June 21, 2011

முன்னுரை

திருமதி வித்யா சுப்ரமணியத்திற்கு நன்றி.. என்னையும் தொடர் பதிவிற்கு அழைத்ததற்கு.

நண்பர் ஆர். ஆர். ஆர். சொன்னது போல முன்னுரை என்றாலே ஞாபகத்திற்கு உடனே வருவது ஜேகே. தான். அவரது முன்னுரைகள் மட்டுமே ஒரு புத்தகமாய் வெளி வந்திருக்கின்றன.

அவரது கதைகள் எவ்வளவு பேசப்படுகிறதோ அதைப் போலவே அவரது முன்னுரைகளும் பரபரப்பாய்ப் பேசப்பட்டன. ஒரு சிங்கத்தின் கர்ஜனையை ஒத்தது அவரது எழுத்துப் பிரகடனம்.

‘சொல்லுகிற முறையினால் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளமுடியாத விஷயங்களைக் கூட எல்லோருக்கும் இணக்கமாகச் சொல்லி விட முடியும் என்று இந்த நாவலை எழுதியதன் மூலம் நான் கண்டு கொண்டு விட்டேன்..’
என்கிறார் சில நேரங்களில் சில மனிதர்கள் முன்னுரையில்.

நாவலின் முடிவு குறித்து வருத்தப்பட்டவர்கள் பற்றி சொல்கிறார்.

’நீங்கள் வருத்தப்படுகிறீர்களா.. ரொம்ப நல்லது. அதற்காகத்தான் அந்த முடிவு. அந்த வருத்தத்தின் ஊடே வாழ்வின் போக்கைப் புரிந்து கொண்டால் வருத்தம் என்கிற உணர்ச்சி குறைந்து வாழ்வில் அப்படிப்பட்டவர்களை, அந்நிகழ்ச்சிகளைச் சந்திக்கும்போது மனம் விசாலமுறும்.’

’ஒவ்வொருவரும் தத்தம் மனசுக்குச் சரி என்று படும் காரியத்தைச் செய்ய ‘ஜனநாயக தர்மம்’ மறுக்கிறது. எது எல்லோருக்கும் சரியோ- எது எல்லோருக்கும் ஓரளவு சரியோ- எது பெரும்பான்மையோருக்கு சரியோ அது ‘தவறே’ எனினும் அதனை அனுமதித்து அடிபணிவது ஜனநாயக தர்மம்!

இந்த மாதிரிச் சமூக விதிகளை மறுப்பதும் மாற்றுவதும் அதன் அநியாயமான தீர்ப்புகளைக் காலத்தின் முன்னே மறுபரிசீலனைக்கு வைப்பதும் இலக்கியத்தின் பணியாகிறது.

எனவேதான் இலக்கியத்தில் ‘ஜனநாயக தர்மம்’ அனுமதிக்கப்படுவதில்லை. முரண்படுவதற்குச் சம்மதமளிக்கிற பண்புதான் இலக்கியப் பண்பாகும்.’

ஜேகே வை ஏற்கிறோமோ, மறுக்கிறோமோ.. அவரது முன்னுரைகளின் முழக்கம் நம்மை யோசிக்க வைத்து.. அறிவின் தீட்சண்யத்தில் கட்டுண்டு நிற்போம்.

நெய்வேலி பாரதிக் குமார் அவர்களின் ‘முற்றுப் பெறாத மனு’ தொகுப்பிற்கு அவர் எழுதிய முன்னுரை எத்தனை இயல்பாய் எழுத்தின் ரகசியத்தை உண்ர்த்திப் போகிறது.. பாருங்கள்.

‘ஒரு பானை வனையப்படுவதை விட மிகச் சிறந்த இலக்கியத்தை யாரும் படைத்து விட முடியாது. ஒரு குழந்தையின் முத்தத்தை விட இனிப்பான அனுபவத்தை எந்த சிறுகதையும் தந்து விட முடியாது. ஒரு பூ மலர்வதை விட மென்மையை எந்த கவிதையும் உணர்த்தி விட முடியாது.

