என் புத்திக்கு எட்டியவரை எதுவும் தப்பாய் சொன்ன மாதிரி தெரியவில்லை .
ஆனால் எதிரில் நின்றவர் முகம் கோணி விட்டது.
"அப்புறம் பார்க்கலாம் " என்றேன்.
"உங்கப்பாவும் நானும் ரொம்ப பழக்கம் .. சின்ன வயசுல.."
இடை மறித்தேன்.
"அதெல்லாம் பழைய கதை.. இப்ப அப்பாவும் இல்ல. உங்கள நான் பார்த்த நினைப்பும் இல்ல.."
புனிதா எட்டிப் பார்த்து விட்டு போனாள். எனக்கு அவள் கொடுத்த டைம் பத்து நிமிஷம் தான். ஏற்கெனவே இரண்டு நிமிஷம் லேட் .
வந்தவர் அப்படி ஒன்றும் சுலபமாய் திரும்பிப் போகிறவராய் இல்லை.
"எல்லா எடமும் முயற்சி பண்ணிட்டேன்பா.. கடைசியா உங்கப்பா நினைப்பு வந்தது.. அவர் இருந்தா இப்படி நான் அலைய வேண்டியிருக்காது.."
அந்த நிமிஷம் என் நாக்கில் சனி ..
"அப்படின்னா இதுக்கு முன்னால எவ்வளவு வாங்கி இருக்கீங்க .. எவ்வளவு திருப்பித் தராம ஏமாத் .. திருப்பி தர வேண்டியிருக்கும் "
முகத்தில் சவரம் செய்யப் படாமல் நான்கு அல்லது ஐந்து நாட்களாய் தாடி. வேட்டி ஒன்றும் அத்தனை புதிது இல்லை. கண்கள் அதன் ஒளி இழந்து எத்தனையோ நாட்களாகி விட்ட பிரமை. என் வார்த்தைகள் காதில் விழுந்ததும் அவர் முகம் கோணி விட்டது.
கை கூப்பினார். நடை தள்ளாடியது.
“வரேன்பா” லேசான முனகல் மட்டும்.
புனிதா மறுபடி வந்தாள்.
“என்ன போயிட்டாரா.. “
“ம்”
“உங்கப்பாக்கு வாரிசா அள்ளிக் கொடுக்கப் போறிங்கன்னு நினைச்சேன்.”
“ம்”
“எப்படித்தான் கூசாம மனுசங்க வந்து நிக்கிறாங்களோ”
“பாவம்.. அவருக்கு என்ன கஷ்டமோ..”
“ஏன் கொடுக்கலன்னு மனசு பிறாண்டுதா”
“ப்ச்”
“உள்ளே வாங்க.. மறுபடி யாராச்சும் பிடிச்சுக்கப் போறாங்க.. தர்மப் பிரபுவ”
உள்ளே வந்து சட்டையைப் போட்டுக் கொண்டேன். தலையை தடவிக் கொண்டே. உள்ளே நுழையும் போதே நிலைப் படியில் நங்கென்று இடித்துக் கொண்டதால்.
“எங்கே கிளம்பிட்டிங்க”
“ம்ம்”
“அதே குணம்.. என்ன கேட்டாலும் பதில் வராது..”
என் நடைக்கு அவரை எட்டிப் பிடிப்பது சிரமமாய் இல்லை. தளர்ந்து போய்க் கொண்டிருந்தார். கைகள் தாமாகப் பிரிந்து மடங்கி.. நடுநடுவே வானத்தைக் காட்டி.. அவர் தனக்குத்தானே பேசிக் கொண்டு போனதை சிலர் வேடிக்கையும் பார்த்தார்கள்.
குறிப்பிட்ட இடைவெளியில் அவரைப் பின் தொடர்ந்து போனேன்.
ஹாஸ்பிடல் வாசலில் மரத்தடியில் போட்டிருந்த பெஞ்சில் அமர்ந்தார். பெருமூச்சு விட்டார். தலையைக் கவிழ்த்துக் கொண்டார்.
‘என்ன பண்ணப் போறேன்.. நாலாயிரத்துக்கு நான் எங்கே போவேன்..’
தேம்பியது தெளிவாகக் கேட்டது.
‘நான் உன்னைக் காப்பாத்த முடியலடி.. சரசு.. ‘
சட்டைக்குள் ஒடுங்கிய மார்பு.. எலும்புக் கூடாய் துருத்தி துடித்தது தெரிந்தது.
‘ரெங்கா.. ஏண்டா எனக்கு முன்னாடி போனே.. நான் அனாதையாயிட்டேன் டா”
ரெங்கா.. அப்பாவின் பெயர். ரெங்கனாதன்.
