May 22, 2015

வைதேஹி

வைதேஹி....


காவிரி.. ஸ்ரீரங்கம்.. என்றால் அம்மாமண்டபம்தான் எல்லோர் மனதிலும் வரும். இது தெற்குப்பக்கம்..
அப்படியே வடக்குப் பக்கம் வந்தால் கொள்ளிடம்.. இதுவும் காவிரியின் கிளைதான். காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளுமிடம் கொள்ளிடம்.. என்று பழைய சினிமாப் பாடலே உண்டு.
ஆளவந்தார் படித்துறை.. திருமங்கை மன்னன் படித்துறை என்று படிக்கட்டுகள்.. இறங்கிப் போனால் ஆர்ப்பாட்டமில்லாத நதி ஓட்டம்.. தெளிவான நீர்.. சலவைக்குப் பெயர் போனது.
ஆள் நடமாட்டம் அவ்வளவாய் இராது. ஆனால் ரெகுலராய்க் குளிக்கப் போகிறவர்கள் இன்றும் போகிறார்கள்.. காலை.. மாலை இருவேளையும்.
அவ்வளவாய் நீரே இல்லாத நாட்களிலும் குழி பறித்தால் போதும்.. ஊற்றுக்கண் திறந்து நீர் நிரம்பி விடும். உடல் அமுங்கி படுத்திருக்கலாம். கோவில் யானையைக் குளிப்பாட்ட இங்குதான் அழைத்து வருவார்கள்.
வைதேஹியை இங்குதான் ரகு கடைசியாய் பார்த்தான்.
“உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்’ என்றாள்.
டைப்ரைட்டிங் கிளாஸுக்கு சாத்தார வீதியில் போவார்கள்.
அவளுக்காகவே மாலை 7-8 நேரம் கேட்டு வாங்கினான்.
மாஸ்டர் ஆனமட்டும் தரமுடியாது என்று மறுத்தார்.
“அது லேடீஸ் டைம்’
‘ஸார்.. நாங்க ரொம்ப ஏழை.. கார்த்தால பேப்பர் போடப் போகணும். நாலு மணிக்கே எழுந்து.. ஸ்கூல் விட்டு வந்ததும் அம்மா பண்ணி வச்சிருக்கிற அப்பளக்கட்டை எடுத்துண்டு கடைகளுக்குப் போட ஓடணும்.. ஏழு மணி கிளாஸ்னா எனக்கு வசதி.. எட்டு மணிக்கு முடிஞ்சிரும்.. மெஷின்ல அரைக்கக் கொடுத்த மாவை வாங்கிண்டு ஆத்துக்குப் போயிடுவேன்’
மாஸ்டர் கொஞ்சம் இளகின சுபாவம். அவர் கண்ணைப் படித்து விட்டான் ரகு குனிந்த தலை நிமிராமலே,
இதில் அப்போதிருந்த காயத்ரியும் சப்போர்ட்.
“மாஸ்டர்.. உங்க ரூம் பக்கம் தனியா இருக்கிற டைப்ரைட்டர்ல இவன் அடிக்கட்டும்”
தாய்க்குலம் கொடுத்த தெளிவில் இவனுக்கு அந்த ஷிப்ட் கிடைத்தது.
பேப்பர் கொண்டு வர மறக்கிற நாட்களில் வைதேஹி பழக்கமானாள்.
‘இன்னிக்கும் கொண்டுவரலியா’
பேந்த விழிப்பான். ஒரு கை பேப்பருடன் நீளும். பச்சை நிற வளையல்கள். மருதாணி அப்பிய கை.
Pick my box with five dozen liquor jugs என்று மாஞ்சு மாஞ்சு அடித்து ஒரு கை தள்ள.. இன்னொரு கை ஒத்துழைக்க.. இதில் கட்டை விரல் அடிபட்டதற்கு ஆறு பெண்களும் கூட்டமாய் நின்று குசலம் விசாரித்து தேன் மிட்டாய் பகிர்ந்ததில் ஏகக் குஷி.
தேர்விற்குப் பணம் கட்டவும் வைதேஹி.
‘வைதேஹி,, இதுக்கெல்லாம் நான்..’
‘பரவாயில்ல விடு’
‘நல்ல வேலைக்குப்போய்’
சிரிக்கும் போது வைதேஹியின் தெற்றுப்பல் இன்னொரு அட்ராக்‌ஷன்.
ரிசல்ட் வந்த அன்று அவள் ஃபர்ஸ்ட் கிளாஸ். இவன் ஸெகண்ட்.
‘எப்படியோ பாஸ் பண்ணிட்டில்ல’
‘ஹையர் டைரக்டா போயாச்சு.. இனி வேலை தேடு.. உங்கம்மா பாவம்’
இந்த ஆறுதலில் தான் அவனுக்கு நம்பிக்கை ஒளி தெரிந்தது. இவ அம்மாவை நன்னா வச்சுப்பா.
‘உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்’ என்றாள் அவளே.
