January 31, 2011

குரூப் போட்டோ


எல்லோர் முகங்களிலும் பரபரப்பு. இருக்காதா பின்னே..
மூன்று வருடப் படிப்பு முடிந்து இனி அவிழ்த்து விட்ட கழுதைகளாகப் போகிறார்கள்.. அம்மாவின் மொழியில்.
'இன்னிக்குதான் குரூப் போட்டோ எடுக்கப் போறாங்களாம்..'
யார் பக்கத்தில் யார் நிற்பது என்று பேசிக் கொண்டதில் என் சாய்ஸ் குமார் தான்.
அவன் இல்லாவிட்டால் இந்த பிகாம் படிப்பை வெற்றிகரமாய் முடித்திருக்க மாட்டேன்.
முதல் வருடம் தேர்வு முடிந்து ரிசல்ட் வந்தபோது மார்க் மகா கேவலம்..
புரபசர் ஒவ்வொருவராய் தமது அறைக்கு அழைத்து டோஸ் விட்டுக் கொண்டிருந்தார்.
என் முறை வந்த போது சாப்பாட்டு நேரமாகி விட்டது. பசி வயிற்றைக் கிள்ளியது.
மனிதர் விட்டால் தானே..
'உன்னை பத்தி எவ்வளவு பெருமையா நினைச்சேன்.. தெரியுமா.. இந்த காலேஜுக்கு பேர் வாங்கித் தருவேன்னு .. '
வார்த்தைகள் என்னை அறைந்தன..
வெளியே வந்தபோது மற்றவர்களை விட அதிக பாட்டு வாங்கியது நான்தான் என்கிற விவரம் தெரிந்தது.
கொண்டு வந்த டிபன் பாக்ஸ் திறக்க மனசில்லை. அவமானம்.. கூச்சம்..
அப்போதுதான் குமார் வந்து என் அருகில் அமர்ந்தான்.
'கவலைப் படாத.. நாம சேர்ந்து படிக்கலாம்.. '
ஒரு நட்பின் பூர்ண பிம்பம் அப்போதுதான் எனக்கு அறிமுகம்.
என் சிறு பிள்ளைத் தனத்தில் சில நேரங்களில் அவன் எங்கள் வீட்டிற்கு படிக்க வரும் போது 'தலை வலிக்குது ' என்று மறுத்திருக்கிறேன். முகம் சுளிக்காமல்
திரும்பிப் போவான். மூட் இல்லை என்றால் 'நான் படிக்கிறேன் .. நீ கேள் .. போதும்..' என்பான்.
ஒரே ஒரு பர்ஸ்ட் கிளாஸ் .. பதினெட்டு செகண்ட் கிளாஸ்.. அந்த வருடம். அதில் பதினெட்டில் நானும் ஒன்று. குமாரால் சாத்தியமானது.
இன்று குரூப் போட்டோவில் அவனுக்கு பக்கத்தில் நிற்க ஆளைத் தேடினால் காணோம்.. என்ன செய்ய.. கடைசி நிமிடம் வரை அலைபாய்ந்து வேறு வழியின்றி நின்றாகி விட்டது.
கல்லூரி தோட்டத்தின் நடுவில் அமர்ந்திருந்தான். . தனியாக.
'ஏண்டா எங்கடா உன்னைக் காணோம்.. '
'போட்டோக்கு பணம் தர மாட்டேன்னு அம்மா சொல்லிட்டாங்க..'
'அட லூசு.. நான் தந்திருப்பேனே.. உன் பக்கத்துல நிக்க ஆசைப் பட்டேன் டா '
எனது அருமை குமார் மெல்ல சிரித்தான்.. பதில் இல்லை..
அவன் நட்பிற்கு விலையும் இல்லை..
இன்று இந்தப் படத்தைப் பார்க்கும்போது எல்லாம் அதில் நிற்பவர்கள் பற்றி நினைப்பு இல்லை .. நிற்காத குமார் தான் அழுத்தமாய் மனதில் இருக்கிறான்..

32 comments:

இராமசாமி said...

aparam rishaban ....

RVS said...

