May 16, 2011

செல்லக் குழந்தை

"சாமி நெனைச்சா என்ன கேட்டாலும் தருவாராப்பா?"
அசோகனின் கால்களைப் பற்றிக் கொண்டு கேட்டது சிந்துஜா.
இரண்டரை வயது.
"ம்..."
"நெஜம்மாவா...".
குழந்தையின் பார்வையில் கொஞ்சம் சந்தேகம், கொஞ்சம் எதிர்பார்ப்பு.
"ஆமாம்மா....சாக்லேட்.....பிஸ்கட்....பொம்மை....யானை...எது கேட்டாலும் தருவார்."
சில வினாடிகள் யோசனைக்குப் பின் கேட்டாள் சிந்துஜா.
"அம்மாவை?"

எதிரில் அமர்ந்திருந்தாள் நந்தினி.
அசோகன் முகத்தில் கவலைக் கோடுகள். வார்த்தைகள் திணறின.
"ஒரு நிமிஷம் எதுவும் பேச முடியலே என்னாலே....குழந்தை மனசுல இவ்வுளவு ஏக்கம் இருக்குன்னு இன்னைக்குத்தான் புரிஞ்சுது....நல்ல வேளை.....எங்கம்மா வந்து...."அப்பா ஆபிஸ் போகணும்...லேட்டாச்சு...சாயங்காலம் பேசலாம்'னு சொல்லி கூட்டிக்கிட்டுப் போயிட்டாங்க."
நந்தினி மெல்ல நிமிர்ந்தாள்.
"அசோக்....இப்பவாவது உங்க தீர்மானத்தை மறுபரிசீலனை பண்ணுங்க.. அட்லீஸ்ட்...உங்க குழந்தையோட ஆசைக்காவது..."
"இல்லே நந்து.....என்னால செத்துப் போன என் மனைவியை மறக்க முடியலே....வீட்டில ஒவ்வொரு மூலையும்....ஒவ்வொரு பொருளும் எனக்கு அவளைத்தான் ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கு.....அவ செத்துப் போனதாகவேஎன்னால நினைக்க முடியலே....இன்னமும்.....இப்பவும் உயிரோடதான்...என்கூடவே இருக்கிற மாதிரி பிரமை..."
"அப்புறம் உங்க இஷ்டம் அசோக்" என்றாள் நந்தினி.

அம்மா வாசலில் கவலையுடன் காத்திருந்தாள்.
அசோக் உள்ளே நுழைந்ததுமே பதறினாள்.
"திடீர்னு குழந்தைக்கு ஜூரம்டா.....ஒரேயடியா உளற ஆரம்பிச்சுட்டா ... 'அம்மா....அம்மா'னு புலம்பல் வேற...."
"டாக்டர்கிட்டே கூட்டிக்கிட்டு போகலையா?" என்றான் பதட்டத்துடன்.
"வந்தார்.....இன்ஜக்ஷன் போட்டுட்டு போயிருக்காரு.... மறுபடி கிளீனிக் மூடற நேரத்துக்கு வரதா சொன்னாரு..."
சிந்துஜாவின் உடம்பு கொதித்துக் கொண்டிருந்தது, லேசான முனகலில், "அம்மா.."
அசோக் தீர்மானித்து விட்டான்.

நந்தினி அவன் கையைப் பற்றிக் குலுக்கினாள் பரவசமாக.
"வாழ்த்துக்கள் அசோக்....நல்ல முடிவை எடுத்திருக்கீங்க...."
"இத்தனை நாள் நீ வாதாடியதும்.....குழந்தை ஏக்கமும் என்னை மனசு மாற வச்சிருச்சு..."
"ஹூம்....நான் ...நீன்னு க்யூவுல நிப்பாங்க....யார் அந்த அதிர்ஷ்டசாலி....அசோக்?"
"நீ.....நீ தான் நந்து....உனக்கு சம்மதம் என்றால்..."
நந்தினி சட்டென்று மவுனமானாள்.
'நான்....நானா...'
மனசுக்குள் தவிப்புடன் அவள் பதிலுக்காகக் காத்திருந்தான் அசோக்.

உமா உயிருடன் இருந்தபோதே நந்தினி பழக்கம். மெல்ல மெல்ல தன் குணங்களால் அவனை ஆகர்ஷித்து மனசுக்குள் இடம்பிடித்து இருந்தாள். ஆனால், வெளியில்தான் அவன் காட்டிக் கொள்ளவில்லை.
உமா இடம் வெறுமையானதும், நந்தினியின் நினைவுகள் முழுமையாகவே பற்றிக் கொண்டன.அவள் என்ன நினைப்பாளோ என்ற தயக்கம் அவனைத் தடுத்துக் கொண்டிருந்தது. அவள் மறுமணத்திற்கு விடாமல் வற்புறுத்திய போதும்...தன் மீதுள்ள அக்கறைதானே காரணம் என்றே நினைத்தான். அன்பில்லாமலா அக்கறை வரும்?
என்ன சொல்லப் போகிறாள்?
"ப்ளீஸ்.....நாளைக்கு சொல்றேனே...." என்றாள்.
"சரி..." என்றான் அரைமனதாக.

