March 16, 2010

ஆபீஸ் பூனை



யார் முதலில் கவனித்தது என்று தெரியவில்லை.

இதர வேலைப் பகுதிகளுக்கும் அக்கவுண்ட்ஸிற்கும் உள்ள ஒரே வித்தியாசம் எந்தப் பேப்பரையும் துக்கிப் போட முடியாது.

பாப்புலரான ஜோக்.

அலுவலர் ஒருவர் ஆபீசரிடம் கேட்டாராம்.

'ஸார்.. பத்து வருஷமாச்சு. இந்த ஃபைலை டிஸ்போஸ் பண்ணிரலாமா' ஆபீசர் யோசித்துவிட்டு சொன்னாராம்.

'எல்லாத்துக்கும் ஒரு காப்பி எடுத்துகிட்டு டிஸ்போஸ் பண்ணுங்க' குவிந்திருக்கிற ஃபைல்களின் நடுவே எட்டிப் பார்த்த மாதிரி தெரிந்தது. ஏதோ அசைவை உணர்ந்து 'பாம்பு' பயத்தில் துள்ளிக் குதித்து பின் வாங்கிய சுகுணா மேடம் கீச்சென்று அலறியது கேட்டது.

கூடவே இன்னொரு அலறலும்.

"என்ன மேடம்"

"இங்கே ஏதோ அசையுது"

"நம்ம ஆபீஸ்ல ஏதோ வேலை நடக்குதுன்னு சந்தோஷப்படுவீங்களா.. அதை விட்டுட்டு"

"அய்யோ.. பாம்பு மாதிரி.."

அவ்வளவுதான். முன் எச்சரிக்கையாய் சிலர் வாசல் பக்கம் போய்விட, ஒரே ஒரு தைரியசாலி மட்டும் சீட்டில் இருந்தார்.

"கணேசன் ஸார்.. ஹியர்போனை காதுல மாட்டுங்க" என்று வாசல் பக்கமிருந்து குரல் கேட்டது.

சூழ்நிலை புரிந்ததும் அவரும் ஓடி வந்து விட்டார்.

"அட்டெண்டரைக் கூப்பிடுங்க"

"ஏன் ஸார் அவர் மட்டும் மனுஷன் இல்லியா"

இதற்குள் அந்த ஜீவனே பொறுமையிழந்து வெளியே வந்தது.

இத்தனை ஒல்லியாய் ஒரு பூனையை இதுவரை பார்த்ததே இல்லை. முழ நீளத்திற்கு ஒல்லி உடம்பு. குச்சியாய் கால்கள். கண்களில் உயிர் ஒட்டிக் கொண்டிருந்தது.

"எப்ப ஜாயின் பண்ணார்" என்று மலையாள அம்மணி கேட்க பூனையின் பூர்வோத்தர அலசல் ஆரம்பித்தது.

"நேத்து வரைக்கும் பார்க்கலியே"

டெஸ்பாட்ச் கொண்டு வந்த அட்டெண்டர் சொன்னார்.

"அட, இது இங்கே வந்திருச்சா.. மேல பர்ச்சேஸ்ல இல்ல இருந்திச்சு" "அக்கவுண்ட்ஸ்ல என்ன வேலை"

"டி ஏ கிளெய்ம் கொடுக்க வந்திருக்கும்"

"ஆன் டூட்டி போயே இளைச்சிருச்சு"

பாம்பு இல்லை, பூனை என்று தெரிந்ததும் மாமூல் லக..லக ஆரம்பித்து விட்டது. டீ நேரம் என்பதால் கொண்டு வந்து வைத்த டீயை சாசரில் ஊற்றி கீழே வைத்தார் ஒருவர்.

"ஏன் ஸார் டீ பிடிக்கலியா"

அதன் ஒல்லி உடம்பைப் பார்த்து தைராய்டு பிரச்னையில் இருந்த குமரவேலும் சந்த்ரிகாவும் பெருமூச்சு விட்டார்கள்.

