ராசா
மஹேஸ்வரியை அழைத்துக்கொண்டு . ராணி எங்கள் வீட்டில் நுழைந்தபோது புவன் அழுது கொண்டிருந்தான். புவன் என் மகன். இரண்டு வயது. ராணி எங்கள் வீட்டில் வேலை செய்கிறாள். புவனைப் பார்த்துக் கொள்ள தக்க நபர் வேண்டியிருக்கிறது. இருவருமே வேலைக்குப் போகிறோம். மாமியார் காது மந்தம். நீட்டினால் மடக்க முடியாத கால்வலி.
"இவளையா" என்றேன் சந்தேகமாய். தன்னுடைய பத்து வயசுப் பெண்ணை அழைத்துக் கொண்டு வருவதாகச் சொல்லியிருந்தாள். மாதம் முந்நூறு சம்பளமும், ஒரு வேளைச் சாப்பாடும் என்று பேச்சு.
"எட்டு வூட்டுக்கு வேலை செய்யும் ... மகேசு. புள்ளை அழுவுது பாரு. போய்த் தூக்கு"
ராணிக்கு முந்நூறு ரூபாய் தேவை. என்னை மறு பரிசீலனை செய்ய விடாமல் மஹேஸ்வரியை வேலைக்கு அமர்த்த முனைவது புரிந்தது.
மஹேசு, சற்றே கிரீச்சிட்ட குரலில் பெயர்ச்சுருக்கம். மஹேசு ஓடி வரவில்லை. சற்றே மந்த நடை. புவனைத் தொட்டுத் தூக்கியதில் கனம் தாங்காமல் தடுமாறி நின்றாள்.
"ராணி... வேற ஆளு பார்க்கலாமே
"இல்லம்மா, ஐநூறு. அறநூறு கேட்கறாங்க. இவ நல்லாப்
பார்த்துக்குவா. இதுக்கு முன்னால ஒரு அய்யரு வூட்டுலயே வச்சிருந்தாங்க. ஆறுமாசம். அவருக்கு வேற ஊருக்கு மாத்தலாகிப் போனதால வூட்டுல சும்மா இருந்திச்சு. எல்லா வேலையும் பழகிருச்சு. கடைக்குப் போயி ஜாமான் வாங்கியாரும் ரேசனுக்குப் போவும்".
"அதெல்லாம் வேணாம். எங்க மாமியாரால முடியல. வேளா
வேளைக்கு புவனுக்கு ஊட்டி விடனும் பால் தரணும். தூங்க வச்சு பத்திரமா பார்த்துக்கணும்".
எனக்குள் இன்னமும் நெருடல்.
"இத்தனூண்டு பெண்ணா."
"பார்க்கத்தான் அப்படி இருக்கா. பத்து வயசாச்சு. நீங்க பாருங்களேன்."
எனக்கும் வேறு வழி தோன்றவில்லை. நிறைய லீவு போட்டாகிவிட்டது. ஒரு நிஜ பிரசவம். இரண்டு 'பொய்' அபார்ஷன். ஆபிஸ் நோட்டீஸ் வந்துவிட்டது. யூனியனில் பேசி வைத்திருக்கிறது. வேலைக்குப் போயே தீரவேண்டும்.
வேலையை விட முடியாது.
" என்னவோ ராணி. நீ சொல்றியேன்னு வச்சுக்கறேன். போன வாரம்.. மாமியார் தூங்கிட்டாங்க. இவன் நகர்ந்து போய் பிளாஸ்க்கை உருட்டி ஒடச்சு வென்னீர் பட்டு புண்ணாயிருச்சு" என்றேன்.
"கவலைய வுடுங்கம்மா. மகேசு பார்த்துக்கும்."
புவன் தனக்கு அறிமுகமான புதுமுகத்தின் விரல்களைப் பற்றி சப்ப முயன்று கொண்டிருந்தான்.
"புவன், ச்சீ.... நக்காதே. மஹேசு, கைய நல்லாக் கழுவிக்க புரியுதா"
சோப் எடுத்துக் கொடுத்தேன். துடைத்துக் கொள்ள டவல். நீட்னஸ் பற்றி லெக்சர்: காலை எட்டரைக்கு வந்து விடு. "இன்ன நேரம், இன்னது தா" பட்டியல். "பத்திரம், பத்திரம், பத்திரம்" கவலை திணித்த எச்சரிக்கை மந்திரங்கள்.
மகேசு எல்லாவற்றுக்கும் தலையாட்டியது.
