November 10, 2014

வெள்ளியங்கிரி



2 மலைகள் வரை கற்களை வைத்து படிகள் போல அமைத்திருக்கிறார்கள். குச்சியை ஊன்றி நடக்கும் போது அழுத்தி நடப்பதாலும்.. முதுகில் வைத்திருக்கும் பையின் கனமும் சேர ஏறுவது சிரமம் என்று தோன்றியது.. இறங்கும் போது அந்த நினைப்பை பொய்யாக்கி விட்டது ! இறங்குவதுதான் சிரமம் !
ஒன்று அல்லது இரு நபர்கள் நின்றால் எத்தனை இடைவெளி இருக்கும்.. அவ்வளவுதான் சில இடங்களில்.. இரு பக்கமும் அடர்த்தியான மரங்கள்.. செடிகள்.. காடு !
சில இடங்களில் பெரிய மரங்கள் விழுந்து பாதையை அடைத்திருக்கின்றன. ஏறிக் குதித்து போனோம்.
2 வது மலை அருகில் ஒரு விநாயகர் கோவில். இதுதான் தங்கலாம் என்று சொல்கிற அளவுக்கு ஒரு இடம். இதன் பின் வெட்டவெளி அல்லது அடர்த்தியான காடு..
நாங்கள் ஏறும்போது.. இறங்கிக் கொண்டிருந்தவர்கள் சொன்னது.. ‘பிள்ளையார் கோவில்ல தங்கிட்டு விடியல்ல போங்க’ என்றார்கள்... இன்னும் எவ்வளவு நேரம் பிடிக்கும் என்று கேட்டதற்கு. எங்கள் நடை அப்படி !
மொத்தமே அன்று 12 பேர் கூட இல்லை.. இத்தனைக்கும் பௌர்ணமி நாள் ! அந்த 12லும் நாங்கள் 3 பேர் ஏறிக் கொண்டிருந்தோம். மற்றவர்கள் இடைவெளி விட்டு இறங்கிக் கொண்டிருந்தவர்கள்.
பாம்பாட்டி சித்தர் குகை என்று வழியில் ஒரு குகை. இருட்டில் அதற்குள் என்ன என்று கவனிக்க முடியவில்லை..
‘.. 3 பேரோ.. 4 பேரோ இப்பதான் போனாங்க.. ஒரு வேளை அவங்க நைட் தங்கினா அவங்க துணை இருக்கும் உங்களுக்கு’ என்று ஒரு தகவல்.
6 மணிக்குப் பிறகு கும்மிருட்டு. அடர்த்தியான மரங்களினூடே நடை. சுரங்கங்களில் வேலை பார்க்கிறவர்கள் போல ஹெட் லைட் வைத்திருந்தோம். அதன் வெளிச்சத்தில் நடை.
வேறு எதையும் கவனிக்கும் மனநிலையோ வெளிச்சமோ இல்லை ஏறும் போது. எப்படியாவது உச்சியை அடைந்து விடணும் .. அவ்வளவுதான்.
மன தைரியம்.. எப்படியும் ஈசனைப் பார்க்கவேண்டும் என்கிற ஆர்வம்.. இது இருந்தால் போதும்.. ஏறி விடலாம் !
கடைசி மலைகளில் ஒன்று (4 ஓ.. 5 ஓ) வெட்டவெளி.. பிறகு இடுக்குகளில் போய்.. மலை உச்சி.. ஒரு குகை போலத்தான் கோவில்..
என்னிடம் கேமிரா இல்லை.. மொபைல் சார்ஜ் போய் விட்டது. உடன் வந்த நண்பர் எடுத்த படங்களைப் பின்பு பகிர்கிறேன்.
மேலே போய் ஈசனைப் பார்த்ததும் அதுவரை பட்ட கஷ்டம் மறந்து போய்விடும். விடியலில் சூரிய உதயம் பார்ப்பது இன்னொரு ஆனந்த அனுபவம்.