உணச்சிப்பூர்ணமாக இருந்தது... ;-) ;-) குமார் படிப்போர் மனத்திலும் பிரேம் மாட்டி நிற்கிறான்.. ;-)

ராமலக்ஷ்மி said...

நெகிழ்வு.

அமுதா கிருஷ்ணா said...

சே,என்ன குமார் இப்படி செய்துட்டார்.மனசு கஷ்டமாகி போச்சு.ஆனால் மனதில் நிற்கிறார்.

அமைதிச்சாரல் said...

கல்லூரி நினைவுகளை அசைபோட, மிஞ்சி நிற்பதே க்ரூப் போட்டோ ஒன்றுதானே.. நெகிழ்வான பகிர்வு.

செ.சரவணக்குமார் said...

பதிவை வாசித்ததும் நானும் குமாரையே நினைத்துக்கொண்டிருந்தேன் நண்பா.

குமார் போன்ற நண்பர்கள்தான் இந்த வாழ்வின் வரம். அவர்கள்தான் நம் உலகை நிறைக்கிறார்கள்.

கக்கு - மாணிக்கம் said...

குமார்தான் !!
படத்தில் இல்லை, மனத்தில்.

raji said...

நீங்கள் நிற்பதற்கு முன்பே அவரை முதலில்
தேடியிருக்க வேண்டும் மிஸ்டர் ரிஷபன்.
உங்களுக்கு முன்பே அவரை தேட தோன்றவில்லையா?

VAI. GOPALAKRISHNAN said...

குமார் அன்று படத்தில் நிற்காததால் தானே, உங்கள் மனத்தில் மட்டுமல்லாமல் எங்கள் மனத்திலும் இன்று நிற்க முடிகிறது.

மனதைத் தொடும் நல்ல பதிவு.

குமார் போலவே எனக்கும் பள்ளி நாட்களில் பல அனுபவங்கள் உண்டு. குமார் என்னைப் போலவே என்று எண்ணும் போது கூடுதல் பாசம் ஏற்படுகிறது எனக்கு.

Chitra said...

இன்று இந்தப் படத்தைப் பார்க்கும்போது எல்லாம் அதில் நிற்பவர்கள் பற்றி நினைப்பு இல்லை .. நிற்காத குமார் தான் அழுத்தமாய் மனதில் இருக்கிறான்..


..... ரிஷபன் சார், என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ம்ம்ம்ம்......

Balaji saravana said...

நெகிழ்வு!

Philosophy Prabhakaran said...

அருமையா எழுதியிருக்கீங்க சார்...

சுந்தர்ஜி said...

வழக்கமாக நாட்கள் கடந்து நம் அடையாளங்கள் தொலைந்து நம்மை நாமே தேடும் க்ரூப் ஃபோட்டோக்களில் நீங்கள் குமாரைத் தேடியதன் மூலம் உங்களை அடையாளம் கண்டேன் ரிஷபன்.

குமார் க்ரூப் ஃபோட்டோவில் மட்டும்தானே இல்லை?அது பரவாயில்லை ரிஷபன்.

வெங்கட் நாகராஜ் said...

ஒவ்வொரு கல்லூரி புகைப்படத்தின் பின்னும் ஒரு வரலாறு காணக்கிடைக்கிறது நமக்கு! உங்கள் நண்பர் குமார் உங்கள் மனத்தினுள் இன்னும் இருக்கிறாரே, அற்புதமான ஒரு ஓவியமாய்!

நல்ல பகிர்வு சார். மிக்க நன்றி.

middleclassmadhavi said...

குமார் போன்றவர்கள் மனதில் என்றும் நிற்பார்கள்...

க்ரூப் ஃபோட்டோக்களை நம் குழந்தைகளிடம் காண்பித்து அடையாளம் கண்டுபிடிக்கச் சொல்வதும் ஒரு பேரானந்தம் இல்லையா?

அரசன் said...

பசுமையான பதிவு

Lakshminarayanan said...

'க்ரூப்' போட்டோ நிஜமாக ஒரு காலப் பெட்டகம்... இருப்பவரை விட இல்லாதவரை நினைக்க வைத்து ஏங்க வைக்கும் ஜாலப் பெட்டகம்...

