March 06, 2010

மழை வரும்


பங்களுருக்குப் போகிறேன் என்றதும் அனு வீட்டிற்குப் போகலாம் என்று உடனே தோன்றியது.

"நீயும் வரியா" என்றார்.

அவர் ஆபீஸ் வேலைதான். ஒரு வாரமாம். போக வர, ஹோட்டலில் தங்க என்று சகலமும் ஆபீஸ் செலவு.

"அனுவைப் பார்க்கணும். ரொம்ப நாளா வரச் சொல்றா"

"யாரு கவிதாயினியா" என்றார் உடனே.

என் சிநேகிதிகளில் அனு ஒருத்திதான் கவிதை எழுதுகிற, ரசிக்கிறவள். கடிதங்களின் முடிவில் ஒரு கவிதை நிச்சயம்.

போனமாதக் கடிதங்கூட 'மழை'க் கவிதையுடன்.

தகிக்கும் வெய்யிலில்

மழை வருமா என

ஒவ்வொரு நாளும் ஏக்கம்

மழை வரும் நாளில்

அதன் முகத்தில் அறைந்து

பால்கனிக் கதவை

மூடும் மனசு. “

எட்டிப் பார்த்த மழையின் முகத்தில் சுள்ளென்று கதவு அறைந்த காட்சி என்னுள் விரிந்து உடம்பு ஒரு தரம் தூக்கிப் போட்டது.

இவர் ஆபிஸிலிருந்து வந்ததும் லெட்டரைக் காட்டினேன்.

"எப்படி எழுதியிருக்கா பாருங்க"

"ம்..ம்"

தலையை மட்டும் ஆட்டினார் அன்று.

பங்களூருக்கு நானும் உண்டு என்று நிச்சயமானது. குழந்தையா, குட்டியா. அதன் படிப்பு பாழ் என்று பயணங்களை ஒத்தி வைக்க. ஆறு வருஷமாய் வெள்ளி நாகருக்குப் பால் அபிஷேகித்து ருசித்த பலன் கனவில் வருகிற பாம்பு மட்டும். வயிறு திறக்காமல் அதன் அழுத்தத்தில் ஜென்மாவின் ரகசியம் மூடியிருந்தது.

பிளாட் நம்பர் சரிதான். இரண்டு மாடி லிப்டில் போய் கதவைத் தட்டினால் திறந்தது வேறொருத்தி. அனுவை எதிர்பார்த்து சிணுங்கிய மனதை முகம் வெளிப்படுத்தி விட்டது.

"அனு" என்றேன் படபடப்பாய்.

"நீங்க"

"அவ ஃப்ரெண்ட். மதுரைலேர்ந்து வரேன்"

"தேர்ட் ஃப்ளோர்ல சி செவன்"

"இந்த அட்ரஸ்தானே.."

என் கேள்வி பாதியில் தடைப்பட்டது, என் முகத்தில் அறைந்த கதவால். என் அருகில் நின்றவர் வேறு புறம் திரும்பிப் பார்த்தார்.

'நல்ல வரவேற்பு' என்ற கேலி பார்க்காமலே புரிந்தது.

"வீடு மாறிட்டாளோ.. சொல்லவே இல்லியே" என்று முனகினேன்.

"என்ன பண்ணலாம்"

"மேலே போவோம். இவ்வளவு தூரம் வந்ததே அவளைப் பார்க்கத்தானே" என்று முன்னால் படியேறினேன்.

சி ஸெவன் கதவைத் தட்டினேன். கதவு திறந்து இம்முறை வயசான பெண்மணி.

"ஏனு பேக்கு"

"அனு இருக்காளா"

"நீங்க"

"அவ ஃப்ரெண்ட் நளினி. மதுரைலேர்ந்து வரேன்"

"உள்ளே வாங்க" என்றார் அந்தப் பெண்மணி.

ஹாலில் அமர்ந்தோம்.

"அனு. இங்கே பார்"

இன்னொரு அறையிலிருந்து அனு வந்தாள்.

"ஏய்.. என்ன சர்ப்ரைஸ்"

எனக்குள் உற்சாகம் பீறிட்டது. எழுந்து அவளருகில் போனேன்.

"நில்லு.. நில்லு" கைகாட்டி நிறுத்தினாள்.

"என்ன அனு " என்றேன் திகைப்புடன்.

"அவுட் ஆஃப் டோர்ஸ்"

எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. எங்கள் வீட்டில் அதையெல்லாம் பார்ப்பதில்லை. தயங்கினேன்.

"நீ எப்ப அட்ரஸ் மாறினே" என்றேன்.

"யாரு சொன்னா.. அதே அட்ரஸ்தான்"

"அப்ப.. ஏன் இங்கே இருக்கே" என்றேன் குழப்பமாய்.

