July 04, 2010

கிங் க்வீன் ஜாக் - பகுதி 4

இனிப்புப் பெட்டியுடன் உமா வீட்டுக்குள் நுழைந்தபோது, அங்கு இன்னொரு உலக யுத்தம் பாதி நடந்திருந்தது.

அம்மாவின் எதிரே ஆக்ரோஷமாய் அப்பா.

"முடிவா நீ என்னதான் சொல்றே?"

"....."

அம்மா இந்த மனிதரிடம் இனி பேசிப் பயனில்லை என்கிற தோரணைக்குப் போய்விட்ட நிலை.

"நான் வாக்கு கொடுத்தாச்சு. நீ எப்படி தடுக்கறேன்னு பார்க்கறேன்"

ஏதோ ஒரு கவரை ஆட்டி ஆட்டிப் பேசினார். அதற்குள் என்ன இருக்கிறது என்று யூகிக்க முடியவில்லை உமாவால்.

உமாவைப் பார்த்ததும் ஏனோ பேசாமல் போய்விட்டார்.

"என்னம்மா கலாட்டா"

எப்போதேனும் மனசு உற்சாகமாய் உணரும்போது, உடனே ஸ்வீட் வாங்கிக் கொடுப்பது உமாவின் பழக்கம்.

'எனக்கு ஹேப்பியா இருக்கு இப்ப.. இனிப்பு எடு.. கொண்டாடு'

அவளுக்கு ஆபீசில் இதனாலேயே 'ஸ்வீட்டி' என்று செல்லப் பெயர் வந்து விட்டது.

தினகர் அதற்கும் ஒரு விளக்கம் வைத்திருந்தான்.

'உன் கோபம், வருத்தம் இதெல்லாம் கூட நீ ஷேர் பண்ணிக்கறே மறைமுகமா. யாரோடவும் பேசாம.. விஷ் பண்ணாம சைலண்ட்டா இருக்கறப்ப..'

அவன் வார்த்தைகள் சுட்டன. ஆனால், எதுவும் பேசாமல் விட்டு விட்டாள். இந்த குணமும் அம்மாவிடமிருந்துதான் வந்திருக்க வேண்டும்.

"என்னம்மா பிரச்னை"

"உனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கார்"

"நல்ல விஷயம்தானே"

பெண்ணின் கிண்டலை ரசிக்க அம்மாவுக்கு முடியவில்லை.

"ரெண்டாம்தாரம்.. பத்து வயசுல ஒரு பொண்ணும், எட்டு வயசுல ஒரு பையனும் இருக்காங்களாம். இவரோட சீட்டு விளையாடறவரோட பையனாம். நாப்பத்தஞ்சு வயசு. ஃபோட்டோ பார்க்கறியான்னு கேட்டார். சண்டை ஆரம்பிச்சுது"

"அப்பா ஃபோட்டோ காட்டுங்க"

உமாவே தேடிப் போனாள்.அப்பா இதை எதிர்பார்த்திருக்க மாட்டார் என்று அவர் திணறலிலேயே புரிந்தது.

"எ..ந்த ஃபோட்டோ"

"எனக்காக நீங்க பார்த்த மாப்பிள்ளை"

"அ..து எதுக்கு"

பக்கத்திலேயே கவர் கிடந்தது.

"ரெண்டு குழந்தைகளாப்பா"

"ம்"

"இப்ப யார் பார்த்துக்கறாங்க"

"மாமனார் வீட்டுல விட்ட்ருக்கார். இவருக்கு அம்மாவும் இல்லே"

அப்பா இப்போது சுதாரித்துக் கொண்டு விட்டார். பதில்கள் நிதானமாக வந்தன.

"எப்ப தவறிப் போனா.. முதல் மனைவி"

இந்தக் கேள்வியே அநாவசியம் என்று அப்பா முகத்திலேயே தெரிந்தது. இரண்டாவது பையனுக்கு எட்டு வயசு. பிரசவத்திலேயே போயிருந்தாலும் எட்டு வருடங்கள்.

"அது ஞாபகம் இல்லை. பிரைவேட்ல வேலை. ஒரு கெட்ட பழக்கமும் இல்லை. மாமனார், மாமியாருக்கும் சிரமம் தரவேணாம்னு யோசனை. போய்ப் போய் பசங்களைப் பார்த்துட்டு வர கஷ்டம் வேற. வீட்டோட ஒருத்தி இருந்தா இந்தச் சிக்கல் இல்லை பாரு."

"நானும் வேலைக்குப் போறேனேப்பா"

"அதனால என்ன.. பசங்க பெரியவங்க. சோறு ஊட்ட வேணாம். அவங்க வேலையை அவங்களே செஞ்சுக்கற மாதிரி"

"நைஸ் பா"

உமாவுக்கு நிஜமாகவே சந்தோஷம் வந்தது அதைக் கேட்டு.

