February 02, 2010

எட்டுத்திக்கும்அவர் முகத்தைப் பார்க்கவே எனக்குக் கூச்சமாய் இருந்தது.


மனிதர் இத்தோடு நாலாவது தடவையாக வருகிறார் கொஞ்சங்கூட அலுப்பில்லாமல்.


"ஒங்க போன் நெம்பர் கொடுத்துட்டு போங்க ஸார்.. நான் தகவல் சொல்றேன்.. பாவம்.. எத்தனை தடவை வருவீங்க"


துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டார்.


"பரவாயில்லை.."


சற்று தயங்கி விட்டு குடிக்க தண்ணீர் கேட்டார். என் இரண்டாவது பெண்ணிடம் ஜாடை காட்டினேன். உள்ளே போய் சொம்பில் நீருடன் வந்தாள்.


"என்னம்மா இது.. டம்ளர் இல்லாம எப்படி குடிப்பாரு"


"பரவாயில்ல.. எனக்கு அவ்வளவு தண்ணியும் வேணும்"


மடமடவென்று குடித்து விட்டு கீழே வைத்தார். சட்டைப் பையிலிருந்து ஒரு சாக்லேட்டை எடுத்து என் பெண்ணிடம் நீட்டினார்.


"லோ ஷுகர்.. எப்பவும் கையில வச்சிருப்பேன்"


கேட்காமலே காரணமும் சொன்னார்.


"தேங்க்ஸ்"


முனகிவிட்டு போனாள்.


"ரூம் பூட்டியே வச்சிருக்கா"


"ஆமா.. என் பிரச்னை என்னன்னா.. அவன் திரும்பி வரமாட்டான்னு தெரிஞ்சா.. வேற யாரையாச்சும் குடி வச்சிருவேன்.போயி விளையாட்டு போல ரெண்டு வாரத்துக்கு மேல ஆச்சு. ஒரு தகவலும் இல்ல..பூட்டை உடைக்கவும் யோசனையா இருக்கு"


என்னையும் மீறி என் குரலில் லேசான கோபம் தெரிந்தது.


"ஆபீஸ் வேலையா போயிருக்காரா"


"தெரியல ஸார்.. நான் அவ்வளவா அவங்கூட பேசறது இல்ல.. வாடகை கூட என் மிசஸ் கையில கொடுத்துருவான்.. சமயத்துல என் பொண்ணுக்கு ஏதாச்சும் திங்கறதுக்கு வாங்கி வந்து கொடுப்பான்..எப்ப போறான்.. எப்ப வரான்னு தெரியாது.. ஆனா அவனால ஒரு பிரச்னையும் இல்லங்கிறதால நானும் கண்டுக்கல"


வந்தவருக்கு எப்படியும் வயது அறுபதுக்கு மேலிருக்கும். ஓய்வு பெற்றவராய் இருக்கலாம்.


"ஆமா.. நீங்க எதுக்கு தேடறீங்க"


சொல்லலாமா, வேண்டாமா என்கிற போராட்டம் கண்ணில் தெரிந்தது.


"எனக்கு மூணு பொண்ணுங்க. மூத்தத கட்டிக் கொடுத்தாச்சி.. இப்ப ரெண்டாவதுக்கு வரன் தேடறேன்.. மணமகன் தேவைன்னு விளம்பரம் கொடுத்ததைப் பார்த்து இந்தப் பையன் லெட்டர் போட்டாரு..நாங்களும் பதில் போட்டோம்.. எப்ப பொண்ணு பார்க்க வரீங்கன்னு.. ஒரு மாசமாச்சு. பதிலே இல்லை. அதான்.. நேர்ல பார்த்து (வி)சாரிச்சுட்டு போலாம்னு வந்தேன்"


நியாயம்தான்.


இந்த முறை என் குரலில் கொஞ்சம் அக்கறை இருந்தது.


"கட்டாயம் அவர் வந்த உடனே நீங்க வந்திட்டு போனதா சொல்றேன்.."


அவர் எழுந்து போனது அரை மனதாய்த்தான் இருந்தது. விட்டால் அவன் வரும்வரை இங்கேயே உட்கார்ந்திருப்பார் போல.


அவர் போனதும் சுகுணா சொன்னாள்.


"இவ்வளவு நாள் சொல்லாம போனது இல்லீங்க.. அந்தப் பையன் ஆபீஸ் நெம்பர் தெரிஞ்சா விசாரிக்கலாமே.."


