February 25, 2010

கனவாகி


'உன்னைப் பார்க்க ஆசைப்படுகிறேன்'

ஒற்றை வரியில் ஒரு கார்டு. எழுதிய நபரின் பெயர் கீழே 'ரகு'.

'லெட்டர் ஏதாவது?' என்ற வழக்கமான கேள்விக்குப் பதிலாக இன்று ஒரு கார்டு.

"ஏம்பா வேற எதுவும் எழுதலே?" என்றாள் ராஜி.

"இன்னும் என்ன எழுதணும்?"

"நிறைய எழுதலாம்"

"என்னன்னு சொல்லேன்"

புவனா கொண்டு வைத்த காபி ஆறிக் கொண்டிருந்தது.

"அப்பா" என்றாள் ராஜி கையைத் தொட்டு.

"சொல்லு"

"ஏன் வேற எதுவும் எழுதலே"

"அதான் கேட்டேனே.. என்ன எழுதணும்னு"

"ராஜி எப்படி இருக்கா. என்ன கிளாஸ் போறா.. எப்படிப் படிக்கறா.. இப்படி எழுதலாமே" என்றாள் பெரிய மனுஷி போல.

பெரிதாகச் சிரித்தேன்.

"புவனா. இங்கே பார். என்னமா கேள்வி கேட்கறது"

"அவளாவது கேட்க முடியறதே"

ஹாஸ்பிடல் வாசலில் பஸ் ஸ்டாப். போகும் வழியெல்லாம் ராஜியின் கேள்விகள் குறித்து புன்னகை என் உதட்டில்.

ரகு என்னைப் பார்த்ததும் பரபரப்பு காட்டினான்.

"வா.. வா.. வராம போயிருவியோன்னு நினைச்சேன்"

அருகிலிருந்த ஸ்டூலில் அமர்ந்தேன்.

சரியாக பதினைந்து நாட்கள் ஆகின்றன அவனைப் பார்த்து. முதலில் வந்த தகவல் அவனை ஹாஸ்பிடலில் சேர்க்கப் போவது குறித்து. மறுநாளே வந்து பார்த்தேன்.

இரண்டாவது தரம் வந்தது பதினைந்து நாட்களுக்கு முன்பு. இரவு பத்து மணிக்கு வாட்ச்மென் வந்து விரட்டும் வரை பேச்சு.

"போங்க ஸார். அய்யா பார்த்தா சத்தம் போடுவார்"

என்னை வாசல் வரை வந்து வழியனுப்பினான்.இதோ மறுபடி. அதுவும் ரகு கார்டு போட்டு.

"ஸாரிடா. எழுதக் கூடாதுன்னு நினைச்சேன்"

"இப்ப எப்படி இருக்கே"

"நிமிஷத்தை எண்ணிண்டு"பளிச்சென்ற பதில்.

ரகுவிடம் துளிக்கூட வருத்தத்தின் சாயல் இல்லை.

"உன் மிஸஸைக் காணோம்?" என்றேன் பார்வையைச் சுழற்றி.

"பாவம். அவளுக்குப் போரடிச்சுப் போச்சு. இப்ப எனக்கும் விடுதலை. அவங்களுக்கும் விடுதலை கிடைக்கும்.. நான் எதிர்பார்க்கறது நடந்துட்டா"

"உளராதே"

ரகுவை நான் பார்ப்பதைத் தவிர்த்ததற்குக் காரணமே அவனைப் பற்றி டாக்டர் சொன்ன விவரம்தான்.

'பிழைக்கறது கஷ்டம். நாளோ.. மாசமோ'

என்னால் கண்ணீரை மறைக்க இயலாது. அதுவும் ரகுவின் முன்பு.