இருந்தாலும் மனித முயற்சியானது எல்லாவற்றிலும் உச்சத்தை தொடுவதற்காக தவ்விக் கொண்டே இருக்கிறது. கடல் வழி பிரயாணத்தில் கண்டுணர்ந்த தேசங்கள் பலவும் ஒன்றை தேடப்போய் தென்பட்ட வேறொன்றுதான். அதுதான் இயற்கையின் அற்புதம்.’

இடைசெவல் கிராமத்துக்காரர் என்ன சொல்கிறார் பார்க்கலாமா..

’என்னுடைய எழுத்துக்களைச் சத்தமிட்டு வாசிக்கக் கூடாது. மனசுக்குள்ளேயே - உதடுகள் அசையாமல் கண்களால் வாசிக்க வேண்டும் மௌனத்தில் பிறந்த எழுத்துக்களை மௌனமாகவே படித்து அறிந்தாலே அதன் ஜீவனை உணர முடியும். மௌன வாச்சிப்புக்கென்றே என் நடை உண்டாக்கப்பட்டது. உரத்து வாசிப்பதற்கு அல்ல..’ என்று சொல்கிறார் கி. ராஜநாராயணன்.

படைப்பில் யாவும் சொல்லி விடு.
வான் படைப்பாளி. அதன் பிறகும் சொல்ல
என்ன இருக்கிறது? அதையும் மீறி தனது
படைப்புகள் பற்றி ஏதாவது சொன்னால்
படித்துப் பார்க்க சோம்புகிறவர்களுக்கும்
படிக்காமலே மதிப்புரை செய்கிறவர்களுக்கும்
‘அவல்’ கிடைத்தது போல. (கி. ராஜநாராயணன் கதைகள் முன்னுரை)

அமிர்தம் சூர்யா சொல்கிறார்.. ‘கடவுளைக் கண்டு பிடிப்பவன்’ தொகுப்பில்.

என் புரிதல், திறன், ஆழம். குணம், வெளிப்பாடு இவ்வளவுதான். நான் இவ்வளவுதான் என்று இந்தக் கதைகளின் மூலம் உங்கள் முன் வைக்கிறேன். மற்றவையெல்லாம் உங்களுடையவை. சிலவற்றைச் சொல்லிவிட்டு நான் உங்களையே பார்த்துக் கொண்டிருப்பேன்.

புனைவுக்கும் வாழ்வுக்குமான இடைவெளி அழிந்து வாழ்வே ஒரு புனைவாகியிருப்பதை, புனைவு மெல்ல மெல்ல வாழ்வாக உருமாற்றம் அடைவதைத் தரிசிக்கும் சாத்யத்தை சில கணங்களேனும் நான் உணர்ந்திருப்பதால் அவற்றை எழுதிப் பார்க்கிறேன்.

புதுமைப்பித்தன் சொல்கிறார்..

இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக் கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும் அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல. சுமார் இருநூறு வருஷங்களாக ஒரு விதமான சீலைப் பேன் வாழ்வு நடத்தி விட்டோம். சில விஷயங்களை நேர் நோக்கிப் பார்க்கவும் கூசுகிறோம். அதனால்தான் இப்படி சக்கரவட்டமாகச் சுற்றி வளைத்துச் சப்பைக்கட்டு கட்டுகிறோம். குரூரமே அவதாரமான ராவணனையும், ரத்தக் களறியையும், மனக் குரூபங்களையும், விகற்பங்களையும் உண்டாக்க இடமிருக்குமேயானால், ஏழை விபசாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப் போகிறது?

