October 26, 2015

அம்மு

பசிக்கிறது. வாசல் திண்ணையில் எத்தனை நாழி உட்கார்ந்து தெருவில் வருவோர் போவோரை வேடிக்கை பார்ப்பது. ‘கொஞ்சம் ஒக்காருங்கோ.. சமையல் ஆனதும் கூப்பிடறேன்’
ஒரு கையில் குச்சி ஐஸை சப்பிக் கொண்டு இன்னொரு கையில் சைக்கிளோட்டிப் போகும் சிறுவன் ஏன் என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறான்.. அம்மா பொரித்துக் கொடுத்த வத்தல் தட்டுடன் எதிர் வீட்டுத் திண்ணையில் குட்டிப் பாப்பா சமர்த்தாய் உட்கார்ந்து கடிக்கிறது.
“காப்பி குடேன்”
அடுத்த வீட்டு ரிடய்ர்ட் கூப்பிடுகிறது.
“இப்பதானே அரை மணி முன்னால குடிச்சீங்க”
“நன்னா இருந்ததுடி..”
இந்த வார்த்தை மந்திரம் செய்திருக்க வேண்டும்
“அரை டம்ளர்தான்.. சும்மா சும்மா குடிக்கக் கூடாது”
55 வயதுக்கு முகம் சிவப்பதும் அதை இருபதடி தள்ளியும் தரிசிப்பதும் பசி வேளையிலும் பாக்கியம்.
மெல்ல ரவிகிரண் சரிகிறது.. தெருவில் இருட்டுப் பிசாசு படர ஆரம்பிக்கிறது. இவன் கிரணங்களைச் சுருட்டிக் கொண்டு ஓட ஆரம்பிக்கிறான். அவளுக்கோ தலைமுடி நீளம் அடர்த்தி அநியாயத்துக்குக் கருமை.. சிரிப்பின் வெளிச்சம் தெரியாமல் வாய்க்குள் வைத்துக் கொண்டு அவனை அவள் விரட்டுவதும் அவன் அத்தனை பிரகாசத்தையும் தொலைத்து விட்டு ஓடுவதும் என்ன ஒரு ரசனையான காட்சி.
பசி மந்தித்திருக்க வேண்டும். அல்லது காட்சிகளில் வயிறு நிறைந்திருக்க வேண்டும். போச்சுரா. அதை நினைத்ததும் அடி வயிற்றில் ஒன்று கிளம்பி சப்தித்தது,
கௌளி சத்தம் போல. இந்த கௌளிக்கு எதிர் சத்தம் போல இன்னொரு டொக் டொக்.
மெதுவாய் சேர்ந்த சத்தங்கள் இரைச்சல்களாகி காதை அடைத்தன. இன்னுமா சமையல் ஆகிறது.. எந்த வாசனையும் வரவில்லையே.
உள்ளே எட்டிப் பார்த்தால் விளக்கு ஏற்றவில்லை இன்னும். தெருவில் ஓடிய இருட்டுப் பிசாசு தன் கைகளில் ஒன்றை வீட்டுக்குள்ளும் விட்டிருக்கிறாள்.
‘அம்மு..’
பதிலில்லை.
‘அம்மூ..’
ஊஹூம்.
எழுந்தால் இடுப்பு வேட்டி அவிழ்கிறது. கை பதறி பற்றி முடிச்சிட்டு கொள்கிறது கால்கள் துணைக் கால் தேடின.
திண்ணை.. வராண்டா.. படிகள்.. காலைத் தூக்கி வைத்து வீட்டுக்குள் ரேழி.. தொட்டி முத்தம்.. துளசி மாடம்.. திருமாப்படி..
‘அம்மு..’
பெருமாள் விளக்கு எரிகிறது. சற்று மங்கலாக. ஆடுகிற வெளிச்சத்தில் நடுநாயகமாய் கோவில் ஆழ்வார்.. தவழும் கிருஷ்ணன் கையில் உருட்டிய வெண்ணையுடன்.  காலையில் சாற்றிய மாலை வாடி காற்றில் ஆடுகிறது.
சாதக் குண்டான் திறந்திருக்கிறது. பக்கத்தில் டம்ளரில் நீர். தீபக்காலில் ஒரு வில்லை கற்பூரம்.
அம்மு கண் மூடி நிற்கிறாள். கண்ணருகில் ஒரு துளி தீப ஒளியில் பளபளக்கிறது. கை கூப்பி நிற்பவளிடம் அசைவில்லை. அவளை அழைத்ததை.. ஏன்.. இப்போது அருகில் வந்து நின்றதை.. எதையுமே அவள் உணரவில்லை என்று புரிந்தது.
மெல்ல சப்தமெழுப்பாமல் விலகி வாசல் திண்ணைக்கு வந்து விட்டேன்.
தெரு விளக்குகள் ஒன்றையொன்று சீண்டி பற்றவைத்துக் கொண்டு நின்றிருந்தன,

10 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//மெல்ல ரவிகிரண் சரிகிறது.. தெருவில் இருட்டுப் பிசாசு படர ஆரம்பிக்கிறது. இவன் கிரணங்களைச் சுருட்டிக் கொண்டு ஓட ஆரம்பிக்கிறான். அவளுக்கோ தலைமுடி நீளம் அடர்த்தி அநியாயத்துக்குக் கருமை.. சிரிப்பின் வெளிச்சம் தெரியாமல் வாய்க்குள் வைத்துக் கொண்டு அவனை அவள் விரட்டுவதும் அவன் அத்தனை பிரகாசத்தையும் தொலைத்து விட்டு ஓடுவதும் என்ன ஒரு ரசனையான காட்சி.//

அழகிய அந்த மிகவும் ரசனையான காட்சியினை எழுத்தில் கொண்டுவந்து கொடுத்துள்ளது தான் மேலும் எனக்கு ரசனையாக உள்ளது. மனம் நிறைந்த பாராட்டுகள்.

//அவளுக்கோ தலைமுடி நீளம் அடர்த்தி அநியாயத்துக்குக் கருமை.//

EXCELLENT Sir :)))))

மோகன்ஜி said...

ஆறஅமரத் தொடங்கி, சடுதியில் வேகம்பெற்று சட்டென முடிந்துவிட்ட ரிஷபக் கதை. இன்னமும் கொஞ்சம் விஸ்தாரமாய் எழுதியிருந்தால்தான் என்ன என்ற கோபத்துடன் உங்களைப் பாராட்டுகிறேன்.

Dr B Jambulingam said...

அடுத்தவீட்டு ரிடயர்ட் கூப்பிடுகிறது. வித்தியாசமான சொற்றொடர்ப் பயன்பாடு.

G.M Balasubramaniam said...

எது சிறுகதை என்னும் கேள்வி எழுகிறது இதைப் படிக்கும் போது எதுவும் சிறுகதை ஆகலாம் என்று தெரிகிறது சிறுகதைக்கு என்று ஏதாவது இலக்கணம் இருக்கிறதா என்ன. ரசித்துப் படித்தேன் சார்

Shanthi said...

arumai.

Shanthi said...

arumai

‘தளிர்’ சுரேஷ் said...

விவரணைகள் ரசிக்க வைத்தன! அருமை!

வெங்கட் நாகராஜ் said...

முகப்புத்தகத்தில் படித்து ரசித்ததை மீண்டுமொரு முறை இங்கேயும் படித்தேன்.... ரசித்தேன்.

Geetha Sambasivam said...

முகநூலில் படித்து ரசித்த அம்முக்களை இங்கேயும் படித்து ரசித்தேன்., ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை!

ezhil said...

வயதிற்கே உரிய இயல்பான பதட்டம்...