‘எ..ன்ன’
‘சாயங்காலம் கொள்ளிடம் வரியா’
‘ம்ம்’
அம்மாவிடம் பர்மிஷன் வாங்கியாச்சு. இன்னிக்கு ஒரு நாள் அப்பளக் கட்டு வேலை இல்லை.
ப்ளீஸ் மா.. என் செல்ல அம்மா.. நாளைக்கு எல்லாத்தியும் போட்டுட்டு வரேன்..
ஸ்டோர் வீடு. ஆறு குடித்தனம். கிளம்பும்போதே ரெங்கு வழி மறித்தான்.
‘என்னடா குஷாலா கிளம்பற’
படிப்பு வரவில்லை. சித்திரைத் தேர் மறைவில் சிகரெட் பிடித்ததை ரகுவே பார்த்திருக்கிறான். மணல்வெளியில் ஒரு பெண்ணைத் துரத்திப் போனதில் கோவில் சிப்பந்தி கண்ணில் பட்டு செவுனியில் ஒரு அறை வாங்கி இருக்கிறான்.
‘அவ கீழே போட்ட பர்ஸைக் கொடுக்கப் போனேன்.. தப்பாப் புரிஞ்சுண்டு அவன் என்னை அடிச்சுட்டான்.. அப்புறம் அந்தப் பொண்ணே தடுத்து.. ஆபிஸ்லயும் சொல்லிருத்து.. அவனை சஸ்பெண்ட் பண்ணிட்டா.. தெரியுமா’
இன்று வரை எந்த சிப்பந்தி அடித்தார் என்று தெரியாததால் ரெங்குவின் வாக்குமூலம் அப்படியே நிற்கிறது.
இவன் எதுக்கு இப்போ.. சகுனத் தடையாய்..
‘விடுரா.. நான் போகணும்’
‘என்னை தெற்கு வாசல்ல விட்டுட்டு போ..’
‘நா..இல்ல.. சரி வந்து தொலை’
டபுள்ஸ் அடித்து .. சரியான புளி மூட்டை.. இறக்கி விட்டு போக்கு காட்டித் தப்பிப்பதற்குள் நேரமாகி விட்டது.
‘நீ வர மாட்டியோன்னு நினைச்சேன்’ என்றாள் ரெட்டை ஜடை போட்டு வைதேஹி.
மூச்சிரைத்தது. ‘சொல்லு’ என்றான்.
’ரகசியமா வச்சுக்கணும்.. நேரம் வரப்போ பேசிக்கலாம்’
‘ம்ம்ம்ம்’
‘முதல்ல நான் இப்படிலாம் அசட்டுத்தனம் பண்ணமாட்டேன்னு நினைச்சேன்.. ‘
“......”
‘இப்போ எனக்கும் ஒரு ஃபீலிங்’
சொல்லேண்டி... பட்டுனு..
‘எனக்கு லவ்வுடா’
சொல்லிவிட்டு கண் சிமிட்டி தலையாட்டினாள். காதில் ஜிமிக்கி ஆடியது.
‘எ..ன்ன’
‘ஆமா.. என்னவோ மனசுல விழுந்துருத்து.. சக்கரத்தாழ்வார் சன்னிதில பூக்கட்டி பார்த்தேன்.. சம்மதம்னு சொல்லிட்டார்’
பெருமாளே.. உனக்கும் இது உகப்பா..
‘நீதான் ஹெல்ப் பண்ணனும்.. உனக்கு நா எவ்வளவோ பண்ணியிருக்கேன்.. எப்படியாவது ரெங்குகிட்ட சொல்லி என்னைப் பார்க்க வரச் சொல்லணும்’
நன்றாக இருட்டி விட்டது. சைக்கிள் ஒரு ஓரமாய் வைத்த இடத்தில் தேமேன்னு நின்றது. அது லொங்கடா சைக்கிள் என்பதாலும். கொள்ளிடம் நீர் சூட்டைத் தணிக்கும். ஆழ அமிழ்ந்து ஒரு மணி நேரம் கூட குளிக்கலாம். ஒன்றும் செய்யாது. சளி பிடிக்காது. தலை கனக்காது. உடம்புக்கு வராது.
இன்று ரகு ஒரு கம்பெனியில் மேனேஜர். ஒரு பையன் ஒரு பெண்.. அம்மா பார்த்து வைத்த மருமகள். ரெங்குவிடம் அவன் சொன்னபோது ஹெஹ்ஹ்ஹ்ஹே என்று வல்லினமாய் சிரித்து விட்டு ‘.................’ பிரசுரிக்க முடியாத வார்த்தைகளைச் சொல்லி விட்டு போய் விட்டான். வைதேஹிக்குக் கல்யாணமாகி குழந்தை இல்லை. கொஞ்ச நாள் சக்கரத்தாழ்வாரைச் சுற்றினாள். அப்புறம் பக்கத்து வீட்டுக் குழந்தையைக் கொஞ்சினாள். இப்போது ஹிஸ்டீரிக்கலாய் சில சமயம் கத்துகிறாளாம்.
பார்க்கப் போகவில்லை ரகு. தைரியம் இல்லை. எள் விளக்கு ஏற்றிக் கொண்டிருக்கிறான் இன்றும்.
‘யார் பேருக்கு அர்ச்சனை’
‘வைதேஹி.. ஆயில்யம்..’



