May 28, 2011

இன்னொரு முகம்

சமையலறையில் இருந்த புவனேஸ்வரி ஈரக்கரங்களைப் புடவைத் தலைப்பில் துடைத்தபடி வெளியே வந்தாள்.

"யாரது?"

கதவைத் திறந்தாள். எதிரே நின்றவளைப் பார்த்ததும் திகைப்பும் மலர்ச்சியும் வந்தன.

"நீயா!" என்றாள் ஆச்சர்யமாய்.

இருக்காதா பின்னே? போனவாரம் பெண் பார்த்து... அதே இடத்திலேயே மருமகளாக ஏற்க சம்மதம் என்று சொல்லிவிட்டு வந்தவளுக்கு... அதே பெண் இன்று வீடு தேடி வந்தால்...?

"வா...வனிதா...என்ன இது...திடீர் விஸிட்..."

ஹாலுக்கு வந்து சோபாவில் அமர்ந்தவளிடம் புன்முறுவலுடன் கேட்டாள்.

"...என்ன சாப்பிடறே...?"

வனிதா பேசவில்லை. சங்கடத்துடன் சிரித்தாள்.

"முதமுதல்வே நம்ம வீட்டுக்கு வந்திருக்கே. ஏதாவது சாப்பிட்டே தீரணும். உன்னை நான் சும்மா விடமாட்டேன்" வனிதா ஏதோ சொல்ல முயன்றதைக் கவனிக்காமல் வேகமாக உள்ளே போனாள். மாலை டிபனுக்காகச் செய்திருந்த பஜ்ஜியை ஒரு தட்டிலும் ஒரு டம்ளரில் தண்ணீரும் கொண்டு வந்து எதிர் டீபாய் மேல் வைத்தாள்.

தானும் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.

"சாப்பிடும்மா..."

புவனேஸ்வரியை நிமிர்ந்து பார்த்தாள்.

"வந்து... உங்ககிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு..."

"எதைப் பத்தி?"

"எப்படி சொல்றதுன்னு புரியலே..." என்று இழுத்தவள், மெல்ல தன் கைப் பையைத் திறந்து ஒரு கவரை எடுத்து நீட்டினாள்.

"நேத்து தபால்ல இந்தக் கவர் எனக்கு வந்தது... பிரிச்சுப் பாருங்க உங்களுக்கே புரியும்..."

புவனேஸ்வரி பதற்றத்துடன் வாங்கிப் பிரித்தாள். உள்ளே ஒரு போட்டோ. அதன் பின்புறம் சிவப்பு மையில்... 'இதற்கு மேலும் அத்தாட்சி வேண்டுமா? புத்திசாலித்தனமாக முடிவெடு..உன் நலம் விரும்பி..." என்று எழுதியிருந்தது.

புகைப்படத்தினைத் திருப்பியதும் பயங்கர அதிர்ச்சி ஏற்பட்டது. அவள் மகன் சதீஷும் வேறொரு பெண்ணும்... மிக நெருக்கமாக....

வனிதா மௌனமாய் புவனேஸ்வரியைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

புவனேஸ்வரியின் முகம் மெல்ல இயல்பானது.

"...இந்த ஃபோட்டோ நேற்று தபால்ல வந்ததா..."

"ஆமா...ஆனா...அதை யார் அனுப்பினாங்கன்னு எனக்குத் தெரியலே..."

"உங்க வீட்டுல காண்பிச்சுட்டியா...?"

"இல்லே..."

"...ஏன்...?" ஆராய்கிற பார்வையுடன் கேட்டாள் புவனேஸ்வரி.

"எனக்கு முதல்லே என்ன செய்யிறதுன்னே புரியலே...நீங்க என்னைப் பெண் பார்த்து...உடனேயே சம்மதம்னு சொன்னதும்...எங்க வீட்டுல எல்லோருக்கும் உங்களை ரொம்பப் பிடிச்சுப் போச்சு...கணவரை இழந்த நீங்க...கைக்குழந்தையோட வாழ்க்கையில் ரொம்ப போராடி...உங்க மகனைப் பெரியவனாக்கி படிக்க வச்சு... நல்ல வேலையிலும் வச்சுருக்கீங்க... அதுவுமில்லாம... 'போய் பதில் போடறோம்'னு சொல்லிட்டு எதுவும் சொல்லாம விட்டுடற மனுஷங்களுக்கு மத்தியில... ரொம்ப வித்தியாசமான பெண்மணியா தெரிஞ்சீங்க... இந்த நிலைமையிலதான் இப்படி புதுசா ஒரு குழப்பம். உங்களிடமே சொல்லி தீர்வு காணணும்னு வந்திருக்கேன்..."