"அப்புறம் என்ன.. பேசாம ரெண்டு பேரையும் கூடவே வச்சுகிட்டா.. இவர் ஆபீஸ் போகறவரை இருக்கலாம். அப்புறம் வீட்டுக்கு வந்ததும் அவங்களோட இருக்கலாம். அதுக்கு எதுக்குக் கல்யாணம்"

அப்பாவின் முகம் மாறியது. உமா தன்னுடன் விளையாடுகிறாள் என்று நினைத்து எரிச்சலானது புரிந்தது.

"உனக்குப் புரியாதுடி. அவனுக்குச் சின்ன வயசுடி. அதுக்குள்ள தனியாளா நிக்கணுமா"

"ஏம்பா தனியாளு.. அவரோட அப்பா.. ரெண்டு பசங்க.. ஹேப்பியா இருக்கலாமே"

"போடி"

அப்பாவுக்கு மூச்சிரைத்தது. பெண்ணுடன் எந்த அளவு இறங்கி வந்து உரையாடல் நிகழ்த்துவது என்கிற குழப்பம் தெரிந்தது.

"ஸோ.. அவருக்கும் ஒரு மனைவி தேவை.. அதானே"

"ஆமா.."

"குழந்தைங்க மேனேஜ் பண்ணும்.. அம்மா இல்லாம.. ஆனா இவரால முடியலே"

"உளராதே.. புரியாம பேசாதே"

"நம்ம வீட்டுலயும் நீங்க ரெண்டு பேரும் வெளி உலகத்துக்குத்தான் கணவன், மனைவி.. எப்படி மேனேஜ் பண்றீங்க"

உமாவின் கன்னத்தில் விழுந்த முதல் அறை. சட்டென்று நிகழ்ந்து விட்டது.அம்மா ஓடி வந்தாள். தன் துக்கம் மகளுக்கும் தொடர்கிறது என்கிற பதட்டம்.

"கோபப்படாதீங்க.. யோசிங்க"

உமாவின் கண்கள் கலங்கி இருந்தாலும் குரலில் நிதானம் தப்பவில்லை.அன்றிரவு அப்பா ஹாலில் விளக்கெரித்துக் கொண்டு, கைவசம் இருந்த சீட்டுக்கட்டைப் பிரித்து, தனக்குத் தானே ஆடிக் கொண்டிருந்தார். சாப்பிடவும் வரவில்லை.

உமா, அம்மா இருவரும் சாப்பிடவில்லை. காலையில் பார்த்தபோது இனிப்பில் எறும்புகள் மொய்த்திருந்தன.

"வேஸ்ட்டாப் போச்சேடி"

அம்மா எதைச் சொன்னாள் என்று புரிந்தது.

"எறும்பாவது சாப்பிடட்டும்மா.. தட்டி விட்டுராதே.. பின் பக்கமா வெளியே வச்சுரு."

"நீயே வச்சுட்டு வா"

உமா எறும்புகளின் அணிவகுப்பினைக் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தாள்.

"இன்னிக்கு லீவு போடட்டுமாம்மா"

"உன் இஷ்டம்"

"நீயும் வாம்மா. எங்கேயாவது வெளியே போயிட்டு வரலாம்."

"நான் வரலே"

"உனக்கு அலுப்பு வரலியாம்மா"

"எதையும் மனசுக்குக் கொண்டு போனாத்தான் அலுப்பும் இனிப்பும். எட்ட வச்சு வேடிக்கை பார்த்தா ஒரு நாள் ஓடறது ஒரு நிமிஷத்துல"

அம்மா! பெண் தினகர்! ஏன் இந்த கோணத்தில் அம்மாவை இதுவரை யோசிக்கவே இல்லை.

அப்பாவின் ஆக்கிரமிப்பில் சுயம் தொலைத்த பெண்மணி என்றே பட்டியல் போட்டு வைத்தது தன் தவறுதானா?

"அம்மா"

"வலிக்கிறதாடி"

கன்னம் தொட்டுக் கேட்டாள். இரு விரல்களின் தடம் பதிந்த இடம். லேசாய்..

"இல்லம்மா"

"கஞ்சி போடட்டுமா"

"அம்மா எனக்குக் கல்யாணமே வேண்டாம்னு தோணுதும்மா"

"ம்"

"ஏதோ விரக்தியில் சொல்லலே. நல்லா யோசிச்சுத்தான் சொல்றேன்"

அம்மா மெளனமாய் இருந்தது யோசித்ததாலா.. அல்லது யோசிக்க விரும்பாததாலா.. என்று புரியவில்லை.