ஒன்று, அதற்குக் கட்டளைகள் புரிந்திருக்க வேண்டும். அல்லது எதற்குமே தலையாட்டல். அம்மாவின் மிரட்டல் பின்னணியில் வேலைக்குச் சேர்ந்திருக்க வேண்டும்.
எப்படியோ தற்காலிகமாய் எனக்குள் நிம்மதி. இந்த மாசம் "லாஸ் ஆஃப் பே" இல்லை. நர்மதா, மந்தாகினியைப் பார்க்கலாம். டேலி ஆகாத லெட்ஜர்கள், அன்னபூர்ணா டிபன், ஆபீஸ் விட்டதும் பர்மா பஜார் சேலைகள். மூன்று வருடங்களுக்கு முந்திய பழைய வாழ்க்கை.
மாமியாருக்கும் என்னைப் போலவே சந்தேகம். "இவ்ளோ சின்னப் பெண்ணா".
"வேற வழியில்லம்மா, யாரும் வேலைக்கு வர மாட்டேங்கறா. வந்தாலும் நம்பிக்கையா வச்சுக்க முடியலே. போன தடவை வந்தவ நூறு ரூபா நோட்டை எடுத்துண்டு போயிடலையா, வீடு பூராத் தேடினோமே"
"ஆனாலும் சின்னதா இருக்கே"
"நீங்களும் கொஞ்சம் பார்த்துக்கோங்கோ. அதட்டி வேலை வாங்குங்கோ, மத்தியானம் நீங்க தூங்கும்போது ரூமுக்கு போய் புவனை வச்சுக்கச் சொல்லுங்கோ. ஹால்ல நீங்க சத்தம் இல்லாம படுத்துக்கலாம்".
மாமியாரிடம் வேறு பேச்சு இல்லை. ஒரு விதத்தில் மகேசு அவருடைய கவலையைக் குறைக்கிறாள். "யாரோ" பார்த்துக் கொள்கிறாள் என்ற நிம்மதியில், சற்றே தைரியமாய் கண்
அசரலாம்.
"நீ எது செஞ்சாலும் சரி" என்றார் என் கணவர்.
"அப்படி இல்லே. ஒங்க ஒபினியனும் சொல்லலாமே"
"வீட்டு அஃபேர்ஸ்ல நீதான் அதாரிட்டி ஓக்கே"
மகேசின் தினங்கள் ஆரம்பித்தன.
முதல் பத்து நாட்களில் பெரிதாய்க் கலவரப்பட எதுவும் நிகழவில்லை. சில்லறைத் தவறுகள் அவை எவருக்கும் சகஜம்.
ஒரு நாள் நான் வீடு திரும்பியபோது புவனின் உடம்பு சுட்டது.
"மகேசு, புவனுக்கு ஜீரமா" "
"தெரியலீங்க. தம்பிக்கு காலைலேர்ந்து ஜீடா இருக்கு"
"பெரியம்மாக்கிட்டே சொல்லலியா"
"சொன்னேன்"
சொல்லவில்லை என்றார் மாமியார். டாக்டரிடம் ஓடினேன். மருந்து, மாத்திரைகள்.
"உடம்பு சுட்டா பெரியம்மாகிட்டே சொல்லு" என்றேன். வேறு என்ன செய்ய.
மகேசு மறுநாள் வந்தபோது கூடவே இன்னொரு நபரும். நாலு வயசுத் தம்பி.
"இது யாரு"
"ஏந்தம்பி"
"அவனை ஏன் கூட்டிகிட்டு வந்தே"
"அம்மாதான் கூட்டிகிட்டு போகச் சொன்னாங்க"
புவனின் பொம்மையை மகேசின் தம்பி பிடுங்க முற்பட்டு என் எரிச்சலைக் கிளப்பினான்.
"டேய் பொம்மையை வை"
ஊஹீம்.. என் அதட்டல் பலனில்லை.
"மகேசு, சொன்னாக் கேட்க மாட்டானா, உன் தம்பி"
"அவனுக்குக் காது கேட்காதுங்க"
என்ன... ஒரு வினாடி எனக்கு வாயடைத்துப் போனது.
''ஆமாங்க. பொறக்கறப்பவே அப்படித்தான்"
நங்கென்று விழுந்த சாப்பாட்டுத் தட்டு, கண கணவென சப்தித்து தரையில் செட்டில் ஆனது. எங்களுக்கு மட்டும் அதிர்வுகள். விழிகளில் படபடப்பின்றி சாதாரணமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த மகேசு தம்பி.
