October 05, 2009

திருமங்கை

திருமங்கை ஆழ்வார் பற்றிய குறிப்பு என்று நினைக்க வேண்டாம் அவர் பற்றியும் ஒரு தகவல் பின்னால் வரும்.


ஸ்ரீரங்கவாசியான என்னைப் போல பலர் தினமும் காவிரிக்கு செல்வார்களா என்கிற சந்தேகம் உண்டு. நான் போவதில்லை. அதற்குக் காரணம் ஒன்று நேரமில்லை அப்புறம் சோம்பேறித்தனம்.


ஸ்ரீரங்கம் பற்றி தெரியாதவர்களுக்கு சின்ன குறிப்பு. நகரின் இரு புறமும் மாலையாக காவிரி நதி ஓடுகிறது. தெற்கே அதன் பெயர் காவிரி. வடபுறம் கொள்ளிடம். அம்மாமண்டபம் பக்கம் காவிரி நீர் குளிக்க அத்தனை சுத்தமாய் இல்லை என்று என்னைப் போல சில பலர் கொள்ளிடம் பக்கம் (வடக்கே) போவோம். அதாவது எனக்கு மூட் வரும்போது.


அம்மா காலமானதும் வேறு வழியே இல்லாமல் கொள்ளிடம் குளியல் பத்து நாட்களில். அப்புறம் தொடர்ச்சியாய்.


இப்போது திருமங்கை ஆழ்வார் பற்றி. ஆழ்வார்களில் எனக்கு மிகவும் பிடித்தமானவர் அவர். ஹீரோ. கடவுளுடனே சண்டைக்குப் போனவர். 'நகையைக் கழற்று' என்று மிரட்டியவர். அவர் ஸ்ரீரங்க நகரை ஒரு காலத்தில் நிர்மானித்தவர். மதில் கட்டியவர். கூலி கொடுக்க பணமின்றி ஆட்களிடம் 'பணம் வேணுமா.. இல்லாட்டி மோட்சம் வேணுமா' என்று கேட்டதாகவும் மோட்சம் என்று அவர்கள் சொல்ல பரிசலோடு கொள்ளிடத்தில் கவிழ்த்து விட்டதாகவும் சின்ன வயசில் ஒரு கதை எனக்கு சொல்லப் பட்டது. அது நிஜமா என்று தெரியாது. செய்திருக்கக் கூடியவர் என்கிற தடாலடி இமேஜ் எனக்கு அப்போது இருந்தது.


கொள்ளிடம் இப்போதும் ஸ்படிகமாய் நீர். குளிக்க பரம சுகம். நீரில் அமிழ்ந்தால் எழுந்து வர மனசே இராது. ஆனால் போகும் பாதை அத்தனை சுத்தம் இல்லை. மனிதக் கழிவுகள். செத்துப் போனவர்களின் வாரிசுகளுக்கு மொட்டை போட்டதில் குவியும் முடிக் கற்றை. (அந்த 10 நாட்களும் என் தலையிலிருந்து மழித்த முடியை தினசரி பார்த்துக் கொண்டிருந்தேன்.) எலும்புத் துகள்கள். உடைந்த சட்டிகள். சோற்று பிண்டங்கள். மனசுள் லேசாய் பீதி கிளப்பும். அல்லது அசூயை. இவை எல்லாம் தாண்டி தண்ணீருக்குள் இறங்கி விட்டால் அந்த நீர் தரும் சுகம்.


ஸ்ரீ ரெங்கனாதருக்கு திருமஞ்சனத்திற்கு (அபிஷேகம்) நீர் இங்கிருந்தும் கொண்டு போவார்கள்.


கொள்ளிடம் முழுக்க புதர் மண்டி வெள்ள காலங்களில் (!) நீர் சேகரிக்க அத்தனை ஆயத்தமாய் இல்லை. நாம் நதியைக் கெடுக்கிறோம் என்பதை மனசாட்சியுடன் ஒப்புக் கொள்ள வேண்டும்.