எனக்கும் கி.ரா. பேச்சில் இணக்கம்தான். வாசகனுக்கும் படைப்புக்கும் நடுவே யாரும் குறுக்கே வரக் கூடாத சூழல் தான் பொருத்தம். ஆனால் சில படைப்பாளிகள் (ஜேகே., லா.ச.ரா., போல) அவர்களின் முன்னுரைகள் மூலம் அடைபட்டுக் கிடக்கும் நம் இதயக் கதவைத் திறந்து, ஒரு விசாலமான பிரதேசம் உருவாக்கி, வாசிக்கப் புகவிருக்கும் படைப்பினை அப்படியே உள்வாங்கிக் கொள்ளும் சாமர்த்தியத்தை உண்டாக்கி விடுகின்றன.

எழுத்து, கலை, இலக்கியம், இப்படி என்ன பெயரிட்டு அழைத்தாலும் சரி.. வாசிப்பின் சுகானுபவம் உணர்ந்த தலைமுறையில் என்னைப் பிறப்பித்த மகா சக்திக்கு தரை படிந்து என் நமஸ்காரம் எப்போதும்.

அதைத் தொலைத்து விட்ட வருத்தச் சுவடு கூட அறியாமல் இப்போது அடுத்த தலைமுறை வந்து விட்டது. நல்ல நல்ல பதிவர்கள் நாவிலே விளையாடும் எழுத்துத் தெய்வம் கணினியிலும் தன் திறமையைக் காட்டிக் கொண்டிருக்கிறது.

யாதேவி ஸர்வ பூதேஷு வித்யா ரூபேண ஸம்ஸ்திதா..
நமஸ்தஸ்யை.. நமஸ்தஸ்யை.. நமஸ்தஸ்யை.. நமோ நமஹ..












31 comments:

வெங்கட் நாகராஜ் said...

//எழுத்து, கலை, இலக்கியம், இப்படி என்ன பெயரிட்டு அழைத்தாலும் சரி.. வாசிப்பின் சுகானுபவம் உணர்ந்த தலைமுறையில் என்னைப் பிறப்பித்த மகா சக்திக்கு தரை படிந்து என் நமஸ்காரம் எப்போதும்.

அதைத் தொலைத்து விட்ட வருத்தச் சுவடு கூட அறியாமல் இப்போது அடுத்த தலைமுறை வந்து விட்டது. நல்ல நல்ல பதிவர்கள் நாவிலே விளையாடும் எழுத்துத் தெய்வம் கணினியிலும் தன் திறமையைக் காட்டிக் கொண்டிருக்கிறது.//

உண்மையான வரிகள். படிக்கும் பழக்கமே மறந்து விட்டது நிறைய பேருக்கு இப்போது…

நல்ல ஒரு பகிர்வு இது. பல முன்னணி எழுத்தாளர்களின் முன்னுரையைப் படிக்க முடிந்தது உங்கள் மூலம்…

நன்றி.

கிருஷ்ணப்ரியா said...

உங்கள் ஆழமான வாசிப்பைக் காட்டும் இந்த கட்டுரை சிறப்பாக உள்ளது. எனக்கும் முன்னுரைகள் மிகவும் பிடிக்கும். சில முன்னுரைகள் மிக மிக சுவாரசியமானவை.

இன்று கொஞ்சம் நேரம் கிடைத்து, உங்கள் வலைக்குள் வந்ததால் எனக்கு ஒரு நல்ல கட்டுரை வாசிக்க கிடைத்தது.....நன்றி ரிஷபன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//எழுத்து, கலை, இலக்கியம், இப்படி என்ன பெயரிட்டு அழைத்தாலும் சரி.. வாசிப்பின் சுகானுபவம் உணர்ந்த தலைமுறையில் என்னைப் பிறப்பித்த மகா சக்திக்கு தரை படிந்து என் நமஸ்காரம் எப்போதும்.//

இவை அருமையான வார்த்தைகள்.
தங்களுடன் சேர்ந்து என் நமஸ்காரங்களும் அந்த மகாசக்திக்கு.

தங்களின் இந்தப்பதிவு பல்வேறு பிரபல எழுத்தாளர்களின் முன்னுரைகளில் மிகச்சிறந்ததாக தாங்கள் கருதியவற்றை அப்படியே கசக்கிப்பிழிந்து ஜூஸ் ஆக்கி, நாங்கள் சுலபமாக அருந்த அளித்துள்ளீர்க்ள்.

