக்கச் சொன்னா அப்படியே விட்டுட்டு போயிட்ட.. மொட்டை மாடியில" என்றாள் எனக்கு மட்டும் கேட்கும் குரலில்.//

சூப்பர் !

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

தலைப்புத்தேர்வு அருமை.

அமுதத்தில் வெளியான இந்தக் கதை அமுதம்போலவே இனிமையாகவும் மிகவும் யதார்த்தமாகவும் உள்ளது.

பாராட்டுகள் + வாழ்த்துகள்.

அன்புடன் கோபு

மோகன்ஜி said...

வாழ்த்துக்கள் ரிஷபன் சார்! ஒரு கன்றுக்குட்டிக் காதலை(காளைக்கிடா என்றும் சொல்லலாமோ?) கோவிலைக் களமாக்கி சொன்னவிதம் ரிஷபன் டச்!

இராஜராஜேஸ்வரி said...

ஒரு ரவுண்ட் சுற்றி தேரின் இரு கைகள் போல (ராமாயண கபந்தனை நினைவு படுத்தும்) வடக் கயிறு. //

மலரும் நினைவுகள் தேரோட்டமாய்..!

அப்பாதுரை said...

சிறுவலி வள்ளல்கள் இப்படித் தான் நடந்து கொள்கிறார்கள். கடக்க முடியாத கதை.

ஜீவி said...

ஹூம்.. கதையென்று சொல்லத் தோன்றவில்லை.. மனக்கோலமாய்
நெஞ்சில் பதிந்த கோல வரிகள்!

தேர்த்திருவிழா வர்ணிப்பின் ரசிப்பில்
மனம் குவிந்து ஊர்ந்த தருணத்து
படக்கென்று வந்து விழுந்த 'அப்படி ஒரு தருணத்தில் தான் ஜெயந்தியைப் பார்த்தேன்' என்று படித்த நேரத்து பற்றிக் கொண்ட பரபரப்பு கடைசி வரை அகலவே இல்லை..

தலை முடி கொட்டி, வயதுக்கு மீறிய கிழடு தட்டிப் போன முகத்தைப் பார்த்த தருணத்தும் அன்று கட்டிப் போட்ட அந்த அழகின் கனவு கலைந்திருக்காது என்பது சர்வ நிச்சயம்.

'முதல் காதல் வெட்டி விட்டுப் போகும் மின்னல்' என்பார் காண்டேகர். இரண்டு, மூன்று என்று தம் கதைகளில் காதலைப் பார்த்த
மஹாரசிகர் அவர்..

"ஜே, நீயா?" ரெண்டே வார்த்தைகள் தாம். அந்த வார்த்தைகளுக்குள் நெஞ்சில் தடம் பதித்த ஒரு காவியம் அல்லவோ அனுபவமாகியிருக்கிறது!

"யார் இவ?" முகஞ்சுளித்ததை தவிர புவனா என்ன ஒசத்தி?.. ஜோராய் ஒருத்தியாய் வந்து வாழ்க்கைப் பட்டதைத் தவிர, பூஜாவைப் பெற்றுத் தந்ததை விட?..

ஒரு சின்னக் கதை; என்ன பாடு படுத்தி விட்டது! நெடுநாள் மனசில் தங்கியிருந்து வேதனை உலா வரும்!

வெங்கட் நாகராஜ் said...

கோண வையாளியும், தேரோட்டமும் பார்த்த நினைவுகளைச் சுமந்தபடியே உங்கள் கதையினைப் படித்துக் கொண்டிருந்தேன்.... எங்கிருந்தோ வந்து சேர்ந்த ஜேயுடனான பகுதிகளைப் படித்துக் கொண்டே முடிவுக்கு வந்த போனது மனது கனத்துப் போனது.....

சிலர் நம் நினைவுகளை விட்டு அகலுவதே இல்லை......

சிறப்பான பதிவு ரிஷபன் சார்.

Unknown said...

உங்கள் எழுத்துக்கள் அருமை
BHEL திருச்சியில் எழுத்தாளர்கள் ஆக நம்மை கெளரவித்தது ED திரு.ராமகிருஷ்ணன் நடத்திய நிகழ்ச்சிக்கு திரு.விக்ரமன் அவர்கள் வந்திருந்து வழங்கிய அற்புதமான அறிவுரைகளை என்றும் மறக்க முடியாது

ராமலக்ஷ்மி said...

மனதைக் கலங்க வைத்த தேவதை.

sury siva said...

சட்டென்று மனக் கதவைத் திறந்து உள்ளே சுவாதீனமாய் வந்து விடுகிற சாமர்த்தியம் சில பெண்களுக்கு மட்டுமே வாய்க்கிறது.//

இந்த வரியை நூறு தரம் படிச்சாச்சு.
இன்னும் எத்தனை தரம் படித்துக்கொண்டே இருப்பது !!!


.
சுப்பு தாத்தா.

சுப்ரா said...

கதையோ கற்பனையோ நேற்று என்பது இனிமைதான் . - சுப்ரா .

கோமதி அரசு said...

அருமையான அழகான கதை.