11 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
கதைமனதை நெருடியது.. அருஐமயாக உள்ளது வாழ்த்துக்கள்
வாருங்கள் என்பக்கம்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: வலையுலக ஜம்பவான்கள் இருவருக்கு விருது…-2015:

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பார்க்கப் போகவில்லை ரகு. தைரியம் இல்லை.//

என்னைப்போலவே இந்த ரகுவும் பாவம். :)

//எள் விளக்கு ஏற்றிக் கொண்டிருக்கிறான் இன்றும்.
‘யார் பேருக்கு அர்ச்சனை’
‘வைதேஹி.. ஆயில்யம்..’ //

மிகவும் நல்ல பையன். சூப்பர் கதை. பகிர்வுக்கு நன்றிகள்.

தி.தமிழ் இளங்கோ said...

கொள்ளிடக்கரை வருணனை பிரமாதம். இந்த இடத்தைப் பார்ப்பதற்காகவே ஒருமுறை நாங்கள் குடியிருந்த சிந்தாமணி பகுதியிலிருந்து அங்கு போயிருக்கிறேன்.

அந்தக்கால டைப்ரைட்டிங் வகுப்பிலிருந்து சுவாரஸ்யமான ஆரம்பம். இன்னொரு ஸ்ரீரங்கத்து தேவதையின் கதை.

த.ம.1

கரந்தை ஜெயக்குமார் said...

மனதை கனக்கச் செய்யும் கதை ஐயா

திண்டுக்கல் தனபாலன் said...

கதையாகவே இருக்கட்டும்...

KParthasarathi said...

உங்கள் கதை என்றால் ஆவலுடன் படிக்க தொடங்கிவிடுவேன்.ஒரு போதும் ஏமாற்றம் அளித்தது இல்லை.இந்த கதை மனதை கனமாக்கி விட்டது.வைதேஹி பாவம்.

ராமலக்ஷ்மி said...

நெகிழ்வு.

நிலாமகள் said...

இலகுவான சொல்லோட்டங்களில் கனம் கனமாய் கனக்கும் கதைசொல்லி! நினைப்பதும் சுமப்பதும் மறைப்பதுமாக கடந்த காலக் காதல் ஓவியம்! நாயகனுக்காக நம் மனசும் வலி சூழ் ஜாலம்.

msuzhi said...

மிக இயல்பாக மனதைத் தொட்டுச் சென்ற கதை.

Saravana R Kumar said...

கண் சிமிட்டி தலையாட்டினாள். காதில் ஜிமிக்கி ஆடியது.

அழகான வர்ணனை..

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வலைச்சரம் மூலமாகத் தங்களை இன்று தொடரும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்த்துக்கள். எனது வலைத்தளங்களைக் காண அன்போடு அழைக்கிறேன்.
http://www.drbjambulingam.blogspot.com/
http://www.drbjambulingam.blogspot.com/