"டேய்.. பிஆர்ஜியைப் பார்த்தேன். நம்ம மேத்ஸ் ஸார். பக்கத்து வார்டுல. என்னைப் பார்த்ததும் அடையாளம் புரிஞ்சுண்டு செளக்கியமான்னார். என்ன செளக்கியம்? பதிலுக்கு நான் அவரைக் கேட்டேன். எழுபத்தஞ்சு வயசுடா.. இனிமே அசட்டுத்தனமா கேட்காதே. கணக்குப் போட்டு பார்த்தா.. இதுவே ஜாஸ்தின்னார்"

ரகுவின் எலும்புக்கூடு குலுங்கியது. இத்தனை வேகமாய் உடல் க்ஷீணிக்குமா? கடவுளே.. அப்படி ஒன்றும் ஆணழகன் இல்லைதான். இருந்தாலும் விலா எலும்புகளை எண்ணி விடலாம் போல.

"உனக்கு ஞாபகம் இருக்கா. அந்த மனுஷரை எப்படிப் படுத்தியிருப்போம்? மூச்சு விடாம ஸ்டெப் பை ஸ்டெப் ஒரு பெரிய கணக்கைப் போட்டு முடிச்சதும் முதல் வரில சந்தேகம் கேட்போமே"

சாத்துக்குடி வாங்கிப் போயிருந்தேன். உரித்த சுளைகளை கொடுத்தபடி அவன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

"ராஜி உன் கார்டைப் பார்த்து.. ஏன் ஒரு வரிதான் எழுதியிருக்கார்னு கேட்டா"

"அடடா.. அவளைப் பத்தி எழுதியிருக்கலாம்" என்றான் உடனே.

"அவளை அழைச்சுண்டு வரலாம்னு நினைச்சேன். அப்புறம் ஆபீஸ்லேர்ந்து நேரா இங்க வர்றது ஈசின்னு.."

"வேணாம்டா. அவ எதுக்கு இங்கே. பயந்துப்பா"

"போன வருஷம் ஒரு கல்யாணத்துல சந்த்ரிகாவைப் பார்த்தேன்" என்றேன்.

இப்போது கூட அந்தப் பெயரைச் சொல்லும்போது இலேசாய்க் குரல் தடுமாறி ஒருவித உணர்வு அப்பிக் கொண்டது.

"நீதான் கடைசி வரைக்கும் உன் லவ்வை அவகிட்டே சொல்லவே இல்லியே"

"பயம்"

"என்ன பயமோ. என்னைப் பாரு. பார்வதிகிட்டே அசடு வழிஞ்சிட்டுப் போய் உளறிக் கொட்டி.. அவ பாட்டி என்னை விளக்குமாத்தால அடிக்க வந்தாளே. ஞாபகம் இருக்கா"

அன்று தெருவே சிரித்தது. இவன் ஓட.. ஓட.. பாட்டி முடியாத நிலையில் துரத்த.. "டேய். நில்லுடா. என்னால ஓட முடியலை" என்றதுதான் ஹைலைட்!

"ஏண்டா துரத்தறா?" என்று கேட்டதும் இவன் சமாளித்தது அதை விடவும் டாப்!

"விளக்குமாத்தைப் போய் காசு கொடுத்து வாங்கினியேன்னு திட்டறா. வீடு முழுக்க தென்னை ஓலை வச்சுண்டு"

பாட்டியின் சிக்கனம் எல்லோருக்கும் தெரியும் என்பதால் சிரிப்புடன் பாதி கூட்டம் கலைந்து விட்டது.

இத்தனைக்கும் பார்வதிக்கு முன்பல் இரண்டும் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.

சிரித்தவாறே சொன்னேன்.

"நல்ல வேளை. பாட்டி உன்னைக் காப்பாத்தினா"

"சந்த்ரிகாகூட இப்பவாவது பேசினியா"

"ம்.. ரெண்டு பொண்ணு. ஜூனியர் சந்த்ரிகா அப்படியே. அவ மாறிட்டா. பழைய சந்த்ரிகா இல்லை" என்றேன்.

"நீயும்தான். நானும்தான். மாறாம யார் இருக்கா? அந்த சமயம் அவ உன் கண்ணுக்கு அழகாத் தெரிஞ்சாள்ன்னா அது காதல் விதி!"

மணி ஏழரை ஆகிவிட்டது. நேரம் போனதே தெரியவில்லை. இனி இரண்டு பஸ் பிடித்து வீடு போக வேண்டும். அதற்கே இரவு ஒன்பதரை மணி ஆகிவிடும்.