"இப்ப நான் என்ன செய்யணும்..."

வனிதா தீர்க்கமாய் அவளைப் பார்த்தாள்.

"...உங்க மகனோட இன்னொரு முகம்... இப்ப இந்த போட்டோவில் தெரிஞ்சுபோச்சு. அடுத்த வாரம் நடக்கிறதா இருக்கிற நிச்சயதார்த்தம்... நின்னு போச்சுன்னா... ஏன் எதுக்குன்னு ஆயிரம் கேள்விகள் வரும். பழியை இப்ப யார் மேலப் போடறது...? நீங்களா...வரதட்சணை...அது...இதுன்னு புதுசா பிரச்சனை பண்ணி நிறுத்திட்டிங்கன்னா... நல்லதாப் போயிரும்..."

புவனேஸ்வரியின் முகம் இறுக்கமாகியது.

"...அது மட்டும் முடியாது.....வனிதா..."

"...என்ன...ஏன்...?"

"...தப்பு என் மகன் மேல..அதை ஏன் மறைக்கணும்...? நானே நேரா உங்க வீட்டுக்கு வரேன். இந்த போட்டோவைக் காட்டி... வேற நல்ல எடத்துல... உனக்குக் கல்யாணம் பண்ணச் சொல்றேன்...வரதட்சணை கேட்கக் கூடாதுங்கிறது என்னோட கொள்கை... அதை ஏன்... பொய்யா... உங்க வீட்டு மேல திணிக்கணும்..." என்றாள் உறுதி பூர்வமாய்.

"ஆம்பளைன்னா கல்யாணத்துக்கு முன்னால கொஞ்சம் அப்படி... இப்படித்தான் இருப்பான்... நீதான் அனுசரிச்சுப் போய் அவனைத் திருத்தணும்னு... என்னை வற்புறுத்திக் கல்யாணம் செஞ்சுவச்சா...?" என்றாள் வனிதா.

"...நான் விடமாட்டேன்...! அதற்கு சம்மதிக்கவும் மாட்டேன்... நீயும் ஒரு பெண்... என்னைப் போல சக மனுஷிக்கு ஓர் அநீதி நிகழ சம்மதிக்க மாட்டேன்... முதல்லே நான் ஒரு மனுஷி... பிறகுதான் தாய்..." என்றாள் புவனேஸ்வரி.

"...நான் தோத்துட்டேன்..." என்றாள் வனிதா.. சிரிப்பும் கண்ணில் நீருமாக.

"...நீ...என்ன சொல்றே?.."

"...இந்த போட்டோ... பொய் அம்மா... எல்லா மாமியார்களும் மருமகளை அடிமைப்படுத்துகிற ரகம்தான்னு... என்னோட நினைப்பு... சதீஷைத் தற்செயலா சந்திச்சபோது என்னோட கருத்தைச் சொன்னேன். எங்கம்மா நீ நினைக்கிற மாதிரி இல்லேன்னு...சிரிச்சாரு... ரெண்டு பேருமா... ஆடின நாடகம் தான் இது... மன்னிச்சிருங்க.. நிச்சயமா... உங்களைப் போலவே... ஒரு பெருமை வாய்ந்த பெண்ணா... நானும் இருப்பேன்..."

"....முதல்லே இந்த போட்டோவை கிழிச்சுப்போடு..." என்றாள் புவனேஸ்வரி சிரிப்புடன்.


(இதுவும் எப்பவோ எழுதினது)

20 comments:

சுந்தர்ஜி said...

நல்லா இருக்கு ரிஷபன் இந்த நாடகம்.

middleclassmadhavi said...

ரொம்ப நாளா சூப்பர் கதைகளை எழுதிட்டு இருக்கீங்கன்னு தெரியுது! வாழ்த்துக்கள்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பழைய கதைகள்ளாம் சூப்பரா இருக்கு..
இதே மாதிரி தான் என் நண்பர் ஒருத்த்ர் ‘மன விகாரம் களைந்து’ன்னு ஒரு கதை எழுதினார், அந்த காலத்துல..அதற்கப்புறம் அவர் நிறையவே எழுதிட்டார்..இருந்தாலும், அந்த கதை மனசுல நிக்க்றாப்பல அவரோட வேற எந்த கதையும் மனசுல நிக்கல எனக்கு! ம.செ. படம் போட்ட கதை!
எதுக்கு சொல்றேன்னா, அவர் கதைகள் போல உங்க கதைகளும் குறிப்பா பழைய கதைகள் சூப்பர்..இதுக்கு முந்திய கதையை இது பீட் அடித்து விட்டது..