"முதல்ல உட்கார். எவ்வளவு நாளாச்சு உன்னைப் பார்த்து. நிறையப் பேசணும். எப்ப வந்தே.. எங்கே தங்கியிருக்கே.. எத்தனை நாள் இருப்பே.. ச்சு.. ஸாரை மறந்துட்டேனே.. ஹலோ.. ஹெள ஆர் யூ.." என்றாள் என் கணவர் பக்கம் திரும்பி.

அவர் புன்னகைத்தார். இதற்குள் அந்தப் பெண்மணி காப்பியுடன் வந்து விட்டார்.

"இவங்க தனலட்சுமி. இங்கே என் சிநேகிதி" என்றாள் அனு.

"நீங்க பேசுங்க. நான் ஏதாச்சும் டிபன் பண்றேன்" என்றார் தனலட்சுமி.

"அதெல்லாம் வேணாம்"

" ஏய்.. நீ சும்மா இரு. மாமி கையால ரவா உப்புமா சாப்பிட்டு பாரு. அப்புறம் நகரவே மாட்டே"

அவர் சிரித்து விட்டு சமையலறைப் பக்கம் போனார். என் கணவர் ஆங்கில தினசரியை எடுத்துப் பிரிக்க நான் அனுவின் அருகில் சற்று தள்ளி அமர்ந்தேன்.

"சொல்லு.. எப்படியிருக்கே" என்றாள்.

"ஏன்.. இங்கே இருக்கே"

"மாசத்துல மூணு நாள் இங்கே"

எனக்குப் புரியவில்லை.

"அந்த நாள்ல நான் சமையலறைப் பக்கம் வரக்கூடாது. ஆனா வீடு பெருக்கலாம். துணி துவைக்கலாம். இப்பத்தான் வாஷிங் மெஷின் இருக்கே. என்னோட சர்வீஸ் தேவையில்லே. ஸோ நானும் தேவையில்லே"

"என்னடி இது.. அதுக்காக.."

"இவங்க.. இவங்க ஹஸ்பண்ட் மட்டும்தான். இங்கே வா.. மூணு நாளும் இருன்னு சொல்லிட்டாங்க. சாப்பாடு கூட இவங்களே போடறாங்க. அந்த வேலையும் மிச்சம்னு எங்க வீட்டுல விட்டுட்டாங்க."

எனக்கு இன்னமும் புரியவில்லை. அனு என் குழப்பம் பார்த்துச் சிரித்தாள். "என்னோட ஓர்ப்படி அதான் என் கணவரோட அண்ணன் மனைவி. அவ கண்டிஷன். எனக்கும் சேர்த்து வேலை செய்ய மாட்டாளாம்"

"ஏன் உன் மாமியார்"

"அவங்க இப்ப பெட் ரிடன். உடம்பு முடியலே"

"என்னடி.. இது உங்க வீட்டுக்காரர் ஒண்ணும் சொல்லலியா"

"என் ஓர்ப்படி பத்து வருஷம் சீனியர். அவ பேச்சுக்கு மறு பேச்சில்லை எங்க வீட்டுல"

"ஏன் அவளுக்கு இந்த கண்டிஷன் கிடையாதா"

"அவ இதே ஊர்தான். அவ கல்யாணமாகி வந்த புதுசுல அந்த நாட்கள்ல அவ வீட்டுல கொண்டு போய் விட்டுருவாங்களாம்"

எனக்கு மனசு ஆறவில்லை.

"என்னடி.. இந்த கம்ப்யூட்டர் டேய்ஸ்ல இப்படி ஒரு அபத்தமா"

"ஸ்டாப்.. ஸ்டாப். கம்ப்யூட்டர் வந்தா பழக்கம் மாறணுமா என்ன. விடேன். நானே இதை பாஸிட்டிவா எடுத்துகிட்டேன். என் பிறந்த வீட்டுக்குப் போய் வர முடியாது. அந்த பிரச்னையும் இந்த மாமியால தீர்ந்தது. தாராளமா இங்கே வந்து தங்கிக்கோன்னு ரெண்டு பேரும் பர்மிஷன் கொடுத்துட்டாங்க. அசப்புல அவங்க பொண்ணு ஜாடையாம் நான். ஸ்டேட்ஸ்ல இருக்கா இப்ப. ஃபோன் பண்ணா, என்னோடயும் பேசறா. எங்க அம்மா அப்பா இப்பல்லாம் லோன்லியா ஃபீல் பண்றதில்லே உங்களால, ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.. அப்படீன்னு" எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. கி.பி. இரண்டாயிரத்தில் இப்படி ஒரு பழக்கம். பெண்ணுக்குப் பெண்ணே தொந்திரவாய்.