Lakshminarayanan said...

'க்ரூப்' போட்டோ நிஜமாக ஒரு காலப் பெட்டகம்... இருப்பவரை விட இல்லாதவரை நினைக்க வைத்து ஏங்க வைக்கும் ஜாலப் பெட்டகம்...

Harani said...

ரிஷபன்..

அபாரமான உங்கள் எழுத்தின் நெகிழ்வை இக்கதை தருகிறது. நெகிழ்கிறேன். அருமை.அருமை.அருமை.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அது சரி..எந்த வருஷம் எடுத்த் ஃபோட்டோ..எந்த காலேஜ்? என்ன படிச்சீங்க....ஹி..ஹி..சும்மா உங்க வயசைத் தெரிஞ்சிக்கத் தான்......

சுந்தர்ஜி said...
This comment has been removed by the author.
சுந்தர்ஜி said...

என்ன ஆர்.ஆர்.ஆர். சார்?

கொஞ்சம் ரிஷபனோட விலாசத்தைப் பாத்தா வயசு கிடைச்சிடப் போகுது.

பக்கத்திலியே இருக்கீங்க.இத்தனை நாளா இதையெல்லாம் விட்டுவைப்பாங்க.போங்க சார்.

சுந்தர்ஜி said...

மொத்தம் 97 பேர்ல நிற்பவர்களில் முதல்வரிசையில் இடமிருந்து நாலாவதாக இருப்பவர்தானே இந்த க்ரூப் ஃபோட்டோவை எழுதினது?

பா.ராஜாராம் said...

//சுந்தர்ஜி said...


வழக்கமாக நாட்கள் கடந்து நம் அடையாளங்கள் தொலைந்து நம்மை நாமே தேடும் க்ரூப் ஃபோட்டோக்களில் நீங்கள் குமாரைத் தேடியதன் மூலம் உங்களை அடையாளம் கண்டேன் ரிஷபன்.

குமார் க்ரூப் ஃபோட்டோவில் மட்டும்தானே இல்லை?அது பரவாயில்லை ரிஷபன்.//அருமையான பதிவிற்கு அருமையான பின்னூட்டம்!

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

Lovely one!

தேனம்மை லெக்ஷ்மணன் said...

உண்மை ரிஷபன் .. எனக்கும் நளினி என்ற தோழீ இருந்தாள் பத்தாம் வகுப்பில்.. அவளை நினைத்துக் கொண்டேன்..:((

மோகன்ஜி said...

ரிஷபன்! நலமா? மனசை இளக்கி விட்டீர்கள். விடுபட்டுப் போன குமார்கள் நினைவுகள் நெய்யும் பட்டில் சரிகையாய் மிளிர்கிறார்கள். அருமை.. அருமை

Matangi Mawley said...

very heart-felt post!
mikavum rasiththen...

அன்னு said...

டச்சிங்கான கதைண்ணா. நல்லாருக்கு :)

மனோ சாமிநாதன் said...

பாலைவனத்தில் சோலையாய், பலவித அழுத்தங்களிடையே மனது பின்னோக்கிப் பயணிக்கும்போது, இந்த மாதிரி 'க்ரூப் புகைப்படங்களும் அதனைச் சார்ந்த இள வயது நினைவுகளும் பூந்தென்றலாய் மனதை சில நிமிடங்கள் குளிர்வித்துச் செல்கிறது எப்போதும்! இப்போதுகூட சின்ன வயது க்ரூப் புகைப்படங்களையும் அதைச் சார்ந்த நினைவுகளையும் ஞாபகப்படுத்தி விட்டது உங்களின் அருமையான பதிவு!!

சிவகுமாரன் said...

எல்லோரும் போட்டோவில் முதலில் தன்னைத்தான் தேடுவார்கள். பிறகு பிறரை. படத்தில் இலாத நண்பரை மனதில் வரிந்தி கொண்டு இன்னும் தேடிக் கொண்டிருக்கும் உங்கள் நட்பு போற்றுதலுக்குரியது..
எந்தக் கல்லூரி ? (நானும் திருச்சியில் தான் படித்தேன் )

sundar07 said...

Hi where I am standing you leave my name

sundararajan