நன்றி, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
அன்புடன் vgk

Voted.

R. Gopi said...

சார், நான் டிராப்டில் வெச்சிருக்கிற ஒரு சில விஷயங்களை நீங்க சொல்லிட்டீங்க:-)

பதிவு சூப்பர்.

அப்பாதுரை said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.. முன்னுரைகளில் இத்தனை ஆழமும் அகலமும் இருப்பதைக் கவனித்ததே இல்லை. "வாசிப்பின் சுகானுபவம் உணர்ந்த தலைமுறையில் என்னைப் பிறப்பித்த மகா சக்திக்கு.." மிகவும் பாதித்த வரிகள்.

நிலாமகள் said...

பால்ய‌ ப‌ருவ‌த்தில் என் ம‌க‌ன் சாமி கும்பிடும்போது ச‌ப்த‌மாக‌ பிரார்த்திப்பான். ப‌க்க‌த்தில் க‌ண்மூடிக் கைகூப்பி நிற்கும் என் ம‌க‌ள் "நானும் நானும்... என‌க்கும் என‌க்கும்" என்ற‌ பின்பாட்டில் த‌ன் பிரார்த்த‌னையை நிறைவு செய்துவிடுவாள்! இப்போது உங்க‌ள் ந‌ம‌ஸ்கார‌த்தை நானும் பின்பாட்டு பாடுகிறேன்.

'முற்றுப் பெறாத‌ ம‌னு' வ‌ரிக‌ளைக் க‌ண்ட‌தும் துள்ளிக் குதித்த‌து ம‌ன‌ம். எப்ப‌டியாப்ப‌ட்ட‌ வ‌ரிசையில் இணைத்திருக்கிறீர்க‌ள்...!

வ‌ண்ண‌தாச‌னைப் ப‌டிப்ப‌தில்லையா? பிடிப்ப‌தில்லையா? ப‌திவின் நீள‌ம் க‌ருதி விடுப‌ட்டுப் போன‌தோ...?!

Admin said...

மிகவும் சிறப்பான பகிர்வு

பத்மநாபன் said...

முன்னுரை முத்துக்களை சரமாக்கி தந்துவிட்டீர்கள்.. நாமும் வாசிப்புலகத்தில் வாழ்ந்தோம் எனும் பெருமையை இதை வாசிக்கும் அனைவர்க்கும் தந்த பதிவு...

ரிஷபன் said...

வண்ணதாசனைப் பிடிக்காதாவா,, நிலாமகள்.. பதிவின் நீளம் தான் ..
எவ்வளவோ பேரைச் சொல்லிக் கொண்டே போகலாம்.. சொல்ல விடுபட்டுப் போன எழுத்துலகப் பிதாமகர்கள் அத்தனை பேருக்கும் தான் என் நமஸ்காரம்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

அருமையாய் எழுதி இருக்கிறீர்கள் ரிஷபன். எல்லாவற்றையும் ஒருவரே சொல்வது சுவை குறைத்துவிடும் என்பதற்காத்தான் தொடர் பதிவுக்கு அழைத்தேன். தவிர எவ்வளவு வாசித்தாலும் அது கையளவுதான். பலபேர் தாங்கள் வாசித்ததைப் பகிர்ந்து கொள்ளும்போது, இன்னும் நாம் வாசிக்க வேண்டியது எவ்வளவு இருக்கிறது என்று உணர முடியும். நீங்கள் சொன்ன புத்தகங்களை உடனே தேடி படித்து விடுகிறேன். என் அழைப்புக்கு மதிப்பளித்து தொடர்ந்ததற்கு நன்றி.

நிலாமகள் said...