"தினகர் மேல எனக்குப் பிரியம் உண்டும்மா. ஆனா அது கல்யாணம் வரைக்கும் போகுமான்னு புரியலே. அவனுக்கும் சில அபிப்பிராயங்கள், யோசனைகள், தெளிவுகள், தீர்மானங்கள் எல்லாம் இருக்கு. அது எப்பவும் எனக்கு சந்தோஷம் அல்லது நிம்மதி தருமான்னு தெரியலே. ரெண்டு பேரும் பிரியமான முறையில முரண்படறோம்"

அம்மா இப்போது உமாவைக் கூர்ந்து கவனித்தாள்.

"அவனுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கற ஆசை இருக்கான்னு கூட எனக்குத் தெரியாது. கேட்டுத் தெரிஞ்சுக்கிற விருப்பமும் இப்ப எனக்கு இல்லே. நான் அவனைக் கல்யாணம் பண்ணிக்கறதால என்ன மாற்றம் வரும்னு புரியலே"

"என்னடி சொல்றே"

"அம்மா அப்பாவை விட்டுட்டு நீ என்னோட வரியான்னு கேட்க நினைச்சேன். வேணாம்மா.. அதுவும் அவசியம் இல்லே..நாம இப்படியே இருக்கலாம்"

"எங்க காலத்துக்குப் பிறகு நீ தனியா.."

"இல்லம்மா.. நான் தனி இல்லே.. இப்ப தினகர்.. அப்ப யாராவது என் சுயம் புரிஞ்சு.. என்னோட நல்ல நட்பு பாராட்டி.."

"இது வெறும் கனவுடி.. யதார்த்தம் இல்லே"

"அப்பாவோட வாழ்க்கை சீட்டுக் கட்டுல அடங்கறமாதிரி.. உன்னோட வாழ்க்கை சமையல்கட்டுல முடியறமாதிரி.. என்னோட வாழ்க்கையும் நினைவுக் கூட்டுல இருக்கட்டுமே"

"தினகரே வந்து கேட்டா"

"அப்ப பார்க்கலாம். நான் முடிவு எதுவும் எடுக்கலம்மா.. ஆனா முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தா.. நல்ல முடிவா எடுக்க.. நம்ம மனசுல ஒரு தெளிவு வேணும் இல்லியா.. அதைத்தாம்மா இப்ப வளர்த்துக்கறேன்"

எழுந்து நின்ற மகளிடம் வயதுக்கு மீறிய முதிர்ச்சி இருப்பதாய் புலப்பட்டது அம்மாவுக்கு.

தன்னையும் அறியாமல் பெருமூச்சு விட்டாள். அதில் கொஞ்சம் பெருமிதமும் குழைந்திருந்தது.


(முற்றும்)கல்கியில் வெளிவந்த நாலு வாரத் தொடர்.

8 comments:

வானம்பாடிகள் said...

சார்! க்ளாஸ்!

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

படித்து முடித்ததும், எதோ ஒரு சோகம் அப்பிக் கொண்டது, மனத்தை!!!

Madumitha said...

திரும்பவும் படிக்க வைக்கிறது
உங்களின் நடை.
தொடருட்டும் ரிஷபன்.

கமலேஷ் said...

அப்பா!!!..

ரொம்ப தெளிவான நடை..

அருமையான கதை...

வாழ்த்துக்கள் நண்பரே...

ஹேமா said...

//"அப்பாவோட வாழ்க்கை சீட்டுக் கட்டுல அடங்கறமாதிரி.. உன்னோட வாழ்க்கை சமையல்கட்டுல முடியறமாதிரி.. என்னோட வாழ்க்கையும் நினைவுக் கூட்டுல இருக்கட்டுமே"//

எப்படி ஒரு பக்குவப்பட்ட மனசு.

எனக்குத் தெரிய இப்படி வீட்டில் தப்பனாரின் நடவடிக்கைகளால் எல்லா
ஆண்களும் இதுமாதிரித்தான் என எண்ணம் கொண்டு வாழ்பவர்களைக் கண்டிருக்கிறேன்.

Chitra said...

"அப்பாவோட வாழ்க்கை சீட்டுக் கட்டுல அடங்கறமாதிரி.. உன்னோட வாழ்க்கை சமையல்கட்டுல முடியறமாதிரி.. என்னோட வாழ்க்கையும் நினைவுக் கூட்டுல இருக்கட்டுமே"


.... It speaks volumes. :-)

வெங்கட் நாகராஜ் said...

படித்ததும் மனதை அழுத்திய சோகம். நல்லதொரு கதை.

VAI. GOPALAKRISHNAN said...

மீண்டும் மீண்டும் படித்தேன்.
சோகக்கதைதான் என்றாலும் தாங்கள் சொல்லிய விதம் ..... சுகமே