"நெஜம்மாவே சுத்தமாக் கேட்காதா"
"ஆமா"
புது பிளாப்பி போல, எந்தப் பதிவுகளும் அற்ற மூளைப் பிரதேசம். வார்த்தைகளின் ஜாலங்கள் எட்டாத தூரத்தில் மகேசின் தம்பி.
"பேரென்ன"
"ஆங்.."
"போச்சு. உனக்கும் காது கேட்காதா'
"ஏந்தம்பி பேரா,ராசா"
ராசா.
புவன் தன் சாம்ராஜ்யத்தில் இன்னொரு நபரின் ஊடுருவலைச் சகிக்காமல் கத்த ஆரம்பித்தான்.
"மகேசு, அம்மாகிட்டே சொல்லு, நான் சொன்னதா, இனிமேல ராசாவை இங்கே கூட்டிகிட்டு வரக்கூடாது. புரியுதா"
"சரிங்கம்மா"
மாமியாரிடமும் சொன்னேன். நான் ஆபீஸ் போன பிறகு ராணி வருவாள். பாத்திரங்கள் கழுவி, துணி துவைத்து உலர்த்தி விட்டுப் போவாள். ஞாயிறுகளில் மட்டுமே சந்திப்பு, பிற
விடுமுறை தினங்களிலும்.
"சொல்றேன்" ' "
"கண்டிச்சு சொல்லுங்க. அப்புறம் புவனைக் கவனிக்காம, தம்பி கூட விளையாடிக்கிட்டு இருப்பா"
மாமியார் தலையாட்டினார்
மறுநாளும் ராசா வந்தான்.
"என்னடி, உங்கம்மா கிட்டே சொல்லலியா"
"பெரியம்மா" என்றாள் மகேசு.
"அவங்களை ஏன் கூப்பிடறே"
மாமியார் வந்தார்.
"குடிசையைப் பிரிச்சு வேலை பார்க்கிறாங்களாம். ரெண்டு நாள் இருக்கட்டும்மா, அப்புறம் அழைச்சுகிட்டு போயிடறேன்னா"
'கண்டிச்சு சொன்னீங்களா"
"சொன்னேன். இப்படி பதில் சொன்னா, நான் என்ன பண்றது"
ப்ச். எத்தனை தளைகள், சுதந்திரமாய் எதுவும் சொல்ல, செய்ய முடியாத நிர்ப்பந்தங்கள்.
"ரெண்டு நாள்ல கட்டாயம் அழைச்சுகிட்டு போயிரணும்" என்றேன் மகேசிடம்.
தலையாட்டினாள்.
''நான் சொன்னேன்னு ஒங்கம்மாகிட்டே சொல்லு"
ஏழாவது நாளாய் ராசா வந்தான்.
என் எரிச்சல் அதன் எல்லையைக் கடந்தது. நேற்று ராசா உபயோகப்படுத்திய டாய்லட் கழுவப்படாமல் இருந்தது. புவனுக்குக் கொடுத்த பிஸ்கட்டை ராசா கடித்தானாம். அதை விட மோசம், மாலையில் புவனும் ராசாவும் ஒரே படுக்கையில் கட்டிக் கொண்டு தூக்கம்.
இவரிடம்தான் எரிந்து விழுந்தேன்.
'அவ சொன்னாக் கேட்க மாட்டேங்கிறா, நீங்க போயி ஒரு சத்தம் போட்டுட்டு வாங்க "
'அவ வீடு எங்கே இருக்கு" என்றார் அலுப்புடன்
"ரெயில்வே லைன் பக்கம்னு சொன்ன ஞாபகம்".
போய் விட்டு வந்தார். நாளை முதல் ராசா வரமாட்டானாம்.
நன்றாக மிரட்டச் சொல்லியிருந்தேன். இல்லாவிட்டால் மகேசை வேலையை விட்டு நிறுத்த உத்தேசம்.
மறுநாள் ராசா வரவில்லை. புவன் ஒரு நபர் குறைந்தது புரியாமல் தன் போக்கில் மழலை பேசி, விளையாடிக்
கொண்டிருந்தான்.
மூன்றாவது நாள் மகேசு வேலைக்கு வரவில்லை. ஆபீஸ் கிளம்புகிற அவசரம்.
"இவளைக் காணோமே"
"நீ போ, லேட்டா வராளோ, என்னவோ"
"இவனைப் பார்த்துக்கணுமே"
"நான் பார்த்துக்கறேன்" என்றார் மாமியார். அரை மனதாய்க் கிளம்பிப் போனேன். மாலையில் திரும்பிய
போதும் மகேசு வந்திருக்க வில்லை. நனைத்து வைத்த துணிகளின் வீச்சம் ஹாலில் பரவிக் கொண்டிருந்தது. கழுவப்படாத பாத்திரங்கள், தலைவலி
பிளந்தது.