வாழ்த்துக்களுடன்,
ஆர்.ஆர்.ஆர்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"...நான் விடமாட்டேன்...! அதற்கு சம்மதிக்கவும் மாட்டேன்... நீயும் ஒரு பெண்... என்னைப் போல சக மனுஷிக்கு ஓர் அநீதி நிகழ சம்மதிக்க மாட்டேன்... முதல்லே நான் ஒரு மனுஷி... பிறகுதான் தாய்..." //

இந்தக்கதாபாத்திரமும் கதையும் ரொம்ப நல்லாயிருக்கு. பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள். அன்புடன் vgk

கே. பி. ஜனா... said...

உங்கள் சிறந்த கதைகளில் மனதை கவர்ந்த கதை...

RVS said...

முடிவு அனுமானிக்க முடிந்தாலும் உங்கள் கை வண்ணத்தில் மிளிர்கிறது சார்! ;-))

ஜீ... said...

Very nice!

வெங்கட் நாகராஜ் said...

எப்போதோ எழுதிய கதை இப்போதும் நன்றாகவே இருக்கிறது ரிஷபன் சார். உங்கள் “டச்” கதை எங்கும் இருக்கிறது.

ellen said...

கதையின் முடிவு மிகவும் திருப்தியாக இருந்தது. இந்த கதைக்கு வேறொரு முடிவையும் எதிர்பார்த்தபடியே படித்த எனக்கு சற்று ஏமாற்றம்.

வானம்பாடிகள் said...

ப்யூட்டி:)

ஹுஸைனம்மா said...

இந்தக் கதை கொஞ்சம் செயற்கையான நிகழ்வாக எனக்குப் படுகிறது. இருந்தாலும், உங்க எழுத்து எப்பவும் சுவாரஸ்யம்தான்.

இதன் ரெண்டாம் பாகம் எழுதினா எப்படி இருக்கும்? ”விளையாட்டுக்காக ”எடுத்த” புகைப்படம், திருமணத்திற்குப் பின் ஒரு எதிர்பாராத சிக்கலான சூழ்நிலையை ஏற்படுத்த, அதிலிருந்து மாமியார், மகன், மருமகள் எல்லாரும் இணைந்து எப்படி மீள்கிறார்கள்” என்பதாக இருக்குமோ? ;-)))))))

எல் கே said...

நல்லாயிருக்கு ரிஷபன் சார்.

ஹுசைனம்மா சொன்னதையும் யோசிச்சு பாருங்க.

குணசேகரன்... said...

nice story..happy ending..expects more.

http://zenguna.blogspot.com

மனோ சாமிநாதன் said...

ஒரே மூச்சில் படித்து முடிக்குமளவிற்கு தொய்வில்லாமல் மிக சுவாரஸ்யமாக இருந்தது கதை! மனம் நிறைந்த பாராட்டுக்கள்!

என் நடை பாதையில்(ராம்) said...

சபாஷ்....!

நிரூபன் said...

வித்தியாசமான வார்த்தைக் கோப்புக்களோடு, இன்றைய காலப் புதுமைப் பெண்ணின் இன்னோர் முகத்தை உங்கள் சிறுகதை சொல்லி நிற்கிறது சகோ.
அருமையாக வந்திருக்கிறது.

நிலாமகள் said...

ந‌ல்ல‌ மாமியார்! அவ‌ர் க‌ட‌ந்து வ‌ந்த‌ பாதையின் க‌ர‌டுமுர‌டு போலில்லாம‌ல் உருண்டுவ‌ந்த‌ கூழாங்க‌ல்லாய் மென்மையும் மேன்மையுமான‌ ம‌ன‌சோடு சித்த‌ரித்த‌த‌ற்கு பாராட்டுக‌ள்.

vasan said...

How dare, she wish to test her would be m`in law!!

பத்மா said...

அட !நல்ல மாமியார்! நல்ல மருமகள் !

கோவை2தில்லி said...

வித்தியாசமான கோணத்தில் நன்றாக இருக்கிறது சார்.