October 01, 2009

தகவல் தொடர்பு

தகவல் தொடர்புக்கு அப்புறம் என்ன பண்ணுவீங்க..

என்னைப் பார்த்து என் நண்பர் கேட்ட கேள்வி இது. வேறு ஒன்றும் இல்லை. நகராட்சிப் பூங்காதான் கதி என்று ஆகிவிட்ட விஆரெஸ் ஆத்மா நான்.

ஓய்வு பெற்ற நாளில் எனக்கு மலர்க் கிரீடம் என்ன.. மாலைகள் என்ன.. 5000 வாலா வெடிச் சத்தம் என்ன.. பாண்டு வாத்தியம் முழங்க என்னை வழி நடத்தி அழைத்துப் போனபோது ஒரு அரசியல் கட்சியே ஆரம்பித்து விடலாம் என்கிற நப்பாசை வந்தது. (வந்த கூட்டம் பிரியாணியைத் தின்றதும் கலைந்து போய் விட்டது)

பூங்காவில் என் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டுக் கொண்டு (அதாவது ஜானகி-என் மருமகள்- நான் கேட்காமலே சுடச் சுட போண்டா-பொன்முறுவலாய், அல்லது பஜ்ஜி-அதற்குள் வெங்காயமா, உருளைக் கிழங்கா, கத்திரிக்காயா என்று சூடு பொறுக்காமல் கடித்துக் கண்டு பிடிக்கும் துப்பு.. ஆஹா.. அப்புறம் டிகிரி காப்பி தருவதாய்க் கற்பனை!) உட்கார்ந்திருந்தபோது இன்னொரு வயசான ஆத்மா எனக்கு அறிமுகமானார்.

அவர் 1946 நவம்பர் என்றும் நான் 1945 ஜனவரி என்றும் தெரிய வந்தபோது அவர் முகத்தில் தான் என்ன பிரகாசம். நான் அவரைவிட வயசாளியாம். பேச்சு நடுவே 'மாமா' என்றாரே பார்க்கலாம்.

திடீரென ஒரு மியூசிக் கேட்டது. 'வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்..' பைக்குள் கைவிட்டு கைபேசியை (செல்போன் தான்) எடுத்தார். 'ஆங்.. அப்படியா.. சரி..' என்று பத்து நிமிடம் பேசிவிட்டு வைத்துக் கொண்டார். என்னைப் பார்த்தார்.

"கையில போன் இருந்தாலே வசதிதான்" தலையாட்டினேன். எத்தனை வருடப் பிராக்டிஸ்!

"நீங்க என்ன ஹச்சா.. டாடாவா"

என்னை ஏதோ டாடாவா பிர்லாவா என்று கேட்ட மாதிரி மிரண்டு போனேன். அப்புறம் என் பேத்தி சொன்னது ஞாபகம் வந்தது.

'தாத்தா.. ஏர்செல்..ஏர்டெல்..பிஎஸ்என்எல் எது வச்சிருந்தாலும் 'ஹச்'சுனு தான் தும்ம முடியும். தெரியுமா'

"ஹி..ஹி.. நான் செல் வச்சுக்கலே. லேண்ட்லைன் தான்"

என்னை தப்பாய் லேண்ட் ஆன பிளேன் போலப் பார்த்தார்.

"தகவல் தொடர்புக்கு அப்புறம் என்ன பண்ணுவீங்க"

"எங்க வீட்டு வேலைக்காரி இருக்காளே"

மனுஷருக்கு சிரிப்பே வரவில்லை.

"இங்கே பாருங்க.. வர வழியில.. எத்தனை பேரைப் பார்த்திருப்பீங்க. யாராச்சும் செல் இல்லாம இருக்காங்களா.. அடடா.. என்ன மனுஷன் நீங்க. கிராமத்துலயே இப்ப செல் எல்லார் கையிலயும் இருக்கு. முதல்ல ஒரு செல்லை வாங்குங்க.. நம்பரைக் கொடுங்க எனக்கு"

"நாமதான் டெய்லி நேர்லயே பார்த்துக்கிறோமே"என்றேன் அப்பாவியாய். "நடுராத்திரி எனக்கு உங்ககிட்டே பேசணும்னு தோணிச்சுன்னா.. அவ போனதுக்குப் பிறகு என் பக்கத்துல எப்பவும் செல் இருக்கும். படுத்துக்கும்போது கூட"

"சரி" என்று தலையாட்டினேன்.

வீடு திரும்பும் வரை அதே நினைப்புத்தான். என் மருமகளிடம் சொன்னேன். "நான் ஒரு செல் வாங்கிக்கவா"

"எவரெடியா.. டியூரோ செல்லா"

"ஃபோன்.. செல்போன்"

"எதுக்கு"

"சும்மா.. "

மகனுக்குத் தகவல் போய் விட்டது. என்னுடைய தகவல் தொடர்பு சாதனம் என் மருமகள்தான். ஆபிசிலிருந்தே பேசினான்.