"இந்தப் பூனை எலி பிடிக்காதா"

"இந்த உடம்போட அது ஓடறதுக்குள்ள எலி ரெண்டு மாடி தாண்டிரும்.. பாரு மூச்சு கூட விட முடியல"

தேநீரை முகர்ந்து விட்டு நிராகரித்து நகர ஆரம்பித்தது.

"பாரு நீ கொண்டு வர டீ அதுக்குக் கூட பிடிக்கல" என்று அட்டெண்டரைக் கலாய்த்தார்கள்.

இரண்டு மூன்று நாட்களுக்குள் அதன் வொர்க் அலோகேஷன் புரிந்து விட்டது. ஒன்பதரை மணி வரை எங்கே இருக்கிறது என்று முதலில் தெரியவில்லை. அப்புறம்தான் தெரிந்தது. பிறந்த வீடான பர்ச்சேஸில் ஒன்பதரை மணி வரை. பிறகு மெல்ல படியிறங்கி அக்கவுண்ட்ஸில் எல்லா செக் ஷனுக்கும் போய்விட்டு கடைசியில் எங்கள் பகுதி.

காலையில் கொண்டு வரும் டிபனில் ஒரு பகுதியை எடுத்து வைத்து விட்டு சாப்பிடுவார்கள். நான்கு வீட்டு டிபனில் அது எதை ஒதுக்குகிறதோ அதில் உப்பு உறைப்பு குறைவாய் இருப்பதை எந்த ஈகோவும் இல்லாமல் அந்தந்த மேடம் ஒத்துக் கொண்டு 'ஸாரி' கேட்பார்கள்.

"அவர் எதைப் போட்டாலும் ஒண்ணும் சொல்ல மாட்டார்"

"அவ்வளவு அனுசரிச்சுப் போவாரா"

"நீங்க வேற.. எதுவும் கண்டு பிடிக்கத் தெரியாது."

இவர்களின் பலத்த சிரிப்பு பூனையை எதுவும் செய்யாது. என்னதான் சாப்பாடு வைத்தாலும் அதன் எடை கூடவே இல்லை. உடலழகை அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் வைத்திருந்தது ஒரு பக்கம் திகைப்பாகவும், குமரவேல் உள்ளிட்டோர்க்கு பொறாமையாகவும் இருந்தது.

"அதையேதான் நாம சாப்பிடறோம். நமக்கு மட்டும் எப்படி வெயிட் போடுது"
"அது எவ்வளவு ஏரியா பார்க்குது.. ஒரு எடமாவா இருக்கு.."

இந்தப் பூனை வந்தபிறகு ஃபைல்களை எலி கடிப்பது நின்று போனது. முன்பெல்லாம் பீரோவைத் திறந்தால் எலிப் புழுக்கையும் கடிபட்ட காகிதங்களும் உதிரும். கவிச்ச நாற்றம் அடிக்கும். பூனையின் வரவால் ஃபைல்களுக்கு விடிவு காலம் வந்தாலும் எங்களுக்கு பிரச்னையானது.

எந்த ஃபைலைக் கேட்டாலும் 'எலி கடிச்சிருச்சு' என்கிற நிர்வாக ரீதியான பதிலைத் தர முடியவில்லை இப்போது.

தன் ஒல்லி உடம்பை நீட்டி எம்பி லீவு போட்டிருந்த ஆபீசர் இருக்கையில் அது அமர முயற்சித்த ஐந்து, பத்து நிமிட சாகசங்கள் அந்த நேரம் எங்களிடம் வீடியோ காமிரா இல்லையே என்று ஏங்க வைத்து விட்டது.

"பூனைக்கு பேர் வைக்கலியே" என்று ஒருவர் வருத்தப்பட்டார்.

"ஆபீஸ் பூனைன்னுதானே சொல்றோம்"

"சமயத்துல அதை யாருக்கு சொல்றோம்னு குழப்பமாவுது"

"ஒல்லியா இருக்கே.. நம்ரன்னு வைக்கலாமா" என்று நம்ரன் ரசிகர் கேட்டார்.

