December 08, 2010

ஜ்வல்யா

அந்த பயணம் நெடுக என் எதிரில்தான் அந்த குழந்தை .. கைக்கெட்டும் தூரம்.
ஒரு தடவை அதன் பிஞ்சுக் கால் என் மீது பட்டது. துணி மாற்றிய போது. என் அருகில் இருந்த அத்தனை பேரும் வாங்கிக் கொஞ்சி விட்டார்கள். என்னைத் தவிர.
எனக்கொன்றும் அந்தக் குழந்தையை எடுத்துக் கொள்ளக் கூடாதென்றில்லை.
முதலில் ஏதோ ஒரு வித தயக்கம். பிறகு நானே விரும்பிய போது அது என் பக்கம் திரும்பவே மறுத்தது.
'வாடா செல்லம்.'
அடுத்த நபரிடம் போனது. பூக்குவியல். அவர் கைகளில். என்ன ஒரு பிரகாசம் அவர் முகத்தில்.
"என்ன பேர் "
"ஜ்வல்யா"
"அழகான பேர் "
ஜ்வல்யா. நானும் சொல்லிப் பார்த்துக் கொண்டேன்.
ஒவ்வொரு ஸ்டேஷனிலும் வண்டி நின்று புறப்பட்டபோது .. புது நபர்கள் வந்தபோது.. அதுவரை பயணித்தவர்கள் இறங்கிப் போனபோது.. ஜ்வல்யாவை விட்டுப் பிரிகிற .. சேர்கிற நபர்களின் உணர்வுகள் அப்பட்டமாய் தெரிந்தது.
"ஏதாச்சும் சாப்பிடறியா "
அவர்தான் கேட்டார். அவரிடமும் ஜ்வல்யா கொஞ்ச நேரம் இருந்தாள்.
"வேணாம் .. "
"நீ வச்சுக்கிறியா.. ஜ்வல்யாவை"
அவரையே பார்த்தேன். கண்ணில் ஜலம் தளும்பி நின்றது.
"ஒண்ணும் சொல்ல மாட்டாங்க.. " என்றார் கிசுகிசுப்பாய்.
சட்டென்று ஜ்வல்யாவை கை நீட்டி வாங்கிக் கொண்டார் . என் மடியில் விட்டார்.

முழுமை பெறாத என் இடது கையும் சற்றே துவண்ட என் வலது கையும் அந்த நிமிடம் முழுமையாய் ஜ்வல்யாவை ஸ்பர்சித்து..
என்ன அழகான சிரிப்புடன் கால்களை உதைத்துக் கொண்டு.. பாதுகாப்பாய் அவர் பிடித்துக் கொள்ள..
என் மடி நனைந்து போனது அப்போது..

29 comments:

சிவகுமாரன் said...

ஊனமுற்றோரின் உணர்வுகள் .. உள்ளத்தை தொடும் வகையில்
உருக்கும் பதிவு.

நிலாமகள் said...

சட்டென அதிர்வு ஏற்படுத்தியது. இழப்புகளின் உச்சத்திலும் கம்பீரமாக எழுந்து நிற்க மெய்ப்புல அறைகூவலர்கள் பயின்றிருக்கிறார்கள். நாற்பது வரிகளோ நான்கு பக்கங்களோ ... எங்களை தன்வசப்படுத்தும் வன்மை பெற்றது தங்களது எழுதுகோல்.

சுந்தர்ஜி said...

உணர்வுக்குவியல் சாமி.யூகிக்க முடிந்தாலும் சிலாகிக்கவும் முடிகிறது ரிஷபன்.

Chitra said...

ஜ்வல்யா - இந்த பெயரை முதன் முறை கேட்கிறேன்.

மனதை நெகிழ வைக்கும் கதைகள் தருவதில், நீங்கள்தான் முடிசூடா மன்னன் ஆயிற்றே!

வெங்கட் நாகராஜ் said...

உங்க கையக் குடுங்க சார், உணர்வு பூர்வமான ஒரு கதை எழுதின உங்கள் கையைக் கொஞ்சம் நேரமாவது பிடித்துக்கொள்ளத் தோன்றுகிறது..

தேனம்மை லெக்ஷ்மணன் said...

அருமை ரிஷபன்

பத்மநாபன் said...

