February 05, 2011

லவர்ஸ் டே

கல்யாண மண்டபத்தில் கவனித்தேன். பாட்டி இலையில் போட வந்த ஜாங்கிரியை கையில் வாங்கிக் கொண்டார்.

'தாத்தாக்கு ரொம்பப் பிடிக்குமாம்'

அவரால முன்ன மாதிரி நடக்க முடியல. இவங்க ரொம்ப வற்புறுத்தி அழைச்சா .. என்னை மட்டும் போயிட்டு வரச் சொன்னார். செத்த ஆட்டோ பிடிச்சு தரியாடா..

என் டூ வீலர்ல ஒக்கார்ந்து வரேளா..

விழுந்துருவேண்டா

மாட்டிங்க .. நா மெதுவா போறேன்.. ஆட்டோ பிடிக்க அரை பர்லாங் போகணும்.

பாட்டியிடம் கஸ்தூரி மஞ்சள் வாசனை. வாலிபத்தில் நிச்சயம் தெருப் பையன்களை கலக்கி இருந்திருப்பார்.

தயங்கினாரே ஒழிய சகஜமாய் உட்கார்ந்திருந்தார். துளி ஆட்டம் இல்லை. பதவிசாய் பல நாள் போன ஜோரில் வந்தார்.

வீட்டு வாசலில் இறக்கி விட்டதும் உள்ளே வரச் சொன்னார். தாத்தா பார்க்கணுமாம்.

'பட்டுப் பொடவையை அப்புறம் எப்ப கட்டறது அவ.. ' என்று கிண்டலடித்தார் தாத்தா.

ஜாங்கிரியை கொடுத்ததும் அவர் முகத்தில் ஒரு பளீர்.

'உன்னை பக்கின்னு நினைச்சிருப்பா ' என்றார் அப்பாவும் விடாமல்.

எனக்கு டம்ளர் நீர் . அதுவும் ஜில்லுன்னு தரலாமா என்று கேட்டு.

சற்றே பெரிய வீடு. இவர்களைத் தவிர யாரும் இல்லை. தாத்தா உயரம் . பருமன். பாட்டி குள்ளம். தாத்தா தளர்ந்திருந்தார். எழுந்து நடக்க பிரயத்தனம் . பாட்டி விசுக் விசுக்கென்று நடை.

அந்த நாளைய புகைப்படங்கள். கருப்பு வெள்ளை. கோவில் யானை முன் பெரிய கூட்டமாய் மனிதர்கள். ஒருத்தரைக் காட்டி தாத்தாவோட அப்பா என்றார் பாட்டி.

தாத்தாக்கு சாப்பாடு ? என்றேன்.

கஞ்சி தான்..

நீ ஒரு டம்ளர் சாப்பிடறியா .. தேவாமிர்தமா இருக்கும்..

தாத்தா எது சொன்னாலும் ஒரு நையாண்டி. அதற்கு பாட்டி அலட்டிக் கொள்ளவே இல்லை. ஒரு புன்சிரிப்பு மட்டும்.

புழுங்கரிசிக் கஞ்சி தான். நார்த்தங்காயை லேசாக கரைத்திருந்தார். நாக்கு இனித்தது.

மீண்டும் தண்ணீர் டம்ளர். 'எது சாப்ட்டாலும் வாயை கொப்பளிச்சிடு' என்று இதமாய் ஒரு அட்வைஸ்.

'வரேன்' என்றேன்.

பாட்டி வாசல் வரை வந்தார் தடுத்தும் கேட்காமல்.

'பசங்க வெளியூரா'

'இல்லடா .. இங்கதான்'

இவர்களைத் தனியாக விட்டா.. என் புருவம் ஏறி இறங்கியது.

'நீயும் ஒருத்தன்டா '

என் கன்னத்தை செல்லமாக வழித்தார். நான் அழுதிருக்க வேண்டும். திரும்பும் போது பாதை மறைத்தது.

'என்ன லவர்ஸ் டே கொண்டாடிட்டு வரீங்களா.. '

வீட்டு வாசலில் நின்று வழி மறைத்து பாதி கோபமாய் மனைவி கேட்டாள்.

'ஆமாம் ' என்று தலையசைத்தபோது அதில் உண்மை இருந்தது.

27 comments:

அன்னு said...

very cute story, with a mature ending Rishaban Anna. These lovers only make the love more respected...!!

இராமசாமி said...

ஒன்னும் சொல்ல முடியல ரிஷபன்.. உங்க ஊருக்கும் ஒரு தரம் வந்திருக்கேன்... எந்த வீதின்னு நியாப்கம் இல்ல.. ஸ்ரீரங்கம் கோவில் பக்க்மதான் எங்கேயோ.. ஒரு பெரிய வீட்டு வாசலில ஒரு ஈ.ஸி.சேர்ல ஒரு தாத்தா உங்காந்திருந்தார்.. அவர் பக்கத்துல பாட்டி தரைல உட்கார்ந்திருந்தா.. வீடு வெளிலேந்து பாக்க ஒரே இருட்டு .. ஏனோ அது நியாப்கம் வருது எனக்கு இப்ப...

வெங்கட் நாகராஜ் said...

உண்மையான காதல் இது தான் என்பதை அழகாய் புரிய வைக்கிறது உங்கள் பகிர்வு. மிக்க நன்றி சார்.

Matangi Mawley said...

wow! very nice tale...
esp. the part-- kasthuri manjal smell.. :) reminded me of a paatti whom i knew at srirangam... seeing her, i think everytime, she must have been a real beauty during those days!

beautiful story...