அதானே... நாமெல்லாம் ஒரும‌ர‌த்துப் பூக்க‌ளாயிற்றே...! அவ‌ருக்காக‌ த‌னிப் ப‌திவொன்றைப் போட்டு விட‌லாமே... என‌க்குத் தெரிந்து தாங்க‌ள் ப‌திவின் க‌ருத்துரைக்கு சுட‌ச்சுட‌ ப‌திலும் த‌ந்த‌து இப்போதுதானென்று நினைக்கிறேன்...'வ‌ர‌வேண்டிய‌ நேர‌த்தில் க‌ண்டிப்பாய் வ‌ருவேன்' என்கிறார் ர‌ஜினி ம‌ன‌த்திரையில்.

ராஜி said...

’என்னுடைய எழுத்துக்களைச் சத்தமிட்டு வாசிக்கக் கூடாது. மனசுக்குள்ளேயே - உதடுகள் அசையாமல் கண்களால் வாசிக்க வேண்டும் மௌனத்தில் பிறந்த எழுத்துக்களை மௌனமாகவே படித்து அறிந்தாலே அதன் ஜீவனை உணர முடியும். மௌன வாச்சிப்புக்கென்றே என் நடை உண்டாக்கப்பட்டது. உரத்து வாசிப்பதற்கு அல்ல..’ என்று சொல்கிறார் கி. ராஜநாராயணன்

>>>>>
nijamaana varigal. pagirvukku nanRi

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆஹா...அருமை..இதைப் படித்து முடித்தவுடன், உனக்கு ஃபோன் செய்து என் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டேன்..ஆம் முதலில் உன்னை எழுதத் தூண்டிய வித்யா மேடத்திற்குத் தான் நன்றி!
சொல்ல வேண்டும்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஏதோ ஒரு கால கட்டத்தில், நான் என் சிறுகதைகளுக்கு முன்னுரை எழுதினால் அது இப்படித் தான் இருக்கும்.
"....எழுத்தாளன் எழுத்துக்களை ஒரு சிற்பி போல் செதுக்கிக் கொண்டே போகிறான்..ஆனால் ஒரு நிலையில் எழுத்து ...அவனை..அந்த கர்த்தாவையே.. செதுக்க ஆரம்பித்து விடுகிறது.பாவம் நம் சிற்பிக்கு இந்த அனுபவம் கிடையாது..எத்தனையோ பேருக்கு எத்தனையோ பேர் பிடிக்காமல் போகலாம்..ஆனால், அவர்கள் ரகஸ்யமாய் அந்த பிடிக்காதவர்கள் எழுதிய எழுத்துக்களைப் படிக்கும் போது, ஒரு நல்ல சுவையான பதார்த்தத்தினை, குழந்தைகள் திருட்டுத் தனமாய் சுவைக்கும் போது, கதவிடுக்கில் மறைந்து கொண்டு அதனை ரசிக்கும் ஒரு தாயின் மனோநிலையில் அதை எழுதியவன் இருக்கிறான் அல்லவா?"

