March 05, 2015

குழல்




”கண்ணா.. நீ கட்டாயம் மதுராபுரி போக வேண்டுமா”
கோவிந்தன் சிரித்தான். மாயச் சிரிப்பு.
“அங்கே போனால் உனக்கு என்னை நினைக்க நேரம் இருக்குமா”
“ஹ்ம்ம்..”
பொய் சொல்ல வரவில்லை அப்போது அவனுக்கு.
“அப்படியானால் என்னை அந்தப்புரத்தில் தானே விட்டுப் போவாய்”
கோபாலன் தலை உச்சியில் மயிலிறகு ஆடியது சோகமாய்.
”கண்ணா.. உனக்கே இது நியாயமாய்த் தெரிகிறதா”
“இல்லைதான்..”
”உன் உதடுகள் இனி எனக்கில்லைதானே”
ஏக்கமான பார்வை நெஞ்சைப் பிசைந்தது.
“க..ண்..ணா”
ராதை அப்போது வந்து விட்டாள்.
“என்ன கண்ணா.. என்ன இது.. வழக்கத்திற்கு மாறாக உன் சிரிப்பைத் தொலைத்து விட்டு”
கையிலிருந்த குழல் அதுவரை பேசியதை ராதையிடம் எப்படிச் சொல்வது.. ஆங்.. வழி கிடைத்து விட்டது.
“ராதே.. என் ப்ரிய ராதே..உனக்கு ஒரு பரிசு தரப் போகிறேன்”
“எனக்கொன்றும் வேண்டாம்”
அவனையே அடைந்தபின் வேறு பரிசெதற்கு..
“இல்லை ராதே.. மறுக்காதே..நான் என்ன தரப் போகிறேன் என்று பார்”
கடைசி முறையாய் தன் செவ்விதழில் வைத்து குழலூதினான்.
பிரபஞ்சம் அவன் குழலோசையைக் கடைசியாய்க் கேட்பதால் பிரமித்து.. அப்படியே அசைவற்று நின்றது..
“இந்தா ராதே..”
செய்வதறியாமல் வாங்கிக் கொண்டாள்.
“நீ வாசி இப்போ”
ராதை கண்ணனின் லீலையில் சிக்கிக் கொண்டாள் அந்த வினாடி. தன்னிதழ்களில் வைத்து ஊதினாள். குழல் இடம் பெயர்ந்த அதிர்வில் தன் மூச்சுக் காற்றை முழுமையாய் வெளிக் கொணர்ந்தது. ராதை அதன் லயத்தில் கட்டுண்டு கிறங்கித்தான் போனாள்.
எத்தனை நேரம் போனதோ.. இருட்டியிருக்கக் கூடும்.
கண் விழித்துப் பார்த்தாள் ராதை.
கண்ணன் அங்கில்லை...
ராதையும் குழலும் கண்ணனைப் பார்த்த அந்த கடைசி தினம் !

9 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

2-3 நாட்களாக ஸ்ரீகிருஷ்ணனின் பால்ய லீலைகளைக் கேட்டு மகிழ்ந்ததுடன், இப்போது பிருந்தாவன லீலைகளைக் கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறேன்.

[உபன்யாசம் By Shri. HARIJI S/O ANNA SRI KRISHNA PREMI in YOU TUBE]

https://www.youtube.com/watch?v=gJ-Lybx6IXc&index=1&list=PLzxtl0H2aJVqk087eoQngFypswtjqdhbq

அந்த நேரத்தின் இடையே இந்தத் தங்களின் பதிவினைப் படிக்க நேர்ந்துள்ளது. :) என்னே என் பாக்யம்.!!!!!

அன்புடன்
வீ......ஜீ

RAMA RAVI (RAMVI) said...

கடைசி வரியில் சோகம் மனதை கஷ்டப்படுத்துகிறது..

UmayalGayathri said...

ஏதோ...கிரக்கமான சோகமாக உணர்வு தோன்றுகிறது.ராதைக்கும் குழலுக்குமான கடைசி தினம். அருமை சகோ

திண்டுக்கல் தனபாலன் said...

மாயக் கண்ணன்...!

வெங்கட் நாகராஜ் said...

மாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னேன்.... என்று பாடத் தோன்றுகிறது!

KParthasarathi said...

மனம் நெகிழ்ந்தது

மோகன்ஜி said...

குழலாக நான் மாறவேண்டும்-கண்ணன்
குறுவாயின் பதிவேந்தி ஒருநாளும் மாளாத இசையாக நான் மாறவேண்டும்

கதம்ப உணர்வுகள் said...

//ராதையும் குழலும் கண்ணனைப் பார்த்த அந்த கடைசி தினம் !//

இந்த பகிர்வு ஏனோ மனதை பிசைகிறது.. கண்ணன் எங்கேயும் போகாமல் நம் மனதோடு தங்கிவிடக்கூடாதா என்ற ஏக்கத்தை தோற்றுவித்த பகிர்வுப்பா ரிஷபா...

Thenammai Lakshmanan said...

அருமை. ! ராதையும் கண்ணனும் பிரிவதேயில்லை. மாயப் ப்ரேமை போல மாயப் பிரிவு அது. :)



வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)