"ராஜிகிட்டே சொல்லு. அடுத்த லெட்டர்ல.. அப்படி ஒண்ணு எழுதினா.. அவ பேரையும் எழுதறேன்னு"

"நீ பாம்பேல இருந்தப்ப.. வாரம் ஒரு லெட்டர் போடுவியே.. எல்லாம் பத்திரமா வச்சிருக்கேன். நீ படிச்ச புக்ஸ்.. பார்த்த விஷயம்னு"

"அந்தக் குப்பையை ஏன் சேர்த்து வச்சிருக்கே"

"உன் கையெழுத்து ரொம்ப அழகு. இந்தக் கார்டுல கூட நீட்டா அந்த ஒரு லைன்"

"டேய்.. நமக்கு நாப்பத்தஞ்சு வயசுடா"

"சின்ன வயசுதாண்டா. எழுபது.. எண்பதைக் கம்பேர் பண்ணா.. நம்ம பிஆர்ஜி வயசெல்லாம் பார்த்தா.."

"ஆனா.. அதுவே எனக்கு அதிகம்னு தீர்மானம் பண்ணியாச்சே"

"எங்கே.. உன் மிஸஸைக் காணோம்"

பேச்சை மாற்றினேன்.

"எம் பையன் கூட இங்கே வரவேணாம்னு சொல்லிட்டேன். அப்பான்னா வேற ஞாபகம் வரட்டும். ஹாஸ்பிடல் பெட்ல எலும்புக்கூடு மாதிரி இமேஜ் வர வேணாம்னு"

"ரகு.. பிளீஸ்டா. உனக்கு எதுவும் ஆகாது"

என் குரல் கட்டுப்பாடு மீறி உடைந்தது.

"ஹாஸ்பிடல் விட்டு வெளியே வந்ததும் நல்ல படமா.. பழசு.. சிவாஜி நடிச்சது.. போகணும்டா. ராக்சில.. மாட்னி"

"மாட்னி.. ஈவ்னிங்னு அப்ப சினிமா பைத்தியாமா சுத்தினோம்"

"காலம் ஒரு நாள் மாறும்.. நம் கவலைகள் யாவும் தீரும்"

மெலிதாய் பாட்டு ஹம்மிங்கில்.

"கண்ணதாசனைப் பத்தி மணிக்கணக்காய் பேசுவோமே"

"நம்ம வயசுக்காரங்களுக்கு கண்ணதாசன். இப்ப ராஜிக்கு எனக்கே புரியாத புது சினிமா பாட்டு. அட்சரம் பிசகாம பாடறா கூடவே"

"ராஜியைப் பார்க்கணும் போல இருக்கு" என்றான் கண்களை மூடி.

"சரிடா. நீ கிளம்பு. மணி ஆச்சு"

"நீ தனியா இருக்கியே"

"தனியே வந்து தனியே போகப் போற உயிர்தானே"

மணி எட்டரை. இனிமேல் வாட்ச்மென் வந்துவிடுவார்.

"நாளைக்கு வரியா.. முடிஞ்சா"

அவனைப் பார்க்கவில்லை. என் கண்களின் பொய்யை அவன் படித்து விடக் கூடும்.

"வரேண்டா" என்றேன் பொதுவாய்.

"ஒரே ஒரு நிமிஷம்.. இரேன்"

நின்றேன். அவனைப் பார்த்தேன். கூடாது. என் விரோதிக்கும் இந்த மாதிரி வியாதி வரக் கூடாது.

"போயிட்டு வா"

ராஜி விழித்திருந்தாள். மணி பதினொன்றைத் தொட்டு விட்டது.

"பார்த்தியா. உன் ஃப்ரெண்டை"

"அடுத்த லெட்டர்ல உனக்கும் எழுதுவான்"

"பாவம்தானேப்பா" என்றாள் கரிசனத்துடன்.

என்னை மீறி அழுகை பீறிட்டது. பேசாமல் தலையசைத்தேன்.