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆம் நீ சொன்னது மிகவும் சரி...1944 வைத்துக் கொள்ளலாமா? இருக்கும்..1944லிருந்து,1962 வரை பிறந்த நாம் அனைவருமே, ஆசிர்வதிக்கப் பட்டவர்கள் தான்..நம்மால் நம் தந்தையர் காலத்து கண்ணாம்பாவையும் ரசிக்க முடியும்..நம் காலத்து 'வியட் நாம் வீட்'டையும் ரசிக்க முடியும் இப்போதுள்ள புதுப் படத்தையும் ரசிக்க முடியும்..ஆனால் இன்று புதிதாய் பிறந்தவர்களுக்கு?
கேள்விப் பட்டிருக்கிறேன்..'ராவ் பகதூர் சிங்காரம்' எழுதும் போது கொத்தமங்கலம் சுப்புவும், கோபுலுவும் அந்த கீழ்மங்கலம், மேல் மங்கலத்தில் ஆறு மாதம் 'கேம்ப்' போட்டு எழுதினார்களாம்..ஆனால் இந்த காலக் கட்டத்தில்..அதுவும் நம் விரல் நுனியில் எல்லாமே கிடைக்கும் வசதி இருக்கும் போது அந்த காலத்து 'சிரத்தை' இருக்குமா என்ன? இந்த விஷயத்தில் நம் இளைய தலைமுறையினருக்குக் கிடைத்தது நம்மை விட ஒரு மாற்றுக் கம்மி தான்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அது சரி...ஒரு தூக்கம் தூங்கி, இப்போது இந்த பன்னிரெண்டு மணி நடு நிசி வாக்கில் என்னை எழுதத் தூண்டியது எது?
அது, இதைப் படித்தவுடன் நான் உடனே உனக்கு ஃபோன் செய்த உணர்வாகக் கூட இருக்கலாம்..
கூட இருக்கலாமா..இல்லையில்லை.. அந்த ..அதே ...உணர்வு தான் இப்போதும் என்னை எழுதத் தூண்டியது..
இதனை எழுதி முடித்தவுடன், என்னுள் எழுந்த ஒரு பிரசவ அவஸ்தை இதோ..இப்போது இக்கணமே தீர்ந்தது..
தீர்க்காயுஸ்மான் பவ!

மனோ சாமிநாதன் said...

"ஒரு பானை வனையப்படுவதை விட மிகச் சிறந்த இலக்கியத்தை யாரும் படைத்து விட முடியாது. ஒரு குழந்தையின் முத்தத்தை விட இனிப்பான அனுபவத்தை எந்த சிறுகதையும் தந்து விட முடியாது. ஒரு பூ மலர்வதை விட மென்மையை எந்த கவிதையும் உணர்த்தி விட முடியாது."

அருமையான‌ வ‌ரிக‌ள்!
ந‌ல்ல‌தொரு ப‌கிர்வு! ஒவ்வொரு வ‌ரியையும் அனுப‌வித்து எழுதியிருக்கிறீர்க‌ள்!!

நிரூபன் said...

முன்னுரையினை அடிப்படையாக வைத்து, ஒரு வித்தியாசமான படைப்பினைத் தந்திருக்கிறீங்க சகோ..

நான் இதுவரை அறிந்திருக்காத பல முன்னணி எழுத்தாளர்கள் பலரின் முன்னுரையினை அறிமுகப்படுத்தியிருக்கிறீங்க. நன்றி.

ஹேமா said...

உங்கள் எழுத்தின் இரகசியம் இத்தனை பேரை வாசித்ததால்தானோ !

RVS said...

முது பெரும் எழுத்தாளர்களின் முன்னுரைகளை பெரும் எழுத்தாளர்கள் பகிர்ந்து கொள்கிறீர்கள். முன்னுரை என்பது சாப்பிடுவதற்கு முன் இலையில் வைக்கும் பாயஸம் போன்றது. ஒரு சொட்டு நக்கிவிட்டால் சாப்பிடுவதற்கு நா தயாராகிவிடும். சரிதானே? ;-))

கே. பி. ஜனா... said...

முன்னுரை பற்றிய உங்கள் உரையும் சரி, கொடுத்துள்ள முன்னுரை மேற்கோள்களும் சரி, அற்புதம்!

செ.சரவணக்குமார் said...

முன்னுரை குறித்த அழகான பதிவு ரிஷபன். நேர்த்தியான கட்டுரையும் கூட.

ஜெயகாந்தன், கி.ரா, வண்ணதாசன், நாஞ்சில் நாடன் போன்ற எழுத்தாளுமைகளின் முன்னுரைகளை ரசித்து ரசித்து வாசிப்பவன் நான்.

நாஞ்சிலின் முன்னுரைக்காகவே சமீபத்தில் புது எழுத்தாளர் ஒருவரின் நூலை வாங்கினேன்.

vidivelli said...

அழகிய எழுத்து நடையுடன் கூடிய கட்டுரை...
நல்லாயிருக்குங்க...
வாழ்த்துக்கள்

நிலாமகள் said...

