August 29, 2011

ஈரங்கொல்லி


கோவிலில் தன் பாட்டியை தர தரவென்று இழுத்துக் கொண்டு பதின்ம வயதுக்காரன் ஓடினான். கூடவே அவன் தங்கையும், அம்மாவும்.

அந்தப் பாட்டியின் முகத்தில் நிச்சயமாய் பரவசம். எந்த கிராமத்தில் இருந்து வருகிறார்களோ.. தெரியவில்லை.

இந்த வயதில் தன்னை பேரன் கோவிலுக்கு அழைத்து வந்ததில் பெருமகிழ்ச்சியும்..

பரந்து கிடக்கும் பெரிய கோவிலின் பிராகாரங்களின் கல் தரையில் பாதம் பதிந்தும் பதியாமலும் கிழவி நடந்து ஓடியதைப் பார்த்தேன்..

நிச்சயம் ஸ்ரீரெங்கநாதன் பாட்டியைப் பார்க்க ஆர்வமாய்த் தான் காத்திருப்பார்.

முன்னொரு நாளில் இதே போல ரெங்கனும் இருப்பிடம் விட்டு எவ்வளவோ தொலைவு சுற்றி வந்தார்..

அதற்குள் ஸ்ரீரங்கமே மாறிப் போய் விட்டது.

திரும்பி வருவதற்குள்.. இடைப்பட்ட காலத்தில் இன்னொரு உற்சவர் அவரைப் போலவே வந்து விட்டார். அவருக்கு அபிஷேக ஆராதனைகள்..

‘உண்மையான ரெங்கன் இவர்தான்’

‘அப்ப இத்தனை நாளாய் நாம் ஆராதித்த பெருமாள் ?’

யார் அசல் .. யார் புதுசாய் வந்தது சொல்லத் தெரியாமல் புதிய தலைமுறை விழித்தது.

காவிரிக் கரை ஓரம்.. கண் பார்வை இழந்த அந்த ஈரங்கொல்லி (வண்ணான்) தான் தீர்வு தர முடியும் என்று பேச்சு வந்தது.

‘அந்தப் பெரியவருக்கு வயசு நூறுக்கும் மேல.. அவர் சொல்லட்டும்’

காதும் மந்தமான அவரிடம் போய்ச் சொன்னார்கள் பிரச்னையை.

‘ ரெண்டு பேருக்கும் திருமஞ்சனம் செஞ்சு தீர்த்தம் கொண்டாங்க..’

இரு வட்டில்களில் அபிஷேக தீர்த்தம் கொண்டு வந்தார்கள்.

இரண்டையும் தனித்தனியே வாங்கி ருசித்தார்.

‘இதோ.. இந்த தீர்த்தம்.. கஸ்தூரி வாசனை.. இவர்தான் நம்பெருமாள்..’

அரங்கனை அடையாளம் காட்டியது ஒரு ஈரங்கொல்லிதான். நம்பெருமாள் என்று கொண்டாடியதும் அவர்தான். அவரின் தீர்ப்பில் விட்டு அதை அப்படியே ஏற்று
எந்த பேதமும் இல்லாமல் ஒன்றாய் நின்றதும் அந்த நாள் மனிதர்கள்தான்.

மனிதரைக் கொண்டாடுவோம்!







20 comments:

வெங்கட் நாகராஜ் said...

ரங்கனைப் பற்றி அரிய தகவல்.... உங்களுக்குள் எத்தனை எத்தனை விஷயங்கள்....

அவ்வப்போது எடுத்து விடுங்கள் நாங்களும் ருசிக்க....

மனிதரைப் போற்றுவோம்....
நிச்சயம் போற்றத்தான் வேண்டும் போற்ற வேண்டிய மனிதர்களை....

settaikkaran said...

//நம்பெருமாள் என்று கொண்டாடியதும் அவர்தான்//

எத்தனையோ நாட்களாய் ’நம்பெருமாள்’ என்பது ஏன் என்பது புரியாமலிருந்தது. நன்றி!

Chitra said...

மனிதரைக் கொண்டாடுவோம்!



..... very nice post, Sir.

பத்மநாபன் said...

அரங்கனின் நினவசை அருமை..

ஈரங்கொல்லியின் அடையாளம் காட்டும் நுட்பம் இனிமை...

