February 08, 2016

அம்மு 18அம்முவிடம் எனக்குப் பிடித்ததே அவளின் திமிர்தான். இதை ஏற்கெனவே சொல்லியிருக்கிறேனா.. எத்தனை தடவை சொன்னாலும் அலுக்காது. எங்கள் உறவு வட்டத்தில் இதனாலேயே அவள் பிரசித்தி. குறும்பு பிரதிபலிக்கும் அவள் கண்கள் கூடுதல் கவர்ச்சி.
கல்யாணங்களில் அவள் பங்களிப்பு மகத்தானது. வேலைக்கு சலிக்க மாட்டாள். கோலம் போடவா. அம்மு. முகூர்த்தப் பைக்கா .. அம்மு. சம்பந்தி சண்டையா .. சமாதானம் பேச அம்மு. அதென்னவோ அம்முவைப் பார்த்தால் பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போய் சாப்பிட வந்து விடுவார்கள் முறைத்துக் கொண்டு நின்றவர்களும்.
எனக்கு எட்டு மணிக்கே சுமாரான பெண்கள் வெள்ளை உடையில் வந்து பாட்டு பாட ஆரம்பித்து விடுவார்கள். தூக்கம் கண்ணைச் சுழற்றும். தலையணை வேண்டாம் . படுக்கை வேண்டாம். அப்படியே ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் ஒரு மூலையாய் ஒடுங்கி தூங்கிப் போய் விடுவேன். முகூர்த்த பை போடுவதோ நள்ளிரவில். ‘நேத்து ஒரே கலாட்டா ..அம்முவோட சிரிக்க.. சிரிக்க .. ‘ என்று மறுநாள் தகவல் கேட்கும்போது வயிற்றில் அமிலம் சுரக்கும்.
இந்த முறை ஏமாறக் கூடாது என்று தீர்மானித்து விட்டேன். எட்டு மணிக்கே போய் ஒரு குட்டித் தூக்கம் போட்டு வந்து விட்டேன். எழுப்பி விட ஒருவனுக்கு லஞ்சம் கொடுத்திருந்தேன்.
வட்டமேஜை போல உட்காரணும். புது வாசனையுடன் பைகள் . ஆளுக்கொரு பொருள் பைக்குள் போட. நான் சுலபமாய் தேங்காயை தேர்ந்தெடுத்தேன். இன்னொரு காரணம் அது அம்முக்கு அருகில் .முதல் நாள் ஜானவாச சாப்பாடு எப்போதுமே அசத்தலாய் இருக்கும். அக்கார அடிசில் சூப்பராய் இருந்ததால் இன்னொரு முறை கேட்டு வாங்கி சாப்பிட்டதில் இருந்த லேசான கிறக்கம் அம்முவின் பக்கத்தில் கூடுதலாயிற்று.
அம்முவுக்கு மிமிக்ரி கை.. இல்லை வாய் வந்த கலை. உறவுக்காரர்களை ஒவ்வொருவராய் பகடி செய்து காட்டினாள் . எங்கள் சிரிப்பில் உக்கிராண அறை அதிர்ந்தது. யாரோ தூக்கம் கெட்டவர் முனகியது கேட்டது.
அம்முவை இத்தனை அருகில் பார்ப்பதும் கூடவே உட்கார்ந்திருப்பதும் ஒரு சவாலாகத்தான் இருந்தது. குடிகூரா பவுடர் வாசனை மிக மெலிதாய். முன்னுச்சி மயிர் மின்விசிறிக் காற்றில் அலைபாய அம்மு மடப்பள்ளி நாச்சியார் போல இருந்தாள்.
சுந்து முதலில் வாங்கிக் கட்டிக் கொண்டான்.
“அம்மு .. நம்ம பண்ணையார் ஆத்துல உன்னைப் பெண் கேட்டாங்களாமே “
“உனக்கு யார் சொன்னது “
அம்முவின் சிரிக்கும் கண்களில் கனல்.
“உண்டா இல்லியா சொல்லு “
சுந்து விடாமல் வம்பிழுத்தான் .
“ அப்போ அவருக்குக் கொடுத்ததை உனக்கும் கொடுக்கணும் “
அதில் என்ன புரிந்ததோ சுந்து வாயடைத்துப் போனான்.
கமலிக்கு அம்முவிடம் சுதந்திரம் அதிகம்.
“அம்மு .. உன் மனசுல யாராச்சும் இருக்காளா “
வெற்றிலை. தேங்காய்.. பாக்கு.. ஸ்வீட் காராச்சேவு பொட்டலம் சாக்கு சாக்காய் .. நெடி மூக்கைத் துளைத்தது. மணி இரண்டை தாண்டியாச்சு .. எல்லோருக்கும் கை உளைச்சல் .. அம்முவின் ஜோக் சூழலை சுந்து திசை மாற்றி விட்டான். கமலிக்கு என்ன பதில் வரும்..