"தெரியாதே.."


அன்று மாலையே அவன் ஆபீஸிலிருந்து ஆள் வந்து விட்டது.


"சரவணன் இங்கேதானே இருக்காரு"


"ஆமா. நீங்க?"


"கம்பெனிலேர்ந்து வரோம். ரொம்ப நாளா ஆபீஸே வரல. என்னன்னு பார்த்துட்டு வரச் சொன்னாங்க.."


"அப்ப.. அவரு ஆபீஸ் வேலையா போவலியா"


"சரவணன் வீட்டுல இல்லியா"


எங்கள் குழப்பம் அதிகரித்து விட்டது.


அடுத்த பத்து நாட்களும் ஓடின. சரவணனைத் தான் காணோம். 'காணவில்லை' என்று விளம்பரம் கொடுக்கலாமா.. அதை நான் கொடுப்பது சரிதானா. பக்கத்து வீட்டுக்காரரிடம் என் கவலைப் பகிர்ந்தபோது அவர் மேலும் பீதியைக் கிளப்பினார்.


"போலீஸ்ல சொல்லிருங்க ஸார்.. குடி வச்சிருந்த ஆளைக் காணோம்னா அப்புறம் வேற ஏதாச்சும் பிரச்னை ஆயிரப் போவுது"


"கொஞ்சம் நீங்களும் கூட வரீங்களா.."


உள்ளிருந்து ஏதோ குரல் கேட்டது.


"வரலாம்.. ஆனா நான் அர்ஜெண்டா ஒருத்தர பார்க்கப் போவணும்.."


"சரி ஸார்"


சுகுணாவும் அதை ஆமோதித்தாள்.


"என்ன பயம்.. தைரியமா போங்க.. போலிஸ்ல சொல்றதுதான் சரின்னு எனக்குப் படுது"


போனேன். உட்காரச் சொன்னார்கள். முதலில் ஒருவர் என்ன விஷயம் என்று கேட்டார். மறுபடி உட்காரச் சொல்லி பத்து நிமிடங்கழித்து இன்னொருவரிடம் அதே கதை. மீண்டும் அமர்வு.


கடைசியாய் இன்ஸ்பெக்டர்.


"ம்ம்.."


யோசித்தார்.


"இப்ப சொன்னதை எழுதிக் கொடுங்க"


நல்ல வேளையாகப் பேப்பரும் பேனாவும் எடுத்துக் கொண்டு போயிருந்தேன். சுகுணாவின் ஆலோசனை!


"என்ன தேதிலேர்ந்துன்னு சொன்னீங்க"


சொன்னேன்.


"ஹாஸ்பிடல்லாம் செக் பண்ணீங்களா"


"எ..துக்கு"


"அடையாளம் தெரியாத பாடி.."


"வ.. ந்து.. நான் எப்படி.. வீட்டு ஓனர்.. அவர் குடி இருக்கறவர்.."


"சரி.. சரி. போங்க.. பார்க்கலாம்"


இரண்டு நாட்கள் கழித்து ஒரு போலீஸ்காரர் வந்தார்.


"ஜி எச் வரைக்கும் போயிட்டு வரலாம்.. வாங்க ஸார்"


ஆட்டோவில் போனோம். வழியில் டீக்கடை.


மார்ச்சுவரியில் குப்பென்று குளிர் காற்று முகத்தில் அறைந்தது. அடி வயிற்றைப் புரட்டிக் கொண்டு வந்தது.


"இவரு சொந்தக்காரவுங்களா"


"வூட்டுல குடி இருக்கறவரு"


அவர்கள் சம்பாஷணை எனக்கு ரசிக்கவில்லை. சரவணனாக இருக்கப் போவதில்லை. அதற்குள் இவர்கள் அவன் போனதாகவே முடிவு எடுத்து..


"ரோட்டுல அடிபட்டு கிடந்தாரு.. யாரும் கேட்டு வரல.. பின் தலையில அடி பட்டு.. ஸ்பாட்லயே உயிர் போயிருச்சு.. ஆமா.. என்ன வயசிருக்கும்.. உங்க சொந்தக்காரருக்கு"


"சொந்தமில்லப்பா"


"சரி.. ஏதோ ஒண்ணு.. வயசு என்ன"


"முப்பதுக்குள்ள"


"முப்பதா.. இது பெருசாச்சே.."


ஹப்பாடா. அது சரவணன் இல்லை. எனக்குள் நிம்மதி பெருமூச்சு.