கொண்டாட வேண்டிய மனிதர்...

KParthasarathi said...

கேள்வி பட்டது போல இருக்கு.இருப்பினும் மறுபடியும் படிக்க இனிமையாக இருக்கிறது..நன்றி சித்ரா சாலமன் உதவியால் உங்கள் பதிவிற்கு வரும் பாக்கியம் கிடைத்தது

ADHI VENKAT said...

”எந்த பேதமும் இல்லாமல் ஒன்றாய் நின்றதும் அந்த நாள் மனிதர்கள்தான்.

மனிதரைக் கொண்டாடுவோம்!”

அருமையான வரிகள் சார்.

கீதமஞ்சரி said...

ஈரங்கொல்லி என்னும் புதிய வார்த்தை கற்றேன்.

மனிதம் கொண்டாடும் பதிவுக்கு அன் பாராட்டுகள்.

அம்பாளடியாள் said...

ராங்கநாதனைப்பற்றி இதுவரை நான் அறியாத புதிய தகவல் அருமை
சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .என் தளமும் உங்கள் வருகைக்காக்
காதிருக்கிட்றது.

அம்பாளடியாள் said...

தமிழ்மணம் 5

Unknown said...

காலம்காலமாய் மணக்கும் வழக்கு வழி சிந்தனைகள் என்றைக்கும் மணம் மாறாமல் நம்முடன் வாழ்கின்றன. தேடத்தான் பொழுதில்லை .தேடி காட்டுகிற போது திகைப்பாய்த் தான் இருக்கின்றன.

--

கதம்ப உணர்வுகள் said...

ரங்கநாதரை நம்பெருமாள் என்று அடையாளம் காட்டியது நூறு வயது மனிதரா? ஆச்சர்ய விஷயங்கள் ரிஷபன் நீங்க சொன்னது.....

சிந்தனைகளின் வடிவம் அருமையான விஷயங்கள் எங்களுடன் நீங்க பகிர்வது...

அன்பு வாழ்த்துகள் ரிஷபன் பகிர்வுக்கு..

நிரூபன் said...

ஈரங்கொல்லியாய் மறைந்திருந்த நம்பெருமாள் பற்றிய சுருக்கமான விளக்கக் கதையினைப் பகிர்ந்திருக்கிறீங்க.

நன்றி நண்பா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//காவிரிக் கரை ஓரம்.. கண் பார்வை இழந்த அந்த ஈரங்கொல்லி (வண்ணான்) தான் தீர்வு தர முடியும் என்று பேச்சு வந்தது.//

புதியதோர் வார்த்தை கற்றுக்கொண்டேன்.

//நம்பெருமாள் என்று கொண்டாடியதும் அவர்தான். அவரின் தீர்ப்பில் விட்டு அதை அப்படியே ஏற்று எந்த பேதமும் இல்லாமல் ஒன்றாய் நின்றதும் அந்த நாள் மனிதர்கள்தான்.
மனிதரைக் கொண்டாடுவோம்! //

அருமையான பதிவு. பாராட்டுக்கள். vgk

மனோ சாமிநாதன் said...

உங்களை வலைச்சரத்தில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

http://blogintamil.blogspot.com/

manichudar blogspot.com said...

மனிதரை கொண்டாடுவதன் வாயிலாய் நம்பெருமாளை கொண்டாடலாம். நல்ல பதிவு.

Yaathoramani.blogspot.com said...

இதுவரை அறியாத தகவல்
மிக அழகான நடையில் அறியத் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

ஹுஸைனம்மா said...

இந்தக் கதையின் அடிப்படை புரியவில்லையென்றாலும், தொழில்சாராமல், வயதுக்கும், அனுபவத்துக்கும் கொடுக்கும் மரியாதையும் புரிகிறது!!

‘ஈரங்கொல்லி’ என்பதற்கு என்ன விளக்கம்?

ஷைலஜா said...

இப்போதான் பார்த்தேன்
ஈரங்கொல்லி பாக்கியசாலி அல்லவா ரிஷபன்? தெரிந்தகதை எனினும் நீங்க சொன்ன விதத்தில் மனசில் ஈரமாய்ப்பரவியது

RAMA RAVI (RAMVI) said...

வணக்கம் ஐயா,
என்னை மிகவும் கவர்ந்த இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன் நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.
நன்றி.