பத்மநாபன் said...

காதலுக்கு வயதுமில்லை ...உடல் தளர்வும் இல்லை என்பதை அழகாய் சொன்ன கதை...

ஜீ... said...

சூப்பர் பாஸ்! :-)

ஜீ... said...

இந்தக்கதையை வாசிக்கும்போதே காட்சி மனத்திரையில் விரிகிறது! வேற என்ன சொல்றதுன்னு தெரியல!அருமை!

vasan said...

Its LOVERS DAYSSSSSSSSSS.

VAI. GOPALAKRISHNAN said...

ரொம்ப நல்லாயிருக்கு இந்தக் கதை.
என்னை மிகவும் கவர்ந்த வரிகள்:

//பாட்டியிடம் கஸ்தூரி மஞ்சள் வாசனை. வாலிபத்தில் நிச்சயம் தெருப் பையன்களை கலக்கி இருந்திருப்பார்.//

//புழுங்கரிசிக் கஞ்சி தான். நார்த்தங்காயை லேசாக கரைத்திருந்தார். நாக்கு இனித்தது.//

RVS said...

காலங்கள் மாறினாலும்..
கோலங்கள் மாறினாலும்..
காதல் மாறாதது...
ஓல்ட் இஸ் கோல்ட். லவ்வில் கூட... அற்புதம் ரிஷபன் சார்!

ஹேமா said...

உண்மையான அன்போடு வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்.எனக்கு அப்பா அம்மாவின் ஞாபகம் வந்துவிட்டது.என் அப்பா எங்களுக்கில்லாமல் இப்பவும் அம்மாவுக்கு மட்டும் ஏதாவது ஒளிச்சு வாங்கி வந்து கொடுப்பார்.
கண்டுபிடித்துவிடுவோம்.அப்போ பார்க்கவேணுமே இரண்டு பேரையும் !

Philosophy Prabhakaran said...

பிரமாதம்... இன்னும் சொல்லப்போனா என்னுடைய தாத்தா பாட்டியை அப்படியே கண்முன்னே கொண்டு வந்தது... அவர்களும் அச்சு அசல் இப்படித்தான்... என்ன ஒன்று தாத்தா தொண்ணூறை தொட்டு விட்டதால் நக்கல் பேச்சு குறைந்துவிட்டது...

raji said...

உண்மையான லவ்வர்ஸ்

சுந்தர்ஜி said...

அன்பில் தோய்ந்த நெய் ஜாங்கிரி.

middleclassmadhavi said...

//'பசங்க வெளியூரா'

'இல்லடா .. இங்கதான்'

இவர்களைத் தனியாக விட்டா.. என் புருவம் ஏறி இறங்கியது.

'நீயும் ஒருத்தன்டா ' //

பாரமாக இருக்கிறது!

kashyapan said...

"நீயும் ஒருத்தண்டா" இல்லாததை இருக்கவைக்கும் வார்த்தை.வாழ்த்துக்கள் ரிஷபன்---காஸ்யபன

Balaji saravana said...

அற்புதம் ரிஷபன்! :)

ஹுஸைனம்மா said...

//அன்னு said...
These lovers only make the love more respected...!!//

பெரீஈஈஈஈய்ய ரீப்பீட்டு!!

மோகன்ஜி said...

"நீயும் ஒருத்தண்டா"...மனசை இழுத்து அமைத்திவிட்ட வார்த்தைகள்.. நாமெல்லாம் காதலர் தினத்தைக் கொண்டாடத்தான் வேண்டும்..
ரோஜாவுக்கு பதிலாய் ஜாங்கிரி கூட காதல் மலராய் இப்போது தோன்றுகிறது. கை குடுங்க!

ஸ்வர்ணரேக்கா said...

நிஜமான லவ்

Lakshminarayanan said...

மனமொப்பிய புரிதலும் சின்ன சின்ன கிண்டல்களும் காதலை எத்துணை இனிதாக்குகின்றன.... லவ்லி கதை...

T.V.ராதாகிருஷ்ணன் said...

Thanks

கோவை2தில்லி said...

காதல் என்பது இது தான். பிரமாதமாய் இருந்தது சார்.

சிவகுமாரன் said...

மாசிலா இன்பக் காதலே
மாறுமோ துன்பம் வந்த வேளையில் ?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

எனக்கு என்னவோ, சாவியின் விசிறி வாழை ஞாபகம் வருகிறது!

dlakshmibaskaran said...

யதார்த்தங்கள் பிணைந்த நிகழ்வு, படைப்பு, பேச்சு எதுவாயினும் மனதைத் தொட்டுவிடும். அந்தவகையில் கஞ்சிக்குள் கலந்த நார்தங்காயின் சுவையாய் ஒட்டிக்கொண்டது கதை. மனைவியின் கேள்விக்கான பதிலில் "உண்மை இருந்தது " என்று முடித்திருந்த விதம் ரசிக்க வைத்தது...= தனலட்சுமி

dlakshmibaskaran said...

யதார்த்தம் தழுவிய எதுவாயினும் படைப்போ, பேச்சோ, நிகழ்வோ, மனதில் ஒட்டிக்கொண்டுவிடும். அந்தவகையில் கஞ்சியில் கலந்துவிட்ட நார்த்தங்காயாய் இருந்தது கதை. மனைவி கேட்ட ?வியில் "உண்மை இருந்தது" என முடித்திருந்ததை வெகுவாக ரசிக்கமுடிந்தது....= தனலட்சுமி