தெற்கே அம்மாமண்டபம் போகுமுன் திருமஞ்சனக் காவிரி என்று ஒன்று உண்டு. வாய்க்கால் போல. அங்கிருந்துதான் முன்பு அபிஷேக நீர் கொண்டு வரப்படுமாம். இப்போது அது சாக்கடை!


கொள்ளிடத்திற்கு உத்தமர்கோவில், சமயபுரம், அன்பில் கடவுளர்கள் எல்லாம் வருகிறார்கள். முழங்கால் நீரில் இறங்கி நடந்து போகும் போது பிள்ளைகள் போடும் சத்தம்.. ஆற்றின் நடுவில் மணல் திட்டில் கடைகள்.. பிரசாதங்கள்..கூடாரத்தில் உள்ளே உற்சவ மூர்த்திகள்.. விளக்கு வெளிச்சத்தில் பூலோக சொர்க்கம்!


ஒவ்வொரு வருடமும் ஏதாவது திருவிழா ஆற்றங்கரையில் நடக்கும்போது நீரின் ஸ்பரிசம் படும்போது ஸ்ரீரங்கத்தில் இருப்பதின் ஜென்ம சாபல்யம் புலனாகிறது.


என் குடியிருப்பின் பெயர் 'திருமங்கை பிளாட்ஸ்'! இதுவும் தற்செயல்தான்.


108 வைணவத் திருப்பதிகளில் அதிகம் விஸிட் செய்தவர் திருமங்கை ஆழ்வார். இரண்டு முறை போனதாகவும், இரண்டாம் முறை அவரால் முழுமையாய்ப் போக முடியவில்லை என்று ஒரு தகவல் எனக்கு சொல்லப் பட்டது.


ஸ்ரீரங்கம் பற்றி ஏதேனும் ஒரு பதிவு செய்ய ஆசை. ஸ்ரீரங்கனாதர் கிருபை இருந்தால் அது சாத்தியமாகலாம்!

4 comments:

KALYANARAMAN RAGHAVAN said...

//ஸ்ரீரங்கம் பற்றி ஏதேனும் ஒரு பதிவு செய்ய ஆசை. ஸ்ரீரங்கனாதர் கிருபை இருந்தால் அது சாத்தியமாகலாம்! //

ரங்கநாதன் அருளால் விரைவில் நிறைவேறும். நிறைய தடவை ஸ்ரீரங்கம் வந்திருக்கிறேன். ஆனால் காவிரியிலும் கொள்ளிடத்திலும் இறங்கினதில்லை. உங்கள் பதிவை படித்ததும் அடுத்த விசிட்டில் இதை நிறைவேற்றியே ஆக வேண்டும்என்று மனசு தீர்மானம் போட்டுடுச்சு. நல்ல தவல்களுடன் படிக்க சுவையான பதிவு.

ரிஷபன் said...

உங்க ஸ்பிடு சூப்பர் பாஸ்ட் கமென்ட் பார்த்து மகிழ்ச்சி ரிஷபன்

K.B.JANARTHANAN said...

மிக சின்ன வயதில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்திருக்கிறேன் ஒரு முறை. (அவ்ளோ பெரிய ஸ்வாமியைப் பார்த்து அசந்து விட்டேன். எங்கள் ஊரில் அப்படிப் பார்த்ததில்லை.) இப்போது இன்னொரு முறை வந்து திரும்பிய மாதிரி இருக்கிறது, உங்கள் பதிவைப் படிக்கையில். -- கே.பி.ஜனா

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

உள்ளூரில் தான்இருக்கிறோம். அதன் பெருமை
யாருக்குத் தெரிகிறது? உத்யோகம் என்கிற
புலி வாலைப் பிடித்துக் கொண்டு க்ஷேத்ராடன
பாவி ஆகி விட்டோம்..இல்லை..இல்லை...
உத்யோகம் நம்மை ஆக்கி விட்டது..