"ஏய்.. நீ வேதனைப்படாதே. எனக்கு எந்த பிரச்னையும் இல்லே. என் ஓர்ப்படியால மாசத்துல மூணு நாள் வித்தியாசமான சூழல்.. மனுஷங்க.. அனுபவம் கிடைக்கிறது. ஐயாம் ஹேப்பி"

உப்புமா மணத்தது.

"எம்டிஆரே அசந்து போவாங்க. இந்த ரெஸிபி படு சீக்ரெட். யாருக்கும் சொல்லித் தரமாட்டாங்க. " என்றாள் அனு.

தனலட்சுமி அவளைப் பார்த்ததில் நிஜமான பாசம் பார்வையில். ரவா உப்புமாவே பிடிக்காத என் கணவரின் தட்டு உடனே காலி. அவர் கண்களில் மின்னியது பாராட்டு.

"தட்டை வச்சிருங்க. சர்வண்ட் மெயிட் வருவாங்க"

பேசிக் கொண்டிருந்தோம். விடை பெற்று வெளியே வந்தபோது திடீரென மழை தூறிக் கொண்டிருந்தது. சாரல் விழுகிற பக்கங்களில் ஜன்னல்கள் அடைத்திருந்தன.

ஆட்டோவில் ஏறும்போது மழைக்கு எப்படி வலிக்கும் என்று தோன்றியது என்னுள்.


(எப்போதோ எழுதிய கதை.. இப்பவும் இதற்கு அர்த்தம் இருக்கிறதா?!)

ராடானின் கிரியேடிவ் கார்னரில் SMART STORIES பகுதியில் இந்தக் கதை தேர்வு.

17 comments:

ஸ்ரீராம். said...

அருமை சார் அருமை. மழைக்கான கவிதையும் அருமை கறுப்பு கொடி போல் குடை பிடிக்கிறோம் என்று எல்லோரும் சொல்வார்கள்...இது யதார்த்தம்.

என் நடை பாதையில்(ராம்) said...

ரொம்பவே பிடிச்சுது ரிஷபன்....!

சாந்தி மாரியப்பன் said...

கதையும்,மழைக்கவிதையும் அருமை.
அனுவின் பாஸிட்டிவ் அப்ரோச் வரவேற்கத்தக்கது.

Rekha raghavan said...

படித்ததில் பிடித்தது என்று சொல்வோமில்லே அதில் இது மிகவும் பிடித்தது.

ரேகா ராகவன்.

பூங்குழலி said...

மெல்ல கவிதை போல் வழியும் நடை ...அழகாக இருந்தது

Madumitha said...

ம்னசின் வலி
போன்றதுதானோ
மழையின் வலியும்.

Chitra said...

ஆட்டோவில் ஏறும்போது மழைக்கு எப்படி வலிக்கும் என்று தோன்றியது என்னுள்.

........என்றோ எழுதிய கதையாய் இருந்தாலும், இன்னும் பல அர்த்தங்கள் பொதிந்து உள்ள அருமையான கதை. பாராட்டுக்கள்.

எல் கே said...

arumayana kathai

Unknown said...

எல்லோரும் சொல்லிட்டாங்க அதேபோல் நானும் புடிச்சிருக்கு

Thenammai Lakshmanan said...

//வயிறு திறக்காமல் அதன் அழுத்தத்தில் ஜென்மாவின் ரகசியம் மூடியிருந்தது//

இது ரொம்ப வலிச்சது ரிஷபன்..


ஆனா பெண்களுக்கு மற்றபடி மூணு நாளாவது ரெஸ்ட் தேவைனு நான் இந்த இடுகையை வரவேற்கிறேன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

மழை வரும் நாளில்
அதன் முகத்தில் அறைந்து
பால்கனிக் கதவை
மூடும் மனசு. “

கவிதை, கதை, கருத்து, நடை, உணர்வுகள், சூழ்நிலை, எல்லாமே வெய்யில் கால மழை போல இதமாக இருந்தன. பாராட்டுக்கள்.

Anonymous said...

கதையல்ல நிஜம்...இன்னும் இப்படி இருக்கு என்பதற்கு எங்க குடும்பத்தில் கூட உதாரணம் உண்டு..அனுவை பாராட்டுகிறேன் இப்படி மனது பக்குப்பட்டுட்டால் பிரட்சனைகளுக்கு இடமில்லை....இந்த மாரல் பிடிச்சிருக்கு கதையில்....வெல்டன் ரிஷபன்....

கே. பி. ஜனா... said...

இப்பவும் மனம் தொடுகிறதே...

வெங்கட் நாகராஜ் said...

எப்பவோ எழுதிய கதையாக இருந்தாலும் இப்பவும் மனதைத் தொட்டது.

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

Indumathi R said...

Mikka arumaiyana Kadhai.

Kadhai Thaan enrallum kavithai pol irundhadhu

lalithavennkat said...

Manathaithottadhu. Arumaiyana kadai

Anonymous said...

அருமை :)