"ராணியும் வேலைக்கு வரலே" "
"ச்சே, இவளை நம்பினா இப்படித்தான்"
"இப்ப என்ன செய்யறது நாளைக்கும் வருவாளோ. மாட்டாளோ"
எதிர்வீட்டுக்கும் இவள்தான் வேலை செய்கிறாள். ஏதேனும் தகவல் தெரிந்திருக்குமா.
போனேன்.
"தெரியலியே. அவ எங்கே ஒழுங்கா வரா, ஒரு நாள் வந்தா ஒரு நாள் வர மாட்டா, இந்த மாசத்தோட நிறுத்திடலாம்னு இருக்கேன்"
கணவர் வந்ததும் சொன்னேன்.
"உனக்கு இதுவே பிழைப்பாய் போச்சு, ஆன்னா, ஊன்னா குடிசைப் பக்கம் விரட்டு"
'"நாளைக்கு வருவாளான்னு தெரியணும்'
"நீயும் வா. ரெண்டு பேருமாப் போகலாம். அங்கே போய் ராணி எங்கேன்னா, என்னை ஒரு மாதிரி பார்க்கறாங்க."
"புவனைப் பார்த்துக்க வேணாமா, வேலை வேற குவிஞ்சு கிடக்கு "
எதுக்கு அலட்டறே, பத்தே நிமிஷம், ஸ்கூட்டர்ல போகப் போறோம்".
மாமியாரிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.
ஏதேதோ சந்துகள், மூக்கைப் பிடித்துக் கொண்டு பயணம். ரெயில்வே கேட் மூடியிருந்தது. என்ன ரயிலோ.
"எந்த வீடு"
'இந்தக் குடிசைதான்"
சட்டென்று சூழலில் ஒரு அழுத்தம் புரிய மனசுக்குள் படபடப்பு.
'"ராணி"
"ஏ ராணி. இங்கிட்டு வா, யாரோ உன்னியப் பார்க்க வந்திருக்காங்க"
தலைவிரி கோலமாய் ராணி, முகம் வீங்கி, கலங்கிய கண்கள்.
"என்ன ராணி"
"யம்மா, எம்புள்ளை போயிருச்சும்மா, ராசாவாட்டம் இருந்தானே, அநியாயமாப்பூட்டானே"
தொண்டை உலர்ந்து போனது.
"எ... எப்படி என்ன ஆச்சு"
காது கேட்காத அந்த பிஞ்சு ஜீவன் தன் போக்கில் ரயில்வே லைனில் நின்று விளையாடிக் கொண்டிருந்ததாம். எவரும் கவனிக்கவில்லை. வேறு பக்கம் திரும்பி இருந்ததால் வண்டி வந்ததும் புரியவில்லை. நிறத்து முடியாத வேகம். சக்கரங்களுக்கு ரத்தப்பசி. தூக்கி விசிறிய ... வேண்டாம். மேலும் சொல்லாதே...என்று மனசு கெஞ்சியது.
"அநியாயமாப் பூட்டாம்மா, இப்படி பறி கொடுத்தேனே... ராசாவாட்டம் புள்ளைய"
என் கணவர் என் கையைப் பற்றி அழுத்தினார்.
"போயிட்டு வரேன்" என்று சொல்லக்கூடாது.
கால்கள் நடுங்கப் பின் வாங்கி இயந்திரமாய் பின் ஸீட்டில் அமர்ந்து கொண்டேன். ஸ்கூட்டர் கிளம்பியது.
பிளீஸ்... அவன் செத்துப் போனதற்கு நான் காரணமில்லை என்று யாராவது சொல்லுங்களேன்.
2 comments:
மனதைத் தொட்ட கதை. தவறு யார் மீது என்று சொல்ல முடியாது என்றாலும், இந்த இழப்பு இரு குடும்பத்தினருக்குமானது.
முகநூலில் படித்ததை இங்கேயும் சேமித்து வைப்பது நல்ல விஷயம்.
தொடரட்டும் தங்களது பதிவுகள் - இங்கேயும்!
ஏழ்மையின் பற்றாகுறையினால் ஊரார் குழந்தைகளை பார்த்துக்கொள்ள தன் மகளை அனுப்ப வேண்டிய நிர்பந்தத்தினால் தன் ஊனமுற்ற குழந்தையை பறிகொடுத்த அவலம். மனதை பிழிந்து எடுத்து விட்டது. அருமையான கதை
Post a Comment