வ‌ர‌ப்போகும் த‌ங்க‌ள் தொகுப்பின் முன்னுரையும் சிலாகிக்கும்ப‌டியே இருக்கிற‌து ஆர்.ஆர். சார்.அதிலும் ப‌டைப்பாளியை தாயாக‌வும் வாசிப்போரை குழ‌ந்தைக‌ளாக‌வும் நீங்க‌ள் சித்த‌ரித்திருப்ப‌து அட‌டா... அற்புத‌ம்! 1962க்குப் பிற‌கு பிற‌ந்த‌வ‌ர்க‌ளெல்லாம் த‌னிக் க‌ட்சியா?!அதெல்லாம் முடியாது... வாசிப்பை நேசிப்ப‌வ‌ர்க‌ள் வ‌ய‌து ப‌த்தேயானாலும் உங்க‌ க‌ட்சிதான். க‌ண்ணாம்பாவெல்லாம் க‌ணினியில் டி.வி.டி. போட்டுப் பார்த்துவிட‌ மாட்டோமா என்ன‌?!'தீர்க்காயுஸ்மான் ப‌வ‌' என்றீர்க‌ள‌ல்ல‌வா... அந்த‌ இட‌த்தில் ந‌ட்பையும் விஞ்சிய‌ ஒரு த‌ந்தைமை ப‌ளிச்சிடுகிற‌து ப‌ர‌வ‌ச‌மாய்!ரிஷ‌ப‌ன் சார் நிறைய‌வே கொடுத்து வைத்திருக்கிறார். எங்க‌ளின் அன்பும் பிரார்த்த‌னையும் அவ‌ருக்கு ச‌ம‌ர்ப்பிக்கிறோம்.

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு சார். தலைசிறந்த எழுத்தாளர்களின் முன்னுரை படிக்க முடிந்தது. நன்றி சார்.

Ananthasayanam T said...

munnuraikkey ivvalavu response ivvalavoondu timekulla..keep it up rishaban..

சமுத்ரா said...

மிகவும் சிறப்பான பகிர்வு

Unknown said...

ஒரு பானை வனையப்படுவதை விட மிகச் சிறந்த இலக்கியத்தை யாரும் படைத்து விட முடியாது. ஒரு குழந்தையின் முத்தத்தை விட இனிப்பான அனுபவத்தை எந்த சிறுகதையும் தந்து விட முடியாது. ஒரு பூ மலர்வதை விட மென்மையை எந்த கவிதையும் உணர்த்தி விட முடியாது

அருமையான வரிகள் மனதில்
ஆழமாக பதிந்தன குடத்துள் விளக்காக இருந்த இந்த வரிகளை
குன்றின் மேலிட்ட விளக்காக மாற்றிய
பெருமை உங்களையே சாரும்
நன்றி நண்பரே நன்றி

புலவர் சா இராமாநுசம்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

மிகத் தாமதமாய் வர நேருகிறது.

எடுத்துக்காட்டியிருக்கும் உரைவீச்செல்லாம் அடிக்கடி நீஙகள் இதுபோலக் கட்டுரைகளும் நடுநடுவில் எழுதலாம் என்பதற்குக் கட்டியம் கூறுகின்றன.

நிலாமகளும் ஆராராரும் கலக்கி எடுத்துட்டாங்கல்ல.

சபாஷ் ரிஷபன்.

VELU.G said...

மிக அருமையான பதிவு

மோகன்ஜி said...

ப்ரிய ரிஷபன் சார்! முன்னுரை பற்றிய அற்புதமான பதிவு.ஜெயகாந்தனின் முன்னுரைகளை எத்தனை முறை படித்தாலும் அலுக்காது. முன்னுரை என்பது இலையில் முதலில் கொஞ்சமாய் இடும் பாயசம் போல.. அதுவே பாயசத்தின் ருசியைக் காட்டி மறுபடியும் ருசிக்க நம்மை இழுப்பது போல..

அழகான சொல்லாடல்..