சிந்துஜாவிற்கு உடம்பு சயாகி விட்டிருந்தது.
"அப்பா.....இன்னைக்கு பீச்சுக்கு போகலாமா?"
"இல்லேம்மா...நாளைக்கு போகலாம்"
"போப்பா....எவரி சாட்டர்டே பீச்சுனு.... நீதானே....சொன்னே"
ஆமாம். ஆனால், இன்று நந்தினி வரப்போகிறாள். தன் பதிலைச் சொல்லப் போகிறாளே...அவள் வருகிற நேரத்தில் கிளம்பிப் போய் விட்டால்... என்ன நினைப்பாள்?
"போய் விளையாடு.." என்றான் அழுத்தமாக.
"ஊஹூம்...மாட்டேன்....பீச்சுக்குப் போகலாம், வா" என்று அலற ஆரம்பித்தாள்.
"சொன்னா கேட்கணும்....பிடிவாதம் பிடிக்கக் கூடாது...."
"முடியாது.....பீச்சுக்குப் போகணும்"
"உள்ளே போ.....பாட்டிகூட விளையாடு"
"பீச்...."
"சனியனே.....எதுக்கும் ஒரு நேரம்....காலம் கிடையாதா?"
குழந்தை முதல் முறையாக அறை வாங்கிய அதிர்ச்சியில் மிரண்டு....அவனை முறைத்துப் பார்த்தது. மெல்லப் பின்வாங்கி சமையலறைக்குள் ஓடிப் போனது.

அசோக் டென்ஷனாகி நந்தினியின் வரவுக்காகக் காத்திருந்தான். உள்ளே பாட்டியின் அணைப்பில் குழந்தையின் விசும்பல் கேட்டது. நந்தினி......வரவேயில்லை.
மறுநாள்-ஒரு கடிதம் வந்தது .நந்தினியிடமிருந்துதான்.
'மன்னிக்கவும். வீடு வரை வந்து ....சொல்லாமல்....கொள்ளாமல் திரும்பிப் போனதற்கு. எந்தக் குழந்தைக்காக...மறுமணத்தை வற்புறுத்தினேனோ....அந்தக் குழந்தையின் சந்தோஷம் பறித்து. ...எனக்கு பூவிரிப்பா? சாரி...எனக்கு இதில் விருப்பமில்லை. நீங்கள் வேறு பெண் தேடலாம். மறுபடி சந்திக்க முயற்சிக்க வேண்டாம்.'

20 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

சிந்துஜாவின் கன்னத்தில் விழுந்த அந்த அறையை நந்தினி அசோகனின் கன்னத்தில் சேர்த்துவிட்டாள்.ரிஷபன் டச் அபாரம்.

எல் கே said...

முடிவு கிளாஸ். அருமை ஜி

பனித்துளி சங்கர் said...

//சில வினாடிகள் யோசனைக்குப் பின் கேட்டாள் சிந்துஜா.
"அம்மாவை?"
///////

அந்தக் குழந்தையின் எதிர்பார்ப்பை எப்படி மொழிபெயர்ப்பது என்று தெரியவில்லை . சிறப்பாக முடித்து இருக்கிறீர்கள் நண்பரே

RVS said...

வாவ். கிளாசிக் எண்டு. ரிஷபன் டச். ஐநூறு வார்த்தைகள்ல அமர்க்களப்படுத்துறீங்க சார்! ;-))

கே. பி. ஜனா... said...

நஷ்டம் குழந்தைக்கும் என்பதால் நந்தினி மறு பரிசீலனை செய்யட்டும்! நல்ல கதை.

சமுத்ரா said...

சாரி ரிஷபன்...முழுவதும் படிக்க முடியவில்லை...anyway Nice :)

ராமலக்ஷ்மி said...

மிக நல்ல கதை. நந்தினி எடுத்த முடிவு அற்புதம்.

Chitra said...

நல்ல குணம் கொண்ட பெண்ணின் அரவணைப்பை குழந்தை இழந்து விட்டதோ?

Yaathoramani.blogspot.com said...

கதைக் கருவும் சொல்லிய விதமும்
முடிவும் மிக மிக அருமை
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

ரொம்பவும் அருமையான கதை.

மனிதனின் யதார்த்த உணர்வுகளை வெகு அழகாக விளக்கி முடித்து விட்டீர்கள்.

இது போன்ற பரிதாப நிலைமை எந்தக்குழந்தைக்கும் ஏற்படக்கூடாது.

பாராட்டுக்கள் சார் !

ஹேமா said...

இதே மாதிரியான ஒரு சம்பவம் இப்போ என் கண் முன்னால் நடந்துகொண்டிருக்கிறது.அந்தக் குழந்தை அம்மாவின் பாசத்திற்காக ஏங்கிக்கொண்டேயிருக்கிறது !

vasu balaji said...

good one:)

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நல்ல கதை...தொடருங்கள் மேலும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்

middleclassmadhavi said...

குழந்தைக்காக இன்னொரு சான்ஸ் கொடுக்கலாமோ?! வேறு யாரை மணம் செய்தாலும் இதே நிலமை வராது என்று என்ன நிச்சயம்?!!

நல்ல கதை

வெங்கட் நாகராஜ் said...

பாவம் குழந்தை! நல்ல அன்னையை இழந்து விட்டாளே! கதை சொல்லிய பாங்கு நன்றாய் இருந்தது சார்.

Unknown said...

முடிவு சூப்பர்ங்க.

Thenammai Lakshmanan said...

செம நச் முடிவு.. ரிஷபன்..

மோகன்ஜி said...

அற்புதம்.முடிவில் ஒரு ஜெர்க் தருவது உங்களின் கைவந்த கலை. நான் இதை எப்படி எழுதியிருப்பேன் என யோசிக்க வைக்கிறீர்கள் ஒவ்வொருமுறையும்

பத்மா said...

சபாஷ் !

ஹுஸைனம்மா said...

நந்தினியின் முடிவு ரொம்ப ஆர்டிஃபிஷியலாத் தெரியுற மாதிரி இருக்கு.