"அப்ப போயிரலாமா"


போலீஸ்காரர் யோசித்தார்.


"அப்படிங்கிறீங்க"


அதே நிமிடம் மார்ச்சுவரி வாசலில் ஏதோ சத்தம் கேட்டது.


"யாரு"


"நாதான் ஸார்.. வீட்டுல சொன்னாங்க.. உடனே ஓடியாந்தேன்.. அம்மாவுக்கு உடம்பு சீரியசாப் போச்சு.. ஊருக்குப் போன நேரத்துல.. என் தப்புதான் தகவல் சொல்லாம விட்டது.. அப்புறம் ஆபிஸுக்கும் சொல்லிட்டு.. இப்ப வீட்டுக்கு வந்தேன்.."


சரவணனுக்கு மூச்சிரைத்தது.


"டென்ஷன் பண்ணிட்டப்பா"


"ஸாரி ஸார்"


"அம்மா எப்படி இருக்காங்க"


"வீட்டுக்கு கூட்டி வந்தாச்சு ஸார்.. ஒரு லட்சம் போல போயிருச்சு"


போலிஸ்காரர் அதட்டினார்.


"கதை பேசற எடமா இது.. "


"அப்ப பாடிய பார்க்கலியா"


மார்ச்சுவரி வாட்ச்மென் கேட்டார்.


"என்ன பாடி.."


"நீ காணோம்னதும் போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் கொடுத்து.. "


தடுமாறினேன் எப்படிச் சொல்வதென்று.


"ஸாரி ஸார்" என்றான் மீண்டும்.


"முகத்தை மூடிருப்பா" என்றார் போலீஸ்காரர்.


தற்செயலாகத் திரும்பினேன்.


"கொஞ்சம் இரு.."


அங்கே விறைத்துப் போயிருந்த உடல்.. சரவணனைப் பார்க்க வந்த அதே பெரியவர்!16 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:(
காட்சிகள் அப்படியே ஓடுது கண் முன்னால்..

KALYANARAMAN RAGHAVAN said...

எதிர்பாராத முடிவு. ' நச் ' கதை.

ரேகா ராகவன்.

அண்ணாமலையான் said...

எதிர் பாரா முடிவு

Thekkikattan|தெகா said...

excellent twist at the end... thanks.

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

பார்த்த ஞாபகம் இல்லையோ? (கல்கியில்)

வசந்தமுல்லை said...

shocking end in the story!!!!!!!!!!!

thenammailakshmanan said...

கொஞ்சம் அதிர்ச்சியான முடிவு ரிஷபன்

கிச்சான் said...

மனதை இருள் சூழும் .....கடைசி வரிகள்!

வி. நா. வெங்கடராமன். said...

நல்ல கதை. எதிர்பாராத முடிவு.

வெங்கட் நாகராஜ்
புது தில்லி.

வெள்ளிநிலா said...

dear rishban, did you read my blog, already send postal adrss or...?

Chitra said...

முடிவு???? மனதை தொடும் கதை.

திவ்யாஹரி said...

எதிர்பாராத முடிவு ரிஷபன்.. அதிர்ச்சியா இருக்கு..

அக்பர் said...

எதிர்பாராத‌ முடிவு. கதையாக மட்டுமே இருக்கவேண்டும்.

K.B.JANARTHANAN said...

மனதைத் தொடும் நச் முடிவு, அதை நோக்கி மளமளவென்று விரையும் சம்பவங்கள், மையமாய் ஒரு நெருங்கிய பிரசினை என ஓர் நல்ல சிறுகதையின் லட்சணங்கள் அனைத்தும் கொண்ட கதை.

VAI. GOPALAKRISHNAN said...

KALKI ENDRA VAANATHTHIL ORU THURUVA NATCHATHRAMAAKA OLIRNTHA KATHAI. ENDRUM MARAKKA MUTIYAATHA NALLATHORU KATHAI. MEENDUM PATITHTHATHIL MEENDUM ORU THIRUPTHI KITAITHTHATHU.

கமலேஷ் said...

பக்காவான கதை... நேர்த்தியான கதையோட்டம்,,சற்றும் எதிர்பார்க்காத ஒரு திடுக் முடிவு...இந்த ஒரு பதிவு போதும் உங்கள அடையாளம் காட்டுவதற்கு.....பின்னி எடுத்துருகிங்க....வாழ்த்துக்கள்....தொடரட்டும் உங்களின் எழுத்துப் பயணம்....