"ஹலோ.. "

"என்னப்பா.. செல் வேணுமா"

"ம்"

"நான் வரப்ப கார்டு போட்டுக் கொண்டு வரேன். பிரீபெய்டா.. போஸ்ட்பெய்டா.. எது வேணும்"

ஹோட்டலில் சாதாவா, ஸ்பெஷலா என்று கேட்டாலே குழம்பிப் போவேன் எதைச் சொல்வதென்று.

"நீயே முடிவு பண்ணுடா. எது பெட்டர்னு"

சின்ன வயதிலிருந்து அவன் எதைக் கேட்டாலும் இதைத் தான் சொல்வேன். 'நீ முடிவெடு' அவனும் எல்லாரிடமும் பெருமையாகச் சொல்வான். 'எங்கப்பா என்னைத் தானே முடிவெடுக்கிற மாதிரி வளர்த்தார்' அவனுக்குத் தெரியாது, என் பிரச்னை. என்ன முடிவெடுப்பது என்பதில் எனக்கு எப்போதும் குழப்பம். வந்து விட்டது என் கைபேசி.

கையில் வாங்கியபோதே லேசாய் பயம். தொட்டால் ஷாக் அடிக்கிற மாதிரி ஒரு பிரமை. அதன் உபயோகங்களை விவரித்தான். அட்சரம் புரியவில்லை. "இந்த நம்பரைக் கூப்பிடுடா"

"ஏய்.. பானு இந்தா.. தாத்தாக்கு ஹெல்ப் பண்ணு"

பேத்தி கையில் கொடுத்து விட்டுப் போய் விட்டான்.

"தாத்தா.. என்ன நம்பர்"

நான் டைரியைத் தேடி சொல்வதற்குள் அவள் மூன்று பேரிடம் பேசிவிட்டாள்.

"ஏய்.. சனியனே.. இந்த நம்பருக்கு பேசு. என்கிட்டேதான் இருக்கும்."

"போடி நாயே.. நேத்திக்கு திரும்பிப் பார்க்காம போனியே.. நீ பேசினாத்தான் நானும் பேசுவேன்.. நம்பரைக் குறிச்சுக்க"

"லூசு.. எங்கேடி உன்னை டியூஷன்ல காணோம்.. இப்பதான்
அவங்ககிட்டே நம்பரைக் கொடுத்தேன்.. உனக்கு செல் இருக்கே.. நம்பர் அதுலயே இப்ப வந்திருக்குமே.. பண்றியா"

"சொல்லுங்க தாத்தா.." என்றாள் பதவிசாய்.

சொன்னேன்.

"இந்தாங்க.. ரிங் போவுது"

"ஹலோ.. நாதான்.. செல் வாங்கிட்டேன்"

எதிர்முனையில் என் நண்பர் பேசியது சரியாகக் கேட்கவில்லை.

"ஹலோ.. ஹலோ.. "

"தாத்தா.. வாசலுக்குப் போங்க.. டவர் கிடைக்கலை போல இருக்கு"

அப்படியே நகர்ந்து நகர்ந்து ரோட்டிற்கே போய் விட்டேன். இன்னும் கொஞ்ச தூரம் போனால் பூங்கா!செல்லை அணைத்து விட்டு பூங்காவில் நுழைந்தேன். நண்பர் உட்கார்ந்திருந்தார். 234 தொகுதிகளையும் கூட்டணி இல்லாமலேயே ஜெயித்த தலைவர் மாதிரி அவரைப் பார்த்தேன்.

"ஏன் திடீர்னு கட் பண்ணிட்டீங்க" என்றார்.

"டவர் கிடைக்கலே"

"இப்ப பேசுங்க"

'நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நபர் இப்போது தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்' என்று கேட்டது.

அதை எங்கே வைத்துக் கொள்வது போன்ற ஆலோசனைகளையும் நண்பர் வழங்கினார். 'ஷர்ட் பாக்கட் வேணாம். ஹார்ட் பக்கத்துல. அப்புறம் பேண்ட் பாக்கட்ல வேணாம். ஆண்மை பாதிக்குமாம்.(!) வைப்ரேஷன்ல வைச்சா பிரச்னை..' இத்யாதி. அப்புறம் எதுக்கு இதை வாங்கணும் என்கிற கேள்வி என் நாக்கு நுனி வரை வந்து விட்டது.

"எல்லார்கிட்டேயும் நம்பரைக் கொடுக்காதீங்க. வீண் தொந்திரவு" என்றார்.

ரிங் கேட்டது.

"எஸ் எம் எஸ் வருது" என்றார்.