"ஸ்வாமிகிட்டே வேண்டிக்கட்டுமா.. அவருக்கு நல்லது பண்ண"

அவனுக்கு நல்லது எது?

மறுநாள் விடியலில் ஃபோன் மணி ஒலித்தது.

ரிசீவரை எடுத்தேன்.

மிஸஸ் ரகுவின் அழுகை கேட்டது.


18 comments:

Chitra said...

நெகிழ வைத்த கதை......!

"நீயும்தான். நானும்தான். மாறாம யார் இருக்கா? அந்த சமயம் அவ உன் கண்ணுக்கு அழகாத் தெரிஞ்சாள்ன்னா அது காதல் விதி!"

............ :-)

V.A.S.SANGAR said...

சார் நான் வந்துட்டன் அதோட வாசித்தும் விட்டேன்
வலிமை போலவே அசதிட்டிங்க

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

படிக்கும்போதே மனம் கனத்து...

KALYANARAMAN RAGHAVAN said...

//அவனைப் பார்க்கவில்லை. என் கண்களின் பொய்யை அவன் படித்து விடக் கூடும்.//

அருமை! அருமை! வார்த்தை பிரயோகங்களும் கதையை கொண்டு போன விதமும்.

ரேகா ராகவன்.

என் நடை பாதையில்(ராம்) said...

ஆஹா!!! எதையும் சொல்லாம எல்லாம் சொல்லும் சூப்பரான ஒரு கதை....

thenammailakshmanan said...

//"எம் பையன் கூட இங்கே வரவேணாம்னு சொல்லிட்டேன். அப்பான்னா வேற ஞாபகம் வரட்டும். ஹாஸ்பிடல் பெட்ல எலும்புக்கூடு மாதிரி இமேஜ் வர வேணாம்னு"//

கலங்கடித்த வரிகள் ரிஷபன்

ஜெட்லி said...

ஒரே மூச்சில் படித்தேன்....
பல வரிகள் சூப்பர்....

VAI. GOPALAKRISHNAN said...

ஏற்கனவே படித்த கதை ஆயினும் மீண்டும் படிக்கும் பொழுது புதியதொரு கதையைப் படிப்பது போன்றதொரு எண்ணம்.
முடிவு தான் ......... யாருக்கு எப்போது எங்கே எப்படி எனத்தெரியாத மர்மமாக உள்ளது.நாம் என்ன செய்வது!

க.இராமசாமி said...

கண்ல கண்ணீர் வர வெச்சுட்டீங்க. ரொம்ப உருக்கமான கதை.

செந்தில் நாதன் said...

அருமையான எழுத்து நடை...அழுத்தமான கரு....


வாழ்த்துகள்

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

மிகவும் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கீங்க அருமை . வாழ்த்துக்கள் !

K.B.JANARTHANAN said...

Touching!

ஜீவன்சிவம் said...

கைகொடுங்க சார். கதை சூப்பர்

திவ்யாஹரி said...

//என் கண்களின் பொய்யை அவன் படித்து விடக் கூடும்.
"வரேண்டா" என்றேன் பொதுவாய்.//

ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க ரிஷபன்.. சிலிர்க்க வைக்கும் உங்க கதைகளுக்கு பின்னூட்டமிட வார்த்தைகள் இல்லை..

padma said...

மனதை தொடற மாறி இருக்கு எழுத்துக்கள் glad i came across ur blog .

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

அவனுக்கு எது நல்லது? அற்புதமான கேள்வி. அசத்தி விட்டீர்கள் ரிஷபன்.

கோவை2தில்லி said...

மனதை தொட்ட கதை.

ezhil said...

அவனுக்கு நல்லது எது?

அந்த வரிகளில் வலி தெரிந்தது. உணர்ச்சிகரமான கதை. சாகும் பொழுது தெரிந்தால் வாழும் நாள் நரகம் -பிரபல வசனம் தான் ஆனால் அது உடனிருந்து பார்ப்பவருக்குமானதுதான்....எனும் போது வலி பரவிக் கிடக்கிறது கதை முழுதுமே