இறங்கும் போது கால்கள் சொன்ன பேச்சு கேட்காமல் டான்ஸ் ஆடும். குச்சி ஊன்றி சமாளித்துத்தான் இறங்க வேண்டும்.
எங்களுடன் வந்த அப்போது அறிமுகமான நண்பர் தடுமாறி கீழே விழுந்து கால் சுளுக்கிக் கொண்டது.
அலுவலகம் வந்ததும் மேலே பிடித்துக் கொண்டு வந்த மலை நீரையும் விபூதியையும் கொடுத்து.. கதைகளைச் சொன்னதும்
ஒரு நண்பர் கேட்டார்..
‘மறுபடி வாய்ப்பு வந்தா போவீங்களா.. இப்ப உடனே இல்லை.. அடுத்த வருஷம்னு வச்சுக்குங்க.. ‘
திகில் கதைகளாய்ச் சொன்னதால் இப்படிக் கேட்டிருப்பாரோ..
என்னையே உற்றுப் பார்த்தவரிடம் நிதானமாய்ச் சொன்னேன்.
‘போவேன்.. ‘
‘நானும் வரேன்.. என்னையும் அழைச்சுகிட்டு போங்க’
அதான் வெள்ளீயங்கிரி !




13 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான அனுபவங்களுடன் ஓர் புனிதப்பயணக்கட்டுரை. பாராட்டுகள்.

நானே தட்டுத்தடுமாறி மலை மேலே ஏறி இறங்கி என் கால்களும் சுளுக்கிக்கொண்டதுபோல ஒரு ஃபீலிங் ஏற்பட்டுள்ளது.:)

நிலாமகள் said...

எங்களுக்கும் ஆசை துளிர்த்து விட்டது... சிவ தரிசனத்துக்கு.

கரந்தை ஜெயக்குமார் said...

உடன் பயணித்த உணர்வு
நன்றி ஐயா

ADHI VENKAT said...

த்ரில்லான பயணமாக இருந்திருக்கும்.

வெள்ளியங்கிரி பயணம் பற்றி தாங்கள் சொல்லியதிலிருந்தே கூகிளில் பல தகவல்களையும், அனுபவங்களையும் தேடி வாசித்தேன். இயற்கையின் அழகு எங்கும் கொட்டிக் கிடக்கின்றன. என்னவரிடமும் சொல்லியிருக்கிறேன். ஒருமுறை சென்று வாருங்கள் என்று. பார்க்கலாம். சிவாய நம:

Yarlpavanan said...

சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

கார்த்திக் சரவணன் said...

நான் சென்றபோது சாமியை படம் எடுக்கவில்லை.... மாலை ஆறு மணிக்குத் தொடங்கிய பயணம் காலை ஐந்தரை மணிக்கு மேலே சென்றடைந்தோம். மற்ற படங்களை முகநூலில் பகிர்கிறேன்..

கதம்ப உணர்வுகள் said...

நானும் வரேன் என்னையும் அழைச்சிட்டு போங்க.... உண்மையே.. எழுத்துகள் எங்களையும் இழுக்கிறது அழைத்துப்போக சொல்லி ரிஷபா...

கதம்ப உணர்வுகள் said...

தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. நேரம் இருப்பின் வந்து பார்க்கவும்..

இணைப்பு: http://blogintamil.blogspot.com/2014/11/blog-post_24.html

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

சகோதரி மஞ்சுபாஷினியின் வலைச்சரம் வழியாக வருகிறேன். இனித்தொடர்வேன். நன்றி அவருக்கும் பாராட்டுகள் உங்களுக்கும். வணக்கம்.

கோமதி அரசு said...

என் கணவரும் நிறைய தடவை போய் வந்து விட்டார்கள். வந்து அனுபவங்களை சொல்லும் போது எனக்கும் ஆசையாக இருக்கும்.
இப்போது அழைத்து செல்லமாட்டேன் என்கிறார்கள்.

ஒருமுறை முதல் படிகளில் சிறிது தூரம் ஏறி என் ஆசையை பூர்த்தி செய்து கொண்டேன்.

உங்கள் அனுபவங்களை படிக்க வேண்டும்.

சமுத்ரா said...

அருகிலேயே இருந்தும் இன்னும் போனதில்லை
நினைவூட்டியமைக்கு நன்றி

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்

நிலாமகள் said...

தமிழர் திருநாள் வாழ்த்துகள்!