எடுத்துப் பார்த்தேன். எப்படிப் பார்ப்பது என்று புரிபடாமல். கையில் வாங்கி படபடவென்று ஏதோ செய்தார்.

"இப்ப படிங்க"

'ஏண்டி லூசு.. நாளைக்கு ஸ்கூலுக்கு வரியா.. லீவா' பேத்திக்கு வந்த மெசேஜ்! "எப்படி பதில் தரணும்னு தெரியுமா"

"வேணாம்" என்றேன் அவசரமாய்.

"உங்க போனைக் காண்பிங்க" என்றேன்.

"ப்ச்.. சார்ஜ் பண்ண மறந்துட்டேன். " என்றாரே பார்க்கலாம்!

9 comments:

KALYANARAMAN RAGHAVAN said...

இப்போ டாக்டரிடம் போய்க்கொண்டிருக்கிறேன். வேறு எதற்கு? உங்க பதிவை படித்து சிரித்து சிரித்து வயிறு வலிக்க ஆரம்பித்தது. அதுக்கு மருந்து வாங்கத்தான். சிரிப்பு பதிவு வெகு சிறப்பு பதிவு.

ரேகா ராகவன்.

srinivasan said...
This comment has been removed by the author.
ரிஷபன் said...

நன்றி நண்பரே சிரிப்பு ஒரு டானிக் தான் வேறு மருந்து வேண்டாம் ரிஷபன்

K.B.JANARTHANAN said...

பிரவாகமாக வரும் நகைச்சுவை. சிரித்ததில் நாக்கைச் சுவை பார்த்துவிட்டேன்! - கே.பி.ஜனா

ரிஷபன் said...

அதுதான் உங்க டச் ஜனா சார் ரிஷபன்

ravi said...

KALLAKKALANA KATHAI THAN NANABARE

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

கதை வெகு ஜோர்

VAI. GOPALAKRISHNAN said...

ஒரே சிரிப்பு தான் போங்க!

மிகவும் ரசித்தவை:

//பூங்காவில் என் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டுக் கொண்டு (அதாவது ஜானகி-என் மருமகள்- நான் கேட்காமலே சுடச் சுட போண்டா-பொன்முறுவலாய், அல்லது பஜ்ஜி-அதற்குள் வெங்காயமா, உருளைக் கிழங்கா, கத்திரிக்காயா என்று சூடு பொறுக்காமல் கடித்துக் கண்டு பிடிக்கும் துப்பு.. ஆஹா.. அப்புறம் டிகிரி காப்பி தருவதாய்க் கற்பனை!)//

//அவர் முகத்தில் தான் என்ன பிரகாசம். நான் அவரைவிட வயசாளியாம். பேச்சு நடுவே 'மாமா'
என்றாரே பார்க்கலாம்.//

//"நீங்க என்ன ஹச்சா.. டாடாவா" என்னை ஏதோ டாடாவா பிர்லாவா என்று கேட்ட மாதிரி மிரண்டு போனேன்//

//பிரீபெய்டா.. போஸ்ட்பெய்டா.. எது வேணும்" ஹோட்டலில் சாதாவா, ஸ்பெஷலா என்று கேட்டாலே குழம்பிப் போவேன் எதைச் சொல்வதென்று.//

//வந்து விட்டது என் கைபேசி. கையில் வாங்கியபோதே லேசாய் பயம். தொட்டால் ஷாக் அடிக்கிற மாதிரி ஒரு பிரமை. அதன் உபயோகங்களை விவரித்தான். அட்சரம் புரியவில்லை. //

//"ஏன் திடீர்னு கட் பண்ணிட்டீங்க" என்றார். "டவர் கிடைக்கலே" "இப்ப பேசுங்க" 'நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நபர் இப்போது தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்' என்று கேட்டது. அதை எங்கே வைத்துக் கொள்வது போன்ற ஆலோசனைகளையும் நண்பர் வழங்கினார். 'ஷர்ட் பாக்கட் வேணாம். ஹார்ட் பக்கத்துல. அப்புறம் பேண்ட் பாக்கட்ல வேணாம். ஆண்மை பாதிக்குமாம்.(!) வைப்ரேஷன்ல வைச்சா பிரச்னை..' இத்யாதி. அப்புறம் எதுக்கு இதை வாங்கணும் என்கிற கேள்வி என் நாக்கு நுனி வரை வந்து விட்டது. //

பதிவுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

அந்தப் பெரியவருக்கு செல் போனுடன் ஏற்பட்ட அனுபவம் தான், எனக்கு இந்த ப்ளாக்குகளுக்குள் போய் பதி அளிப்பதில் ஆரம்ப நாட்களில். அதனால் தாமதமாக படித்து தாகதமாக பதில் அளித்துள்ளேன்.

Chandramouli said...

Fantastic humor! Thoroughly enjoyed it.