அம்முவை ஓரக் கண்ணால் பார்த்தோம். சம்மணமிட்டு அமர்ந்திருந்த தேவதை. ஒரு நேர்த்தி அவள் உருவில். செய்தவன் ரசனைக்காரன். கண்களில் மின்னும் குறும்பு அதன் இடத்தை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது. ஒரு சவடாலும் தன்னம்பிக்கையும் எப்போதும் போல ஜொலித்தன.
“ தேடிக்கிட்டு இருக்கேன் கமலி “
“அவன் எப்படி இருக்கணும் அம்மு “
“என் பேச்சைக் கேட்கிறவனா “
அம்மு கொஞ்சமும் தயங்காமல் சொன்னாள் .
கமலிக்கு லேசாய் குரல் பிசிறியது.
“அம்மு .. வேடிக்கையா பேசறது வேற .. சாத்தியமாடி “
“ அழற பிள்ளைதாண்டி பால் குடிக்கும் “
இது ஒரு சம்பவம் தான் . பின்னொரு நாளில் நான் அம்முவைக் கரம் பிடித்தது இந்த யுக்தி தெரிந்ததால்தான் .
அம்மு எங்கே போனாலும் நிழலாய் தொடர்ந்து .. அவள் தேவைகளை அவள் கேட்காமலே நிறைவேற்றி .. இத்தனை நாளாய் அவள் பின்னாலேயே சுற்றுகிறேனே.
மறுநாள் கல்யாணத்தில் கண் எரிந்தது இரவுத் தூக்கம் கெட்டதில். ஆனால் அம்முவுடன் சுற்றுகிற வேலைகளாய் இழுத்துப் போட்டுக் கொண்டதில் உற்சாக ஊற்று.
ஜாதகர்மா.. நாம கர்மா ஆச்சு.. இனி காசி யாத்திரை.. கலர் கலராய் சாத உருண்டைகள் தயார். அப்போதுதான் அந்த சத்தம்.
‘அப்பவே நினைச்சேன்.. சொன்னா இவதான் கேட்கல..’
பிள்ளை வீட்டில் ஆரம்பித்த ரகளை. பேசியதில் இரண்டரை பவுன் குறைவதாய்.
‘போட்டுருவேன்.. இப்போ முஹூர்த்த நேரத்துல தகராறு வேணாம் ‘ பெண்ணின் அப்பா கெஞ்சினார்.
‘ஆரம்பமே பொய்யில ‘
அம்முவும் நானும் அருகில் நின்றிருந்தோம். செய்வதறியாமல். அம்முவுக்கும் வாயடைத்துப் போயிருந்தது.
பட்டைக்கரை வேட்டி.. அங்கவஸ்திரம் எனக்குக் கொடுத்திருந்தார்கள். அரங்கனை ஏளப்பண்ண பந்தாவாக போகலாம் என்று. வெறும் மார்பு.. அதில் புரள்கிற மைனர் செயினுடன் நின்ற என்னை அம்மு பார்த்தாள்.
சட்டென்று முடிவு எடுத்திருக்க வேண்டும். என்னைக் கேட்கக் கூட இல்லை. பாதி அவள் கழற்ற முயல நானும் உடன்பட செயின் இப்போது அவள் கையில்.
“இந்தாங்கோப்பா.. குறையறதுக்கு இதைக் கொடுங்கோ”
கல்யாணம் அந்தப் பக்கம் நடந்து கொண்டிருந்தது. இந்தப் பக்கம் டைனிங் ஹாலில் நானும் அம்முவும்.
“என் மேல கோபமா”
“இல்ல அம்மு.. எனக்குத் தோணல சட்டுனு.. நீ செஞ்சதும் சந்தோஷமாயிருத்து”
“கண்ணா.. உன்னைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்” என்றாள் பளிச்சென்று.
அதே திமிர்.. அதே சவடால்.. அதே பார்வை.. அம்மு அம்முதான்..
சந்தோஷமாய்த் தலையாட்டினேன்.
அம்மு சொல்வதைக் கேட்பதில் என்ன குறை வரப் போகிறது எனக்கு.
--------------------------------------------------------------------------
நன்றி : ஓவியர் மாருதி அவர்கள். கூகிள் உதவி.
(தெற்குவாசலில் கடைத்தெருவில் ஒரு முறை ஓவியர் மாருதி அவர்களைப் பார்த்தேன். மூலைத் தோப்பில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்துப் போனார். அவர் வரைந்த ஓவியம் ஒன்றைக் காட்டினார். குடிக்க பாலும் கொடுத்தார். என் ப்ரிய ஓவியரின் அன்பில் அன்று திளைத்தேன். )