உடலுக்குத்தானே குறை ..மனம் என்ன பாவம் செய்தது... எடுத்துக்கொடுத்து பிடித்து கொண்ட நபர் மனதில் நிற்கிறார்.. ஜ்வல்யா என்ற பெயர் போல...

அன்பரசன் said...

அருமையான உணர்வு..
விளக்கிய விதம் சூப்பர்.

வானம்பாடிகள் said...

ஏதோ இருக்கும்னு நினைப்போடதான் படிச்சேன். இப்படின்னு நினைக்கல. சபாஷ்

பத்மா said...

கதை மன்னர்

Harani said...

கவிதையியல் வீணையில் கண்ணீரியல் ராகம் ரிஷபன்.

அமைதிச்சாரல் said...

ஜொலிக்கிறது...

Gopi Ramamoorthy said...

super

VAI. GOPALAKRISHNAN said...

”ஜ்வல்யா” பலர் மடியில் பயணம் செய்தாள். கொஞ்சினார்கள். ரயில் ஸ்நேகம் போல, அவரவர் ஸ்டேஷனில் ஜ்வல்யாவைப் பிரிந்தனர். பிரிகிற .. சேர்கிற உணர்வுகள் அவர்களிடம். ஆனால் யாரிடமும் காட்டாத ஒரு தனி பிரியத்தை, இந்த குறிப்பிட்ட நபரிடம் மட்டுமே, பாச மழையாகப் பொழிந்து காட்டி விட்டாள் ஜ்வல்யா.

நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

Super

மோகன்ஜி said...

அழகான கச்சிதமான பதிவில், உள்ளத்தை நனைத்து விட்டீர்கள். அழகான பெயர் இட்டிருக்கிறீர்கள்.

நம்ம வயலூர் பதிவு போட்டுள்ளேன்.பாருங்கள்

Balaji saravana said...

ரொம்ப அருமையா இருக்கு ரிஷபன். :)

ஜீ... said...

Super! :-)

ஹுஸைனம்மா said...

குழந்தையில்லாத பெண் என்று நினைத்தேன்.

உணர்வுகள் அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

கோவை2தில்லி said...

”ஜ்வல்யா ” இந்த பெயரை சொல்லும்போதே ஆனந்தம் வருகிறது. உணர்வுப் பூர்வமாய் இருந்தது. அருமை.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆஹா..சூப்பர்!
ஜ்வல்யா முதன்முதலாய் கேட்கும்பெயர்!

நிலாமகள் said...

டொக் டொக் டொக் ... அலோ... அலோ ... ஸ்பீக்கர புல் சவுண்ட் வைங்கப்பா...

இன்று ... எங்கள் தொகுதிக்கு(நெய்வேலி) வருகை தர இருக்கும் ... கருணைக் கண்ணன்... அருமை அண்ணன்... கதை சொல்லும் மன்னன்... பதிவுலகின் மரியாதைக்குரிய எழுத்தாளுநர் ...மாண்புமிகு ரிஷபன் அவர்களை... வருக வருக என வரவேற்பதில் பெரு...மகிழ்வெய்துகிறோம் என்பதை வட்டம்-27 சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்...

அம்பிகா said...

நெகிழ வைக்கும் கதை. ஜ்வல்யா...
மிக அருமை.

Lakshminarayanan said...

'ஜ்வல்யா' -சஸ்பென்ஸ் உடைந்ததும் 'தடக்'கென்கிறது. hats off ரிஷபன் சார்!!

பாரத்... பாரதி... said...

ஜ்வல்யா - ஈர்க்கும் பெயராகத் தெரிகிறது.

சின்னதொரு கதைக்குள் நிறைய உணர்ச்சிகளை
காட்டிவிட்டீர்கள்..

பாரத்... பாரதி... said...

//சட்டென அதிர்வு ஏற்படுத்தியது. இழப்புகளின் உச்சத்திலும் கம்பீரமாக எழுந்து நிற்க மெய்ப்புல அறைகூவலர்கள் பயின்றிருக்கிறார்கள்.//

வசந்தமுல்லை said...

ஜ்வல்யா - ஏதோ தேன் கலந்த ஐஸ் கிரீம் சாப்பிட்டது போல் இருந்தது. எங்கிருந்து பிடித்தீர்கள் இந்த பேரை? கிரேட்!!!

கே. பி. ஜனா... said...

jewel ய்யா! very touching sir!

கே. பி. ஜனா... said...

jewel ய்யா! very touching sir!