புலம்பிக் கொண்டிருந்த அவர் முன் நான் போய் நின்றது அவருக்குப் புரியவில்லை. யாரோ வரும் வழியில் தாம் நிற்பதாய் நினைத்து நகர்ந்து அமர்ந்தார்.
அவர் முன் குனிந்து கைகளைப் பற்றிக் கொண்டேன்.
“யாழு.. “
”வாங்கோ.. பீஸ் கட்டிடலாம்..”
“நீயா..”
சட்டென்று என் கையை உதறினார். அவர் உடம்பு அதிர்ந்தது.
“என்னை மன்னிச்சிருங்கோ. பிளீஸ் ..”
அவர் பேசவில்லை. என்னுடன் பேசப் பிடிக்கவில்லை என்று புரிந்தது.
“நான் பண்ணது தப்பு.. “
என்ன வேண்டுமானால் சொல்லிக்கோ.. என்கிற மாதிரி அவர் பாவனை.
“அப்பா இருந்தா என்னை மன்னிக்கவே மாட்டார்..”
அப்படியே உடைந்து அழுதேன். என்னிடம் ஏன் இந்த திடீர் மாற்றம் என்று அவருக்குப் புரியவில்லை.
”தயவு செஞ்சு வாங்கோ.. முதல்ல மாமியைப் பார்க்கலாம். அப்புறம் என்னை என்ன வேணாப் பண்ணுங்கோ..”
அரை மனதாய் எழுந்தார். இருவருமாய் உள்ளே போனோம்.
அவரைப் பார்த்ததும் மாமி முகத்தில் மலர்ச்சி.
நான் முந்திக் கொண்டேன்.
“ மாமி.. கவலைப் படாதீங்கோ.. சீக்கிரமே வீட்டுக்குப் போயிரலாம்..”
“பணம் கட்டியாச்சா”
“ம்.. இப்பதான்.. தெம்பு குறைச்சல்தானாம்.. ரெண்டு நாள்ல சரியாயிரும்..”
”பாவம்.. என்னால அவருக்குத்தான் கஷ்டம்”
“யாராலயும் யாருக்கும் கஷ்டம் இல்லை மாமி.. உங்களுக்கு முடியலன்ன உடனே அவர் தவிச்சுப் போயிட்டார்”
அந்த நிமிஷம் இருவரும் பார்த்துக் கொள்ளக் கூட இல்லை. ஆனால் மனசு லயித்த அதிர்வு தெரிந்தது.
வெளியில் வந்தோம்.
“என்னை மன்னிச்சிருங்கோ.. எப்ப வேணா எங்க வீட்டுக்கு வரலாம்.. எதையும் மனசுல வச்சுக்காம”
என்னைப் பார்த்தார். என் கண்களை.
“புரியல”
“ வரேன்பா” என்றேன்.
தலை லேசாய் புடைத்திருந்த வலி. கிளம்புமுன் இடித்துக் கொண்ட போது ‘அப்பா’ என்றுதான் மனசுக்குள் அலறினேன். அப்பா. ரெங்கா. வீடு தேடி வந்தால் நிராகரிக்காத ஆத்மா. நம்பிக்கையாய் வரலாம் அவரைத்தேடி.
அவருக்குப் புரியவில்லை. வீட்டுக்குள் வந்தால் புனிதாவும் சொன்னாள்.
“லூசா நீங்க”
“ம்”
தலையை அழுத்தித் தேய்த்துக் கொண்டு உள்ளே போனேன்.
ஹால் புகைப்படத்தில் அப்பாவின் மாறாத புன்னகை அந்த நிமிஷம் என்னை ஆசிர்வதித்த மாதிரி உணர்ந்தேன்.
(அவரைத் தேடிப் போய் ஏன் உதவி செய்தேன் என்று அவர்களுக்குத்தான் புரியவில்லை. இதை வாசிக்கிற உங்களுக்குப் புரிந்தால் எனக்கு சந்தோஷம்)
21 comments:
அப்பா...... ரொம்ப டச்சிங் ஆன கதை.
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு பெய்யும் மழை
படிச்சு முடிச்சதும் மனதில் ஒரு நிறைவு ஏற்படுகிறது. என் குருநாதராகிய உங்களால் மட்டுமே இது போன்ற அருமையான கதைகளைத் தர முடியும்.