6 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அழகோவியமான படமும், காவியமான கதையும் அசத்தல்.

கடைசியில் அம்மு எடுத்த முடிவு எனக்கு மிகவும் பிடித்துள்ளது. :)

செய்த முயற்சி எதுவும் வீண் போகாததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அம்முவிடம் எனக்குப் பிடித்ததே அவளின் திமிர்தான்.//

ஆரம்ப வரியே வாசிக்கும் நம்மை அப்படியே இறுக்கிக் கட்டிப்போட்டு விடுகிறது :)

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//சுந்து விடாமல் வம்பிழுத்தான் .
“ அப்போ அவருக்குக் கொடுத்ததை உனக்கும் கொடுக்கணும் “
அதில் என்ன புரிந்ததோ சுந்து வாயடைத்துப் போனான்.//

சூப்பரோ சூப்பர் !

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//சட்டென்று முடிவு எடுத்திருக்க வேண்டும். என்னைக் கேட்கக் கூட இல்லை. பாதி அவள் கழற்ற முயல நானும் உடன்பட செயின் இப்போது அவள் கையில்.

“இந்தாங்கோப்பா.. குறையறதுக்கு இதைக் கொடுங்கோ” கல்யாணம் அந்தப் பக்கம் நடந்து கொண்டிருந்தது. இந்தப் பக்கம் டைனிங் ஹாலில் நானும் அம்முவும்.

“என் மேல கோபமா”

“இல்ல அம்மு.. எனக்குத் தோணல சட்டுனு.. நீ செஞ்சதும் சந்தோஷமாயிருத்து”

“கண்ணா.. உன்னைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்” என்றாள் பளிச்சென்று.
அதே திமிர்.. அதே சவடால்.. அதே பார்வை.. அம்மு அம்முதான்..

சந்தோஷமாய்த் தலையாட்டினேன். அம்மு சொல்வதைக் கேட்பதில் என்ன குறை வரப் போகிறது எனக்கு.//

ஜாலிலோ ஜிம்கானாவான முடிவு இது.

அந்த மைனர் செயின் போனால் போகட்டும்.

’ஃபிஃப்டி கேஜி தாஜ்மஹால்’ போன்ற தங்கமான அம்முவே கிடைக்கப்போகும் போது, மைனராவது செயினாவது.

பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

‘லாலி சுப லாலி .... என் எழுத்துலக மானஸீக குருநாதருக்கு’

பிரியமுள்ள வீ......ஜீ

mageswari balachandran said...

வணக்கம்,

நான் மிக நேசிக்கும் பாத்திரம்,, பெயரும் அருமை,,

எனக்கு பிடித்த ஓவியர்,, கண்மணி புத்தகம் படிப்பேன், அதன் அட்டைப்படம் அவர் ஒவியம்,,,

கதை நன்றாக இருக்கு,,,

ஹ ர ணி said...

anbull rishaban

ungal nadaiyil ennai marakkiren. unmai verum pukazhcci illai.