"சேச்சே.. அவங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சு. வேற யோசிங்க"

எங்கள் கவலை எதனாலும் பாதிப்படையாமல் 'ஆபீஸ் பூனை' கால்களுக்கிடையே நுழைந்து அடுத்த பிரிவுக்குப் போய்க் கொண்டிருந்தது நிரந்தர அலுவலர் மாதிரி!



19 comments:

Chitra said...

ரொம்ப ரசிச்சு படிச்சேன். ஆபீஸ் பூனை, எல்லோருக்கும் நகைச்சுவை உணர்வை தூண்டி விட்டு, ஒரு relaxation therapy தருகிறது. அதுக்கு salary உண்டா....

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆபீஸ் பூனை படித்தேன்! சுவைத்தேன்!!
ரசித்தேன்!!! அத்தனையும் தேன்..தேன்...தேன்!!!!

Priya said...

வெரி நைஸ் & இன்ட்ரெஸ்டிங் டூ!

சாந்தி மாரியப்பன் said...

ரசனையான இடுகை. 'ஆபீஸ் பூனை' இந்தப்பெயரே நல்லா இருக்கே. :-)))

Madumitha said...

உங்க ஆபீஸ் பூனையை
எங்க ஆபீசுக்கு
அனுப்பி விடுங்க.
Transfer Grant லாம்
உண்டு.

பத்மா said...

டக்னு முடிச்ச மாறி இருக்கு ....இன்னும் கொஞ்சம் எழுதலாமே

கே. பி. ஜனா... said...

கல்கியில் வெளிவந்ததாயிற்றே! மீண்டும் படிக்க சுவையாக இருந்தது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல சுவையான ஒரு சிற்றுண்டி சாப்பிட்டது போல அருமையாக இருந்தது (நல்ல நகைச்சுவையுடன் கூடிய இந்த பதிவு). வாழ்த்துக்கள்.

சுந்தர்ஜி said...

ஒரு வழியா வந்துட்டேன் ரிஷபன்!இந்தப் பூனையத் தூக்கிண்டு போக.

ஸ்ரீராம். said...

சுவையான அனுபவம்.

ஹுஸைனம்மா said...

ஒரு பூனையின் வரவைக்கூட இவ்வளவு ரசனையா எழுதமுடியுமா?? நல்லாருக்குங்க!!

திவ்யாஹரி said...

பூனையை நேரில் பார்த்து ரசித்தது போல உணர்ந்தேன் ரிஷபன்.. நேரமின்மை காரணமாக இதுவரை பின்னூட்டம் இட முடியவில்லை..

மதார் said...

ரசிச்சு படிச்சேன் . அப்படியே ஒரு அலுவலகம் பூனை என்று ஒரு தனி உலகுக்கே படித்துமுடிக்கும் வரை போயிட்டேன் . நல்லா சிரிக்க வச்சுடீங்க .

Thenammai Lakshmanan said...

நிஜமாவே இன்வால்வ் ஆகி இன்னும்கொஞ்சம் எழுதி இருகலாம்ன்னு நினைச்சேன்

ஆஃபீஸ் லகலக எல்லாம் யதார்த்தம்
மற்றும் சூப்பர் ரிஷபன்

க ரா said...

ரொம்ப நல்லாருக்கு.

பா.ராஜாராம் said...

:-)

நல்லாருக்கு ரிஷபன்!

Unknown said...

ரசித்தேன் நண்பா
ஆபிஸ் புனை நல்ல பூனை

மாதவராஜ் said...

ரசிக்கிறேன்.....

Unknown said...

"அட்டெண்டரைக் கூப்பிடுங்க"

"ஏன் ஸார் அவர் மட்டும் மனுஷன் இல்லியா"
அடிமனசிலிருந்து வந்த வரிகள்