நான் படிக்கும் போது என் மனதைப் பிசைந்த வரிகள்:
//தளர்ந்து போய்க் கொண்டிருந்தார். கைகள் தாமாகப் பிரிந்து மடங்கி.. நடுநடுவே வானத்தைக் காட்டி.. அவர் தனக்குத்தானே பேசிக் கொண்டு போனதை சிலர் வேடிக்கையும் பார்த்தார்கள்.//
//‘நான் உன்னைக் காப்பாத்த முடியலடி.. சரசு.. ‘சட்டைக்குள் ஒடுங்கிய மார்பு.. எலும்புக் கூடாய் துருத்தி துடித்தது தெரிந்தது. ‘ரெங்கா.. ஏண்டா எனக்கு முன்னாடி போனே.. நான் அனாதையாயிட்டேன் டா”ரெங்கா..//
மனதைப் பிசைந்தது! பல சமயங்களில் வார்த்தைகளாலேயே அடுத்தவர்களைக் கொன்று விடுகிறார்கள்! ஆனால் திரும்பப் போய் பணம் கட்டியதில் கொஞ்சம் திருப்தி! நல்ல கதை பகிர்வுக்கு மிக்க நன்றி சார்.
நிலைப்படி மேலே அப்பா படம் இருந்ததோ? அப்பா குட்டினாரோ?
கதை நல்லா இருக்கு!
புரிந்தது!
நல்ல கதைக்கு நன்றி
எனக்குப் புரிகிறது ரிஷபன் சார்.
அப்படியே என் அப்பாவை நினைவுப் படுத்தியது பதிவு.
அருமை.
மனதை தொடும், உருக்கும் கதை
மனதை தொடும், உருக்கும் கதை
கொடுக்கும் கைகளை தடுக்கும் பிடிப்பையும் மீறி கருணையின் கரங்கள் நீளும் என்பதை அழகாய் வார்த்திருக்கிறீர்கள்.
படிக்கும் போதே புரிந்தது மனைவிக்காக அப்படி நடந்து கொள்கிறார் என்று..ம்ம்ம் இப்படியும் ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்... கதை என்பது ஆறுதல்.. நல்லாயிருக்கு ரிஷபன்..
புரிகிறது! நெகிழ்ச்சியான கதை!
அப்பாவுக்கு ”வாரிசு” என்பதை நிருபித்து விட்டார். அப்பாவின் ஆசீர்வாதமும் கிடைத்திருக்கும். உருக்கமான கதை. அருமை சார்.
"90% of the communication that's happening in this world is non-verbal" nu engeyo kettathundu.
namma appa/amma- eththanaiyo ithaipola non verbal-aa namma kitta communicate pannaraanga. antha communication, namakku avanga pannara pothu interpret panna mudiyaama irukkalaam. but it sure suggests many things. namakku puriya vendiya kaalaththila puriyum.
brilliant story, sir!
//அப்படின்னா இதுக்கு முன்னால எவ்வளவு வாங்கி இருக்கீங்க .. எவ்வளவு திருப்பித் தராம ஏமாத் .. திருப்பி தர வேண்டியிருக்கும்//
வார்த்தைகளால் கூட பிறரை வதைக்க விரும்பாதவரென நன்றாகவே புரிகிறது சார். சந்தர்ப்ப சூழல்களை விஞ்சியதல்லவா பிறவி சுபாவம்!
ஹால் புகைப்படத்தில் அப்பாவின் மாறாத புன்னகை அந்த நிமிஷம் என்னை ஆசிர்வதித்த மாதிரி உணர்ந்தேன்.
(அவரைத் தேடிப் போய் ஏன் உதவி செய்தேன் என்று அவர்களுக்குத்தான் புரியவில்லை. இதை வாசிக்கிற உங்களுக்குப் புரிந்தால் எனக்கு சந்தோஷம்)
இதற்கு பதில் வாரிசு !!!!!
It gave me immense pleasure once I finished reading..I agree with almost all the commentors, It even touched me a lot.
Thanks for sharing...!
'மதியாதார் தலைவாசல் மிதியாதவர்' தான் அவர் என்பதை,
அப்பா இடித்துரைத்து விட்டாரோ என்ற தெளிவு, உங்கள் முந்தைய குழப்பத்தை தீர்த்து விட்டதாய் உணருகிறேன். உள்மனதின் உணர்வு, உண்மையை காட்டி விட்டதாய் புரிந்து கொள்கிறோம் ரிஷபன், சரியா?
அப்பாவின் வாரிசு என்பதை நிலைநிறுத்தி விட்டார்.
மனதை நெகிழவைத்த கதை.
இதை..இதைத் தான் எதிர்பார்த்தேன், ரிஷபனிடம்!!
கதை நல்லா இருக்கு!
Post a Comment